kamagra paypal


முகப்பு » இறையியல், இலக்கியம்

பாடுதும் காண் அம்மானை-2

முந்தைய பகுதி

Women_Mirror_Sculpture_India_Arts_Female_See_Women_Architecture_Ancient

கலம்பகங்கள் மட்டுமே அம்மானைப் பாடல்களை உறுப்பாகக் கொண்டவை அல்ல. மற்ற சிற்றிலக்கியங்களான உலா நூல்கள், பிள்ளைத்தமிழ் போன்றனவும் அம்மானை பற்றிய பாடல்களையும் விளக்கங்களையும் அருமையாகச் சித்தரிக்கின்றன.

fancy_poem_article_post_separator

            பெருமானான இரத்தினகிரீசர் உலா வருகின்றார். உலா வரும் அவரைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழுபருவத்து மகளிரும் காதல் வயப்படுகின்றனர். இவர்களில் மங்கைப் பருவத்துப் பெண்ணொருத்தி, தனது தோழியருடன் பலவிதமான மகளிர் புடைசூழ அம்மானை விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறாள். பொழுது போவதே தெரியவில்லை. விறுவிறுப்பான வினாக்களும் இருபொருள் புதைந்த விடைகளுமாகக் களிப்புடன் இவர்கள் அம்மானையாடுகின்றனர். மற்ற பருவத்துப் பெண்கள் சூழ்ந்து நின்று இவர்கள் விளையாட்டைப் பார்த்த வண்ணம் உள்ளனர்!

            அழகு மிகுந்த மதுரைச் சொக்கலிங்கரான அந்தப் பெருமானைப் பற்றிப் பாடிய வண்ணம் அம்மானை ஆடுகின்றனராம். சிவனின் பலப்பல திருவிளையாடல்களைக் கூறி ஆடுகிறாள் இவள். தக்க யாகத்தில் தலையை இழந்த தனது மாமனாரான தக்கனுக்கு ஆட்டுத்தலை ஒன்றைக் கூட்டிக் கொடுத்தவனாகிய சிவபிரான் என்னும் ‘அம்மானை’ப் பாடி அம்மானை என்னும் விளையாட்டைப் பயில்கிறாள் இவள்.

           ‘வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே
         அந்த மிகுமதுரை அம்மானைச்- சொந்தமதாம்
         கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே
         ஆட்டுத்தலை படைத்த அம்மானை’

            (புலவர் அம்மானை எனும் சொல்லைக் கொண்டே சொற்சிலம்பம் செய்வது படிக்கவும் செவிக்கும் இன்பமாக உள்ளது)

            மற்றொருத்தி கடலில் வலைவீசி மீன்பிடிக்க சிவபிரான் மீனவனாக வந்த திருவிளையாடலைக் கூறி அம்மானை ஆடுகிறாளம். எப்போதும் ஒரு மலையையே இருப்பிடமாகக் கொண்ட அவனைப் பாடியபடி இவர்கள் விளையாடுகின்றனர்!

            அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்
         மலைக்கே துறையாம் அம்மானை

            பாச்சில் என்னும் சிறந்த ஊரில் திருவாசிரமத்தில் நிறைந்த பெரியோருக்கும் பெரியானாகிய சிவபெருமான் உறைந்துள்ளான். அவ்வூரில் கமலன் எனும் ஒரு வைசிய குலத்தானின் மகளைச் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டாராம்; அந்த நிகழ்ச்சியைக் கூறி, -அவருக்குப் பெண்மானைக் கொடுத்த செட்டி எனும் ஒரு மாமனையும் கொண்ட பெருமானாகிய அம்மானைப் பாடி இவள் அம்மானை ஆடுகின்றாள்.

                                                           நிலைப்பாய்
         அட்டிபுரி பாச்சி லாச்சிரமத் தேபுணரக்
         கொட்டமிகு மானைக் கொடுத்தருளும்- செட்டியெனும்
         அம்மானையும் படைத்த அம்மானைப் பாடியிவள்
         அம்மானை யாடும் அளவிலே..’

