உன் கேள்விக்கென்ன பதில் – 2

6.  ஐயா, வயல்களில் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. இயற்கை வழியில் கட்டுப்படுத்த இயலுமா?
– த. பூமிநாதன், சித்துக்காடு
ஏன் இல்லை? இயற்கை வழியில் மனித தலையீடு இல்லாமல் பாம்புகள் அதைச் செய்து வருகின்றன. பாம்புகளுக்கு எலி, தவளை, மூஞ்சூறு முதலானவை முக்கிய உணவுகள். பூனை வளர்க்கலாம், ஆனால் பூனைகளைப் பார்த்தால் பாம்புகள் ஓடிவிடும். ஏனெனில் பூனை எலிகளை மட்டுமல்ல, பாம்புகளையும் பிடிக்கும். எனவே அந்தக் காலத்தில் வயல்வெளிகளில் ஏராளமான பாம்புகள் இந்த வேலையைச் செய்து வந்தன. மனிதர்கள் பாம்பை அடித்துக் கொல்லாதவரை பாம்புகள் இந்த வேலையைச் செய்கின்றன.
சுரபாலர் அருளிய விருட்சாயூர்வேதம் என்ற சுவடியில் எலிகுணபம் பற்றிய குறிப்பு உள்ளது. கிராமங்களில் எலிகளைக் கிட்டிவைத்து பிடிப்பார்கள். கிட்டிவைத்துப் பிடிப்பவர்கள் எலிகளை உண்பதுண்டு. எனினும் எலிகளை விலை கொடுத்து அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்.
எலிகுணபம் செய்முறை குறிப்புகள்:
பாண்டிவீரனுக்கு கிடா வெட்டுவதாக நேர்ந்துகொண்டு ஒரு பெரிய இரும்புச் சட்டியில் ஒரு கிலோ எள்ளுப் பிண்ணாக்கைப் போட்டு சூடேற்றியதும், ரத்தத்துடன் எலிகளைத் துண்டங்களாக்கி கடாயில் போட்டு வறுக்கவும். அதில் சிறிது நெய்யும் தேனும் விடவும். அதன்பின்னர் ஒரு தனி பாத்திரத்தில் 5 லிட்டர் பசு மூத்திரம், 5 கிலோ சாணி, 1 கிலோ வெல்லம் கலந்த அமிர்த கரைசலில் 2 லிட்டர் இட்லிக்கு அரைத்த மாவைச் சேர்க்கவும்., எலி இறைச்சி வெந்தபின் ஆற வைத்து, அதை அமிர்த கரைசலில் கொட்டி மூடி வைக்கவும். பஞ்சகவ்யத்தைக் கலக்கி விடுவது போல் ஒரு வாரம் கலக்கிக் கொண்டிருந்து, பின்னர் வடி கட்டி 500 மில்லிக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து நெற்பயிரில் 10 டேங்க் வரை அடித்துவிட்டு வடிகட்டிய மண்டியை அமிர்த கரைசலில் பழையபடி கொட்டி, ஒரு கிலோ வெல்லம் இடவும். வெல்லத்தை தூள் செய்து கலப்பது நன்று.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட எலி குணபத்தை, சோதனை அடிப்படையில் மாரியம்மன் கோவில் கோ. சித்தர் என்ற விவசாயி நெற்பயிரில் அடித்தபோது, ஓரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லும் அளவில் நெல் மகசூல் கூடியது. வயலில் எலிகள் தலைகாட்டுவது நின்றது.
7. பஞ்சகவ்யம் பற்றி பலர் பலவிதமான பார்முலா வழங்குவதால் குழப்பமாக உள்ளது. இதன் சரியான செய்முறை, சரியான பயன்பாடு பற்றிய குறிப்பு வழங்கவும்.
– ஆதித்யா, திருவான்மியூர்
பஞ்சகவ்யம் என்பது சமஸ்கிருதச் சொல். பஞ்ச என்றால் ஐந்து. கவ்யம் என்றால் பசுவின் பொருள். பசு வழங்கும் ஐம்பொருள் கோஜலம், கோமயம், பசும்பால், பசுநெய், பசுந்தயிர். கோஜலத்தை சிலர் கோமியம் என்றும் சொல்வதுண்டு. கோமயம் என்பது பசுவின் சாணி. பஞ்சகவ்யம் பற்றிய குறிப்பு திராவிட கிரந்தத்தில் எழுதப்பட்ட வைத்யநாத தீக்ஷிதிய ஸ்மிருதி முக்தா பலே என்ற சுவடியில் உள்ளது. இதை இயற்றியவர் பராசர முனிவர். மேற்படி சுவடியில் சொல்லப்பட்ட அளவு ஒரு பலம் கொஜலம், அரைக் கட்டைவிரல் அளவு கோமயம் (சாணி), ஏழு பலம் பால், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஒரு பலம் தர்ப்பை ஜலம் என்ற கலவையை வைத்து யக்ஞம் செய்ய வேண்டும் (பிராமணர்கள் செய்யும் சமிதாதானம் அல்லது யாவரும் பிரமிடை வைத்துச் செய்யும் அக்னிஹோத்ரம் செய்யலாம்). இந்திரன், வாயு, ருத்ரன் ஆகியோருக்கு ஆஹூதி செய்ய வேண்டும் (இந்திரனை வணங்குகிறேன். மாருதத்தை வணங்குகிறேன். ருத்ரனை வணங்குகிறேன். இவ்வாறு சொல்லி அக்னியில் புரசு அல்லது அரச இலையால் ஊற்றலாம். அல்லது சிறிய மரக்கரண்டி கொண்டும் ஊற்றலாம்.
