kamagra paypal


முகப்பு » அனுபவங்கள், ரசனை

உபசாரம்

Food_Plate_Alphabets_Tamil_Letters_Words_Fork_Spoon

‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார். ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்குச்ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.

‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.

திருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.

 

‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே! எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ!’

பந்தி பரிமாறுவதென்றால் இலை போட்டு, முறையான வரிசையில் பதார்த்தங்களைப் பரிமாறுவது மட்டுமல்ல. பந்திக்கு வருகிற ஆட்களை வரவேற்று, உட்கார வைத்து, இலை போட்ட பின், அவர்களுக்குத் தேவையானதைப் பார்த்து கவனமாகப் பரிமாறி, பின் அவர்கள் எழுந்து கை கழுவும் வரைக்கும் கவனித்துக் கொள்வது.

 

‘கோவால் மாமா பசி தாங்க மாட்டா. மூர்த்தம் முடிஞ்ச ஒடனே மொத பந்தில அவாள உக்கார வச்சிரணுன்டே. மறந்துராதிய’.

‘சின்னப் பிள்ளேள பொம்பளையாளு பந்தில உக்கார வை, கணேசா. அப்பந்தான பக்கத்துல இருக்கிறவங்க, அதுகளுக்கு சோத்தப் பெசஞ்சுக் கிசஞ்சு குடுப்பாங்க. எலைல சாப்பிடத் தெரியாதுல்லா!’

‘எல! கோமதி ஆச்சிக்கு தனியா நாற்காலி போட்டு உக்கார வையி. அவளுக்குக் கால மடக்க முடியாதுல்லா’.

‘உலகநாதன் மகளுக்கு பாயாசத்த தம்ளர்ல ஊத்திக் குடுல. எலைல விட்டா, மேலச் சிந்தீருவா. அவ அம்மை ஆசயா பட்டுப் பாவாட உடுத்தி விட்டிருக்கா’.

 

இப்படி உபசரித்து கண்ணும், கருத்துமாகப் பரிமாறுபவர்கள் கடைசிப் பந்தியில்தான் சாப்பிட உட்காருவார்கள். பெரும்பாலும் பல பதார்த்தங்கள் காலியாகியிருக்கும். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல் சமையல் செய்த தவிசுப்பிள்ளைக் குழுவினருடன் உட்கார்ந்து சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள். விசேஷத்துக்கு வந்திருந்தவர்களை உபசரித்து நல்லவிதமாகச் சாப்பிட வைத்து கவனித்ததனால் ஏற்பட்ட திருப்தியில் அவர்களின் முகங்கள் கனிந்திருக்கும். இப்படி உபசாரம் செய்து பரிமாறுகிறவர்கள் சம்பந்தப்பட்ட விசேஷ வீட்டுக்கு உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லவே இல்லை. உறவினர்களைப் போல பழகிய ஒரே ஊர்க்காரர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட பல மனிதர்களை ஏதேனும் விசேஷ வீட்டில் மட்டுமே பார்க்க முடியும். மற்ற நாட்களில் கண்களில் அபூர்வமாகவே தென்படுவார்கள்.

‘நம்ம திரவியம்லாம் விசேஷ வீடுகள்ல பரிமாறதுக்கு மட்டும்தான் சிங்கப்பூர்லேருந்து இந்தியாக்கு வாரான்’.

 

திரவியம் சொந்த ஊரான ஶ்ரீவைகுண்டத்தை விட்டு இது போன்ற விசேஷ வீடுகளில் கலந்து கொள்வதற்காக மட்டுமே திருநவேலி வருவதை இப்படிக் கிண்டலாகச் சொல்லுவார், ராமையா பிள்ளை.

திருநவேலியில் சில சின்ன ஹோட்டல்களிலும் இப்படி உபசாரம் செய்பவர்கள் உண்டு. அம்மன் சன்னதி மண்டபத்தில் ஹோட்டல் நடத்தும் ஓதுவார், சாப்பிட வருபவர்களை, ‘சும்மா சாப்பிடுங்க சும்மா சாப்பிடுங்க’ என்று சொல்லி பரிமாறுவார்.

‘அப்பம் துட்டு வாங்க மாட்டேளோ?’ என்று அவரையும் கேலி செய்வார் ராமையா பிள்ளை.

