kamagra paypal


முகப்பு » சட்டம், மறுவினை, விவாதக் களம்

அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான் – மறுவினை

 சொல்வனத்தில், “அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்” என்று சுந்தர் வேதாந்தம் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர், அதில் இருந்த சில கருத்துக்களைக் குறித்து என்னுடைய கருத்துக்களையும் கேட்டார். அப்படித் தான் நான் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுந்தர் அவர்கள் விரிவாகவும், விறுவிறுப்பாகவும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், சுந்தர் அவர்களின் கட்டுரை, சட்டம் பற்றியது. அதில் சில முக்கியமான கருத்துப் பிழைகள் உள்ளதால், அதனை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது. ட்விட்டரில் இது குறித்து என்னிடம் கருத்தினைக் கேட்ட நண்பர்கள், “சொல்வனத்தின் எடிட்டருக்கு ஒரு மறுப்புக் கடிதமாக நீங்கள் அனுப்பினால் அதனை அவர்கள் பதித்து மற்றவர்களுக்கும் உதவ வழிகோலுமே” என்று மிகவும் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதன் பேரில், இதோ என்னுடைய சில கருத்துக்கள், இவற்றைப் பதிப்பித்து உங்கள் வாசகர்களுக்கு உதவிடுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சட்டத்தைக் குறித்து என் பதில் கருத்துக்களை வைக்கும் முன் அமெரிக்கச் சட்டப்படியும் ethics முறைகளின் படியும் full disclaimerஐ வைத்துவிடுகிறேன். நான் சட்ட வல்லுனரோ, சட்டம் பயின்ற வக்கீலோ அல்ல. நான் ஒரு பொறியாளன். சட்டத்துறையில் ஈடுபாடு கொண்டவன். சட்டத்துறையில் எனக்கு உள்ள முக்கியத் தொடர்பு, ஜார்ஜியா சிறார் நீதிமன்றத்தில் ரகசியக் காப்பு பிரமாணம் (judicial oath) எடுத்துக் கொண்ட “நீதிமன்ற அலுவலர்” (ஜார்ஜிய சட்டப் பிரிவு O.C.G.A. §15-11-58) என்பது தான் என்றாலும், இந்த பதில் மடலுக்கும், ஜார்ஜியா சிறார் நீதிமன்றத்திற்கும் அல்லது அதில் தன்னார்வ பணிகளை செய்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை நான் சுயமாகவும், தனி நபர் என்ற அடிப்படையில் மட்டும் எழுதுகிறேன். இது சட்ட ஆலோசனையோ அல்லது judicial opinionஓ அல்ல.

mike-twohy--i-ll-tell-you-mock-jury-duty-beats-cancer-testing--new-yorker-cartoon_Images_Comics

1. “சிவில் குற்றங்களுக்குச் சிறை தண்டனை கிடையாது” என்று சுந்தர் அவர்கள் ஆணித்தறமாக கூறியதைத் தான் தான் நண்பர் ட்விட்டரில் ஆச்சரியத்தோடு சுட்டிக்காட்டி “சரியா” என்று என்னிடம் வினவினார். இது மாபெரும் தவறு. சிவில் வழக்குகளில் சிறைத் தண்டனை இல்லை என்று யார் சொன்னது? சுந்தர் அவர்கள் இருக்கும் அமெரிக்காவில் குடிபெயர்தல் சட்டம் (Immmigration Law) இருக்கிறதே. அது சிவில் சட்டம்! அதில் சிக்குண்டவர்கள் அனுபவிப்பது சிறைத் தண்டனை என்பது நிதர்சன உண்மை! அதே போல குடும்பச் சட்டமும் (Family Law) சிவில் சட்டம் தான். இதில்
விவாகரத்து ஆகி, குழந்தைக்கு நிதியுதவி செய்யுமாறு தீர்ப்பு இருந்து அதை செயல்படுத்தாத தாய் அல்லது தந்தையை அன்றாடம் சிறைக்குள் தள்ளுவது இல்லையா? அதே போல், இங்கு அமெரிக்காவில் பள்ளிக்குச் செல்லாமல் ‘கட்’ அடிக்கும் மாணவர்கள் கூட சிறைத் தண்டனை அனுபவிக்க நேரும். அதுவும் சிவில் சட்டம் தான். சிவில் வழக்கில் நீதியரசர் பிறப்பித்த ஆணையை செயல்படுத்தாமல் இருக்கும் வாதியோ பிரிதிவாதியோ சிவில் நீதிமன்ற அவமான குற்றப் பிரிவினுள் சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும். இதற்கு Civil Order of Incarceration என்று சொல்வது வழக்கம். இதற்கு பிடிவாரண்டு இருக்காது. ஆனால், Bench Warrant நீதியரசரால் பிறப்பிக்கப்படும். இப்படி பல நுணுக்கமான விசயங்கள் உள்ள சிவில் வழக்குகளில், “சிறைத் தண்டனை கிடையாது” என்று சுந்தர் அவர்கள் எழுதியிருப்பது மாபெரும் தவறு.