யக்ஞத்தில் படைத்தது போக மீதமிருப்பதை யக்ஞம் செய்தவன் அருந்தலாம் என்று பராசரரின் நூல் கூறுகிறது. தன் பாபங்களைச் சுயமாக சுத்தி செய்து கொள்ளவும் அருந்தலாம். விவசாயம் தொடங்கும் முன்பு மண்ணைச் சுத்தி செய்யவும் பயன்படுத்தலாம்.
சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பஞ்சகவ்ய பார்முலா பண்டைய கால அளவுமுறை: ஒரு பலம் என்பது 8 தோலா. ஒரு தோலா என்றால் அரை வெள்ளி எடை அல்லது அரை அவுன்ஸ். இதை மெட்ரிக் அளவில் இவ்வாறு மாற்றிக் கொள்க:
1. கோஜலம் –  120 மில்லி
2. கோமாயம் – 10 மில்லி
3. பசும்பால் – 840 மில்லி
4. பசுந்தயிர் – 360  மில்லி
5. பசுநெய் – 120 மில்லி
6. தர்ப்பை ஜலம் – 150 மில்லி
தினம் ஒரு மனிதன் விரும்பினால் 50 மில்லி அருந்தலாம். மனிதன் அருந்தக்கூடிய பஞ்சகவ்ய பார்முலாவில் பஞ்சகவ்ய சித்தர் என்று புகழ்பெற்ற கொடுமுடி டாக்டர் நடராஜன் எம்.பி.பி.எஸ் – பாதாம், பிஸ்தா, கள்/ ஆல்கஹால், கரும்புச்சாறு, வாழைப்பழச்சாறு, திராட்சை ரசம் ஆகியவற்றைச் சேர்த்து டானிக் செய்து நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார் (தொடர்பு எண்: 94433 58379).
விவசாயத்தில் பயிர்களுக்கு வழங்கக்கூடிய பஞ்சகவ்ய பார்முலா வேறு. கீழ்க்கண்ட அளவுப்படி தயாரிக்கலாம்:
1. கோஜலம் – 5 லிட்டர்
2. கோமயம் – 5 கிலோ
3. பசும்பால் – 2 லிட்டர்
4. பசுந்தயிர் – 2 லிட்டர்
5. கரும்புச்சாறு – 3 லிட்டர் (அல்லது கரும்பும் வெல்லச்சர்க்கரையும் (2 லிட்டர் நீரில் 1கிலோ கரைத்த சாறு)
6.பசுநெய் – 1 லிட்டர்
7. இளநீர் – 2 லிட்டர்
8. வாழைப்பழம் – 15 எண்ணிக்கை
9. திராட்சை ரசம் – 2 லிட்டர்
10. வடை மாவு – 2 லிட்டர்
11. தண்ணீர் – 2 லிட்டர்
செய்முறை:
புதிதாய்ச் சேகரித்த பசுவின் சாணியை ஒரு அகண்ட பாத்திரத்தில் இட்டு ஒரு லிட்டர் நெய் ஊற்றிப் பிசைந்து கொள்க. அதன்மீது வடை மாவை ஊற்றவும். ஒரு லிட்டர் உளுந்தை முதல் நாளே ஊற வைத்து அரைத்தபின் நொதித்து இரண்டு லிட்டர் அளவுக்கு வரும். பின்னர், கரைந்த சர்க்கரைநீர் அல்லது கரும்புச் சாற்றை ஊற்றுக. இந்தக் கலவையில் கொஜலம், திராட்சை ரசம், இளநீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். இதில் புளித்த தயிரையும் பாலையும் சேர்த்து ஐம்பது லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் ஊற்றி வைக்க வேண்டும். குழம்பு அல்லது சாம்பார் அளவு திரவத்தன்மை போதுமானது என்பதால் இந்தக் கலவை மிகவும் கெட்டித்து இருந்தால் உகந்த அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூழ்போல் கெட்டித்து இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பின்னர் தினம் இரு வேளை குச்சியால் கலக்கிவிட்டு பொங்கி வரும் நுரையை அடக்கி விடவும். குச்சியால் சுற்றும்போது வாயு வெளியேறி விடும். நுண்ணுயிர்களும் சாகாது. இதுவே முதல்தர பஞ்சகவ்யம்.
