kamagra paypal


முகப்பு » ஆளுமை, புத்தகவிமர்சனம், பெண்ணியம்

ரங்கநாயகி தாத்தம்

சிலநாட்களுக்கு ஒரு நண்பர் ஒரு கட்டுரையின் பகுதியை எனக்கு அனுப்பி, இது யார் எழுதினார் எந்த வருடம் என்று தெரியுமா என்று எழுதியிருந்தார்:

“நான் சென்னைக்குப் போகும் சமயமெல்லாம் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே என்னுடைய பாட்டி எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிப்பார். அவற்றில் ஒன்று ‘கதவை எப்போதும் தாளிட்டு வா.. இல்லாவிட்டால், ‘அதை வாங்கு, இதை வாங்கு’ என்று தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்’ என்பது.

நானும் அவள் சொல்லுகிற விதமே செய்வது வழக்கம். அப்படிச் செய்தும் கூட சிற்சில சமயம் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்களைக் கூப்பிட்டுத் தங்களுடைய போலிச் சரக்குகளை விற்கப்பார்க்கும் பலரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இந்த முறை ஒருதினம் பகல் வேளையில் வாசற்கதவை யாரோ தட்டின சமயம் நான் மிக ஜாக்கிரதையாக கதவை அரை அங்குலத்திற்குத் திறந்து எட்டிப்பார்த்தேன்.

அங்கு யாரோ புது மனிதன் நிற்பதைக் கண்டு, ‘ஏதாவது விற்க வந்திருக்கிறாயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றேன்.

நான் விற்க வந்திருப்பது சாமான்களல்ல.. சௌகரியத்தையே விற்க வந்திருக்கிறேன்.. உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் ஒரு பைசா கூட கொடுக்கவேண்டாம். நான் சில்லறைச் சங்கதிகள் லிமிடெட் கம்பெனியின் ஏஜெண்ட்.’ என்றான் வந்தவன்.

நான் கதவை மற்றோர் அரை அங்குலம் திறந்து ‘என்ன?’ என்று கேட்டேன்.

‘ஒவ்வொரு மாதமும் ஒரு சொற்பத் தொகையை நீங்கள் எங்களுடைய கம்பெனிக்குக் கட்டினால் போதும்.. உடனே எங்களுடைய கம்பெனி ஆட்கள் ஒருவன் மூலமாக உங்களுடைய சில்லறை விஷயங்களை எல்லாம் கவனித்துக் கொள்ளும். குழாயிலே ஜலம் வீணாகக் கொட்டாமல் அவ்வப்போது பார்த்துக் குழாயை மூடி, அநாவசியமாக எரியும் எலெக்ட்ரிக் விளக்குகளை அணைத்து, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்பவர் மிகுதியாய் ‘வைத்துவிட்டு’ப் போகும் சீயக்காய் ஜலத்தை மோட்டார் டிரைவருக்குக் கை கழுவக் கொடுத்து, பல் தேய்க்கும் பேஸ்ட் உலர்ந்து போகாமல் அதனுடைய டியூப் மூடியைத் தேடிப் பார்த்து அதை எப்போதும் இறுக மூடிவைத்து, ஸோப்புக் கிண்ணத்தின் அடியில் தங்கும் ஜலத்தை வடித்து, வாடின வாழை இலைகளைப் பொறுக்கி முன்னால் செலவிற்கு எடுத்துக் கொடுப்பார்கள்’

‘இவ்வித தொண்டு செய்கிற கம்பெனி ஒன்று வேண்டியதுதான்’ என்றேன்.