2. சிவில் சட்டப் பிரிவில் அபராதம் விதிக்கப்பட்ட ஓ.ஜே சிம்சனைப் பற்றி பேசுகையில், ”அது சிவில் வழக்கு என்பதால் குற்றத்திற்கு தண்டனையாக காசு பணத்தை இழந்தாரே தவிர சிறைக்குச் செல்லவில்லை” என்கிறார் சுந்தர். ஆனால், அபராதத்தை கட்டாமல் இருந்திருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக ஓ.ஜே. சிம்சன் சிறைச்சாலை சென்றிருக்க வேண்டியிருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தால் அது சரியாக இருந்திருக்கும். சிவில் சட்டம் என்றாலே சிறைவாசம் இல்லை என்னும் அவரது புரிதல் தவறானது மட்டும் அல்ல, சட்ட முகாந்திரமும் இல்லாத வாதமே ஆகும்.

3. “முறையாக சட்டம் பயின்று நீதிபதியாக இருக்கும் ஒருவரைவிட எப்படி திறம்பட வழக்கை புரிந்து கொண்டு சிறப்பாக தீர்ப்பு வழங்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறேன். ” — இது சற்று அபத்தமான புரிதல் என்பதை இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். ஜூரியில் அங்கம் வகிக்கும் ஒருவர், சாதாரண மனிதராக இருக்க வேண்டும். சட்டத்தின் புரிதல் அவருக்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் மிகவும் முக்கியமான கருத்தே! ஜூரி முன்னர் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை மட்டுமே நன்கு தீர பரிசீலித்து இவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை மட்டுமே ஜூரி உறுப்பினர்கள் முடிவெடுக்க வேண்டும். வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, “ நான் சட்டம் என்ன சொல்கிறது என்று அலசி பார்க்கப்போகிறேன்” என்று ஒரு ஜூரி உறுப்பினர் நூலகம் சென்றோ, கூகிளில் தேடியோ பார்த்தார் என்றால், அன்றே அவர் ஜூரியில் இருந்து நீக்கப்படலாம். இப்படி நடந்தும் இருக்கிறது என்பதே உண்மை. அதே போல், “தீர்ப்பு வழங்க முடியும்” என்று அவர் சொல்வது மிகவும் ஆபத்தான புரிதல். ஜூரி உறுப்பினர்கள் “முடிவை” தான் வழங்க முடியும் — குற்றாவாளி அல்லது குற்றமற்றவர் — என்னும் முடிவை மட்டுமே அவர்கள் வழங்க முடியுமே ஒழிய, “தீர்ப்பு” வழங்குவது என்பது நீதியரசரின் கடமை. ஜூரிக்கும் தீர்ப்புக்கும் சம்பந்தமே கிடையாது என்பதே உண்மை. Jury will give a decision, while, the Judge will give the judgment.

4. “ஆனால் நடக்கும் அத்தனை கிரிமினல்/சிவில் வழக்குகளுக்கும் ஜூரி தேவைப்படுவதால்” — இதுவும் தவறான செய்தி. “ நடக்கும் அத்தனை கிரிமினல்/சிவில் வழக்குகளுக்கும் ஜூரி” தேவைப்படுவது இல்லை! எடுத்துக்காட்டாக, 55 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய வாகன ஓட்டி 85 மைல் வேகத்தில் சென்று பிடிபடுவதும் குற்றவியல் கிரிமினல் வழக்கு தான். ஆனால் அதற்கு ஜூரி தேவைப்படுவதில்லை. அதே போல், சர்வசாதாரணமாக நடக்கும் பல்லாயிரக்கணக்கான சிவில் வழக்குகளுக்கும் ஜூரி தேவைப்படுவதில்லை. Jury is not the norm in civil and criminal cases. Rather, it is an exception. முக்கால்வாசி கிரிமினல் வழக்குகள் plea-bargaining என்னும் “காய்கறி வியாபார” அடிப்படையிலேயே முடிந்து Jury Trialக்குள் செல்லாமல் முடிந்துவிடுவது அமெரிக்க நீதித்துறையின் ஒரு சிறப்பம்சம் என்று சொன்னால் அது மிகையாகாது.

5. ”கிரிமினல் குற்றம் ஒருவர்மேல் சுமத்தப்பட்டாலும், ஜூரியை வைத்து வழக்கு நடத்தித்தான் தீர்ப்பு வழங்கியாக வேண்டும்” –– கிரிமினல் வழக்கு என்றாலே சுந்தர் அவர்கள் கூறுவது போல ஜூரி முன்னால் தான் வழக்கு என்று சொல்லிவிட முடியாது. ஜூரி முன்னாலோ (Jury Trial ) அல்லது நீதியரசர் முன்னாலோ (Bench Trial ) வழக்காடும் உரிமையும் அமெரிக்கச் சட்டத்தில் உண்டு.

