kamagra paypal


முகப்பு » அனுபவம், அரசியல்

ஜப்பானில் இந்திய வணிகம்

Japan-India

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் மிகவும் பிடித்த நாடு என்று சொல்லப்படுகிறது. இதை நிரூபிப்பது போல், சில வாரங்கள் முன் தன் ஜப்பான் பயணத்தை கூடுதலாக ஒரு நாள் தங்கியிருந்து விட்டு வந்துள்ளார். 2000 ம் வருட ஆரம்பத்தில் இந்தியத் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு உலகின் பல இடங்களில் வேலை இருந்தது. முக்கியமாக மில்லினியம் ஆரம்பத்தில் Y2K என்ற 2000 வருட ஆரம்பத்தில் கணினியில் ஏற்படும் என்று எதிர்பார்த்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு நிறைய வேலை இருந்தது.

இந்த சமயத்தில் இந்தியர்களை அதிகம் வரவழைத்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இந்திய நிறுவனங்களுக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது ஜப்பானில் வணிகம் செய்வது மற்றும், கலாசார வித்தியாசங்களைப் புரிந்து கொள்வது போன்ற விஷயங்களை வைத்து கட்டுரை எழுதியிருந்தேன். என் தடம் சொல்லும் அந்தக் கதை இங்கே:

வருடம்: 2000. 29, அக்டோபர்

சமீப காலத்தில் நிறைய இந்திய மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஜப்பானுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் – Y2K எனப்படும் ஆயிரமாம் ஆண்டில் கணினியில் வரக்கூடும் பிரச்சனைகளுக்குத் தீர்வு, மற்றும் இதர மென்பொருள் கட்டமைப்பு வேலைகளுக்காக. இப்படி ஜப்பானில் தொழில் செய்யும் இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து திடீரென்று இந்திய அலுவலகத்துக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. விஷயம் என்னவாம்?

“உடனடியாகக் கொஞ்சம் இந்திய சமையல் குறிப்புகளை அனுப்புங்கள்!!”

இங்கே உள்ளவர்களுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம்; ஒரு பக்கம் புன்னகை…. அப்படி என்ன தேவை – அவசரம்…. இந்திய சமையல் குறிப்புகளுக்கு?

அங்கிருந்து வந்த பதில் இன்னும் சுவாரசியம்: “ நம்ப இந்தியர்கள் இங்க வேலை செய்யறது பெரிய விஷயமில்லை. ஆனால் அவங்களுக்கும் எங்களுக்கும் வாழ்க்கை முறைகளில் நிறைய வித்தியாசம் இருக்கு – அட்ஜஸ்ட் செய்யதான் கொஞ்சம் தடுமாறுகிறோம்” என்று விளக்க ஆரம்பித்தார்கள் அங்கே சென்றவர்கள். விஷயம் இதுதான்.

சாதாரணமாக காலையில் அலுவலகத்துக்கு வரும் ஜப்பானியர்கள், மாலை 6 அல்லது 6.30 க்கு ஆபீசுக்கு அருகில் இருக்கும் ஏதோ ஒரு உணவகத்தில் அவங்க உணவான ஷிரொயே, கோஹா(சாதம்), மிசோ சூப் என்று எளிதாக இரவு உணவை முடித்துக்கொண்டு, திரும்பவும் அலுவலகத்துக்கு வந்து விட்ட வேலையைத் தொடர ஆரம்பித்து விடுவார்கள். அப்படியே நடு நிசி வரையிலும் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

நம்ம ஊழியர்களுக்கு இந்த ஜப்பானிய உணவெல்லாம் சரிப்படாது. வேலையோ நிறைய இருக்கும். சரி, வீட்டுக்குப் போய் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்றால், வசிக்கும் இடங்கள் பெரும்பாலும் நகரைவிட்டு வெகு தூரத்தில் இருக்கும்; வீட்டுக்குப் போய் வருவது என்பது டோக்கியோவின் போக்குவரத்தில் பல மணி நேரம் ஆகும். நம்ப ஊழியர்கள் ரூம் போட்டு யோசித்தார்கள். ஆ… ஒரு தீர்வு பளிச்சிட்டது. அந்த ஜப்பான் உணவகங்களை நிர்வகிப்பவர்களுக்கு நம்ப இந்திய உணவு வகைகள் சிலவற்றைச் சொல்லிக்கொடுத்துவிட்டால்…….?! நம்ம உணவுப் பிரச்சனையும் தீருமே…!!! உடனடியாக இந்தியாவுக்கு அழைப்புப் பறந்தது – இந்திய சமையல் குறிப்புகள் வேண்டி!!