உங்களுடைய வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்வதற்கு வேண்டிய உதவியெல்லாம் நாங்கள் செய்யத் தயார். வீட்டில் மளிகை சாமான்கள் முற்றிலும் தீர்ந்து போவதற்கு இருபத்துநான்கு மணி நேரத்திற்கு முன்பே, புதுச் சரக்கு வாங்கி வைப்பதற்கு உத்தரவாதம் தருகிறோம். புருஷர்களின் வேஷ்டி, ஷர்ட்டு முதலியவைகளைக் கிரமமாக உபயோகிக்க எடுத்துக் கொடுத்து, ஜதையில் ஒன்று மாத்திரம் முன்னாடியே கிழிந்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். இது மெத்தை உறை, தலையணை உறைகளுக்கும் சேர்ந்ததாகும். நாளடைவில் எங்கள் கம்பெனியால் உங்களுக்கு ஏற்படும் பண லாபத்தைக் கவனித்தால், எங்கள் கம்பெனிக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையைப் பொருட்படுத்தமாட்டீர்கள். பெண்களுக்கு அவர்கள் பழைய ரவிக்கைகளைக் கண்டு அலுப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாள் முன்பாகவே அவற்றை எடுத்துத் தூர எறிந்து விடுவோம். சாவிக்கொத்தை அடிக்கடிப் பார்த்து உபயோகமற்ற சாவிகள் பல அதில் சேர்ந்து கனமாகிவிடாமல் பார்த்துக் கொள்வோம். எந்தச் சாவி அநாவசியமோ அதை உடனே எடுத்து எறிந்து விடுவோம்’

“அவ்விதம் செய்ய இதுவரை ஒருவரும் துணிந்ததே கிடையாதே!” என்றேன்.

“ஆமாம். மற்றும் நாங்கள் கவனிக்கும் சில்லறை விஷயங்களாவன: தினசரிப் பத்திரிகையின் பக்கங்களைச் சரியாகப் பார்த்து மடித்து வைப்போம். அஞ்சனப் பெட்டி, எண்ணெய் ஜாடி, நெய், சர்க்கரை ஜாடிகளை அவ்வப்போது பார்த்து மூடுவோம். அலமாரி, பீரோக்களின் கதவுகளை மூடுவோம்.. சீப்பில் தங்கும் மயிர், அழுக்கு முதலியவற்றை நீக்குவோம்..”

“ஆச்சரியமாயிருக்கிறதே! உங்களுடைய கம்பெனிக்கு மாதம் எவ்வளவு கட்டவேண்டும்?” என்று நான் கேட்டேன்.

“இத்துடன் இன்னும் முதல் கிளாஸ் மெம்பரானால் அதற்கு வேறு பிரத்யேகத் தொண்டு செய்வோம். அவை, உங்கள் வீட்டில் யாராவது உங்களைப் பார்க்கவந்தால் அச்சமயம் எங்களுடைய கம்பெனியின் ஆட்கள் ஒருவர் கூட இருப்பார். உங்களில் ஒருவர் ‘அன்றைக்கு நான் ஏதோ கேள்விப்பட்டேன்.. ..’ என்றாவது, ‘ஏதோ படித்தேனே.. ..’ என்றாவது சொல்லிவிட்டு, கேள்விப்பட்டதும், படித்ததும் என்னவென்று ஞாபகத்திற்கு வராமல் கஷ்டப்படும் சமயம், எங்கள் கம்பெனிக்காரர் உடனே, ‘நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது கோடி வீட்டுச் சுப்பம்மாளின் தம்பி மனைவிக்கு சீமந்தம் என்பதே’ என்றும், ‘நீங்கள் படித்தது முந்தாநாள் பத்திரிகையில் அடுத்தவாரம் சென்னையில் மழை அதிகமாயிருக்கும் என்ற செய்தியே’ என்றும் ஞாபகப்படுத்துவார்.”

“நிஜமாகவே இதெல்லாம் செய்வீர்களா?” என்று நான் கேட்டேன்.

“இது மாத்திரமா.. இன்னும் எவ்வளவோ செய்வோம். உங்கள் சிரமமெல்லாம் போய்விடும். சந்தோஷமாய், கவலையில்லாமல் ஜீவிக்கலாம்!” என்றான்.

நான் கதவை நன்றாகத் திறந்தேன். “உள்ளே வந்து உங்கள் கம்பெனியின் விலாசத்தையும் சந்தா விகிதத்தையும் உடனே சொல்லுங்கள்” என்றேன்.”

