kamagra paypal


முகப்பு » அனுபவம், தொழில்நுட்பம்

எண்ணெய்யும் தண்ணீரும்: மனிதரில் இத்தனை நிறங்களா?

பாரதியார் கண்ணனை தாயாக, ஆசிரியனாக, சேவகனாக, எதிரியாக எல்லாம் உருவகித்து கவிதை எழுதியது போல், பிளாட்பார்மையும் சொல்லலாம் என்றால் அது மிகையாகாது.

Helideck

பணியில் நான் சேர்ந்து சில வாரங்களே ஆகி இருந்த சமயம் அது. ஏதோ ஒரு ஆளில்லா பிளாட்பார்முக்கு பராமரிப்பு வேலைகளுக்காக ஒரு நாள் காலை சென்றுவிட்டு, முதல் அத்யாயத்தில் பார்த்த அதே ரக தாஃபின் ஹெலிகாப்டரில் மாலை எங்கள் பிளாட்பார்முக்கு திரும்பினோம். ஹெலிகாப்டெர்களை பொதுவாக சாப்பர் (Chopper) என்று அழைப்பது வழக்கம். சாப்பரின் சுழலிகள் (Rotors) மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும்போது யார் தலையிலாவது இடித்தால் மரணம் நிச்சயம். அதனாலேயே ஹெலிபேட் தளங்கள் பொதுவாக சற்றே தூக்கி பிடித்தாற்போல் அமைக்கப்பட்டு, பயணிகள் இறங்கிய உடன் இன்னும் சில படிகளில் இறங்கி கீழே போய் விடும்படி உருவமைக்கப்பட்டிருக்கும். பிரயாணிகளை இறக்கி/ஏற்றிக்கொண்டு உடனே கிளம்பும் சமயங்களில் சுழலிகள் முழுவதும் நிறுத்தப்படுவதில்லை என்பதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி இத்தகைய ஏற்பாடுகள்.

HelideckSafetyசாப்பரில் இருந்து இறங்கும்போது விமானிகளின் கண்களுக்கு நன்கு தெரியும் வண்ணம் முன் பக்கமாக நடந்துபோய் அங்குள்ள படிகளில் ஐந்தாறு அடிகள் இறங்கிய பின், கடைசி நபர் திரும்பி கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்ட வேண்டும். தளத்தில் இனி யாரும் இல்லை, எனவே நீங்கள் கிளம்பலாம் என்று அதற்கு அர்த்தம். காற்று எந்த திசையில் இருந்து வீசுகிறது என்பதை பொறுத்து சாப்பர் வெவ்வேறு நாட்களில் ஹெலிபேடில் வெவ்வேறு பக்கம் மூக்கை வைத்துக்கொண்டு இறங்கும் என்பதால் ஹெலிபேடை சுற்றி மூன்று நான்கு இடங்களில் கீழே இறங்கிப்போக படிகள் அமைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் நாம் சாப்பருக்கு முன்னாலுள்ள படிகள் வழியேதான் இறங்கிப்போக வேண்டும். இந்த விவரங்கள் எல்லாம் எனக்கு தெரியும் என்றாலும், சாப்பரின் வலது பக்க கதவை திறந்து இறங்கிய நான், அன்று ஏதோ நினைவில் அந்தப்பக்கத்திலேயே இருந்த படிகள் வழியே ஹெலிபேடில் இருந்து இறங்கி தம்ஸ்அப் காட்டிவிட்டு நடையை கட்டினேன். என்னை பார்க்க முடிந்தாலும் நான் முன் பக்கமாக போய் இறங்கவில்லை என்று விமானிக்கு கடுப்பு. ரேடியோ ரூமில் இருந்து டிவியில் இதை பார்த்துக்கொண்டிருந்த பிளாட்பார்ம் ரேடியோ ஆபிசர் உடனே பிளாட்பார்மின் மேலதிகரியான FPS (Field Production Superintend) இடம் புகார் செய்துவிட்டார். எனக்கு தண்டனை?

