“விக்டோரியாவும் அப்துல்லும்” – ஷ்ரபணி பாசு

பெங்களுர் க்வீன்ஸ் ரோட் கஸ்தூரிபா ரோடு சந்திப்பில் சிக்னலுக்குக் காத்திருக்கையில் நேர் எதிரே கண்ணில் படுவது விக்டோரியா  மகாராணியின் சிலை. ஒரு கையில் Orb  எனப்படும் உருண்டையான வஸ்துவும், இன்னொரு கையில் ஸெப்டர் (sceptre) எனப்படும் செங்கோலும் வைத்துக் கொண்டு சிரிப்பற்ற கம்பீரமான ஒரு முகபாவம். சில சமயங்களில் அந்தச் சிலையின் தலையில் காகமோ, புறாவோ உட்கார்ந்திருக்கையில் நமக்குச் சிரிப்பாக இருக்கும். ஏதோ ப்ரிட்டிஷ் ராஜின் கீழ் நம் மக்கள் 150 வருடம் பட்ட பாட்டுக்கெல்லாம் பழி வாங்குவது போல. அந்தச் சிரிப்பற்ற முகத்தைப் பார்க்கையில் அவருடன் சம்பந்தப்படுத்திச் சொல்லப்படும் ‘எமக்கு உவப்பாக இல்லை” (“We are not amused”) என்கிற வாக்கியமும் நினவுக்கு வரும்.

இங்கிலாந்தின் அரசர்களிலேயே அதிக வருடங்கள் பதவியில் இருந்தவர் மகாராணி விக்டோரியா. அவரது ஆட்சிக் காலமாகிய 1837- 1901 இந்திய சரித்திரத்தில் முக்கிய காலகட்டம். இந்தியாவின் ஆட்சி கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடியாய் பிரிட்டனின் முடியாட்சிக்குக் கீழ் வந்தது 1858க்குப் பிறகுதான். இக்காலத்தில் அரசியாய் இருந்த விக்டோரியா மகாராணியைப் பற்றிய நிகழ்வுகளையும் தேதிகளையும் பள்ளிச் சரித்திரப் பாடங்களில் படித்ததுண்டு. சிப்பாய் கலகத்துக்குப் பின் எடுக்கப்பட்டக் கடும் நடவடிக்கைகள் பற்றிப் படித்தபோது அந்த அதிகாரத்தின் சின்னமாய் அவர் மேல் கோபப்பட்டதுண்டு. இதைத்தவிர அவருடைய சொந்த வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சித்ததில்லை.

Victoria And Abdul by Shrabani Basuஷ்ரபணி பாசுவின் ‘விக்டோரியா அண்ட் அப்துல்’ என்கிற தலைப்பின் முரண்தான் புத்தகத்தைப் பிரிக்க வைத்தது. இந்தியாவுக்கே வராத விக்டோரியாவுக்கும் அப்துல் என்ற பெயருக்கும் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும்?

இந்த அப்துல் கரீம் என்பவர் ராணியின் அரண்மனையில் கிட்மட்கர் (வெயிட்டர்) என்ற பணிக்கு அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஒருவர். 1858ல் இந்தியாவின் மகாராணியாய் விக்டோரியா அறிவிக்கப்பட்டதும் ராணிக்கு இந்தியாவின் மேல் ஆர்வம் அதிகமானது. 1886-ல் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் காலனிகள் பற்றிய கண்காட்சிக்கு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில்  இந்தியக் கைவேலைகள் அவரை மிகவும் கவர்ந்தன. 1887ல் தன்னுடைய ஆட்சியின் 50வது வருடக் கொண்டாட்டங்களுக்கு விருந்தினர்களாய் அழைக்கவிருக்கும் இந்திய ராஜ குடும்பங்களை உபசரிக்க இந்தியப் பணியாளர்கள் சிலர் அரண்மனைக்கு வேண்டுமென அவர் கேட்க, ஆக்ரா ஜெயிலில் ஆரம்பநிலை எழுத்தராய் இருந்த இருபத்தி நான்கு வயதான அப்துல் கரீமுக்கும் இன்னும் சிலருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்துக்களுக்குக் கடல்தாண்டி பயணம் செய்வது பற்றி மதச் சிக்கல்கள் இருந்ததினால் அனுப்பப்பட்டவர் அனைவரும் இஸ்லாமியர்கள். கரீமுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. முந்தைய கண்காட்சிக்கான கம்பளங்கள் மற்றும் ராணிக்குப் பரிசாய் அனுப்பப்பட்ட வளையல்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க டைலர் என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு உதவியது அவருடன் ஆக்ரா ஜெயிலில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்த அப்துல் கரீம்தான்.