 

 

“தற்போது தினசரிகளில் வரும் ஹ்யூமர் பத்தியில்  யாராவது எழுதியிருப்பார். அதன் மொழிபெயர்ப்போ? என்றைக்கு வந்தது? யார் எழுதியது? நல்ல ஐடியாதான், இப்படி ஒரு கம்பெனி இருக்கிறதா என்ன?” என்றேன்.

“அம்மணி இது எழுதப்பட்டது 1940களில்”. என்றதும் “யார் தேவனா, கல்கியா, எஸ்விவி யா? என்றேன். இல்லை இது ஒரு பெண் எழுத்தாளர், பெயர் ரங்கநாயகி  என்று அவருடைய ஒரு போட்டோவுக்குச் சுட்டியும் அனுப்பியிருந்தார்.

1940களில் இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு பெண் என்றதும் ஆங்கிலக் கல்வி பயின்ற சரோஜினி நாயுடு போன்ற ஒரு உருவத்தைக் கற்பனை செய்திருந்த எனக்கு போட்டோவைப் பார்த்ததும் ஆச்சரியம், கொஞ்சம் அதிர்ச்சியும் கூடத்தான்.  ஒன்பதுகஜக் கைத்தறிப் புடவை, சாந்தமான முகம், ஒரு அன்பான அத்தை போல, அடுத்தவீட்டு மாமி போல.

kumudini

1905 –ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்த ரங்கநாயகி, செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தபோதும், ஆசாரமான பிராம்மணக் குடும்பங்களில் பெண்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குத் தயங்கிய காலத்தில் பிறந்ததால், வீட்டிலேயே தமிழும் சமஸ்க்ருதமும் கற்பிக்கப்பட்டார். படிப்பில் அபாரமான ஆர்வமும் புத்திகூர்மையும் உள்ளவராய் இருந்தார் ரங்கநாயகி. ஆனால் அக்கால வழக்கப்படி 10 வயதில் மணமுடித்து வைக்கப்பட்டு 13 வயதில் புக்ககம் புகுந்து, பதினைந்து வயதில் தாயானவர். பெரிய குடும்பம், ஆசாரமான நியம நிஷ்டைகள் பூஜை பரம்பரைகள் உறவினர்கள் விருந்தாளிகள் என்று எப்பொழுதும் வீட்டு வேலை.

ரங்கநாயகியின் சொற்களில்:

“அப்பொழுதெல்லாம் உட்கார்ந்து படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. எப்பொழுதும் வீட்டு வேலைதான். குழந்தைகள் கூட்டம்தான். கறிகாய் திருத்துவதும், அப்பளம் இடுவதும், பிரசாதத்தை பங்கீடு செய்வதுமாக நேரம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த நாட்களை நினைக்கும்போது பின்புறக் கூடத்தில் சதா ஆடிக்கொண்டிருந்த தொட்டில்களும், தூளிகளுமே என் கண்முன் தோன்றுகின்றன.”

எனினும் அரிதாய் கிடைத்த ஓய்வுநேரங்களிலும், இரவிலும் கணவர் மற்றும் தந்தை முலம் கிடைத்த புத்தகங்களை படித்துத் தன் மொழியாற்றலை வளர்த்துக் கொண்டார். வீட்டுக் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுகையில் கதை சொல்லும் அனுபவமே அவருக்கு ஒரு எழுத்துப்பட்டறை போலானது.

அன்பான குடும்பம், கணவர், இரண்டு குழந்தைகள் என்றிருந்த ரங்கநாயகிக்கு 22 வயதில்  காதுகேட்கும் திறன் குறைய ஆரம்பித்தது. இது முதலில் அவரை உள அளவில் பாதித்த போதும் பின் தடைகளை மீறி சாதிக்கும் அவருடைய இயல்பான குணத்தால் அவர் இன்னும் முனைப்போடு தன் படிப்பில் ஈடுபட்டதோடு எழுதவும் ஆரம்பித்தார்.

