kamagra paypal


முகப்பு » இலக்கியம், நாடகம்

பாஸனின் தூதவாக்யம்

பாண்டவர் சார்பில் அமைதி வேண்டி துரியோதனனிடம் கிருஷ்ணன் தூதனாகப் போகும் நிகழ்வுகளை விளக்கும் நாடகம் ’தூத வாக்யம்’  என்ற பெயரில் அமைகிறது. அந்தத் தூதினால் எந்தப் பயனும் இல்லை என்று விதுரன் சொன்னாலும் கிருஷ்ணன் அவனைச் சமாதானம் செய்கிறான். பாண்டவர்களின் தூதனாகக் கிருஷ்ணன் கௌரவர்களுக்கு அறிவுரை சொல்லும் தன்மைதான் நாடகத்தின் மையக் கரு. .போரைத் தவிர்க்க எந்த நிலைக்கு போகவும் பாண்டவர்கள் தயார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும், கௌரவர்கள்தான் போருக்குக் காரணம் என்பதை அறிவிக்கும் முயற்சியிலும் இந்தத் தூது நிகழ்கிறது. மற்றவர்களுக்கு எதிராளியின் தவறான அணுகு முறையைக் காட்டுவதன் மூலம் நடப்பைப் புரிய வைக்கும் முயற்சியான இது நூறு போர்களை வெல்வதற்கு இணையான அரசியல் சாதுர்யம் கொண்டது. அதுவே இங்கு பாண்டவர்களின் தூதனால் நடைமுறைபடுத்தப் படுகிறது.

படைத் தளபதியை  தீர்மானிப்பதற்காக கௌரவர் அவை கூடி இருக்கிறது..வெகு நாட்களாகக் காத்திருந்த  போர் கடைசியில் வந்து  விட்டது  என்ற மகிழ்ச்சியான மனநிலையில்  அவையினரை துரியோதனன்   சந்தித்துப் பேசும் நிலையில் நாடகம் தொடங்குகிறது. வந்திருக்கும்   அனைவரையும் துரியோதனன் வரவேற்கிறான். பெரிய அளவுடையதாக இருக்கும் தன் படைக்கு மிகச் சிறந்தவர்தான் தளபதியாக இருக்க முடியும் என்ற பெருமிதம் பொங்கப் பேசுகிறான்.அப்போது காவலன் வந்து ’பாண்டவர்களின்  தூதனாக மனிதர்களில் மிகச் சிறந்த நாராயணன் வந்திருக்கிறான்” என்கிறான். துரியோதனனுக்கு அவனுடைய வர்ணனை மீது கோபம் வருகிறது. வந்திருக்கும் தூதனுக்கு  அவையிலிருந்து யாரும் மரியாதை தரக் கூடாது என்று சொல்கிறான். தன் வார்த்தைகளை மீறி நடப்பவருக்கு அபராதம் விதிக்கப்படும்  என்கிறான்.  தானும் தூதனுக்கு மரியாதை தரக் கூடாது  என்ற சிந்தனையில்  திரௌபதியின் வஸ்திராபகரணத்தைக் காட்டும் சித்திரத்தைக் கொண்டு வரச் செய்து  அதன்  மீது கவனம்  உடையவன் போல உட்கார்ந்திருக்கிறான். உள்ளே வரும் வாசுதேவனுக்கு அந்தப் படத்தை அப்போது துரியோதனன் பார்ப்பதற்கான காரணம் புரிகிறது. தன் வம்சத்து மனிதர்களை அவமானப் படுத்தும் துரியோதனனின் இழிவான மன நிலையை அங்குள்ளவர்களுக்குச்  சுட்டிக் காட்டுகிறான்.அந்தப் படத்தை எடுத்துப் போகும்படியும் சொல்கிறான். அப்போது துரியோதனன் லேசாகக் கூட தன் எதிர்ப்பைக் காட்டவில்லை. இது வாசுதேவனின் முதல் வெற்றி. இதற்குப் பிறகு இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலில் வாசுதேவனின் ஆளுமையே அதிகம் இருக்கிறது.