“ஆனால், அந்தத் தீர்வும் பிரமாதமாக பலனளிக்கவில்லை…” என்றார் இந்த விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஒரு மென் பொருள் நிறுவன அதிகாரி. என்னதான் சமையல் குறிப்பு கொடுத்து அந்த உணவகங்களில் சமைக்க வைத்தாலும் நம்மவர்களுக்குச் சரிப்படவில்லை. விலையும் எக்கச்சக்கம். இந்தத் தீர்வு ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கவில்லை.

தற்போது பெருகி வரும் இந்திய ஜப்பானிய வணிக உறவில் பல நல்லவை இருந்தாலும், இப்படிபட்ட சில விக்கல்கள் இருக்கதான் செய்கிறது. இதைத்தான் ஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் தன் இந்தியப் பயணத்தின்போது குறிப்பிட்டு, இந்திய ஜப்பானிய வணிக உறவு இப்படிபட்ட சிற்சிறு குறைகளைத் தாண்டி வளர வேண்டும் என்றார்.

கடந்த சில வருடங்களாக நிறைய இந்திய மென்பொருள் வல்லுனர்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் நாடுகளில் வரவழைத்துள்ளன. இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் வாங்குபவர்கள் வரிசையில் இப்போது ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளும் சேர்ந்துள்ளன.  ஏற்கனவே அரசு ரீதியில் இந்திய ஜப்பானிய அரசுகளுக்கிடையே நிறையப் பரிமாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவிற்குப் போட்டியாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும் தொழில் நுட்ப வணிகம் அதிகரித்து வருகிறது. ஒரு ஜப்பானிய ஆய்வின்படி, 1996 ம் வருடம் தகவல் தொழில் நுட்ப வேலைகளுக்காக ஜப்பான் சென்ற ஒவ்வொரு இந்தியருக்கும் இணையாக ஒவ்வொரு சீனரும், பிலிப்பினோவும் சென்றிருக்கினர். இதுவே, 1999 ம் வருடம் சீனாவும் பிலிப்பைன்சும் இன்னும் அதிகமாகவே தகவல் தொழில் நுட்ப இஞ்சினீயர்களை அனுப்பி இருக்கிறார்கள்.

இதுபோல் ஜப்பானின் வெளி நாட்டு வணிக அமைப்பான “ஜெட்ரோ” (Japan External Trade Organisation ) இந்தியாவில் ஜப்பானின் முதலீடுகள் 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறுகிறது. இந்தியக் கணக்குபடி, இந்தியாவின் 17000 கோடி தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதியில் 15 சதவிகிதம் ஜப்பானுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தகவல் தொழில் நுட்பத்தில் அதிகம் செலவழிப்பது ஜப்பான் நாடுதான்.

சமீபத்தில் ஒரு ஜப்பானிய நிறுவனம் வரும் 5 வருடங்களில் தங்களுக்கு 10000 தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனக்களில் வேலை செய்யும் அதிகாரிகள் பலர், 2008 ம் வருடத்திற்குள் ஜப்பானுக்கு இந்திய மென்பொருள் ஏற்றுமதி ரூ.100,000 கோடிகளைத் தாண்டிவிடும் என்று கணிக்கின்றனர். ஆனால், நாமும் விடாமல் ஜப்பானின் மென்பொருள் சந்தையைக் கவருவதில் ஆர்வத்துடன் உழைக்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

ஜப்பான் தூதரகத்தில் ஜப்பான் –இந்திய வணிகம் பற்றி உரையாடினேன். ஜப்பானில் தற்போது இருக்கும் மோரியின் அரசாங்கம் தகவல் தொழில் நுட்பத்திற்கு அதிக அளவில் ஊக்குவிப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தத் துறையில் அதிக முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நோக்கில் ஜப்பான் அரசின் நாட்டம் இந்தியா மேல் அதிகமாகவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எல்லாம் சரி; ஆனால் கலாசார முறையிலும் வாழ்க்கை முறையிலும் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் எந்த அளவு வணிக உறவை பாதிக்கும்?

