இணையத்தில் கதை படிக்கும் கலை

கதை கேட்பது எப்பொழுதுமே பிடித்தமானது. தமிழர்கள் தெனாலி இராமனும் மரியாதை இராமனும் முல்லாக் கதைகளும் ஈசாப் நீதிக் கதைகளும் அக்பரும் பீர்பலும் பஞ்சதந்திரக் கதைகளும் படித்து வளர்ந்தவர்கள்.

தமிழ் இலக்கியவாதிகள் எனக்கு எப்படி அறிமுகமானார்கள் என்பதை வைத்துத் துவங்குகிறேன். மைலாப்பூரில் நாங்கள் வைத்திருந்த மெஸ், ‘இராயர் காப்பி கிளப்’ அளவு புகழ் பெறவில்லை எனினும், துர்வாசர்களும் நல்ஹிருதயர்களும் அவ்வப்போது தலைகாட்டும் இடமாக இருந்தது. அப்படி வந்திருந்த ஒரு எழுத்தாளர், அப்பாவிடம் மூன்று கார்டுகளைக் கொடுத்து, “என்னுடைய கதை இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கு. உங்க ஹோட்டலில் சாப்பிடறவங்ககிட்ட சொல்லி, ‘நல்லா இருந்துச்சுன்னு’ எழுதிப் போட சொல்லுதீங்கள்லா!” என்று உரிமையுடன் கோருவதில்தான் ஆளுமைகளின் கதை விடும் அளப்பின் வீச்சை அறியத்துவங்கினேன்.

தமிழ் இலக்கியம் எனக்கு எப்படி அறிமுகமானது என்பது அடுத்த கட்டம். பத்தாவது படிக்கும்போது “நான் – டிடெய்ல்” புத்தகத்தில்தான் சிறுகதைகள் வாசித்தேன். அதில் ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஒரு ஆண்டி” வந்திருந்தது. முதலில் நல்ல மெட்டுள்ள கவர்ச்சியான பாடல் இருந்தது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி. – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

அப்பொழுது வாசித்துக் கொண்டிருந்த சுஜாதா, இராஜேஷ் குமார் பாக்கெட் நாவலில் இருந்து நிறையவே வித்தியாசமாகவே இருந்தது. அனால், அதன் பிறகு உடனடியாக ஜெயகாந்தனின் எல்லா ஆக்கங்களையும் படிக்கவில்லை. அதே பத்தாம் வகுப்பு துணைப்பாடத்தில் அசோகமித்திரனோ, சுந்தர ராமசாமியோ இருந்திருக்கலாம். ஏனோ கவரவில்லை. பரீட்சைக்கும் வராத பாடம் என்பதால், வாசிக்கவும் இல்லை.

அதே போல் இன்றைய நிலையில், ஒரு மாணவருக்கு இன்ன எழுத்தாளரின் மீது ஆர்வம் பிறந்தால், இணையம் இருக்கிறது.

விக்கிப்பிடியாவின் தமிழக எழுத்தாளர்கள் பகுப்பில் மட்டும் கிட்டத்தட்ட 750+ புனைவாளர்கள் பட்டியலிடப் பட்டிருக்கிறார்கள்.

இத்துணை எழுத்தாளர்களா…! இவர்களின் எந்தப் புத்தகத்தை வாசிப்பது என அங்கலாய்க்கறீர்களா? அந்தத் தேர்விற்கு ஆம்னிபஸ் உதவுகிறது. நூல் விமர்சனங்களையும், எழுத்தாளர் அறிமுகங்களையும் கொடுக்கிறது.

தமிழ் சிறுகதைகளை இணையத்தில் பல இடங்களில் வாசிக்கலாம். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஒவ்வொரு தளம் வைத்திருக்கிறார்கள்.

ஜெயகாந்தன் போன்றோருக்கு அவருடைய சிஷ்யர்கள் வலையகம் நடத்தினார்கள். இப்பொழுது இணைய வெளியில் ஜெயகாந்தன்.காம் மறைந்து விட்டது. சுஜாதா “மின் அம்பலம்” நடத்தினார். அவரின் மறைவிற்குப் பிறகு அதுவும் மாயாஜாலமாகி விட்டது.

