kamagra paypal


முகப்பு » உலகச் சிறுகதை

ஆப்பிரிக்கப் புல்வெளி

ray_bradbury1அமெரிக்காவைச் சேர்ந்த ரே ப்ராட்பரி (Ray Bradbury) சிறந்த அறிவியல் புனைகதை எழுத்தாளராக அறியப்படுபவர். 1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளமைக்காலத்தின் பெரும்பகுதியை நூலகங்களில் செலவழித்தவர். “நூலகங்களே என்னை வளர்த்தன. கல்லூரி, பல்கலைக்கழகங்களின் கல்வியில் எனக்கு நம்பிக்கையில்லை” என்று சொல்கிறார் ரே ப்ராட்பரி. ‘Faranheit 451′ என்ற நாவலும், ‘The Martian Chronicles’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இவருடைய ஆகப்பிரபலமான படைப்புகள். இவருடைய வெகு பிரபலமான சிறுகதைகளில் ஒன்றான ‘The Veldt’ என்ற சிறுகதையை விஸ்வநாத் சங்கரின் மொழிபெயர்ப்பில் வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

மொழிபெயர்ப்பு: விஸ்வநாத் சங்கர்

“ஜார்ஜ்! குழந்தைகளுடைய விளையாட்டு அறையைக் கொஞ்சம் பார்த்துவிட்டு வருகிறாயா?”

“ஏன்? அங்கே எதாவது சரியில்லையா?”

“தெரியவில்லை”

“பிறகு என்ன? அப்புறம் பார்க்கலாம்”

“ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டுதான் வாயேன். உன்னால் முடியவில்லை என்றால் ஒரு மனோதத்துவ நிபுணரையாவது கூப்பிடு”

“மனோதத்துவ நிபுணரா? அவர் வந்து என்ன செய்யப்போகிறார்?”

“உனக்கு தெரியாதா… அவர் என்ன செய்வார் என்று?” அவன் மனைவி சமையல் அறையின் நடுவே நின்றபடி, சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த அடுப்பைக் கவனித்து வந்தாள். நான்கு பேருக்கான அன்றைய இரவுச் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது.

“அந்த அறை இப்போதெல்லாம் முன்பு போல இல்லை. என்னமோ வித்தியாசமாகத் தெரிகிறது”

“சரி வா. பார்த்துவிட்டு வருவோம்”

அவர்கள் இருவரும் கூடத்தில் நடக்கத் தொடங்கினர். ‘இன்ப வாழ்க்கை இல்லம்’ – அவர்கள் வசிக்கும் வீட்டின் பெயர். ஒலி ஊடுருவக் கூட அனுமதியில்லாத அந்த அமைதியான வீட்டைக் கட்டிமுடிக்க முப்பதாயிரம் வெள்ளிகள் செலவாயின. அந்த வீடே அவர்களுக்கு எல்லாமாய் இருந்தது. உணவு ஊட்டியது, உடை உடுத்தியது, தாலாட்டி தூங்கக்கூட வைத்தது. அவர்களும் இன்பமாகவே இருந்தார்கள். அவர்கள் வருவதை அறிந்த முகம் காட்டாத மின்சாரக் குமிழ் ஒன்று, அவர்கள் விளையாட்டு அறைக்கு பத்தடி தூரத்தில் இருக்கும் போதே அறையின் விளக்குகளுக்கு எல்லாம் உயிர் தந்தது. அதே போல, அவர்கள் கடந்து வந்த கூடத்தின் விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக தானாக அணைந்தன.

“நன்றாகத்தான் இருக்கிறது” என்றான் ஜார்ஜ் ஹேட்லி.

அவர்கள் அறையின் வேய்ந்த தரையில் வந்து நின்றனர். நாற்பது அடி நீளமும், நாற்பது அடி அகலமும், முப்பது அடி உயரமுமாய் பெரிதாக இருந்தது அந்த அறை. வீட்டைக் கட்டும்போது பாதி செலவு இதற்கே போனது. “ஆனால் நம் குழந்தைகளுக்கு எதுவுமே ரொம்ப அதிகமாக போனால் நல்லதில்லை” என்று தொடர்ந்தான் அவன்.

அந்த அறையில் அமைதி மட்டுமே இருந்தது. அதைத்தவிர வேறு எதுவுமில்லை. உச்சி வெயிலை உறிஞ்சிக்கொண்டிருக்கும் பொட்டல் காட்டைப்போல அது காலியாகக் கிடந்தது. சுவர்களும் இரண்டே பரிமாணங்களுடன் வெறுமையாய் நின்றன. ஜார்ஜ் மற்றும் லிடியா ஹேட்லி அறையின் மத்தியில் நின்ற பொழுது, கீறும் ஓசையுடன் சுவர்கள் மெல்ல பின்னோக்கி நகர்ந்து ஒரு தெளிவான தூரத்தில் போய் ஒட்டிக் கொண்டன. இப்போது அந்த இடத்தில் ஒரு ஆப்பிரிக்கப் புல்வெளி உருவானது! மூன்று பரிமாணங்களில், நான்கு திசைகளிலும், வைக்கோல் மற்றும் கூழாங்கல்லின் வண்ணங்களை தெளித்துக் கொண்டு அந்தப் புல்வெளி கடகடவென வளர்ந்து, கம்பீரமாக அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்கள் தலைக்கு மேல் இருக்கும் கூரை இப்போது நீல வானமாகி இருந்தது. அதில் நெருப்பைக் கக்கும் மஞ்சள் பந்தாய் ஒரு கதிரவன்!

ஜார்ஜ் தன புருவத்தில் தோன்றிய வியர்வைத் துளியைத் துடைத்துக் கொண்டான்.

“இந்த வெயிலில் காய வேண்டாம். கிளம்பலாம். இது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை” என்றான்.

“கொஞ்சம் பொறு” என்றாள் அவள்.

அடுத்த சில நொடிகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருந்த வாசனைக் கருவிகள், கொதிக்கும் காட்டின் நடுவில் இருந்த அந்த இருவரை நோக்கி வாசக் காற்றை வீசத் தொடங்கின. அது ஒரு கதம்பமான வாசனை. காய்ந்த வைக்கோலின் வறட்டு வாசம், மறைந்திருக்கும் குட்டையின் குளிர்ச்சியான பச்சை மணம், காட்டு விலங்குகளின் உடலிலிருந்து பிரிந்த நாற்றம், அனலில் காயும் மிளகாயிலிருந்து வெளியேறும் கார நெடி என்று பலதும் அந்தக் கதம்பத்தில் கலந்திருந்தன. வாசத்தைத் தொடர்ந்து இப்போது ஓசை! எங்கோ தூரத்துப் புல்வெளியில் துள்ளியோடும் புள்ளிமானின் காலடிச் சத்தமும், கூடவே வானில் வட்டமிடும் வல்லூறுகளின் இரைச்சல்களும் அதனோடு சேர்ந்து… இதிலும் ஒரு கலப்படம்! வானத்தில் ஒரு நிழலாடியது. வேர்த்து விறுவிறுத்த படி, வான் நோக்கி இருந்த ஜார்ஜின் முகத்தில் அந்த நிழல் அரை கணம் தங்கிவிட்டு சென்றது.

“ச்சே! கருமம் பிடித்த ஜந்துக்கள்!” – தன் மனைவியின் அருவெறுப்பை கேட்டுக் கொண்டே நின்றான் அவன்.

“பருந்துகள்”

“அங்கே தூரத்தில் பார்… சிங்கங்கள் தெரிகிறதா? பார்! பார்! இப்போது தண்ணீர் குடிக்க குளத்திற்கு வருகின்றன. எதையோ தின்றுவிட்டு வருகின்றன என்று நினைக்கிறேன். என்னவென்று தெரியவில்லை” என்றாள்.