ஆசாரக் குடும்பத்துப் பெண் கதை எழுதுவதற்கு அவருடைய மாமியார் ஒப்பமாட்டார் என ரங்கநாயகியின் தந்தையார் அஞ்சினார். இத்தனைக்கும் அவருடைய சகோதரிதான். ஆகையால் முதலில் சில வருடங்களுக்கு இவர் கதைகள் பத்திரிகைகளில் வெளியாவது அவருடைய குடும்பத்தாருக்கே தெரியாது. கணவரும், தந்தையும் மட்டுமே அறிந்திருந்தனர். இலக்கிய இதழ்களுடன் கடிதப்போக்குவரத்து தந்தையின் விலாசத்தை உபயோகித்து நடந்துவந்தது. ஆனால் விஷயம் வெளியானபோது வீட்டில் எல்லோருக்கும் பெருமையே..sv-ws-logo copyதம் குடும்பத்தில் பரம்பரையாக வந்த  ஆச்சார நியமங்களில், பெண்களுக்கான கடமைகளில் மனப்பூர்வமாக ஈடுபட்டவர் என்றாலும், இவருடைய சிந்தனை பிற்போக்கானதாகவோ பழமையானதாகவோ இருக்கவில்லை. பெண் கல்வி, பெண் சுதந்திரம் போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி எழுதியவர். இவரே அவற்றுக்கு உதாரணமாக தன் சுயமுயற்சியாலேயே பலமொழிப் புத்தகங்களையும் படித்து தன் அறிவையும், உலகஞானத்தையும் வளர்த்துக் கொண்டவர். இவருடைய சூழலையோ, பள்ளிப்படிப்பின்மையையோ, காது கேளாமையையோ தன் சுயமுன்னேற்றத்துக்கு ஒரு தடையாகவே இவர் கருதவில்லை. இவரது கதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்கள் அறியாமையினின்று தம்மை விடுவித்து சுதந்திரம் பெற வேண்டியதின் அவசியத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்தி வந்தார். அவர் தாய்மையைப் போற்றுபவர் என்றாலும், அதுவே பல சமயங்களில் பெண்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாகிவிடுகிறது என்பதை அவர் மறுக்கவில்லை. இந்த நிலையை மாற்ற தாய்மை, பெண்மை என்று பெண்ணுக்கென விதிக்கப்பட்டப் பொறுப்புக்களை விட்டுக்கொடுக்காமலேயே ஒரு பெண் அறிவுஜீவியாக, ஆற்றல் நிறைந்தவளாக , தேசத்துக்கு ஒரு நல்ல பிரஜையாகத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும், வேண்டும் என்பதை அவரது எழுத்துக்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  அவற்றுக்கு ஒரு உதாரணமாகவும் வாழ்ந்தார்.

இந்தி மொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த தாகூரின் யோகாயோக் என்ற நாவல் ஆனந்தவிகடனில் வெளியானது. வாழ்வின் உயர் லட்சியங்களை மதிக்கும் மென்மையான பெண் குமுதினி. இவள் கணவனோ பணத்தை மதிப்பவன், தன் பணபலத்தில் கர்வம் உடையவன். குடும்பப்பகை காரணமாய் சாட்டர்ஜி குடும்பத்தை பழி வாங்குவதற்காக தன் பணபலத்தால் குமுதினியை மணந்து அவள் உணர்வுகளைச் சற்றும் மதிக்காமல் அவளையும் தன் உடைமைகளில் ஒன்று என்பதுபோல் கருதுபவன். இவற்றுக்கும் மேல் குடி, பிற பெண்களுடன் (ஏன் தன் அண்ணியுடனேயே) தொடர்பு போன்ற வெறுக்கத்தக்க பழக்கங்கள் உடையவன். இத்தகையவனை விட்டு ஒரு கட்டத்தில் குமுதினி பிரிய முயன்றாலும் அவனுடைய குழந்தையைக் கருவுற்றிருப்பதால் அவனுடனே போய் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறாள். ஒரு பெண்ணுக்கு தைரியம், தெய்வபக்தி, உழைப்பு இவை அனைத்தும் இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகள், இயற்கையின் விதி இவை அவள் விரும்பும் வாழ்வுக்கு, அவளின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன என்ற கதையின் கரு ரங்கநாயகியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அக்கதையை திறமையாய் மொழிபெயர்த்துத் தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். அதுவரை காதம்பரி, நந்தினி என்ற பெயர்களில் எழுதியவர் இந்த மொழிபெயர்ப்புக்குப் பின் அந்நாவலின் கதாநாயகியான குமுதினி என்ற புனைப்பெயரிலேயே எழுத ஆரம்பித்தார்.

