kamagra paypal


முகப்பு » அனுபவம், தொழில்நுட்பம்

எண்ணெய்யும் தண்ணீரும்: வீணாகிறதா எரிவாயு?

கடலிலோ, கரையிலோ எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய்யோடு மேலே வரும் எரிவாயு பிரித்தெடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். வெறும் எரிவாயுவை மட்டுமே தரும் கிணறுகளும் நிறைய வெட்டப்படுவது உண்டு. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் எரிவாயுவும் சேதம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், துரப்பண பணி சம்பந்தப்பட்ட பல்வேறு செயலாக்கங்களில் ஆங்காங்கே சில இடங்களில் குறைந்த அழுத்ததுடன் வந்து சேரும் எரிவாயுவை உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாமல் போய் விடும். இந்த வகையில் சேரும் வாயுக்கள்தான் பெரிய ஜ்வாலையுடன் அணையா விளக்கு போல் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் சுடர்பிழம்பு (Flare) வழியாக எரிக்கப்படுகின்றன. அழுத்தம் மிகவும் குறைந்த சில வாயு ரகங்கள் நேராக வளிமண்டலத்தில் (atmosphere) கலந்து விடும்படி விடுவிக்கப்படுவதும் (Venting) உண்டு.  24 மணிநேரமும் விடாமல் இப்படி ஏராளமாய் எரிவாயு வீணடிக்கப்படுவது போல் தோன்றுவதால், பல நண்பர்கள் இந்த வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா என்று கேட்டிருக்கிறார்கள். முடியாது என்பதுதான், இன்று வரை சரியான விடை.

flare

முடியாது என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இப்படி ஆங்காங்கே சேரும் சில்லறை வாயுவைச் சேர்த்து எரித்து விடுவது அதுவாக எங்கேயாவது சேர்ந்து தீப்பிடித்துத் தொலைக்காமல் தடுத்து விடும் பாதுகாப்பான செயல் என்பது முதல் காரணம். இந்த குறைந்த அழுத்த வாயு உருவாகும் இடங்களிலெல்லாம் குழாய்களும் கம்ப்ரஷர்களும் அமைத்து அவற்றை பிடித்து சேமித்து சுத்தப்படுத்தி உபயோகிப்பது என்பது நடைமுறையில் இயலாததும், நிறைய நஷ்டத்தை விளைவிக்கும் ஒரு வேலை என்பதும் அடுத்த காரணங்கள். எனவே இந்த மாதிரியான வாயுக்களை எல்லாம் சேர்த்து, சற்று தள்ளி எடுத்துக்கொண்டு போய் எரித்து விடுவதுதான் புத்திசாலித்தனமான தீர்வு.

எக்கச்சக்கமாய் வாயு வீணாவது போல் தோன்றினாலும், பூமியில் இருந்து வெளியே கொணரப்படும் எரிவாயுவில் 99%க்கு மேல் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. சுடர்பிழம்பில் எரிக்கப்படுவது பொதுவாக ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாயு மட்டுமே. இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை கெடுவதில்லையா என்பது அடுத்து வரும் கேள்வி. நவீன சுடர்பிழம்பு முனைகள் (Flare Tip) இந்தக் கவலையையும், அது தொடர்பான புதிய சட்டங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு வடிவமைக்கப்படுவதால், அந்த முனைக்குப்போய் சேரும் வாயுவில் 98% க்கு மேல் முழுவதுமாக எரிக்கப்பட்டு விடுகிறது. சாம்பல் போன்ற எச்சங்களும் (Residue) பெரிதாக ஏதும் சேர்வதில்லை. இந்த எரிப்பினால் பாதிப்பு ஒன்றுமே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும், பாதிப்புகள் மிகவும் குறைவுதான் என்று சொல்லலாம்.

