லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் நேர்காணல்

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் படைப்புகளை மொழியாக்கம் செய்துவருகிறார். மெளனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை, இமையம், கவிஞர் சேரன் எனப் பெரும் படைப்பாளிகளை ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவருகிறார். 2007 ஆம் ஆண்டுக்கான இலக்கியத் தோட்டம் விருதையும், கருக்கு மற்றும் காட்டில் ஒரு மான் மொழியாக்கங்களுக்காக Vodafone-Crossword prize (in the Indian language fiction translation category) பரிசுகளை வென்றவர்.

l_holmstorm
 
லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம்

2001 ஆம் ஆண்டு `சில குறிப்புகள்` எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் அசோகமித்திரன் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் பற்றி எழுதியுள்ளதை கீழே தந்துள்ளோம்.

உரிய தருணத்தில் வெளிவரும் நல்ல மொழிபெயர்ப்புகள் பல தளங்களில் பயனளிப்பதாக அமைந்துவிடுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு, `கருக்கு` நாவலை நான் படித்தபோது தீவிரமான அபிப்ராயம் ஏற்படவில்லை. ஹிந்து மதம் தவிர, பிற மதத்திலிருந்து வெளி வந்ததில் `கடலோர கிராமத்தின் கதை` நூல் அடைந்த வெற்றி `கருக்கு` அடையவில்லையோ என்று தோன்றியது. `கருக்கு` ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதன் மொழிபெயர்ப்புக்காக விசேஷப் பரிசு பெற்றது. சமீபத்தில்தான் அந்த மொழிபெயர்ப்பைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. லட்சுமி ஹோம்ஸ்ராம் மிகவும் சிறப்பாக ஆங்கிலமாக்கி இருக்கிறார். இதனால் நாவலின் செய்தி கூர்மையாக வெளிப்படுகிறது. இந்த நாவலை தலித் வெளிப்பாடு என்று மட்டும் அடையாளம் கொடுத்து ஒதுக்கி விடுவது சரியாகாது. இதன் இன்னொரு முக்கியத்துவம் ஒரு சமகால மனிதன் சுயப் பிரக்ஞையோடு தன் தளைகளை விலக்கிவிட்டுக் கொள்வது. (இங்கு `மனிதன்` என்பது இருபாலருக்கும் பொருந்தும்). அந்த விதத்தில் `கருக்கு` நாவலின் செய்திக்கு மிக நீண்ட மரபு இருக்கிறது. புத்தரின் வாழ்க்கையே தளைகளை விலக்கிக்கொள்ள உதவும் செய்தியல்லவா?

சுந்தர ராமசாமி, அம்பை போன்றோர்களின் நல்ல நண்பரான லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமை நேரில் சந்தித்து அவரது அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆவல் எழுந்தது. நாற்பது வருடங்களுக்கும் மேலாக (அதில் இருபது வருடங்களாக லண்டனை மையமாகக் கொண்டு) இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் இந்திய தமிழ் எழுத்தாளர்களுக்கும் பாலமாக இருந்துவரும் திரு. பத்மநாப ஐயரிடம் எனது ஆசையைத் தெரிவித்தேன். எதிர்காலத்தில் நடந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பதாக எனது ஆசையைச் சொல்லி முடிப்பதற்குள், தொலைபேசியில் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமை அழைத்துவிட்டார் (அவருடைய நண்பர்களின் எண்கள் அனைத்தும் அத்துப்படி). இந்தியாவில் நடந்த ஜெய்ப்பூர் இலக்கிய நிகழ்விலிருந்து அன்றுதான் லண்டன் திரும்பியிருந்தார் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம். குரலில் நடுக்கமும், களைப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன. உடனடியாக நேர்காணலை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் பத்து நாட்களுக்குப் பிறகு நானே அவரது வீட்டுக்கு வருவதாக சொல்ல நினைத்தேன். அதற்குள் `அடுத்த வியாழன் காலை வந்திடுங்க. முன்கூட்டியே கேள்விகளை அனுப்பிவிட்டால் மூன்று மணிநேரத்தில் கவர் செய்துவிடலாம்` என்று கூறிவிட்டார். அவரது மொழியாக்கங்களை அங்கொன்று இங்கொன்றாகப் படித்திருந்தாலும், முழுமையாகப் படித்ததில்லை. நேர்காணலுக்கான தேதி முடிவானது குறித்து சந்தோஷத்தை விட இது அதிக கவலை உண்டாக்கியது.