இந்த இந்தியப் பணியாளர்களுக்கு ஆங்கிலேய ராஜ் காலப் பணியுடைகள் – சிவப்பு, வெள்ளை, தங்க நிறங்களில் சரிகை வேலைபாடுடனான உடைகள், தலைப்பாகை – போன்றவற்றை ராணியே தேர்வு செய்ததுடன், பணியில் இருக்கும் நேரங்களில் அவர்கள் இவற்றையே கட்டாயமாக அணியவேண்டுமென்றும்  உத்தரவிட்டார்.  மதிய உணவு பதார்த்தங்களில் சிக்கன் கறி போன்ற   இந்திய உணவுகள் கட்டாயமாய்ச் சேர்க்கப்பட்டன. உணவு வேளைகளின்போது டேபிள் சேவையில் இந்தியப் பணியாளர்கள் இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆங்கிலேயப் பணியாளர்களைவிட இந்த இந்திய சேவகர்களின் கண்ணும் கருத்துமான பணிவான சேவையில் மகிழ்ச்சியடைந்து, சில நாட்களிலேயே தன் அஞ்சல்களைக் கவனிக்க உதவி செய்யவும் அப்துல் கரீமைத் தேர்ந்தெடுத்தார். இது மற்றப் பணியாளர்களுக்கு, முக்கியமாய் அரண்மனையின் ஆங்கிலேயப் பணியாளர்களுக்கும் மூத்த பணியாளர்களுக்கும் எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது.

கொண்டாட்டங்களுக்கு வருகை தந்த ராஜ குடும்பங்களின் உடைகளும் அணிகலன்களும், ராஜ குடும்பப் பெண்மணிகளின் தோற்றமும் ராணியை மிகவும் கவர்ந்தன. கண்ணைப் பறிக்கும் வர்ணங்களும் தங்கமுமாய் ஜொலித்த இந்தியா பிரிட்டிஷ் கிரீடத்தின் ஆபரணம் (Jewel in the Crown)  என வர்ணிக்கப்பட்டது. வயதின் காரணமாய் தான் பிரயாணித்துச் செல்ல முடியாத இந்தியாவைப் பற்றிய ஆவலை, ராணி கரீமிடம் பேசி விவரம் தெரிந்துகொண்டு நிறைவு செய்ய முயன்றார். ராணிக்கு இந்திய மொழியைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வர அப்துல் கரீம் வெறும் சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறும் சேவகர் என்ற நிலையிலிருந்து ராணியின் மொழி ஆசிரியராய் உயர்த்தப்பட்டார். முன்ஷி என்ற பட்டத்துடன் சம்பள உயர்த்தப்பட்டு, மற்ற இந்தியப் பணியாளர்களின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட, இது அவர் மேல் இருந்த குரோதத்தை இன்னும் அதிகரித்தது. இந்தியப் பணியாளர்களும் அவரது உயர்வையும் அவரது ஆணவத்தையும் கண்டு புழுங்க ஆரம்பித்தனர். அஞ்சல்களைக் கவனிக்க உதவுகையில் ராணியின் கவனத்தைப் பெறக் கிடைத்திருந்த நேரத்தையும் அருகாமையையும் சரியாகப் பயன்படுத்தி இத்தகைய சலுகையைச் சாமர்த்தியமாகப் பெற்றார். தான் இந்தியாவில் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், சேவைப் பணி போன்ற வேலைகளை எப்போதும் செய்ததில்லை என்றும் ராணியிடம் சொல்லி வேலை உயர்வு பெற்றார். அரசிக்குத் தேவைப்படும் பணிகளை மிகச் சரியாகவும் ஈடுபாட்டுடனும் செய்தாலும், அரசிக்குத் தன் மேலிருந்த மதிப்பை உணர்ந்திருந்ததால், பிற பணியாளர்களிடையே அவருடைய நடத்தை செருக்குடனே இருந்தது.