FlareStack_Systemஅருகிலுள்ள படம் இது சம்பந்தப்பட்ட செயலாக்கங்களை எளிதாக விளக்குகிறது. நிஜமான பிளாட்பார்ம் அமைப்புகளில் இன்னும் பல வடிகட்டிகள், மோட்டார்கள், கட்டுபாட்டு அமைப்புகள் எல்லாம் உண்டு என்றாலும், பொதுவான செயல்முறை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கும். இடது பக்கம் உள்ள மூடிய தொட்டியில் எண்ணெய், தண்ணீர், எரிவாயு மூன்றும் முதலில் பிரிக்கப்படுகின்றன. பிளாட்பார்மில் இது அழுத்தம் நிறைய இல்லாத ஒரு இரண்டாம் நிலை தொட்டியாக இருக்கும். இதை விட பெரியதான முதல் நிலை தொட்டியில் இருந்துதான் உற்பத்திக்கான எண்ணெய் எரிவாயு எல்லாம் எடுக்கப்படும். எனவே இந்த நாக்அவுட் ட்ரம் எனப்படும் தொட்டிக்கு வந்து சேர்வது ஆங்காங்கே உருவாகும் சில்லறை எண்ணையும் எரிவாயுவும்தான். பிரிந்த வாயு தண்ணீர் வழியே ஒரு குளியல் போட்டபின் சுடர்பிழம்பு கோபுரத்திற்கு (Flare Stack) அனுப்பப்படுவது தப்பித்தவறியும் எரியும் நெருப்பு அல்லது தீப்பொறி தொட்டியை போய் சேராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு அமைப்பு. அந்த சுடர்பிழம்புக் குழாய்க்குள்ளும் நெருப்பு பின் நோக்கி வரமுடியாத வகையில் தடுப்புகள் இருப்பதை பார்க்கலாம். அந்த சுடர்பிழம்பு குழாய் வழியே வந்து எரியும் வாயுவைத் தவிர வலது பக்கம் காணப்படுவது போல் தனியாக இன்னொரு சிறு குழாயில் கொஞ்சமாய் எரிவாயு அனுப்பப்பட்டு சுடர்பிழம்பின் வெகு அருகே சின்ன விளக்கு போல் ஒரு குட்டிப் பிழம்பு (Pilot Flame) எரிந்து கொண்டிருக்கும். இது அடுப்பு பற்ற வைக்கும் தீக்குச்சிக்கு சமம். நாள் பூராவும் குறைந்தது ஐம்பது அடி உயரத்திற்கு சுடர்பிழம்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் என்றாலும், எப்போதாவது சில கணங்கள் வாயு வருவது நின்று போய் சில நிமிடங்களுக்கு அப்புறம் திரும்ப தொடர்ந்தால், உடனேயே தொடர்ந்து வெளிவரும் வாயுவைப் பற்ற வைக்க இந்த தீக்குச்சிப் பிழம்பு உதவும். ஒரு வேளை அந்த சிறு பிழம்பும் அணைந்து விட்டால், வாயுவை பற்ற வைக்க அந்த சுடர்பிழம்பு நுனியில் தீப்பொறியை ஏற்படுத்தும் பின்துணை (Back Up) மின் அமைப்பு ஒன்றும் உண்டு.

gfk_flares_elevated_steam_MJS_2பெரிய எண்ணெய் பிளாட்பார்ம்களில் உபயோகத்திலிருக்கும் சுடர்பிழம்பின் முனை என்பதே பொதுவாக நாம் நினைத்துப் பார்ப்பதை விட ஒரு பெரிய பூதாகரமான அமைப்பு என்பது படங்களை பார்த்தால் புரியும். ஒற்றை குழாய் மாதிரி இல்லாமல், வந்து சேரும் எரிவாயு அத்தனையையும் திறம்பட எரிப்பதற்காக ஒரு பெரிய குழாய், சுற்றிப் பல சிறிய குழாய்கள், வெவ்வேறு குழாய்களில் வெவ்வேறு வகையான வாயுக்கள், அவற்றின் எரியும் தன்மைக்கேற்றவாறு அதிகமாகவோ குறைவாகவோ காற்றைச் சேர்த்தல், சில வாயு வகைகளுடன் கொஞ்சம் நீராவியைச் சேர்த்தல் (இல்லாவிட்டால் சரியாக எரியாமல் எக்கச்சக்கமாய் கரும் புகையை உமிழ்ந்து சுற்றுவெளியை மாசு படுத்தும்), என்று கதை பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

