காளிங்க நர்த்தனம்

அரியக்குடி கோவில் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தவன், அங்கே ரகரகமான தொந்திகளுடனும் கொண்டைகளுடனும், குறுவாள்களுடனும் கைகூப்பி நிற்கும் சிற்பங்களைக் கண்டு கொண்டிருந்தபோது புடரியில் சடாரென்று ஒரு அடி விழுந்தது. ‘அடிங் தாயோளி, கேளுடா, என்ன ஜிந்தன மயிறு வேண்டிகிடக்கு’ இது மாணிக்கத்திற்கோ, முறுக்குசாமிக்கோ ஒன்றும் புதிதல்ல.

உருண்ட முலைகளும், புடைத்த காம்பும், மலர்ந்த முகம் போலிருக்கும் உந்திச்சுழியும் கொண்ட தலைகோலியோ, மடியில் கிடத்தி வயிற்றைக் கிழித்துக் குடலை உருவும் நரசிம்மமோ, பூமிக்கும் ஆகாயத்திற்குமாக நீளும் காலுடன் விண்ணளக்கும் திருவிக்ரமனோ மாணிக்கத்தை இப்போது ஈர்ப்பதில்லை. இங்கே சிலையாகியிருக்கும் உண்மை மனிதர்களைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தான். நானூறு வருடங்களுக்கு அப்பாலும் இதோ அவனுடைய அதே தொந்தியையும் குடுமியையும் தூக்கிக்கொண்டு நிற்க முடிந்திருக்கிறது. தனது சிற்பம் ஒன்றும் அந்த வரிசையில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தலைகோலிக்கு எதிராக நிற்க முடிந்தால் இன்னும் கூட கொண்டாட்டம் தான்.

“இங்கன வந்து இதத் தொட்டுப் பாரு” அவனுடைய கையை இழுத்து கொண்டு போய் ஒரு தூணின் புடைப்புச் சிற்பத்தில் வைத்தார் முறுக்குசாமி. உள்ளிருந்து லேசாக ஈரம் பரவியிருந்தது. அந்த கல்தூண் காலைகளில் ஈரமாக இருக்கும். அதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் கோவிலுக்கு வருவதுண்டு. சூரியன் ஏற ஏற இயல்பாகி சூரியன் இறங்க இறங்க ஈரமாகும் வினோதமான தூண். தலைகோலிக்கு எதிரே விரிசடையுடன் கால்மடக்கி ஒட்டிய வயிறுடன் அமர்ந்திருந்த முனிவரின் சிலை அதிலிருந்தது.

“இது யாருன்னு தெரியுமா?”

“பதஞ்சலி” என்றான் அமைதியாக மாணிக்கம்.

“பெருசா கண்டுட்டான்.. அவிசாரிமொவன்”

பிள்ளைவாளின் அகால மரணத்திற்குப் பின்னர் அவனுடைய தகுதியைப் பரிசீலித்து யூனியன் ஆபிசில் ஒ.ஏ.வாக சேர்த்துக்கொள்ளப்பட்டு இன்று அரசாங்க உத்தியோகஸ்தனாக இருந்தாலும் கூட மாணிக்கத்திற்குப் பெரிய முன்கதைச் சுருக்கம் உண்டு. அவனுடைய தந்தை ராமலிங்கப் பிள்ளை நேர்மையான வி.ஏ.வோ எனப் பெயரெடுத்தவர், ஓய்விற்கு இன்னும் இரண்டே வருடம் பாக்கியிருக்கும் போது தான் குண்டாத்தில் மணல் கடத்தலைப் பிடிக்கப் போய் லாரிகாரனால் ஏற்றிக் கொல்லப்பட்டார். அது ஒரு பெரிய செய்தியாகி அவருக்காக இரங்கல் கூட்டங்கள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், கண்டன ஆர்பாட்டங்கள் எல்லாம் நடந்தன, ஏதோ ஒரு வெள்ளைக்காரர் கூட அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதுவதாக சொல்லிக் கொண்டார்கள். ஆங்கிலச் செய்தித் தொலைகாட்சிகளில் அவரைப் பற்றி அரைமணிநேரச் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பயின்ற நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, நீர் வாரி இறைத்த கிணறு, சிதைந்த வீடு எல்லாம் காட்டப்பட்டது, அவருடன் படித்த தோழர்கள் எல்லாம் கிட்டிபுள்ளு விளையாடியதையும் என்.எஸ்.எஸ் முகாமிற்குப் போனதையும் பெருமையாக சொல்லிக் கொண்டனர். கடைசியில் அவருக்கு அவருடைய ஊரான நடுவிகொட்டையில் சிலைவைக்க வேண்டும் எனும் ஊர்மக்களின் கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக அறிவிப்பு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது.

