kamagra paypal


முகப்பு » ரசனை

பாம்பு என்ற பூச்சி

பாம்பென்றால் படையும் நடுங்குமென்பர். பாம்பைப் பற்றி எல்லோரிடமும் எப்படியும் ஒரு கதை இருக்கும். சுஜாதா அவர்களின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ தொகுப்பில் ‘பாம்பு’ என்ற தலைப்பிலேயே ஒரு கதை உள்ளது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 1993 ஆம் வருடம் எனது ஆசான் திரு.பாலுமகேந்திரா அவர்கள், தொலைக்காட்சிக்கு படமாக்க‌ (Doordharshan) தேர்வு செய்து வைத்திருந்த பதின்மூன்று சிறுகதைகளில் சுஜாதாவின் ‘பாம்பு’ சிறுகதையும் ஒன்று. அந்த கதையில், மில்லில் வேலை செய்யும் ஒருவன் பேசும் ஒரு வரியை நீக்காவிட்டால் தொலைக்காட்சியில் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்று சொன்னேன். நீயாக ஏதாவது உளறிக் கொட்டி, அதை மற்றவர்கள் கவனித்தால்தான் உண்டு என்று என் வாயை அடைத்தார், பாலு ஸார். அதற்குப் பிறகு எப்போதுமே அவர் அந்த கதையை படமாக்கவில்லை.

நாஞ்சில் நாடன் அவர்களின் கவிதைத்தொகுப்பின் தலைப்பு  ‘மண்ணுள்ளிப்பாம்பு’. வண்ணநிலவனுக்கு ‘பாம்பும் பிடாரனும்’.  இப்படி இன்னும் எத்தனையோ. வாழ்வில் ஒரு முறையாவது பாம்பைக் கடக்காமல் யாராவது வந்திருப்பார்களா என்பது சந்தேகமே.  எனக்கும் பாம்பைப் பற்றிய சில நினைவுகள் உண்டு.

எங்கள் வீட்டில் விளக்கு வைத்த பிறகு பாம்பைப் பற்றிப் பேச‌க் கூடாது என்று என் அப்பாவைப் பெற்ற ஆச்சி (பாட்டி) இருக்கும் போது கண்டிப்பான ஒரு சட்டம் இருந்தது. ஆச்சியின் காலத்துக்குப் பிறகு எங்கள் பெரியம்மையினால் தளர்த்தப்பட்ட குடும்பச் சட்டங்களில், பாம்பைப் பற்றியதும் ஒன்று. பாம்பைப் பற்றிப் பேசலாம். ஆனால் பாம்பு என்று சொல்லக் கூடாது என்பதுதான் தளர்த்தப்பட்ட அந்த விதி. ஆனால் அநியாயமாகப் பகலிலும் அதை அமுலுக்குக் கொண்டு வந்து விட்டாள். அப்போ எப்படித்தான் சொல்வது என்று நான் ஓயாமல் நச்சரிக்க, என் தொல்லை தாங்காமல், அப்படியே சொல்வதாக இருந்தால் பூச்சி என்று சொல்லிக் கொள்ளலாம் என்று ஒரு சலுகை வழங்கினாள் பெரியம்மை. ‘பா’ எங்கே ‘பூ’ எங்கே, ஒன்றும் சரியாக வரவில்லையே என்று நான் வருத்தப்பட ‘ணங்கென்று’ மண்டையில் குட்டு விழுந்தது. சரி கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்வோம் என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டு, பாம்புக்கு பதிலாக பூச்சிக்கு பயந்து என் வாழ்க்கையை தொடர்ந்தேன் .

கார்ட்டூன்: ராரா

இந்த அற்பப் புழுவுக்கு பயந்தா 'பாம்பு, பாம்பு'ன்னு இப்படிக் கத்தற ?

