kamagra paypal


முகப்பு » ஆன்மீகம், இந்திய தத்துவம், தொன்மம்

வேதங்கள்

veda-school

துவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம்.

இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம்.

அப்படியானால் ‘வேதங்கள்’ என்பவை யாவை?  அது ஓர் தனி நூலா அல்லது எண்ணற்ற பிற மறைநூல்களின் தொகுப்பா? இந்து சமயத்தில் பல்வேறு புனித மறைகள் இருக்கின்றன என்று கூறினால், சமய வாழ்வில் அவற்றின் பங்களிப்பு என்ன, அவற்றின் முன்னிலையில் வேதங்களின் இருப்புக்கு என்ன பொருள்?

இந்தியாவின் கலாசார விழுமியங்கள் அனைத்தும் வேதங்களில் உள்ளன என்று சொல்லும் மரபுகளும் மக்கள் குழுக்களும் உண்டு. இவர்களில் சிலர், உலகில் உள்ள அனைத்து கலாசார விழுமியங்களும் வேதத்தின் பாற்பட்டவை என்றும் சொல்கின்றனர். இவர்கள் போக இன்னும் சிலர், வேதங்களை ஏற்றுக்கொள்ளாத எண்ணற்ற மரபுகளும் இந்தியாவில் உண்டு என்று கூறுகின்றன.

வேதங்கள் குறித்த பார்வைகள் யாவை, வேதங்கள் யாவை, அவை எவற்றிற்கு ஆதாரமாகின்றன என்ற கேள்விகளுக்கு பக்கச்சார்பின்றி சுருக்கமான விடையளிக்க கட்டுரையின் இந்தப் பகுதியில் முயற்சிக்கிறேன்.

வேதங்கள் யாவை?

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே பிரதானமானவை என்று கூறப்படக்கூடிய மறைநூல் தொகுப்புகளே வேதங்கள்.

உலகச் சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன. வேதங்கள் உலகளாவிய பொதுத்தன்மை கொண்ட விதிகள். அவை, அண்டப் பெருவெளிக்கும் பொருந்துவன, என்றென்றுக்குமான விதிகள். அவற்றுக்கு துவக்கமோ முடிவோ கிடையாது. அவற்றில் மிக அதிக அளவில் மீபொருண்மை பேசப்படுகிறது, பல்வேறு தளங்கள் விவரிக்கப்படுகின்றன, மேலும் அவை இவ்வுலகல்லாத வேற்றுலகுகளைப் பற்றியவை. எனவே அவை, வேறு எந்த சமய நூல்களைப் போலவும் வாசிக்கப்பட முடியாதவை. இவற்றின் தனிப்பெருமை இந்த இயல்புகளால் மட்டும் கிட்டுவதல்ல- இந்து சமயங்களில் உள்ள ஏராளமான புனித நூல்களினிடையே, இவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும் கிட்டுவது அது.

ஆனால், அனைத்து மறைநூல்களையும் போலவே வேதங்கள் குறித்த புரிதலும் மாறுபடுகின்றன. பிற சமயங்களின் மறைநூல்களோடு ஒப்பிட்டால் வேதங்கள் குறித்த புரிதலில் இருக்கும் இரு கூறுத் தன்மை மிகப் பரந்ததாக உள்ளது.

ஒருபுறம், வேதங்கள் புனிதமான ஞான நூல் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன- மிகப் பெரும் படைப்பூக்க நிலையில் இயற்றப்பட்ட கவிதைகள் என்றும் எண்ணற்ற ரிஷிகளின் வாக்கு என்றும் போற்றப்படுகின்றன.  இந்த ரிஷிகள் ஞானத்தால் பிரகாசம் பெற்ற தம் மதியில், அனைத்து தெய்வீக சிருஷ்டிக்கும் ஆதாரம் என்றும், பிரபஞ்ச ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் போற்றப்படும் மந்திர உருவம் தரித்த வேத நாதங்களை அடைந்து, அவற்றை உலகுக்கு அளித்தவர்கள் என்று போற்றப்படுகின்றனர்.