ஜெயமோகன் போன்றோர் தாங்களே தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இந்த வரிசையில் எம்.டி.முத்துக்குமாரசாமி, இரா முருகன், வாமு கோமு, எஸ்.ராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன், சாரு நிவேதிதா, அழகியசிங்கர் எனப் பலரை சொல்லலாம். திரள்மந்தைப் பத்திரிகைகளில் அதிகம் எழுதும் பிரபஞ்சன், மாலன் போன்றோரும் தங்கள் வலைமனைகளில் சிறுகதைகளை வெளியிடுகிறார்கள். அதே போல் சிறுபத்திரிகைகளில் பெரிதும் காணப்படும் தேவிபாரதி, குட்டி ரேவதியும் தங்கள் இணைய இல்லத்தில் புனைவுகளையும் அதன் மீதான தாக்கங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இது எல்லாம் ஒரு எழுத்தாளரின் மொத்த ஆக்கங்களையும் வாசிக்கவோ, அல்லது அவர்கள் எழுதியதில் அவர்கள் சிறந்ததாகக் கருதுவதை வாசிக்கவோ, அல்லது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சமீபத்திய எழுத்துக்களை வாசிக்கவோ பயன்படும். நூலகம்.காம் சென்றால் ஒட்டு மொத்த ஈழ எழுத்துக்கள் குறித்த பார்வையும் கிடைக்கும். என்னைப் போன்ற தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கை எழுத்தாளர்கள் பெரிய அளவில் அறிமுகம் கிடையாது. அந்தக் குறையை நூலகம் தளம் போக்குகிறது.

அப்படியானால், தமிழக எழுத்தாளர்களை எங்கு கண்டுபிடிக்கலாம்?

தமிழ்ப் பத்திரிகைகளில் நீண்ட நெடுங்காலமாக சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வாரப் பத்திரிகையான குமுதத்தின் ஒரு பக்கக் துணுக்கு கதைகள் அவசரகதியில் வாசிப்போருக்கு ருசித்தது. தினமணிக் கதிரும் தினமலரின் வாரமலரும் சிறுகதைகள் வெளியிடுகின்றன. கல்கியும் வாரந்தோறும் இரு பக்கமாவது வருகின்ற அளவு கொண்ட சிறுகதைகள் வெளியிடுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றுக்குமே மூன்று பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது அளவு சாப்பாடு. “இன்னும் கொஞ்சம் ரசம் கொடுங்க…” என்று கேட்டால் ஊற்ற மறுக்கும் லிமிடெட் மீல்ஸ் போல் சிக்கனமாக அடைத்துக் கொள்வதால், வாசகரிடம் போதிய அளவு தாக்கம் ஏற்படுத்த இயலாதவை. இரண்டாவதாக அந்தக் கதைகள் எடுத்துக் கொள்ளும் கருக்கள் – “கொள்ளுத் தாத்தா காலத்தில் கட்டின வீடு” என சிமெண்ட் விளம்பரத்தில் வருவது போல் புராதன சிக்கல்களை அருகிப் போன நனவோடையாக புலம்பி வாந்தி எடுத்த உணர்வோடு தளரவைப்பவை. மூன்றாவது எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்குமான உறவு. நீங்கள் சரவண பவனிலோ தஞ்சாவூர் ஷண்முகாவிலோ அந்தந்த புகழ் பெற்ற வாரந்திர பத்திரிகை நிருபர்களை கௌரவிக்காவிட்டால், உங்கள் சிறுகதை வெளியாவது மிக சிரமமான விஷயம்.

இவற்றுக்கு மாற்றாக பல சிறு பத்திரிகைகள் உதயமாகின்றன. பக்க அளவில் கட்டுப்படுத்தாமல, கதைக்களன்களை புதியதாகவும் வைத்திருக்கின்றன. ஆனால், இங்கும் அனாமதேயமாக உங்கள் சிறுகதையை அனுப்பினால் எவ்வளவு தூரம் கவனிக்கப்படும், வெளியாகும் என்பதெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கின்றன.

இந்த வகையில் நிறைய மாற்றுப் பத்திரிகைகளைச் சொல்லலாம். அம்ருதா; யுகமாயினி; அந்திமழை; மொழிபெயர்ப்பிற்காக திசை எட்டும்; அணங்கு; கணடாவில் இருந்து காலம்; அடவி; வெகு இலக்கியத்தரத்துடன் தமிழினி; அற்றம்; எனி இந்தியன் வார்த்தை; அகநாழிகை; வனம்; கதை சொல்லி; கவிதாசரண்; உன்னதம்; கைநாட்டு; உயிர் நிழல்; உயிர் எழுத்து; பறை; ஆனால், இவற்றில் எதையுமே நிரந்தரமாக எதிர்பார்க்க முடியவில்லை. எதிர்பார்ப்பு என்பதை விட ஒரு இதழுக்கும் இன்னொரு இதழுக்கும் இடையேயான ஸ்திரமான எழுத்துத் தொடர்ச்சியை வெகு சிலரே கடைபிடித்தனர்.

அப்படியானால், காலச்சுவடு, உயிர்மை தவிர வேறு எங்கேதான் சுவாரசியமான தரமான சிறுகதைகளைப் படிக்கலாம்?