போனை வைத்தவுடன், `இப்படித்தான் சுறுசுறுப்பாக வேலையில் இறங்கணும்`, எனக் கள்ளச்சிரிப்பு சிரித்தார் திரு.பத்மநாப ஐயர். உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்ததால், `ஐயா, அவரது மொழியாக்கத்தைப் பற்றி அபிப்ராயம் வருமளவுக்குப் படித்ததில்லையே. இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே! `, என்றேன்.

திரு.பத்மநாப ஐயரோடு பழகிய எவருக்கும் ஒன்று புரிந்திருக்கும் – எழுபது வயதைக் கடந்தவருக்குள் இருக்கும் பதினைந்து வயதுச் சிறுவன் எப்போதும் விழிப்போடு இருப்பான் என்றும், அதன் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என்பதும்.

`அவரது மொழியாக்கங்கள் தானே, கண்டுபிடித்திடலாம்.`, அவருக்கே உரிய சிரிப்பு.

Paiஐயர் வீட்டில் சுவர்கள் கிடையாது. சொல்வனம் போல புத்தகவனத்தில் வாழ்ந்து வருபவர். எதற்கும் இருக்கட்டும் என ஒரு சமையலறையும், எப்போதாவது தேவைப்படும் எனும்படியாக ஒற்றைப் படுக்கையும் தவிர பிற இடங்கள் அனைத்தும் மணற்கேடையம் போல புத்தகக் கோபுரங்கள். அம்பாரமாகக் குவித்து வைத்திருக்கிறார் என நான் தவறாக நினைக்கும் நேரத்தில், நான்கு அலமாரிகளிலிருந்து லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் மொழியாக்கங்களோடு வெளிப்பட்டார்.

`இதோ ஐந்து புத்தகங்கள். இவற்றை அடுத்த ஐந்து நாட்களில் படித்துவிட்டால், ஆறாம் நாள் நேர்காணலுக்குத் தயாராகிவிடலாம், சரிதானே?`, என்றார் அவருக்கே உரித்த குறும்போடு.

oOo

இது நடந்த நாளிலிருந்து எப்போது படிக்க உட்கார்ந்தாலும் ரெண்டு புத்தகங்களோடுதான். மூலமும் மொழிபெயர்ப்பும் என முதலில் எடுத்தது மெளனியின் சிறுகதைகள். பின்னர் அம்பையின் சிறுகதைகள். எப்போதும் ஒரு புத்தகத்தோடு படிப்பவன் ரெண்டுரெண்டாகத் தூக்கியபடி அலைகிறானே எனப் பிறர் கேள்வி கேட்பதற்கு முன் மொழிபெயர்ப்பில் பிடிப்பு உண்டானதில், அதை மட்டும் படிக்கத் தொடங்கினேன். உண்மையில், அதற்கு முன் மொழியாக்கங்கள்மீது பெரும் மனவிலக்கம் கொண்டிருந்தேன். இரு மொழியில் தேர்ச்சி பெற்ற படைப்பாளிகளுக்கு இதில் என்ன சவால் இருக்க முடியும் என்றும் தோன்றியது. மொழியாக்கங்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும்போது சில சந்தேகங்கள் விலகினாலும், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் அவர்களிடம் மேலும் தெளிவு பெற வேண்டும் எனும் ஆவல் சேர்ந்துகொண்டதில் நேர்காணலை மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கினேன்.

oOo

ami_tn copyலக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் அவர்கள் ஆய்வு மாணவியாக 1956ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் `ஆர்.கே. நாராயணன் நாவல்கள்` எனும் தலைப்பில் ஆய்வு செய்வதற்காக வந்தபோது, ஆர்.கே. நாராயணனின் ஆங்கிலப்புனைவு வாசகர்களுக்கு மிகப் புதிய பேர். ஆனால், அவரது நாவல்கள் குறித்து லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் எழுதிய ஆய்வறிக்கை பலரது கவனத்தைக் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

Indian Fiction in English: the novels of R.K.Narayan (Calcutta Writers Workshop, 1973)

Inner Courtyard: Short Stories by Indian Women (London:Virago, 1990)

Ashoka Mitran –  My father’s friend

Silappadikaram and Manimekalai (Madras: Orient Longman, 1996)

Karukku (Bama)

Cheran Rudramoorthy’s A Second Sunrise, Navayana (2012) போன்றவை இவர் மொழியாக்கம் செய்த முக்கியமான புத்தகங்கள்.