இவரே எழுதி வெளியான ஒரு தொடர்கதை திவான் மகள். இது பெற்றோர் எதிர்ப்புடன் கலப்புத் திருமணம் செய்த ஒரு பிராம்மணப் பெண்ணைப் பற்றிய கதை. எழுதியது 1940களில். குடும்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். ஆயினும் அன்றைய பிராம்மண சமூகத்தில் நிலவி வந்த குழந்தைத் திருமணம், பெண்களின் ஆர்வங்களையும் அவரது அறிவு விருத்தியையும் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகள் இவை எல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாக இப்படிப் பதிவும் செய்தார். சொன்னதுடன் நிற்காமல் பிற்காலத்தில் அவரது பேரன் ஒரு கிருத்துவப் பெண்னை மணந்த போது அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்.

இப்படிப்பட்ட சிந்தனைகள் இவருக்கு வரக் காரணம் இவருடைய தேசப் பற்றும், காந்தியடிககள் மேலிருந்த பற்றும். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரங்கநாயகியும், அவரது கணவரும் கதராடையே அணிவது என்று தீர்மானித்தனர். இதைக் குமுதினி இறுதிவரை கைவிடவில்லை. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் இவருடைய மாமனார் ராவ்பகதுர் பட்டம் பெற்றவர். அவர்கள் வீட்டு முகப்பிலேயே பிரிட்டிஷ் சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஆயினும், குமுதினிக்கு இவையெல்லாம் தாம் நம்புவதில் முழுமனதோடு ஈடுபட ஒரு தடையாகவே இருக்கவில்லை. தனது கொளகைப்படி 25ம் வயதிலிருந்து இறுதி வரை கதராடையே அணிந்து வந்தார். கைக்குத்தலரிசி, ராட்டையில் நூல் நூற்பது, கதராடை அணிவது என்பவை இவரது வாழ்க்கைமுறைகள் ஆயின. தேசபக்தியும், காந்தீயமும் அவரது எழுத்துக்களிலும் பெரும்பங்கு வகித்தன. ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ருதத்தில் தேர்ந்திருந்தவர், காந்திய தாக்கத்தால் இந்தியும் கற்றுத் தேர்ந்தார்.

காந்தியிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக மூன்று முறை வார்தா ஆசிரமம் சென்றிருக்கிறார். காந்தியடிகள் குமுதினியைத் தன் பெண் என்றே குறிப்பிடுவாராம். பெரும் அரசியல் தலைவர்களே காந்தியடிகளின் ஆன்மபலத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு அவர்முன் வாயடைத்துப் போகையில், நாட்டின் தெற்குமூலையில் ஒரு சிறு ஊரில் இருந்த பெண்ணுக்கு அவரிடம் இருந்த உரிமையைப் பாருங்கள்! ஏதோ ஒரு விஷயத்தில் காந்தியடிகள் சொன்னதை ஏற்காத குமுதினி கோபமாய் “ பின் என்ன காந்தாரியைப் போல் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கச் சொல்கிறீர்களா?” என்று பதில் எழுதினாராம். அதற்கு காந்தியடிகள் தமக்கே உரிய அமைதியுடனும் பொறுமையுடனும் 13. 12.1940ல் எழுதிய கடிதத்தை ரங்கநாயகியின் மருமகள் Dr.பிரேமா நந்தகுமார் நம்முடன் பகிர்கிறார்:

“என் அன்புள்ள ரங்கநாயகி,

நீ.எழுதுவது புரிகிறது. மெச்சுகிறேன். மகாபாரதத்தில் வருவதை எல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. தன் கண்களை உபயோகிப்பதன் மூலம் காந்தாரியால் தன் கணவனுக்கு நிச்சயம் உயர்ந்த சேவை செய்திருக்க முடியும். அதனால் கண்ணைக் கட்டிக் கொள்வதை ஒரு உருவகமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்….பதி சேவை என்றால் குருட்டு வழிபாடல்ல, தன் கணவன்மார்கள் பலகீனர்களாக முழித்தபோது, திரௌபதி அவர்களைக் கோபித்தாள் அல்லவா? – அன்பு பாபு.”

குமுதினியின் காது கேளாமையைப் பற்றிக் கவலைப்பட்ட பாபு அதற்காக பல வைத்திய முறைகளையும் சொல்வாராம். எப்படிப்பட்ட உயரிய நட்பு, இதற்குத் அவரைத் தகுதியாக்கியவை ரங்கநாயகியின் அறிவும், சீலமும், நாட்டுப்பற்றும்.

காந்தியடிகளின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு வார்தாவுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வந்த உடனேயே, கைவிடப்பட்ட பெண்களுக்கும் கைம்பெண்களுக்கும் சேவை செய்வதற்காக திருச்சி சேவா சங்கத்தை ஆரம்பித்தார். தையல் தட்டச்சு வகுப்புகள் தவிர ஒரு ஆங்கிலவழிக் கல்விப் பள்ளியையும் ஆரம்பித்து நடத்தினார். அதற்கு நிதி திரட்ட நாடகங்களும் எழுதியிருக்கிறார்.

பயணங்களில் ஆர்வமுள்ள அவர் பல நாடுகளுக்கும் சென்று வந்ததைப் பற்றிப் பயணக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். போன இடங்களின் சரித்திரம், கலாச்சாரம், தம் மனதில் எழுப்பிய எண்ணங்கள் இவற்றை தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் பதிவு செய்திருக்கிறார். ஒருமுறை உறவினர் பெண்மணிகளை இலங்கைக்கு அழைத்துப் போக பாஸ்போர்ட் ஏற்பாட்டிலிருந்து எல்லாப் பொறுப்பையும் ஏற்றுத் தலைமைதாங்கி அழைத்துப் போன அனுபவத்தைப் பதிவு செய்கையில் இப்படி எழுதுகிறார்:

“பிரயாணம் தொடங்கியது முதல் ரசமான பேச்சு. ஒரே விஷயத்தைப் பற்றின பேச்சு: என்ன என்ன சாமான்கள் வாங்குவது, வீட்டில் இருக்கும் யார் யாருக்கென்று என்ன வாங்கி வருவது என்பதே. ஆசியா, ஐரோப்பா, இரண்டு கண்டங்களில் செய்யப்படும் பண்டங்கள் அனைத்தும் கொழும்பில் வந்து குவிகின்றன. இவைகளைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கையிலேயே எல்லோருடைய கண்களும் பளபளவென்று ஒளி பெற்ற கண்களாயின”.

மூன்றே வாக்கியங்கள்தான். அவற்றிலேயே பெண்களின் உளவியல், அதைப் பற்றிய ஒரு சுய எள்ளல், சம்பவத்தில் இழையோடும் முரண்நகை, அவற்றோடு அன்றைய காலக்கட்டத்தில் அந்நியப் பொருள்களின் மேலிருந்த மோகம் அனைத்தையும் அநாயாசமாகக் கைப்பற்றிவிடுகிறார்.

