கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்

Theru_koothu_Folklore_Arts_Thambiraan

 
வெங்கட் சாமிநாதன்: நீங்க ஒரு அறுபது வருடங்களாக தெருக்கூத்திலே மிகுந்த ஈடுபாட்டோடு இருந்திருக்கீங்க. நீங்க, ராகவ தம்பிரான் என்கிற பிரசித்தி பெற்ற கலைக் குடும்பத்திலிருந்து வர்ரீங்க. உங்க பழைய ஞாபகத்திலே, உங்க அப்பா இந்த தியேட்டர்லே இருந்தது, அப்புறம் உங்க பாட்டனார் காலத்திலேயிருந்து, அந்த எல்லா ஞாபகங்களையும் சேர்த்தா சுமார் ஒரு நூற்றைம்பது வருட கால நினைவுகள் வரும். உங்க பாட்டனார் சொல்லி, அப்பா உங்களுக்கு சொல்லி, நீங்க கேள்விப்பட்டது, நீங்க கலைக்குடும்பத்திலே பிறந்து வளர்ந்ததினாலே, சின்னவயசிலேயிருந்து உங்க பாட்டனார் இதில் ஈடுபட்டிருந்தது, நீங்க இருந்து பார்த்தது, இதையெல்லாம் ஞாபகப்படுத்தி சொல்ல முடியுமா?
கண்ணப்ப தம்பிரான்: தெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு நான்கு புதல்வர்கள் – ராகவ தம்பிரான், விஜய தம்பிரான், கிருஷ்ண தம்பிரான், பின் துரைசாமி தம்பிரான். வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் கம்ஸ ஸம்ஹாரம் கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே ‘சரி, மகாபாரதம் எடுக்கணும்னு மனசிலே ஒரு தோற்றம் உண்டாச்சு. தன் இனத்தார்கள், சுற்றுசூழல்லே இருக்காங்க இல்லியா, அவங்களை அழைச்சிட்டு வந்து கத்துக் கொடுத்தாரு. அப்படி கத்து கொடுக்கிற காலத்திலே கலவை குமாரஸ்வாமி தம்பிரான்னு ஒரு பெரிய வித்வான். அவர்தான் ‘ஹிரண்ய ஸம்ஹாரம்’, ‘கிருஷ்ணன் தூது’ எல்லாம் எழுதினவரு. மற்றொருத்தரு, சுப்பிரமணியத் தம்பிரான் கிறவரு. அவரு ‘சுபத்திரை கல்யாணம்’, ‘சிறுத் தொண்டர் விலாசம்’ இதெல்லாம் எழுதினவரு. மாசிலாமணி கவிராயர்னு ஒருத்தர் இருந்தாரு. இவங்கள் எல்லாம் எழுதின கதைகளை கொண்டு வந்து…
வெ.சா: அந்தக் கதைகளை எதுக்கு எழுதினாங்க? தெருக்கூத்துக்கா, தோல்பாவைக் கூத்துக்கா?
கண்ணப்ப தம்பிரான்: தெருக்கூத்துக்காக ஏற்படுத்தி… இந்த கம்ஸ ஸம்ஹாரம் நடத்தினாங்க இல்லியா? அப்ப புஜகீர்த்தி, காதணி, முடி எல்லாம் மரத்தினாலேயே செய்து கட்டி ஆடும்போது, இதை நடத்தும்போது மகாபாரதத்தை நடத்தலாமேன்னு தோணின போதுதான், தன் சொந்தக்காரங்களையெல்லாம் வரவழைச்சு, ஒரு இருபது பேருக்கு மகாபாரத கதையெல்லாம் கத்துக் கொடுத்து, இந்த உடையணிகள், அலங்காரங்கள் எல்லாம் செய்து, ஒரு குழுவா சேர்த்து, கத்துக் கொடுக்க ஆரம்பிச்சாரு.
வெ சா: ராகவ தம்பிரான்?
தம்பிரான்: ஆமா, ராகவ தம்பிரான், வீராசாமி தம்பிரான் இருக்கச்சவே அதிலே கெட்டிக்காரரா இருந்தாரு. ராகவ தம்பிரான் நல்ல இசையுள்ளவரு. நல்ல பயிற்சி பெற்றவரு. அவரு நடிக்கிறதைப் பார்த்து ஜனங்கள்ளாம் பிரமாதமா மதிச்சாங்க. அதிலேயிருந்து திரௌபதி உற்சவம் நடக்குதில்லே, அதுக்கு விழா நடக்கறதுக்கு, மகாபாரதம் நடத்தறதுக்கு இவங்கள அழைச்சிண்டு போவாங்க. மகாபாரதம் எட்டு நாள் நடக்கும். இதிலேயிருந்து வர்ரவங்களையெல்லாம் வெச்சிகினு பயிற்சி கொடுத்துக்கினே வந்து பெரிய அபிவிருத்தி செய்து வந்தாரு.
ராகவ தம்பிரானுக்கு பிள்ளை இல்லே, பெண்தான். விஜய தம்பிரானுக்கு ஒரே பிள்ளை ராஜூன்னு. கிருஷ்ண தம்பிரான் மகன்தான் நடேச தம்பிரான், துரைசாமி தம்பிரானுக்கு நானு, தம்பி ஜானகிராமன் இத்தனை பேரும். அதோட என்னோட அத்தை பையன், அங்கமுத்துன்னு, அவரு பெண் வேஷதாரி. அதுலேயிருந்து நாங்க ஒண்ணாவே பழகிட்டே வந்தோம். பரம்பரையா, எழுதிக் கொடுத்து வாங்கி, ஒண்ணும் இல்லே. பார்த்து பார்த்து, கேட்டு அந்த பயிற்சியிலேயே பழகி வந்தோம். அதுலேயிருந்து நாங்க நாடகத் துறையிலே ஈடுபட்டு இதுவரைக்கும் வந்திருக்கோம். அப்புறம் நடேச தம்பிரான். ஆச்சு, இப்போ என்னோட சம்பந்தம் வந்திருக்கான்.
வெ.சா.: இதைப் பத்தியெல்லாம் அப்பா சொல்லியிருப்பார் இல்லியா, இல்லை வீராசாமி தம்பிரானா?
தம்பிரான்: ஆமாம், அப்பா சொன்னது நிறைய நினைவிலேயிருந்து.
வெ.சா.: இதைப் பத்தி சொல்லியிருக்காரா? வீராசாமி தம்பிரான் முதல்லே தோல்பாவைக் கூத்திலே இல்லே இருந்தாரு. அதுக்கு அப்புறம்தான் தெருக்கூத்துக்கு வரார். அப்புறம் பயிற்சி கொடுத்தார். அந்த பயிற்சி எப்படிக் கொடுத்தார்? எதிலேயிருந்து கத்துண்டிருந்தார் அவர்?
தம்பிரான்: அவர் பரத நாட்டிய வேறே கத்துண்டிருந்தார். இந்த கோயில்கள்லே திருவிழா நடந்தா அதிலே முதல்லே நாட்டியம் போகும். அந்தக் கோவிலிலே கிராமாந்தரத்திலே எல்லாம் மான்யம் கொடுத்து வெச்சிருப்பாங்க தாசிங்களுக்கு. அவங்களுக்கெல்லாம் இவர் போய் கத்துக் கொடுப்பார்.
வெ.சா.: நட்டுவனார் மாதிரி.
தம்பிரான்: ஆமாம் நட்டுவனார் மாதிரி. மாந்திரீகம், தோல்பொம்மை, மெட்ராஸ்லே கந்தசாமி கோவிலிலே டான்ஸ் சொல்லிக் கொடுப்பாரு. பரதநாட்டியம், அந்த காலத்திலே. எப்படி மெட்டி கட்டறது, பரதநாட்டியத்துக்கு, சேலையெல்லாம் உடுத்தி, அதிலேயெல்லாம் பயிற்சி கொடுத்திருக்கிறாரு.
வெ.சா.: பரதநாட்டியம் கத்துக் கொடுத்திட்டு இருந்ததினாலேயே, தெருக்கூத்து செய்யறப்போ அதிலேயும் பரதநாட்டிய பாதிப்பு இருந்திருக்கும் இல்லியா? இல்லே, தெருக்கூத்துக்கு தனியா, மத்தவங்களைவிட…
தம்பிரான்: அப்படியெல்லாம் இல்லீங்க, அந்தக் காலத்திலே பரதநாட்டியத்திலேயும் இந்த தெருக்கூத்து பாணிதாங்க.

‘தல்லாங்கு தகதிமி தக ததிங்கிண தோம்
த தகதிமித திமித கிடத ஜிணத தந தந்த
தணங்கு தஜிமித கிரிடத ததிங்கிடதாம்
தஜுங் தகரிடதை ததிங்கிணதோம் ததிங்கிண
தோம் ததிங்கிண தோம் பரிமள பதும தள
நயன…

பாட்டு இப்படிப் போகும்.
இட்ந்தப் பாட்டுகளையெல்லாம் எழுதறாங்களே அந்த ஆசிரியர்கள் அவங்க மெட்டு. எங்க பெரியப்பா ராகவ தம்பிரான்னு…
வெ.சா.: கலவை குமாரசாமி தம்பிரான்னு சொன்னீங்களே, அவர் என்ன பாட்டு மாத்திரம்தான் எழுதினாரா இல்லாட்டா
தம்பிரான்: வசனங்களும் எழுதுவாங்க, அவரே தெருக்கூத்து நடத்தினவருதான்.
வெ.சா.: அவரே தெருக்கூத்து நடத்தினாரா? உங்க பாட்டனார் காலத்திலே?
தம்பிரான்: அதிலே வந்து, அவரு சம்பந்தி முறை, மாமன், மச்சான் போல. அவரு, ராகவ தம்பிரான் நல்லா நடத்தறார்னு சொல்லி, ஹிரண்ய ஸம்ஹாரத்தைக் கொண்டாந்து இவர்கிட்டே ஒப்படைச்சாரு. “எனக்கு வயசாயிப் போச்சு, நீ இதைக் கொண்டு வரணும்” னு சொல்லி, அதிலேயிருந்து இவர் அதை நடத்த ஆரம்பிச்சாரு. கிருஷ்ணன் தூது, பாரதத்திலே…
வெ.சா.: ஆக எல்லா தெருக்கூதிலேயும் பரத நாட்டிய பாதிப்பு இருந்திருக்கு?
தம்பிரான்: அது எப்படி நமக்குத் தெரியும்? அதையெல்லாம் நான் நோண்டி கேட்கலை. பெரியவங்க அதிலேயிருந்துதான் கத்துக் கொடுத்தது, போனதுன்னு சொல்வாங்க. அதிலேயிருந்துதான் நானும் அந்த மெட்டுகளை உபயோகிச்சிகினு வரேன். அந்தந்த இடத்துக்கு தக்கனவாறு சோகத்துக்கு என்னது, வீரத்துக்கு என்னது, அப்படிங்கிற இடத்துக்கு ஏத்தமாதிரி கொடுத்திட்டு வரேன்.