மாணிக்கத்தின் இளைய சகோதரன் நல்லவிதமாகப் படித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைக்குப் போனான். 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்தபோது பேரலை அவனையும் வாரிச் சுருட்டிக் கொண்டது. உயிரோடிருந்தால் பெரும் அணுவிஞ்ஞானி ஆகியிருப்பான் என ராமலிங்கப் பிள்ளை மட்டுமல்ல அவனுடைய அலுவலக உயரதிகாரிகள் கூட மெச்சிக் கொண்டார்கள். நல்ல கூருடையவன் என்றே எப்போதும் அறியபட்டான். அவனுடைய பிரிவை மாணிக்கத்தின் அம்மாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இறந்து பிறந்த குழந்தைக்குப் பிறகு கருவானவன் என்பதாலேயே இளையவன் மீது அவளுக்கு எப்போதும் கூடுதல் அக்கறை உண்டு. நல்ல நிலையில் இருக்கிறான் என்பதில் பெருமையும் வேறு. மெதுவாக மீண்டுவந்தவள் பிள்ளையின் மரணத்தால் மீண்டும் மனமொடிந்து போனாள். மாணிக்கத்திற்கு எஞ்சியிருக்கும் ஒரே உறவு அவள் தான். அந்த கடைசிப் பிடிப்பும் இளகுவதற்காகத்தான் அவனும் காத்திருக்கிறான்.