 

இப்போது எல்லா ஊர்களும் ஒரே ஊராகி விட்ட பிறகு பந்தி ஜமுக்காளம் விரித்து, இலை போட்டு, தண்ணீர் வைத்து, உப்பு, சுண்ட வத்தல் வைத்துத் துவக்குகிற முறையான பந்தி பரிமாறுதல் காணாமல் போய்விட்டது. கூடவே உபசாரம் செய்பவர்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். கேட்டரிங் ஊழியர்கள் கடனே என்று பரிமாறும் வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிடப் பழகி விட்டது, மனம். ஆனாலும் சென்னையில் அவ்வப்போது சில ஹோட்டல்களில் உபசாரம் செய்பவர்களை ‘சப்ளையர்கள்’ உருவில் பார்க்க முடிகிறது. வடபழனி ‘நம்ம வீடு’ வசந்தபவன் ஹோட்டலின் ஏ.சி ஹாலுக்குள் நுழையும் போதே, ‘அண்ணாச்சி வாருங்க’ என்று சொந்த வீட்டுக்கு வருகிற விருந்தாளிகளை வரவேற்பதைப் போல வரவேற்கிற ஓர் இளைஞனைப் பார்க்க முடியும்.

‘நம்ம வீடு’ங்கற கட பேருக்கேத்த மாரியேல்லா ஒபசரிக்கே! திருநவேலில எங்கடே?’

முதல் சந்திப்பிலேயே கேட்டுவிட்டேன்.

‘ஏ ஆத்தா! எப்பிடி அண்ணாச்சி கண்டுபிடிச்சிய? எனக்கு பூச்சிக்காடுல்லா. தெசயன்விளைக்குப் பக்கம்’ என்றான்.

‘பூச்சிக்காடுன்னு சொன்னாப் போறாதா? தெசயன்வெளைக்குப் பக்கம்னு என்னத்துக்கு புளியப் போட்டு வெளக்குதேங்கென்?’

ஊர்க்காரனைப் பார்த்த சந்தோஷத்தில் ஊர்ப்பேச்சு கொப்பளித்துக் கொண்டு வந்தது.

‘ஆப்பம் சின்ன சைஸாத்தான் இருக்கும். இன்னொரு ஐட்டமும் ஆர்டர் பண்ணுனியன்னாத்தான் வயிறு முட்டும். சின்ன வெங்காய ஊத்தப்பம் ஒண்ணு கொண்டு வந்துரட்டுமா?’

 

சாப்பிடும் போது அருகில் நின்று கொண்டு உரிமையுடன், விகற்பமில்லாமல் பேசுவான்.

‘மெட்ராஸ்ல வெலவாசி அதிகங்காங்க. ஆனா சொன்னா நம்ப மாட்டிய. எனக்கு சம்பளத்துல பாதிக்கு மேல செலவே இல்ல பாத்துக்கிடுங்க. சேத்து வச்சு, ஊருக்குத்தான் அனுப்புதென். . . . லெமன் ஜூஸ் கொண்டு வரட்டுமா? நல்லா செமிக்கும்லா!’

சில சமயங்களில் டியூட்டியில் அந்தப் பையன் இல்லையென்றால் கண்கள் தேடி ஒரு சின்ன வருத்தம் ஏற்படும்.

ஒவ்வொருமுறை போகும் போதும் உற்சாக உபசாரம்தான்.

உள்ளே நுழைந்த உடனே, ‘ஏ பூச்சிக்காடு’ என்பேன்.

 

இன்று வரை அவன் பெயர் தெரியாது.

‘என்ன அண்ணாச்சி! நம்மூரு மாரி வேட்டில வந்துட்டிய? ரொம்ப நாளா இந்தப் பக்கம் காங்கலையே! என்ன சாப்பிடுதிய?’

‘நீ என்ன கொண்டாந்தாலும் சரிதான்’.

‘கரெக்ட் டயத்துல வந்திருக்கிய. இட்லி சூடா இருக்கு. கொண்டுட்டு வாரேன்.’

 

வழக்கம் போல சாப்பிடும் போது அருகில் நின்றபடி பேசுவான்.

‘இட்லி பூவா இருக்குல்லா? . . . . அன்னைக்கு நிகில் அண்ணன் பேஜ்ல கமலகாசன் ஸார்வாள் கூட நீங்க இருக்கிற போட்டாவப் பாத்தெம்லா! அம்பாசமுத்ரம் படம் எப்பம் வருது அண்ணாச்சி?’

‘அது பாபநாசம்டே’.

‘சரியாப் போச்சு. இப்படி ஒளறுவெனா, அதுவும் ஒங்கக்கிட்ட. இதச் சொல்லியேல்லா கேலி பண்ணுவிய!’