மற்ற கடவுளரின் மகன்களான பாண்டவர்கள் அனைவரும் நலமா   என துரியோதனனின் முதல் கேள்வி அமைகிறது. தான் பாண்டவர்களின் தூதனாக வந்திருப்பதாகவும், பாண்டவர்களிடம் அவர்களின் பிதுரார்ஜித சொத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் வாசுதேவன்  சொல்கிறான். தவிர ”நாங்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து விட்டோம். கெடு காலம் முடிந்து விட்டது.எங்களுக்கு உரிய பரம்பரைச் சொத்து தரப்பட வேண்டும்” என்ற பாண்டவர்களின் தூதுச் செய்தியையும் தெரிவிக்கிறான். துரியோதனன் அவர்களின் தூதுச் செய்தியால் பாதிக்கப் பட்டவன் போல “பாண்டவர்கள் பாண்டுவின் மகன்கள் இல்லை எனவும்,குந்தி வெவ்வேறு கடவுளரிடமிருந்து பெற்ற குழந்தைகள் எனவும் சொல்கிறான்.  ஒரு சாபம் காரணமாக குந்தியுடன் எந்த உறவும் பாண்டு கொண்டதில்லை எனவும் பாண்டுவே இதை வெளிப் படையாக ஒப்புக் கொண்டதையும் சுட்டிக் காட்டுகிறான். அவனுடைய இந்த அணுகுமுறை வாசுதேவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. துரியோதனனின் பாட்டன் விசித்திரவீர்யன் தவறான வழியில் வாழ்ந்து இறந்ததையும், விசித்திரவீர்யனின் முதல் மனைவி அம்பிகாவுக்கு வியாசனின் மூலம்திரிதிராட்டினன் பிறந்ததையும் வாசுதேவன் துரியோதனனுக்குச் சொல்கிறான். துரியோதனனின் பாண்டவர் பிறப்பு குறித்த விவாதத்தை ஒப்புக் கொண்டால்  திரிதிராட்டிரன் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை ஒப்புக் கொள்ள முடியாது  எனவும் வாசுதேவன் சொல்கிறான். இது மிக அந்தரங்கமான பதில் குற்றச் சாட்டு ரீதியில் அமைகிறது. அப்போது பீஷ்மர் ,துரோணர்,விதுரன்,ஆகியோர் வாசுதேவனின் அறிவுரையைக்  ஏற்றுக் கொள்ளும்படி சொல்கின்றனர். அரசாட்சி என்பது பிச்சையாகப் பெறுவதில்லை.போர் வெற்றி அடிப்படையில் கிடைப்பது. பாண்டவர்கள் போர் செய்து தாங்கள் வெற்றிக்கான தகுதி உடையவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிறான் துரியோதனன். ஒரு ஊசியளவு நிலம் கூட தன்னால் தர முடியாது என்கிறான். அர்ச்சுனன் சிவனோடு வன்மையாகப் போரிட்டதையும், அநீதியை எதிர்த்து போர்கள் செய்த்தையும் வாசுதேவன் விளக்க முயலும் போதும் துரியோதனன் ஒரு சிறிதும் தன் பேச்சில் மாற்றம் இல்லாதவனாக இருக்கிறான்.தூதனை அவமதிப்பதே தன் நோக்கம் என்பது போல அவன் செயல்பாடு அமைகிறது. பேசிப் பயனில்லாத சூழலில் வாசுதேவன் அந்த இடத்தை விட்டு வெளியேறும் போது  அவனை சிறைப் படுத்த சகுனி, கர்ணன் ,துச்சாதனன் ஆகியோரை  துரியோதனன் அழைக்கிறான். அவர்கள் அனைவரும் கூடி வாசுதேவனைக் கட்ட முயல்கின்றனர். அப்போது வாசுதேவன் விஸ்வரூபம் எடுக்க எங்கும்  பல ரூபங்கள்.வாசுதேவனை கட்ட நினைத்த கயிறுகள் அரங்கத்தில் கூடி இருந்தவர்களை கட்டி இருந்ததான பிரமை அனைவருக்கும்  ஏற்படுகிறது. கோபம் அதிகமாக வாசுதேவன் சுதர்சன சக்கரத்தை அழைக்கிறான். குரு வம்சத்தை அழிக்க வந்தது போல அதன் செயல்பாடு தெரிகிறது.அப்போது திரிதிராட்டிரன் வருகை நிகழ்கிறது. நடந்தவைகளுக்கு வருந்துகிறான். வாசுதேவனை வணங்கித் தன் அன்பை, மரியாதையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். வாசுதேவனும் அப்படியே நடப்பதாகச் சொல்கிறான். கௌரவர்கள் அழிவு தடுக்கப் படுகிறது என நாடகம் முடிகிறது.