வாராவாரம் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு தவறாமல் ஒரு பாதுகாப்பு பயிற்சி பிளாட்பார்மில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஒவ்வொரு வாரமும் பிளாட்பார்ம் முழுதும் பத்தடிக்கு ஒன்றாக நிறுவப்பட்டிருக்கும் பொது அறிவிப்பு ஒலிப்பெருக்கிகளில் (Public Address System) பல்வேறு வகையான அலார்ம் சத்தங்களை ஒலித்து (FSD, ESD, Abandon Platform, All Clear போன்ற ஒலிகள்) எல்லோருக்கும் அவற்றின் அர்த்தங்களை நினைவுறுத்துவது வழக்கம். அத்தோடு பிளாட்பார்ம் வெடித்து சிதறப்போகிறது என்றால் ஆங்காங்கே கட்டி தொங்கிக்கொண்டிருக்கும் தீப்பிடிக்காத ஃபைபர்கிளாஸ் உயிர் காப்பு படகுகளை எப்படி விரைவாக தண்ணீரில் இறக்கி, பிளாட்பார்ம் இணைப்புகளை விலக்கி, படகின் எஞ்சினை இயக்கி ஓட்டம் பிடிப்பது போன்ற பல பயிற்சிகள் திரும்பத்திரும்ப கொடுக்கப்படும். அந்தப்படகுகள் எளிதில் மூழ்காத வகையில் உருவாக்கப்பட்டு, உள்ளே நிறைய லைஃப் ஜாக்கெட்டுகள், பலவருடங்கள் கெட்டுபோகாமல் இருக்கும் உலர்ந்த உணவு, குடிதண்ணீர், விளக்குகள், ரேடியோ எல்லாம் கொண்ட பெட்டியோடு மனித உயிர்களை காக்க எப்போதும் தயாராய் இருக்கும்.

lifeboat

அந்த வாரம் படகு பயிற்சிக்கு பதில், என் தவறுக்கு தண்டனையாக சாப்பர் பாதுகாப்பு பற்றி நான் எல்லோருக்கும் ஒரு வகுப்பு எடுக்க வேண்டும் என்று FPS முடிவு செய்தார்! ஒரு தண்டனையாக கொடுக்கப்பட்டாலும், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருந்த எனக்கு என்னவோ அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பட்டது. நான் ONGCயில் சேர்வதற்கு முன்னால் ஹெலிகாப்டர் வடிவமைப்பு ஆய்வகத்தில் ஒரு வருடம் பணி புரிந்தவன் என்பது FPS உட்பட பெரும்பாலும் யாருக்கும் தெரியாது! எனவே அந்த ஞாயிறு காலை எல்லோருக்கும் முன்னால் நின்று அவர்கள் திட்டுவதை வாங்கிக்கொள்வதற்கு பதில், விமானங்கள் பறப்பதற்கு மிக அவசியமான லிப்ட், கிராவிட்டி, திரஸ்ட், டிராக் (Lift, Gravity, Thrust, Drag) என்ற நான்கு விசைகளில் இருந்து ஆரம்பித்து, அமர்க்களமாக ஒரு விரிவுரை வழங்கி எல்லோரையும் அசர அடித்தேன். பரவாயில்லையே, இவன் அவ்வளவு முட்டாள் இல்லை போலிருக்கிறதே என்று பலர் ஆச்சரியப்பட்டார்கள். FPS இவன் எங்கேயாவது பிரோஃபசராக போக வேண்டியவன் என்று கிண்டி விட்டு கிளம்பிப்போனார். மோசமாக ஆரம்பிக்கும் விஷயங்கள் கூட இறுதியில் நமக்கு சாதகமாக முடியக்கூடும் என்ற பாடத்தை இந்த அனுபவம் மூலம் பிளாட்பார்ம் எனக்கு போதித்தது.

