முகப்பு » உலக அரசியல், சமூகம், தீவிரவாதம், மகரந்தம்

குளக்கரை


வாடிகன் நகர இழிதொடர்பு

pope-francis-Sex_Slavery_Human_Trafficking_Rome_Women_Females_Christinity_Jesus_Bible_Italy_Vatican

அன்பு மார்க்கத்தின் ஒரு பாதையினருக்கு உலகத் தலைமை கொடுக்கும் அமைப்பு உள்ள மாநகரம், பண்டை உலகத்தின் பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்றுக்குத் தன் பெயரைக் கொடுத்துதவிய மாநகரம் ரோம். அந்த நகரின் இருண்மையான பகுதிகள் பல. உதாரணமாக, அங்கு சுற்றுலாப் பயணிகள் தம் பர்ஸ்கள், கைப்பைகள், பெட்டிகளைப் பரம ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும். கண்ணிமைப்பதற்குள் திருடு போய்விடும். எனக்குத் தெரிந்தவர் ஒருவருக்கு மின் தூக்கியில் சில மாடிகள் கீழிறங்கிப் போய் கதவு திறந்து வெளியே போன பிறகு தெரிந்தது அவரது பர்ஸ் காணாமல் போய்விட்டது என்று. அத்தனை சுருக்கத் திருடி விட்டார்கள் அந்த லிஃப்டில் கூடப் பயணித்த பெண்கள். படாத பாடு பட்டு ஊருக்குத் திரும்பினார். போன பர்ஸ் போனதுதான். அதே போலப் பல கதைகளை அப்புறம் கேட்டாராம்.

இந்த மாநகரத்தில் அன்பு மார்க்கத் தலைமைப் பீடம், பல அரும் பொருள் காட்சியகங்கள், சாம்ராஜ்யத்தின் சிதைவுகள், பெரும் கட்டடங்களைத் தவிரப் பிரபலமானது உடல் விற்பனை. ஆம் உலகத்தின் மிகப் பழைய தொழில் எனப்படும் வணிகப் பாலுறவு. நகரில் உள்ள சில பகுதிகளில் தெருக்களில் எங்கும் ரகம் பிரித்து நின்று வாணிபம் நடக்கிறது. இதை அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்கிறார்கள். அரசு ஜெர்மனியின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை ஒதுக்கி அதில் வாணிபம் நடத்துங்கள், அரசுடைய கண்காணிப்பில் நடக்கட்டும், அப்போது வாணிபம் சிறுவர், நலிந்த பெண்கள் போன்றாரைக் கொடுமைப்படுத்தித் தொழிலில் ஈடுபடுத்தாது என்று கருதுகிறதாம்.

கதோலிக்க சர்ச் இது தம் அமைப்புக்கே களங்கம் என்றும் தலைமை உள்ள மாநகரை இப்படி அவமதிப்பதா என்றும் பொங்குகிறதாம். பெண்ணுரிமை வாதிகள் என்ன பூச்சுப் பூசினாலும் பெண்களை அடிமைப்படுத்தும் வன்முறையாளரே இதில் லாபம் காண்பர். அரசால் அப்படி ஒரு வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாது என்று சண்டைக்கு வருகின்றனராம்.

http://www.thedailybeast.com/articles/2015/02/10/rome-s-new-open-air-markets-for-sex.html


இங்கிலாந்தில் பேச்சுரிமை

OSFL_Oxford_Students_For_Life_Cambridge_England_University_Abortion_Debate_Free_Speech

இப்போது பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இந்திய வரலாறு, மானுடவியல் ஆகியவற்றில் கண்ட குப்பைகளையும் (மார்க்சியர் எழுதியதால்) பிரசுரித்து மகிழ்ந்து கொண்டிருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் வந்தது வேட்டு. பேச்சு சுதந்திரம் கேட்டு கருக்கலைப்புக்கு எதிராகக் கருத்தரங்கம் ஒன்றை நடத்த விரும்பியவர்களை அங்கிருந்த பெண்ணுரிமை இயக்கத்தினர் அச்சுறுத்தி அந்தப் பல்கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாம். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும் என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு. இப்போது பெண்ணுரிமைக்காரர்களுக்குக் கொட்டியது தேள்- அதுவும் சாதா தேள் இல்லை, எவாஞ்சலியத் தேள் போலத் தெரிகிறது. இப்போது நம் ஊர் பேச்சுரிமை இயக்கத்தினர் ஆக்ஸ்ஃபோர்டுக்கும் போய் போராட்டம் நடத்துவார்களா என்று பார்க்க வேண்டும்.