KRIShna_Duryodhana_Samvad_Paandava-AMBASSADOR

மூலக்  கதையோடு மாற்றம் பெற்றதாகச் சில  நிகழ்வுகள் உள்ளன மூலக் கதையில் விஸ்வரூபம் எடுப்பதற்கான காரணம்  சரியாகத் தெரியாதது போன்ற வெளிப்பாடு உண்டு. வாசுதேவனைச் சிறைப்படுத்தும் வகையிலான துரியோதனனின் செயலை திரிதிராட்டிரன் கண்டிப்பான். ”நான் ஒருவன் எல்லா கௌரவர்களுக்கும் சமம் “ எனச் சொல்வான். அங்கு கௌரவர்கள் அவனைக் கட்டுவது இயல்பாக இல்லாமல் வலிந்து செய்யும் செயலாக இருக்கும்.  ஆனால் இங்கு துரியோதனனின்  தீய செயல்களுக்கு  வாசுதேவன் கொடுக்கும் சரியான  தாக்குதலாக விஸ்வரூபம்  அமைகிறது. மூல நூலில்  விஸ்வரூபத்திற்கு முன்னால் பல ஆயுதங்களின் செயல்பாடுகள் இருப்பது போல காட்டப் பட்டுள்ளது. விஸ்வரூபம் எடுக்கும் போது சுதர்சனம் , நந்தகம் ஆகியவை தானாகவே அவதாரமாவது  போன்ற காட்சி அமைப்புள்ளது. தவிர அவை எந்தப் பயனும் இல்லாமல் இங்குமங்கும் சுழல்வதான காட்சி போலியான உணர்வை வலிந்து ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே இயல்பாக இல்லாத கூறாகவே அது உள்ளது. ஆனால் பாஸன் காட்டும் நாடகக் காட்சி சரியான விளக்கம் பெற்று  விஸ்வரூபத்தை  அர்த்தம் உடையதாக்குகிறது. மூலத்தில்  திரிதிராட்டிரன் அரசனாக இருக்க இங்கு துரியோதனன் அரச பதவியில் உள்ளவனாகிறான்.

இந்த ஜீவன் நிறைந்த காட்சி முழுக்க முழுக்க பாஸனின் கற்பனை. நாடகத்தின் உயிரோட்டம் வாசுதேவன் – துரியோதனன் உரையாடல் தொடர் பகுதிதான். சான்றாக இங்கே சில மெல்லிய ஆனால் உறுதியான நகைச்சுவை கலந்த உரையாடல்கள்:

வாசுதேவனின் வருகையைச் சொல்லும் நேரத்தில்

காவலன்:   ’ மன்னனே ! வணக்கம் .பாண்டவர்களின்  தூதனாக மனிதர்களில் மிகச் சிறந்த நாராயணன் வந்திருக்கிறான்

துரியோதனன் :  என்ன சொன்னாய்?  பாதராயா! கம்சனின் வேலைக்காரனான தாமோதரன் உனக்கு மனிதர்களில் சிறந்தவனாகத் தெரிகிறானா?அந்த இடையன் உனக்குச் சிறந்தவனா? தூதனாக வந்தவனுக்கு என்ன ஆசார மரியாதை வேண்டி இருக்கிறது?

காவலன்: மன்னிக்க வேண்டும் மகராஜா .குழப்பத்தில் அறிவிழந்து விட்டேன்.