தனது ஐரோப்பிய விடுமுறைப்பயணங்களுக்கும் இந்தியப்பணியாளர்கள் வரவேண்டும் என அடம்பிடித்த ராணி அவர்களுக்கு ரயிலில்  மூத்த பணியாளர்களின் கோச்சுகளுக்கு அடுத்தபடியாய் ஒரு தனி  ரயில்பெட்டி ஒதுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். ராணி அவருக்குக் கொடுத்த சலுகைகளினால் ஐரோப்பாவிலும் கரீமைப் பற்றிய ஆர்வம் அதிகரித்து, அங்குள்ள பத்திரிக்கைகள் அவரைப் பற்றி எழுதின. உயர் அதிகாரிகள், ராஜ குடும்பத்தினருக்கெல்லாம் கரீமை தனது இந்துஸ்தானி ஆசிரியர் என அறிமுகப்படுத்திக் கௌரவித்தார். ராணிக்கு தன் மேல் இருந்த அன்பையும் அருகாமையயும் பயன்படுத்தி வேலைக்குச் சேர்ந்த இரண்டு வருடங்களிலேயே கரீம் ஆக்ராவின் முக்கியப் பகுதியில் 140 ஏக்கர் நில மானியம் பெற்றார். முதலில் இந்தியாவின் வைஸ்ராய் இதில் முனைப்புக் காட்டாமல் சில எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும் ராணியின் தொடர்ந்த தந்திகள்/ கடிதங்களின் நச்சரிப்புக்குப் பின் இதைச் செய்யவேண்டி வந்தது. இந்திய அரசியல் பற்றிக் கூட விக்டோரியா கரீமுடன் ஆலோசித்ததாய் சில கடிதங்களில் தெரிகிறது. முஹர்ரம், சங்கராந்தி இரண்டும் சேர்ந்து வரும் சமயங்களில் இந்தியாவின் சில பகுதிகளில் நடக்கும் கலவரங்கள் பற்றி எழுதுகையில் ‘இந்துக்கள்தான் கலவரத்துக்குக் காரணம், அவர்கள் தம் பண்டிகையை ஒத்திப் போடலாமே?” எனக் கடிதம் எழுதுகிறார். இதுபோல் பல விஷயங்களில் அவர் அரசு அதிகாரிகளின் ஆலோசனையின்றியே முஸ்லிம்களுக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டிருந்ததற்குக் கரீமின் கருத்துகள் காரணமாய் இருந்தன. பலவிதப் பட்டங்கள், பரிசுகள், மாளிகை அருகே கரீமும் அவர் குடும்பமும் தங்க தனி வீடு (அப்துல் காட்டேஜ்) என அவருக்குக் கிடைத்ததற்கு ராணியின் பிடிவாதம் மட்டுமே காரணமாக இருந்தது. அவருக்கு ஸர் பட்டம் கொடுக்கவேண்டும் என்ற ராணியின் பிடிவாதத்தைத் தளர்த்த பிரதமர் பெரிதும் சிரமப்படவேண்டியிருந்தது.