நெய் விலை அதிகம் என்று கருதுவோர் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்துவது உண்டு. வேறு சிலர் கடலை பிண்ணாக்கை நீரில் ஊற வைத்து அதை நெய்க்கு பதிலாகச் சேர்ப்பதுண்டு. இவ்வாறு செய்வதில் தவறில்லை, ஆனால் தரம் மத்திமமாக இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
மூன்று முதல் ஐந்து சதவிகிதம் அல்லது 97 லிட்டர் நீரும் 3 அல்லது 5 லிட்டர் பஞ்சகவ்யம் எடுத்துக் கொண்டு 5 முதல் 10 டேங்க் பவர் ஸ்பிரேயரில் ஒரு ஏக்கர் பயிருக்கு அடிக்கலாம்.
8. அக்னிஹோத்ரா என்றால் என்ன? விவசாயத்திற்கு அது எவ்வாறு உதவும்?
– ம. திலகவதி, நீடாமங்கலம்
 
agnihotrakit

(படம் நன்றி : http://agnihotraindia.wordpress.com/)

அக்னிஹோத்ரா என்பது பிராமணர்கள் நடத்தும் யாகம். கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன் நடத்தப்படுகிறது. யாகம் என்றால் தியாகம். இசுலாமியரின் குர்பானி போல் இதுவும். இறைவனுக்கு அக்னி வழியே உணவு படைக்கப்படுகிறது. பல வாசனை திரவியங்களும் ஆகுதியாவதுண்டு. இப்படிப்பட்ட யாகம் செய்யும்போது, முக்கியமாக நெய் ஊற்றும்போது, ஏற்படும் புகைக்கு மருத்துவ குணம் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. பயிரின் நலன் கருதிச் செய்யும் அக்னிஹோத்ரா வழிபாட்டை எல்லா சாதியினரும் எல்லா மதத்தவரும் ஆண் பெண் இருபாலரும் செய்யலாம், எவருக்கும் தடையில்லை.
சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும். ஹோம குண்டத்தை பிரமிடு வடிவில் மண் அல்லது செப்பு உலோகத்தில் அமைக்கலாம். பசுஞ்சாணி விராட்டியை குண்டத்தில் வைத்து சூடம் இட்டு அக்னி எழுப்ப வேண்டும். அரிசியில் நெய் கலந்து ஆகுதியாக அக்னியில் இடும்போதும் அரசு அல்லது பலாசுக்குச்சிகளை அக்னியில் இடும்போதும் கீழ்க்கண்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்:
காலையில் – சூர்யாய ஸ்வாஹா; சூர்யாய இதம் நமஹ | பிரஜாபதயே ஸ்வாஹா; பிரஜாபதயே இதம் நமஹ ||
மாலையில் – அக்னியே ஸ்வாஹா; அக்னியே இதம் நமஹ | பிரஜாபதயே ஸ்வாஹா; பிரஜாபதயே இதம் நமஹ ||
மேற்படி மந்திரத்தை காலையிலாவது மாலையிலாவது தினம் ஒரு வேளையேனும் 108 முறை உச்சரித்து நெய்யரிசி இட வேண்டும்.
பயன்கள்:
விவசாயத்தில் புகைமூட்டம் போடும் குறிப்பு சுரபாலரின் விருட்சாயுர்வேதத்தில் உள்ளது. சாம்பிராணி, வேப்பிலை மற்றும் பிற நறுமணப்போருட்களைக் கொண்டு புகைமூட்டம் போடும் மரபு நம்மிடையே உள்ளது. இப்படிப்பட்ட புகைகளில் நெய்மணப் புகையே நனிசிறந்தது. அது மரம் செடிகளில் உள்ள பூச்சிகளையும் கொசுக்களையும் விரட்டும். அக்னிஹோத்ரா செய்த சாம்பலை அவரை, பூசணி, பாகல் போன்ற பயிர்கள பந்தலில் ஏற்றுவதற்கு முன் இளம்பயிர்கள் மீது தூவினால் அசுவினி, பச்சைப் பூச்சி தாக்குதல் இருக்காது. செடிப்பயிர்கள் மீதும் தூவலாம். இது குறித்து மேலும் விவரங்களை அறிய மதுரை தீபக் கே. ஜே. பார்மரை அணுகலாம். இவரது தொடர்பு எண் – 98430 35125
(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.