துரியோதனன் :    ஓ.. குழப்பம் என்று சொல்கிறாய்.? மனிதர்களுக்குச் சில நேரங்களில் குழப்பம் வருவது இயல்புதான்..சரி. பரவாயில்லை வந்திருக்கும் தூதன் யார்?

காவலன்: கேசவன்தான் அவர்களின் தூதனாக வந்திருக்கிறான்.

துரி:  உம்.. சரியாகச் சொன்னாய் .கேசவன் என்றுதான் அவனைச் சொல்ல வேண்டும் அதுதான் சரியான வார்த்தை இளவரசர்களே! தூதனாக வந்திருக்கும் இந்த கேசவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மரியாதையும், பரிசும் தந்து    வரவேற்க வேண்டுமா? எனக்கு அதில் உடன்பாடில்லை.அவனைச் சிறையில் அடைப்பதுதான் நமது விருப்பம். அவன் வரும் போது வரவேற்கும் விதத்தில் இங்கு யார் எழுந்து நின்று மரியாதை தருகிறார்களோ அவர்களுக்கு பன்னிரண்டு தங்க நாணயங்கள் அபராதம் விதிக்கப் படும். [ தனக்குள் ] உம்.. அவன் வரும் போது நான் எப்படி எழுந்திருக்காமல் இருப்பேன்? இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே. சரி. நான் இந்தப் படத்தின் அழகில் ஆழ்ந்திருப்பது  போல இருப்பேன் எனச் சொல்லிக் கொள்கிறான்.

அதே நேரத்தில் வாசுதேவன் வரவு நிகழ்கிறது.அனைவரும் மரியாதையாக எழுந்திருக்கின்றனர்.

வாசுதேவன்  : இதென்ன? என்னைப் பார்த்ததும் குழம்பியவர்கள் போல ஏன் அனைவரும் எழுந்துவிட்டீர்கள்!  கலங்க     வேண்டாம். உட்காருங்கள் . ஓ..துரியோதனா நலமா ? “

துரி: [ குரல் கேட்ட அளவில் தன்னை மறந்து எழுந்து பின் சமாளித்துக் கொள்கிறான் தனக்குள் கேசவன் வந்து விட்டான்..அவன் சக்தியால்  நான் இருக்கையிலிருந்து எழுந்து விட்டேனே இந்தத் தூதனுக்குள் எத்தனை தந்திரங்கள்! ] தூதனே வா!

இந்தக் காட்சி மிக இயல்பாக உள்ளது.இதைத் தொடர்ந்து  துரியோதனன் பார்வையில் உள்ள சித்திரம் கண்ணில் படுகிறது.

வாசுதேவன்: உன் உறவினர்களை   அவமானப் படுத்துவது ஒரு வீரமான செயல் என்று நினைக்கிறாய். இந்த உலகில்  இப்படி யாரால்  தான் செய்யும்   மிகப் பெரிய குற்றத்தை  சபைக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்?

என நகைச்சுவை போல அவன் தன்மையை வாசுதேவன் வெளிப்படுத்துகிறான். உரையாடல் தொடர்கிறது.

துரி : தூதனே, தர்மனின் மகன், காற்றின் மைந்தன் பீமன் இந்திரன் மகன் அர்ச்சுனன், இரட்டையரான அஸ்வினி புத்திரர்கள் அனைவரும் நலமா?

வாசு:  காந்தாரியின் புதல்வன் இப்படிதான் குசலம் விசாரிக்க  முடியும்.எல்லோரும் நலம்

என்ற இருவரின் உடனடித் தாக்குதல் ரீதியான உரையாடலும் குறிப்பிடத் தக்கது..

நாடகம் வலுவான பின்னணியில் அமைய வேண்டும் என்ற சிந்தனையில் வஸ்திராபரணச் சித்திரம் நிகழ்வு, சுதர்சனத்தின் செயல்பாடு ஆகியவற்றை பாஸன் மேடைக்கான தகுந்த பின்புலத்தோடு அமைந்திருப்பதும் எல்லோரையும் தன்வயப்படுத்தும்  அம்சமாகிறது.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.