kamagra paypal


முகப்பு » இசை

டிசம்பர் நாற்காலிகள்

மறுபடி டிசம்பர் வந்துவிட்டது. சபா சபாவாகத் தாவி நானாவிதமான டிபன் சாப்பிடும் வேளை. பாட்டுப் பாடும் வித்வான்கள் போலவே நாமும் ஒரு மாதம் முன்பிருந்தே சீஸனுக்காகத் தயார் செய்ய வேண்டும் என்பது பல ரசிகர்களுக்குத் தெரிவதில்லை. நான் நவம்பர் முதலே ஓம வாட்டர் எல்லாம் குடித்து வயிற்றைப் பக்குவப் படுத்தி வைத்திருக்கிறேன்.

வழக்கமாக இளைஞர்கள் நடமாடும் அடையாறு யூத் ஹாஸ்டலில் ஹம்ஸத்வனி கச்சேரிகளை நடத்துவதால், பதினைந்து நாளாக இங்கே ஒரே அப்புசாமி – சீதாப்பாட்டி கூட்டமாக இருக்கிறது. மார்கழி மகா உத்ஸவம் இந்த முறை கட்சி மாறி சன் டிவிக்குப் போய்விட்டது. இந்த venue -வில் ஒரு பிரச்சினை: கச்சேரி எல்லாம் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் சாப்பிடத்தான் ஒன்றும் கிடைக்காது. ஒரு ஐஸ்க்ரீம் கப்பில் ஒரு பிடி சுண்டல் கொடுத்து டாட்டா காட்டிவிடுகிறார்கள்.

ar

இனி, கொஞ்சம் சங்கீதம் : அபிஷேக் ரகுராமின் குரல் பிசிறு குறைந்து காத்திரம் மிகுந்து ஸ்பஷ்டமாக ஒலிக்கிறது. யாரோ voice training கொடுக்கிறார்கள் என்று பலமாக சந்தேகிக்கிறேன். டக்கா, வர்த்தனி, ரஸாளி, போன்ற ராகங்களில் எல்லாம் ஆலாபனை சகிதம் புகுந்து விளையாடுகிறார். அபிஷேக், மில்க் ஷேக் !

அதே ஹம்ஸத்வனியில் மற்றொரு நாள் நித்யஸ்ரீ. இவர் குரலில் வயசுக்கு மீறிய முதிர்ச்சி தெரிகிறது. Maturity என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை; கே.பி சுந்தராம்பாள் போன்ற வயோதிகர்களுக்கே உரிய நளினக் குறைவு. சமயத்தில் சங்கதிகளைக் குறடு வைத்துப் பிடுங்க வேண்டியிருக்கிறது. மேடையிலும் – தம்பூரா சிஷ்யை தவிர – பக்க வாத்தியர் அனைவருக்கும் மாநில கவர்னர் ஆக வேண்டிய வயது. நித்யஸ்ரீ யாராவது இளம் ஆசிரியர்களிடம் நவீனக் குரல் வளப் பயிற்சி எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

ஆனால் அன்றைக்கு அவர் பாடிய மோகன ராக ஆலாபனையில் மகா வித்வான்களுக்கே உரிய செய் நேர்த்தி மிளிர்ந்தது. நிச்சயம் திறமைசாலி. சும்மாவா – நித்தி, யாருடைய பேத்தி !

*

thamizh_padham

சஞ்சய் சுப்ரமணியம், கட்டபொம்மன் மீசை வைத்திருந்த காலத்திலிருந்தே கடும் ஹோம் ஒர்க் செய்துவிட்டுத்தான் மேடை ஏறுவார். இந்த முறை அவருடைய தீம்: பழைய தமிழ்ப் பாடல்கள். சஞ்சயின் குரலில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வசீகரிக்கிறது:

“தந்ததுக்கும் நீர் வந்ததுக்கும் கணக்கு சரி பார்த்துத்தான் அழைத்தேனோ ?” (பாப விநாச முதலியார்). ஏதோ கோபத்தில் இருக்கும் சிவனை “விடுவிடுப்பென்ன, கடுகடுப்பென்ன, விழி சிவப்பென்ன, தலை அசைப்பென்ன” என்று சரமாரியாக சதாய்க்கிறார் முதலியார். அடுத்து “மனதறியாமல் மையல் கொண்டேன் – மையலுக்கு என்ன பயன் கண்டேன் ?” என்ற முத்துத் தாண்டவர் கிருதி.