            சேறைக் கவிராச பிள்ளை இந்த வாட்போக்கி உலா எனும் இரத்தினகிரி உலாவினை இயற்றியுள்ளர். அம்மானை என்ற சொல்லைத் திரும்பத் திரும்ப அடுத்தடுத்த வரிகளில் கையாண்டு புலவர் நயமுடன் கவித்திறனைக் காட்டியுள்ள அழகு படிப்பவர் மனதையும் கருத்தையும் அம்மானையாட வைக்கும்!

            இவ்வாறெல்லாம் அம்மனையாடும் பெண், வாட்போக்கி நாதனான இரத்தினகிரீசன் வரும் தேரானது தனது அருகாமையில் வர, ஆடலை நிறுத்தி விட்டுப் பூக்களைச் சொரிந்து அவனை வணங்குகிறாள் என்கிறார்.

            பாடலை முழுமையாகக் காணலாமா?

            ‘வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே
         அந்த மிகுமதுரை அம்மானைச்- சொந்தமதாம்
         கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே
         ஆட்டுத்தலை படைத்த அம்மானை- வீட்டி
         அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்
         மலைக்கே துறையாம் அம்மானை- நிலைப்பாய்
         அட்டிபுரி பாச்சி லாச்சிரமத் தேபுணரக்
         கொட்டமிகு மானைக் கொடுத்தருளும்- செட்டியெனும்
         அம்மானையும் படைத்த அம்மானைப் பாடியிவள்
         அம்மானை யாடும் அளவிலே- பெம்மான்’

            இவர்கள் ஆடினதும் மூவர் அம்மானையாகவே இருந்திருக்கலாம். அந்தப் பாடல்களாக இவை இங்கு தரப்படவில்லை. ஆனால் அம்மானை ஆடிய விதம், எவ்வாறெல்லாம் ஈசனைப் பாடி அம்மானை ஆடினார்கள் எனச் சொல்லப்படுகிறது.

            மற்ற உலா நூல்களிலும் அம்மானை பற்றிய செய்திகள் இருந்திருக்க வேண்டும். இது புத்திக்கூர்மை படைத்த பெண்கள் ஆடிவந்த ஒரு சுவாரசியமான விளையாட்டு என்று எண்ண இடமிருக்கிறது.

இலக்கிய நயமிக்க அம்மானை!

fancy_poem_article_post_separator

            பழங்காலந் தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள் என்கிறது தமிழ் விக்கிபீடியா. சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின் விருப்பமாகப் பாடப்படுகின்றன.

            இவற்றை இங்கு விளக்குவதன் காரணம், எவ்வாறு ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக பழம் தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

            இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை : மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

            வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
         ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் காணடி, அம்மானை!”

            ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
         தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

            சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை! (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

            (இப்பாடல் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனைப் பற்றியது)

            திரும்பவும் இன்னொரு பாடலைப் பாடுகிறார்கள்:

முதலாமவள்: “ஒரு புறாவுக்காக விண்ணுலகம் எல்லாம் புகழுமாறு தனது குறையற்ற உடலின் தசையை அரிந்து கொடுத்த சோழ அரசன் யாரடி அம்மா?”

            புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக்
         குறைவில் உடம்பு அரிந்த கொற்றவன்யார் அம்மானை!

இரண்டாமள் விடை பகருகிறாள்: “அவ்வாறு தசையினை அரிந்து கொடுத்தவன் யாரெனின், பசுவின் முறையீடு கேட்டுத் தன் மகனையே தேர்க்காலில் பலி கொடுத்த சோழ மன்னனின் வம்சத்தில் முன்னதாக வந்தவன் தானே அம்மானை!”

            குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த
         கறவை முறைசெய்த காவலங்காண் அம்மானை!