http://www.spiked-online.com/freespeechnow/fsn_article/oxford-abortion-and-the-closing-of-the-western-mind#.VN_zPPnF8y4


கல் மனதிருந்தால் படிக்கவும்

A member loyal to the ISIL waves an ISIL flag in Raqqa

அமைதி மார்க்கத்தின் ஒற்றை வழியில் கிட்டும் பயங்கரக் காட்சிகள் மனச்சாட்சியுள்ள எவரையும் உலுக்கும். ஆனால் மதம் என்ற பிணியில் சிக்கிய எந்தக் குழுவுக்கும் தம் அணியின் பயங்கரங்கள் புலப்படுவது கடினம். அமைதி மார்க்கமோ இந்த மாதிரிப் படுகொலைகளைத் தன் துவக்க காலத்திலிருந்தே செய்து வந்திருக்கிறது. அடார்னோ போன்றார் மொழியின் இருண்மை குறித்து நம்மை எச்சரித்தது சரிதான். அமைதி மார்க்கம் என்று பெயரைச் சூட்டி விட்டால் என்ன பயங்கரத்தையும் செய்து விட்டு, எளிதாகக் கடந்து விடலாம் போலிருக்கிறது. இந்தக் கடப்பு நடத்தத்தான் எத்தனை அறிவாளிகள், எத்தனை நாடுகளில், எத்தனை சாக்கு போக்குகள். ஆனால் படுகொலைகளும் அழிப்பும் மட்டும் காகிதப் பொய்களின் அடர் திரைக்குப் பின்னே பற்பல நாடுகளில் தொடர்கின்றன. ஒரு புறம் நைஜீரியாவில் போகொ ஹராம் தினம் சில நூறு பேரைக் கொன்று குவித்தால், இன்னொரு புறம் ஐஸிஸ் என்னும் படுபாதகக் கும்பல் தன் பங்குக்கு உலகின் மனிதத் தொகை எனும் பாரத்தைக் குறைக்க விடா முயற்சி செய்கிறது. இங்கே பல நாட்டு ‘நிபுணர்கள்’ நிலைமையை ஆய்ந்து விட்டுக் கண்ட முடிவுகளைக் காணலாம். சிறுபான்மையினர் (அதாவது இஸ்லாம் அல்லாத மதத்தைச் சார்ந்தவர்கள்) தொடர்ந்து தாக்கிக் கொல்லப்படுவதோடு, அவர்களின் சிறுவர்களை உயிரோடு புதைப்பது, அங்கஹீனம் செய்வது ஆகியவற்றை ஐசிஸ்/ ஐசில் செய்திருக்கிறது. பெண் குழந்தைகளை ஆடுமாடுகள் போல அடையாளச் சின்னமிட்டு, சந்தைகளில் பாலுறவுக்கு அடிமைகளாக விற்றிருக்கிறது. மேலும் என்ன கொடுமைகள் என்பதை அறிக்கையில் படியுங்கள்.

http://in.reuters.com/article/2015/02/04/mideast-crisis-children-idINKBN0L828E20150204

இப்படி ஒரு இயக்கம் எப்படி எழுந்தது, இதற்குப் படையாட்கள் எப்படிக் கிடைக்கிறார்கள். சில பொய்ச் சாக்கு சொல்லும் அறிவு சீவிகள் சொல்வது போல இது மார்க்கத்துக்கு எதிரானது என்பதெல்லாம் உண்மையா? ஒரு மார்க்கத்து எழுத்தாளர் (பெயரை வைத்து ஊகம் இது) உண்மை என்னவென்று இங்கு விளக்குகிறார்.

http://www.theguardian.com/world/2015/feb/08/isis-islamic-state-ideology-sharia-syria-iraq-jordan-pilot


உலகளாவிய பதுக்கல் திரவியம்

Swiss_Leaks_HSBC_India_Tax_Havens_Income_Corruptions_Politics_Finance_Economy_Switzerland