இன்னொரு அனுபவம் இதற்கு தலைகீழ் என்று சொல்ல முடியாது. ஆனால் என் குனிந்த தலை குனிந்தே இருக்கும்படி செய்தது. நான் பணி புரிந்த பிளாட்பார்மில் கருவியியல் துறையை சேர்ந்த எங்கள் குழுவுக்கு மட்டும் சீனியர் பொறியாளர்கள் வளர்த்து வைத்திருந்த ஒரு கட்டுக்கோப்பு தன்மையும், நிறைய சுய மரியாதையும் உண்டு. பிளாட்பார்மில் இருக்கும் போது வீட்டுக்கு தினமும் திரும்புவது போன்ற விஷயங்கள் கிடையாதாகையால், விழித்திருக்கும் சமயம் முழுதும் சிந்தனை, பேச்சு, விவாதங்கள் எல்லாம் பெரும்பாலும் பிளாட்பார்ம் பற்றியே இருக்கும். இரவு சாப்பாட்டுக்குப்பின் ஓய்வாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது கூட, மற்ற டிபார்ட்மெண்ட்காரர்கள் சினிமா, அரசியல் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க, நாங்கள் மட்டும், “அந்த மெயின் கம்ப்ரெஷ்சரில் திராட்டில் கண்ட்ரோல் எவ்வளவு நுட்பமானதும், அழகானதும் தெரியுமோ?, அதைப்பற்றி சொல்கிறேன் கேள்”, என்று ஒருவருக்கொருவர் விரிவுரைகள் வழங்கிக்கொண்டிருப்போம். தெரிந்து கொள்ள எக்கச்சக்கமாய் விஷயங்கள் இருந்தன. மற்ற பிளாட்பார்ம்களில் வேறு துறை குழுக்கள் இப்படி இருந்திருக்கலாம்.

ONGCக்கு நேரடியாக பணி புரியும் எங்களைப்போன்ற பொறியாளர்களுடன் நிறைய காண்ட்ராக்ட் பணியாளர்களும் உண்டு. கேண்டீனில் சமையல் செய்வது/நடத்துவது , துப்புரவு பணிகள் செய்வது, பெயிண்ட் அடிப்பது போன்ற வேலைகளை அவர்கள் செய்வார்கள். அவர்களை போன்ற ஊழியர்களை மட்டும் இல்லாமல் கருவியியல் துறையில் இல்லாத ONGC பொறியாளர்களை கூட அவர்கள் டெக்னிகல் விற்பன்னர்கள் இல்லை என்று எங்கள் குழு கொஞ்சம் இளக்காரமாய் பார்ப்பதாய் எனக்கு தோன்றியது. அடி மனதில் இந்த எண்ணம் தங்கியிருக்க, ஒரு நாள் ஒரு காண்ட்ராக்ட் பொறியாளர் நான் தனியே ஆய்வகத்தில் இருந்தபோது வந்து “ஒரு வோல்ட் மீட்டர் இருந்தால் தருகிறீர்களா?” என்று கேட்டார். எங்கள் குழுவில் இருந்த சீனியர் இஞ்சீனியர்கள் இப்படி எல்லாம் முன் பின் தெரியாத காண்ட்ராக்ட்காரர் யாராவது வந்து கேட்டால், தயவு தாட்சண்யம் இன்றி துரத்தி விடுவார்கள். நான் அப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்ற முடிவுடன், அவரிடம் எதற்கு வோல்ட் மீட்டர் வேண்டும் என்று கேட்க, அவர் ஒரு 12 வோல்ட் பேட்டரியில் மின்சாரம் இருக்கிறதா என்று பார்க்க என்று சொன்னார். எங்கள் ஆய்வகத்தில் 48 வோல்ட் வரை பேட்டரிகளை பரிசோதிக்க வைத்திருந்த ஒரு உயர்ந்தரக வோல்ட் மீட்டரை நான் அவரிடம் பத்திரமாக உபயோகித்து விட்டு ஒரு மணி நேரத்திற்குள் திரும்ப கொடுத்து விடுங்கள் என்று சொல்லி கடன் கொடுத்து அனுப்பினேன். இரண்டு மணி நேரம் கழித்து அவர் அதை திரும்ப கொண்டுவந்தபோது, மீட்டரின் பின்புறம் கருகிப்போய் நாறிக்கொண்டிருந்தது. அதிர்ந்துபோய் நான் என்ன செய்தீர்கள் என்று விசாரித்தபோது, அந்த புத்திசாலி அந்த சின்ன பேட்டரிகளை பரிசோதிக்க உபயோகிக்க வேண்டிய மீட்டரை (டி.சி. வோல்ட் மீட்டர்) ஒரே ஒரு நிமிடம் கரண்ட் இருக்கிறதா என்று பார்க்க 220 வோல்ட் A/C இணைப்பொன்றில் உபயோகித்ததாகவும், ஒரு சில வினாடிகள் மட்டும் உபயோகித்தால் ஒன்றும் ஆகாதென்று நினைத்தேன் என்றும் சொல்லி அசடு வழிந்தார். எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. எங்கள் குழுவில் இருந்த மற்றவர்கள் , “இப்போது புரிந்ததா?” என்று கேட்டுவிட்டு என்னை தனியாக வெட்கி தலை குனிய விட்டுவிட்டு போனார்கள். நான் என்ன முயன்றும் அந்த மீட்டரை என்னால் சரி செய்ய முடியவே இல்லை. அப்போதெல்லாம் வலை வசதிகள் ஏதும் கிடையதாகையால், வேறு புதிதாக ஆர்டர் செய்து வாங்கவும் முடியவில்லை. எல்லோரையும் எல்லா சமயங்களிலும் நம்பி விட முடியாது என்ற பாடத்தை, எங்கள் ஆய்வகத்தில் இருந்த ஒரு விலையுயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட தரமான மீட்டரை தொலைத்து கற்றுக்கொண்டேன்.