வெ.சா.: உங்க பாட்டனார் காலத்தைப் பத்தி அவர் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா உங்க தகப்பனார் காலத்தை நீங்க நேரா தெரிஞ்சிருப்பீங்க இல்லையா?
தம்பிரான்: அவரோட நடிச்சிருக்கேன். அவர் ஹிரண்யன் வேஷம் போட்டு, நான் பிரஹலாதனா நடிச்சிருக்கேன்.
வெ.சா.: இப்போ ஒரு அறுபது வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க, இப்போதைக்கும் அப்போதைய கூத்துக்கும் ஏதாவது வித்யாசங்கள் தெரியுதுங்களா?
தம்பிரான்: வித்யாசங்கள் எதுவுமே கிடையாது. அதைத் தொடர்ந்தே நானும் செய்திட்டு வர்றேன்.
வெ.சா.: மாற்றங்கள் ஒண்ணும் கிடையாது?
தம்பிரான்: உடையணிகள்ளேயும் மாற்றம் கிடையாது. நடிப்புகளிலேயும் மாற்றங்கள் கிடையாது.
வெ.சா.: அந்தக் காலத்திலே நேரத்துக்கு ஒரு கட்டுப்பாடு இல்லாமே எவ்வளவு நேரம்கூட கூத்து நடத்தலாம் இல்லியா? பார்க்கிறதுக்கும் அந்த காலத்திலே ஆட்களுக்கு நேரம் இருந்திருக்கு. இப்போ சிலசமயம் ஒரு மணிநேரத்துக்கும் நடத்தறீங்க. அரைமணி நேரத்துக்கும் குறைச்சிருக்கீங்க அதனாலே பாணியிலே வித்யாசம் உண்டா இல்லே, காட்சிகளை துண்டிக்கிறீங்களா?
தம்பிரான்: பாடல்கள குறைச்சிடுவோம். வசனங்களை சுருக்கிடுவோம். எது முக்கியமோ அதை எடுத்திண்டு மற்றதை விட்டு விடுவோம்.
வெ.சா.: ஆனால் பாணியிலே மாற்றம் கிடையாது.
தம்பிரான்: வரவே வராது.
வெ.சா.: பார்வையாளர்கள்லே, ஜனங்கள் வரவேற்கிறதிலே ஏதும் வித்யாசம் இருக்குங்களா?
தம்பிரான்: வரவேற்பிலேயா? அப்பதான் முதல்லே நிறைய காணாத ஒரு காட்சி கண்டமாதிரி, ஒரு சிநேகிதன் பள்ளியிலே படிக்கிறாங்க. பின்னே அவர் வேற உத்தியோகத்துக்குப் போயிட்டாங்க. நாற்பது வருஷம் கழிச்சு அவரைப் பாத்தா எப்படி இருக்குமோ மனசு சந்தோஷம் – அந்த மாதிரி, இதென்ன காணாத காட்சியா இருக்குதே, அப்ப்டின்னு ஜனங்கள் முன்னாடியே போய், பாயைப் போட்டுண்டு, சாயந்திரம் நாலு மணிக்கெல்லாம் பாயைப் போட்டுண்டு, ஆட்கள் காத்திருப்பாங்க. ஆர்வமா பாத்திட்டு இருப்பாங்க.
மத்தியிலே, இந்த சினிமாவெல்லாம் வந்தப்போ அது கொஞ்சம் நின்னுபோச்சு. அது இப்போ மறுபடியும்…
வெ.சா.: ஏன்னா, அந்தக் காலத்திலே கிட்டப்பா நாடகங்களெல்லாம் இருந்ததில்லையா? ஜனங்கள் இருபது மைல் தூரத்திலேயிருந்து வண்டி கட்டீட்டு வந்து பாப்பாங்கன்னு…
தம்பிரான்: நானே போயிருக்கேன். காஞ்சிபுரம் வந்து பாத்திருக்கேன். கே.பி.சுந்தராம்பாளும் வந்து வள்ளி திருமணமெல்லாம் போடுவாங்க. நானே பார்த்திருக்கேன்.
Indian_Tamil_Folk_Artists_Thampiran_Kannappa_Koothu_theru_Performers
வெ.சா.: ஆமாம். சினிமா வந்ததினாலே அதெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு. இப்போ தெருக்கூத்து திரௌபதி அம்மன் கோயில் உத்ஸவத்தை ஒட்டி நடக்கக் கூடிய விஷயம்.
தம்பிரான்: மாரியம்மன் உத்ஸவம், அப்புறம் திருப்பதிக்குப் போய் வந்தவங்க ஏற்பாடு செய்வாங்க.
வெ.சா.: இப்போ ரெண்டு பாதிப்புகள் இருக்கு. ஒண்ணு சினிமா, பின்னாலே நாடகங்கள் கூட. முப்பது நாற்பதுகள்லே நாடகங்களுக்கு நல்ல பிராபல்யம் இருந்திருக்கு.
தம்பிரான்: சினிமா வந்து, தெருக்கூத்துக்கு இறக்கம் வந்தப்போ நான் என்ன செய்தேன்னா, நம்ம டிராமா கதைகள் இருக்கே, ஹரிச்சந்திரா, கோவலன், பவளக்கொடி, அல்லி அர்ஜுனா இதெல்லாம் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாட்டுங்கள்லே வச்சிகிட்டு நான் ஒரு பத்துவருஷம் ஓட்டினேன்.
வெ.சா.: அது எங்கே, அதை உத்சவத்தை ஒட்டி நடத்துவீங்களா, இல்லை…
தம்பிரான்: அதெல்லாம் தனி விழாவுக்கு. அவங்க அவங்க இஷ்டப்பட்டு, ஆர்வப்பட்டு, வையிங்கம்பாங்க.
வெ.சா.: அந்த நாடகங்களை நீங்களே எழுதியிருப்பீங்க இல்லையா?
தம்பிரான்: அதையெல்லாம் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாடல்களை வச்சிகிட்டு, சில வசனங்களை நாமே போட்டு செய்வோம்.
வெ.சா.: ஒரு 40-50 வருஷமா நாஸ்திக பிரச்சாரத்தினாலே ஏதும் பாதிப்பு ஏற்படலை…
தம்பிரான்: ஊஹூம். அதைப்பத்தி நமக்கு எதுவும் கிடையாது.
வெ.சா.:இப்போ சமீபத்திலே, சுமார் இருபது வருஷமான்னு வச்சிக்கங்களேன். ஒரு புதிய ஆர்வம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு. 20 வருஷத்துக்கு முன்னாடி தெருக்கூத்தை பற்றி அவ்வளவா ஏதும் கவனம் இல்லை. இப்போ, பல்கலைக்கழகங்கள்லேயிருந்து, காலேஜ் மாணவர்கள்லேயிருந்தும், நாடகப் பயிற்சிக்களங்களிலேர்ந்தும் உங்களைக் கூப்பிடறாங்க. கூத்து நடத்தச் சொல்றாங்க. இதெல்லாம் ஸ்தாபனங்களிலேர்ந்து வர்ரதுதானா, இல்லே படித்த மக்களிடையே ஒரு ஆர்வம் உண்டாகியிருக்கா?
தம்பிரான்: படிச்சவங்கள்ளாம் வந்து பாத்து, நாம ஒரு நாடகம் போடணும்னு சொல்லி கூப்பிட்டு நாடகம் வைக்கச் சொல்லிப் பார்க்கறாங்க. திருவண்ணாமலை போயிருந்தேன். அங்கே ஒரு நாடக கலைவிழா நடத்தறாங்க. கன்னியாகுமரியிலே, தனியா பாஞ்சாலி சபதம், தனிக்கூத்து, வீதியிலே வச்சு பார்த்தாங்க.
வெ.சா.: இப்போ உங்க ஊர்லே, பக்கத்து கிராமங்களிலே, செய்யாறிலே, வந்தவாசியிலே தெருக்கூத்து நடத்தறீங்க. அது அம்மன் உத்ஸவத்தைச் சேர்ந்தது. 10நாள் பாரதம் நடக்கும். நீங்க எட்டு நாளோ என்னமோ நடத்தறீங்க. அது வந்து சடங்கோட சேர்ந்தது. அது ஒரு பிரார்த்தனை மாதிரி. அங்கே சில சமயம் வேஷம் போடறவங்களுக்கும் பார்வையாளருக்கும் சாமி வந்துடுமே. அதை விட்டு வெளியே நடத்தறபோது அது வெறும் நாடகமாத்தான் இருக்கா, இல்லே…
தம்பிரான்: அதே மாதிரியே, அந்த உத்ஸவத்திலே, நாடகத்தை நடத்தறபோது, திரௌபதியோட சேலையை இழுக்கிற நேரத்திலே, குழந்தைகள் முதக்கொண்டு வயோதிகர்களூக்கும் அந்த ஆவேசம் வருது, அதைப்போல தனியா நடத்தினாலும், அந்த நேரங்கள்லே ஆவேசம் வருது.
வெ.சா.: ஏன்னா, அங்கே திருவிழாவிலே பல சடங்குகளோட அது பிணைபட்டிருக்கு. கோவிலுக்குப் போறது, அங்கே நாடகத்துக்கு வரதுக்கு முன்னாலே பூஜை பண்றது, அப்புறம் இவங்க நாடகம் நடத்தறபோது “அம்மா நாடகம், எங்க வயித்துப்பிழைப்புக்காக நடத்தறோம்…”
தம்பிரான்: அப்புறம் அந்த ஆவேசம் வருது. நான் கோவிலூர்லே நடத்திட்டே இருக்கேன். திரௌபதி சேலையைப் பிடிச்சு இழுக்கற நேரத்திலே, தர்மகர்த்தா வந்து முன்னே வந்து நெஞ்சைக் குத்திட்டாரு. என்னாலே கட்டுப்படுத்த முடியலே,
வெ.சா.: தர்ம்கர்த்தாவே.
தம்பிரான்: ஆமாம், தர்மகர்த்தா முன்னாலே உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தவர் எழுந்து முன்னாலே வந்துட்டாரு. அதேமாதிரி உத்திரமேரூர்லே வந்து முன்னாலே உட்கார்ந்து பாத்திட்டு இருந்தவர் ஆவேசம் வந்து என் காலைக் கடிச்சுப் போட்டார். அவரை உதைச்சுட்டு ஓடிட்டேன். அந்த காயம் இன்னம் சரியா போகலே.
வெ.சா.: சில சமயம் நான் பார்க்கிறேன். நாடகத்தில ஒவ்வொரு கட்டத்திலே, உக்கிரத்தை வெளிக்காட்ட கோபத்தைக் காட்ட வாயிலே என்னமோ ஒரு பொடியைப் போட்டுக்கிட்டு ஊதினா நெருப்புப் பொறி பறக்கும். அதையெல்லாம் இப்போ நான் பாக்கறதில்லே.
தம்பிரான்: அதெல்லாம் இப்போ செய்யறதில்லே. முன்னாலே செய்திட்டிருந்தோம். அதனாலே என்ன ஆறதின்னா, அந்த மருந்து உள்ளுக்குப் போயிட்டா, தொண்ட கம்மலாயிப் போயிடுது. அதனால அதை விட்டுட்டோம்.