Flare_Tip_Replacementஇது சம்பந்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பற்றி ஆராய்ந்து பலர் முனைவர் பட்டங்கள் வாங்கிப் புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். சாதாரணமாக ஜ்வாலையின் உயரம் ஐம்பதடி இருக்கலாம். பிளாட்பார்ம் அடைப்பு (Shutdown) செய்யும்போது அல்லது எரிவாயுவை மும்பைக்கு அனுப்பும் அழுத்தத்தைக் கொடுக்கும் எந்திரம் (கம்ப்ரெஷர்) ஒன்றை நிறுத்தும் போது,  மாதிரியான சமயங்களில் எக்கச்சக்கமான வாயுவை எரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதால், தீடீரென்று பெரிய சத்ததுடன் அது 150 அடி உயரத்திற்கு எரியும் பகாசுர ஜ்வாலையாய் மாறும். அந்த திடீர் சத்தமும் வெப்பமும் பிளாட்பார்மையே அதிர வைக்கும் என்பதால், நாங்கள் கேண்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கூட, அந்த நிகழ்வை உணர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ஃபோன் போட்டு, “என்னப்பா? ஒன்றும் பிரச்சினை இல்லையே?” என்று கேட்டுக்கொள்வோம். எப்போது பிளாட்பார்மை பார்த்தாலும் விடாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்தப் பிழம்பு “பிளாட்பார்மில் எல்லாம் நல்ல விதமாக ஓடிக்கொண்டு    இருக்கிறது” என்று நமக்குச் சொல்லாமல் சொல்லிப் புரிய வைக்கும் ஒரு அறிக்கை அல்லது வாக்குறுதி.

அவ்வளவு முக்கியமான அந்த சுடர்பிழம்புதான் எங்கள் பிளாட்பார்மில் ஒரு முறை அணைந்து போய் விட்டது!

பிளாட்பார்ம் கட்டப்பட்டு ஏழெட்டு வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. ஓரிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது அந்த பிழம்பை அணைத்துவிட்டு, அருகே சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று பராமரிப்பு விதிகள் இருந்திருக்கலாம். ஆனால் எண்ணெய் உற்பத்தியை அத்தகையை செயல்கள் பாதிக்கும் என்பதாலோ என்னவோ, எனக்கு தெரிந்தவரை பெரிதாக பராமரிப்பு வேலை எதுவும் நடந்ததே இல்லை. எனவே நாளடைவில் அந்த சுடர் பிழம்பு முனை பழுதாகி ஜ்வாலை ஒரு பக்கமாக, கோணலாக எரிய ஆரம்பித்தது. இருந்தாலும் எரிவாயு சென்று கொண்டிருக்கும் வரை அது பாட்டுக்கு எரிந்து கொண்டிருக்கும் என்று எல்லோரும் நினைத்திருந்தது பொய்யாகி, ஒரு நாள் அது சுத்தமாக அணைந்து போனது பிளாட்பார்மில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஞ்சீனியர்கள் துரிதமாக செயல்பட்டு முடிந்த அளவு சில்லறை வாயு வகைகள் ஆங்காங்கே உருவாவதை தவிர்க்க முயன்றார்கள். இருந்தாலும் சுடர்பிழம்பு குழாயை நோக்கிச்செல்லும் எரிவாயு எல்லாவற்றையும் 100% தடுத்து பிளாட்பார்முக்குள்ளேயே வெகுநேரம் சமாளிப்பதென்பது முடியாத காரியம். எனவே எரிக்கப்பட வேண்டிய வாயு எல்லாம் பிளாட்பார்மைச் சுற்றிப் படர்ந்து பற்றிக்கொண்டு விடுமோ என்பது எல்லோருக்கும் வந்த நியாயமான கவலை.