கவிக் குஞ்சர பாரதியின் “எல்லாம் அறிவேன் போமையா தேவரீர்” வரையில் புரிந்தது. அதற்குப் பிறகு எவ்வளவு சங்கதி பாடினாலும் வார்த்தைகள் பிடி படவில்லை. சனா-சுனா கொஞ்சம் lyrics mincer தான். டவர் சரியாகக் கிடைக்காத இடத்தில் செல்ஃபோன் உரையாடல் போல வார்த்தைகளைத் தேய்த்து மறைக்கிறார்.

பதம் என்கிற வகையைச் சேர்ந்த இந்த நடனப் பாடல்களை எங்கெங்கிருந்தோ தேனீ மாதிரி சேகரித்திருக்கிறார் சஞ்சய். ஒரு வருடமாக இதற்காக ரிஸர்ச் பண்ணியிருக்கிறார் என்றார்கள். Dedicated guy !

ஆனால் இந்த மாதிரி theme based கச்சேரிகள் என்றாலே ஒரு செயற்கையான நிர்ப்பந்தத்துக்குள் அடங்கிப் போய், அவசரத்தில் தம்பியின் சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டது போன்ற ஒரு அசௌகரியம் இருக்கிறது. ப்ரோவ, ப்ரோச்சே எல்லாம் இல்லாமல் கச்சேரியா ?

*

photophoto (1)

வாணி மகாலின் வெளி வராந்தாவில் கிஞ்சித் இடத்தில் ஒட்டிக்கொண்டு இருந்தாலும் ஞானாம்பிகாதான் சீஸனின் ஃபேவரைட். ஒரு வெள்ளிக் கிழமையன்று தலை வாழை இலை போட்டுக் கல்யாண சாப்பாடு. கதம்ப சாம்பார், நாக்கை மழ மழக்காத வெண்டைக்காய் மோர்க் குழம்பு, கண்ட மசாலாவும் நாறாத ஒரிஜினல் கும்பகோணம் உருளைக் கிழங்கு பொரியல், பூர்ண சந்திரன் போல் பொரித்த அப்பளம். இன்ன வெஜிடபிள் என்று கடைசி வரை கண்டே பிடிக்க முடியாத மர்மக் கூட்டு – ஆனால் அதுவும் சுவையாகத்தான் இருந்தது. கும்பகோணம் கொழுந்து வெற்றிலையில் செர்ரிப் பழம் செருகின பீடா.

சாப்பிடப் போன இடத்தில் பகவத் கிருஷ்ணனின் கீ போர்டு கச்சேரி என்று பார்த்துவிட்டு மதியம் ஒரு மணிக் கச்சேரி ஒன்றுக்குள் நுழைந்தேன். ஹாலில் என்னையும் தன் பெற்றோரையும் சேர்த்து ஐந்தே பேர் இருப்பதைப் பொருட்படுத்தாமல் வாசிக்க ஆரம்பித்தான் சிறுவன். முதல் பாட்டிலேயே ‘அட !’ என்று தோன்றியது.

கீ போர்டு போன்ற மேல் நாட்டு வாத்தியங்களில் ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் மட்டும்தான் வாசிக்க முடியும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. கர்நாடக இசைக்கே உரிய கமகமகங்கள் எல்லாம் வராது என்பதே காரணம். ஆனால் இப்போது வரும் இந்திய கீ போர்டுகளில் வீணை, தபலா தவிர pitch bender எனப்படும் கமகச் சக்கரம் உண்டு. அதை உண்டு செரித்து அநாயாசமாக ஜகதோத்தாரணாவையும் நகுமோமுவையும் வாசித்தான் கிருஷ்ணன்.

மத்தியானக் கச்சேரிகளுக்கு ஒரு பத்துப் பேராவது வாருங்களேன், ப்ளீஸ் !

*

priya_sisters

(படம் நன்றி: தி ஹிந்து)

ப்ரியா சகோதரிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு dilemma: சின்னப் ப்ரியாதான் நன்றாகப் பாடுகிறார். அக்காவை அநாயாசமாக டாமினேட் செய்கிறார். ஆனால் பெரிய ப்ரியாதானே, கச்சேரி மேடைக்குப் பாந்தமான கூந்தல் வைத்திருக்கிறார் ?