“ஏதோ மிருகம்” – ஜார்ஜ் தன் உள்ளங்கையை இறுக்கி கண்களுக்கு தொப்பியாக மடக்கி சுள்ளென்று சுடும் சூரியனிலிருந்து தப்பிக்க முயன்று கொண்டிருந்தான். “ஒரு வரிக்குதிரையோ இல்லை ஒரு குட்டி ஒட்டகச் சிவிங்கியாகவோ இருக்கலாம்”

“நிச்சயமாகத் தெரியுமா?” – லிடியாவின் குரலில் ஒரு வினோதமான பதட்டம் இருந்தது.

“இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது. அங்கே பார் வெறும் எலும்புத் துண்டுகளே சிதறிக் கிடக்கின்றன. பருந்துக் கூட்டமும் ஒட்டிக் கொண்டிருக்கும் மிச்ச மீதியை சாப்பிடப் பறக்கின்றன” என்று வேடிக்கை பார்த்தபடி பதில் அளித்தான்.

“அந்த அலறல் சத்தத்தை கேட்டாயா நீ?”

“இல்லை”

“அட! ஒரு நிமிடம் முன்பு வந்ததே! கேட்கவில்லையா?”

“இல்லையம்மா. கேட்கவில்லை.”

சிங்கங்கள் வந்து கொண்டிருந்தன. ஜார்ஜ் ஹெட்லி இந்தப் பிரமாதமான விளையாட்டு அறையை கருவாக்கி, உருவாக்கி, நிர்மாணித்தப் பொறியியலாளரின் மேதாவித்தனத்தை நினைத்து மீண்டும் மீண்டும் வியந்தான். ஒரு மாபெரும் அதிசியத்தை முட்டாள்தனமாக அடி மாட்டு விலைக்கு விற்று விட்டார்கள்! ஒவ்வொரு வீட்டிலும் இது போன்ற ஒரு அறை கட்டாயமாக இருக்க வேண்டும். அட ஆமாம்! சில நேரங்களில் தங்களுடைய அதிநுட்பமான துல்லியத்தால் உங்களை பயப்படுத்தும், அதிர்ச்சியூட்டும், அச்சம் தரும். ஆனால் பல சமயங்களில் இது ஒரு அற்புதமான விளையாட்டு சாதனம். உங்கள் மகனுக்கோ, மகளுக்கோ மட்டுமில்லை… உங்களையே இது ஒரு குழந்தையாக்கி விடும்! கண நேரத்தில் காட்சியை மாற்றி எங்கோ ஒரு தூர தேசத்தில் தூக்கி எறிந்து அழகு பார்க்கும். இப்போது நடந்ததே… அதைப்போல!

seசிங்கங்கள் அருகில் வந்துவிட்டன. மிக மிக அருகில்… பதினைந்தே அடி தூரந்தான்! ரொம்பவும் நிஜமாகவும், தத்ரூபமாகவும் இருந்தன. அவைகளுக்கு உயிர் இருப்பது உண்மையோ என்றே கூட தோன்றிவிடும்! அப்படியொரு உண்மை அங்கே காணப்படும் எல்லாவற்றிலும் தெரிந்தது! பறக்கும் கூர்மையான பிடரி முடிகள் உங்கள் கைகளை குத்திவிடும். அடிக்கும் புழுதிக் காற்றோ உங்கள் நாசித் துவாரங்களை நெரித்து அடைக்கும். சிங்கங்களின் மஞ்சள் நிறமோ, புதிதாக சாயம் பூசப்பட்ட மஞ்சள் துணியைப் போல உங்கள் கண்களில் ஒட்டிக்கொண்டுவிடும். அரிமாக்களின் மஞ்சள் மட்டுமில்லை. அவை அருகே இருந்த புல்லின் பச்சை வண்ணமும், அவை இறைக்கும் மூச்சின் சத்தமும், எச்சில் ஒழுகும் வாயிலிருந்து எட்டிப்பார்க்கும் மாமிசத் துண்டின் மணமும் நிஜமாகவே இருந்தன.

தங்களுடைய கொடூரமான பச்சை-மஞ்சள் கண்களால் சிங்கங்கள் ஜார்ஜையும், லிடியாவையும் பார்த்தன.

“ஐயோ!” – அலறினாள் லிடியா.

சிங்கங்கள் அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்தன.

லிடியா பாய்ந்தோடினாள். பின்னால் ஜார்ஜும் ஓடினான். அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே கூடத்துக்கு வந்த பின் அவன் சிரித்தான். அவள் அழுதாள். இருவரும் மற்றவருடைய செய்கையைக் கண்டு திகில் அடைந்தனர்.

“ஜார்ஜ்!”

“லிடியா! என்னடா செல்லம்! ரொம்பவும் பயந்துவிட்டாயா?”

“இப்போது உயிருடன் இருப்பதையே நம்ப முடியவில்லை”

“லிடியா! ஞாபகம் வைத்துக்கொள். அவை வெறும் பளிங்கு சுவர்கள் தான். உன் வரவேற்பு அறையில் ஒரு ஆப்பிரிக்க வனம் வந்தது உண்மையைப் போல இருந்தாலும் அது நிஜமில்லை. மாயைதான்! இங்கு இருப்பது கண்ணாடித் திரைக்குப் பின்னால் உள்ள வண்ணப் படச் சுருளும், வாசனைக் கருவிகளும், மற்றும் ஒலிப் பெருக்கிகளும் மட்டும்தான். பயப்படாதே! வியர்வையைத் துடைத்துக்கொள். இதோ என் கைக்குட்டை.”

“எனக்கு பயமாக இருக்கிறது” – அவள் அவனருகில் வந்து அவனை அணைத்துக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள். ” நீயே பார்த்தாய் இல்லையா? உனக்கு இப்போது புரிந்ததா? இதெல்லாம் எப்படி உண்மையாக இருக்கிறது பார்!”

“லிடியா…”

“வென்டியும் பீட்டரும் இனி எப்போதும் ஆப்ரிக்காவைப் பற்றி படிக்கக் கூடாது என்று நீதான் அவர்களை கண்டிக்க வேண்டும்”

“சரி” – அவளைத் தட்டி கொடுத்தான்.

“சத்தியமாக?”

“சத்தியமாக.”

“கூடவே என் பயம் குறையும் வரையில், அந்த விளையாட்டு அறையைக் கொஞ்ச நாட்களுக்கு பூட்டி வை”

“அது கஷ்டம். உனக்கே தெரியும் பீட்டர் அதற்கு சம்மதிக்க மாட்டான். போன மாதம் அவனைக் கண்டிப்பதற்காக கொஞ்ச நேரம் அந்த அறையை பூட்டியதற்கே அவன் எப்படி குதித்தான் என்று நினைவிருக்கிறது அல்லவா? வென்டியும் ஒத்துக்கொள்ள மாட்டாள். அவர்கள் வாழ்வதே அந்த விளையாட்டு அறைக்காகத்தான்.”

“அதெல்லாம் தெரியாது. அது மூடப்பட வேண்டும். அவ்வளவுதான்”

“சரி”. தயங்கித் தயங்கி அந்த அறையைப் பூட்டினான். “நீ ரொம்ப களைப்பாக இருக்கிறாய். போய் சற்று ஓய்வெடு”.