 

சென்னையில் ஹோட்டலுக்கொரு உபசாரியைப் பார்க்கிறேன். பரணி மருத்துவமனைக்கு எதிரே உள்ள திருநவேலி ஹோட்டலில் செந்தமிழில் பேசும் ஓர் இளைஞனைப் பார்க்கலாம். ‘பதாகை’ மர்ம இலக்கிய இணைய இதழ் நடாத்தும் நண்பர் நட்பாஸும், நானும் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.

‘அமருங்கள் ஐயா. என்ன சாப்பிடுகிறீர்கள்?’ உதட்டோரம் மறைக்க முயலும் குறுஞ்சிரிப்புடன், சற்றே கேலியான தொனியில் கேட்கும் அந்த இளைஞன், சுறுசுறுப்பானவன். நான் தனியாகச் செல்லும் போது வழக்குத் தமிழில் பேசும் அவன், நண்பர் நட்பாஸைக் கண்டால் மட்டும் செந்தமிழில் பேசுவதற்கான காரணம், நட்பாஸின் எழுத்துக்களைப் போலவே புரியாத ஒன்று.

‘ஐயா! இங்கு இருப்பது தங்களின் தலைக்கவசம்தானே? அதை சற்றுத் தள்ளி வைக்க இயலுமா?’ என்று கேட்டு நட்பாஸை அதிர வைப்பான்.

‘பாஸ்கர்! அத்தனை ரகசியமா நீங்க இலக்கிய பத்திரிக்கை நடத்துறது அவனுக்கு எப்படி தெரியும்?

‘அதான் ஸார் எனக்கும் தெரியல. இன்னொரு எண்ணெ தோசய சொல்லிக்கட்டுமா?’

‘ஐயா! அதுதான் ஏற்கனவே எண்ணெய் தோசை சாப்பிட்டு விட்டீர்களே! இப்போது அடை கொண்டு வருகிறேன். பயப்படாதீர்கள். அளவில் சிறியதுதான்’. செந்தமிழ் இளைஞனின் அன்புக்குக் கட்டுப்பட்டு நட்பாஸ் சிலபல அடைகளைச் சாப்பிடுவார்.

சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்கும் போது செந்தமிழ் இளைஞன் மேலும் சொல்வான்.

‘அடுத்த முறை சற்று சீக்கிரம் வந்தீர்களானால், காரச்சட்னியும், வடையும் இருக்கும். சென்று வாருங்கள்’. கைகூப்பி வணக்கம் சொல்லி வழியனுப்பி வைப்பான்.

‘கோவி மணிசேகரனோட சரித்திர நாவல் கதாபாத்திரங்கள் கூட இப்படி தமிழ் பேசி நான் கேட்டதில்ல, ஸார்’. டூ வீலரின் ஸ்டாண்டை எடுக்கும் போது கண் கலங்க நட்பாஸ் சொல்வார்.

 

விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு போகும் வழியிலுள்ள ‘சுவாமிநாத் கஃபே’ நான் அடிக்கடி செல்லும் மற்றோர் உணவு விடுதி. சுவாமிநாத் கஃபேயில் இரண்டு விதமான உபசாரத்தைப் பார்க்கலாம். ஒருவர் பொக்கை வாய்க்காரர். நெற்றி நிறைய விபூதியும், குங்குமமுமாக, காவி வேட்டி உடுத்தியிருக்கும் கும்பகோணத்து பிராமணர். கடைக்கு சாப்பிட வருபவர்களிடம் சத்தமாக உணவுவகைகளை ஒப்பிப்பார். ‘இட்லி, கிச்சடி, புளிப்பொங்கல், ரவா தோசை, மசால் தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பூரி’ என்று ஒப்பிக்கும் அவரது உரத்த குரல் கும்பகோணத்துக்கேக் கேட்கும். உதட்டில் மருந்துக்கும் சிரிப்பிருக்காது. தம்ளரில் தண்ணீர் ஊற்றும் போதும் சரி, ஆர்டர் செய்யப்பட்ட உணவுத்தட்டைக் கொணர்ந்து மேஜையில் வைக்கும் போதும் சரி. ‘நீங்கள்லாம் ஆத்துல சாதம் பண்ணி சாப்பிட மாட்டேளா? எதுக்கு ஹோட்டலுக்கு வந்து சாப்பிடறேள்?’ என்று சொல்லாமல் சொல்லும் அவர் முகம். பெரும்பாலும் அவரைத் தவிர்த்து விட்டு, மலைச்சாமியைத் தேடுவேன். மலைச்சாமிக்கும் கும்பகோணம்தான். கும்பகோணத்துக்காரர்கள் முகத்தில் உணர்ச்சியைக் காட்ட மாட்டார்களோ என்று சந்தேகிக்கும் வண்ணம் மலைச்சாமி முகத்திலும் நான் யாதொரு உணர்ச்சியையும் கண்டதில்லை. ஆனாலும், மனதுக்குள்ளிருந்து கனிவான ஓர் உபசரிப்புக் குரல் வெளியே கசியும்.