abdulபிரபல ஓவியர்களை நியமித்து கரீமின் படத்தை வரையச் செய்து அவற்றை தன் அறையிலும் அவரது கணவர் ஆல்பர்ட், ஆல்பர்ட்டின் மறைவுக்குப் பின் அவருக்குப் பிரியமாய் தோழன் போலிருந்த இருந்த ஸ்காட்லாந்து நாட்டுப் பணியாளர் ஜான் ப்ரவுன் இவர்களின் படங்களுடன் மாட்டி வைத்திருந்தார். ஆஸ்பார்ன் கண்காட்சிக்கூடத்திலும் இவை வைக்கப்பட்டிருந்தன. பட்டத்து இளவரசரிலிருந்து, அவருடைய மற்ற மகன்கள் மகள்கள், அரண்மனையின் இதர பணியாளர்கள், இங்கிலாந்தின் இந்திய அலுவலக அதிகாரிகள், இந்திய அரசின் அதிகாரிகள் என அனைவரும் ராணி தன் முன்ஷிக்கு கொடுக்கும் சலுகைகள் அவருடன் கொண்டிருந்த நெருக்கம் பற்றி அவரை எதிர்த்தனர். அரசி அப்துலுக்கு எழுதும் கடிதங்களில் ராஜ விவகாரங்கள் பற்றியெல்லாம் எழுதி அவை ராஜ குடும்பத்துக்குக் சங்கடத்தில் முடியுமோ என்று கூட இளவரசர் பயந்தார். தங்கள் வாதங்களை நியாயப்படுத்த அவரை எதிர்த்தவர்கள் அப்துலின்  நடவடிக்கைகள், நண்பர்கள் பற்றிய தகவல்களையெலாம் திரட்டினர். இத்தனை எதிர்ப்புக்கிடையில் விக்டோரியா ஒற்றையாய் கரீமின் தரப்பில் நின்று அவரை மேலும் மேலும் ஆதரித்ததுடன் , அவரை எதிர்ப்பவர்கள் இனவாதிகள் என்றும் கண்டித்து, அவர்கள் கரீமைக் கருப்பர் எனக் குறிப்பிடக் கூடாது, அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ராணியைச் சமாதானப்படுத்த வேல்ஸ் இளவரசர் ஒருமுறை இதை எழுத்தில் கொடுக்க வேண்டி வந்தது. மற்றவர்கள் ராணிக்கு மனநிலை சரியில்லையோ என்றுகூட நினைக்க ஆரம்பித்தனர். தன் மறைவுக்குப் பின் முன்ஷியை தன் குடும்பத்தினர் நிராகரித்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த ராணி தான் இறந்தபின் கரீமுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பற்றிக்கூட விவரமாய் எழுதிவைத்தார். ராணியின் இறப்புக்குப் பின் அவரது உடலைப் பார்க்கும் வாய்ப்பு ராணியின் ஆணைப்படி அவருக்குக் கொடுக்கப்பட்டது. பின்வரும் சில நாட்களிலேயே புதிய அரசர் ஏழாம் எட்வர்ட் தலைமையில் எடுக்கப்ப்பட்ட நடவடிக்கைகளில் அவரது சகோதரிகள் கரீமிடம் இருந்த ராணியின் கடிதங்கள் அனைத்தையும் எரித்ததுடன் அவரை உடனே இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடும் செய்தனர். ராணியின் இறப்புக்குப் பின் அரண்மனையின் இந்தியப் பணியாளர்கள் அனைவரும் அரண்மனைப் பணியிலிருந்து விலக்கப்பட்டனர். இந்தியாவுக்குத் திரும்பிய கரீம் மிகுந்த செல்வந்தராய் திரும்பியபோதும், ராணியின் பணியில் தான் வாழ்ந்த நாட்களைப் பற்றிய நினைவிலேயே தன் காலத்தைக் கழித்தார். 46 வயதில் இறந்துபோனார். பிரிவினையின் போது அவருடைய குடும்பத்தினர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர். அவருடைய நிலம், ராணியால் அன்புடன் அவருக்கு மிகுந்த பிரயத்தனத்துடன் வழங்கப்பட்ட சொத்து,  பாகிஸ்தானிலிருந்து திரும்பிய இந்தியக் குடும்பங்களுக்குக் கொடுக்கப் பட்டது. ஆக்ராவில் அவருக்கும், அவர் மனைவி மற்றும் தந்தைக்குமான சமாதி மட்டும் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கரீம் விடுப்பில் இந்தியா வருகையில் விக்டோரியா அவருக்குப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவ்ற்றைக் கையொப்பமிடுகையில் அன்புத்தாய் VRI, அன்புத் தோழி என்றெல்லாம் எழுதியிருக்கிறார். கரீமிடமிருந்த கடிதங்கள் எரிக்கப்பட்டுவிட்டாலும், புத்தகத்தை எழுதிய ஷ்ரபணி பாசு, அரசாங்க ஆவணக் காப்பகங்களிலுள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களிலிருந்து சம்பவங்களை நேர்த்தியாகக் கோர்த்திருக்கிறார். வெறும் தகவல்களாய் பத்திரிக்கைச் செய்தி போலன்றி சுவாரசியமான கதையாய் நகர்கிறது புத்தகம். ஆட்சியாளர்களாய் மட்டுமே நாம் அறிந்தவர்களை, மனிதர்களாய் அவர்களின் நிறைகுறைகளுடன் பார்க்க வைக்கிறது. முக்கியமாய் மகாராணி விக்டோரியாவை அதிகாரத்தால் திடப்படுத்தப்பட்ட ஓர் அரசியாய் அல்லாமல், ஒரு சுவாரசியமான பெண்ணாய், அவருடைய பலவீனங்கள், பிடிவாதங்கள், தாபங்களுடன் பார்க்கமுடிகிறது. 19 வயதில் முடியேற்று, 60 வருடங்களுக்கு மேல் ராணியாய் வாழ்ந்தவருக்கும் சராசரி மனிதர்களுக்கிருக்கும் பாசத்துக்கான ஏக்கம், நட்புக்கான தேடல், அவருடைய பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் தேவைப்படாத தாய்மைக்கான ஒரு வடிகால் இவையெல்லாம் தேவை எனப் புரிகிறது.

