தடம்  சொல்லும் கதைகள்

சுயேச்சை செய்தியாளராக 25 வருடத்திற்குமேல் தமிழும் ஆங்கிலமுமாக பல பத்திரிகைகளில்-இந்தியாவிலும் வெளிநாடுகளிலும்-பணி புரிந்தததில் எனக்கு தெளிவாகத் தெரிவது ஒன்று: அது, சில விஷயங்கள்/செய்திகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் முக்கியத்துவம் இழப்பதில்லை. வருடங்கள் பல ஆனாலும் அவை வேறு உருவில், வேறு மனிதர்கள், வேறு சூழ்நிலை என்று மாறலாமே தவிர, பத்திரிகையாளர் மொழியில் சொல்வதுபோல் ஒரு “செய்தித்தன்மை” – Topicality இருந்து கொண்டே இருக்கும். நான் முதன் முதலாக நிருபராக வேலை பார்த்த டில்லி பத்திரிகையின் ஆசிரியர் நான் சேகரித்த சில செய்திகளை “செய்தி வங்கியில்” போட்டு விடுவார். இந்தச் செய்திக்கு எப்பவும் முக்கியத்துவம் இருக்கும் – பின்னால் உபயோகித்துக்கொள்ளலாம் என்பார்.

அது என்னவோ உண்மைதான். சமூகப்பார்வையில் சில செய்திகள்; அரசியல் பார்வையில் சில செய்திகள் என்று பலவும் ஒரு சுழற்சியில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

என் நினைவில் நின்ற அப்படிப்பட்ட செய்திகள்/பேட்டிகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். செய்திகளை சேகரித்த என் அனுபவம், சந்தித்த புள்ளிகள் என்று நான் நடந்து வந்த தடத்தில் சில செய்திகள் சரித்திரமாகி இருக்கலாம்; சில இன்றும் செய்தியாக தொடரலாம்.

இனி, நான் கடந்து வந்த தடம் சொல்லும் கதைகள்……..

M1

இருளாய் இருக்கும் பகல்

காற்று சுகமாக வீசிய ஒரு காலைப்பொழுது அது. ஹெலிகாப்டர் விமானம் பறக்க வசதியான சூழ்நிலை. ஊருக்கு திரும்ப அவரவர் சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அந்தக் குழுவினர் எல்லோரும் தயாராகிவிட, ஹெலிகாப்டர் அவர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் ஏற ஆரம்பித்தது.

“அது சிறு புள்ளியாகும் வரையில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பாக்கி இருந்த நாங்கள்-26 பேர் கொண்ட குழு-அவரவர் முகாமிற்கு அமைதியாக திரும்பி வேலை பார்க்க ஆரம்பித்தோம். மனம் கொஞ்சம் கனத்துதான் இருந்தது. வெளி உலகுடன் எங்களுக்கு அந்த ஹெலிகாப்டர்தாம் கடைசி இணைப்பு. அதுவும் போய்விட்டது. இனி அடுத்த 6 மாதத்திற்கு-அடுத்த வேனிற்காலம் வரும்வரையில் வெளியுலகுத் தொடர்பே எங்களுக்கு கிடையாது” என்று அவர் விவரிக்கையில் என் மனம் அந்த சூழ்நிலையை கற்பனை செய்து பார்த்தது. 6 மாதம், அந்தக் கடும் குளிர் பிரதேசத்தில் பெங்குவின்கள் மட்டுமே துணையோடு எப்படி இருக்கும்?

அது வருடம் 1990. என் உறவினர் பெண் ஒருவருக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பார்த்துக்கொண்டிருந்த வரன்களில் ஒருவர் டில்லியில் இருந்தார். நாங்கள் தில்லியில் இருந்ததால், பிள்ளை வீட்டிற்கு சென்று அவர் குடும்பத்தாரை சந்தித்துப் பின்புலம் அறிய எங்களுக்கு பொறுப்பு கொடுத்திருந்தார்கள். நானும் என் கணவரும் அவர் வீட்டிற்கு போனோம். அவர்கள் யார், நாம் யார் என்ற அடையாள விசாரிப்புகளின் நடுவே, அந்த வீட்டின் மூத்த மகன் ராணுவத்தில் கர்னலாக இருக்கிறார் என்று தெரிந்தது. தந்தை அறிமுகப்படுத்தினார். “என் மூத்த மகன் ராணுவத்தில் இருக்கிறான். அண்டார்டிகாவிலிருந்து இப்போதுதான் வந்தான்” என்று கேஷுவலாக ஏதோ பக்கத்தில் ஹைதிராபாதிலிருந்து வந்தாற்போல் சொன்னார்.

அன்டார்டிகாவா? என்ன ஒரு தற்செயல்? அந்த வாரம்தான் அண்டார்டிகா பற்றி ஒரு முக்கிய தீர்மானம் சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்டு இருந்தது. என் செய்தியாளர் காதுகள் உடனே உஷாராகின. அந்த மூத்த மகனுடன் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று உடனேயே மனதுள் குறித்து வைத்துக்கொண்டேன்.