வெ.சா.: அந்த மாதிரி நடேச தம்பிரான்கூட…
தம்பிரான்: அது வெடி. பட்டாசு வெடி. அந்த வெள்ளைப்பூண்டு பட்டாசுன்னு இருக்குதே. அது வந்து, கோவலன் சரித்திரம் மத்தியிலே, காளியோட சூலத்து அடியிலே வச்சு வெடிக்கிறது. டமால்னு வெடிக்கும். அந்த அதிர்ச்சிக்காக வச்சது. அதிலே, நடேச தம்பிரானோட கை போயிடுச்சு.
வெ.சா.: இந்த மாதிரி செய்யணும்னு சிந்தனைகள்ளாம் எப்படி வந்தது? தெருக்கூத்துலே மாத்திரம்தான் இதெல்லாம் நடக்குமா? இல்லாட்டா…
தம்பிரான்: இதெல்லாம் நம்ப யோசனை, இப்படி செய்தா நல்லாயிருக்கும். ஒரு அதிர்ச்சியா இருக்கும்கிறதுக்காக நாங்களே சிந்தனை பண்ணிக்கிட்டது.
வெ.சா.: இதை மத்த தெருக்கூத்துகாரங்களும் செய்யறாங்களா? நான் கேள்விப்பட்டதில்லே. உங்க கூத்திலேதான் நான் இந்த மாதிரி பார்த்திருக்கேன்..
தம்பிரான்: இதிலேதான் அந்த மாதிரி நடந்து, பெரிய விபத்தா முடிஞ்ச பிற்பாடு, எல்லாத்தையுமே விட்டுட்டோம். ஏதேனும் ஒரு பிரமை காட்டணும்னா ஒரு தீவட்டி வச்சு, அப்படி ஜாடையா காட்டறதுதான்.
வெ.சா.: அப்புறம் இன்னொண்ணும் கேட்கணும். எல்லா பாரம்பரியக் கலைகளிலேயும் மகாபாரதக் கதைகள்தான் நடத்தறாங்க. ராமாயணத்தை அவ்வளவா தொடறதில்லே.
தம்பிரான்: மகாபாரதமும், ஹிரண்ய விலாசமும், பிறகு அறுபத்து இரண்டு நாயன்மார்கள்ளே, சிறுத்தொண்டர் விலாசமும், வள்ளி திருமணமும், சத்தியவான் சாவித்திரி இதெல்லாம் நடத்தியிருக்கோம்.
வெ.சா.: சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம், நாயன்மார்கள் சரித்திரம், சிறுத்தொண்ட நாயனார், இதையெல்லாம் நீங்கள் நாடகமாக நடத்தறபோது, மற்ற நாடகங்கள்லே சரி, கீசக வதம் வச்சுக்கங்க, இல்லை. அர்ஜுனன் தபஸ், இல்லாட்டா பீமன் – துர்யோதனன் சண்டை- இதெல்லாம் நிறைய உக்கிரத்தைக் காமிக்கும். வீர ரசத்தைக் காமிக்கும். இதையெல்லாம் எப்படி காமிக்க முடியும்? வள்ளி திருமணத்திலே என்ன வரும், சிறுத்தொண்ட நாயனார்லே என்ன வரும்?
தம்பிரான்: சிறுத்தொண்ட நாயனார்லே பக்தி உண்டாகும்.
வெ.சா.: அது சரி, தெருக்கூத்து பாணிக்கும் அதுக்கும் ஒத்துப் போகுமா? ஏன்னா அது சாத்வீகமான விஷயம்.
தம்பிரான்: சாத்வீகம்னா, சாத்வீக விஷயம்தானே அது

Thambiran_Indian_Tamil_Folk_Artists_Thampiran_Kannappa_Koothu_theru_Performers

வெ.சா.: தெருக்கூத்துக்கேயான உக்கிரம் அதிலே வரும்ங்களா?
தம்பிரான்: உக்கிரம் வராது. நாடகத்துக்கு ஏற்ற மாதிரிதான். அல்லாத்துக்கும் உக்கிரம் வராது. இப்போ அர்ஜுனன் தபஸுக்காக போறான்னா, அர்ஜுனன் வீரன்தான். தபஸுக்குப் போகும்போது எப்படி போவான்? சாந்தமாகத்தான் போவான்.
வெ.சா.: அவனும், கீழே பரமசிவனும், கீழே வேடனா வர்ர போது அவங்களுடைய தர்க்கங்கள்…
தம்பிரான்: ஆமாமாம்.
வெ.சா.: ஏன்னா, தெருக்கூத்தினுடைய சிறப்பே அந்த உக்கிரத்திலேதான் இருக்குன்னு நான் நினைச்சிண்டிருந்தேன். ஆனா இதை விரும்பறாங்களா மக்கள்? சிறுத்தொண்ட நாயனார், வள்ளி திருமணம் இதையெல்லாம்? ஏன்னா…
தம்பிரான்: முன்னே இருந்தவங்கள்ளாம் காலமாயிட்ட பிறகு, இப்ப இருக்கிற பசங்க, இன்னம் பயிற்சி கொடுக்கலே, கேட்கிறவங்க நிறையபேர் இருக்காங்க. மார்க்கண்டேய சரித்திரம் எடுத்துக்கங்க…
வெ.சா.: அதெல்லாம் பிராபல்யமா இருக்கா?
தம்பிரான்: இப்ப இருக்கிற பிள்ளைங்களுக்கு இதுவரைக்கும் கத்துக் கொடுத்ததுதான் இதுவரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. இனிமே அதை முயற்சி பண்ணனும். இதுக்கெல்லாம் ஒரு பள்ளி ஒண்ணு ஆரம்பிச்சு, செய்தா, கத்துக்கொடுத்து ஒரு கம்பெனியா ஆக்கலாம். அப்படின்னு ஒரு ஆசை கொண்டிருக்கேன்.
வெ.சா.: தெருக்கூத்து மேலே திரும்ப ஒரு அக்கறையும் ஈடுபாடும் ஏற்பட்ட பிறகு தெரியவந்த விஷயம், சமீபத்திலே நீங்க ஒரு நாடகத்திலேகூட, இப்போ ஏற்பட்டிருக்கிற அக்கறை இருக்கே, சுற்றுப்புற சூழல்லே, சுற்றுப்புறம் அழிவு ஏற்படாம் நாம பார்த்துக்கணும், மரங்களை அழிக்கக்கூடாது, சுற்றுப்புறத்தை சுத்தமா வச்சிருக்கணும், இந்தக் கருத்தை வச்சிக்கிட்டு நீங்க தெருக்கூத்து…
தம்பிரான்: மகாபாரதத்திலே காண்டவவன தகனம் அர்ஜுனன் காண்டவ வன தகனம் செய்யறதை வச்சித்தான், அதிலேயிருந்து தக்ஷனுடைய பிள்ளை நரகாசுரன், ‘தாயைக் கொன்றவன் எவன்?’ என்று கேட்க இந்திரன் சொல்றான், ‘கர்ணன்தான் இவனுக்கு பகைவன்’னு சொல்ல, அவன்கிட்ட போய் அடைக்கலம் புகுந்து 17ம் நாள் யுத்தத்திலே உபயோகப்படுத்தறான்.அதிலேயிருந்து வந்ததுதான் இந்த செடிகொடி மரங்களையெல்லாம் அழிக்கக் கூடாது. ஏற்கனவே திருதராஷ்டிரன் நாட்டை அழிச்சுட்டான். இன்னம் இதை அழிக்கறதினாலே மழை பெய்யாது. நாடு க்ஷேமம் அடையாது. இதனாலே மிருகங்கள் எல்லாம் ஜீவியம் அத்துப் போயிடும்’னு வருது.
வெ.சா.: இதை எப்படி தெருக்கூத்திலே கொண்டு வர்றீங்க?
தம்பிரான்: இது மகாபாரதத்தை சேர்ந்ததாச்சே.
வெ.சா: அதை எப்படி காட்சிரூபமா சொல்றீங்க?
தம்பிரான்: காட்சிரூபமான்னா, கண்ணன் வராரு. வந்தவுடனே தன்னுடைய தங்கைக்கு சீதனம் கொடுக்கணும் அப்படின்னுட்டு இந்திர பிரஸ்தம் வராரு. கொடுக்கிறாரு. கொடுத்த உடனே, ‘சரி காண்டவ வனம் பார்க்கணும். எல்லாரும் போகலாம்’னு எல்லாரும் புறப்பட்டு போறங்க. போகச்சே, அந்த இடத்திலே கிருஷ்ணன் என்ன செய்யறாரு ‘இதை நான் அழிக்கிறேன்’கிறாரு. அப்படீன்னு சொல்றச்சே ராதா சொல்றா, ‘இது வாண்டாங்க ஸ்வாமி. இதிலே காய்கறிக உண்டு. பக்ஷிங்க உண்டு. இதிலே இதெல்லாம் வாழ வசதி இருக்கு. இதனாலே மழையும் வர்ஷிக்கும். பயிர் செழிக்கும்.இதை அழிக்கக் கூடாது’ன்னு சொல்றதை அந்த இடத்திலே காட்டறோம்.
வெ.சா.: இன்னும்கூட ஒண்ணு கேள்விப்பட்டேன். பெண்களுக்கு சம உரிமை கொடுக்கணும்கிற ஐடியா கூட எங்கேயோ ஒரு நாடகத்திலே…
தம்பிரான்: அது வரதட்சிணையைப் பற்றிங்க. அந்த வாலி ஸம்ஹாரத்திலே, அவன் ராமரோட தர்க்கம் பண்றான். அப்போ ராமர் சொல்றார் ‘உன்னோட தம்பியோட மனைவியை உரிமையாக்கிக் கொண்டயே இது நியாயமா’ன்னு கேக்கறாரு, அதுக்கு வாலி சொல்றான். ‘அப்படிச் சொல்லாதீங்க ஐயா. என் தம்பி குத்தம் செஞ்சான். எனக்கு பயந்து மலையிலே போய் பதுங்கிக்கிட்டான். அவன் மனைவியை என்ன பண்ணினான்? அவளும் என் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்திரீ. அவன்கிட்டே இருக்க வேண்டியவள். அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவளை நான் வச்சிக்கிட்டேன். நீ உன்னை ஆராய்ந்துக்க. நீ என்ன காரியம் செய்தே? நீ வந்துட்டே ஆரண்யத்துக்கு. உன் மனைவி உன்னோட வந்துட்டா. உன் தம்பி உடன்பிறந்தவனும் வந்துட்டான். அவனுடைய மனைவி எங்கே இருக்கா? யாருடைய பாதுகாப்பிலே? அப்போ பரதன், லக்ஷ்மணன் மனைவியை உரிமையாக்கிக் கொண்டானா? அதனாலே எங்களுக்கு வானரங்களுக்கு அதெல்லாம் கிடையாது. நீங்க மனுஷாள்லே திருமணம்னா, அழகான பெண்ணு, படிச்சவளா இருக்கணும். அப்பறம் வரதட்சிணையோட வரணும். எல்லாம் கொடுத்தாலும், எல்லாம் இருந்தாலும், அழகிருந்தும் வரதட்சிணை வேணும். வரதட்சிணை கொடுக்கலைன்னா, தீயிட்டுக்கூட கொளுத்திடுவீங்க. நாங்க அப்படியெல்லாம் செய்ய,மாட்டோம். நாங்க வானரங்க. எங்களுக்கு தம்பி மனைவின்னும், என் மனைவின்னும், தாயின்னும் வரமுறை கிடையாது அப்ப்டி அந்த இடத்திலே கொஞ்சம்… சொல்லுவோம். இப்படித்தான் நாங்க அதைக் கையாள்றோம்.