“எனக்குத் தெரியாது…எனக்குத் தெரியாது” – விம்மிப் புடைக்கும் மூக்கின் வழியே காற்றை பெரிதாக இழுத்து விட்டுக் கொண்டு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். உடனே அது தூளியாய் ஆடி அவளை ஆசுவாசப்படுத்தியது. “எனக்கு இங்கே நிறைய வேலையில்லை போலும். ஒருவேளை, எனக்கு சிந்திக்க நிறைய நேரம் கிடைக்கிறதோ என்னமோ? நாம் ஏன் கொஞ்ச நாட்களுக்கு முழு வீட்டையும் பூட்டிவிட்டு எங்காவது வெளியே சுற்றுப்பயணம் செய்யக் கூடாது?”

“என்ன சொல்கிறாய்? நீ எனக்கு முட்டை வறுத்துத் தர தயாரா?”

“ம்ம்” – மெல்லமாக தலையாட்டினாள்.

“என் காலுறைகளை துவைத்துப் போட?”

“ஆமாம்” – கண்களில் நீர் தளும்ப வேகமாக தலையை அசைத்தாள்.

“வீட்டைக் கூட்டிப் பெருக்கக் கூடத் தயாரா?”

“அட! ஆமாம்… ஆமாம்!”

“ஆனால் இதையெல்லாம் நாம் செய்ய வேண்டாம் என்பதற்காகத்தானே இந்த வீட்டையே வாங்கினோம்?”

“சரிதான். ஆனால் இப்போது எனக்கு இங்கே பிடிக்கவில்லை. இந்த வீட்டில் என்னை நான் அன்னியமாக உணருகிறேன். இந்த வீடே தாயாகவும், மனைவியாகவும், பணிப்பெண்ணாகவும் இருக்கிறது. என்னால் அந்த ஆப்பிரிக்கக் காட்டோடு போட்டியிட முடியுமா? இல்லை, அந்த தானியங்கி குளிப்பாட்டியைப் போல நம் பிள்ளைகளுக்கு அதிசுத்தமாகக் குளிப்பாட்டி விட முடியுமா? கண்டிப்பாக முடியாது! நான் மட்டுமில்லை. நீயும்தான். நீயும்தான் இப்போதெல்லாம் பதட்டமாக இருக்கிறாய்.”

“நான் கொஞ்சம் அதிகமாகப் புகைக்கிறேன். அவ்வளவே.”

“நீயும் இந்த வீட்டில் இருந்துகொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறாய். தினமும் காலையில் அதிகமாக புகைக்கிறாய்; மதியம் அதிகமாகக் குடிக்கிறாய்; இரவிலோ அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிடுகிறாய். நீயும் உன்னை தேவையில்லாதவனாய் நினைக்கத் தொடங்கிவிட்டாய்.”

“நானா?” – ஒரு வினாடி தன்னிடம் எதாவது பிரச்சனை இருக்கிறதா என்று ஆராயத் தொடங்கினான்.

அவள் அவன் பின்னால் உள்ள விளையாட்டு அறையின் கதவைப் பார்த்தபடி சொன்னாள், “ஜார்ஜ்! அந்த சிங்கங்கள் அதைத் தாண்டி வராது அல்லவா?”

அவன் திரும்பினான். கதவு அதிர்ந்தது. ஏதோ ஒன்று அதை முட்டி மோதுவது போல இருந்தது.

“அதெல்லாம் வராது” என்றான்.

இரவில் இருவர் மட்டும் தனியே உணவருந்தினார்கள். வென்டியும், பீட்டரும் நகரில் நடைபெறும் சிறப்புப் பொருட்காட்சிக்குச் சென்றுவிட்டார்கள். வருவதற்கு நேரமாகும் என்றும், பெற்றோர்கள் சாப்பிடலாம் என்றும் அங்கிருந்தே தொலைக்ககாட்டிப்பேசியில் சொல்லிவிட்டார்கள். தன் இயந்திர உட்புறத்திலிருந்து சுடச்சுட உணவைத் தயாரித்து தந்துகொண்டிருந்த சாப்பாட்டு மேசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜார்ஜ்.

“சட்னியை மறந்துவிட்டோம்” என்றான்.

“மன்னிக்கவும்”, என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, சட்னியைத் தந்தது மேஜை.

ஜார்ஜ் ஹேட்லி மெல்ல சிந்திக்கத் தொடங்கினான். சில நாட்களுக்கு அந்த விளையாட்டு அறையை பூட்டி வைப்பதனால் பிள்ளைகளுக்கு ஒன்றும் ஆகாது. எதுவுமே அதிகமாகப் போனால் யாருக்கும் நல்லதில்லை. அதுவும் தவிர, இதையெல்லாம் பார்க்கும் போது குழந்தைகள் தங்கள் நேரத்தை ஆப்பிரிக்காவில் அதிகமாகச் செலவிடுகிறார்கள் என்று தெரிகிறது. அந்த சூரியன்! அதன் சுடும் கதிர்க் கரங்கள் பிராண்டியதால் உண்டான சூட்டுக் கோடுகள் இன்னமும் அவன் கழுத்தில் வெந்து கொண்டுதான் இருந்தன. அந்த சிங்கங்கள்! அந்தக் குருதியின் வாசம்! குழந்தைகளின் மனதை அறிந்து, அவர்களின் ஆசைகளுக்கு உயிர் கொடுக்கும் இந்த அறையின் மந்திர சக்தியை நினைத்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. அவர்கள் சிங்கங்களை நினைத்தால், சிங்கங்கள் தோன்றுகின்றன. வரிக்குதிரைகளை நினைத்தால், வரிக்குதிரைகள் வருகின்றன. சூரியன் என்றால் சூரியன், ஒட்டகச்சிவிங்கி என்றால் ஒட்டகச்சிவிங்கி, மரணம் என்றால் மரணம்!

ஆமாம் மரணம்! தட்டில் இருந்த மாமிசத் துண்டை சுரத்தேயில்லாமல் மென்று கொண்டிருந்தான். மரணத்தை குறித்த எண்ணங்கள்… குழந்தைகள் யோசிக்கிறார்கள்! வென்டியும், பீட்டரும் சிறுவர்கள். மரணத்தைப் பற்றி யோசிக்கிற வயதா அவர்களுக்கு? இல்லை, மரணத்தைப் பற்றி சிந்திக்க வயது முக்கியமில்லையா? இறப்பு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள தொடங்கும் முன்பே நாம் அதை யார் மீதோ பொருத்திப் பார்க்க ஆசைப்படுகிறோம். நம் இரண்டு வயதிலேயே நாம் மற்றவரை பொம்மைத் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கிவிடுகிறோம்.

ஆனால் இது? இந்த அடர்த்தியான, பெரிய ஆப்பிரிக்கக் காடும், சிங்கங்களின் முரட்டுப் பிடியில் சிக்கி அதில் ஏற்படும் கொடூரமான சாவும்… மீண்டும் மீண்டும் அவன் மனதில் தோன்றின.

“எங்கே போகிறாய்?”

லிடியாவிற்கு அவன் பதில் சொல்லவில்லை. ஏதோ எண்ணங்களில் மூழ்கியபடி, மெல்ல விளையாட்டு அறையை நோக்கி நடந்தான். அவன் முன்னால் இருந்த விளக்குகள் எல்லாம் எரிய, பின்னால் இருந்தவை அணைந்தன. கதவில் காதை வைத்துக் கேட்டான். எங்கோ தூரத்தில் ஒரு சிங்கம் கர்ஜித்தது.

கதவைத் திறந்து கொண்டு, காட்டுக்குள் காலெடுத்து வைக்கும் முன்னே, தொலைதூரத்து அலறல் ஒன்றை அவன் கேட்க முடிந்தது. அதைத் தொடர்ந்து சிங்கங்களின் கர்ஜனை. உடனே அதுவும் தணிந்தது.