வந்த விஷயங்களைப் பேசிவிட்டு கிளம்பும்போது அந்த அண்டார்டிகா அனுபவங்களைக் கேட்க வரலாமா என்று கேட்டு, அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு மறு நாள் டாண் என்று குறித்த நேரத்தில் போயும் சேர்ந்து விட்டேன்.

அந்த மூத்த மகன் – கர்னல் ஜகன்னாதன் – கூறிய விவரங்கள்தாம் ஆரம்பத்தில் இருக்கும் காட்சி.

வருடத்தில் 6 மாதம் இரவாகவும், 6 மாதம் பகலாகவும், பெரும்பாலும் பனிக்கட்டியாக உறைந்தே இருக்கும் பிரதேசமான அண்டார்டிகாவில் சென்று ஆராய்ச்சிகள் செய்யும் நோக்கில், 1959 ல் அமேரிக்கா மற்றும் அன்றைய சோவியத் யூனியன் உட்பட 12 நாடுகள் முதன் முதலாக அண்டார்டிகா உடன்படிக்கையை உருவாக்கி, அமைதியான ஆராய்ச்சிகள் மட்டுமே இந்த இடத்தில் நடைபெற வேண்டும்; எந்த ஒரு நாடும் ஆக்கிரமிப்பு நோக்கில் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று ஷரத்துகள் இடப்பட்டு 1961ல் உடன்படிக்கை அமுலுக்கு வந்தது. இந்தியா 1983ல் இந்த உடன்படிக்கையில் நுழைந்து, இன்று பல ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. தற்போது சுமார் 50 நாடுகள் இந்த உடன்படிக்கையில் சேர்ந்துள்ளன.

பூமியின் அமைப்பு, மற்றும் புவி இயற்பியலில் பல புரியாத விஷயங்களுக்கு அண்டார்டிகா பதிலளிக்கலாம் என்று இங்கே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தவிர, அண்டார்டிகாவின் தாதுபொருட்கள் வளம் காரணமாக சுரங்க ஆராய்ச்சிகள் நிறைய இடம் பெற ஆரம்பித்தன. அதனால் இதைக் கட்டுப்படுத்தி, மாசுமருவற்ற இந்தச் சூழ்நிலை கெடாமல் பாதுகாக்க அவ்வப்போது உறுப்பினர் நாடுகள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு – Moratorium -ஏற்படுத்திக்கொள்கின்றன…

“இந்தியாவின் நிரந்தர ஆராய்ச்சி நிலையமான மைத்திரியை உருவாக்குவதற்காக எங்கள் குழு அங்கே சென்றது. ஒரு வருடத்திற்கு ஒரு குழு என்று மாறி மாறி அண்டார்டிகா சென்று மைத்திரியை கட்டி முடித்தோம். குளிர்காலத்தில் அங்கே முழுவதுமாக இருளாக இருக்கும். வெயில் காலமோ-சூரியன் மறையவே மாட்டார். குளிரில் நம் தோலை ஊடுருவும் குளிர்காற்றும் பனியும் வேறு. நாள் முழுவதும் இருட்டாக இருப்பதால், செயற்கை வெளிச்சங்கள் மூலம்தான் வேலையே செய்ய முடியும். தெற்கு கங்கோத்ரி என்று நமது முதல் ஸ்டேஷன் இருந்தது. ஆனால் அவ்வப்போது வரும் சூறாவளி பனியில் அது மூழ்கிவிடும் அபாயமிருந்தது. அதனால்தான் மேலும் வலுவான, நிரந்தர ஸ்டேஷனாக மைத்திரி உருவானது” என்று விவரித்த ஜகன்னாதன் அண்டார்டிகாவில் 2% நிலம்தான் ஐஸ் கட்டியால் மூடப்படாமல் இருக்கும் என்றும் மைத்திரி அங்கேதான் கட்டப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஆனால் முதல் ஸ்டேஷனான “தென் கங்கோத்ரி”, கடலுக்கருகில் “ஐஸ் ஷெல்ப்” என்ற பகுதியில் இருந்தது. அங்கேயிருந்து மைத்திரி இருக்கும் இடத்திற்கு சாமான்களை எடுத்துக்கொண்டு வரும் வழி முழுக்க பனிக்கட்டியால் மூடியிருந்த இடங்கள். இவை மிக ஆபத்தானவை. பல இடங்களில் கால் வைக்கும்போது அடியில் பாதாளமாக ஓட்டைகள் இருக்கும். எங்கே திட நிலம், எங்கே அடியில் பாதாளம் என்று மிக கவனமாக கடந்து செல்ல வேண்டும்.