வார்தா ஆசிரமத்துக்குப் போன ஒரு அனுபவப் பதிவில்:

“குடிசையைச் சுற்றி வாழை, பவழமல்லி, ரோஜா, கொடிமல்லி முதலிய செடிகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. அவைகளை மாடு மேயாமல் இருப்பதற்காகச் சுற்றிலும் மூங்கில் பிளாச்சுகளால் கட்டப்பட்ட வேலியும், அவ்வேலியின் நடுவில் ஒரு வாயிலும் இருந்தன. நாங்கள் அவ்வாயிலை அடைந்த சமயம் வேறு எங்கோ சென்றிருந்த காந்திஜியும் அங்கு வந்து சேர்ந்தார். புன்சிரிப்புடன் எங்களை வரவேற்று, வாயில் கதவைத் திறந்துவிட்டு, நாங்கள் முதலில் நுழையவேண்டுமென்ற மரியாதையுடன் ஒதுங்கி நின்றார். இவ்வளவு மரியாதையை அங்கீகரிக்க நமது வீட்டுப் புருஷர்களிடையே பழகின எனக்குத் திறமை ஏது? நம் புருஷர்களெல்லாம் தாங்களே வீரசிம்மம் என்று நினைத்து எதற்கும் தாங்களல்லவோ முன் செல்வது வழக்கம்? பெண்களுக்காகக் கதவைத் திறந்துவிட்டு அவர்கள் முதலில் செல்வதுவரை காத்திருப்பது மேல்நாட்டாரிலும் மிகமிக நாகரிகமடைந்தவர்கள் பின்பற்றும் முறை. நான் புரிந்துகொள்ளாமல் மரம்போல் நின்றேன். “போகலாமே” என்று மகாத்மாஜி சொன்னபிறகே அவர் எனக்காகக் காத்திருப்பதை உணர்ந்து வெகு வேகமாக முன்சென்றேன்.”

 

ஒரே வீச்சில் மகாத்மாஜியின் பண்பு, பெண்களை அவர் மதித்த விதம், நம் சமூக வழக்கம், ஆண்களின் குணம், பெண்களின் நிலை என்பவற்றையெல்லாம் உள்ளடக்கி, அச்சுற்றுச் சுழலையும் புகைப்படம் போல் காட்டிவிடுகிறார். மாடைத் தடுக்க மூங்கில் வேலி, முள்வேலி கிடையாது – வார்தா ஆசிரமம் அகிம்சையின் உறைவிடம் அல்லவா! இதற்கெல்லாம் மேலாய் நம்மைக் கவர்வது அந்த சம்பவத்தில் அவர் விவரிக்கும் விதத்தில் இழையோடும் ஒரு tongue-in-cheek கிண்டல்!!

 

இவரது நகைச்சுவை எழுத்தைக் கல்கியே மனமுவந்து பாராட்டியுள்ளார். ஒரு புத்தக முன்னுரையில் அவர் சொல்வது:

“பதினைந்து வருஷத்திற்கு முன்பு ‘குமுதினி’ எழுதிய முதல் கட்டுரையைப் படித்த உடனேயே எனக்கு ஒரே வியப்பாய் போய்விட்டது. தமிழ் பாஷையை இவ்வளவு லாகவமாகக் கையாண்டு எழுதும் இந்தப் பெண்மணி யாரோ, எந்த ஊரோ, என்ன பேரோ என்று பிரமித்துப் போனேன். ஊர், பேர் முதலியன தெரிந்து போய் விட்டதினால் பிரமிப்பு நீங்கி விடவில்லை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.

தமிழ் வசனத்தைக் கையாளும் லாகவம் ஒரு புறமிருக்க சாதாரண சின்ன விஷயங்களைப் பற்றி இவ்வளவு ரஸமாக எப்படி எழுத முடிகிறது என்று ஆச்சரியமும் மற்றொரு புறத்தில் வளர்ந்து வந்தது. ஆங்கில நாட்டின் பிரபல ஆசிரியர்களான ஏ.ஜி. கார்டினர், ஹிலாரே பெல்லாக் முதலியோர்கள் இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி ரஸமான கட்டுரைகளை எழுதுவார்கள். அவற்றைப் படிக்கும்போது நாமும் இப்படியெல்லாம் ஏன் எழுதக்கூடாது என்று தோன்றும். ஆனால் எழுத உட்கார்ந்தால் எந்தச் சில்லறை விஷயத்தைப் பற்றி எழுதுவது என்றே முடிவு செய்யமுடிவதில்லை. ‘வங்காளப்பஞ்சத்தின் கோர தாண்டவம்” “தென்னாப்பிரிக்கா இந்தியர் படும் அவதி” “பீஜித் தீவில் தோட்ட முதலாளிகள் கொடுமை” முதலிய மகத்தான விஷயங்கள் பற்றி வேண்டுமானால் எழுதலாம்.