காட்டுக்குள் நுழைந்தான். கடந்த ஒரு வருடத்தில் எத்தனை முறை இந்த கதவைத் திறந்து கொண்டு இங்கே வந்திருப்பான்? அப்போதெல்லாம் அவன் பார்த்தது மாய உலகமோ, ஆலிசோ, போலி ஆமையோ, அலாவுதீனோ, அவனுடைய அற்புத விளக்கோ, ஓஸின் பரங்கித்தலையன் ஜாக்கோ, டாக்டர் டூலிட்டில்லோ, இல்லை நிலவைத் தாண்டும் அந்த பசு மாடோ… இப்படி ஏதாவது ஒரு மகிழ்வூட்டும் விந்தை சித்திரத்தைக் கொண்ட காட்சியாகவே இருக்கும். எத்தனை முறை வான் கூரையில் பறக்கும் பெகஸஸ்ஸையும், சிகப்பு நீர் ஊற்றாய் தோன்றும் வான வேடிக்கையையும், தேவதைகளின் இனிமையான சங்கீதத்தையும் பார்த்திருப்பான்? கேட்டிருப்பான்? ஆனால் இப்போது காண்பதெல்லாம் இந்த மஞ்சள் நிறக் காடும், தகிப்பிலே கேட்கும் மரண ஓலமும் தான். லிடியா சொன்னது சரியே. பிள்ளைகளுக்கு இந்தக் கற்பனை உலகிலிருந்து ஒரு சின்ன இடைவெளி தேவைதான். இது கற்பனையைத் தாண்டி நிஜமாக வளர்ந்துவிட்டது. அதுவும் பத்து வயது குழந்தைகளுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம். எப்போதாவது சில நேரங்களில் இது போன்ற கோமாளிக் கற்பனையை மனதில் கொண்டிருந்தால் தவறில்லை. ஆனால் இந்த பிஞ்சு நெஞ்சங்களில் எப்போதும் இதுவே குடி இருப்பதென்றால்…? அப்பப்பா! அவன் ஆழமாக யோசிக்கத் தொடங்கினான். கடந்த ஒரு மாதமாகவே, சிங்கங்களின் கர்ஜனை இரைச்சலும், அவற்றின் தேக வாசமும், அவனுடைய அலுவலகக் கதவிடுக்கு வழியே கசிந்து வந்திருக்கின்றன. அவனோ தன் வேலைப் பளுவில் அதனை கவனிக்கவில்லை.

ஜார்ஜ் காட்டில் தனியாக நின்றான். சிங்கங்கள் சாப்பிட்டபடி அவனை நிமிர்ந்து பார்த்தன. அந்த மாயவுலகின் ஒரே ஒரு நிஜ உலகத் தொடர்பு… அவனால் திறந்திருந்த கதவின் வழியே கூடத்தின் மற்றொரு மூலையில் உட்கார்ந்திருந்த தன் மனைவியைப் பார்க்க முடிந்ததுதான். அவள், வரைந்து வைத்த ஓவியம் போல உயிரற்று உணவருந்திக் கொண்டிருந்தாள்.

“சீ! போ!” என்று சிங்கங்களைத் துரத்தினான்.

அவை அசரவில்லை. அசையவில்லை.

அவனுக்கு அந்த அறையின் அடிப்படைக் கோட்பாடு நன்றாகத் தெரியும். முதலில் உன் எண்ணங்களை நீ துரத்தி விடவேண்டும். பின் நீ எதை நினைத்தாலும் அது தோன்றிவிடும். “அலாவுதீனும் அற்புத விளக்கும் வரட்டும்” என்று சொடுக்கிட்டான். ஒன்றும் மாறவில்லை. காடு அப்படியே இருந்தது. சிங்கங்கள் அப்படியே இருந்தன.

“அறையே! எனக்கு அலாவுதீனைக் கொண்டு வா!” என்று மறுபடியும் ஆணையிட்டான்.

எதுவும் வரவில்லை. போகவுமில்லை. சிங்கங்கள் தங்கள் உணவை மென்று கொண்டிருந்தன.

“அலாவுதீன்!”

அவன் சாப்பிடத் திரும்பிவிட்டான். “அந்த முட்டாள் அறை வேலை செய்ய மாட்டேன் என்கிறது. நான் சொல்வதை கேட்க மறுக்கிறது”

“அப்படியும் இருக்கலாம்…”

“அப்படியும் என்றால்? வேறு எப்படி?”

“அது கேட்க மறந்தும் இருக்கலாம். குழந்தைகள் ஆப்பிரிக்கா, சிங்கம், மரணம், இவற்றைப் பற்றியெல்லாம் நிறைய யோசித்து யோசித்து, அந்த அறையை வேறு எதையும் கேட்க முடியாத வகையில் மரத்துப்போகச் செய்திருக்கலாம்.”

“இருக்கலாம்”

“இல்லை பீட்டர் அதை இப்படியே இருக்கும்படி பொருத்தியிருக்கலாம்”

“அவனுக்கு அவ்வளவு விஷயமெல்லாம் தெரியுமா என்ன?”

“ம்ம்.. அவன் பட்டறைக்குச் சென்று எதையாவது நோண்டியிருக்கலாம் அல்லவா?”

“அவனுக்கு பட்டறை சமாச்சாரம் எல்லாம் ஒன்றும் தெரியாது”

“அவன் பத்து வயதுக்கு ரொம்ப புத்திசாலியாக இருக்கிறான். அவனுடைய ஐ. க்யு. மிக அதிகம்…”

“இருந்தாலும் பட்டறை…”

“அம்மா! அப்பா!”

இருவரும் திரும்பிப் பார்த்தனர். வென்டியும் பீட்டரும் முன் வாசல் வழியாக வந்தனர். பஞ்சுமிட்டாய் கன்னங்களும், பிரகாசமான நீல நிற கோலிகுண்டு கண்களும், ஹெலிகாப்டர் பயணத்தால் சட்டையில் இறங்கிவிட்ட ஓசோன் வாசமும் குழந்தைகளை மிக அழகாகக் காட்டின.

“சரியாகச் சாப்பிட வந்துவிட்டீர்கள்”, என்றனர் பெற்றோர் இருவரும்.

“ஐஸ் க்ரீமும், ஹாட் டாகும் சாப்பிட்டதால் வயிறு நிரம்பிவிட்டது. நாங்கள் சாப்பிடவில்லை, சும்மா உட்கார்ந்து கொள்கிறோம்” – கைகோர்த்தபடியே பிள்ளைகள் பதில் சொன்னார்கள்.

ஜார்ஜ் ஆரம்பித்தான். “சரி. எங்களுக்கு விளையாட்டு அறையைப் பற்றி சொல்லுங்கள்”

அண்ணனும் தங்கையும் முழித்தபடியே சொன்னார்கள், “விளையாட்டு அறையில் என்ன?”

“அதுதான் அந்த ஆப்பிரிக்காவும், காடும், மற்ற எல்லாமும்” – அப்பாவிடம் ஒரு போலி புன்னகை இருந்தது.

“எனக்குப் புரியவில்லை” என்றான் பீட்டர்.

“உன் அம்மாவும், நானும் இப்போதுதான் ஆப்ரிக்கா, டாம் ஸ்விப்ட், மற்றும் மின்சார சிங்கம், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம்”.

“அங்கு அப்பரிக்காவெல்லாம் ஒன்றுமில்லை”

“பீட்டர்… பொய் சொல்லாதே! எங்களுக்கு நன்றாகத் தெரியும்”

“எனக்கு அப்படி எதுவும் ஞாபகமில்லை. உனக்கு?” என்று வென்டியைப் பார்த்து கேட்டான்.

“இல்லை”

“சரி. ஓடிப் போய் பார்த்துவிட்டு வா.”

சிட்டாகப் பறந்தாள்.