இதற்கு மாறுபட்ட புரிதலில் வேதங்கள் இன்னும் பண்பாட்டை அடைந்திராத புராதன காலத்தவர்களின் மூடநம்பிக்கைகளும் கற்பனைகளும் மட்டுமே- மிக மேலோட்டமான லாபங்கள், போகங்களில் நாட்டம் கொண்டவை, அறம் சார்ந்த மிகவும் துவக்கநிலைப் புரிதல்களும் சமய வேட்கைகளும் கொண்டவை. இவர்களைப் பொறுத்தவரை, மிகவும் கொண்டாடப்படும் பேரண்ட விவரணைகளும் நுண்மைகளற்ற அரிச்சுவடி நிலைப் பிதற்றல்கள் மட்டுமே.

மேலும், வேதங்களை ஞான நூல்கள் என்று நம்புபவர்களிலும்கூட சிலர், இவற்றில் உள்ளவற்றில் பெரும்பாலான பாடல்கள் லௌகிக சடங்குகளை பேசுபவையே என்கின்றனர்- கர்ம காண்டத்தில் உள்ள சொர்க்கமே வேதங்களின் நோக்கம் என்றும் நுட்பமான ஒழுக்கங்கள் உபநிடதங்களில் மட்டுமே பேசத் துவங்கப்படுகின்றன என்றும் சொல்கின்றனர்.

இது தவிர, 19ஆம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டுகளில் இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் இந்தியாவின் மூல குடிகளான திராவிடர்களிடமிருந்து வந்தேறி ஆரியர்கள் திருடிக்கொண்ட அறிவுப் பெட்டகமே வேதங்கள் என்ற கருத்தை முன்னிறுத்துகின்றனர்.

அப்படியானால் இந்த மறை நூலின் அடிப்படை கொள்கைகள், அறிவுறுத்தல்கள் என்ன? இது போன்ற புரிதல்களில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் இருக்கிறது?

வேதங்கள்- மனிதனால் எழுதப்படவில்லை

வேதங்கள் “அபௌருஷேயம்”, மனிதனால் தோன்றியவையல்ல, என்பது மரபார்ந்த நம்பிக்கை. “பௌருஷேயம்” என்றால், மனிதனாலானது. வேதங்களை யாரும் எழுதவில்லை என்று நம்பப்படுவதால் அவை “அபௌருஷேயம்” என்றாகும்.

வேதங்கள் சூக்தங்களாக எந்த ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறதோ அந்த ரிஷிகளே அவற்றை எழுதியவர்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதற்கான காரணம், ஒவ்வொரு வேத மந்திரத்தின் முன்னும் ஒரு ரிஷியின் பெயர் சொல்லப்படுகிறது என்பதுதான் – இதைக் கொண்டு குறிப்பிட்ட சூக்தங்களை எழுதியவர்கள் அந்தந்த ரிஷிகள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர்.

இந்த நம்பிக்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்து சம்பிரதாயங்களில் எங்குமே இந்த ரிஷிகள் சூக்தங்களை எழுதியவர்கள் என்று சொல்லப்படவில்லை- மாறாய், இவர்கள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களாகவே நம்பப்படுகின்றனர். எனவேதான் அவர்கள் மந்திர கர்த்தாக்கள் அல்லது உருவாக்கியவர்கள் என்று குறிப்பிடப்படாமல் மந்திர திருஷ்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

வேதங்கள்- அண்டத்தின் புற விதிகள்

ஹிந்து தொன்மங்களில் பல புதுமையான தனித்தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் இருக்கின்றன, அவற்றில் இதுவும் ஒன்று: வேதங்கள் அழிவற்ற படைப்பு விதிகளின் தொகுப்பு, ரிஷிகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் மட்டுமே. அடிப்படையில் வேதங்கள் ஒலி வடிவங்கள். அனைத்து மறைநூல்களைப் போலவே வேதங்களும் வெளிப்படுத்தப்பட்டவை என்று சொல்லப்பட்டாலும், ரிஷிகள் இந்த வேத வாக்கியங்களைப் பெற தபஸ் மூலம் தங்களுக்குத் தகுதி ஏற்படுத்திக் கொண்டனர்.