AmbaiKuzhandaigalmy_fathers_frnKarukkulh

oOo

இங்கிலாந்தின் கடைசி மூலை என அழைக்கப்படும் நோறிச் (Norwich) நகரில் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் வாழ்ந்துவருகிறார். ஒரு பின்காலைப் பொழுதில் கூழாங்கற்கள் பாவித்த போர்டிகோ தாண்டி அவரது சிநேகமான புன்னகையைப் பார்த்தபோது, என்னுடைய பதற்றம் குறைந்தது போலிருந்தது.

முழுவதும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடலைத் தொகுத்துள்ளேன்:

`இந்தப் பக்கமெல்லாம் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை அறிக்கை நேற்று வந்ததும், நேர்காணலைத் தள்ளிப்போடலாமா எனக் கேட்டேன். நல்லவேளை இன்று நல்ல வெயில்`, என்றார்.

வானிலை பற்றி பேசத் தொடங்கிவிட்டால் எந்தப் பேச்சும் ஒரு சகஜமார்க்கத்தில் தொடங்கிவிடும் என்பதை முழுவதுமாக உணர்ந்தேன். ஃபோனில் கேட்ட குரலில் தெரிந்த நடுக்கம் இல்லாமல் மிக உற்சாகமாகப் பேசினார்.

`நீங்க இலங்கைத் தமிழரா, இந்தியத் தமிழரா?`, எனக் கேட்டார்.

`இந்தியத் தமிழர்` என்றதும், `அப்படியா? என்னைப் போல்`, எனச் சிரித்தார்.

கிரி: நீங்கள் புதுமைப்பித்தன், மெளனி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், அம்பை போன்ற படைப்புலக மாஸ்டர்களின் ஆக்கங்களை மொழிபெயர்த்துள்ளீர்கள். இன்று கவிஞர் சேரன், குட்டி ரேவதி எனப் பல கவிதைகளுக்கு ஆங்கிலத்தில் ஒரு வெளியை உருவாக்குகிறீர்கள். தமிழ் படைப்புலகம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எப்படி உருமாறியுள்ளதாக நினைக்கிறீர்கள்?

லக்ஷ்மி: உண்மையில், நான் தமிழ்ப் புனைவைப் படிக்கத் துவங்கும்போது புதுமைப்பித்தனும் மெளனியும் இருபெரும் பாதைகளை இட்டவர்களாகக் கருதப்பட்ட காலம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்; இன்றும் நினைக்கிறேன். முதல்முறையாக ஆங்கிலத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என மெளனியின் கதைகளை அணுகியபோது, ஏன்தான் இத்தனை சிரமமான படைப்பாளியைத் தேர்ந்தெடுத்தேனோ எனத் தொடர்ந்து பல நாட்கள் என்னையே கடிந்துகொண்டிருக்கிறேன் (சிரிக்கிறார்). ஆனால், என்னால் அவரது கதையின் இசைத்தன்மையை, குரலை மொழியாக்கத்தில் எட்ட முடிந்தது என்றே தோன்றுகிறது.

அதன் பின்னர், சென்னையில் 1980களில் அசோகமித்திரனைச் சந்தித்தேன். அதற்கு முன்னர் அவரது `தண்ணீர்` நாவலை மொழியாக்கம் செய்திருந்தேன். ஒருமுறைகூட அவருடன் கலந்தாலோசிக்காமல் அதைச் செய்திருந்தேன்.

கிரி: அவரது அபிப்ராயம் என்னவாக இருந்தது?