“வென்டி! போகாதே. திரும்பி வா” என்று ஜார்ஜ் தடுப்பதற்குள் போய்விட்டாள். வீட்டின் மின்சார விளக்குகளும் அவளை மின்மினிப் பூச்சியாய்ப் பின் தொடர்ந்தன. தான் இறுதியாக அந்த அறையைப் பார்த்துவிட்டு வரும்போது அதன் கதவைப் பூட்ட மறந்ததை அப்போதுதான் ஜார்ஜ் உணர்ந்தான். அதற்குள் வென்டி ஓடியேவிட்டாள்.

“வென்டி பார்த்துவிட்டு வந்து சொல்வாள்” என்றான் பீட்டர்.

“அவள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. எனக்குத் தெரியும்.”

“அப்பா! நீங்கள் எதையோ தப்பாகப் பார்த்திருக்கறீர்கள்.”

“இல்லை பீட்டர். என் கூட வா”

அதற்குள் வென்டி மூச்சு வாங்கியப்படி ஓடி வந்தாள். “அங்கு ஒன்றும் ஆப்ரிக்கா இல்லையே”

“என்ன சொல்கிறாய் நீ? எல்லோரும் என்னோடு வாருங்கள். பார்த்துவிட்டு வருவோம்”. நால்வரும் நடக்கத் தொடங்கினர்.

அறையின் கதவைத் திறந்தால்…. அங்கு பச்சைப் பசேல் என்று ஒரு சோலை. பாட்டுப் பாடும் ஒரு அழகான ஓடை, ஊதா நிறத்தில் உயர்ந்து நிற்கும் மலை முகடுகள், கூவும் குயில்கள், குலுங்கும் மலர்கள், பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், நீண்ட கருங்கூந்தலோடு அழகான வன தேவதையாக ரம்மியமான ரீமா! ஆப்பிரிக்கா இல்லை; அந்தப் புல்வெளி இல்லை; சிங்கங்கள் இல்லவே இல்லை. ரீமா மட்டுமே இருக்கிறாள், அழகாகப் பாடிக்கொண்டு. அவள் பாட்டைக் கேட்டால் ஆனந்தக் கண்ணீர் வந்துவிடும்.

ஜார்ஜ் இந்தப் புதுக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் குழந்தைகளைப் பார்த்து “போய் தூங்குங்கள்” என்றான்.

எதையோ சொல்ல அவர்கள் வாயைத் திறக்க,

“சொன்னது கேட்டது அல்லவா?” என்று அதட்டினான்.

பின் அவர்கள் வாயுக் குழாய்க்குள் புகுந்து கொள்ள, ஒரு பெரிய காற்றலை வந்து அவர்களை கவ்விக் கொண்டு, பள்ளியறையில் துப்பிவிட்டு சென்றது.

ஜார்ஜ் அந்த சோலையை ஒரு முறை சுற்றி வந்தான். முன்பு சிங்கங்கள் நடமாடிய பகுதியில் விழுந்து கிடந்த ஏதோ ஒன்றை பொறுக்கிக் கொண்டு தன் மனைவியை நோக்கி திரும்பினான்.

“என்னது இது?”

“என் பழைய பணப்பை”

அவன் அவளிடம் காண்பித்தான். அதில் காய்ந்த புல்லின் வாசமும், சிங்கத்தின் நாற்றமும் கலந்திருந்தன. கன்னாபின்னாவென்று கடிபட்டிருந்த அதில் எச்சில் துளிகளும், இரத்தக் கரையும் இருந்தன.

அவன் விளையாட்டு அறையின் கதவை நன்றாக இழுத்து மூடி இறுக்கிப் பூட்டினான்.

நடுநிசி. அவன் விழித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் தூங்கவில்லை என்று அவனுக்குத் தெரியும். இருட்டைக் கிழித்துக் கொண்டு வந்தது அவள் குரல்,”வென்டி தான் மாற்றியிருப்பாள் என்று நினைக்கிறாயா?”

“நிச்சயமாக”

“அவளா காட்டை சோலையாக மாற்றி, சிங்கங்களுக்கு பதில் ரீமாவை அங்கு வைத்திருப்பாள்?”

“ம்ம்”

“எதற்காக?”

“தெரியாது. ஆனால் நான் கண்டுபிடிக்கும் வரை அது பூட்டியே கிடக்கும்”

“எப்படி உன் பணப்பை அங்கு சென்றது?”

“எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்றுதான்… அந்த அறையை வாங்கியதன் மூலம் நம் பிள்ளைகளுக்குப் பெரிய தீங்கைச் செய்துவிட்டோம். நம் குழந்தைகளின் மனம் கெட்டுப்போகவில்லை என்றால் அந்த அறை இப்படி எல்லாம் இருக்குமா…?”

“கெட்டுப்போன மனதை ஆரோக்கியமான முறையில் சரி செய்வதற்காகத்தானே அந்த அறையே இருக்கிறது”

“அதன் மீது எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது” – விட்டத்தை வெறித்த படி சொன்னான்.

“நாம் அவர்களுக்கு என்ன குறை வைத்தோம்? அவர்களை எப்படியெல்லாம் தாங்கினோம்? கேட்டதெல்லாம் மறுக்காமல் கொடுத்தோமே! அதற்கு அவர்கள் செய்யும் மரியாதை இதுதானா? அடங்காமல் மறுத்துப் பேசுவதும், இரகசியமாகத் தப்புக் காரியங்கள் செய்வதும்…ச்சே!”

” ‘குழந்தைகள் மிதியடி மாதிரி…அவ்வவ்போது அவர்களை மிதிக்க வேண்டும்’ என்று யார் சொன்னது? நாம் கையைக் கூட ஓங்கியதில்லை. அவர்களுக்குக் கஷ்டம் என்றால் என்ன என்று கூட தெரியாதபடி ரொம்பவும் செல்லம் கொடுத்துவிட்டோம். அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு வருகிறார்கள், போகிறார்கள். நம்மைக் குழந்தைகள் போல நடத்துகிறார்கள். அவர்கள் கெட்டுவிட்டார்கள்; நாமும் கெட்டுவிட்டோம்”.

“சில மாதங்களுக்கு முன் அவர்கள் ராக்கெட்டில் நியூ யார்க் நகரத்திற்குச் செல்லக் கூடாது என்று நீ தடுத்தாய் இல்லையா… அப்போதிலிருந்தே அவர்கள் நடவடிக்கைகள் எல்லாம் கிறுக்குத்தனமாகவே இருக்கின்றன.”

“நான்தான் அப்போதே சொன்னேனே, அப்படித் தனியாக செல்ல அவர்களுக்கு வயது போதாது என்று?”

“உன் விளக்கமெல்லாம் யாருக்கு வேண்டும்? அவர்கள் அன்றிலிருந்தே நம்மை மதிப்பதில்லை. அதுதான் உண்மை.”

“நாளை காலையில் டேவிட் மெக் க்லீனைக் கூப்பிட்டு அந்த ஆப்பிரிக்காவைக் காட்டப் போகிறேன்”

“அங்குதான் இப்போது ஆப்பிரிக்கா இல்லையே. சோலையும், ரீமாவும் மட்டுமே இருக்கிறார்கள்”

“நாளைக்குள் மீண்டும் அங்கு ஆப்ரிக்கா வந்துவிடும் என்று எனக்கு தோன்றுகிறது”

அடுத்த நொடி அவர்கள் அலறல்களைக் கேட்டனர்.

இரண்டு அலறல் சத்தங்கள். கீழிருந்து இருவர் கூவிக் கொண்டிருந்தனர். அது அடங்கிய பின் சிங்கங்களின் கர்ஜனை.

“வென்டியும் பீட்டரும் அவர்கள் அறையில் இல்லை” என்றாள்.