வேத ஒலிகள் நித்தியமானவை என்பதால் அவை வேறெந்த இயற்கை ஒலியைப் போலவும் எப்போதும் இருக்கின்றன. நியூட்டன் தன் தர்க்க அறிவைக் கொண்டு புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்து விவரித்ததுபோல், இந்த ஒலிகளைப் பெறத்தக்க வகையில் தங்கள் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டனர். நியூட்டனுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்ததுபோல், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அந்த நிலப்பரப்பு இருந்ததுபோல், வேதங்களும் ரிஷிகள் அவற்றை கண்டறிவதற்கு முன்னரே இருந்திருக்கின்றன. இந்த ஒலிகள் அவர்களுக்குப் புலப்பட்டு, அவற்றை வாய்மொழியாய் அடுத்து வரும் தலைமுறையினருக்குக் கொடுத்தார்கள்.

படைப்புத்தொழிலுக்கான இவ்விதிகளைக் கொண்டே பிரம்மன் உலகு படைத்தான் என்று இந்து தொன்மங்கள் கூறுகின்றன. எனவே, இப்பொருளிலும் வேதங்கள் அநாதி, அதாவது, அழிவற்றவை என்று அழைக்கப்படுகின்றன.

வேதங்கள் – ஆதியந்தமற்றவை

பொதுவாக சமய இலக்கியங்களில், கடவுளே ஆதியும் அந்தமும் இல்லாதவனாகச் சொல்லப்படுவது வழக்கம். ஆனால் இந்து சாஸ்திரங்கள் வேதங்கள் துவக்கமும் முடிவுமற்றவை என்று சொல்கின்றன.

இது உண்மையாக இருந்தால் கடவுளோ பரமாத்மாவோ வேதங்களைப் படைத்ததாகச் சொல்ல முடியாது. உண்மையில் இரண்டுமே அநாதி என்பதால் இரண்டுமே எக்காலமும் இருந்தாக வேண்டும்.

அப்படியானால் வேதங்கள் என்பன என்ன, அவை எப்படி தோன்றின? வேதங்களின் நான்கு பகுதிகளும் ஒன்றாய்ச் சேரும்போது அது பரமாத்மனின் சுவாசமாகிறது (நிஹ்ஸ்வாஸிதம்) என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. யாரும் தம் மூச்சை தாமே உற்பத்தி செய்வதில்லை என்பதால், பர்மாத்மனும் தன் நிஹ்சுவாஸிதத்துக்கு உயிரளித்ததாகச் சொல்ல முடியாது. பிரம்மம் ஜடப்பொருள் என்றும் வேதங்களே பிரம்மத்துக்குச் சக்தியளிக்கின்றன என்றும் இந்தியாவில் ஒரு பொதுவழக்கு உண்டு.

இது உண்மையாக இருந்தால் இந்த அண்டத்தைத் தோற்றுவிக்க உதவும் ஒலியும் அதிர்வுகளும் விதிகளும் நம்மால் அளவிட முடியாத அளவு மிகுதியாக இருக்க வேண்டும். வேதங்கள் முடிவற்றவை- அனந்த வை வேத: ரிஷிகளுக்கு வெளிப்பட்டு அவர்களால் பெற்றுத் தரப்பட்டவை ஒரு வரம்புக்குட்பட்டவையாகவே இருந்தாக வேண்டும். எனவே, வேதங்களை முழுமையாக அறிவது சாத்தியமல்ல.

