உன் கேள்விக்கென்ன பதில்? – 3

பர்மாகல்ச்சர் என்றால் என்ன? விவசாயத்தில் இதன் பங்கு என்ன?

– நாச்சிமுத்து, சாமத்தூர்


இந்தியாவில் மகாத்மா காந்தியும் ஜே.சி. குமரப்பாவும் வழங்கிய காதி- தொழில்- விவசாய ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மறுபதிப்பாக ஆஸ்திரேலியாவில் உருவான ஒரு தத்துவச் சிந்தனை பர்மாகல்ச்சர்- அதாவது, நிலையான பண்பாடு. இதை உருவாக்கியவர்கள் பில் மோலிசன் மற்றும் ஹோம்க்ரன் ஆவார்கள். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலைக்கும் பண்பாட்டு நிறுவனம் உள்ளது.

நிலையான பண்பாட்டில் இயற்கை விவசாயத்துடன் மனித வாழ்க்கையின் இயக்கம் பற்றிய முழுமையான போதனை உண்டு. கட்டிடக்கலை, தோட்டக்கலை, போக்குவரத்து, நிதி, வீணாக்கப்படாத தொழில் உற்பத்தி, வீணாகும் பொருட்களின் மறுசுழற்சி அடங்கிய சமூகத் திட்ட வடிவம். குறிப்பாக, ஆற்றலின் சேமிப்பு வலியுறுத்தப்படுகிறது. பெட்ரோல் மற்றும் புதுப்பிக்கப்பட முடியாத மூலாதார வளங்களாக உள்ள நிலக்கரி, எண்ணெய்க்கிணறுகளின் சிக்கனத்திற்குரிய தொழில்கள் வலியுறுத்தப்படும். விவசாயத்தில் இடுபொருள் விவசாயம் நிகழும் இடத்திலேயே உற்பத்தி செய்தால் இடுபொருள் செலவு குறையும். ஆடு, மாடு, கோழி வளர்ப்பைவிட மர வளர்ப்பு, பசுந்தாள் உரம், குலை மிதித்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மேட்டுப் பகுதியில் மரவளர்ப்பும் பள்ளக்காலில் உணவுப்பயிர் சாகுபடியும் வலியுறுத்தப்படுகிறது. மரங்களிலிருந்து உதிரும் சருகுகளை விவசாயத்துக்குப் பயனாக்கும் உத்தியும் வலியுறுத்தப்படுகிறது.

பர்மாகல்ச்சர் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள 1978ல் Bill Mollison மற்றும் David Holmgren இணைந்து எழுதிய Permaculture நூலைப் படிக்கலாம்.

Bill Mollison_David Holmgren _Permaculture

ஊர்க்காடு திட்டம் என்று எதுவும் உண்டா? அதை வடிவமைப்பது எப்படி?

– கே. ஆர். முத்துசாமி, அவினாசி

பாட்டிமார் சொல்லும் கதைகளிலும் அம்புலிமாமா பஞ்சதந்திர கதைகளிலும் ராஜா ராணி கருப்பு வெள்ளை திரைப்படங்களிலும் காணப்படும் காடுகள் ஊர்க்காடுகள். அந்தக்காலத்தில் இரு ஊர்களுக்கிடையே பல மைல் இடைவெளி இருக்கும், பெரிய பெரிய காடுகள் இருந்திருக்கும். இப்போது இடைவெளி குறைந்து குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆகவே ஒரு பஞ்சாயத்துக் கிராமம் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஊர்த்தலைவர் பொறுப்பின்கீழ் காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். தரிசு நிலத்தைக் குடியிருப்புகளுக்கு ஒதுக்குவது போல் மரம் வளர்க்க ஒதுக்கப்பட்டு, மரக்கன்றுகளை நெருக்கமாக நடவு செய்து அடர்த்தியான காடுகளை உருவாக்குவதுதான் ஊர்காடு திட்டம்.

Sustainable_Plants_Houses_Carbon_Emissions_Animals_Trees_Environment_Drawing_Plantation_Grow_Forests_Live_Types_Layers

ஒரு பக்கம் அரசியல்வாதிகள் மரம் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். ஆனால் மரம் வளர்ப்பைவிட வேகமாக வன அழிப்பு நிகழ்கிறதே? பசுமையைக் காப்பற்ற என்ன செய்ய வேண்டும்?