வெ.சா.: அப்படி புதிய கருத்துக்கள்கூட, தற்கால கருத்துக்கள்கூட தெருக்கூத்திலே சொல்லமுடியுது. ஆனால் பிரச்சாரம் மாதிரி இல்லாமே, ரொம்பவும் அதிகமா இல்லாம, ஆனால் இந்த கருத்துகள் எல்லாம் இருந்திருக்கு. சரி. இது ஒரு பாரம்பரியக் கலை. பழங்காலத்துக் கலை. இதை ஏதோ சடங்கோட சேர்த்திருக்கோம். நடத்தறாங்க. பரம்பரையா என்கிறதுபோக, அந்த அளவுக்கு இல்லாட்டாகூட, புதிய நாடக முயற்சிகள்லாம் கூட நடத்தறீங்க. அதிலேகூட புதுசா கத்துக்கற மாணவர்கள், நாடகப் பயிற்சிக்கு வரும் மாணவர்கள், தெருக்கூத்து எப்படி நடிக்கிறாங்க அந்த பாணி, பத்ததிகள், பாவனைகள் இதெல்லாம்கூட இப்போ ப்ரெக்டினோட காகேஷியன் சாக் சர்க்கிள் ஐ வெள்ளை வட்டம்னு பேரிலே. அதிலேகூட நீங்கள் ஈடுபட்டிருந்தீங்க இல்லியா, அதிலேகூட…
தம்பிரான்: அதிலே கம்பெனி ஆட்களை ஒண்ணு சேர்த்திருக்கேன். கே.எஸ்.ராஜேந்திரன் சம்பந்தப்பட்டது.
வெ.சா.: அதிலே நீங்க எந்த விதத்திலே சம்பந்தப்பட்டிருந்தீங்க?
தம்பிரான்; கூத்துப்பட்டறை இருந்ததில்லே. நா.முத்துசாமியோடது. அதிலே, ராஜேந்திரன் இந்த நாடகத்தை ஆரம்பிச்சாரு. ‘வெள்ளை வட்டம்’. அதுக்கு ஆட்கள் இல்லே. அதனாலே நம்மாட்களையெல்லாம் அதிலே கொண்டுபோய்விட்டு, அதிலே சேர்த்து, அதுக்கு நான் சில பாடல்களை எழுதிக் கொடுத்து…
வெ.சா.: பாடல்கள்?
தம்பிரான்: ஆமாம் பாட்டு மட்டும் எழுதிக் கொடுத்து செஞ்சோம்.
வெ.சா.: அதுபோக நடிப்பு பாணியிலோ, மேடை அமைப்பிலோ, இல்லாட்டா…
தம்பிரான்: அதெல்லாம் இல்லே. வெறும் பாடல்கள் மட்டும். சில அடவுகள் வருது.
வெ.சா.: அது எப்படிப்பட்ட அடவா வருது?
தம்பிரான்: இப்போ அரசன் புறப்பட்டு வரார்னா முதல்லே, சேனை சைன்யங்கள் வருது இல்லியா? தகதோம் த திமிதக…படத்திலே பாத்தீங்கள்ளே (கூத்துப் பட்டறையின் வீடியோ படம்) அதேதான். அது தெருக்கூத்து அடவு. சில சில இடங்கள்ளேதான் அது உபயோகத்திலே வரும்.
வெ.சா.: நான் இன்னம் ஒண்ணுகூட பார்த்தேன். உங்ககிட்ட, ராமசாமி தெரியுமில்லியா? அவர் உங்ககிட்ட நாடகப்பயிற்சி…
தம்பிரான்: கிராமத்திலே ஊர்ப் பிள்ளைகள் கத்துக்கணும்னு சொல்லி, ‘பாஞ்சாலி சபதம்’ ‘வஸ்திராபரணம்’ ஆரம்பிச்ச உடனே, அவர் ரொம்ப நெருக்கத்திலே வந்தாரு. ‘இன்னமாதிரி நான் செய்யணும். எனக்கு ஒரு பாத்திரம் கொடுங்க’ ன்னாரு. ‘சரி. நம்மூர் பிள்ளைகள்லே ஒரு ஆளை நிறுத்திட்டு, ‘நீங்க போட்டுக்கங்க துச்சாதனனான்னு அவருக்கு துச்சாதனன்ன் வேஷம் கொடுத்தேன். பதினைஞ்சு நாள்தான்.
வெ.சா.: பதினைஞ்சு நாள்தானா?
தம்பிரான்: ஆமா, பயிற்சி கொடுத்து, அவரு பார்த்துக்கிட்டே இருந்தாரு. தொண்டை இல்லே, தொண்டை பயிற்சியெல்லாம் கத்துக் கொடுத்து அவர் செஞ்சாரு. செய்யாரிலிருந்து, வந்தவாசியிலேர்ந்து ஆசிரியர்கள்ளாம் வந்தாங்க. அவரு ஆடின உடனே சந்தோஷப்பட்டு அவரைத் தூக்கிக் கொண்டாடினாங்க. அதும் பிற்பாடு வந்து, கீசக வதையிலே, கீசகனா நடிச்சாரு. ம்யூஸியம் தியேட்டர்லேகூட ஆடினாரு.
வெ.சா.: அவர் உங்ககிட்டே பயிற்சி எடுத்திண்டது ரொம்ப உபயோகமாகத்தான் இருந்திருக்குன்னு எனக்குப் பட்டது. அவர் கிரேக்க நாடகம் ஒண்ணை தமிழ்ப்படுத்தி, தமிழ்லே நடக்கிற ஒரு கதை மாதிரி ஒண்ணு நடத்தினார். கிரேக்கக் கதை அது. அதிலே துச்சாதனன் மாதிரி, கீசகன் மாதிரி…
தம்பிரான்: கிரிகை அடிச்சிருக்காரு.
வெ.சா.: அது தெருக்கூத்து மாதிரி ரொம்ப அழகா இருந்தது. அந்த கிரிகை இல்லாம, அந்த மாதிரி ஒரு வெளியீடு இல்லாம, ஒரு சக்தி வாய்ந்த expression இருந்திருக்கு இல்லையா, அது இருந்திருக்காதுன்னு எனக்குப் பட்டது.
(தம்பிரான் சந்தோஷமாக சிரிக்கிறார்.)
வெ.சா.: ஏன்னா. அவனுடைய உக்கிரத்தையும் பயங்கரத்தையும், கொடுமையான ஒரு பாவத்தையும் காண்பிக்கிறது நல்லா வந்திருந்தது. அந்த மாதிரி பல விஷயங்கள்லே, புது தியேட்டர்லே புதுசா நடிக்கிறவங்களுக்கு, தெருக்கூத்து உபயோகப்படுமா? நடிப்பு பாணியிலே… ஏன்னா? திரும்ப…
தம்பிரான்: திரும்ப மீண்டு அவர்  வேற ஒரு கதையை புதுப்பிச்சு, அதே நடை, பாவனைகளை புகுத்தியிருக்கிறாரு. அதே மாதிரி, கத்துக்கிறவங்க எல்லாரும் அப்படிச் செய்யலாம். இப்போ பாண்டிலே போய்க் கத்துக் கொடுத்தேன் பத்து நாளைக்கு. அவங்க மீண்டும் என்ன செய்யறாங்களோ, அதிலே உபயோகப்படுத்திக்கலாம். அவங்க செய்யறாங்களோ என்னமோ அது நமக்கு எப்படித் தெரியும்?
வெ.சா.: இப்போ புது நாடகங்கள்ளேகூட, புராதன வேர்களைத் தேடிப் போகிறதுன்னு ஒரு முயற்சி நடந்திட்டு இருக்கு. இந்த முயற்சி எல்லா இடங்கள்ளேயும், இந்தியா பூராவும் நடந்திட்டு இருக்கு. நௌடங்கி பாணியிலே நடக்குது. குஜராத்திலே –சட்டுனு பேர் வர மாட்டேங்குது (பவாய்) – அதேபோல, தெருக்கூத்து பாணிகூட சில பாத்திரங்களுக்கு, குணச்சித்திரங்களுக்கு, இது effective  ஆக இருக்கிற மாதிரி படறது.
இப்போ உங்க அடுத்த தலைமுறை, இப்போ சம்பந்தம் இருக்காரு, காசி இருக்காரு. இவங்களுக்கு கிட்டத்தட்ட நாற்பது வயசு இருக்கும். இன்னம், இருபது வயசு பையன்கள்கூட உங்ககிட்டே படிக்க வராங்க. கிராமத்திலே இருக்கிறவங்க, வெளியிலேர்ந்து வர்ரவங்க இல்லே, மு.இராமசாமி மாதிரி உங்ககிட்டே படிக்கணும்னு. இதெல்லாம் ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாலே இருந்ததைவிட இப்போ ரொம்பவும் உற்சாகம் தரக்கூடிய விஷயம்.
தம்பிரான்: ஆமாம், உற்சாகம் தர்ர நிலையிலே இருக்கு.
வெ.சா.: இப்போ, இது இதே பாணிலே நடக்குமா? இல்லே பாணி மாறுபடுமா?
தம்பிரான்: நாமே மாத்தலேன்னு சொன்னா, பின்னாலே வர்ரவங்க எப்படி மாத்த முடியும்? முடியாது. அந்த பரம்பரைதான் வரணும்.
வெ.சா.: இந்த திரௌபதி அம்மன் உத்ஸவத்தோட நடத்தற தெருக்கூத்து. உங்க கிராமத்திலே மாத்திரமல்ல, அது திரும்ப உற்சாகத்தோட நடத்தறது, சுத்தியிருக்கிற கிராமத்திலேகூட, அதுபோக மற்ற ஜில்லாக்களிலேகூட. ஒருசமயம் நீங்க வில்லிப்புத்தூர் போட்டு வந்ததை கவனிச்சேன். அது நாலு வருஷத்துக்கு முன்னாடி படிச்சேன். இப்போ சமீபத்திலே பயிற்சிமுகாம்கள் கூட நடத்தறீங்க, மாணவர்களுக்கு. அதைப் பத்தி ஏதும் விவரம் தரமுடியுமா? எங்கெங்கே நடத்தினீங்க? எவ்வளவு மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க?
தம்பிரான்: பாண்டியிலே இரண்டு இடத்திலே கற்றுக் கொடுத்திருக்கேன்.
வெ.சா.: என்ன பயிற்சி அது? எவ்வளவு நாளைக்கு?