யூத் ஹாஸ்டலில் ரீதி கௌள, வசந்தா, சிந்து பைரவி என்று பாதுகாப்பான பவுண்டரிக்குள் நின்றுகொண்டு பாடினார்கள். கடைசியில் ஒரு ரசிகை பவுன்சர் கேள்வி கேட்டார் : ஒரே நிமிடத்தில் ஏழு ராகங்களில் ஆலாபனை செய்ய முடியுமா ? பாப் கட் ப்ரியா அநாயாசமாக பத்துப் பத்து செகண்டுக்கு ஒரு ராகமாக விளாசினார். ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர். பாப்ரே, பாப் !

ப்ரியாஸ் உட்பட எல்லோரிடமும் ஒரு விண்ணப்பம்: கொஞ்சம் கூடக் கவிதை உணர்ச்சியோ, பாவமோ இல்லாமல் ‘பிறவா வரம் தா, முருகா, மால் மருகா, மயில் வாகனனே’ என்று மரக் கட்டையாக வார்த்தைகளைக் கோர்த்துப் பாட்டெழுதும் பண்டிதர்களின் banality யிடம் இருந்து கச்சேரி மேடையை விடுவிக்க மாட்டீர்களா ?

இது நடக்க வேண்டுமென்றால், வித்வான்கள் சங்கத்தில் தீர்மானம் போட்டு அசட்டுப் பாடல்களைப் புறக்கணிக்க வேண்டும். நம் சங்கப் பாடல்களில் இல்லாத கவித்துவமா ? பக்திப் பாட்டுதான் பாடுவேன் என்றால், ஆழ்வாரிலும் நாயன்மாரிலும் சொட்டாத பக்தியா ?

*

news_89201364310

ஜில்பாக் குடுமி வைத்த ஐரோப்பியர்கள் நடமாடும் ஹரே கிருஷ்ணா வளாகம். வழக்கமாக இங்கே இரான் போல எண்ணை வளம் மிகுந்த பஜ்ஜிதான் கிடைக்கும். இந்த முறை க்ருஷ்ண ப்ரசாதம் என்று லட்டு, தேன் குழல், தட்டை வைத்திருந்தார்கள். (தொடாதீர்கள். க்ருஷ்ணப் பிரசாதத்தைக் கடித்த என் பல், இன்னும் வலிக்கிறது).

கடல் இரைச்சல் பின்னணியில் ஒலிக்க, அருணா சாயிராமுக்குக் கூட்டமான கூட்டம். கர்நாடக சங்கீதத்துக்கு மாமியின் சாரீரம் ஒத்துழைக்க மறுக்கிறது. ஸ,ரி,க,ம,ப,த,நி ஏழு ஸ்வரத்தையும் ஒரே frequency-ல் உச்சரிக்கிறார். அதட்டலான அதட்டல் ! ப்ருந்தாவன சாரங்காவில் வழக்கமான அபங்கைக் கைவிட்டு, குரு நானக்கின் அழகான பஞ்சாபிக் கிருதி ஒன்று பாடினார். இது போன்று மடக்கி மடக்கிப் பாடும் வடக்கத்தியப் பாட்டெல்லாம் இவர் குரலில் எடுப்பாகத்தான் இருக்கிறது.

வயலின் ராகவேந்திரா, கீழ்த் தந்தியில் கேள்வி கேட்டு அதற்கு அவரே மேல் தந்தியில் பதில் சொல்லித் தனி ஆளாக ஒரு ஜுகல் பந்தியே செய்துவிட்டார் !