மாணிக்கத்திற்கு முப்பதோ முப்பதைந்தோ வயதிருக்கலாம். இந்திரா சவுந்தரராஜன் கதைகளின் வழியாக சித்தர்களின் உலகம் அவனுடைய பதின்ம வயதுகளில் பரிச்சயமானது. அங்கிருந்து கோடு பிடித்தாற்போல் மேலேறி ஜோசியம், சித்த மருத்துவம், யோகம், தியானம், யக்ஷி வசியம், ரசவாதம் என எதையெதையோ எங்கெங்கோ சென்று பயின்று வந்தான். புத்தகங்களைப் படித்து அவனே என்னென்னவோ முயன்றும் பார்த்தான். மண்டையோடுகளை வீட்டுக்குள் கொண்டு வந்தவன் ஏதோ வலிப்பு நோய்க்கு பற்பம் செய்கிறேன் என்று கிளம்பியது வரை ராமலிங்கப் பிள்ளை அவனை பெரிதாகக் கண்டித்ததில்லை. எத்தனை சொல்லியும் படிப்பு ஏறவில்லை, சிரமப்பட்டு இரண்டு மூன்று தடவை எழுதி ப்ளஸ்டூ தேறினான். அவன் வேண்டாமெனச் சொல்லியும் கேட்காமல் பி.ஏ.வுக்குச் சேர்த்துவிட்டார் பிள்ளை. கல்லூரிக்குச் செல்லத் துவங்கி நான்கு நாட்கள் தான் ஆகியிருக்கும், அன்று மாலை வழக்கமான நேரத்திற்குள் அவன் வீடு திரும்பவில்லை, இரவு பத்துமணிவரை காத்திருந்துவிட்டு டி.வி.எஸ் ஃபிப்டியில் சின்னவனை அழைத்துக்கொண்டு அவனைத் தேடிச் சென்றார். வியர்க்க விறுவிறுக்க சைக்கிளை வைரவபுரம் இறக்கத்தில் மெதுவாக அழுத்திக் கொண்டு வந்தான். அவரைக் கண்டவுடன் “அப்பா..இறங்கச் சொல்லுப்பா…அப்பா..அவளைக் கேரியரில் இருந்து இறங்கச் சொல்லுப்பா..” காற்றில் அவன் கரங்கள் எவரையோ பிடித்து தள்ளின. சைக்கிளை அழுத்த முடியாமல் சாய்ந்தபோது தாங்கிப் பிடித்தார். சைக்கிளும் அவனும் நாலாள் எடையிருந்தார்கள். “அப்பா.. அவ சிரிக்கிறா.. பல்லக் காட்டி கடிக்க வர்றா.. போய்ச் சொல்லுப்பா.. இறங்கச் சொல்லு,” என்று பிதற்றிக்கொண்டே வந்தான். அவனை சைக்கிளில் வைத்து உருட்டிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். நீலம் பாரித்து விறைத்து கிடந்தான். பின்னர் அவசர சிகிச்சை, மனோவைத்தியம், நரம்பு டாக்டர் என எங்கெல்லாமோ அலைந்து உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தார்கள். எப்போதும் அரைமயக்கத்தில் பிதற்றியபடியே கிடந்தான். அவனை இழந்துவிடுவோமோ என்று கூட அஞ்சினார். பின்னர் நேர்ச்சைகள், மந்திரிப்பு, பிரஷ்ணம், பரிகாரங்கள், செய்வினை அகற்றம், புண்ணியத்தலங்கள் என நான்குமாதம் அலைந்தார். எதிலுமே பெரிதாகப் பலனில்லை. அவனில்லாத வாழ்விற்கு அவர்கள் தயாராகத் துவங்கிய நேரத்தில் தற்செயலாக அவர்கள் வீட்டிலிருந்த மருத்துவச் சுவடிகளை பெற்றுச் செல்ல வந்த இளம் சித்த மருத்துவர் ஒருவர் ‘இது குண்டலினி நட்டுகொண்டதால்’ வந்த விளைவு, தவறான யோகப் பயிற்சிகள் செய்யும்போது இப்படியாகும் என்றும், இப்படிப்பட்டவர்களைக் குணமாக்கும் யோகாச்சாரியரைத் தானறிவேன் என்றும் சொன்னார். அதன் பின்னர் கடைசி முயற்சியாக பெங்களூரில் உள்ள எஸ்-வியாசா யோகா பல்கலைக் கழகத்தில் திரு.சாஸ்திரியைச் சந்திதார்கள். ‘இது நாடிப் பிறழ்வு, கவலை கொள்ளத் தேவையில்லை’ எனச் சொல்லி பதினைந்து நாட்கள் தங்கவைத்தார். மூச்சுப் பயிற்சி, பஞ்ச கர்மா என ஒருபாடாக உயிர்பிழைத்து மீண்டு வந்தான்.
ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படி ஒருவருக்கு ஏதாவது ஆகிவிட வேண்டும் என்பது பிள்ளை குடும்பத்தின் எழுதப்படாத விதி. நாற்பது ஐம்பது ஆண்டுகள் இருக்கலாம். பட்டுக்கோட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து மருந்துக்கடை வைத்திருந்த ராமலிங்கப் பிள்ளையின் சித்தப்பா குருசாமிப் பிள்ளையின் வீட்டினுள் ஒரு மழைநாள் இரவில் கருநாகம் சுருண்டு கிடந்தது. அன்று அங்கிருந்து தப்பிய நாகத்தை பிள்ளைப் பேறில்லா சித்தி தினமும் இரவு முற்றத்திலும், கூடத்திலும், சமயலறையிலும், உத்திரத்திலும், கனவுகளிலும், கயிறுகளிலும், நிழல்களிலும் பார்க்கத் துவங்கினாள். குருசாமி ஒரு மாந்த்ரீகரை கூட்டிவந்தார். அங்கே நடுக்கூடத்தில் புதைந்து கிடக்கும் புதையலைக் கருநாகம் காவல் காப்பதாகச் சொன்ன அவன், இருபத்தியோருநாள் அதற்கு சாந்தி பூஜை செய்ய வேண்டும், அதுவரை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்றும் சொன்னான். மாந்த்ரீகன் இரவுகளில் பூஜை செய்ய தினமும் வந்தான். இருபத்தியொராம் நாள், அமாவாசை அன்று பூஜையை முடித்துவிட்டு நடுக்கூடத்தில் ஆறுக்கு நாலு அளவில் குறித்துக் கொடுத்து புதையல் பெட்டி கிடைக்கும்வரை ஆழமாகத் தோண்டச் சொன்னான். குழியில் விட கோழி ரத்தமும் புதுப் பாலும் வேண்டும் என்றான். கோழி அறுக்கச் சென்ற அவனும், பால் கறக்கச் சென்ற சித்தியும் அதற்குப் பின்னர் திரும்பி வரவே இல்லை. குருசாமி பிள்ளை ஒவ்வொருநாள் இரவும் தோண்டினார். உணவு, ஒய்வு ஒழிச்சல் இன்றித் தோண்டினார். எவர் சொல்லியும் அவர் நிறுத்தவில்லை. பிள்ளையும் அவருடைய அப்பாவும் போய் பேசிப் பார்த்தார்கள். புதையல், பூதம், என அரற்றிக்கொண்டே இருந்தார். மெல்ல ஆட்கள் வருவது குறைந்து நின்றே போயிற்று. அதன் பின்னர் குருசாமியை யாரும் பார்க்கவில்லை. இன்றும் கூட இரவுகளில் அங்கு அவர் மண்ணைத்  தோண்டும் அரவம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் சொல்வார்கள்.
அவர்கள் குடும்பம் சபிக்கப்பட்டது என்று எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். மாணிக்கத்திற்கே திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், எவரும் பெண் கொடுக்க வராததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் துர்மரணங்கள் நேர்வதால் ஒரு குடும்பம் சபிக்கப்பட்டது எனச் சொல்வது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும். “எல்லோரும் சாகத்தானே போறோம், அப்டின்னா சாபத்த சுமந்துகிட்டு தான பிறந்திருக்கோம்,” என்பதே அவனுடைய பதில்.
 