மூன்றாவது அனுபவம் நிகழும்போது எங்கள் கருவியியல் குழுவின் தலைமை இஞ்சீனியராக பொறுப்பேற்று பணி புரிந்து கொண்டிருந்தேன். என்னுடைய 14 நாட்களுக்கான ஷிப்ட் ஆரம்பித்து பத்து நாட்கள் முடிந்து விட்ட நிலையில் ஒரு நாள் மதியம் கண்ட்ரோல் ரூமில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பிளாட்பார்மில் உள்ள மூன்று MOL (Main Oil Line) பம்ப்புகளில் ஒன்று பராமரிப்பில் இருக்க, மற்ற இரண்டும்‌ 24 மணி நேரமும் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். இந்த பம்ப்புகள்தான் பிரித்தெடுக்கப்பட்ட கச்சா எண்ணையை மும்பைக்கு கடலின் தரையில் அமைக்கப்பட்ட குழாய்களின் வழியே அனுப்பிக்கொண்டிருப்பவை. இந்த இரண்டில் ஒரு பம்ப் எந்த ஒரு காரணமுமின்றி திடீரென்று நின்று விட்டது என்பதுதான் எங்களுக்கு வந்த செய்தி.

ONGC-complex

மேலே உள்ள படம் நான் பணி புரிந்த SH காம்ப்ளக்ஸ் போலவே உள்ள ஒரு பிளாட்பார்ம். அதில் இடது பக்கம் உள்ள பகுதியில் கீழ் தளத்தில் எங்கள் கருவியியல் ஆய்வகம் இருக்க, நடு பகுதியின் மூன்றாம் தளத்தில் கட்டுப்பாட்டு அறையும் அதற்கு ஒரு தளம் கீழே MOL பம்புகளும் அமைந்திருந்தன. வலது பக்கம் இருக்கும் மஞ்சள் பகுதியில் கீழே எண்ணெய் கிணறுகளின் குழாய்கள் இருப்பதை நீங்களே கவனித்திருப்பீர்கள். மூன்று பகுதிகளும் இரும்பு நடைபாதை பாலங்களால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். ஒரு பம்ப் நின்றால் எங்கள் பிளாட்பார்மில் இருந்து செல்லும் எண்ணையில் 50% உற்பத்தி குறையும். இல்லையா? எனவே இது பெரிய விஷயம். உடனே கண்ட்ரோல் ரூமுக்கு போய் சேர்ந்தோம். அங்கே உள்ள ஒரு பெரிய மின்னியல் பலகை பல மண்டலங்களாக (Zones) பிரிக்கப்பட்டு பிளாட்பார்மின் பல்வேறு பகுதிகள்/இயந்திரங்கள் எப்படி இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை கண்காணிக்க வசதியாக விளக்குகளை போட்டு அணைத்து காட்டிக்கொண்டிருக்கும். முதல் பம்ப் ஓடிக்கொண்டிருந்தது. மூன்றாவது பம்ப் பராமரிப்பில் இருந்தது. இரண்டாவது பம்ப் நின்று போயிருந்தது பட்டவர்தனம் என்றாலும், ஏன் நின்றது என்பதற்கான எந்த காரணமும் பலகையில் காணோம்! இதை எப்படி பழுது பார்ப்பது?