மகாராணி பணியாளர்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த அரண்மனை வைத்தியர் ரீய்ட் என்பவரிடம் பலமுறை மனமுடைந்து கண்கலங்குவது அவர் குடும்பத்தினரால் எத்தனை மனவேதனைக்குட்பட்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. இளவரசி பியாட்ரிஸ் அவருடன் சண்டை போடுகையில் தன் மனவேதனைகளைக் கொட்டி ஆறுதல் தேட அவருக்குக் கரீம் தேவைப்படுகிறார். அவர் சொல்லைக் கேட்காத பட்டத்து இளவரசர் பற்றி அழவும் கரீமின் அனுசரணை உதவுகிறது. அறுபதுக்கு மேல் தனக்குப் பரிச்சயமே இல்லாத கடினமான ஒரு மொழியை, அது அவருக்குத் தேவையே இல்லாத ஒன்றாக இருந்தபோதும், கற்க முன்வருவதும் இந்தியாவை அவர் உண்மையிலேயே பெருமையுடன் நேசித்தாரோ என நினைக்கச் செய்கிறது. கற்றது மட்டுமன்றி அம்மொழியில் இந்தியப் பணியாளர்களுடன் பேசியது , இங்கிலாந்துக்கு வருகை தரும் இந்திய அரச குடும்பத்தினரிடமும் உபயோகித்தது இவை எல்லாமே ஆச்சரியப்படுத்துகின்றன. உருது மொழிப் பயிற்சிக்கான நோட்டுப் புத்தகங்களில் அரசி கைப்பட உருது மொழியில் எழுதியுள்ள வாக்கியங்கள் அவர் அம்மொழியில் எத்தனை தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதைக் காட்டுகின்றன.