அவன் மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். அவன் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.”ஹூம்! அவர்கள் பூட்டை உடைத்துக் கொண்டு அறைக்குள் போய்விட்டார்கள்”

“அந்த அலறல்களை முன்பே எங்கோ கேட்டது மாதிரி இல்லை?”

“அப்படியா?”

“ஆமாம். பயமாக இருக்கிறது.”

அந்த கட்டில் எவ்வளவுதான் தாலாட்டினாலும் அந்த இருவரையும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தூங்க வைக்க முடியவில்லை. இரவுக் காற்றில் பூனைகளின் வாசனை மிதந்து வந்தது.

“அப்பா!” என்ற பீட்டரின் குரலுக்கு…

“என்ன?”

பீட்டர் தன காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் தந்தை, தாயைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

“நீங்கள் விளையாட்டு அறையை மொத்தமாகப் பூட்ட மாட்டீர்கள் இல்லையா?”

“தெரியாது. அது சிலவிஷயங்களைப் பொருத்து உள்ளது”

“எதை?”

“உன்னையும், உன் தங்கையையும்தான். நீங்கள் இந்தக் கொடூரமான ஆப்பிரிக்கப் புல்வெளியைக் கொஞ்சம் மாற்றினீர்கள் என்றால்…ஒரு ஸ்வீடனோ, நார்வேயோ, இல்லை ஒரு சீனாவோ அங்கு அமைப்பீர்கள் என்றால் நான் மூடமாட்டேன்”.

“நாங்கள் விரும்பியபடி விளையாட எங்களுக்கு அனுமதி உள்ளது என்று நினைத்தேன்”

“ஆம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு”

“அப்பிரிக்காவில் என்ன தப்பு அப்பா?”

“அப்போது நீ ஆப்பிரிக்காவை உருவாக்கியதை ஒப்புக் கொள்கிறாய்?”

“ஒரு பொழுதும் விளையாட்டு அறை பூட்டப்படக் கூடாது” – பீட்டர் தீர்க்கமாகச் சொன்னான்.

“சொல்லப்போனால், நாங்கள் முழு வீட்டையும் ஒரு மாதத்திற்குப் பூட்டிவிட்டு, யாரும் கேட்பாரற்ற வாழ்க்கை வாழலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்”

“சீ! இதைக் கேட்கும் போதே கைகாலெல்லாம் நடுங்குகிறது. அது மாதிரி ஆகுமானால் தானியங்கி காலணிப்பான் இருக்காதா? நானே என் காலணிகளை மாடிக் கொள்ள வேண்டுமா? நானே என் பல்லைத் தேய்த்துக் கொண்டு, தலை முடியை சீவிக்கொண்டு, குளித்துக்கொண்டு… ஒரே போர்!”

“அந்த மாற்றமும் வேடிக்கையாகத்தான் இருக்கும்”

“இல்லவே இல்லை. அது ரொம்பவும் வெறுப்பாக இருக்கும். போன மாதம் நீங்கள் அந்த ஓவியந்தீட்டியை எடுத்துக் கொண்டு போனதே எனக்குப் பிடிக்கவில்லை.”

“ஏனென்றால் நீயாகவே வரையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்”

“நான் எதையும் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு, நுகர்ந்து கொண்டிருந்தாலே போதும். வேறென்ன வேண்டும்?”

“அப்படியே செய். போய் அப்பிரிக்காவில் விளையாடு… போ!”

“நிஜமாகவே வீட்டைப் பூட்டத்தான் போகிறீர்களா?”

“அதைப் பற்றி யோசிக்கிறேன்.”

“நீங்கள் மேலும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று நான் சொல்லுவேன்”

“என் மகனிடமிருந்து எனக்கு எந்த மிரட்டலும் வருவதை நான் விரும்பவில்லை.”

“சரி ஆகட்டும்”. பீட்டர் விளையாட்டு அறையை நோக்கி நடந்தான்.

“நேரத்திற்கு வந்துவிட்டேனா?” என்று கேட்டுக்கொண்டே நுழைந்தார் டேவிட் மேக் க்லீன்.

“சாப்பிடுகிறீர்களா?” என்றான் ஜார்ஜ்.

“வேண்டாம். இப்போதுதான் சாப்பிட்டேன். என்ன பிரச்சனை?”

“டேவிட்! நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணர்தானே?”

“அப்படித்தான் நினைக்கிறேன்”

“நல்லது. அப்போது எங்கள் விளையாட்டு அறையை ஒருமுறை பார்த்து விடுங்கள். சென்ற ஆண்டு நீங்கள் இங்கு வந்திருந்த போது பார்த்தீர்கள். அப்போது ஏதாவது விசித்திரமாக உங்கள் கண்ணில் பட்டதா?”

“அப்படி ஒன்றும் இல்லை. வழக்கமாகக் காணப்படும் வன்முறைதான். அங்கேயும், இங்கேயுமாக கொஞ்சம் பயங்கலந்த சந்தேகத்தன்மை. பெற்றோரிடம் எப்போதும் அடங்கியிருக்கும் குழந்தைகளிடம் இதெல்லாம் சகஜம் தான். வேறொன்றும் பெரிதாக இல்லை”

அவர்கள் கூடத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஜார்ஜ் சொன்னான், “நான் விளையாட்டு அறையைப் பூட்டிவிட்டேன். ஆனால் நேற்றிரவு அவர்கள் மறுபடியும் அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார்கள். அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவர்கள் செய்திருக்கும் கோலத்தை நீங்கள் பார்க்கலாமே!”

விளையாட்டு அறையிலிருந்து பயங்கரமான ஒரு சத்தம் கேட்டது.

“கேட்டதா? வந்து பாருங்கள்” என்றான் ஜார்ஜ்.

குழந்தைகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் உள்ளே சென்றனர்.

அலறல் அடங்கிவிட்டது. சிங்கங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

“குட்டிகளா!! ஒரு நிமிடம் வெளியே போய் விளையாடுங்கள். எதையும் மாற்ற வேண்டாம். சுவரெல்லாம் அப்படியே இருக்கட்டும்” என்றான் ஜார்ஜ்.

குழந்தைகள் சென்ற பின் அவர்கள் இருவரும் அங்கே இருந்தனர். தூரத்தில் சிங்கக் கூட்டம் வேட்டையாடிய ஏதோ ஒன்றை ரசித்து, ருசித்துத் தின்றுகொண்டிருந்தன.

“அது என்னவென்று தெரிந்தால் நன்றாகயிருக்கும். சில சமயங்களில் என்னால் பார்க்கமுடிகிறது. ஒரு சக்தி வாய்ந்த பைனாகுலரால் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்” பேசிக்கொண்டிருந்த ஜார்ஜை நிறுத்தும்படி இருந்தது டேவிடின் வறட்டுச் சிரிப்பு.

“கஷ்டம்தான். எத்தனை நாளாய் இப்படி இருக்கிறது?” – சுற்றி நாலாப்புறமும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“கிட்டத்தட்ட ஒரு மாதமாக”

“நிச்சயமாக இது சரியாகப் படவில்லை”

“எனக்கு உண்மை வேண்டும். உணர்வுகள் இல்லை.”

“அன்புள்ள ஜார்ஜ்! ஒரு மனோதத்துவ நிபுணர் அவன் வாழ்க்கையில் ஒரு பொழுதும் உண்மையை தேடுவதில்லை. அவன் எப்போதும் உணர்வுகளையும், எண்ணங்களையுமே பார்க்கிறான், கேட்கிறான். இது சரியில்லை. என் உள்ளுணர்வுகளை நம்புங்கள். இங்கு ஏதோ தப்பாகத் தெரிகிறது. ரொம்பத் தப்பாக. இந்த அறையை மொத்தமாக இடித்துவிட்டு, பிள்ளைகளை அடுத்த ஒரு வருடத்துக்கு தினமும் என்னிடம் சிகிச்சைக்குக் கூட்டி வாருங்கள்.”