2012ல் ஆனந்த விகடன் வெளியிட்ட எழுத்தாளர்களை வைத்து வாசிப்பை மேம்படுத்தலாம். ஆனால், அந்தப் பட்டியலில் இருக்கும் பலர் இரு மாமாங்கமாக அரியணைக் கட்டிலை மாற்றாமல் இருக்கும் ஆப்பிரிக்க கொடுங்கோலன் போல் ஒரே மாவையே அரைப்பவர்கள். 1995க்குப் பிறகு வெளியானதில் தனக்குப் பிடித்த ஒரு டஜன் கதைகளை பாவண்ணன் பகிர்கிறார். அதை வைத்து பழக்கமாகாத எழுத்தாளர்களை அறியலாம்.

சிறந்த வாசகர்களான எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர் நூறு முக்கியமான சிறுகதைகளின் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். அவற்றை தமிழ்த் தொகுப்புகள் வலையகம் வசதியாக வாசிக்கத் தருகிறது. அவர்கள் தரத் தவறியதை அழியாச்சுடர்கள், ஓப்பன் ரீடிங் ரூம், தொகுப்புகள் போன்றவை மூலம் தேடிப் பெறலாம். ”குங்குமம் தோழி”யின் வொர்ட்ப்ரெஸ் இணையத்தளத்தில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளின் மாதிரிகளை ஒரே இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதுவும் ஓரளவிற்கு பயன்படுகின்றன.

சரி… நீங்களே எழுத்தாளர். உங்களுக்கு வோர்ட்பிரெஸ் பதிவு இருக்கிறது. அதிலேயே வெளியிட்டுக் கொள்கிறீர்கள் என்றால் முக்காடு போட்டுக் கொண்டு செல்ஃபீ எடுப்பது போல் ஆகிவிடும். அவர்களுக்கு திண்ணை.காம் இருக்கிறது. வாரந்தோறும் படைப்புகளை வெளியிடுகிறார்கள். கூடவே சிறுகதைகள்.காம் போன்ற வலைத்தளங்களும் இருக்கிறது.

இவர்களில் சமீபத்திய வருகையாக பதாகை.சொம் முளைத்திருக்கிறது. புதிய தலைமுறையின் குரல்களை ஒலிக்கச் செய்கிறது. வலைப்பதிவுக்கே உரிய பசலைக் குழந்தை போன்ற எடிட்டாத தன்மையும், தமிழுக்கு அன்னிய உரமூட்டும் மொழிபெயர்ப்புகளும், சோதனை முயற்சிகளும் புலர்ந்தும் புலராத ஐந்து மணி காலையின் உற்சாகம் கொள்ள வைக்கின்றன. போகப் போக இதே வேகமும் வித்தியாசங்களும் வெகுபதிவுகளும் தொடர்ந்தால் 21ம் நூற்றாண்டின் தமிழ்க்குரலாக ஒலிக்கும்.

இவ்வளவு பெயர்களையும் பத்திரிகைகளையும் சொல்லும்போது சமீபத்தில் வந்த இரண்டு பட்டியல்களை நிச்சயம் குறிப்பிட வேண்டும். இணையத்தில் எழுதுவோர்களிடமிருந்து தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ஜெயமோகன் ”புதியவர்களின் கதைகள்” என அறிமுகம் செய்தார். ஆனந்த விகடனில் தன்க்குப் பிடித்த புதிய தலைமுறை எழுத்துக்களை நாஞ்சில் நாடன் அறிமுகம் செய்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் வாசிக்கும் நண்பர்களிடம் “சமீபத்தில் உங்களைக் கவர்ந்த சிறுகதை ஆசிரியர்களைச் சொல்லுங்களேன்” என்னும் கேள்வியை வைத்தபோது திணறிப் போனார்கள். அவர்களால் அண்மையில் வாசித்த நாவல்களைச் சொல்லமுடிகிறது. வாரந்தோறும் புரட்டும் நியு யார்க்கர், மாதந்தோறும் படிக்கும் ஹார்ப்பர்ஸ் போன்றவற்றில் வெளியான சிறுகதைகளை சொல்ல முடிகிறது. ஆனால், சிறுகதைக்கெனவே சிறப்பாய் அமைந்திருக்கும் சமீபத்திய எழுத்தாளர்களைக் குறிப்பிட முடிவதில்லை.