இந்த HSBC வங்கியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரை பேசவே இல்லை. ஏதோ ஸ்விஸ் வங்கி என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து கள்ளக் கணக்கு இருப்பில் 4.50 பிலியன் டாலர்கள்தான் காட்டப்பட்டு இருக்கின்றன. அது நிச்சயம் தவறான தகவலாகத்தான் இருக்கும். மொத்தக் கள்ளப் பணம் சில ட்ரில்லியன் டாலர்களுக்குப் போகிறது. உலகின் அதிகார மையங்கள் எப்படி உலக மக்களை ஓட்டாண்டியாக ஆக்குகின்றன என்பதற்கு இதொரு சான்று. இத்தனைக்கும் இது ஒரு வங்கிதான். எல்லா ஸ்விஸ் வங்கிகள், பல ஆளில்லாத் தீவுகளில் கணனிகளில் பதுங்கி இருக்கும் வெறும் கணக்குப் பணம் எல்லாம் சேர்த்தால் உலகில் ஏன் வறுமை இருக்கிறது என்பதே உடனே விளங்கினாலும் விளங்கும்.

http://indianexpress.com/article/world/world-others/hsbc-sheltered-murky-cash-linked-to-dictators-arms-dealers/


அமைதிமார்க்கத்தின் 'சாதனைகள்'

destroyed_school_Pakistan_Muslims_Female_Children_Kids_Teach_Bombings_Militants_Terrorists_Muslim_Islamabad_Karachi

பெண்களை விடுவித்த ஒரே மார்க்கம் என்று தமிழகத்திலும் இந்தியாவிலும் தக்கியா செய்யும் அமைதி மார்க்கத்தின் அரசியல் பிரச்சாரகர்களுக்கு இந்தச் செய்தியெல்லாம் பொருட்டே அல்ல. அது இந்தியாவா? என்பார்கள்.

இந்தியாவில்தான் சின்னஞ்சிறுமிகளுக்கெல்லாம் தலை முதல் கால் வரை கூடாரத்தைப் போட்டு வெளியில் அனுப்புவது அதிகரித்து வருகிறது, ஆனால் ஏதோ ஏழு எட்டு வகுப்பு வரை படிக்க விடுகிறார்கள். கல்லூரிப் பெண்களெல்லாம் துணிக் கூடாரத்தில் வருவதைப் பார்க்கும்போது கல்விக்கும் அறிவுக்கும் தொடர்பை எதிர்பார்க்கக் கூடாதென்பதும் புரிகிறது.

அதற்கும் இந்திய இடதுசாரிகள் பலபண்பாட்டியம் என்று பதுங்கிக் கொண்டு தம் ஆதரவை அளிப்பார்கள். இந்துக்களுக்கு மட்டும்தான் பல பண்பாட்டியம் என்ற ஆதரவு கிட்டாது, அந்த சமயம் ஒன்றைத்தான் அழித்துக் கரியாக்க வேண்டும்- அத்தனை தாராள மனது இந்திய முற்போக்குகளுக்கு. தார் பூசுவது என்பதோ அவர்களுக்கு நூறாண்டுப் பழக்கம், போகுமா சுலபத்தில்?

இங்கே இந்து பாசிஸத்துக்குத் தொடர்பில்லாத ஒரு பிராந்தியத்தில், பூரண சுதந்திரம் நிலவுகிறது அந்த நாட்டில், இந்தியாவில் வாழ்வதை விட அங்கு வாழ்வதே மேல் என்று சூஸான்னா ராய் சொன்னாரே, அதே நாட்டில், பெண்கள் பள்ளிகளுக்கு குண்டு வைத்துத் தகர்ப்பதைத் தம் கடமையாகக் கொண்டிருக்கின்றனர், அமைதி மார்க்கப் போராளிகள். இந்தியாவில் கும்மட்டத்தைத் தகர்த்ததில் இருந்துதான் பாகிஸ்தானிலும், இரானிலும், இராக்கிலும், லிபியா, சிரியா, நைஜீரியா என்று பற்பல நாடுகளிலும் அமைதி மார்க்கத்தினர் போராளிகளாகி இருக்கின்றனர் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் இந்திய முற்போக்குகளுக்கு உறுதியாகத் தெரியும். அடுத்த சில மாதங்களில் இப்படி ஒரு புத்தகத்தைத் தயாரித்துப் பிரசுரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தானில் இன்னுமொரு சிறுமியர் பள்ளி தகர்க்கப்பட்டிருக்கிறது.