“இதென்ன அவ்வளவு மோசமா?”

“அப்படித்தான் தெரிகிறது. இந்த சுவர்களின் பிம்பங்களை வைத்து குழந்தைகளின் மனதை நிதானமாக அறிவதே இப்படிப்பட்ட விளையாட்டு அறைகளின் உண்மையான நோக்கம். ஆனால் அழிவைத் தூண்டும் வக்கிரமான எண்ணங்களை துரத்துவதற்கு பதிலாக அவற்றை இந்த அறை வளர்ப்பது போல தெரிகிறது”.

“இது உங்களுக்கு முன்னமே தோன்றவில்லையா?”

“நீங்கள் உங்கள் குழந்தைகளை ரொம்பவும் கெடுத்துவிட்டீர்கள். மேலும், அவர்களை எதோ ஒரு வகையில் அடக்குகறீர்கள். எந்த வகையில்?”

“நான் அவர்களை நியூயார்க்குக்கு அனுப்பவில்லை.”

“வேறு?”

“வீட்டிலிருக்கும் சில இயந்திரங்களை அணைத்துவிட்டேன். மற்றும், சில மாதங்களுக்கு முன் அவர்கள் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதற்காக இந்த அறையை சில நாட்களுக்குப் பூட்டி வைத்தேன். கொஞ்சமாவது பயம் காட்ட வேண்டாமா?”

“ஹா…ஹா..”

“இதற்கு என்ன அர்த்தம்?”

“நிறைய இருக்கிறது. முன்பு சாண்டா க்ளாஸ் இருந்த இடத்தில் இப்போது ச்க்ரூஜ் இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதும் சாண்டா க்ளாஸ் தான் பிடிக்கும் என்று தெரியுமல்லவா? உங்கள் அன்புக்கு பதிலாக நீங்கள் இந்த அறையையும், வீட்டையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டீர்கள். இப்போது இந்த அறைதான் அவர்களுக்குத் தாய், தந்தை. உங்களை விட, அவர்களுக்கு இதுதான் இப்போது மிக முக்கியமாகி விட்டது. நீங்களோ இதை திடீரென்று பூட்டிவிட வேண்டும் என்கிறீர்கள். அதை அவர்கள் வெறுப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த வெறுப்பு வான் வழியாக வருகிறது. இந்தச் சூரியனைப் பாருங்கள்! உங்களுக்கே புரியும். ஜார்ஜ்! நீங்கள் மாற வேண்டும். மற்றவர்களைப் போல நீங்களும் இந்த வீட்டைக் கட்டி இயந்திர சுகங்களுக்கு நடுவில் உங்களைப் புதைத்துக் கொண்டுவிட்டீர்கள். நாளைக்கே உங்கள் சமையல் அறையில் எதாவது பிழை என்றால் நீங்கள் பட்டினிதான். உங்களுக்கு ஒரு முட்டையைக் கூட உடைக்கத் தெரியாது. போகட்டும்! எல்லாவற்றையும் அணைத்துவிடுங்கள். மூடிவிடுங்கள். புதிதாய்த் தொடங்குங்கள். நேரமாகும். ஆனால் ஒரு வருடத்தில் நாம் பிள்ளைகளைத் திருத்தி விடலாம் பாருங்கள்.”

“ஆனால் திடீரென்று இப்படி ஒரேயடியாக இதைப் பூட்டினால் குழந்தைகளுக்கு அதிர்ச்சியாக இருக்காதா?”

“அவர்கள் மேலும் இதற்குள் இறங்கக் கூடாது என்று நான் சொல்வேன். அவ்வளவு தான்”

சிங்கங்கள் விருந்தை முடித்துவிட்டு காட்டின் ஒரு ஓரத்தில் நின்றபடி இவர்களைப் பார்த்தன.

“எனக்கு என்னமோ பண்ணுகிறது. இங்கிருந்து கிளம்பலாம். நான் எப்போதும் இது போன்ற அறைகளைக் கண்டு கொண்டதில்லை. இப்போது ஒரு மாதிரி பதட்டமாக இருக்கிறது. படபடவென வருகிறது.” என்றார் மெக்லீன்.

“சிங்கங்கள் உண்மையாகத் தெரிகின்றன இல்லையா? ஒருவேளை அவை உண்மையாகவே…?” என்று ஆரம்பித்தான் ஜார்ஜ்.

“என்ன?”

“உண்மையாகவே வந்து விடுமோ?”

“எனக்குத் தெரிந்து அப்படி நடக்க முடியாது”

“இயந்திரத்தில் எதாவது பிழை? இல்லை யாராவது எதையாவது நோண்டிவைத்து…?”

“அதெல்லாம் இல்லை”

கதவருகே சென்றனர்.

“இந்த அறை தான் அணைக்கப்படுவதை விரும்பாது என்று நினைக்கிறேன்” என்றான் ஜார்ஜ்.

“எதுவுமே தான் இறப்பதை விரும்பாது… அது ஒரு அறையாக இருந்தாலும்”

“ஒருவேளை நான் இதை அணைக்கப் போவதைக் கண்டு இந்த அறை என்னை வெறுத்து விடுமோ?”

“இங்கு எல்லோருக்கும் பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. வேண்டும் என்றால் அதையே கேளுங்களேன்” என்றபடி ஒரு இரத்தம் படிந்த சால்வையை எடுத்தார் மெக்லீன்.”இது உங்களுடையதா?”

“இல்லை. லிடியாவுடையது” – ஜார்ஜின் முகம் இறுகியிருந்தது.

அவர்கள் மின்சாரப் பெட்டி அருகே சென்று அந்த அறையை அணைத்தனர்.

குழந்தைகள் இருவரும் ஏறக்குறைய பைத்தியமாகி விட்டனர். அவர்கள் அழுதனர், அரற்றினார், கையில் கிடைத்தவற்றை தூக்கி எறிந்தனர், வீட்டில் உள்ள பொருட்கள் மீது ஏறிக் குதித்து அழிச்சாட்டியம் செய்தனர்.

“நீங்கள் விளையாட்டு அறையைப் பூட்டக் கூடாது”

அவர்கள் சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டு அழுதனர்.

“ஜார்ஜ்! இப்படி திடீரென்று அணைத்தால் எப்படி? கொஞ்ச நேரத்திற்கு அதைத் திறந்து விடுங்களேன்” என்றாள் லிடியா.

“முடியாது”

“நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக இருக்கக்கூடாது”

“லிடியா, அது அணைக்கப்பட்டுவிட்டது. இனி எப்போதும் அணைந்து தான் இருக்கும். இந்த முழு வீடே இப்போது சாகப் போகிறது. இங்கே நடக்கும் கூத்தைப் பார்த்தால் எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. இந்த இயந்திர, மின்னணு தொப்புள் கோடியை நம்பி நாம் வாழ்ந்ததெல்லாம் போதும். அறுத்து எரிந்து விட்டு சுத்தமான காற்றை சுவாசிப்போம் வா!”

அவன் வீட்டைச் சுற்றி நடந்து ஒவ்வொரு சாதனமாய் அணைக்கத் தொடங்கினான். பேசும் கடிகாரம், அடுப்பு, உஷ்ணக் கருவி, காலணிப்பான், காலணி துடைப்பான், துடைப்பம், குளிப்பாட்டி, சோர்வு போக்கி, என்று கைக்கு எட்டியது எல்லாவற்றையும் அணைத்தான்.