சென்ற ஆண்டின் நோபல் பரிசை ஆலிஸ் மன்றோ வென்ற பிறகுதான் சிறுகதையாசிரியருக்கே மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆங்கிலப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை எல்லாப் பத்திரிகைகளுமே ஒரு சிறுகதை ஸ்பெஷலைப் போட்டுவிடுகிறார்கள். விளையாட்டு சம்பந்தமான விஷயங்களை மட்டுமேத் தாங்கி வரும் “ஈ.எஸ்.பி.என்.” இதழாகட்டும்; ஆண் எப்படி பழக வேண்டும், எதை அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் “ஜி.க்யூ.” ஆகட்டும். பெரும்பாலான இதழ்கள் வருடந்தோறும் ஒரு இதழை “புனைவுகளுக்கான சிறப்பிதழ்” என்று சொல்லி நாவலின் ஒரு பகுதி, நூறு வார்த்தைக் கதைகள், ஒரே தலைப்பிற்கு நாலு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கம் என இதழ் முழுக்க சிறுபுனைவுகளால் அலங்கரிக்கிறார்கள். அச்சிட முடியாததையும் அச்சில் வெளியிடமுடியாத எண்ணிக்கை கொண்ட பக்கங்களையும் தங்கள் சந்தாதாரர்களுக்கு இணையத்தில் தொடர்ச்சியாக வாசிக்குமாறு வலைக்கு வரவழைத்து அங்கேயும் சிறுகதை சிறப்பிதழைத் தொடர்கிறார்கள்.

Fiction_Issues_Popular_English_Magazines_Shorts_Literature_Read_Weekly_USA

நான் எதையும் ஒன்பது கேள்வியாக வைத்து பார்ப்பவன். இந்தத் தகவல் தொகுப்புக் கட்டுரையிலும் எனக்கு விடை தெரியாத சந்தேகங்களையும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் கொண்டு முடிக்கிறேன்:

1. அமெரிக்காவில்/இங்கிலாந்தில் இருந்து எழுதும் ஆங்கிலத்தில் நிலைமை எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது? சன்மானத்தை விட்டுவிடுங்கள்; தரத்திலும், பதிப்பாசிரியரின் வெட்டுதல்களிலும், புனைவின் பல்சுவைகளிலும் ஆங்கிலச் சிறுகதைகளுக்கும் தமிழ்க்கதைகளுக்கும் வலையுலகில் என்ன வித்தியாசம்?

2. இந்தியர்களின் ஆங்கிலச் சிறுகதைகளை எங்கு வாசிக்கலாம்? ஹிந்தியில்… கன்னடத்தில்… தமிழின் பிற மொழிக் கதைகளைப் படிக்க வேண்டுமானால் என்ன தளத்தைப் பார்க்க வேண்டும்?

3. அந்தக் காலத்தில் ”சிறுகதைக் களஞ்சியம்” போன்ற இதழ்கள் சிறுகதைக்கெனவே வெளியாகிக் கொண்டிருந்தது. இப்பொழுது அதற்கான தேவை இருக்கிறதா? உங்கள் இந்திய நண்பர்களில் எத்தனை பேர் அவரவர் தாய்மொழியில் சிறுகதைகளை வாசிக்கிறார்கள்?

4. சிறுகதை எழுதியவரைப் பார்த்து “இது உங்கள் சொந்தக் கதையா?” “என்னைப் பற்றியும் உங்கள் கதையில் எழுதுவீர்களா?” போன்ற தர்மசங்கடமான கேள்விகளைத் தொடுத்ததுண்டா?

5. நீங்கள் சிறுகதை எழுதுபவராக இருந்தால், எத்தனை நாளில் ஒரு கதையை முடிக்கிறீர்கள்? அதை எத்தனை முறை செப்பனிடுகிறீர்கள்? தலைப்பை எப்படி வைக்கிறீர்கள்? எழுதின கதையைக் கிழித்து (அல்லது டெலீட்) செய்ததுண்டா?

6. மேற்குலகில் சிறுகதை எழுதுவது இரண்டு காரணங்களுக்காக: தன்னுடைய முதல் நாவலின் கருவைக் கண்டுபிடிக்க; திரைக்கதை எழுதப் போகும் முன் காட்சிகளை வடிவமைக்க. தமிழகக் கல்லூரிகளில் “புனைவு எழுத்தாளாராக” படிக்க வாய்ப்பு இருக்கிறதா? எதற்காக கிரியேடிவ் ரைட்டிங் சேர்கிறார்கள்?

7. வலைப்பதிவு, ஃபேஸ்புக், கூகுள் குழு என இணையமெங்கும் சர்ச்சைகளில் சிக்கி, விவாதங்களில் அடிபடாவிட்டால், நல்ல எழுத்தாளராக அறியப்பட முடியாத சூழல் தமிழில் நிலவுகிறதா?

8. உங்கள் ஆதர்சமாக சுஜாதாவோ ஓ ஹென்றியோ இருக்கட்டும். அவர்களையே மீண்டும் மீண்டும் வாசிக்கிறீர்களா? அல்லது இளமைக்காலத்தில் ருசித்தவர்கள், இப்பொழுது ஆறினகஞ்சியாக அலுத்துவிட்டார்களா?

9. எதற்காக சிறுகதை வாசிக்கிறீர்கள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.