ஏழு வருடங்களுக்கு மேலாக விடாமல் அந்த சுடர்பிழம்பு எரிந்திருந்ததால், திரும்ப அதை எப்படி பற்ற வைப்பதென்பது நிறைய நாங்கள் பயிற்சி செய்து வைத்திருந்த ஒரு சாதாரண விஷயமில்லை. ஆனாலும் பிளாட்பார்மின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து இயங்கும் பல்வேறு அமைப்புக்களை பற்றிய பயனர் கையேடு மாதிரியான புத்தகங்கள் பிளாட்பார்மிலேயே இருந்த நூலகத்தில் ஒழுங்காக வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்ததால், அடுத்த சில நிமிடங்களில் சுடர்பிழம்பு பராமரிப்பு பற்றிய கையேட்டுடன், அந்த சுடர்பிழம்பு குழாய் பிளாட்பார்முடன் வந்து இணையும் இடத்துக்கு விரைந்தோம்.

முன் சொன்னதுபோல் எல்லாம் ஒழுங்காக இருந்திருந்தால், எப்படியோ அந்த பிழம்பு அணைந்தாலும், அங்கே விடாமல் எரியும் விளக்கு போன்ற (Pilot Flame) அமைப்பு உடனே எரிவாயுவை திரும்ப பற்ற வைத்திருக்க வேண்டும். அது நடக்காததால் அந்த சிறிய சுடரும் எரியவில்லை என்பது தெரிந்தது. அடுத்த படியாக இதற்காகவே நிறுவப்பட்டிருந்த பேனலை அணுகிப்பார்த்தோம். அந்த எளிமையான பேனலில் ஒன்றிரண்டு ஸ்விட்ச்சுகள் மட்டும்தான் இருந்தன. ஒரு வால்வை திருப்பி ஒரு சிறு குழாய் வழியே நூறு கஜம் தள்ளியிருக்கும் அந்த சுடர்பிழம்பு முனைக்கு எரிவாயுவை அனுப்பியபடி இரண்டாவது சிவப்பு ஸ்விட்ச்சை அழுத்தினால் ஒரு மின்னிணைப்பு, இரண்டு கற்களை தட்டும்போது ஏற்படுவது போன்ற தீப்பொறிகளை அங்கே தெளித்து எரிவாயுவை பற்ற வைக்கும். இந்த குட்டிப்பிழம்பு எரிய ஆரம்பித்தவுடன் திரும்ப நிறைய எரிவாயுவை அனுப்பி ஜ்வாலையை பெரிதாக்கிக்கொள்ளலாம். கையேட்டில் இருந்த குறிப்புக்களின்படி பலமுறை முயன்றும் எங்களால் ஒரு விளக்கையும் ஏற்ற முடியவில்லை. மொத்தத்தில் எங்கள் பிளாட்பார்மின் சுடர்பிழம்பின் முனை பல வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் எரிந்து போய் அங்கே இருக்க வேண்டிய சிக்கலான அமைப்புகள் எல்லாம் கடலில் விழுந்துவிட வெறும் மொட்டை குழாய் மட்டும்தான் இப்போதைக்கு அங்கே இருக்கிறதென்பது புரிந்தது!