 

‘இட்லி வேண்டாம். சூடில்ல. தோச கொண்டு வரவா?’.

மலைச்சாமி சொன்னால் மறுப்பே சொல்வதில்லை.

‘’போதும் மலைச்சாமி. காப்பி’.

‘நீங்க சாப்பிட்டு முடிக்கும் போது போய் போட்டுக் கொண்டு வாரேன். இப்பவே கொண்டு வந்தா ஆறிடும்’.

 

மதியச் சாப்பாட்டின் போது, எக்ஸ்டிரா அப்பளம், வத்தக் குழம்பு, சாப்பிட்டு முடித்ததும் குடிப்பதற்கு தனியாக மோர் என மலைச்சாமியின் கவனிப்பு மாமியார் வீட்டின் முதல் நாள் விருந்தில் கூட கிடைக்காது.

மாலைநேரங்களில் போனால் வெறும் காப்பி குடிக்க மலைச்சாமி விடுவதில்லை.

‘ஒரே ஒரு சாம்பார் வட கொண்டு வரேன். அதச் சாப்பிட்டு காப்பியக் குடிங்க. ரெண்டுன்னா ஹெவியாயிரும். அப்புறம் நைட்டு சாப்பிட முடியாது’.

 

கும்பகோணத்துப் பெரியவர், மலைச்சாமி போக சுவாமிநாத் கஃபேயில் ஒரு வடநாட்டுக் காரரும் இருந்தார். ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் சாயல் கொண்ட முகம். கனத்த சரீரம். எண்ணெய் தேய்த்து, ஏற்றி வாரப்பட்ட தலைமுடி. அரை டிரவுசரும், சட்டையும் அணிந்திருக்கும் அந்த வடநாட்டுக்காரருக்கு உருளும் வண்டியைத் தள்ளியபடி வந்து, சாப்பிட்ட தட்டுக்களை எடுத்து, டேபிளைத் துடைக்கும் பணி. எப்போதும் சிரித்த முகத்துடனே சுவாமிநாத் கஃபேயில் வளைய வரும் அவரது குரலைக் கேட்டதேயில்லை. ஆனால், கடைக்குள் நுழையும் ஒவ்வொருவரையும் ஏற்கனவே அறிந்த விதமாக, கூடுதலாகச் சிரித்து தலையசைத்து வரவேற்பார். ஒருநாள் சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வந்த போது, ‘ஸார்’ என்ற படியே பின்னால் வந்தார். கையில் ஒரு ஸ்வீட் டப்பா. மூடியைத் திறந்து நீட்டினார். முகத்தில் வழக்கத்தையும் விட அதிக சிரிப்பு. ஒரு லட்டை எடுத்துக் கொண்டு, தமிழறியாத அந்த மனிதரிடம் சைகையினாலேயே ‘என்ன?’ என்று கேட்டேன். கொச்சையான ஆங்கிலத்தில், ‘பெர்த் டே ஸார். சிக்ஸ்டி இயர்ஸ்’ என்றார். உடனே கை குலுக்கி, சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தேன். எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. பொங்கி வழியும் கண்ணீரைத் துடைக்காமல், சரளமான வார்த்தைகளுடன் மூச்சு விடாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்கு ஹிந்தியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. அதனாலென்ன?

 

9 Comments »

 • G Vedantham said:

  அருமையான பதிவு. ரசித்து படித்தேன். எனது அலுவலக நாட்கள் நினைவுக்கு வந்தது. இரவு நேர பணியில் காலை 4 மணிக்கு சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கோபாலக்ருஷ்னா லஞ்ச் ஹோமுக்கு கூட்டமாக செல்வோம். இட்லி மாத்திரம் சொன்னால் “சூடாக வடை ரெடி” என்று இட்லியும் வடையும் கொடுப்பார் ஓனர் கம் சர்வர் மலர்ந்த முகத்துடன்.