இந்து சமயங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் துவக்க நிலை மாணவர்கள் இந்து தொன்மங்களில் சொல்லப்படும் வேதம் குறித்த இந்தத் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

வேதங்களின உலகப்பொதுமையும் ஆற்றலும்

வேதங்கள் என்றுமுள்ள உலகளாவிய விதிகள் எனபதால் அவை உயிருள்ளவை, உயிரற்றவை என்று உலகில் உள்ள அனைத்துக்கும் பொருத்தமானவை. தேசம், நிறம், நம்பிக்கை போன்ற வரையறைகளுக்கும் சமூக அடுக்குத் தொகுப்புகளும் வேதங்களுக்குப் பொருந்தாதவை, எனவே வேதங்கள் மானுடம் அனைத்துக்கும் உரியவை. ஏன், மனிதன், மிருகம், செடி, கற்கள், சூரியன், நட்சத்திரங்கள் என்று இயற்கையில் உள்ளவை அனைத்துக்கும் உரியவை.

வேத மந்திரங்கள் அவற்றை பிரயோகிப்பவர்களுக்கு மட்டும் உதவாமல், சுற்றிலும் உள்ள சூழலில் தாக்கம் ஏற்படுத்தி, காலப்போக்கில் விண்வெளியை ஊடுருவி நிலையான முன்னேற்றம் அளிக்கின்றன என்று இந்து பாரம்பரியங்கள் நம்புகின்றன. மனிதனின் நோய்களைப் போக்கி, விலங்குகள் மற்றும் மரம் செடிகளுக்குச் செறிவூட்டி, சுற்றுச்சூழலில் உள்ள விரும்பத்தகாத, நச்சுத்தன்மை கொண்ட அச்சுறுத்தல்களைப் போக்குகின்றன.

இந்த மந்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மத்துக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்து, வேதங்களைக் கற்று முறைப்படி பிரயோகித்தால், அது மானுடம் அனைத்துக்கும் மட்டுமின்றி உலகனைத்துக்கும் நன்மை பயக்கும் என்பது இந்து சம்பிரதாயங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நம்பிக்கை.

வேதங்கள் – இந்துக்களின் முதன்மை நூல்

உலகெங்குமுள்ள சமயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியில் ஒரு பொதுத்தன்மையை அடைந்திருக்கின்றன. அவை அனைத்துக்கும் ஒரே ஒரு புனித நூல் அல்லது மறைநூல்தான் உள்ளது என்பது இந்த ஒற்றுமை. சீக்கியத்தில் புனித நூலையே வழிபடவும் செய்கின்றனர்.

சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புனித நூல்கள் இருக்கலாம். அவற்றின் தொகுப்பு அந்த சமயத்தின் அதிகார பூர்வமான அல்லது உண்மையான அல்லது புனிதமான நூலாகக் கருதப்படலாம்.

இந்து சமயத்தில் எண்ணற்ற நூல்கள் புனித நூல்களாக நம்பப்படுகின்றன. அவை அனைத்தையும் தொகுத்து ஒரே புனித நூலாக அமைப்பதும் இயலாத காரியம்.

எனவே வேதங்கள்தான் இந்துக்களின் மிக மெய்யானதும், முதன்மையானதுமான நூலாக இருக்கின்றன. எண்ணற்ற புனித நூல்கள் இருப்பினும், எவரும் தமக்குரிய நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றாலும், வேதங்களே இந்து தர்ம-த்தின் மையத்தைக் கட்டமைக்கின்றன.

உதாரணத்துக்கு, ஒருவர் பகவத் கீதையையோ ராமாயணத்தையோ அல்லது ஒரு ரிஷியோ ஞானியோ எழுதிய ஒரு நூலை மிக உயர்ந்ததாகக் கருதி அதன் வழிநடக்கலாம். ஆனால் வேதங்களே அறுதியான நூலாக இருக்கின்றன.

இந்து சமயத்தின் பிற புனித, மறை நூல்களுக்கு ஆதாரமாக அமையும் கட்டமைப்பை வேதங்களே அளிக்கின்றன. மிகவும் எளிய இந்து மரபின்படி, வேதங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் காணவும் உதவும் துணை நூல்களாகவே பிற புனித நூல்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.