– எஸ். சுவாமிநாதன், தென்காசி

மரத்துக்கான தேவை உயர்ந்த அளவு மரங்கள் நடப்படவில்லை. குறிப்பாகக் காகிதத் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், புழுங்கலரிசி அரைவை ஆலை பாய்லர்கள், மேஜை நாற்காலி சோபா கட்டில் போன்ற தச்சு வேலைகள் ஆகிய காரணங்களால் மரங்களின் தேவை அதிகரித்தாலும் மரவளங்கள் அதிகரிக்கப்படவில்லை. வாங்குவோர் வாங்கிய வண்ணம் உள்ளனர். மர விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதால் மரவளர்ப்பு லாபகரமான தொழில். நன்கு முற்றிய குமிழ், தேக்கு, ரோஸ்வுட், மகோகனி, கடம்பு, இயல்வாகை, சந்தனம், செஞ்சந்தனம் ஆகியவை மதிப்புள்ளவை. இருபது ஆண்டுகளில் வைரம் பாய்ந்து விடும்.

வனத்துறை இழந்த மரங்களை ஈடு செய்வதற்கு மரவளர்ப்புத் திட்டம் உள்ளது. ஆனால் வனத்துறையினர் எந்த அளவுக்கு அதை நிறைவேற்றுவார்கள் என்று எதுவும் சொல்வதற்கில்லை. மரத்தைப் பயன்படுத்த மரங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

நிலமுள்ள விவசாயிகள் மர வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். காகிதத் தொழிற்சாலைகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் மரவளர்ப்பில் ஈடுபடலாம். அவர்களுக்குத் தேவையான மரங்கள் யூகலிப்டஸ், மூங்கில், சவுக்கு, பீக்கன் முதலியவை.

இன்று விவசாயத்தில் ஆள்பற்றாக்குறை அதிகமாகிவிட்டது. மரவளர்ப்பில் ஈடுபடுவோர் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பயிர் விவசாயத்தைவிட மரவிவசாயத்துக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படாது. எப்படி, எவ்வாறு செய்வது?

மர நடவை பன்னிரெண்டு வகைகளாகப் பிரித்துக் கொள்வோம்:

1. குளிர்ச்சாதன மரங்கள்: உங்கள் நிலத்தில் கால்காணி அல்லது 33 செண்ட் நிலத்தைக் காடு வளர்ப்புக்கு ஒதுக்கவும். இந்த இடத்தில் ஐந்து அடி இடைவளிக்கு ஒரு மரம் என்று நெருக்கமாக 200, 300 மரங்கள் நடலாம். கொன்றை, வாகை, இலுப்பை, காட்டு மா, கொடுக்காப்புளி, தூங்குமூஞ்சி, புங்கன், படகு மரம், வேம்பு என்று எதை வேண்டுமானாலும் நடலாம். நெருக்கமாக நடும்போது புளியமரம்கூடத் தேக்கு போல் உயர்ந்து பக்கக்கிளை இல்லாமல் மேலே செல்லும். பத்து ஆண்டுகளில் அந்த இடம் அற்புதமான காடாகிவிடும்.

2. உயிர்வேலி மரங்கள்: பனை, சூபாபுல், கிளைரிசீடியா, கருஞ்செம்பை, கிளுவை, களாக்கா, ஆடாதொடை போன்றவை பயனாகும். சொத்துக்கத்தாழைகூட வெளியில் பயிரிடலாம்.

3. பழமரங்கள்: வருமானம் தரக்கூடிய நெல்லி, மா, கொய்யா, சப்போட்டா, முருங்கை ஆகியவற்றைக் கலப்பாக நடலாம். மேற்படி நிலங்களுக்கு நீர்ச்செலவு குறைவு.