பம்ப் இருந்த இடத்திற்கு சென்று எல்லா கருவிகள், உணர்விகள் (Sensors) முதலியவற்றை இரண்டு மணி நேரம் பரிசோதித்துப்பார்த்தோம். ஒன்றும் பிடிபடவில்லை. எல்லாம் சரியாகவே இருந்தது. எனவே கண்ட்ரோல் ரூமுக்கு திரும்பி, பம்ப்பை திரும்பவும் இயக்கி ஓட விட்டோம். எல்லாம் சாதாரணமாக இயங்கி ஓட ஆரம்பித்து விடவே, தலையை சொறிந்துகொண்டு எங்கள் ஆய்வகத்துக்கு திரும்பினோம். ஒழுங்காய் ஓடிக்கொண்டிருந்த பம்ப் இரவு ஒன்பது மணிக்கு திரும்பவும் நின்று போனது. இந்த முறையும் பலகையில் ஒரு சமிக்ஞையையும் காணோம்! மறுபடி இரண்டு, மூன்று மணி நேர ஆய்வில் ஒன்றும் பிடிபடவில்லை. திரும்ப பம்ப்பை இயக்கினால், அது பாட்டுக்கு சாதாரணமாக ஓட ஆரம்பித்தது. நிலமை இப்போது சீரியஸ். மும்பையிலிருந்து, “உங்கள் பிளாட்பார்மில் என்னையா நடக்கிறது?” போன்ற போன் கால்கள் வர ஆரம்பித்தன. இரவு பூராவும் பம்ப்பின் பல்வேறு பகுதிகள், உணர்விகள் பற்றிய புத்தகங்கள், வரைபடங்களை நோண்டிக்கொண்டிருந்தேன். தூக்கம் போனதுதான் மிச்சம்.