complexplatformflare2

அந்த சுடர் பிழம்பு கோபுரம் (Flare Tower) பிளாட்பார்மில் இருந்து முன்னூறு அடி தள்ளி இருந்ததோடு நூறடி உயரமாக வேறு இருந்ததால், அதன் முனையில் என்ன நடக்கிறதென்று எங்களிடம் இருந்த ஒரு தொலைநோக்கி வழியே பார்த்தாலும் கூட பிளாட்பார்மில் இருந்து சரியாக தெரியாது. அணைந்தபோதே மாலை மணி ஐந்து ஆகியிருந்ததால் ஹெலிகாப்டர்கள் எல்லாம் மும்பைக்கு திரும்பி போய் விட்டன. சாப்பர்கள் சுடர்பிழம்புக்கு அருகே பொதுவாக போகாது என்றாலும், அவை இருந்திருந்தாலாவது முனைக்கு போகும் எரிவாயுவை சுத்தமாக நிறுத்திவிட்டு சுடர்பிழம்பு முனை எப்படி இருக்கிறது என்று பாதுகாப்பான உயரத்தில் இருந்து ஒரு நோட்டம் விடலாம். அதற்கும் வழியில்லை. மணி ஆறுக்கு மேலாகி இருட்ட ஆரம்பித்திருந்தது. சில நிமிடங்களில் சுடர்பிழம்பு திரும்ப எரிய ஆரம்பித்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த ஊழியர்கள் பலருக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவலையும் பயமும் தொற்றிக்கொள்ள கோபமும் ஆங்காங்கே தலைகாட்டத் துவங்கியது! பிளாட்பார்ம் பொறியாளர்கள் பொறுமையாக இருந்தபோதிலும், அங்கே கேண்டீனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள், கடைநிலை துப்புரவு பணியாளர்கள் போன்றோர் இது எங்களுக்கு உயிராபத்தான நிலை என்பதால் எங்களை உடனே கப்பல்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கத்த ஆரம்பித்தார்கள்!

flaregunஎங்களிடம் இன்னும் மீதமிருந்த ஒரே அஸ்திரம் Flare Gun! நூறு ஆண்டுகளுக்கு முன்பு எட்வர்ட் வில்சன் வெரி என்ற அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவரால் இந்த வகை துப்பாக்கி பிரபலமாக்கப்பட்டதால், இதை வெரி பிஸ்டல் என்று கூட சொல்வார்கள். பார்க்க துப்பாக்கி போல் இருந்தாலும், இது எவரையும் கொல்வதற்கல்லாமல் பலரை காப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கடலிலோ கரையிலோ சுத்தமாக தொலைந்து போய் வழி தெரியாமல் திண்டாடும் போதோ அல்லது கப்பல் விமானம் போன்றவை ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டாலோ இந்த துப்பாக்கியை உபயோகித்து நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்மை காப்பாற்ற வருபவர்களுக்கு காட்டலாம். பொதுவாக ஒரே ஒரு குண்டை மட்டுமே லோட் செய்யும்படி இந்த எளிமையான துப்பாக்கி அமைக்கப்பட்டிருக்கும். குண்டை போட்டு வானத்தை நோக்கி சுட்டால், தீபாவளி ராக்கெட் பட்டாசு போல பிரகாசமான ஒளியுடன் பறந்து போய் எரிந்து மறையும். சாதாரண துப்பாக்கி குண்டுபோல் இதில் தாக்குவதற்கான உலோக குண்டு எதுவும் கிடையாது. இதன் பெயரில் சுடர்பிழம்பு (Flare) என்ற சொல் இருந்தாலும், இதை பிளாட்பார்மில் வைத்திருந்ததின் காரணம் ஆபத்தான நேரத்தில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்காகத்தானே தவிர அணைந்து போன சுடர்பிழம்பை திரும்ப பற்ற வைப்பதற்காக இல்லை! இருந்தாலும் அதை உபயோகித்து பார்த்து விடுவது என்று தீர்மானித்தோம். யாருக்கு அந்த துப்பாக்கியைச் சுட்டுப் பழகிய பயிற்சி இருக்கிறது என்று கேட்டபோது பிளாட்பார்மில் யாருக்குமே இல்லை என்று தெரிய வந்தது!