http://indianexpress.com/article/world/asia/militants-blow-up-pakistan-girls-school/


திரைப்படத்தில் பார்த்த தெய்வங்கள்

Thor_iceland_Worship_norse_temple_Paganism

இப்போது யூரோப்பில் பரவலாகத் தெரிய வரும் சொல் – பாகனியம். Paganism. எப்போதோ கிருஸ்தவம் தன் இரும்பு ஆணி கொண்ட காலணிகளால் நசுக்கிக் கொன்றுவிட்ட ஒரு இசம் இது. ஆனால் குற்றுயிரும் குலையுயிருமாகப் பல மூலைகளில் இருந்திருக்கிறது. சமீபத்து ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களின் உபயமா அல்லது உலகில் பெரும் பணபலத்துடன் பரப்பப்படும் எவாஞ்சலியக் கிருஸ்தவத்துக்கு ஒரு எதிர் வினையா என்று சொல்ல முடியவில்லை. ஐஸ்லாந்தில் மறுபடி பழைய பாகன் தெய்வமான தோர் என்பாருக்குப் பெரும் செலவில் ஆலயம் ஒன்று கட்டப் போகிறார்களாம். இதில் இந்த இசத்தில் சேர்பவர்கள் தமக்குப் பிடித்த மாதிரி, நாட்டுச் சட்டங்களை மீறாதபடிக்கு, வழிபாடு செய்து கொள்ளலாமாம். தனி நபர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும் மதம் இது என்று இதன் ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். ஹ்ம்.. எத்தனை மதங்களை இதைப் போலப் பார்த்திருக்கிறோம். சீக்கிரம் ஒரு பாதிரிக் கூட்டம் இதைக் கைப்பற்றி, மடமொன்றை நிறுவி, புனிதப் புத்தகம் ஒன்றை எழுதி, நம்பிக்கையாளருக்குச் சட்டதிட்டங்கள் எல்லாம் கொண்டு வந்து விடும். அதற்குச் சில பத்தாண்டுகள் ஆகும் அதுவரை சும்மா அனுபவிங்கடா!

http://www.thedailybeast.com/articles/2015/02/05/why-iceland-is-building-a-temple-to-its-pagan-gods.html


கருத்து சுதந்திரம்

Turkey_PKK_Dutch_Journalist_Terrorsim_Charges_Freedom_Speech_Netherlands_Reporter

நம் பேச்சு/ கருத்து சுதந்திரப் போராளிகளின் அபிமானக் குழுவான இஸ்லாமிசக் கும்பல் இப்போது தேசச் சட்டத்தின் வழியே பத்திரிகை சுதந்திரத்துக்கு வாயில் துணியை அடைக்கிறது. இப்போதும் தமிழகப் போராளிகள், குறிப்பாக புத்தகத்தைக் கையில் ஏந்திப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமுமுக- வஹ்ஹாபிசக் கொழுந்து- தலைவர் தெருவில் இறங்கி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தம் சுதந்திர தாகத்தைத் தீர்த்துக் கொள்வாரா என்று கேட்கலாம்.
துருக்கி ஒரு டச்சு பத்திரிகையாளருக்கு – அவர் குர்துக்களின் போராட்டக் குழுவுக்கு ஆதரவாகச் செய்திகளை வலைத் தளத்தில் வெளியிட்டதற்காக, பயங்கரவாதத்துக்கு ஆதரவாளர் என்ற பெயரில் சிறை தண்டனை கொடுக்கச் சொல்லி நீதி மன்றத்தில் தாக்கீது செய்திருக்கிறார். மாலெ கும்பல்களுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவு சீவிகள் ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து மத்திய அரசின் காவல் அமைப்புகள் வழக்கு பதிவு செய்தபோது கருத்து சுதந்திரத்துக்காகப் போர்க்குரல் கொடுத்த அதே கூட்டம் இப்போதும் குரல் கொடுக்கிறதா என்று பார்க்க வேண்டும். இஸ்லாம் எது செய்தாலும் வாலைச் சுருட்டிக் கொண்டு பதுங்குமே இந்திய இடது, இப்போது வால் இருக்கிறதா என்று தேடும்படி இருக்குமோ?

http://www.theguardian.com/world/2015/feb/02/indictment-dutch-journalist-turkey-press-frederike-geerdink