ஆச்சி, பெரியம்மையை அடுத்து அண்ணன். அதாவது பெரியம்மையின் மகன். என்னை விட பதினைந்து வயது மூத்தவன். வங்கி அதிகாரியான‌ அண்ணன் தனிக்குடித்தனம் இருந்தது, திருநெல்வேலியின் சுவாமி சன்னதி தெருவில். எங்கள் வீடு அம்மன் சன்னதியில். விளக்கு வைத்த மாலைப் பொழுதொன்றில், கடுமையான கோபத்துடன் தன் மனைவியைத் திட்டிக் கொண்டே (எல்லாமே unparlimentary வார்த்தைகள்) அண்ணன் எங்கள் வீட்டுக்கு வர, கண்ணீரும், கம்பலையுமாக மதினியும், மகளும் அவனைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தனர். என்ன மதினி? என்றேன் பதற்றமாக. மதினி அழுது கொண்டே ‘வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டது’ என்றார்கள். அண்ணன் பாய்ந்து, ‘அதை பூச்சின்னு சொல்லுன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. கேக்குறாளான்னு பாரு’ என்று மதினியை அடிக்க வர, நிலைமை புரிந்து போயிற்று. வேறு ஒரு வீட்டில் பிறந்து வளர்ந்து எங்கள் வீட்டிற்கு வாழ்க்கைப்பட்ட மதினி, ‘பாம்பை’ எங்கள் குடும்ப வழக்கப்படி ‘பூச்சி’ என்று சொல்லாதது தவறுதானே.

மதினியை ஒரு மாதிரி சமாதானப்படுத்தி விட்டு பூச்சியை அடிக்க நானும், அண்ணனும் கிளம்பினோம். எங்களுடன் எங்கள் குடும்பத் தோழனும், எங்கள் பெரியம்மையின் செல்லப் பிள்ளையுமான ‘நெட்டை அம்பியும்’  சேர்ந்து கொண்டான். இந்த இடத்தில் அம்பியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். பிராமண குலத்தில் பிறந்ததினால் அம்பி என்று அழைக்கப்பட்ட ஒன்றைத் தவிர ஒரு பிராமணப் பையனுக்குரிய எதையுமே அம்பியிடம் காண முடியாது. பூணூல் போட்டால் தோல் வியாதி வந்து விடும் என்று அம்பி உறுதியாக நம்பினான். அதனால் அவன் சட்டையைக் கிழற்றினாலும் வெற்றுடம்பைத்தான் நாம் பார்க்க முடியும். சைவம் சாப்பிட்டால் ஜீரணாமாகாதாம். அம்பி சொல்வான். மாலை நேரங்களில் மட்டும் சுயநினைவோடு இருப்பான். ஆறடி உயரம். அதனால்தான் நெட்டை அம்பி. நான்காம் வகுப்பு படிக்கும் பையன், ‘எல அம்பி என்னா ?’ என்று அதட்டினாலும் உள்ளங்கை வியர்க்க குட்மார்னிங் சார்வாள் என்பான், அதுவும் இரவில். இந்த லட்சணத்தில் மூதேவிக்கு விருமாண்டி மாதிரி பெரிய மீசை வேறு. இப்படியாகப்பட்ட தைரியசாலியுடன் பூச்சியை அடிக்கக் கிளம்பினோம் .