“அது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்று சொல்கிறார்கள் ஜப்பானுக்கு அடிக்கடி சென்று வரும் தொழில் முனைவர்கள். “செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதுபோல் வாழ்முறை வித்தியாசங்கள் எல்லாம் நாளடைவில் பழகிப்போய் விடும் என்பது இவர்கள் விளக்கம்.

vajpayee moriஉணவு தவிர, வேலை செய்யும் முறையிலும் சில வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, ஜப்பானியர்கள் நேரம் பற்றி கவலையே படாமல் நாள் முழுக்கவும் கூட வேலை செய்ய அஞ்சமாட்டார்கள். “ சில சமயம் இடைவேளையே இல்லாமல் அவர்கள் உழைக்கும் உழைப்பு நம்மவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும்” என்று ஒரு இந்திய தொழில் முனைவர் கூறுகிறார். “இதற்கு ஒரு காரணம், ஜப்பனியர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏறக்குறைய தெய்வம் போல் கருதுவது வழக்கம். வாடிக்கையாளர்கள் என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுவதுதாம் தங்கள் முதல் கடமை என்ற என்ணம் உள்ளவர்கள். அதிலும், வாடிக்கையாளர்களின் நேரம் மிக முக்கியமானது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வேலைக்கு 20 மணி நேரம் கட்டாயம் வேண்டும்; ஆனால், வாடிக்கையாளர் 15 மணி நேரத்தில் தேவை என்கிறார் என்றால், இவர்கள் மறு பேச்சு சொல்லாமல் ஒத்துக்கொண்டு விடுவார்கள். தங்கள் ஊழியர்கள் அந்த வேலையை வாக்குப்படி 15 மணி நேரத்தில் முடித்துக் கொடுத்துவிடுவார்கள். ஒரு ப்ரொஜெக்டை முடிக்க இரவு முழுக்க உட்கார்ந்து வேலை செய்வதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம். சில சமயம் நமது இஞ்சினீயர்களுக்கு இது சரிவராது. ஜப்பான் செல்லும் இந்திய ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இது. ஜப்பானியர்கள் நேரத்தை மிக மதிப்பவர்கள்; அதுபோல் சட்டம், மற்றும் டெலிவரி காலவரைகள் இவற்றை பெரிதும் பின்பற்றுபவர்கள். இதில் கொஞ்சம் கூட சொதப்பாமல் நம் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும்.” என்கிறார் இவர்.

ஜப்பானில் அடுத்த பெரிய குறை, வசிக்கும் அல்லது அலுவலக இடங்கள். பெரும்பாலும் நகரங்களில், நிலப்பரப்பு குறைவாகவும், மக்கள் தொகை அதிகமாகவும் இருப்பதால், குடியிருப்புகளுக்கு எக்கச்சக்க வாடகை கொடுக்க வேண்டி இருக்கும். வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பு என்றால், கார் வாங்குவது அதைவிடக் கடினம். காருக்கு இன்சூரன்ஸே அதிகம் கட்ட வேண்டும். ஆனால், பஸ், ரெயில், டாக்ஸி போன்ற பொது வாகனங்கள் மிக மிக வசதியானவை. சொந்தமாக கார் தேவையே இல்லை.

மொழி பெரும் சிக்கல்தான். ஆனால் ஆர்வமுள்ள நம் ஊர்க்காரர்கள் பலர், ஜப்பான் சென்ற சில நாட்களிலேயே ஓரளவாவது அந்த மொழியைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.

ஜப்பானில் இப்போதைக்கு வாய்ப்புகள் அதிகம்தான். ஆனால் தனிப்பட்ட முறையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் அரசு சார்ந்த அல்லது பெரும் நிறுவன அமைப்புகள் மூலம் வணிக கூட்டு முயற்சிகள் மூலமே இந்தியர்கள் அங்கு செல்லுகிறார்கள். பல மென் பொருள் வேலைகள் கரைக்கு அப்பால் – Off Shore  – இந்தியாவிலேயே செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அப்படி இங்கேயே வேலை செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்கள் ஜப்பான் மொழி வகுப்புகள் என்று பல இடங்களில் பெருகி வருகின்றன.