கூடவே ஒரு கொசுறு. கிருஸ்தவத்தின் சொர்க்கம் எப்படி ஒரு தாங்க முடியாத நரகமாகத்தான் இருக்க முடியும் என்று ஒருவர் கட்டுரை எழுதுகிறார். இவர் வாயை அமெரிக்கக் கிருஸ்தவம் எப்போது அடைக்கப் போகிறதோ!

http://www.salon.com/2015/02/01/10_reasons_christian_heaven_could_actually_be_hell_partner/


இரான் - இஸ்லாம் - இடதுசாரி

Hebdo_charlie_memorial_cartoon_Islam_Candles_Muslim_Left_Iran

இடது சாரிகளுக்குப் பார்க்கக் கூட முடியாத அமைதி மார்க்கத்தின் ‘அன்பு வழி’க் கொலைகள், தூக்கு தண்டனைகள், கழுத்தறுத்தல்கள் இத்தியாதிகள் பற்றி எத்தனை எழுதினாலும் ஒன்றும் பயனிராது. ஏனெனில் கருத்துக் குருட்டுத்தனத்துக்கு ஒரே மருந்து எதை அவர்கள் பார்க்க மறுக்கிறார்களோ அதாலேயே அல்லது அதன் கீழேயே அவர்கள் மாட்டிக் கொள்வதுதான். இரானிய இடது சாரியினரைக் கேளுங்கள். ஷா என்ற அமெரிக்க ஏஜெண்டை ஒழிக்க இரானிய இடது சாரியினர் அமைதிமார்க்கத்தினரோடு கூட்டு சேர்ந்தனர். அதிகாரத்திடம் உண்மையைப் பேசு என்று முழங்கி விட்டு அமெரிக்கப் பல்கலைகளில் சௌகரியமாகப் பாடம் போதித்துக் கொண்டிருந்த பூகோ அமைதிமார்க்கத்தின் இரானியத் தீச்சுடர்கள் பதவி ஏற்ற போது மக்களாட்சி மலர்ந்தது என்று மகிழ்ந்து கொண்டிருந்தார். கொஞ்ச மாதத்திலேயே கொமைனியின் கருஞ்சட்டை அணியினர் இரானிய இடது சாரிகளுக்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டினர். ஆயிரக்கணக்கான இரானிய இடதுலக் சாரியினர் விளக்குக் கம்பங்களில் கயிறில் பிணமாகத் தொங்கினர் என்பது வரலாறு.

http://www.dissentmagazine.org/article/islamism-and-the-left

http://www.trykkefrihed.dk/khomeini-and-the-blindness-of-the-left.htm

ஆனால் உலக இடதுகளுக்கு என்னென்னவோ அந்தர் பல்டி எல்லாம் அடித்து தம் கட்சிதான் சரி என்று சொல்லத் தெரியும். உயிரை விட்டதென்னவோ ஏமாந்த சோணகிரி இரானிய இடதுசாரிகள். ஆனால் தாம் முன்னரே இதை எல்லாம் ஊகித்து விட்டதாக மார் தட்டிக் கொண்டு கட்டுரை எழுதுவது யூரோப்பிய இடது சாரிகள்.

http://www.internationalist.org/iranandleft7904.htm

அதற்கு லெனின், மாவொ, க்ராம்ஸ்சி, புகாரின் … எத்தனை நாம சங்கீர்த்தனம்! இந்த பஜனை கோஷ்டிகளுக்கு புரந்தரதாசர், கபீர், துளசிதாஸர் என்று யாராவது பஜனை பாடினால் இளக்காரம், பிற்போக்கு என்று அவர்களை அந்தகாரத்தில் தள்ளும் முயற்சி. பஜனை கோஷ்டிகளில் கொலை வெறி இல்லாத பஜனை கோஷ்டிகள் எத்தனையோ தேவலை என்பது புரியாத இந்திய இடதுகளும் இரானிய இடதுகள் போலவே இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு அடிவருடிகள்தாம். அவர்களும் இன்னும் ஸ்டாலின், மாவொ, சே குவெரா, போன்ற கொலைபாதகர்களின் நாம சங்கீர்த்தனத்தை விட்டு விடவில்லை என்பது மூடபக்திக்கு முடிவே இல்லை என்பதை நமக்குச் சுட்டுகிறதன்றோ.

http://platypus1917.org/2010/02/18/30-years-of-the-islamic-revolution-in-iran/

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.