மூன்றாமவள் இவ்வாறு முடிக்கிறாள்: ஆகவே அத்தகைய மாமன்னனின் பூம்புகாரை நாம் பாடுவோம் அம்மானை!”

            காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை! (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-17)

            இவ்வாறு இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும், வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

            இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

fancy_poem_article_post_separator

            அம்மானை ஆடுவதை விடவும் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதை விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப்பாடல்கள். ஓரிரண்டைக் காணலாமே!

            அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் கல கல என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

            ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட
         மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப’

            இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

            சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாயிருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

            ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
         கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
         மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’

            அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

            ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!’ (திரு அம்மானை-13)

            இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை! அம்மானை ஆடும் பெண்ணாகவே தன்னைக் கருதிக் கொண்டு மேலும் கூறுவார்:

            “கொன்றை மலர் சூடியவன் எம்பிரான்; ஆகவே நானும் பொலிகின்ற கொன்றை மாலையைச் சூடுவேன். அன்பு மேலிட்டு அவனுடைய திரண்ட தோள்களைத் தழுவுவேன்; அவனுடன் கூடுவேன்; கூடி மயங்குவேன்; சிறிது ஊடவும் செய்வேன். சிவந்த வாய் கண்டு கனிந்து உருகுவேன்; மனம் உருகி அவனைத் தேடுவேன். சிவபிரானது திருவடியையே சிந்திப்பேன். அவன் அருள் பெறவில்லையே என வாடுவேன்; அருள் கிடைத்ததும் மனம் மகிழ்வேன். அனலாகிய நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுகின்ற பெருமானின் செவ்விய திருவடிகளையே பாடி அம்மானை ஆடுவோம்,” என்கிறாள்.

            சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்
         கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
         ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள் உருகித்
         தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்
         வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
         ஆடுவான் சேவடியே பாடுதும்காண் அம்மானாய். (திரு அம்மானை-17)

            அடியார்களை இறைவன் பால் இட்டுச் செல்ல இதைவிட வேறு ஒரு இனிய வழியும் உண்டோ? தன்னையே மறந்து இறைவனுடன் ஒன்றி விட்ட நிலையன்றோ இது?

            நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

fancy_poem_article_post_separator

            பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில், பெண்குழந்தை அம்மானை விளையாடும் பருவம் எட்டாவது பருவமாக பாடப் பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்களைக் கொண்டது. (பிள்ளைத்தமிழ் பற்றிய விளக்கங்களுக்கு திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் ‘சிற்றிலக்கியங்கள் எனும் பிரபந்தங்கள்’- 4, 5 பகுதிகளைக் காணவும்). இவற்றில் ஐந்தாறு வயது நிரம்பிய பெண்மகவு (பெரும்பாலும் பெண் தெய்வங்கள்) அம்மானை விளையாடும் அழகும் நேர்த்தியும், பெருமையும் பொருள் நயத்துடன் கூறப்படுகின்றது.

            குமரகுருபரர் பாடியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காணலாம். மீனாட்சியம்மை அம்மானையாடுவது எவ்வாறு உள்ளது எனப் பத்து பாடல்களில் விதம் விதமாக வருணிக்கிறார். அவற்றுள் ஒன்று:

            சிறந்த மரகதத்தாலும், நீலக் கற்களாலும் பருத்த ஒளி நிறைந்த முத்துக்களாலும் இழைக்கப்பட்ட அம்மனைகளை முறையே எடுத்து மீனாட்சி என்னும் குழந்தை வானில் வீசுகிறாள். குழந்தையால் அம்மானை விளையாட முடியுமா? தெய்வக் குழந்தையால் கட்டாயம் முடியும். ஆனால் இங்கு ஒரு மங்கையல்லவோ அம்மானை ஆடுகிறாள்? அவள் கண்ணுதல் பெருமானாகிய சிவபெருமானிடம் கொண்டுள்ள காதலால் அவருக்கு அம்மானைக் காய்கள் மூலமாகத் தூது விடுகிறாளாம்! அட! இப்படியும் ஒரு தூது முறை உண்டா என எண்ணுபவர்களுக்கு விளக்குகிறார்- மீனாட்சி தன் கையில் வைத்து வளர்க்கும் பச்சைக் கிளியைப் போலுள்ளதாம் மரகத நிறத்து அம்மானை; கருநீலக் குயில் போலுள்ளதாம் நீலமணி அம்மானை! ஒளி சிந்தும் பருத்த முத்தாலான அம்மானை இளமையான வெள்ளோதிமம்- வெண்மையான அன்னப்பறவை- போலுள்ளதாம்! என்ன அழகான கற்பனை! இவற்றையும் அம்மானைக் காய்கள் ஒரு ஒழுங்கில் மேலே வீசப் படுவதைப் போன்று முறையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தனது காதலைத் தலைவனிடத்தில் கூறிவர அனுப்புகிறாளாம் மீனாட்சியம்மை!

            ஒள்ளொளி மரகதமும் முழு நீலமும்
                           ஒண்தரளத் திரளும்
                  ஒழுகொளி பொங்க இழைத்திடும் அம்மனை
                           ஓருமூன்று அடைவில் ஒடாக்
         கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ
                           கண்ணுதல் பால்செல நின்
                  கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
                           காமர் கருங்குயிலும்
         பிள்ளை வெளோதிமமும் முறைமுறையால்
                           பெருகிய காதலைமேல்
                  பேசவிடுப்ப கடுப்ப அணைத்தொரு
         பெடையொடு அரசஅனம்
         அள்ளல் வயல்துயில் மதுரைத் துரைமகள்
                           ஆடுக அம்மனையே
                  அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
                           ஆடுக அம்மனையே. (அம்மானைப் பருவம்-10)

            இவ்வாறு தூது விடும் இவள் யார்? மதுரைத் துரைமகள் ஆன மீனாட்சி- ‘அரச அன்னம் தன் பெடையொடு வயலில் உறங்கும் மதுரைக்கு அரசியே! நீ அம்மானை ஆடி அருளுக,’ என்கிறார். அற்புதமான கற்பனை விருந்து.

            தெய்வத் தமிழ் அம்மானை!

fancy_poem_article_post_separator

            இவ்வாறு காலகட்டத்தில் விதம் விதமாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன அம்மானை விளையாட்டும் அதனைச் சார்ந்த இலக்கியங்களும்!

            எனது சிறுமிப் பருவத்தில் கூட தோழியர்களுடன் வழுவழுப்பான கூழாங்கற்களைக் கொண்டு – அவை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் அமையும் – மேலே வீசியெறிந்து பிடித்து விளையாடி இருக்கிறேன். ஆனால் இந்த கருத்துச் செறிந்த பாடல்களைப் பாடவில்லை. முந்தைய தலைமுறையினரான பாட்டிமார், அன்னையர் எவரும் சொல்லித் தரவில்லை. இவை நீண்ட நாட்களுக்கு முன்பே வழக்கிலிருந்து அழிந்தொழிந்து விட்டனவோ எனத் தோன்றுகிறது. மிக்க வருத்தமாயுள்ளது. எவரேனும் இந்த அருமையான விளையாட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனரா எனத் தேட வேண்டும்.

            தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

oOo

பின்குறிப்பு: பிற்காலத்தில் கள்ளழகர் அம்மானை, ராமப்பய்யன் அம்மானை, சிவகங்கை அம்மானை என்ற சில நூல்கள் பிறந்தன. இவற்றில் அம்மானை விளையாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒரு வீரத் தலைவனின் புகழ் நீண்டதொரு நாட்டுப்புறப் பாடல் நயத்தில் இசைக்கப் பட்டது. இவை முற்றிலும் Ballads எனப்படும் நாட்டுப் பாடல் வகையைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை ஒரு காலத்தவரின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.