oOo

முறுக்குசாமி தசாவதார மண்டப திட்டில் உட்கார்ந்துகொண்டு சொன்னார் “அவென் யாரு தெரியுமா? பதஞ்சலியாம்ல..என்ன எலியா வேணா இருக்கட்டும்.. அவன் ஒரு முனி, தவம் கிடக்குற முனி, தவம்னா என்ன தெரியுமா? சூடு, தன்னையே எரிக்குற சூடு, சூடுன்னா பசி, நெருப்பு, அந்த நிக்குறாளே பாண்டி நாட்டு அவிசாரி அவளுக்காக நித்தம் தவம் கெடக்கான், அவள நெனச்சு நிதமும் ராவுல பசிச்சு ஏங்குறான், அந்த வெக்கை தினமும் அவனை உருக்குது, வேர்த்து புழுங்கிகிட்டே இருக்கான், இங்கனயும் இல்லாம அங்கனையும் இல்லாம கிடந்து அலக்கழியிறான்.”

இப்படியான வினோத விளக்கங்கள் முறுக்குசாமி மட்டுமே அளிக்க கூடியவை. இத்தகைய ஞானச் சிதறல்களுக்காகத்தான் மாணிக்கம் அவரை தினமும் சந்திக்கிறான் எனத் தோன்றும். மாணிக்கம் வேலைக்குச் சேர்ந்த ஒன்றரை ஆண்டுகளாகவே தினமும் காலை அரியக்குடி கோவிலை ஒருமுறை சுற்றிவிட்டு ஆபிசுக்கு போவதுதான் வழக்கம். கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் ஆண்டிகளில் பிற எல்லோரும் “கோவிந்தா” என முழங்கி வருவோர் போவோரிடம் யாசகம் கேட்க, ஒருவர் மட்டும் மழுங்கச் சரைத்த முகத்துடனும் நரைத்த முறுக்கு மீசையுடனும் வெறுமே அமர்ந்திருப்பார். திருவோடு அப்படியே கிடக்கும். ஆட்கள் வரும்போது வேறுபக்கமாக முகத்தைத் திருப்பிக் கொள்வார். மாணிக்கம் கவனித்துக் கொண்டு தானிருந்தான். மாணிக்கம் கவனிப்பதை அவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஒருநாள் மாணிக்கம் வெளியே வரும்போது “பத்து ரூவா போட்டுட்டு போ,” என்று அவனிடம் கடுமையாகச் சொன்னார். அவனுக்கு ஆத்திரமாக வந்தது ஆனால் அவனால் அதை மீற முடியவில்லை. காசைப் போட்டுவிட்டுதான் கிளம்பினான். அதன் பின்னர் அவனிடம் மெல்ல பேச்சு கொடுக்கத் துவங்கினார். தினமும் இருவரும் பிரகாரத்தை சேர்ந்து சுற்றிவரத் துவங்கினார்கள். “மனசு ஒரு குரங்குடா, அத அடக்குனவன் அனுமன், அவன் கடவுள், புரியுதாடா குரங்குப் பயலே?” என்றார் ஒருமுறை புணரும் குரங்குகளின் புடைப்பு சிற்பத்தை காட்டி. சிலநாட்கள் எதுவுமே பேசாமல் வெறுமே பராக்கு பார்த்தபடி நடப்பார். எப்போதுமே சந்நிதிக்கு வரமாட்டார். கோவிலுக்கு வரும்போது அவரைக் காண்பது என்பது போய் அவரைக் காண்பதற்காகவே அவன் கோவிலுக்கு வரத் துவங்கினான்.
முறுக்குசாமியின் பூர்வாசிரம வாழ்க்கை எப்படிப்பட்டது என அறிந்து கொள்ள மாணிக்கம் முயன்றதுண்டு. அவரிடம் அவன் ஒருபோதும் நேரடியாக எதையுமே கேட்டதில்லை. பலவகையான ஊகக் கதைகளைச் சொல்வார்கள். அறுபத்தைந்து – அறுபத்தியெட்டு வயதிருக்கலாம். அரியக்குடி கோவில் வாசலுக்கு வந்து மூன்றாண்டுகள் தான் ஆகிறது. முறையாகத் துறவறம் பூண்டவர் அல்ல என்பதால் பூர்வாசிரமம் எனும் சொல் பொருந்தாது என்றார் திருமலை பட்டர். தேடப்படும் குற்றவாளி என்பதாலேயே எப்போதும் சிடுசிடுத்துத் தனித்துக் கிடக்கிறார் என்றார் கோவில் கணக்கர். அவருடைய ஆகிருதியை மனதில் கொண்டு முன்னாள் ராணுவவீரர் என்றும் போலீஸ்காரர் என்றும் கூட சொல்வார்கள். இருவரும் சுருட்டுத் தோழர்கள் என்பதால் இளநி கடை மாரியிடம் மட்டும் தான் கொஞ்சமாக பேசுவார். ஆகவே அவனுக்கு மாரி சொன்ன கதை கொஞ்சமேனும் நம்பக்கூடியதாக இருந்தது. வத்ராப்பு – செம்பகத்தோப்புப் பகுதியில் வனத்துறை ஊழியராக இருந்தவர், அவருடைய ஒரே மகனை விஷக்காய்ச்சலில் இழந்தபின்னர் இப்படி தேசாந்திரியாகத் திரிய துவங்கினார். மருந்து நிறுவனங்களுக்கு பாம்பு விஷத்தைச் சேகரித்துக் கொடுக்கும் வேலையையும் அங்கிருக்கும்போது செய்திருப்பதாகப் பேச்சுவாக்கில் கூறியதைத் தாண்டி அவனுக்கும் பெரிதாக எதுவும் தெரியவில்லை.