ஆனால் சலவைத் தொழிலாளியிடம் துணி போட்டு வாங்குவது, சமையல் அறையில் ஈ மொய்க்காமல் காக்கும் முறை, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் வரவேற்று உபசரிக்க வேண்டிய பத்ததி, அடுத்த வீட்டுப் பெண் குழந்தை சங்கீதம் கற்றுக் கொள்ளும் அழகு, ஆகிய சில்லறை விஷயங்களைப் பற்றி எழுதுவது அரிதரிது, மிகவும் அரிது.”

 

மனோதத்துவம், குழந்தை வளர்ப்பு, பெண்களுக்கான அறிவுரைகள் எனப் பலவகைக் கட்டுரைகள் எழுதிவந்திருக்கிறார். ஆயினும் இன்று அவருடைய எழுத்துக்களைத் தேடிப்பிடிப்பது சற்றுக் கடினமாகவே உள்ளது. பெரும்பாலும் நூலகங்களில் மட்டுமே கிட்டுகின்றன. அங்கும் இவர் எழுதிய அனைத்துப் படைப்புகளும் கிட்டுவதில்லை.  அவருடைய கட்டுரைகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்பில் The inner Palace  என்ற பெயரில் புத்த்கமாக வெளியிட்டிருக்கிறார் அஹனா லக்ஷ்மி என்பது சந்தோஷமான விஷயம். இவர் குமுதினியின் பெயர்த்தியும் Dr. பிரேமா நந்தகுமாரின் மகளுமாவார். இக்கட்டுரையில் வெளியாகியுள்ள பல தகவல்களும் மேற்கோள்களும் பிரேமா நந்தகுமார் எழுதியுள்ள  பெண்ணியத்தின் விடிவெள்ளி – குமுதினி  என்ற அருமையான புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஒரு சிறந்த எழுத்தாளர், திறமைசாலியான பெண்மணி, தேசப்பற்று மிக்க பிரஜை, என்பதற்கெல்லாம் மேலாய் ஒரு நல்ல மனிதராய், குடும்பத்தினருக்கு ஆதர்சமாக வாழ்ந்தவர் குமுதினி என்பது அவரது மருமகள் எழுதிய இந்த புத்தகத்தில் வெளிவருகிறது.

குமுதினி1

பல பெண்களும் தம் முன்னேற்றத்துக்குத் தடையாய் எண்ணிச் சோர்ந்துபோகும் அத்தனை தடைகளும் தன் வாழ்விலும் இருந்த போதிலும் அவை அனைத்தையும் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், தன்னையும் சுற்றியுள்ள சமூகத்தையும் முன்னேற்றப் பாடுபட்ட ஒரு பெண், தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து குடும்பத்தையும் அரவணைத்துச் சென்றவர், தம் காலகட்டத்தின் சூழலுக்கும் முற்பட்டு யோசித்த ஒரு அறிவாளி என்ற எல்லாப் பரிமாணங்களிலும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்த ரங்கநாயகி தாத்தம் அவர்கள் நிச்சயமாய் பெண்ணியத்தின் விடிவெள்ளி என்று அழைக்கத் தகுதியானவரே.

 

பெண்ணியத்தின் விடிவெள்ளி – குமுதினி

எழுதியவர்: DR.பிரேமா நந்தகுமார்

வானதி பதிப்பக வெளியீடு

 

 

 

 

 

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.