6. “அமெரிக்க அரசியல் சாசனத்தின் மூன்றாவது ஷரத்தின்படி ஆறு மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கக்கூடிய எந்த விதமான கிரிமினல் குற்றம் ஒருவர்மேல் சுமத்தப்பட்டாலும், ஜூரியை வைத்து வழக்கு நடத்தித்தான் தீர்ப்பு வழங்கியாக வேண்டும்.” –– இவர் கூறும் மூன்றாம் சரத்து ஜூரி வழக்குகள் குறித்து அல்லவே. தட்டச்சுப் பிழையாக இருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம். Bill of Rights – Third Amendment என்பது, இராணுவ வீரர்கள் அமைதி காலத்தில் தனிப்பட்ட நபர்களின் வீடுகளில் தங்குவதைக் குறித்து தீர்மானிக்கும் ஷரத்து ஆகும். எனவே, இது குறித்து சுந்தர் அவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

7. “அமெரிக்க சட்ட அமைப்புப்படி, கிரிமினல் வழக்குகள் அனைத்தும் அரசாங்கத்தால் மட்டுமே தொடுக்கப்படும்.” — இது தவறான புரிதல். உலக நாடுகளில், “குற்றவியல்” வழக்கு (Criminal case) என்றாலே, அது அரசாங்கத்தால் தொடுக்கப்படும் வழக்கு என்று பொருள். சமூகத்தின் பாதுகாவலராக, அந்த சமூகத்தின் சார்பாக அரசே முன் வந்து “Union of India Vs. Mr. XYZ” என்றோ, “State of Tamil Nadu Vs. Mr. XYZ” என்றோ வழக்கை நடத்துவது நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஆக, அரசாங்கத்தால் மட்டுமே தொடுக்கப்படும் குற்றவியல் வழக்கு என்பது “அமெரிக்க சட்ட அமைப்புப்படி” மட்டும் நடப்பது அல்ல. எல்லா நாடுகளிலும் அப்படித் தான் குற்றவியல் வழக்குகள் நடக்கும்.

8. “கொலை போன்ற கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளுக்கு தங்களைப்போன்ற குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சான்றாயர் குழு (Jury) முன்பு தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை ” –இது மேலோட்டமாகப் பார்த்தால் பிழை என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும், ”சட்டக் கண்ணாடி”யை அணிந்து கொண்டு அணுகினால், இதில் உள்ள ஒரு சிறு நெருடலைப் பார்க்கலாம். சான்றாயர் குழு (Jury) முன்னால் குற்றவாளிகள் தங்களின் வாதங்களின் கூறுகளையும், சான்றுகளையும் மட்டும் தான் சமர்ப்பிக்க முடியும். The “accused” (Criminal Case) or the “plaintiff” (Civil case) can only submit evidence and their facts before a Jury. ”தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை”யானது நீதிபதியின் முன்னும், அந்த நீதிபதியின் இறையான்மையின் முன்பும் மட்டுமே நடக்கக்கூடியது. ஆக, “சான்றாயர் குழு முன்பு தாங்கள் நிரபராதி என்று வாதிடும் உரிமை” என்று சுந்தர் அவர்கள் குறிப்பிடுவது, வழக்கின் கதாநாயகராக வீற்றிருக்கும் நீதியரசரை, சான்றாயர் குழுவிற்கும் பின்னால் தள்ளப்பட்டு டம்மி பீசாக்கிவிட்டது போன்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்குகிறது. அது உண்மை நிலை அல்ல.

மற்றபடி பல அரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுந்தர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும், voir dire (jury selection) மற்றும் நீதிபதியினாலும் சில அறிவுரைகளைப் பெற்ற ஜூரர் என்ற முறையில், இத்துணை விலாவரியாக வழக்கைப் பற்றி மட்டுமல்ல, ஜூரி எப்படி விவாதித்தார்கள் என்பதை சுந்தர் விளக்கி இருப்பது தெரிய வந்தால், அது வழக்கின் தன்மையையே மாற்றி அமைத்துவிடாதா என்ற கேள்வி மட்டும் என் மனத்தில் பசுமரத்தாணியாக இறங்கி இருக்கிறது. Factual matrixஐப் பற்றி அவர் விவாதித்தது சரியாக இருக்கலாம். ஆனால் ஜூரியின் முடிவையும் அதன் பின்புலத்தையும் அலசாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

One Comment »

  • Ravi Sundaram said:

    இத்தனை நாள் மவுனமாக இருந்த அருள் அவர்களை சுந்தரின் கட்டுரை பேச வைத்திருக்கிறது. அருள் அவர்களை அமெரிக்க நீதிமுறை பற்றி ஒரு தொடர் எழுத அழைக்கிறேன்.

    குறை காணும் கடிதம் மட்டுமே அவருடைய இடுகையாக அமைந்திடக்கூடாது.

    # 25 November 2014 at 8:08 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.