வெளியே வந்தார்கள். நரசிம்மர் சந்நிதியும் சுதர்சன ஆழ்வார் சந்நிதியும் மண் சாலைக்கு அப்பால், ராஜகோபுரத்தின் எதிர்ப்புறம் இருக்கிறது.
“நீ என்னடா அந்த குண்டனுகள பாத்துகிட்டு நின்ன?”
“ஒண்ணுமில்ல.”
“சிலயாகணும்னு ஆச வந்துடுச்சோ?”
“இல்ல..”
முந்தைய இரவு துவங்கி அன்று அதிகாலைவரை பெய்த கனமழை அப்போதுதான் ஓய்ந்திருந்தது. குப்பைமேனியும் தும்பையும் மனிதக் கால்கள் படாத பகுதி முழுக்க கார்த்திகை மாத மழையில் துயிலெழுந்து நடைப்பரப்பை மெல்லச் செரித்து செழித்துக் கொண்டிருந்தன. நீர் சர்ப்பம் என கோவிலுக்கு முன்புள்ள மண்பாதையில் மழைநீர் நெளிந்தும் சுழிந்தும் ஏரியை நோக்கி சீறிக் கொண்டிருந்தது. ஆங்காங்கு சகதித் தீவுகள் தென்பட்டன. மாணிக்கம் ஜாக்கிரதையாக நீரில் கால்படாமல் சகதியில் காலடி பதித்தபடி வெளியேறிச் சென்றான். முறுக்குசாமி தன்போக்கில் நீரையும் சகதியையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்தார்.
நரசிம்மர் சந்நிதிக்கு எதிரே உள்ள தூணில், குழந்தை கண்ணன் பாம்பின் வாலை பிடித்துகொண்டு அதன் தலயின் மீது நடனமிடும் காளிங்க நர்த்தனத்தை உற்று பார்த்தபடியே இருந்தார். அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி செல்வதற்கு முன் “மாணிக்கம்” என்று அவனை அழைத்தார். இதுவரை அவன் பெயரை அவர் அறிந்ததாகக் கூட காட்டிக் கொண்டதில்லை. “பாம்புக்கு எவ்ளோ .விஷம் உண்டு தெரியமா?..ஆனா எம்புட்டு அம்சமா இருக்கு? எல்லா பயலுகளும் அது மேல ஏறப் பாக்குறான்..ஏறிட்டா போதும், ஏறி நின்னுட்டா விஷம் ஒன்னும் பண்ணிற முடியாதுன்னு நெனச்சிகிட்டு இருக்கான்..ஸ்டூல கொண்டாரான், ஏணியக் கொண்டாரான், வாலப் பிடிச்சு தொங்குறான், பல்லப் பிடிச்சுத் தொங்குறான், ராக்கெட்டுல போறான், கதை எழுதுறான், பாட்டுப் பாடுறான், விளையாடுறான், நடிக்குறான், கட்டுறான், காசு சேக்குறான், மூச்ச அடக்குறான், அமுதம் கடையிறான், மருந்தத் திங்குறான், அவனுகள ஆட விடுது, பத்தோ நூறோ இல்லை ஆயிரம் வருஷமோ, ஏறுற வரைக்கும் ஏற விடுது, அப்புறம் புஸ்ஸ்.. ஒரு மூச்சு போதும், இல்ல ஒரு தடவ கண்ண லேசா தொறந்து பாத்தா போதும், அத்தன பேரும் எரிஞ்சு ஆவியாயிடுரானுங்க, வால லேசாச் சிலுப்புனா போதும் ஆயிரம் லட்சம் பேரு சாவுரானுக, கடி படுறவன் பாக்கியவான், ஒருவேள அதுக்கு அவனத் தெரிஞ்சிருக்கலாம், அவன் கண்ண அது பாத்திருக்கும், எனக்கு பயமில்லன்னு அதுகிட்ட காட்டிக்க முடியும், ஆனா அவனும் சாவத்தான் போறான், அவ்ளோ தான், ஆனா எவனோ ஒரு சின்னப்பய எத்தனையோ ஆயிரம் வருஷத்துக்கு ஒருதபா வாரான், அவன் பாட்டுக்கும் சிரிச்சுகிட்டே அத்தனை சவத்து மேலேயும் ஏறுறான், தலைமேல ஏறி ஆடுறான், அவனுக்கு ஏறுறதும் ஆடுறதும் கூட தெரியாது…அந்தா நாகத்து மேல ஆடுறான் பாரு..அவன் பாம்பப் பாக்குறான் அதால அவனப் பாக்க முடியாது….அவன் கடவுளாறான்..நாமெல்லாம் அந்த கண்டாரவொளி ஏறி நடக்க, கிடக்க வேண்டிய சவம்.. வெறுஞ்சவம்.. அம்புட்டு தான்..” எனத் தழுதழுத்தபடி விறுவிறென்று அங்கிருந்து சென்றார்.