pump1

மறுநாள் காலை என் குழுவுடன் அமர்ந்து எந்த மாதிரியான நிலையை பம்ப் அடையும்போது திடீரென்று நின்று போக முடியும் என்று விவாதித்தேன். பட்டியலிட்ட காரணங்களை அலசி ஆய்ந்து ஒவ்வொன்றாக நீக்கிய போது, மீதமிருந்த ஒரு காரணம் பம்பில் இருந்து எண்ணை வெளியேறும் பக்கத்தில் அழுத்தம் மிகவும் ஆபத்தான அளவுக்கு உயர்வது. படத்தில் உள்ள பம்ப்பில் எண்ணை இடது பக்கம் உள்ள பெரிய நீல நிற நுழைவாயில் வழியே உள்ளே வந்து, அழுத்தம் அதிகரிக்கப்பட்டு, வலதுபுறம் உள்ள சிறிய நீல நிற வாயில் வழியாக வெளியேறுவதாக கொண்டால், அந்த வலதுபக்கம் கடலுக்கடியில் ஓடும் குழாய்யோடு இணைக்கப்பட்டிருக்கும் என்பது புரியும். அந்தப்பக்கம் எண்ணை சரியாக வெளியேறாமல் பின் அழுத்தம் (Back Pressure) ஏதும் நிலவினால், அந்தப்பகுதியில் அழுத்தம் ஆபத்தான அளவுக்கு உயர வாய்ப்புண்டு. ஆனால் அங்கே நிலவும் அழுத்தத்தை கண்காணிக்க ஒவ்வொரு பம்புக்கும் இரண்டு உணர்விகள் உண்டு. உதாரணத்திற்கு எண்ணை வெளியேறும் இடத்தில் அழுத்தம் 2000 PSIக்கு போனால் பம்ப் சேதமாகக்கூடும் என்றால், முதல் உணர்வி அழுத்தம் 80% அளவுக்கு (அதாவது 1600 PSI) உயர்ந்த உடனேயே கண்ட்ரோல் அறையில் ஆரஞ்சு வண்ண எச்சரிக்கையை ஒரு சீட்டி ஒலியுடன் சேர்த்து மின்னணு பலகையில் எழுப்பி அறிவிக்கும். அங்கே இருக்கும் பொறியாளர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அழுத்தத்தை குறைத்து விடுவார்கள். அப்படி யாரும் கவனிக்காமல் போனால், அழுத்தம் 90% எல்லையை தாண்டும்பொழுது (1800 PSI) இன்னோரு உணர்வி விழித்தெழுந்து, கண்ட்ரோல் அறையில் பெரிய சங்கு ஒன்றை ஊதி, பலகையில் சிவப்பு விளக்கு ஒன்றை ஏற்றிவிட்டு பம்ப்பை அணைக்கும். பம்ப் அணைந்தபின்னும் அந்த சிவப்பு , ஆரஞ்சு எச்சரிக்கை விளக்குகள் யாராவது பேனலில் இருக்கும் RESET பொத்தானை அழுத்தும் வரை எரிந்த வண்ணமே இருக்கும். ஆனால் கண்ட்ரோல் அறை பொறியாளர்கள் ஒரு விளக்கும் எரியவில்லை என்று அடித்துக்கூறினார்கள்!

பிரச்சினையை திரும்பத்திரும்ப அலசியபோது ஒரு சாத்தியக்கூறு வெளிப்பட்டது. முன் சொன்னதுபோல் எங்கள் கருவியியல் குழு சற்று கட்டுக்கோப்பு மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட குழுவாக இருந்து வந்ததால், நான் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டிருந்த இந்த தருணத்தை, எங்களுக்கு ஒரு பாடம் புகட்டும் வாய்ப்பாக கட்டுப்பாட்டு அறைக்காரர்கள் பயன் படுத்தலாம் என்பதுதான் அது! ஒவ்வொரு முறையும் அவர்களே அழுத்தத்தை அதிகரித்து, பம்ப் அணைந்தவுடன், ரீசெட் பொத்தானை அழுத்தி சாட்சியங்களை அழித்துவிட்டு எங்களை கூப்பிட்டு பழுது பார்க்கச்சொல்லி விட்டு பின்னால் இளம் இஞ்சீனியரான நான் தடுமாறுவதை பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்களோ என்ற சந்தேகம் எங்கள் குழுவுக்கு வந்தது. அப்போதெல்லாம் கட்டுப்பாட்டு அறைக்கு செக்யூரிட்டி வீடியோ போன்ற எதுவும் கிடையாது. அழுத்தம் எவ்வளவு இருந்தது என்று தொடர்ந்து வரைபடங்களில் (Graph) அச்சடித்து கொடுக்கும் கணினி வசதிகளும் இல்லை. எங்களில் ஒருவர் அங்கேயே உட்கார்ந்திருப்பதும் உதவாது. நாங்கள் இருக்கும் வரை பம்ப் ஒழுங்காக ஓடினாலும், நாங்கள் கழிப்பறைக்கு போகும்போது கூட பம்ப் நின்று போகலாம். என்னுடைய 14 நாள் ஷிப்ட் முடிய இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தது. என்னதான் செய்வது?