கலாசார ரீதியில் பார்த்தால் ஜப்பானியர்கள் அதிகம் பேச மாட்டார்கள். குறிப்பாக சட்டென்று தங்கள் கருத்துக்களை வெளியே விட்டுவிட மாட்டார்கள். பொதுவாக மேலை நாடுகளில் மாற்றுக் கருத்து இருந்தால் அவை, கூட்டத்திலேயே உட்கார்ந்து அலசப்பட்டு பொதுவான தீர்வு கண்டுபிடிக்க முனைவார்கள். ஆனால் இங்கே அப்படியல்ல. பொது இடத்தில் தம் கருத்தை வெளிப்படையாக சொல்லத் தயங்குவார்கள். தாம் சொல்வது தவறாக இருந்தால், பொது இடத்தில் அது அவமானம் என்று நினைப்பார்கள். இதைத் தவிர்க்க கருத்துக்களை தனிப்பட முறையில் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள நினைப்பார்கள். இதற்கு ஜப்பானிய மொழியில் “நேமவாஷி” என்பார்கள். இதற்கு ஜப்பானிய தோட்டக்கலை ஆதாரம். இளம் செடிகளை மொத்தமாக சட்டென்று மாற்றி நட்டால், புதிய இடத்தில் வாடிவிடக் கூடும் என்று, முதலில், நிலத்தை தயார்செய்து, ஒவ்வொன்றாக நிதானமாக மாற்றி நடுவது ஜப்பானியத் தோட்டக்கலையில் ஒரு அம்சம்.

அதுபோல் வணிக ரீதியிலும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளும் தனிப்பட்ட முறையில் அந்தந்த தனி மனிதரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பது அவர்கள் வழக்கம். இது பல வெளி நாட்டவர்களுக்குப் புரியாது. ஒரு வணிகக் கூட்டத்துக்கு வரும்போது ஏன் ஒரு ஜப்பானியர் முன் முடிவுடன் வருகிறார் என்று ஆச்சரியப்படுவார்கள்.. ஒரு மீட்டிங்கு வரும் முன்பே அவர்கள் கருத்து வேறுபாடுகளை எதிர்பார்த்து, அலசி தீர்வுகள் முடிவு செய்து கொண்டு வருவது சகஜம். எதிர்பாராமல் வேறுபாடுகள் தோன்றினால், தனியே கலந்தாலோசித்துவிட்டு பின்னர் முடிவுகள் எடுப்பார்கள். பொது இடத்தில் எந்த விதத் தலைக்குனிவும் (loss of face) வரக்கூடாது என்பதில் குறிப்பாக இருப்பார்கள். அதுபோல் அவர்கள் ஆங்கிலத்தில் “Gut Feeling” என்று சொல்லும் உள்ளுணர்வுக்கும் மிகுந்த மதிப்பளிப்பார்கள். இதற்கு” ஹராகே” என்பார்கள். அதுபோல் உடல் மொழியும் – Body Language -வணிகத்தில் அதி முக்கியம். அவர்களைப் பொறுத்த வரையில் “கோனே” (வணிகத் தொடர்புகள்) மற்றும் “கானே” (பணம்) இரண்டும் வணிகத்துக்கு அத்தியாவசியமானவை. பொதுவாக தலைவர் சொல் அல்லது தலைவரின் முடிவு மிக முக்கியம் – பொதுத் தீர்வு (Consensus) என்பதைவிட.

இப்படிப் பலவிதத்திலும் ஜப்பானியர்களுடன் வணிகம் செய்யும் முன் அவர்களின் கலாசார மற்றும் சமூக பின்னணிகளைப் புரிந்து கொண்டு ஆரம்பிப்பது பயன் தரும்.

சிறு கஷ்டங்கள் இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் ஜப்பான் செல்லவே விழைகின்றனர். ஜப்பானியரின் வேலை செய்யும் பக்தி கலந்த ஆர்வத்தை இந்தியர்கள் பலர் பின்பற்ற ஆசைப்படுகின்றனர். அவர்களின் வேலை கலாசாரம் இந்தியாவில் பலரை ஈர்க்கிறது. தவிர, ஜப்பானியர்களுக்கும் இந்தியர்களின் மேல் ஒரு பிணைப்பு இருக்கிறது. கலாசார ரீதியில் இந்தியர்களோடு தங்களுக்கு நிறைய ஒற்றுமை இருப்பதாக நினைக்கிறார்கள்.

வருடம் 2014

பதினான்கு வருடங்கள் கழித்தும் இந்த நிலையில் ஏதும் மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஜப்பான் – இந்திய வணிக அரசியல் உறவுகளில் எந்தத் தொய்வும் இல்லாமல், சுமூகமாகவே இருப்பது இதம் தருகிறது.

Series Navigationஇணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்சிங்கப்பூர் அரசியலில் பெண்கள்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.