இந்த இடத்தில் ஒரு சின்ன விஷயத்தை சொல்லவேண்டும். பள்ளிக்கூட நாட்களில் எல்லாம் நான் கொஞ்சம் கூச்ச சுபாவமுள்ளவன். இப்படியே இருந்தால் உருப்பட முடியாது என்று பின்னால் கல்லூரி நாட்களில் சொற்பொழிவுகள் கொடுப்பது, கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்று என்னை நானே முன்னால் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன். அதற்கப்புறம் இரண்டு வருடங்களுக்கு மேல் வேலையிலும் இருந்திருந்ததால், என் சுபாவம் மெதுவாக மாறிக்கொண்டு வந்த காலம் அது. எனவே இந்த நிகழ்வின்போது வேறு யாருக்குமே இந்த துப்பாக்கியைச் சுடத்தெரியாது என்றால், எனக்கும் சுடத்தெரியாது என்றபோதும் நான் பிளாட்பார்மில் இருந்த மற்ற எந்த பொறியாளருக்கும் சளைத்தவனில்லை என்று தோன்றியது! எனவே துப்பாக்கியை நான் சுடுகிறேன் என்று முன் வந்தேன். எல்லாம் ஒழுங்காக நடந்தால் நல்ல பெயர் கிடைக்கும். இல்லாவிட்டாலும் யாராலும் நான் செய்த முயற்சிக்காக என்னைக் குறை சொல்ல முடியாது என்று ஓடியது என் சிந்தனை.

பிளாட்பார்முக்கு உள்ளிருந்தே சுடுவது முட்டாள்தனம் என்பதால், முன்னொரு அத்யாயத்தில் இரவில் ஆளில்லா பிளட்பார்முக்கு போகும்போது செய்ததைப்போல், மேல் தளத்திற்குச் சென்று ஒரு கூடையில் ஏறிக்கொண்டு கிரேன் ஆபரேட்டர் தயவில் கீழே காத்திருந்த ஒரு குட்டிக்கப்பலில் இறங்கிக்கொண்டேன். துணைக்கு என்னுடன் குருதேவ் சிங் என்ற இன்னொரு இஞ்சீனியரும் ஒட்டிக்கொண்டார். இருவருமாக வாக்கி டாக்கி வழியாக கப்பலின் காப்டனுடனும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்களுடனும் பேசிக்கொள்ள முடிந்தது. கேப்டன் கப்பலைச் சுடர்பிழம்பு கோபுரம் இருக்கும் இடத்திலிருந்து காற்றடிக்கும் திசையை கவனித்து, காற்று கப்பலைத் தாண்டிப் போய், சுடர்பிழம்பு கோபுரத்தை நோக்கி வீசும்படி மேல்புறமாக நிறுத்தினார். அலைகள் ஏதும் பெரிதாக இல்லாததால் கப்பல் நல்லவேளையாக ரொம்ப ஆடவில்லை.

பிளாட்பார்மில் வேலை செய்யும் நூறு பேரில் குறைந்தது அறுபது பேருக்கு மேல் வெளியே வந்து நாங்கள் செய்வதைக் கொஞ்சம் பதட்டத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சூரியன் முழுதும் மறைந்து விடப்போகும் நேரம் என்பதால் வெளிச்சம் நிறைய இல்லை. வாக்கி டாக்கி வழியே குருதேவ் சிங் கண்ட்ரோல் ரூம் இஞ்சீனியரை நிறைய எரிவாயுவை விடுவிக்கச்சொல்லவும், அந்த சுடர்பிழம்பு முனை வழியே பெருத்த சத்தத்துடன் வாயு வெளியேறுவது கீழே கப்பலில் இருந்த எங்கள் காதுகளுக்கு நன்கு கேட்டது. flaretrailநான் குண்டை