ஆனால் சில மரபுகள் குலவழக்கப்படி இயங்குபவை, அவற்றுக்கு வேதங்களுடன் தொடர்பில்லை.

இந்து சிந்தனையின்படி வேதங்களை ஆதார நம்பிக்கை நூல்களாக ஏற்றுக்கொள்ளும் மரபுகள் ஆஸ்திக சம்பிரதாயங்கள் என்றும், வேதங்களின் அறுதித்தன்மையை நிராகரிப்பவை நாத்திக சம்பிரதாயங்கள் என்றும் கூறப்படுகின்றன. இன்று இறை நம்பிக்கை ஆத்திகம் என்றும் இறை மறுப்பு நாத்திகம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நாத்திக சிந்தனைகள் பலவும் ஆத்திக சம்பிரதாயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன, அவற்றைப் பின்னர் வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

நான்மறை நூல்கள்

மஹரிஷி வேத வ்யாஸர், பலகோடி மக்களின் நன்மையை உத்தேசித்தும், வேதங்களைக் காத்து இரட்சிக்கவும், அவற்றை நான்கு பகுதிகளாகத் தொகுத்து முறைப்படுத்தினார்- கிளை என்று பொருள்படும் சாகை என்ற பிரயோக முறைக்கேற்ப இந்தத் தொகுப்பு அமைக்கப்பட்டது.

நான்மறை நூல்கள் என்று அழைக்கப்படுபவை இவை-

 1. ரிக் வேதம்,
 2. யஜூர் வேதம்,
 3. சாம வேதம்,
 4. அதர்வ வேதம்.

ஒவ்வொரு வேதமும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன-

 1. சம்ஹிதை,
 2. பிராஹ்மணம்,
 3. ஆரண்யகம்.

சம்ஹிதையில் மந்திரங்களும் துதிகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சம்ஹிதை என்றால் தொகுத்து அடுக்கப்பட்டவை என்று பொருள்படும். வேதங்களின் பிரதானப் பகுதி சம்ஹிதையில் உள்ளது. பிராஹ்மணங்கள் வைதீக சடங்குகளை விவரிக்கின்றன, ஆரண்யகம் மந்திரங்களின் உட்பொருளை விளக்குகின்றன. இவை தவிர, ஆரண்யகங்களின் முடிவில் உபநிடதங்கள் உள்ளன.

சம்ஹிதை மரம் என்றால், பிராஹ்மணங்கள் மலர்கள் என்றும் ,ஆரண்யகம் காய்கள் என்றும், உபநிடதங்கள் பழுத்த கனிகள் என்றும் கூறுவதுண்டு.

ரிக் என்றால் துதி. யஜூர் என்றால் வழிபாடு. சாமம் என்றால் அமைதி. அதர்வம் என்றால் ஆளுமையின் சமநிலை.

வேதங்களின் எப்பகுதியை எடுத்து யார் வேண்டுமானாலும் பிற புனித நூல்களை வாசிப்பதுபோல் வாசிக்கலாம் என்றாலும், அறிவகங்கள் என்று கூறப்படும் வித்யாஸ்தானங்கள் அனைத்தையும் முறைப்படி வாசிக்காமல் வேதங்களை வாசிப்பது முழுமையான புரிதலை அளிக்காது.