தம்பிரான்: தெருக்கூத்து. வந்து பாஞ்சாலி சபதம் ஒண்ணு. இப்போ வந்து ஹனுமான் தூது ஆக பத்து இருபது நாளைக்கு முன்னே
வெ.சா.:அதாவது ஒரு நாடகத்திலே ஒரு காட்சியை எடுத்துப்பீங்க.
தம்பிரான்: ஆமாம்.
வெ.சா.: அந்தக் காட்சியை நடிக்கிறதுக்கு, நடத்தறதுக்கு சொல்லிக் கொடுப்பீங்க இல்லையா?
தம்பிரான்: ஆமாம்.
வெ.சா.: அதுக்கு முன்னாலே வேறே ஏதாவது பயிற்சிகள் சொல்லிக் கொடுப்பீர்களா?
தம்பிரான்: கிராமத்திலே சொல்லிக் கொடுக்கிற பழக்கம் நம்ம குழுவுக்கு இல்லே. பக்கத்து கிராமக்காரங்க அவங்க கத்துக்கணும்னு வர்ரப்போ அங்கு அழைச்சிண்டு போவாங்க. அவங்களுக்கு இரண்டு மாசத்துலே கத்துக் கொடுத்து அவங்களுக்கு அரங்கேற்றம் பண்ணிக் கொடுக்கிறது.
வெ.சா.: ஓஹோ, அவங்களும் உங்க மாதிரி ஒரு குழு ஏற்படுத்தி…
தம்பிரான்: சும்மா ஆசைக்கு
வெ.சா.: அவங்க அதுக்கப்புறம் திரும்பிப் போய் என்ன பண்ணுவாங்க?
தம்பிரான்: அவங்க கிராமத்திலே ஒரு உத்சவம் இருந்ததுன்னா அவங்களே ஆடிக்குவாங்க.
வெ.சா.: ஆனா பல்கலைக்கழகத்துலேயிருந்தும், மற்ற நவீன நாடகங்கள் நடத்தறவங்களும் உங்ககிட்டே வராங்க. காந்தி கிராமத்திலே நடத்தியிருக்கீங்க, மதுரையிலே நடத்தியிருக்கீங்க, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலே நடத்தியிருக்கீங்க. அந்தப் பயிற்சிகள் எல்லாம் எந்த மாதிரி? ஒரு நாடகத்திலே ஒரு காட்சியை…
தம்பிரான்: ஒரு காட்சியைத்தான் பண்ணுவோம். அவங்களும் நடிக்கிறாங்க.
வெ.சா.:அந்த பதினைந்து நாள்லே நீங்க கத்துக் கொடுக்கறதும் அவங்க நடிக்கிறதும் உங்களுக்கு திருப்தியா இருக்கு?
தம்பிரான்:  ஆசையோட நம்பகிட்ட வந்து கத்துக்கிடறவங்க இல்லியா? அப்ப நம்ம கலையும் அவங்ககிட்டே போய் சேரட்டும் அப்படீன்னு ஆர்வத்தோட கத்துக் கொடுப்போம். கஷ்டத்தை, சிரமத்தை பாக்காமே, மூணு ஒத்திகை, ஒரு நாளைக்கு இரண்டு ஒத்திகை அப்படீன்னு வைக்கிறது, கஷ்டப்பட்டு சிரமப்பட்டு கத்துக் கொடுப்போம்.
வெ.சா.: இந்த குறுகிய காலத்துள்ளே, மேடையைச் சுற்றி வரதோ, கிரிகையோ…
தம்பிரான்: பல அடவுகளோ…எல்லாம் வருது. நாம் கத்துக்கொடுக்கிற நேரத்திலே சுருக்காத்தானே கத்துக் கொடுக்கிறோம்! கூத்து ஆடறது முழு ராத்திரியும் இல்லையே. சுருக்கமா, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரந்தானுங்களே விஷயம். அந்தந்தப் பாட்டுக்கேத்த அடவுகளைத் தானே கத்துக் கொடுக்கப் போறோம். அந்த நடிகனுக்கு என்னென்ன குடுத்திருக்கோமோ, அந்த பாத்திரத்துக்கேத்தவாறு அடவுக கத்துக் கொடுத்திடுவோம்.
வெ.சா.: அந்த அடவுகளோ, அந்த பாணியோகூட தெருக்கூத்து பாணியிலே திறமையோட செய்ய முடியுதா? ஒரு காட்சி மாத்திரம்தான். ஒரு பாத்திரம்தான். ஒரு பத்து நிமிஷம்தான். ஒரு இரண்டு நிமிஷம்தான் அவன் மேடையிலே தோன்றான்னாலும் அந்த ரெண்டு நிமிஷத்துக்கு அவன் நல்ல திறமையோட திருப்திகரமா செய்ய முடிகிறதா?
தம்பிரான்: முதல்லே பாத்து நடிச்சுக் காமிக்கிறபோது, அதிலே தேறவங்க எத்தனை பேர்? அந்த ஆளுங்களை சேத்துக்கிறது. அவங்களை சேர்த்துதான் பயிற்சி கொடுக்கிறது.
வெ.சா.: ஆனால் நான் இப்பவே பார்க்கிறேன். சிலசமயம் உங்க குழுவிலேயே, நடிகர்களுக்கு நடிகர்கள் வித்யாசமே இருக்கு.
தம்பிரான்: ஆமாம்.
வெ.சா.: சும்மா மேடையிலே சுத்தி வர்றது, நடந்து போறது இருக்கே, அந்த நடையிலேயே கூட ஒவ்வொருத்தர் திறமையிலே வித்யாசம் இருக்கு.
தம்பிரான்: வித்யாசம் இருக்கு.
வெ.சா.: அவங்க உங்ககூடவே வருஷக்கணக்கா இருந்திருக்காங்க. அப்படி இருக்கறபோதே அவங்க கிட்டே வித்யாசம் இருக்கறபோது, இந்த 15 நாள் பயிற்சியிலே அவங்க என்ன செய்திருக்க முடியும் னு எனக்கு தோணறது.
தம்பிரான்: இதிலே எப்படீன்னு கேட்டீங்கன்னா, ஒரு நடிகனுக்கு இன்ன பாத்திரம்னு கொடுக்கிறோ இல்லியா? அதே நடிகனாக அதே பாத்திரத்திலே இருக்க முடியாது. சில நேரங்கள்லே நிக்கும்படியா நேர்ந்திடும். ஏதாவது ஒரு காரணத்தினாலே, நிக்கும்படியா நேர்ந்திடும். அந்த ஒரு சமயத்திலே இந்த ஒரு நடிகன் நடிப்பான். அதை, இப்படி மாத்தி மாத்தி, ஒரு பாத்திரமா செய்யறதில்லே. ஆனால் பயிற்சியிலே அப்படி இல்லை. கொடுத்தது ராவணந்தான்னா, அதோட சரி. இந்த பதினைஞ்சு நாள்ளே அவனுக்கு பயிற்சி கொடுக்கிறதே அப்படியே செய்யணும். நாங்க மாத்தி மாத்தி செய்வோம். இன்னிக்கு அனுமார் போட்டவன் நாளைக்கு வரலை. ஏதோ ஒரு அவசர நிமித்தமா வரலைன்னா, இன்னொரு ஆள் போடுவான். அது கொஞ்சம் வித்யாசம்தான் காட்டும்.
வெ.சா.: ஆனால் இந்த பயிற்சியெல்லாம் துண்டு துண்டா, அரைமணி நேரம், ஒரு மணி நேரம், மேடையிலோ எவ்வளவு நேரம் இருக்கானோ அந்த துண்டு மாத்திரம்தான் அவனுக்குத் தெரியும். ஆனா தெருக்கூத்து பூராவும், அதனுடைய பாணிகள் உத்திகள் எப்படி? இல்லாட்டா, ஒரு பாத்திரத்தை நடிக்கக் கற்றுக் கொடுத்தா, அந்த பாணி தெரிஞ்சதுன்னா, அந்த பத்ததிலேயே, இன்னொரு பாத்திரத்தை அவனாகவே கற்பனை பண்ணி நடிக்க முடியாது. இந்த பத்துநாள் பதினைந்துநாள்லே?
தம்பிரான்: அதுக்கு தகுந்த இசையும், மெட்டுகள்ளாம் வரணும். வந்தாத்தான் கத்துக்கொடுத்த அடவுகளைப் போட முடியும்.
வெ.சா.: உங்ககிட்ட படிக்கிற சின்ன பசங்கள், இளந் தலைமுறையைச் சேர்ந்தவங்க இருக்காங்களே, அவங்களுக்கு ஒவ்வொரு பாத்திரமும் சொல்லிக் கொடுக்கிறீங்களா? இல்லாட்டா, பொதுவான ஒரு பயிற்சி, அந்த பயிற்சியிலே எந்த பாத்திரமும் எடுத்து எவனும் நடிக்க முடியும்னு…
தம்பிரான்: முதல்லே, குரல் பயிற்சி, தாளப் பயிற்சி, சங்கீதம். அது சொல்லிக் கொடுத்து வரும்போதே நம்மோட இருக்காங்கல்லியா, பல இடங்களுக்குப் போய் நடிக்கிறபோதுகூட உடந்தையா இருக்காங்க இல்லியா, அப்போ சின்ன சின்ன பாத்திரமா கொடுக்கிறது. ஒரு சகாதேவன், நகுலன் அப்படிக் கொடுக்கிறது, இப்படி தொடர்ந்து கொடுத்திட்டிருப்போம். உடனே கட்டியக்காரன் வேஷம்னு அதைக் கொடுப்போம். அது வந்த உடனே, பதிலுக்கு பதில் அவன் கேக்கற தோரணையிலே அது பார்வையாளருக்குப் போறதிலே, அவன் கேள்விக்குக் கேள்வி பதில் சொல்றதிலே, அதைப் பார்த்திட்டு, அதுக்கு மேற்பட்டு இதுக்குள்ளே அவனுக்கு எல்லாம் மனசிலே அத்துப்படியாவுது. இந்தப் பார்வையிலேயே அப்புறம் அவனுக்கு பெரிய வேஷங்களை கொடுத்து, அப்படித்தான் கொண்டு போவோம்.
வெ.சா.: உங்ககிட்ட இருக்கற சம்பந்தம், காசி, ஆறுமுகம் இவங்க வந்து, உங்க மாதிரி ஒரு நாடகத்திலே இதுவரைக்கும் நடிக்காத ஒரு காட்சி, ஒரு கதை, இத அவங்க தானாகவே தங்களுடைய கற்பனையிலே நடிக்க முடியுமா?
தம்பிரான்: அவங்களுக்கு கற்பனை எது? நாம மெட்டு கொடுக்கிறோமில்லையா? இசை, எந்தெந்த மெட்டு, சோக பாகத்துக்கு, வீரத்துக்கு, இதுக்கெல்லாம் ஒரு காட்சி கொடுக்கிறபோது, அந்த மெட்டினுடைய அடவுகளைத்தான் அவங்க போடணும்.
வெ.சா.: ஓஹோ, எல்லாத்துக்கும் ஆதாரமானது, இந்தப் பாட்டும், இதே தாளக்கட்டும்…
தம்பிரான்:இந்த தாளத்தைக் கொட்டித்தான் அவன் அடவு போடணும்.