மொழிப்பயிற்சி அவருடைய அரசியல், குடும்பப் பிரச்சினைகளை மறந்து ஈடுபட ஒரு நல்ல பொழுதுபோக்காய்  இருந்திருக்கக் கூடும். இதற்கு உதவியவர் என்ற முறையிலும் அப்துல் மேலிருந்த அபிமானம் கூடியிருக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்குத் தன் பதவியின் மூலம் சலுகைகளையும் பட்டங்களையும் கொடுத்துச் சிறப்பித்தது மட்டுமல்லாமல் , உலகத்தின் 1/6 பகுதியின் அரசி என்ற பதவி, சமூகத்தில் அவருக்குள்ள உயர்நிலை,  மற்றவர்கள் மதிக்கும் அளவிலேயே நடதத வேண்டிய வாழ்வுமுறை போன்ற கட்டாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பகிரங்கமாய் கரீம் என்ற சாதாரண ஊழியனுக்காக அவர் எடுத்த நடவடிக்கைகள், எழுதிய கடிதங்கள், அவற்றில் பகிரங்கமாய் வெளிப்படுத்திய அன்பு இவை யாவும் அவருடைய பதவிகளுக்கெல்லாம் மேலாய் ஓர் அன்பான மனிதராய் அவருக்குப் பெருமை சேர்க்கின்றன. சூழ்ச்சியும், சதியும் சூழ்ந்த அரசு வட்டாரங்களிலேயே வாழ்வைக் கழித்தும் இத்தனை வெகுளியாய், எளிதில் அன்புக்கு அடிமையாகும் ஒரு பெண்ணாய் அவர் இருந்தது ஆச்சரியமாகவும் இருக்கிறது. பதவியின் உயரத்தில் இருப்பவர்கள் எதிர்நோக்கவேண்டிய தனிமையைப் பற்றியும் சிந்திக்க வைக்கிறது. அவருடைய அதிகாரிகள் பலரையும் இந்த நட்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தி இதற்கான காரணங்களை ஆராய வைத்தது. பலரும் ராணி தெளிவாய் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார் எனத் தீர்மானித்தாலும் சிலர் வேறு காரணங்களை நினைத்தனர்.

ராணியின் ஐரோப்பியப் பயணங்களின் போது அவர் பின்னே தனி வண்டியில் பவனி வரும் இந்தியரை ராணியின் அரசு கைப்பற்றிய ஏதோவொரு இந்திய ராச்சியத்தின் இளவரசர் என்றும், தன் அரசின் வலிமையைக் காட்டுவதற்காக ராணி அவரை ஒரு காட்சிப் பொருள் போல அழைத்துவருவதாகவும் பலரும் நினத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளிடையே கருத்து அரசியின் உளநிலை மனநிலை பற்றிய ஆராய்ச்சியாக இருந்தது. பிரதம மந்திரி ஸால்ஸ்பரி ஒரு கடிததில் இப்படிச் சொன்னார்: “மகாராணிக்கு தொடர்ந்த பரபரப்பு  பிடிக்கும், இப்போது முன்ஷிதான் அத்தகைய பரபரப்பைக் கொடுக்க முடியும்.”   (..[The queen] ‘really liked continual excitement, as he [the Munshi] is the only form of excitement she can have.). புத்தகத்தின் ஆசிரியர்  ஷ்ரபணி பாசு, அரசிக்கு அவருடைய குழந்தைகளிடம் கிடைக்காத சினேகமும், நெருக்கமும் அவர் அவற்றை வேறு நபர்களிடம் தேடக் காரணமாயிருந்தன என்கிறார். அவருடன் நெருக்கமாய் இருந்த கணவர் ஆல்பர்ட்டின் மறைவுக்குப் பின் அவருக்குத் தோழமை கிடைத்தது ஸ்காட்லாந்து சேவகர் ஜான் ப்ரவுனிடம்தான். ”எல்லாவற்றுக்கும் மேலாய், அவர் (ஜான் ப்ரவுன்)அவளை ஒரு ராணி என்பதை விட ஒரு பெண்ணாய் நடத்தினார், இதை அரசகுடும்பத்தினரோ, அரண்மனையிலிருந்த மற்றவர்களோ செய்ய முடியவில்லை. அவருடைய இறப்பு ராணியின் ஒரு தோழனை மீண்டும் பறித்துக் கொண்டது.” (“More than anything else he treated her like a woman rather than a queen, something neither her family nor her house hold could do. His death once again robbed her of a companion” ) அந்த வெறுமையை அதற்குப் பின் முன்ஷியின் வரவு நிறைவடையச் செய்திருக்கலாம்.