லோட் செய்து துப்பாக்கியை உயர்த்தி அந்த சுடர்பிழம்பு முனையை நோக்கி சுட்டேன். பட் என்ற துல்லியமான சத்தத்துடன் ஒரு பெரிய பிரகாசமான சிவப்பு ஒளி ஒரு நீண்ட கோடாக என் கை முனையில் இருந்து அந்த குழாயின் முனைக்கு பயணித்தது ஒரு ஸ்லோ மோஷன் கவிதை போல் நினைவிருக்கிறது. அந்த தீக்கோடு வெளிவந்துகொண்டிருந்த எரிவாயுவை தொட்டதும் வானத்தில் ஒரு வெடி வெடிப்பது போல் தீப்பற்றிக்கொண்டு பெரிய மஞ்சள் நிற பிழம்பு எரிய ஆரம்பித்தது! பிளாட்பார்மில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களின் முகங்கள் எனக்கு சரியாக தெரியாவிட்டாலும், எல்லோரும் கைதட்டுவதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பதும் நன்றாகவே கேட்டது!

கதை அதோடு அழகாக முடியவில்லை. நாங்கள் குஷியாக கப்பலை திருப்பச்சொல்லி பிளாட்பார்முக்கு போக ஆரம்பித்த சமயம் கண்ட்ரோல் ரூம் காரர்கள் எரிவாயு அந்த சுடர்பிழம்பு முனைக்கு போகும் வேகத்தை குறைத்து சாதாரண நிலைக்கு திருப்பவும், பிழம்பு திரும்ப அணைந்து போனது! திரும்ப பழைய இடத்துக்கே போய் கப்பலை நிறுத்திக்கொண்டு மறுபடி எரிவாயுவை நிறைய திறந்து விடச்சொல்லிவிட்டு நான் இரண்டாம் முறை சுட்டபோது சற்றே குறி தவற சுடர்பிழம்பு பற்றிக்கொள்ளவில்லை.

நான் மூன்றாம் முறை சுடத்தயாரானபோது, இதை பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொண்டிருந்த குருதேவ் சிங், “சுந்தர், நான் ஒரு முறை சுடுகிறேனே” என்று ஆர்வமாய் கேட்கவும், துப்பாக்கியை கொடுத்து விட்டு வாக்கி டாக்கியில் நான் பேச ஆரம்பித்தேன். OLYMPUS DIGITAL CAMERAகுருதேவ் சுட்டபோது சுடர்பிழம்புக்கு திரும்ப உயிர் வந்தது. எரிவாயு கொஞ்சம் வீணானாலும் பரவாயில்லை, வேகத்தை குறைக்க வேண்டாம் என்று நான் சொன்னபடி கண்ட்ரோல் ரூம் இஞ்சீனியர்கள் நிறைய வாயுவை திறந்து விடவும் பிழம்பு விடாமல் எரிய ஆரம்பித்தது. திரும்ப கப்பலில் இருந்து கிரேன் வழியே தூக்கப்பட்டு பிளாட்பார்முக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது எல்லோரும் கைதட்டி வரவேற்றனர். மறுநாள் மாலைவரை நானும் குருதேவும் ஏதோ விண்வெளிக்கு போய் விட்டு வந்த வீரர்கள் போல் பிளாட்பார்மில் உலவிக்கொண்டிருந்தோம்! நிச்சயம் மொட்டாக இருந்த என் தன்னம்பிக்கைக்கு டானிக் கொடுத்து மலர வைத்து உற்சாகப்படுத்திய சம்பவம் இது. அதற்கப்புறம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் பழைய கூச்சமெல்லாம் கரைந்து போய் விட, இப்போதெல்லாம் நான் எல்லோருடனும் தேவை இல்லாமல் நிறைய பேசி அறுக்கிறேன் என்று கேள்வி!