எலுமிச்சை, நார்த்தை, கிடாரை, சாத்துக்குடி, மாதுளை ஆகிய மரங்களைக் கலப்பாக நடும்போது ஆங்காங்கே பப்பாளி மரங்களையும் நட வேண்டும். எலுமிச்சையுடன் பப்பாளி இணைந்தால் பூச்சித் தொல்லை இருக்காது. பப்பாளி மரங்கள் நல்ல வருமானம் கொடுப்பவை. பழம் நல்ல விலை போகும். எலுமிச்சை போன்ற மரங்களுக்கு நீர்த்தேவை உண்டு.

மிகவும் வறட்சியான பூமியில் வில்வம், விளா, வெள்வேல், வன்னி, கொடுக்காப்புளி போன்ற முள்மரங்களை நடலாம்.

4. விஸ்வகர்ம மரங்கள்: விஸ்வகர்ம மரங்கள் என்பன தச்சுவேலை- மரவேலைக்குரிய மரங்கள். கேள்வியின் துவக்கத்தில் கூறப்பட்ட தேக்கு, கடம்பு, மகோகனி, பூவரசு, இயல்வாகை, மருது, கருங்காலி, தோதகத்தி, கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம் – இவற்றைக் கலப்பாக நடலாம்.

5. தழைமரங்கள்: சூபாபுல், அகத்தி, முருங்கை, ஆவு, வாதநாராயணன், தழுதாழை, கிளைரிசிடியா, கிளுவை ஆகியவற்றை பயிர்வேலிகலாகவும் நடலாம்.

6. தெய்வீக மரங்கள்: தென்னை, ஆல், அரசு, பலா, நாவல், புரசு, அத்தி, வில்வம், மா, மருது, நாகலிங்கம், புன்னை, வேம்பு, – இவற்றில் ஆல், அரசு நீங்கலாக மற்றவை தோட்டத்தில் பயிர் செய்யலாம். இடம் நிறைய இருந்தால் ஆல், அரசும் தோட்டத்தில் பயிர் செய்யலாம்.

7. மருந்து மரங்கள்: அசோகம், ஆமணக்கு, கடுக்காய், ஆடாதொடை, சோத்துக்கத்தாழை, மாவிலங்கம். தான்றி, நெல்லி, வாழை, செம்மந்தாரை, வில்வம், வேம்பு, குமிழ், மருதம் முதலியவை.

8. வாசனை மரங்கள்: கிராம்பு, ஜாதிக்காய், மருதாணி, நொச்சி, சாம்பிராணி, சந்தனம் போன்றவை.

9. பூச்சு மரங்கள்: சீயக்காய், உசிலை, செம்பருத்தி, எலுமிச்சை, ஆவாரை, கமிலா முதலிவை.

10. பூ மரங்கள்: பாரிஜாதம் *(பவழமல்லி), மல்லிகை, முல்லை, சம்பகம், அரளி, ரோஜா, பன்னீர், மந்தாரை, குல்மொகர் (சிவப்புக் கொன்றை), கடம்பு, புன்னை, நந்தியாவட்டை, சரக்கொன்றை முதலியவை. போகன்வில்லாவும் நடலாம்.

11. காகித மலர்கள் (பிளைவுட், தீக்குச்சி): யூகிலப்டஸ், மூங்கில், சூபாபுல், சவுக்கு, மலைவேம்பு, சந்தனவேம்பு (பிளைவுட்), பீக்கன், தடமரம் (தீக்குச்சி),

12. வனமரங்கள்: அனைத்து மரங்களும் இவ்வகையில் அடங்கும்.

வனவேளாண்மையைத் திட்டமிட்டுச் செய்தால், பயிர் விவசாயத்தைவிட அதிக லாபம் பெறலாம். அதே சமயம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். மாவட்டம்தோறும் உள்ள மரம் வளர்ப்போர் சங்கம், வனவிரிவாக்கத்துறை, தோட்டக்கலைத்துறை, கோவை வானவியல் கோட்டம் மூலம், மரக்கன்றுகள் மரவிதைகள் பெற்று மரவிவசாயத்தில் ஈடுபடலாம். தனியார் நர்சரிகளிலும் தரமான மரக்கன்றுகள் கிட்டும். தரமான யூகலிப்டஸ், மூங்கில் கன்றுகளைப் பெற ஆந்திர பிரதேசம் பத்ராசலம் ITC காகித ஆலை- JK காகித ஆலைகளையும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.