வேத மந்திரங்களின் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ள வித்யாஸ்தானங்கள் இவை- நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள் (வேதங்களின் துணை நூல்கள்), மீமாம்சங்கள் (வேதத்தின் தாத்பர்யத்தைச் சரியாக புரிந்து கொள்வதற்கான முறைகள்), நியாயம் (தர்க்கம்), புராணங்கள் (புராணங்கள் பல விஷயங்களுடன் அண்டசராசரங்களின் ஒழுங்குகளையும் பற்றிக் கூடப் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள்(நன்னெறியுடன் வாழ்வதற்கான வழி முறைகள்) , உப வேதங்கள் – வேதாங்கங்களின் துணை நூல்கள்- ஆயுர் வேதம் (ஆரோக்கிய வாழ்வுக்கான அறிவியல்) , அர்த்த சாஸ்திரம் (அரசியல் அறிவியல்), தனுர் வேதம் (ஆயுத அறிவியல்), கந்தர்வ வேதம் (கலையறிவு) முதலியவை. வேதங்களைப் புரிந்து கொள்ள இந்த அறிவியல் சார்ந்த துணை நூல்கள் செழுமைக்கு உதவி, முழுமையான வேதக்கல்வி அளிக்கின்றன.

வேதங்கள் – தர்மங்களின் ஆதாரம்

வேதங்கள் தர்மங்களின் ஆதாரம் என்று பலரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதற்குரிய கவனமோ மதிப்போ மிகக் குறைவாகவே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம், வேதங்கள் நீதி நூல்களல்ல என்ற நம்பிக்கை. மற்றொரு காரணம் அன்றாட தர்மத்துக்கு உரிய நெறிகள் வேதங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என்பதும் அவற்றைக் கோர்வையாகப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளதென்பதும்தான்.

அன்றாட நீதிகள் வேதங்களில எங்கும் விரவிக்கிடக்கின்றன என்பது உண்மையே எனினும் தர்மம் குறித்த போதனைகள் அதில் இல்லை என்பது தவறு. மிக முக்கியமான சூத்ரகாரர்களும் அதன்பின் வந்த நீதிநூல்கள் எழுதியவர்களும் வேதங்களையே ஆதாரம் காட்டுகின்றனர், தங்கள் நீதி சூத்திரங்களுக்கு வேத மந்திரங்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

இடைக்கால மற்றும் நவீன சடங்குகளும் பழக்க வழக்கங்களும் வேதங்களில் சுட்டப்படுகின்றன. இன்றும் உள்ள திருமண முறை, மரணச் சடங்குகள், வேள்வி மற்றும் பல சமூக நடைமுறைகளின் ஆதாரம் வேதமே. லௌகீகச் சடங்குகளிலும் வேத மந்திரங்கள் ஒலிக்கின்றன.

தர்ம சாஸ்திரங்களின் மைய நூலான கல்பம் ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பதே தர்மத்தின் அடி ஆதாரமாக வேதங்கள் இருப்பதைக் காட்டுகிறது..

வேதங்கள் முதிரா சமூகத்து வழிபாடா?

வேதங்களை மேலாகப் பார்த்தாலும், அவற்றின் அரைகுறை மொழிபெயர்ப்புகளை வாசித்தாலும்கூட அவை தெய்வீக உந்துதல் கொண்டவை என்பதையும், உன்னதச் சிந்தனைகளையும், ஆழமான கருத்துகளையும், மேன்மையைக் கொணரும் நீதிகளையும், நுட்பமானதும் விரிவானதுமான உளவியல் உண்மைகளையும் கொண்டவை என்பதையும், மற்றும் பேரதிசயத்தைமான, மகோன்னதமான பேரண்டப் பார்வையை விரிப்பன என்பதையும் உணர்வோம்.

வேதங்களில் சிறு பகுதியிலும் நாம் மனிதத்தின் சக்திக்கு மீறிய உண்மைகளைப் பேசும் கவிதைகளைக் காணலாம். வேதங்கள் எங்கும் அவை நிறைந்திருக்கின்றன- அவற்றுக்கு இடையே சற்றே ஒழுங்காக தொகுக்கப்பட்ட புறவழிபாட்டு முறைகள் இயற்கையையும் தெய்வங்களையும் போற்றிப் பாடப்பட்டிருக்கின்றன.