அண்ணன் வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். அண்ணன் புத்திசாலித்தனமாக வீட்டைப் பூட்டிவிட்டு வந்திருந்தான். சுவாமி சன்னதி பட்டர்கள்(நெல்லையப்பர் கோயிலில் பூஜை செய்யும் ஆதிசைவர்கள்) அனைவரும் அண்ணனின் நண்பர்கள். ராஜாமணி பட்டரின் தலைமையில் ஒரு கூட்டம் பூச்சியை அடித்தே தீருவது என்று ஆளுக்கொரு கம்புடன் என்னவோ போருக்கு போவது போல் ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று நின்று கொண்டிருந்தது. அண்ணன் கதவைத் திறந்ததுதான் தாமதம், எல்லோரும் உள்ளே பாய நானும், அம்பியும் உடல் நடுங்க, வலது காலெடுத்து வைத்து மெல்ல அண்ணனின் வீட்டுக்குள் கடைசியாக நுழைந்தோம். அங்கே தேடு, இங்கே தேடு என்று அண்ணன் உத்தரவு பிறப்பித்தபடி தானும் தேட ஆரம்பிக்க, ‘சுப்பையா அண்ணே இந்தா இருக்கு பாம்பு’ என்று ஒரு கூக்குரல். கண்ணிமைக்கும் நேரத்தில் நான் தாவி டைனிங் டேபிளில் ஏறி நின்று திரும்பிப் பார்க்க, ஆறடி உயர நெட்டை அம்பி கால் மடக்கி ஊஞ்சல் மாட்டும் வளையத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். அண்ணனோ ‘எல ராஜாமணி விடாதே அதை’ என்று ஆரம்பித்து அந்த பூச்சியின் தாயார், சிறிய தாயார், தகப்பனார், தாத்தா என அதன் மூன்று தலைமுறையையும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட unparlimentary வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தொடங்க, ராஜாமணியும், அவனது படை வீரர்களும் மேற்படி பூச்சியை துவம்சம் செய்தனர். நான் அந்த சூழலிலும் ‘ராஜாமணி, அதை விட்டுரு. அடிக்கவே தேவையில்லை. அது மட்டும் மானமுள்ள பூச்சியா இருந்தா அண்ணன் ஏசின ஏச்சுக்கு அப்போவே மண்டையைப் போட்டிருக்கும்’ என்றேன், கவனமாக‌ டைனிங் டேபிளில் நின்றபடியே. அம்பி இன்னும் தொங்கிக் கொண்டிருந்தான் .

ஒருமாதிரியாக செத்த பூச்சியை ஒரு குச்சியில் தூக்கியபடி, (என்னமோ தானே அடித்த மாதிரி) அம்பி முன்னே நடக்க,  நான் பின் தொடர்ந்தேன். நாங்கள் அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போனதற்கும் ஒரு காரணம் இருந்தது. அண்ணன் சொல்லியிருந்தான். ‘எல, ஒங்க மதினி இதை கொண்டு போய் காமிச்சாத்தான் நம்புவா. இல்லேன்னா வீட்டுக்குத் திரும்பி வர மாட்டா’ என்று. அதனால்தான் அந்த ஊர்வலம். தன் இடது கையில் குச்சியைத் தாங்கியபடி நடந்து வந்த அம்பி,  தேவையில்லாமல் அவ்வப்போது தன் விருமாண்டி மீசையை வலது கையால் முறுக்கியபடியே வந்தான். பின்னால் அதற்கான காரணத்தை தனியாக என்னிடம் சொன்னான். ‘நீ கவனிக்கலே நம்ம வளையல் கடை கணபதி மகள், அவ வீட்டு வாசலிலிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்’ என்று. ஊஞ்சல் வளையத்தில் இவன் தொங்கிக் கொண்டிருந்ததை அவள் பார்க்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன்.

வீட்டு வாசலில் நின்று கொண்டு உரத்த குரலில் ‘மதினி’ என்று அழைத்தேன். மதினி வெளியே வந்து எட்டிப் பார்க்க, நானும் அம்பியும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தோம். மதினியின் முகத்தில் நிம்மதியான மலர்ச்சியை எதிர்பார்த்திருந்த எனக்கு, அதற்கு மாறாக சற்றும் எதிர் பார்க்காத ஒரு கேள்வி அவர்களிடமிருந்து வந்தது கடுமையான கோபத்தை வரவழைத்தது. ‘எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. நெஜமாவே இது எங்க வீட்டுக்குள்ளே வந்த பாம்புதானா?’  என்றார்கள். எனக்கு வந்த ஆத்திரத்தில் ஓங்கி அம்பியின் செவிட்டில் அறைந்தேன். பின்னே, மதினியை அடிக்க முடியாதல்லவா?

Comments are closed.