வெ.சா.: இதுதான் ஆதாரமானது.
தம்பிரான்: ஆமாம்.
வெ.சா.: இதை வச்சித்தான் மற்றதெல்லாம் வருது?
தம்பிரான்: ஆமாம், ஜம்பைதாளம் ஜம்பைதான். திரிபுடதாளம், திரிபுடைதான். ஆதிதாளம்னா அதுக்குத் தக்கதான் கால் போடணும்.
வெ.சா.: நடிப்பே அந்த தாளத்தை ஒட்டித்தான்?
தம்பிரான்: தாளத்தை ஒட்டித்தான்
வெ.சா.: இது ஒரு புது விஷயம் எனக்கு. நடிப்புங்கறது தனியா இருந்து, அதுக்கு தகுந்தாப்போல வேண்டிய இடத்திலே பாட்டும் தாளமும் ஒட்டிக்கிறதில்லே.
தம்பிரான்: எதிலியுமே, எந்தக் கலையிலுமே, தாளத்தை ஒட்டித்தான் அடவுகள் எல்லாம் வரும். ‘தோள்கள் துடிக்குதென்ன’ தோள்கள் துடிக்குதுன்னு சொன்னா, தோளை துடிச்சுக்கணும். ‘கண் விழிகள் சிவக்குதென்ன’ன்னு சொன்னா, விழிகளைக் காட்டறமில்லியா, அந்தந்த உருப்படிகளுக்குத் தகுந்த மாதிரி, கைகளை அபிநயிச்சுக் காட்டறமில்லியா, அதுபோலத்தான் கால்களும். இப்போ ஒரு பாடல். ‘எங்கும் நிறை தெய்வம் நானே, எனக்கு இணை யாரும் இல்லைதானே, சங்கை இல்லாமலே தரணி ஏழும் பொங்க, உடுப்பைக்குள் இங்கிதமாக, போஜன், சர்வேசன், ஜகதீசன்…தகதிதா தரிங்கிணதோம்…எங்கும் நிறை தெய்வம் நானே, எனக்கு இணை’ அந்த தாளம் அடவுகள் எல்லாம் அதேமாதிரிதான். இன்னொன்னு ‘அட எங்கேயடா உந்தன் சிந்தையில் நிறைந்த ஹரி?’ இந்த பாட்டுக்கும் அதுக்கேத்த தாளம், தாளத்துக்கேத்த அடவுகள். தாளத்துக்கேத்த மாதிரிதான் அடவுகள்.
வெ.சா.: பாட்டுங்கறது இல்லாமலே ஒரு தெருக்கூத்துங்கறது நினைச்சுப் பார்க்க முடியாது?
தம்பிரான்: அதெப்படி வரும்?
வெ.சா.: முதலும் முடிவுமா இதுதான். பாட்டும் தாளமும்தான். அதிலேயிருந்துதான் மற்றதெல்லாம் வருது.
தம்பிரான்: ஆமாம்.
வெ.சா.: அப்போ அந்த 10 நாள் 15 நாள் முகாமிலே பயிற்சிபெற வரவங்களுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படுத்த முடியுமே தவிர,
தம்பிரான்: கொஞ்சம்தான். என்ன பாத்திரம் கொடுத்திருக்கோமோ அதுவரைக்கும்தான்.
வெ.சா.: ஆனால், இதிலே அவங்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்பட்டா அவங்க திரும்ப வரலாம்.
தம்பிரான்: ஆமாம் வரலாம்தான்.
வெ.சா.: அப்படி வந்திட்டு இருக்காங்களா?
தம்பிரான்: அப்படி யாரும் வரலை. கத்துக் கொடுத்ததோட இருக்காங்களே ஒழிய, யாரும் வரலை.
வெ.சா.: ராமசாமி அதை, ரொம்ப தன்னோட கற்பனையோட செய்ய முடிஞ்சிருக்கு.
தம்பிரான்: முதலிலே செஞ்சாரு. சந்தோஷமா எல்லோரும் போற்றி புகழவே, மீண்டும் கத்துக்கணும்னு வந்தாரு. அவர் சில நாடகங்களைப் பண்றாருல்லியா? அதுக்குத் தேவைப்படற அடவுகள் இருக்குது. அதுக்காக மறுபடியும் வந்தாரு. கீசகனா நடிச்சாரு.
வெ.சா.: கூத்துப்பட்டறை நாடகங்கள்ளே எந்த நாடகங்கள்ளேயாவது இந்தமாதிரி உபயோகப்பட்டிருக்கா? இந்த அடவுகளோ, பாட்டுக்களோ,
தம்பிரான்: அடவுகள்ளாம் சிலது இருக்கும், ரொம்ப இருக்காது.
வெ.சா.: ஏன்னா, கூத்துப்பட்டறையிலே இருக்கிற முத்துசாமிக்கு, அதிலே பொறுப்பா இருக்கிற முத்துசாமிக்கு, உங்ககிட்டே ரொம்பவும் ஈடுபாடு. தெருக்கூத்திலயும் அவருக்கு ஈடுபாடு அதிகம். அவருடைய நாடகங்களும் இயல்பான, யதார்த்தபூர்வமான வெளிப்பாடாக இல்லாம…
தம்பிரான்: முதல்லே, நான் கிருஷ்ணகான சபாலே நடத்தறேன். ‘கர்ணன்’. அப்போ கோகுல கிருஷ்ணன் இருக்காரில்லே, அவங்கள்ளாம் வந்திருந்தாங்க. அப்போதான் எனக்கு சந்திப்பு ஏற்படுது அவருக்கும் எனக்கும். அப்போ, செய்யற காலத்திலேயே, கதை சொல்லிட்டு வரும்போது, ‘நத்தைக்குள் முத்து’ அதை ’முத்துக்குள் நத்து’ அப்படீன்னுட்டேன். இவரு கலகலன்னு கை தட்டிட்டார். நான் என்ன சொன்னேன்: ‘முத்துக்குள் நத்துன்னா, நத்துன்னா பெண்கள் அணிகிற ஆபரணம். அதுக்குள்ளேதான் முத்து இருக்குது’ன்னு திருப்பிக்கினேன் பேச்சை. சந்தோஷப்பட்டுட்டாங்க. அப்புறம் எல்லாம் முடிஞ்ச உடனே, வேஷங்களையெல்லாம் கலைக்கும்போது, பக்கத்தில் உட்கார்ந்து பேசி, அப்போதான் அறிமுகமானது அவங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, மறுபடியும் வந்து அழைச்சிட்டு போயி, கூத்துப்பட்டறைன்னு பேர் வச்சி, அதிலே உக்காரவச்சி, ஆரம்பிக்கச் சொன்னாங்க. அப்போ தனஞ்செயன் இருக்காரே, பரதநாட்யம் ஆடறவரு, அவருக்கும் எனக்கும் அதனுடைய பாவனை எப்படி, என்னுடைய பாவனை எப்படின்னு, அதிலே வில்லு எப்படி எடுக்கிறது, இதிலே தெருக்கூத்திலே எப்படி எடுக்கறது, எல்லாம் பார்த்து, அதுலேயிருந்து தொடர்பு வந்திச்சு.
வெ.சா.: இந்த தொடர்பு பத்மா சுப்ரமண்யத்தோடகூட…
தம்பிரான்: ஆமாம் கூத்து நடக்கும்போது, அந்த அம்மா வந்து பாப்பாங்க. பாத்துட்டு அவங்களே நாடகங்க ஏற்பாடு பண்ணிணாங்க. பல சபாங்கள்ளே இட்டுப் போய் வச்சி, ரொம்ப வரவேற்பெல்லாம் கொடுத்தாங்க. போன ஆண்டுகூட, மகாபலிபுரத்திலே, ஒரு நாடகம் நடந்தது. அந்தம்மாக்கு ரொம்ப அபிப்ராயம்.
வெ.சா.:ஏன்னா, இது பாமர வடிவம்னு ஒரு தப்பான அபிப்ராயம் இருக்கு இல்லியா? இதிலே, பழங்காலத்திலேயிருந்து வந்த classical baseம் இதிலே இருக்குங்கறது தெரிய வரணும். அதை பத்மா சுப்ரமணியமும், தனஞ்செயனும், முத்துசாமியும் புரிஞ்சு கொண்டிருக்கிறதெல்லாம் ரொம்ப சந்தோஷமான விஷயம். இது எவ்வளவு தூரம் இன்னம் பரவியிருக்குன்னு தெரியலை, எவ்வளவு பேர் அதை ஒத்துக்கிட்டுருக்காங்கன்னும் தெரியலை. ஒத்துக்கணும். அவங்களுக்கு புரிஞ்சிருக்கு.
தம்பிரான்: பத்மா சுப்ரமண்யம். அந்த அம்மா சில அடவுகளையெல்லாம் என்னுடைய பாட்டிலேயிருந்து, இது பரம்பரையிலேயிருந்து எப்படி வந்திருக்குதுன்னு காட்டச் சொன்னாங்க. காண்பிச்சிருக்கேன். சம்பந்தனுக்குக் கத்துக் கொடுத்து, அவனே காண்பிக்கிறது, முட்டி கிரிகை அடிக்கிறது, அந்தக் காலத்துப் பாட்டு, தாளங்கள் இதெல்லாம் சொல்லி, அதிலேயிருந்து அந்த அம்மாக்கு ரொம்ப திருப்தி. சந்தோஷமாயிருச்சி. அவங்க இரண்டு வருஷம் மகாபலிபுரத்துக்கு அழைச்சிக்கினு போனாங்க.
வெ.சா.: இந்த கிரிகை இருக்கே இது பரத நாட்டிய சாஸ்திரத்திலேயே இருக்கு. அந்தக் காலத்திலேயிருந்தே இருக்கு. இது Classical dance லேயே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இது இப்போ கதக் நாட்டியத்திலே இருக்கு. அதைத்தான் பெரிய விஷயமா இங்கே சொல்றாங்க.
தம்பிரான்: வேகமா ரொம்ப இருக்காது. சும்மா, சர்வசாதாரணமா, அப்படி இருக்கும்.
வெ.சா.: கதக்லே ரொம்ப வேகமாகவே சுத்தறாங்க. ஆனால் தெருக்கூத்திலே இந்த கிரிகை உபயோகப்படுத்தற மாதிரி, ஒரு உக்கிரத்தைக் காண்பிக்கிறதுக்கோ ஒரு கோபாவேசத்தைக் காண்பிக்கிறதுக்கோ, சில சமயங்கள்லே சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தறதுக்கு, புரியறது நமக்கு. நமக்கே ஒரு உத்வேகம் ஏற்படறது இந்த கிரிகைகள் முடிந்த உடனே. ஆனால் கதக்கிலே வேஉ எதிலுமே இதிலே உபயோகப்படற அளவுக்கு இல்லை. அப்படி உபயோகம் இருக்கிறதா எனக்குத் தெரியலே, ஒரு உணர்ச்சிவசத்தைக் காண்பிக்கிறதுக்கு.