“தொழில் நுட்பம் வாய்ந்த பல கருவிகள் இருந்தாலும், நாங்கள் எங்கள் உள்ளுணர்வையும் நம்பிதான் வேலை செய்வோம். முழுதும் வெண்மையாக இருந்த பனிக்கட்டி பிரதேசத்தில் எங்களுக்கு எந்த ஓர் இடமோ, பொருளோ கருப்பாக தெரிந்தால் அது எங்களுக்கு ஒரு சங்கேதம். கருப்பாக இருக்கும் இடத்தில் ஏற்கனவே மனிதர்கள் நடமாட்டம் இருந்துள்ளது என்று புரிந்துகொள்வோம். அதனால் அந்த இடங்கள் பாதுகாப்பானவை. கடற்கரை ஓரங்களில் இருந்த அந்த ஐஸ் ஷெல்ப் எனப்படும் இடங்களில் ஏங்கே நிலம் முடிகிறது எங்கே சமுத்திரம் ஆரம்பிக்கிறது என்று இடைவெளி கண்டுபிடிக்க முடியாமல் ஒரே சீராக இருக்கும். மைனஸ் 50 டிகிரிக்கு கீழே இருக்கும் உறையும் குளிரில், காற்று வேறு சேர்ந்து கொண்டு மைனஸ் 80 டிகிரியாக மாறும். மைத்திரி குழுவின் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல”

இந்த மைத்திரி நிலையம் முழுக்க இந்தியாவின் சொந்த தொழில் நுட்பங்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சில நொடிகளில் எந்த திரவபொருளும் ஐஸ்கட்டியாக மாறும் நிலையில் இவர்கள் உபயோகிக்கும் தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறாதவண்ணம் பாத்துக்கொள்ள வேண்டிருந்தது. சூரியனே பார்க்காத நிலையில் செயற்கை ஒளியிலேயே நாட்களை கடத்த வேண்டும். அண்டார்டிகாவின் வேனிற்காலத்தில் செயற்கையாக இரவை- இருட்டடிப்பு செய்து – உருவாக்கிக்கொள்ள வேண்டும். 6 மாதம் சூரியன் மறையவே மறையாதே?

ஆனால் சில அருமையான அனுபவங்களும் அண்டார்டிகாவில் இருந்தது. அங்கே குளிர் காலத்தில் தெரியும் இயற்கை வர்ணஜாலமான “அரோரா ஆஸ்டிரேலிஸ்” (Aurora Australis) என்ற ஒளிக்கற்றையைப் பற்றி ஜகன்னாதன் ஆர்வத்தோடு விவரித்தார். “அது ஓர் அற்புதமான அனுபவம். சூரியனின் கதிர்கள் பூமியின் துருவங்களில் இருக்கும் காந்த சக்தி, மற்றும் பலவித வாயுக்களில் பட்டு சிதறி காற்றுடன் கலந்து வானவில் நிறங்கள் போன்று பலவித நிறங்களை வாரியிறைக்கும் அற்புதமான ஓர் இயற்கை நிகழ்வு அது” என்று அவர் விவரிக்கும்போது பிரமிப்பாக இருந்தது.

வாழ்வில் எப்போதாவது அந்த வர்ண ஜாலத்தை பார்த்துவிட வேண்டும் என்ற என் ஆவல் உதயமானதும் அன்றுதான். ஆனால் என்னால் அண்டார்டிகாவெல்லாம் போகமுடியாது என்றும் தெரியும். ஆனால் வட அமெரிக்காவில் சில பகுதிகளிலும் அலாஸ்காவிலும் கூட “அரோரா ஆஸ்டிரேலிஸ்” தெரிகிறது என்று அறிகிறேன். பார்க்கலாம் வாய்ப்பு வராமலா போகும்?!

மைத்திரி குழுவினர் அவ்வப்போது குடும்பத்துடன் தொடர்பு கொள்ள முடியும். மைத்திரிக்கு என்று ஒரு போஸ்ட் ஆபீசும் இருக்கிறது. மைத்திரி என்ற ஸ்டாம்ப் முத்திரையுடன்! எனக்கும் மைத்திரி முத்திரையிட்ட ஒரு சாம்பிள் கவர் கொடுத்தார் ஜகன்னாதன்.

சாப்பாடு எல்லாம் ரெடி மிக்ஸ் வகைகள். ஆனால் நம்ப மாவரைக்கிற இயந்திரத்தையும் அண்டார்டிகாவுக்கு எடுத்துகொண்டு போயிருப்பதால் மசால் தோசைக்கும் குறைவில்லை!! என்ன இப்போ ….. பங்கு கேட்க பெங்குவின் குடும்பங்களும் சேர்ந்துகொள்ளும்…. அதுசரி… அவங்க இடத்தில் மனிதர்கள் போய் உட்கார்ந்து கொண்டால் குறைந்தபட்சம் மசால்தோசையை பகிர்ந்துகொள்ளக்கூடாதா?!

0 Replies to “தடம்  சொல்லும் கதைகள்”

  1. வெகு அருமை அருணா. மைத்திரி பற்றிப் படித்தவுடன் பெருமைப் பட்டது நினைவிலிருந்தாலும் மறந்தும் விட்டிருந்தேன். இப்போது உங்கள் பதிவின் வழியாக அரிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.பெரு வியப்புக்குரிய நடப்பு. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.