வேறு பலரைப் போலவே ஐரோப்பியர்கள் வேதங்களை லௌகீக சடங்கு விவரணைகள் என்று தவறாகப் புரிந்து கொண்டனர் என்பதை வேதங்களை கவனமாக வாசிக்கும் எவரும் உணர்ந்து கொள்ளலாம்.. வேதங்கள் ஆன்மிக உண்மைகளை குறியீட்டு மொழியில் கூறுகின்றன, அவை ஒன்று போல் மற்றொன்றில்லை.

புலப்படும் யதார்த்த உண்மைகளுக்கு அப்பால் உள்ளதை ஒவ்வொரு குறியீடும் பேசுகிறது என்பது மட்டுமல்லாமல் சாதகருள் உள்ள உண்மையை அறியும் பாதை குறித்த குறிப்புகளும் தருகிறது. தனியாகப் பார்த்தால் இந்தக் குறியீடுகள் மற்றும் குறிப்புகளை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. எனினும் இவை பல புரிதல்களுக்கு காரணமாயிருந்திருக்கின்றன. இந்த உண்மைகள் மறைபொருள் சுட்டலாக பாடப்பட்டிருக்கின்றன. தகுதியும் சிரத்தையும் உள்ள சாதகர்கள் மட்டுமே இவற்றின் பொருளுணரும் வண்ணம் இவை பாதுகாப்பாக எதிர்கால சந்ததியினருக்கு கைமாற்றி அளிக்கப்பட்டு வருகின்றன.

இதே போல், வேதங்களில் ஆன்மீக உண்மைகள் ஞான காண்டம் என்று சொல்லப்படும் உபநிடதங்களில் மட்டுமே பேசப்படுகின்றன என்பதும் தவறு. வேதமெங்கும் ஞானம்தான்.

பின்னர் வரும் உபநிடதத்தில் உள்ள உண்மைகளும் ஞான தரிசனங்களும் முன்னரே கர்ம காண்டத்தில் சுருக்கமான சூத்ரங்களாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. வெற்றிடத்தில் இருந்து எதுவும் தோன்றாது- உபநிடதங்களின் அற்புதமான ஞான வாக்கியங்கள் அனைத்தும் கர்ம காண்டத்திலிருந்தே தோன்றுகின்றன..

பல முக்கியமான உபநிடதங்களும் கர்ம காண்டத்தின் மையத்தில் உள்ளன என்பதே இவ்விரண்டும் வேறல்ல என்பதையும் கர்ம காண்டத்தில் ஞான காண்டமும் அடக்கம் என்பதையும் உணர்த்துகிறது.

அபகரிக்கப்பட்ட நூலா?

இந்திய மண்ணுக்குரிய திராவிடர்களைப் படையெடுத்த ஆரியர்கள் வேதங்களை அபகரித்தனர் என்ற குற்றச்சாட்டு வெறும் கற்பனையே. இதற்கான ஆதாரம் இலக்கியத்திலோ அகழ்வாராய்ச்சியிலோ அல்லது வேறெந்த வகையிலோ இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையெனில் வெற்றி பெற்ற ஆரியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி பல பாடல்கள் பாடியிருப்பார், அல்லது தோல்வியுற்ற திராவிடர்கள் கசப்பாகவோ கோபமாகவோ அதை எங்கேனும் பதிவு செய்திருப்பர். இது விஷயத்தில் பிழைபுரிதலில் பிறந்த உளறலைத் தவிர வேறில்லை

ஆதார நூல்கள்

 • Sarvepalli Radhakrishnan and Charles A. Moore (Eds.). A Sourcebook in Indian Philosophy, 1957, Princeton University Press.
 • A.B. Keith. The Religion and Philosophy of the Veda and Upanishads, 1925, Cambridge, Mass.: Harvard Oriental Series.
 • What is Hinduism?, 2007, Honolulu: Himalaya Academy
 • P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
 • Sri Chandrasekharendra Saraswati. Hindu Dharma: The Universal Way of Life, 2008, Mumbai: Bharatiya Vidya Bhavan.
Series Navigationவர்ணமும் ஆஸ்ரமமும்வேதாங்கங்களும் உபவேதங்களும்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.