மிருதங்கம் வைத்யநாதன், கடம் கார்த்திக். தனி ஆவர்த்தனத்தின் போது கூட ரசிகர்கள் எழுந்து போகாமல் அமர்ந்து கேட்டார்கள். இரண்டு பேரும் ஒத்துழைத்து உச்ச கட்டத்துக்கு டேக் ஆஃப் செய்தபோது சபையில் “ஆ.. ஆ!” என்று ஆச்சரியக் குரல் எழுந்தது.

saidavi

மற்றொரு தினம், அதே அரே கிருஷ்ணாவில் அபிஷேக் ரகுராமின் நிகழ்ச்சிக்கு அரை மணி முன்னால் போய் இடம் பிடிக்க வேண்டி இருப்பதால், சைந்தவி கச்சேரியின் வால் பகுதி கேட்கக் கிடைத்தது. இன்னும் வித்வான்களால் கெடுக்கப்படாத இனிமையான குரல். கிருஷ்ணா நீ பேகனேயை அருமையாகக் குழைத்தார். சைந்தவி மட்டும் சினிமாக்காரர்களால் குட்டிச்சுவராக்கப்படாமலிருந்தால் (எவ்வளவு நீண்ட வார்த்தை !) ஒரு நாள் நல்ல பாடகியாக வரக் கூடும்.

அபிஷேக்குக்குப் பதுங்கிப் பாய்வதில் நம்பிக்கை இல்லை. திரை விலகிய கணத்திலேயே ‘வலசி வலசி’ என்று ராகமாலிகையில் இறங்கி ஒவ்வொன்றுக்கும் ஸ்வரம் பாடி வீடு கட்டி அடித்தார். சொகசுகா ம்ருதங்க தாளமு உண்மையிலேயே சுகம், சொகுசு ! அந்த ஸ்ரீரஞ்சனியில் அவர் அள்ளி வீசிய ஸ்வரக் கோர்வைக்களுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் அப்ளாஸ் பொரிந்தது. ‘But, please don’t over do it’ என்று யாராவது இவரிடம் எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்.

*

பழங்கால ரோமானியர்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். பெரிய மனிதர்கள் வீட்டில் ஏகப்பட்ட வெரைட்டிகளுடன் விருந்து நடைபெறும். ஆனால் இந்த இடும்பை கூர் வயிற்றின் கொள்ளளவு ஒரு லிட்டர்தான். இந்தப் பிரச்சினைக்கு அவர்கள் கண்டுபிடித்த தீர்வு: ஒவ்வொரு ரவுண்டு சாப்பிட்ட பிறகும் ஒதுக்குப் புறமாக வாஷ் பேசினுக்குச் சென்று…. 🙂

இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால், ஞானாம்பிகாவின் காசி அல்வாவும் வாழைக்காய் பஜ்ஜியும் கக்கிக் கக்கி மறுபடி சாப்பிட வேண்டிய ஐட்டங்கள்.

unni_krishnan

(படம் நன்றி : தி ஹிந்து)

Aggressive-ஆக அடா புடா என்று பாடும் வல்லிசை வித்வான்களுக்கும் சினிமாத்தனமான மெல்லிசைக்கும் இடையிசையில் இருப்பவர் உன்னி கிருஷ்ணன். நின்னுக்கோரியில் துவங்கினார் (the Vasantha version). சாரமதியைப் பிழிந்து சாரம் எடுத்துக் கொடுத்தார். துக்கடாக்களில் மாண்ட், சாமா, சிந்து பைரவி என்று கொஞ்சினார். முக்கால் கச்சேரியின்போது கொஞ்சம் டெம்போ குறைகிறதோ என்று சந்தேகம் எழுந்த வேளையில் ராட்சசத்தனமாக ஒரு தானம் பாடினாரே பார்க்கலாம் ! (பல்லவி: மோகன முரளீதரா) பாதியில் எழுந்து போனவர்கள், பாதி நாற்காலிகளை நிரப்பாமல் காலியாக விட்டு வைத்த ரசிகர்கள் எல்லோரும் பெரிதாக மிஸ் பண்ணிவிட்டீர்கள் !

ஓர் அழகான பூர்வி கல்யாணி ஆலாபனியின் இடையே மூச்சு விடாமல் “ரீ…………………… “என்று இரண்டு நிமிடம் தம் பிடித்தார் உன்னி கிருஷ்ணன். இதற்கெல்லாம் போய் ஆடியன்ஸ் சட சடவென்று கை தட்டுகிறார்களே, அதுதான் புரியவில்லை. ஐந்நூறு தண்டால் எடுப்பது கூடத்தான் கடினம். அதைக் கச்சேரி மேடையில் செய்தால், இசை என்று ஒத்துக் கொள்வார்களா ? ஆர்மோனியத்தின் மேல் C# கட்டையை 120 செகண்டுக்குத் தொடர்ந்து அழுத்தி அந்த ஓசையைக் கேட்டுப் பாருங்கள். என் ரண வேதனை புரியும்.