QandA

அப்துல் கரீமின் ஆளுமையில் குறிப்பிடத்தக்கதாய் எதுவும் இல்லை. இயல்பாய் முகம்மதியர்களுக்கு அமைந்த எடுப்பான தோற்றம், உயரம், சருமநிறம் மற்றும் அவர்கள் மொழியின் லாவகம் இவற்றுடன் மிக அதிருஷ்டசாலி, கிடைத்த வாய்ப்புகளை அருமையாய் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர் எனத் தெரிகிறது. ராணியின் சினேகத்தைப் பயன்படுத்தி சொத்துக்கள், விருதுகள், குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புக்கள் என்று தன் நிலையை உயர்த்திக் கொண்ட சராசரி மத்தியமர். அவரிடம் ராணி என்ன உயர் பண்புகளைக் கண்டார் என்பது புரியவில்லை. மகாராணியிடம் மிகுந்த விசுவாசம் கொண்டு அதை அவருக்கு வெளிப்படையாகச் சொல்பவராக இருந்திருக்கலாம், அவர் காலால் இடும் பணியைச் சிரமேற்றுச் செய்பவர் எனக் காட்டியிருக்கலாம். விக்டோரியா அப்துல்லை ஓர் இன்றியமையாத சேவகராய்  நினைத்தார் எனபது பல கடிதங்களில் தெரிகிறது. தனது அந்தரங்க காரியதரிசி ஹென்றி பான்ஸன்பி என்பவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அப்துல்லைப் பற்றி விக்டோரியா எழுதியது:

அப்துல் கரீமைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், ராணி அவரைப் பற்றி எத்தனை புகழ்ந்தாலும் போதாது. அவருக்கு ஆர்வமும், கருத்தும் இருக்கிறது, அவர் அமைதியும், பண்புமுடையவர்.அவருக்கு நல்ல புத்தி கூர்மையும்,  விவேகமும் இருக்கிறது. எல்லா இந்தியர்களையும் போல (இங்கு அவர் குறிப்பிடுவது அரண்மனை  இந்தியப் பணியாளர்களை) அவர் தன் கடமையில் கண்ணாக இருக்கிறார். எல்லா நேரங்களிலும் ஒரு சிறிய வார்த்தையையும்  குறிப்பையும் கூட அறிந்து அதற்கேற்றபடி நடக்கிறார். கூடிய சீக்கிரமே அவரால்  ராணிக்காக நிறைய விஷயங்களை – பிரெஞ்ச் மொழியில் கூட – பிரதி எடுக்க இயலும். உணர்வுகளிலும் , நடத்தையிலும் அவர் முழுமையான கண்ணியவான்.