  # 12 May 2015 at 11:23 pm
 • dr.shashi manohar said:

  suka ur nellai tamil mesmerises me,the feel of nellai comes immediately, frankly speaking u made me home-sick ,booked tonight,s kovai- nagercoil xpress and reach nellai [nenju innikum -nellai] tomorrow 430am bye ,awaiting ur next after Thayaar sannadi, moonkil muchu, urs shashi

  # 13 May 2015 at 1:43 am
 • T.P.Meenakshi said:

  ஊர்க்காரனைப் பார்த்த
  சந்தோஷத்தில் திரு.சுகாவுக்கு
  கொப்பளித்துக் கொண்டு வந்த
  ஊர்ப்பேச்சு திருநெல்வேலிக்
  காரர்களை மகிழ்ச்சியில்
  ஆழ்த்துகிறது
  சின்னப்பிள்ளேளுக்கு பொம்ப ளையாளு சோத்த பெசஞ்சு
  கிசஞ்சு குடுப்பாங்கங்கறதும், பாயாசத்த மேல சிந்தீருவான்னு
  கவலைப் படுறதும் என்
  போன்றோரை திருநெவேலிக்கே திரும்பக்
  கூ ட்டீட்டுப் போயிட்டுது.சுகா
  அவர்களுக்கு நன்றி.

  # 13 May 2015 at 11:18 am
 • surya said:

  அருமை + சுவை + நெகிழ்வான பதிவு. வாழ்த்துகள்.

  # 13 May 2015 at 3:01 pm
 • Joe Fernando said:

  கதய படிக்க ஆரம்பிக்கும் போதே சுகா டச் எதுவா இருக்கும்க்ற நெணைப்பிலே படிச்சேன்.கடேசி வரி தானே அவர் டச்.கண் கலங்கிட்டு எனக்கும்.

  # 13 May 2015 at 5:54 pm
 • Suresh said:

  Vintage Suka style. I had been to Swaminath cafe quite a few times years back. Reception had been exactly the same as you have explained. additionally, you have to put up with the ‘nose picking/arm pit scratching ‘ of that guy. Horrible! I would have visited Arcot road Thirunelveli hotel so far atleast fifty times. The waiter’s lingo is very unique. I thought he is mentally disturbed. Nostalgia!!!

  # 27 May 2015 at 6:04 am
 • saravanan said:

  I have read Thayar sannithi-more than 20 times.still I will read.Everytime I go into solvanam, I will be searching for your column.
  As Vannadasan sir said,we first read the punch line and then go to the top.very touching.
  with tears.

  # 20 August 2015 at 1:34 pm
 • sudha said:

  கல்பனா அக்காவும், கலாபவன் மணியும் . . .எழுத்தாளர் சுகாவின் நெகிழ்ச்சித் தருணங்கள்! -உங்களின் இந்த கட்டுரையை படித்து விட்டு நெகிழ…,நெட்டில் தேடிய போது ,உங்கள் இந்த சொல்வனதைக் கண்டுகொண்டேன் …கட்டுரையின் இறுதி வரிகள் ,போகிற போக்கில் சின்ன கல்லைத்தூக்கி ,அமைதியான குளத்தில் வீசி எரிந்து கொண்டே போவது போல…அருமை…

  எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தைப்போல ஒரு சின்ன தாக்கம்.

  சமீபத்தில் சுஜாதாவின் பிறந்த நாளன்று அவரைப்பற்றிய செய்திகளை படித்த போது ,இவர் போல் எழுத இன்னும் ஒருவரும் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.நீங்கள் இன்னும் சிறிது எத்தனித்தால் அந்த இடத்தை பிடித்து விடலாம் என்றே தோன்றுகிறது .

  வாழ்த்துக்கள் !!!

  # 9 March 2016 at 12:27 pm
 • கேசவன்ஶ்ரீனிவாசன் said:

  வணக்கம்.
  நான் அருமையான சாப்பாட்டு பிரியன்,உங்களின் கட்டுரை நல்ல சுவை.சில கடைகளில் நாம் சொல்லும் வகைகளை நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் வரிசையாக இலையில் இடமில்லாவிட்டாலும் அடுக்குவார்கள்,நீங்கள் குறிப்பிட்ட படி காப்பி சூடாக கொடுப்பதைபோல் சேலத்தில் “கந்தவிலாஸ்”என்ற ஓட்டலில் நாம் எவ்வளவு ஆர்டர் கொடுத்திருந்தாலும் இலையில் முடிய முடிய ஒவ்வொன்றாக கொடுப்பார்.
  சாப்பிடுவது ஒரு கலை.
  அதை பரிமாறுவதும் ஒரு கலை.
  நன்றி.

  # 20 August 2016 at 4:58 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.