தம்பிரான்: உணர்ச்சிவசத்துக்கோ, உக்கிரத்துக்கோ ஆதாரம் பாட்டுதான். ‘துச்சாதனன் எழுந்து இருந்து, துடிதுடித்து கோபம் ஆகினான்’ அந்த நேரத்திலே எப்படி இருப்பான் அவன்? அந்த துடிதுடிப்பு இருக்கணும் இல்லையா? அந்த பாட்டிலேயே வருதுங்க இல்லியா? அந்த வேகம்தான் இதிலே இருக்கு. அதனாலேதான் கிரிகை, சுத்தி வரதுக்கெல்லாம் இது, அந்த ஆவேசம் மாதிரி காட்டறது, விறுவிறுப்பு உண்டாக்கும்.
வெ.சா.: தெருக்கூத்திலேங்க – உங்களுக்கு வருத்தம் ஏற்படக் கூடாது. இந்த பெண் பாத்திரம் இருக்கே, அது எனக்கு அவ்வளவா பிடிக்கலீங்க. மற்றதிலே இருக்கிற, கலாபூர்வமான வெற்றி இருக்கே, மற்ற எல்லா பாத்திரங்களிலும், உடையணிகளிலும் சரி, நடைஉடை பாவனைகளிலும் சரி, பேச்சிலும் சரி, மேடையிலே அவங்க எப்படி நடந்துக்கறாங்களோ, அதிலும் சரி, பெண் பாத்திரங்கள் அவ்வளவா சோபிக்கறதா எனக்குத் தெரியலே. இதை மாற்ற முடியுமா? அதில் உடையலங்காரங்கள்ளே கூட தனிப்பட்டதா ஒண்ணும் இல்லே.
தம்பிரான்: உடையலங்காரம் மாத்தி இருந்தது. கிளியல் கட்டறது, கம்மல் கட்டறது, ஜடை வைக்கிறது, இதெல்லாம் இருந்தது. மத்தியிலே அது விட்டுப் போச்சு. இப்போ செய்து வச்சிருக்கேன். இப்போவாவது வர்ற விழாவிலே நடத்துவோம். வில் வளைப்பு, துயில், இந்த இரண்டு நாடகத்திலேதான் அது உபயோகப்படும். மற்றதெல்லாம் சர்வ சாதாரணம். கதை சொல்றபோது சர்வசாதாரணமா வந்து போயிடுவாங்க. கீசகன் வதத்திலே பணிப்பெண்ணா வ்ர்றது, அது சர்வ சாதாரணம்.
வெ.சா.: இதை நீங்களா செய்யறீங்களா, இல்லை…
தம்பிரான்: இல்லை இதெல்லாம் அந்த காலத்திலே இருந்தது. மத்தியிலே விட்டுப் போச்சு.
வெ.சா.: என்ன காரணத்தினாலே விட்டுப் போயிருக்கும்?
தம்பிரான்: மத்தியிலே நான் சொன்னேனே, சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடகத்தை ஆரம்பிச்சு, அதிலே முனைஞ்சிட்டேன்ல, அந்த சமயத்திலே அது விட்டுப் போச்சு.
வெ.சா.: சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடகத்திலே இருந்திருக்கீங்களா?
தம்பிரான்: அவர் நாடகங்களை நடத்தியிருக்கேன். அல்லி அர்ஜுனா, கோவலன், ஹரிச்சந்திரா, பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம்.
வெ.சா.:அவங்க பாணியிலே நடத்தினீங்களா, இல்லே தெருக்கூத்து பாணிலே…
தம்பிரான்: ட்ராமா பாணி, கிட்டப்பா அவர்கள்ளாம் இல்லியா. அந்த மாதிரி பாணில நடத்திக்கிட்டிருந்தேன்.
வெ.சா.: அது இடைப்பட்ட காலத்திலா? எப்போதிருந்து?
தம்பிரான்: இது வந்து சினிமா வந்த பிற்பாடு கொஞ்சம் தெருக்கூத்துக்கு வரவேற்பு குறைஞ்சது பாருங்க. அந்த சமயம் இப்படி இதிலே நுழைஞ்சது. கொஞ்சம் ஒரு அஞ்சாறு வருஷம் அதிலேயே ஈடுபட்டிருந்தேன். அப்புறம்தான் இங்கே தெருக்கூத்துக்கு…
வெ.சா.:அந்த சமயத்திலே உங்க நடிப்பு பாணியையே மாத்திட்டீங்க.
தம்பிரான்: ஆமாம். அதெல்லாம் இந்த இதுக்கெல்லாம் வராது. அந்த சமயத்திலேதான் கோவலன்லே காளியா நடிச்சு கைபோயி, பட்டாஸ் வெடிச்சது கைபோனதுக்குக் காரணம். அப்பதான் அது.
தம்பிரான்: சங்கரதாஸ் நாடகத்திலே, தெருக்கூத்திலே போகலே அது.
தம்பிரான்: தெருக்கூத்தில்லே. டிராமாவிலே அப்போ ஸ்டேஜ் போட்டு நடத்தறது.
வெ.சா.: அப்போ பட்டாசு வெடிச்சு கைபோனது தெருக்கூத்தில் இல்லே.
தம்பிரான்: அதிலேயும் வச்சிருந்தாரு. பீமன் கதையிலே, பீமன் வேஷம் போடறபோது டமால்னு கதையோட வெளியே வர்ரது. அது, கால வித்யாசம், அது அந்த மாதிரி பண்ணிப்பிடுச்சு.
வெ.சா.: அது அவரா இந்த மாதிரி யோசிச்சு, சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடகத்திலே பண்ணலாம்னு பண்ணினாரா இல்லே,
தம்பிரான்: நாமா செய்ததுதான். நம்ம சிந்தனை இப்படி செய்யலாம், பிரமையா இருக்கும் ஜனங்களுக்கு அப்படீன்னு ஆரம்பிச்சது.
வெ.சா.: முழுக்க, முழுக்க, இது நடேச தம்பிரானது சிந்தனையிலே வந்தது இல்லியா?
தம்பிரான்: அது விபத்து ஏற்பட்டதிலேர்ந்து விட்டுப் போச்சு.
வெ.சா.:இதுக்கு தெருக்கூத்தோடேயும் சம்பந்தம் இல்லே, சங்கரதாச் ஸ்வாமிகள் நாடகத்தோடயும் சம்பந்தம் இல்லே.
தம்பிரான்: இல்லை, நாமே தனியா அமைச்சது.
வெ.சா.: ஏன்னா, இந்த தெய்யம் ஆட்டம் இருக்கு இல்லியா, மலையாளத்திலேர்ந்து, அந்த ஆட்டத்திலே கூட சில சமயங்கள்லே, வாயிலேர்ந்து பொறி பறக்கறமாதிரி. இதுவும் தெருக்கூத்தும் ஒரே மாதிரி, இவங்க உடை பாணி எல்லாம் பாருங்க. கதகளி பாருங்க, புஜகீர்த்தி, கிரீடம், அது இது அப்புறம் இந்த வைக்கோலை வச்சு சுத்திக்கிற… இதிலே எல்லாம் அநேகமா ஒற்றுமை இருக்கு.
தம்பிரான்: இருக்கு.
வெ.சா.: ஒருவேளை ஒண்ணுலேர்ந்துதான் இன்னொண்ணு தொடர்ந்து வருதோன்னு நினைச்சேன். அவங்களும் வாயிலேர்ந்து பொறி பறக்கற மாதிரி எல்லாம் செய்வாங்க.
தம்பிரான்: அவங்களாலெ நம்ம கிட்ட வந்ததா இல்லே நம்மகிட்டேயிருந்து அவங்களுக்கு போச்சா ஒண்ணும் புரியலிங்க.
வெ.சா.: எப்படியோ ஒண்ணு இருந்திருக்கு. அப்படித்தான் நான் நினைச்சேன். நடேச தம்பிரானும் இதையெல்லாம் செய்திருக்காரு. ஆனால் சங்கரதாஸ் ஸ்வாமிகள் நாடகத்தை நடத்தறபோதும் இதைச் செய்திருக்கார்னு சொல்றீங்க.
தம்பிரான்: ஆமாம். எல்லாம் ஜனங்களை கவர்ச்சி பண்ண.
வெ.சா.: பார்க்கிறவங்களுக்கும் வேடிக்கையா இருந்திருக்கும். உற்சாகமா இருந்திருக்கும். என்னென்னல்லாமோ நடக்குதேன்னு. அப்போ அங்கே எவ்வளவு நாள் செய்திருக்கீங்க. அது எப்போ இருந்து எப்போ வரைக்கும்? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
தம்பிரான்: இந்த பேசாத சினிமா வந்ததுங்களே
வெ.சா.: பேசாத சினிமா…? 1930லா.
தம்பிரான்: அது எனக்கு ஞாபகமில்லே. அதிலேயிருந்து ஜனங்கள் எல்லாம் அதைப் பார்க்க போனதினாலே இது கொஞ்சம் மங்கிப்போயி, இப்படி கொஞ்சம் ஆரம்பிக்கலாம்னு சொல்லி, ஆரம்பிச்சோம்.
வெ.சா.: அந்த சமயத்திலே கிராமத்து அம்மன் உத்சவத்துக்கெல்லாம்கூட கூப்பிடலியா?
தம்பிரான்: உத்சவத்துக்கு மட்டும் கூப்பிடுவாங்க.
வெ.சா.:ஆமாம். மற்ற காலத்திலே உங்களுக்கு ஜீவனம் எப்படி நடக்கறது?
தம்பிரான்: ரொம்ப வழியில்லாம, ரொம்ப க்ஷீணமாயிட்டது.
வெ.சா.: அந்தக் காலத்திலேயும் நீங்க உத்ஸவத்திலே தெருக்கூத்து ஆடிட்டுதான் இருந்தீங்க.
தம்பிரான்: தெருக்கூத்தும் இருந்தது. டிராமாவும் இருந்தது.
வெ.சா.: அது ஒரு பத்து வருஷம் இப்படி இருந்திருக்கு.
தம்பிரான்: நாற்பதுக்கு அப்புறம் கிருஷ்ணய்யர் வந்து அழைச்சிண்டு வந்தார், அவரும் சியாமளா அம்மாவும் வந்து முதல்முதல்லே அங்கே, ம்யூஸிக் அகாடமிலே நடத்தினோம். அதிலே வந்து வஸ்திராபரணம் நடத்தினோம். அப்போ அவங்க பாத்து எல்லாம் செய்தாங்க. அப்போ பெண் வேஷம் நடத்தறேன். எனக்கு இங்கே முடி உதிர்ந்து போயிருந்தது. அதை பார்த்திட்டு, மறுநாளே எனக்கு டோபா வாங்கிக் கொடுத்தாரு கிருஷ்ணய்யர். முந்நூறு ரூபா கொடுத்து டோபா. அதிலேயிருந்து கொஞ்சம் இந்த கலைக்கு அங்கங்கே வாய்ப்பு கிடைக்கும். உடனே இவரு பாரதியாரோட பாஞ்சாலி சபதத்தை கூத்தாக மெட்டு கொடுத்து அமைக்கச் சொல்லி, அதை அமைச்சு, கவர்ன்மென்ட் மூலியமா, கிராமங்கள்ளே போய் நடத்தினேன். அதுக்கெல்லாம் முயற்சி பண்ணினவரு முத்துசாமிதான். நம்மாலே முடியாததுக்கு எல்லாம் எடுத்துக் கொடுத்து உதவி செய்து வழிக்கு கொண்ணாந்தாரு. அதையே பாண்டியிலேயும், அவங்களுடைய சிஷ்யங்கள் எல்லாம் பாத்துட்டு கூப்பிட்டாங்க. அங்கேயும் நடத்தினேன்.