ஓரிரு நாட்களில் என் 14 நாள் ஷிப்ட் முடிந்து நான் ஊர் திரும்பியிருந்தபோது, சாப்பரின் உதவியுடன் புதிய சுடர்பிழம்பு முனையைக் கொண்டுவந்து பொருத்திவிட்டார்கள். நான் அந்த பிளாட்பார்மில் பணி புரிந்து கொண்டிருந்தவரை அது பாட்டுக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனாலும் அதை அணைத்து, திரும்ப ஏற்றி, எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று அவ்வப்போது சரி பார்த்தார்களா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

(தொடரும்)

Series Navigationஎண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி

6 Comments »

 • s ramesh said:

  Super narration.enjoyed reading it.How could you remember the incident in detail after many years.Good.

  # 14 May 2015 at 9:27 am
 • kalyana said:

  Hi Sundar ,
  எரிவாயு வீணடிப்பைத் தடுத்து அந்த வாயுவையும் உருப்படியாகப் பயன் படுத்த முடியாதா ?
  Large corporations are capturing the continuously flared gases , even at low pressure , compress it up to 3500 psi and use it for gas injection to boost reservoir pressure .
  Zero Flaring is the target for large organizations like Shell, BP and TOTAL. Flares are used for emergency releases only. Even this is now a days stopped by installing special facilities like HIPPS system .
  Your articles are superb. I love to write in Tamil but could not type in Tamil Fonts. I am sorry about it.

  Good Work Great Inspiration for us.
  Regards

  # 16 May 2015 at 8:20 pm
 • Fayez said:

  Good write up dude…Wish I would be an Engineer like you…Kudos…:)

  # 17 May 2015 at 6:14 am
 • Aravindhan said:

  மிக அற்புதமான விளக்கமான தெளிவான கட்டுரை நண்பரே.. நானும் OFFSHORE OIL RIG ல் தான் பணிபுரிகிறேன். நம் மக்களுக்கு எண்ணைக் கிணறுகள் பற்றியும் அங்கிருந்து எப்படி எண்ணையெடுக்கிறார்கள் என்பது பற்றியும் தெரியாது.. இதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று பலமுறை நினைத்துள்ளேன்.. இத்தொடர் அற்புதமாக விளக்குகிறது…. நான் TRANSOCEAN OFFSHORE ல் இருக்கிறேன். வாழ்த்துக்கள்… பத்மநாபபுரம் அரவிந்தன்

  # 18 May 2015 at 11:46 pm
 • Sundar Vedantham (author) said:

  தங்கள் கருத்துக்களை பதிவு செய்து என்னை ஊக்குவிக்கும் வாசக அன்பர்களுக்கு எனது நன்றி. கி.பி.2030க்குள் எரிவாயுவை தொடர்ந்து எரிக்கும் வழக்கை ஒழித்து விடுவது என்று ஒரு முயற்சியை (“Zero Routine Flaring by 2030” initiative) ஆரம்பித்திருக்கிறார்கள். சாதிக்க முடிந்தால் நிச்சயம் நல்லதுதான். வாழ்த்துகள் தெரிவிப்பேன்.

  தமிழில் சுலபமாய் எழுத http://www.google.com/intl/ta/inputtools/try/ வலைதளத்தை உபயோகிக்கலாமே. நீங்கள் Shenbaga kuzal vaaimozhi என்று டைப் அடித்தால் உடனே அதை “செண்பகக்குழல்வாய்மொழி” என்று மாற்றி கொடுத்து விடுகிறது! 🙂

  அன்புடன்
  -சுந்தர் வேதாந்தம்.

  # 23 May 2015 at 4:45 pm
 • Kalyana said:

  அன்பு சுந்தர்

  எரி வாயு வீணாக போகும்போது கவலையாய் தான் இருக்கிறது

  எண்ணெய் கம்பெனிகள் எண்ணெய் எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை எரி வாயு வீணவதை தடுப்பதில் காட்டுவதில்லை . அதற்கு உறுதுணை யாக எண்ணெய் விலையும் குறைந்து இருக்கிறது.

  நீங்கள் சொல்வது போல் 2030 ல் நிலைமை மாறும்

  தமிழ் எழுத்துக்கு நன்றி

  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  கல்யாணா

  # 31 May 2015 at 5:40 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.