இயந்திரங்களின் பிணக்குவியலில் வீடு நிறைந்திருந்தது போலிருந்தது. வீடே இயந்திர சுடுகாடாய் ஆகிவிட்டது. எங்கும் அமைதி. ஓடும் கருவிகளின் மின்சார ரீங்காரம் நின்றுபோய் ஒரு மயான அமைதி நிலவியது

பீட்டர் மாடியில் உட்கார்ந்து கொண்டு வீட்டோடு பேசினான், “அவர்களைத் தடுங்கள். அப்பா உங்களைக் கொல்லுவதை அனுமதிக்காதீர்கள்”. பின் தன் தந்தையை நோக்கி, “நான் உங்களை வெறுக்கிறேன்” என்றான்.

“இப்படியெல்லாம் என்னை அவமதிப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை”

“நீங்கள் இறந்துவிட்டால் தேவலாம்!”

“நாம் எப்போதோ இறந்துவிட்டோம். இப்போதுதான் உண்மையான வாழ்க்கை வாழப் போகிறோம். இங்கே இயந்திரங்களுக்கு இடையே பொம்மை போல இருப்பதற்கு பதில், மனிதர்களாக வாழ்வோம்.”

வென்டி அழுது கொண்டிருந்தாள். பீட்டரும் அவளோடு சேர்ந்து அழுதான். “ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் மட்டும் அந்த விளையாட்டு அறையைத் திறந்துவிடுங்கள்” – கெஞ்சினார்கள்.

“ஜார்ஜ்! பாவம் அவர்கள். ஒரு நிமிடத்தில் ஒன்றும் ஆகாது” என்று லிடியாவும் சொன்னாள்.

“சரி சரி. அவர்கள் பேசாமல் இருப்பார்கள் என்றால் திறந்துவிடுகிறேன். ஒரு நிமிடம் மட்டும் தான். அதற்கு மேல் கிடையாது.”

“அப்பா! அப்பா!” என்று துள்ளினர் அந்த அழுமூஞ்சிக் குழந்தைகள்.

“அதற்குப் பிறகு நாம் புறப்படுகிறோம். டேவிட் மெக்லீன் இன்னும் அரை மணியில் வந்து நம்மை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வார். நான் போய் உடை மாற்றிக்கொள்கிறேன். நீ அந்த அறையின் கதவைத் திறந்து விடு. லிடியா! ஞாபகம் இருக்கட்டும்… ஒரு நிமிடம் மட்டும்தான்.”

அம்மாவும், பிள்ளைகளும் எதையோ வம்படித்துக் கொண்டே கிளம்பினார்கள். ஜார்ஜ் வாயுக் குழாய் வழியாக மாடிக்கு வந்து உடை மாற்றிக் கொண்டான். ஒரு நிமிடத்திற்கு பின் லிடியாவும் அங்கு வந்தாள்.

“நாம் இங்கிருந்து கிளம்புவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“அவர்களைத் தனியாகவா விட்டுவிட்டு வந்தாய்?”

“நானும் உடை மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் அந்த பாழாய்ப் போன ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?”

“சரி. நாம் இன்னும் ஐந்து நிமிடங்களில் ஐயோவாவிற்குக் கிளம்புகிறோம். கடவுளே! நாம் ஏன் இந்த வீட்டிற்கு வந்தோம்? எது நம்மை இந்தக் கண்றாவியை வாங்கத் தூண்டியது?”

“பணம், கர்வம், முட்டாள்தனம்.”

“பிள்ளைகள் அந்த மிருகங்களோடு மூழ்கிப் போவதற்குள் நாம் கீழே போகலாம் வா.”

அப்போதுதான் அவர்களை குழந்தைகள் அழைத்தார்கள், “அம்மா! அப்பா! சீக்கிரம்… சீக்கிரம்!”

அவர்கள் வாயுக் குழாய் மூலம் கீழே இறங்கி, கூடத்தில் ஓடினார்கள். குழந்தைகள் தென்படவேயில்லை. “வென்டி! பீட்டர்!”

விளையாட்டு அறைக்குள் ஓடினார்கள். புல்வெளி காலியாக இருந்தது. சிங்கங்கள் சாவகாசமாக நின்று அவர்களைப் பார்த்தன. “பீட்டர்? வென்டி?”

கதவு சாத்தப்பட்டது.

“வென்டி! பீட்டர்!”

ஜார்ஜும், அவன் மனைவியும் திரும்பி கதவருகே ஓடினர்.

கதவின் தாழ்ப்பாளைத் திருகியவாறே ஜார்ஜ் கத்தினான், “கதவைத் திறவுங்கள்! என்ன… அவர்கள் நம்மை வெளியிலிருந்து பூட்டிவிட்டார்களா? பீட்டர்! கதவைத் திற!” அவன் கதவை அடிக்கத் துவங்கினான்.

வெளியிலிருந்து பீட்டரின் குரல் கேட்டது,”அவர்களை இந்த அறையையும், வீட்டையும் அணைக்கச் செய்யாதீர்கள்.”

ஜார்ஜும், லிடியாவும் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். “குழந்தைகளே! முட்டாள்தனமாக எதையும் செய்யாதீர்கள். நேரமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் மெக்லீன் அவர்கள் இங்கு வந்துவிடுவார். அப்புறம்…”

அந்த சமயத்தில் சத்தங்கள் கேட்கத் தொடங்கின.

அவர்களைச் சுற்றி மூன்று திசைகளிலும், மஞ்சள் புல்லையும், காய்ந்த வைக்கோலையும், தங்களின் பெரிய பாதங்களால் மிதித்துக் கொண்டு, கம்பீரமான குரலில் கர்ஜித்தப்படியே சிங்கங்கள் வந்தன.

சிங்கங்கள்!

ஜார்ஜ் அவன் மனைவியைப் பார்த்தான். பின் இருவரும் சிங்கங்களைப் பார்த்தனர். இறுக்கிய வாலோடு சிங்கங்கள் அவர்களை நோக்கி மெல்லமாக அடியெடுத்து வைத்தன.

திரு. ஜார்ஜ் ஹெட்லீயும், அவன் மனைவியும் அலறினார்கள்.

அவர்கள் அதற்கு முன்பு கேட்ட பிற அலறல்களுக்கான காரணம் புரிந்தது.

டேவிட் மெக்லீன் விளையாட்டு அறையின் வாயிலில் வந்த பின், “நான் வந்துவிட்டேன். ஹலோ! இருக்கிறீர்களா?” என்றார். அந்த திறந்த வெளியின் மத்தியில் உட்கார்ந்து மதிய உணவை உண்டுகொண்டிருக்கும் இரு குழந்தைகளையும் முறைத்துப் பார்த்தார். அவர்களுக்குப் பின் நீர்க்குட்டையும், மஞ்சள் புல்வெளியும் காணப்பட்டன. மேலே சுடும் சூரியன்! அவருக்கு வியர்க்கத் தொடங்கியது. “எங்கே உங்கள் அப்பா, அம்மா?”

சிறுவர்கள் புன்னகையுடன் சொன்னார்கள், “இங்கே வந்துவிடுவார்கள்”.

“நல்லது. நாம் புறப்பட வேண்டும்”

தூரத்தில் சிங்கங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்வது தெரிந்தது. பிறகு அவை அமைதியாக நிழலுக்கு கீழ் சென்று சாப்பிடத் துவங்கின.

மெக்லீன் கண்களை இறுக்கிக் கொண்டு சிங்கங்களையே பார்த்தார்.

அவர் முகத்தில் ஒரு நிழலாடியது. பல நிழல்கள் ஆடின. ஆகாயத்தில் பருந்துகள் பறந்து வந்தன.

வென்டி அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு கேட்டாள், “தேநீர் அருந்துகிறீர்களா?”

Comments are closed.