வெ.சா.: தெருக்கூத்திலே, பெண் பாத்திரங்களை பெண்களே ஏன் எடுத்துக்கக் கூடாதுங்க?
தம்பிரான்: பெண்களா? பெண்கள் இதுவரைக்கும் பாரம்பரியமா கிடையாது. அது ஏன்னு கேட்டா, விழாக்காலத்திலே உத்சவம் பக்தியோட நடக்கறது. முக்கியமான ஒரு பாத்திரம் அது நடிக்கிற அன்னிக்கு வீட்டுக்கு விலக்கா போயிட்டாங்கன்னா என்ன ஆறது?
வெ.சா.: யக்ஷகானத்டிலே எல்லாம் பெண்கள் நடிக்கிறாங்க. அதுவும் கோவில் சம்பந்தப்பட்டதுதான்.
தம்பிரான்: அதுக்கு இரண்டு மூணு பேர் இருந்திருக்கலாம். அப்போ மாத்திக் கொள்ளலாம். இதிலே அப்படிக் கிடையாது. ஒரு ஆளு, ரண்டு ஆளுதான் இருப்பாங்க.
வெ.சா.: இப்போ ஆள் கிடைக்காத காரணத்திலேதானா?
தம்பிரான்: இல்லே, பெண்களே நடிக்கிறதில்லே. இது எங்க பரம்பரைலே கிடையாது.
வெ.சா.: உங்க பரம்பரையிலே மாத்திரம் இல்லை. மற்ற இடங்கள்ளே நடக்கிற தெருக்கூத்திலே…
தம்பிரான்: அங்கேயும் பெண்கள் கிடையாது. ட்ராமா வச்சு நடிக்கறாங்களே, அவங்க பெண்களை வச்சுகினு நடிக்கிறாங்க.
வெ.சா.: பெண்கள் நடிச்சாக்க, அந்த பாத்திரத்துக்கு ஏத்த ஒரு நளினம் வருமோன்னு ஒரு எண்ணம். ஏன்னா, இப்போ அந்த நளினம், ஒரு பெண்மை இல்லாம் இருக்கு. நடையிலே ஆண்கள் நடை வருது. அது கொஞ்சம் பாக்கறதுக்கு கஷ்டமா இருக்கு. அதுக்கு ஏதாவது செய்ய முடியுமா? ரொம்ப பெரிய நடிகர்கள்லாம் இருந்திருக்காங்க. அவங்களால செய்ய முடியறது. பால கந்தர்வா இருந்திருக்காரு.
தம்பிரான்: எங்கள்ளேயே எங்கப்பா இருந்திருக்காரு. அவர் பெண் வேஷம்தான், நல்லா நடிச்சவர்தான்.
வெ.சா.: ஆனால் நான் பார்க்கிற வரைக்கும், ஒரு இருபது வருஷமா நான் பார்க்கிறேன்.
தம்பிரான்: இப்ப இந்த பிள்ளை செய்து வர்ரது ஏழு வருஷமாத்தான். இன்னும் அந்த பாணி ஒத்திட்டு வரலை. இன்னம் போகணும், அனுபவம் வரணும்.
வெ.சா.: ஒரு பெண்மை, ஒரு நளினம், பார்க்கும்படியா இருக்கலாமோன்னு ஒரு எண்ணம். ஆனால் பரம்பரையிலேயே இது கிடையாது. இதை மாத்தறதுக்கும் உங்களுக்கு விருப்பம் கிடையாது. கிடைச்சாக்கூட…?
தம்பிரான்: ஊஹூம்…வேண்டாம்.
வெ.சா.: கிடைச்சாக்கூட மாத்த மாட்டீங்க?
தம்பிரான்: சேர்க்க மாட்டோம். அதிலே பலவித விஷயங்கள் எல்லாம் பேதப்படும்.
வெ.சா.: இப்போ இருக்கிற நிலைமையிலே, அறுவடை முடிஞ்சு ஒரு மூணு மாசத்துக்கு, உங்க கிராமத்திலே, பக்கத்து கிராமங்கள்லே, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது. அதுபோக, இப்போ சமீபத்திலே, முன்னே இருந்தது போல் இல்லாம, பலகலைக்கழகங்கள்லே கூப்பிடறாங்க. பயிற்சிக்கு வராங்க. ஒரு புது உற்சாகம் ஏற்பட்டிருக்கு. இப்போ கொஞ்சம் மவுசுகூட…மவுசுன்னு சொல்ல வேண்டாம். ஏதோ புரிஞ்சுக்கிறாங்க. இதுவும் கத்துக்கணும் அப்படீன்னு. இதிலே ஒரு ஈடுபாடு, ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருக்கு. அப்படி கவர்ச்சியிலே உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், பாக்கி ஒன்பது மாசம் இருக்கு வருஷத்திலே. அந்த ஒன்பது மாசம் உங்க ஜீவனம் நடக்கும்படியான வரும்படி கிடைக்குதா?
தம்பிரான்: ஜீவனத்துக்கு எதுவும் கிடையாதுங்க. யாராவது பக்கத்து கிராமங்கள்ளே கத்துக் கொடுக்க்கச்சொல்லி கத்துக் கொடுத்தோம்னா, அவ்வளவுதான் வேறே ஒண்ணும் வழி இல்லே.
வெ.சா.: வேறே என்ன செய்யலாம் தெருக்கூத்து இன்னும் வளமா இருக்கிறதுக்கு என்னென்ன செய்ய முடியும்?
தம்பிரான்: நாடகம் கத்துக் கொடுக்க, ஏதோ உதவி செய்தாங்க. ஒரு மூணு நாடகம், வாலி மோட்சம், இந்திரஜித்து, ஹனுமான் தூது இதெல்லாம் எடுத்தோம். இந்த வருஷம் சூர்ப்பணகை பங்கம் எடுத்திருக்கு. அதுக்கு இல்லே. அதுக்கு ஒண்ணும் இல்லாததினாலே எல்லாம் சும்மா இருக்குதுங்க.
வெ.சா.: வருஷத்துக்கு ஒண்ணு ரெண்டுதான் இப்படி வரும்.
தம்பிரான்: ஏதோ வர்றது வச்சிக்கிட்டு, பிற்காலத்திலே சும்மா இருக்கற நேரத்திலே தேவைன்னு கொஞ்சம் சேர்த்து வச்சிருந்து சாப்பிட்டுக்கிறோமே தவிர, இப்போ இந்த மாதிரி அழைப்பு வருதா. அப்படித்தான் போகணும்.
வெ.சா.: தமிழ்நாடு அரசாங்கத்திலேயிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி… அவங்க இதைப் புரிஞ்சிக்கறாங்களா? இங்கே மத்திய அரசாங்கத்திலே புரிஞ்சிக்கிற மாதிரி, இதுவும் ஒரு கலைன்னு…அங்கேயிருந்து வரச்சொல்லி கூப்பிடறாங்க, உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பறாங்க. பாரிசுக்கு அனுப்பறாங்க.
தம்பிரான்: முன்னே சொன்னேங்களே. பாரதி பாஞ்சாலி சபதம், அது ஒண்ணுக்குத்தான் அனுப்பினாங்க. ஒரு எட்டு ஊரோ என்னமோ, போயிட்டு வந்தோம்.
வெ.சா.: எங்கே?
தம்பிரான்: ஆந்திரா பக்கம்.
வெ.சா.: யார் அனுப்பினாங்க.
தம்பிரான்: இவனுங்கதான், சங்கீத அகாடமி. மெட்ராஸிலே இருக்கு. அவங்க அனுப்பினாங்க. அதைத் தவிர மற்றபடி எதுவும், ஒண்ணும் இல்லே. பென்ஷன் கொடுக்கிறாங்க.
வெ.சா.: தமிழ்நாட்டிலே இருக்குங்களே அதுக்கு என்ன பேரு. கலை இலக்கிய…
தம்பிரான்: சங்கீத நாடக அகாடமி.
வெ.சா.: அங்கே அவங்க எந்த விதமான உதவியும் செய்யறதில்லே.
தம்பிரான்: இல்லை.அது ஒண்ணுதான் போனது நாங்க. மற்றபடி எதுவும் இல்லை.
வெ.சா.: மெட்ராஸ் டி.வி.லே நடிச்சிருக்கீங்களா?
தம்பிரான்: ஒரு நாடகம் கொடுத்திருக்கேன். பாஞ்சாலி சபதம்.
வெ.சா.: அது எப்போ?
தம்பிரான்: அது ஆய்ப் போச்சுங்க ஒரு ஒன்பது வருஷத்துக்கு முன்னே.
வெ.சா.: அதுக்கு அப்புறம்
தம்பிரான்: அதுக்கு அப்புறம் ஒண்ணும் இல்லிங்க. அங்கேயிருந்தும் ஒண்ணும் வரலை. நாங்களும் போகலை.
வெ.சா.: இந்த தஞ்சாவூர்லே Zonal Cultural Centre னு ஒண்ணு இருக்குதே. அங்கே எப்பவாவது வாய்ப்பு கொடுத்து அழைச்சிருக்காங்களா? தெரியுமா நீங்க இருக்கிறது?
தம்பிரான்: தெரியும். துணைவேந்தர் சுப்பிரமணியம்னு இருந்தாரு. அவரு அழைச்சிண்டு போனார்.
வெ.சா.: அது தஞ்சாவூர் பல்கலைக் கழகத்திலே. நான் கேட்டது தஞ்சாவூர் Zonal Cultural Centre லே.
தம்பிரான்: இல்லை. அதிலே இல்லீங்க.
வெ.சா.: தஞ்சாவூர் பல்கலைக் கழகத்துக்கு நீங்க போயிருக்கிறீங்க. அங்கே பயிற்சி கூட நடத்தியிருக்கீங்க. அது எனக்குத் தெரியும். அங்கேயிருந்து ராமானுஜம், ராமசாமி எல்லாம். அது எனக்குத் தெரியும். அவங்களுக்கு உங்களைத் தெரியும். தெருக்கூத்தைப் பத்தி தெரியும். ஆனால் Zonal Cultural Centre ஐப் பத்திக் கேட்டேன்.
தம்பிரான்: தெரியாதுங்க.

Thambiraan_Indian_Tamil_Folk_Artists_Thampiran_Kannappa_Koothu_theru_Performers

(3.11.1992 அன்று சங்கீத நாடக அகாடமி, புது டெல்லியின் சார்பில் பதிவான நேர்காணல். இது ஆங்கிலத்தில் அகாடமியின் சங்கீத் நாடக் 105-106 ஜூலை, டிஸம்பர் 1992 இதழில் பிரசுரமாகியுள்ளது)

 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.