நிறைய யோசித்த நான், எங்கள் குழுவிடம் கூட சொல்லாமல், ஒரு எலிப்பொறியை அமைக்க தீர்மானித்தேன். திரும்ப கட்டுப்பாட்டு அறைக்கு போய், அந்த மின்னணுவியல் பேனலின் பின்புறம் சென்றேன். பேனலின் பின்புறம் என்பதே ஓரிரண்டு பேர் நடக்கும் அளவுக்கு இடம் கொண்ட 40 அடி நீளம் உள்ள எங்கு பார்த்தாலும் மிகச்சிக்கலான வயரிங்க் அமைப்புகள் கொண்ட சுரங்கப்பாதை (tunnel) போல இருக்கும். அங்கே அந்த பம்ப்பின் 1800 PSI அழுத்தத்தை உணர்ந்து செயல்படும் உணர்வியில் இருந்து வரும் சமிக்ஞையை முன்னால் பேனலில் உள்ள விளக்குக்கு போவதற்கு இணையாக பேனலுக்கு பின்னால் இன்னொரு விளக்குக்கும் போகும்படி ஒரு புதிய இணைப்பை ஏற்படுத்தினேன். அதற்காக நான் உபயோகித்தது படத்தில் உள்ளது போன்ற சிறிய சிவப்பு விளக்கோடு கூடிய ஒரு ரிலே. ஒரு வேளை எண்ணை அழுத்தம் மிக அதிகமாகி பம்ப் அணைந்து போனால், கட்டுப்பாட்டு அறை பொறியாளர்கள் பேனலின் முன் பக்கம் எழும் relayஎச்சரிக்கை ஒலியையும், சிவப்பு விளக்கையும் RESET பொத்தானை அழுத்தி கேன்ஸல் செய்து விட்டாலும், பேனலின் பின்புறம் நான் அமைத்த ரிலேயின் சிவப்பு விளக்கு RESET ஆகி விடாமல், ஆனால் ஒலி ஏதும் எழுப்பாமல் எரிந்து கொண்டே இருக்கும்! பேனலுக்கு பின் இது போன்ற விளக்குகளும் ரிலேக்களும் டஜன் கணக்கில் உண்டு என்பதால், நான் சுட்டிக்காட்டி விளக்கினாலோழிய இது யாருக்கும் புரியாது.

எலிப்பொறியை அமைத்துவிட்டு திரும்ப எங்கள் ஆய்வகத்துக்கு வந்து பொறுமையாய் காத்திருந்தேன். என் 14 நாள் ஷிப்ட் முடிய இன்னும் ஒரு நாள்தான் பாக்கி இருந்தது. அதற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டினால் சற்று நிம்மதியாக இருக்கும். பார்ப்போம் என்று காத்திருந்த அன்று மதியம் பம்ப் திரும்பவும் நின்று விட்டதாய் தொலைபேசி வந்தது. கட்டுப்பாட்டு அறைக்கு கிளம்புவதற்கு முன், இந்த பிரச்சினையினால் சோர்ந்து போயிருந்த என் குழுவை கூட்டி, நான் அமைத்துவிட்டு வந்த பொறியை விவரித்தேன். பொறி இயங்கும் விதம் புரிந்தவுடன் அனைவருக்கும் ஜிவ்வென்று ரத்த அழுத்தம் ஏற, எனக்கு முன்னால் பாய்ந்துகொண்டு என் குழுவைச்சேர்ந்த ஏ.கே. மொகந்தியும், சைகோங்கரும் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தார்கள். அன்றும் வழக்கம்போல் கண்ட்ரோல் பேனலின் முன் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விளக்கையும் காணோம். அங்கிருந்த பொறியாளர்கள் ஒரு சமிக்ஞையும் வரவில்லை என்று சாதித்தார்கள். அப்படியா என்று கேட்டுக்கொண்டு, நாங்கள் மூவரும் சேர்ந்து பேனலின் பின் புறமாக போய் நான் அமைத்திருந்த பொறியை பார்த்தோம்.

ரிலே அமைப்பில் இருந்த அந்த குட்டி விளக்கு சிவப்பாக ஒளிர்ந்து கொண்டிருந்தது!
(தொடரும்)

Series Navigationஎண்ணெய்யும் தண்ணீரும்: அரபிக்கடலிலோர் அர்த்த ராத்திரியில்..எண்ணெய்யும் தண்ணீரும்: அவதாரங்கள்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.