இது தவிர அரசியின் நட்பை உபயோகித்துப் பெரிதாய் எதையும் சாதிக்கும் அளவு யோசிக்கக் கூடத் தெரியாதவர். ஒரு கட்டத்தில் அரசியிடம் இவருக்குள்ள செல்வாக்கை உணர்ந்த அரசு அதிகாரிகள் கூட இவர் ஏதேனும் விடுதலைக் கட்சிகளின் ஆளாய் இருப்பாரோ எனக் கண்காணிக்கிறார்கள். அந்த அளவு நாட்டுப் பற்றெல்லாம் உடையவர் இல்லை. தான் தன் குடும்பம் எனக் கிடைத்த சந்தர்ப்பங்களில் ஆதாயங்களைத் தேடுகிறவர். சில சந்தர்ப்பங்களில் மட்டும் சிறுபான்மை முகம்மதியர்கள் இந்தியாவில் கஷ்டப்படுகிறார்கள் என்பது போல ராணியின் மனதில் விதைத்திருக்கிறார். இது அன்று முஸ்லிம்களிடையே நிலவிய கருத்தின் பிரதிபலிப்புதான், அரசியல் நோக்குடன் செய்யப்பட்டதல்ல. ராணி உடன் இல்லாதபோது அவரைச் சுற்றியிருந்த பகைமையையும், பொறாமையையும் எதிர்கொண்டதில் ஒரு திடமனப்பான்மை தெரிகிறது. சில சமயங்களில் நேரடி எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது. ஆங்கிலேயரின் வர்க்க வகைபாடுகள் அதுபற்றிய அவர்களது அகந்தைமிகுந்த நடத்தை இவற்றை எதிர்கொள்ள ராணியின் அபிமானம் அவருக்கு உதவியதென்றால் அது எத்தனை ஆழமாய் இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். உண்மையிலேயே அவர் ராணியிடம் அத்தனை விசுவாசம் கொண்டவராக இருந்திருக்க வாய்ப்பு இருந்தது. அவருக்கு இந்த வாழ்வு ஒரு தேவதைக் கதை போன்றதாகத்தான் இருந்திருக்கும்.

விக்டோரியாவைத் தொடர்ந்து அரசேறிய எட்வர்ட் அரசருக்குப் பின் வந்த வருடங்களில் எந்த இந்தியப் பிரஜைக்கும் அரச குடும்பத்துடன் இத்தகைய உறவு ஏற்பட வாய்ப்பேயில்லை. அரசுப்பதவிக்கு வந்தவர்களின் மனப்பாங்கும் அத்தகையதாய் இருக்கவில்லை. இந்தியர்களிடையே சுதந்திர தாகம் ஏற்பட்டு பிரிட்டனுக்கும் இந்தியாவுக்குமான உறவு மாறிப்போனது. பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் ஆரம்ப நாட்களில் , இந்தியாவைப் பற்றிய கவர்ச்சி ஆங்கிலேயர்கள் மனதில் இன்னும் புதிதாய் இருந்த நாட்களில் நடந்த இச்சம்பவங்கள் சரித்திரத்தின் சுவாரசியமான பக்கங்களில் இடம்பெறவேண்டியவை. விதிமுறைகளின்படி நடக்கும் ஆங்கிலேய நிர்வாக முறை ராணியின் கோரிக்கைகளுக்கே கொக்கி போட்டுத் தாமதிப்பது போன்ற விஷயங்கள் புன்னகைக்க வைக்கின்றன.

பல முக்கியமான கடிதங்கள் அழிக்கப்பட்டுவிட்டபோதும், அசதியூட்டும் ஆங்கிலேய நிர்வாகக் கடிதத் தொடர்புகளை ஆராய்ந்து , அதுவும் ஆக்ராவில் ஆவணங்களை அகழ்ந்தெடுத்து, (ஆதாரச் சான்றுப் பட்டியலே 22 பக்கங்களுக்கு இருக்கிறது!) ஒரு சாதாரண இந்தியப் பிரஜைக்கும் ,அகண்ட ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணிக்குமான ஆழ்ந்த நட்பைப் பற்றி சலிப்புத் தட்டாத விதத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் ஷ்ரபணி பாசு. இது ஒரு சாதனைதான்.  சரித்திரத்தில் அக்கறையில்லாதவர்களுக்கும் ஒரு கதைபோல் சுவாரசியமாக இருக்கும் வகையில் எளிமையான மொழியில், கோர்வையாய் எழுதப்பட்ட புத்தகம்.

Victoria and Abdul
Shrabani Basu
Rupa Books.(2010)

பின் குறிப்பு: விக்டோரியாவுக்கும் அப்துல் கரீமுக்கும் இருந்த நட்பைப் பற்றிய ஆங்கில விடியோ ஒன்றை இங்கே காணலாம்.

0 Replies to ““விக்டோரியாவும் அப்துல்லும்” – ஷ்ரபணி பாசு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.