oOo

kaaliya-2

மாணிக்கத்திற்கு அன்றிரவு உறக்கம் பிடிக்கவில்லை. அலுவலகத்திலும் வேலை ஓடவில்லை. என்னவோ ஒரு பதட்டம். எதிலோ வழுக்கிக்கொண்டு போவது போல் இருந்தது. வானத்திலிருந்து கீழிறங்கும் வழுக்குமரம், இல்லை அது ஒரு பிரம்மாண்டமான சர்ப்பத்தின் முதுகு போலிருந்தது, இல்லை அது அதன் பிளந்த சிவந்த நாக்கு. பெருங்கூட்டம் அதை சுற்றிk கூடியிருந்தது. யார் யாரோ மன்னர்கள், கோட்டு சூட்டு போட்ட கனவான்கள், நவநாகரீக இளைஞர்கள், தாடி வைத்த கிழவர்கள், சாமியார்கள், துறவிகள், குழந்தைகள். தடி வைத்திருக்கும் ஒரு கிழவர் அதில் ஏறுகிறார், தலை வரை சென்ற அவர் தலைகுப்புற விழுகிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். குச்சி குச்சியாக முள் போல் நீட்டிகொண்டிருக்கும் தலைமயிர் கொண்ட கோட்டு சூட்டு போட்ட வெள்ளைகார கனவான் ஒருவர் ஏறுகிறார் அவரும் சறுக்கி விழுகிறார்.கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. பேரழகி ஒருத்தி ஒயிலாக செல்கிறாள். பார்வை கனலில் ஆவியாகிறாள். கூட்டம் மீண்டும் ஆர்ப்பரிக்கிறது. எல்லோரும் முண்டியடித்து ஏற முயல்கிறார்கள். மகத்தான தமாஷ் நடந்து கொண்டிருப்பது போல் கொண்டாட்டமாக இருந்தது. காலை வாரிவிட்டு, ஒருவரையொருவர் தள்ளிவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதற்கு எவரோ மூக்கணாங்கயிறு கொண்டுவருகிறார். அமைதியாக கிடக்கிறது சர்ப்பம். எவரோ ஒருவர் அதன் முதுகில் சேனை கட்டுகிறார். அசைவற்று கிடந்தது சர்ப்பம். எவரோ அதன் கழுத்தில் ஒரு நாய் சங்கிலியை கட்டுகிறார். அடங்கிக் கிடந்தது சர்ப்பம். கூட்டத்தில் எத்தனையோ முகங்கள் அதே தொந்தியும், குறுவாளும், கொண்டையும் உள்ள சிலைகள் அங்கும் உறைந்த முகபாவத்துடன் நின்றிருந்தன. இன்னும் வேறு சிலைகளையும் கூட்டி வந்திருந்தன. முறுக்குசாமியும் ராமலிங்கப் பிள்ளையும், தம்பியும், குருசாமிப் பிள்ளையும் கூட கூட்டத்தில் நின்றிருந்தார்கள். நிதானமான ஒரு சுழிப்பில் எல்லாரையும் இறுக்கி, அதன் வாலை கவ்விகொண்டது மெல்லச் சுழிந்து சுழிந்து இன்மையில் கரைந்தது.

oOo

குளித்துவிட்டு வேகவேகமாகக் கோவிலுக்கு ஓடினான். முறுக்குசாமியை வழக்கமான இடத்தில் காண முடியவில்லை. நேற்று மதியம் எங்கோ கிளம்பிச் சென்றவர் திரும்பவே இல்லை என்றார்கள். நெஞ்சு தாறுமாறாக அடித்துகொண்டது. வியர்த்து வழிந்தது. அவனுக்கு முறுக்குசாமியைப் பார்த்தாக வேண்டும், அவனிடம் அவனுக்கு கேட்க ஒரேயொரு கேள்வி உண்டு, என்றேனும் எவரேனும் காளிங்கனின் தலையில் உண்மையிலேயே ஏறி ஆடியிருக்கிறார்களா? ஆடியிருக்கிறான் என எவரேனும் தலையசைத்தால் கூட போதும். இப்போது யாரிடம் கேட்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.