*

sudha

சென்னையின் சர்க்கரை நோய் துரதிர்ஷ்டர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி: வாணி மகால் பக்கத்திலேயே dezire diabetic sweets என்று இருக்கிறது. குற்ற உணர்ச்சி இல்லாமல் சாக்லேட் பேடா, பனீர் ஜாமூன், இஞ்சி எலுமிச்சை ஸ்க்வாஷ் எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டுங்கள் !

சுதா ரகுநாதனிடம் சீசனுக்கு சீசன் நல்ல வெரைட்டி தெரிகிறது – ஆடை அணிகலன்களில். பாரத் கலாச்சாரில் ஒரு சனிக் கிழமை நாலு மணிக்குக் கச்சேரியை ஆரம்பித்தார். முழுவதும் பொட்டுப் பொட்டாக ஜரிகை போட்ட மயில் கலர் புடவை. கிளிப் பச்சை பார்டர். மன்னார்குடி செங்கமலத் தாயார் போட்டிருப்பது போல் ஏழெட்டு வடமாகத் தங்க அட்டிகை. M வரிசையில் அமர்ந்து பார்த்தால் கூடத் தெரிகிற மாதிரி மூன்று நாலு மோதிரங்கள். காதில் அளவுக்கு மீறிய சைஸில் தொங்கட்டான். அளவான பொட்டு, தலை நிறைய மல்லிகைப் பூ. கை எடுத்துக் கும்பிடலாம் போல் லட்சுமீகரகமாக இருந்தார். ஆறு மணிக்குக் கச்சேரி நிறைவடைந்தது.

3 Comments »

 • aswath said:

  Excellent is the word! RaRa is a combination of Sujatha and Subbudu! Kudos! Should avoid English words in between.

  # 30 December 2014 at 5:14 am
 • raju said:

  சுதா ரகுநாதனிடம் சீசனுக்கு சீசன் நல்ல வெரைட்டி தெரிகிறது – ஆடை அணிகலன்களில். பாரத் கலாச்சாரில் ஒரு சனிக் கிழமை நாலு மணிக்குக் கச்சேரியை ஆரம்பித்தார். முழுவதும் பொட்டுப் பொட்டாக ஜரிகை போட்ட மயில் கலர் புடவை. கிளிப் பச்சை பார்டர். மன்னார்குடி செங்கமலத் தாயார் போட்டிருப்பது போல் ஏழெட்டு வடமாகத் தங்க அட்டிகை. M வரிசையில் அமர்ந்து பார்த்தால் கூடத் தெரிகிற மாதிரி மூன்று நாலு மோதிரங்கள். காதில் அளவுக்கு மீறிய சைஸில் தொங்கட்டான். அளவான பொட்டு, தலை நிறைய மல்லிகைப் பூ. கை எடுத்துக் கும்பிடலாம் போல் லட்சுமீகரகமாக இருந்தார்.

  சுதா ரகுநாதனிடம் சீசனுக்கு சீசன் நல்ல வெரைட்டி தெரிகிறது…..ஆறு மணிக்குக் கச்சேரி நிறைவடைந்தது.
  TOO MUCH…..:)))))))

  # 12 January 2015 at 9:08 am
 • ஜெயக்குமார் said:

  உண்மையில் கச்சேரி சீசன் என ஒன்றை வைத்து அதில் விடாமல் பாடி கலை வளர்க்கும் மக்களுக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிவிட்டு கட்டுரைக்கு வருவோம்.

  விமர்சனம் கலக்கல். இதையெல்லாம் வாசிக்க சங்கீத ஞானம் வேண்டியிருக்கவில்லை என்பதே எவ்வளவு வசதியாய் இருக்கிறது.

  மேடைகளில் பாட வாய்ப்புக்கிடைக்காத நல்ல குரல்களை தேர்வு செய்ய ஏதும் முறை வைத்திருக்கின்றனரா இந்த சபா மேலாளர்கள்.?

  ஒரு டிசம்பரிலாவது இந்த சங்கீத மேடையைச் சுற்றிவர எண்ணம் உண்டு. ஆனால், வாய்ப்புதான் கிடைப்பதில்லை

  # 15 January 2015 at 8:11 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.