லக்ஷ்மி: மிக நல்லவிதமாக அமைந்திருந்தது எனக் கூறினார். குறிப்பாக, ஜமுனா, சாயா இருவரின் குணாதிசயங்களும் வெளிப்படும் நுணுக்கமான தருணங்கள் ஆங்கிலத்தில் மிக நன்றாக வந்ததாகச் சொன்னார்.

கிரி: மன்னிக்கவும். நான் உங்களை இடைமறித்துவிட்டேன்.

லக்ஷ்மி: பரவாயில்லை. அசோகமித்திரன் ஸ்பெஷல் என்றுதானே சொன்னீங்க. பார்க்கப்போனால், சாஹித்திய அகாடமிக்காக ஒரு ஆங்கில மொழியாக்க முயற்சிக்கு என் பெயரைப் பரிந்துரைத்தவரும் அசோகமித்திரன்தான். படைப்புகள் இந்த ஐம்பது ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கின்றன என்றுதானே கேட்டீங்க? நிறையக் கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கு. சொல்லப்போனா, இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகள் தமிழ் இலக்கிய உலகுக்கு நிறையக் கொடுத்திருக்கிறார்கள். சமீபகால இலங்கைத் தமிழ்க் கவிதைகளைப் படிக்கும்போது அந்தத் தாக்கம் நிறையத் தெரிகின்றது. அதே சமயம், இந்தக் கொடுக்கல் வாங்கலில், படைப்புகளில் பேசப்படும் கருத்து பெரிய சாத்தியங்களை அடைந்திருக்குன்னு நினைக்கிறேன். இன்னிக்குப் புதுமைப்பித்தன் அப்படின்னு யோசிச்சா, அவருடைய ஐரனி நம் நினைவுக்கு வருவதுபோல, படைப்புவெளியின் அகலம் அதிகமாகியிருக்கு.

கிரி: மொழியாக்கம் செய்யும்போது மூல ஆசிரியருடன் கலந்தாலோசிப்பீர்களா? ஒரு படைப்பை மொழியாக்கம் செய்ய வேண்டும் எனும் உத்வேகம் எப்படி வருகிறது?

லக்ஷ்மி: எந்தப் படைப்பை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதை நானே தீர்மானிக்கிறேன். இதுவரை, ஓரிரு புத்தகப் பதிப்பாளர்கள் பரிந்துரையின்  பேரில் சில மொழியாக்கங்கள் செய்துள்ளேன். உதாரணம், காலச்சுவடு கண்ணன் கொடுத்ததிலிருந்து சல்மாவின் ஆக்கங்களை மொழியாக்கம் செய்தேன். ஆனால், பெரும்பாலும் நானே படித்து, இன்ன இன்ன ஆக்கங்களை இன்ன இன்னமாதிரி மொழியாக்கம் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தேர்ந்தெடுக்கிறேன். அப்படைப்பின் கூறுமுறையில், கூறுபொருளில் எனக்கென பெரிய முன்னோக்கும் பார்வை அமைந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவின் இதுவரை பதியப்படாத கதையாக இருத்தல் அவசியம்.

சுந்தர ராமசாமி, அம்பை இருவரிடமும் நல்ல பழக்கம் உண்டு. சொல்லப்போனால், என் கணவர் மார்க்குடன் சுந்தர ராமசாமி வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தோடு நிறைய நேரம் செலவு செய்திருக்கிறேன். சுந்தர ராமசாமி! எத்தனை அன்பான மனிதர். அவருடன் பேசிக்கொண்டிருப்பதே மிகவும் சந்தோஷமான விஷயம். அவருடைய படைப்பை முழுமையாகப் படித்து, விவாதித்துத்தான் `குழந்தைகள், பெண்கள், ஆண்கள்` நாவலை மொழியாக்கம் செய்தேன். பொதுவாக, தமிழகத்தின் தென்பகுதியை மையமாக வைத்து எழுதப்படும் படைப்புகளில் மொழி மிகவும் நாட்டார் பாணியில் இருக்கும். வரலாற்று ரீதியாக கேரளப் பண்பாட்டின் தாக்கத்தோடு, மொழியின் கலப்பினால் வரும் தனிப்பட்ட பிரயோகங்களை மிகக் கவனமாக மொழியாக்கம் செய்யவேண்டி உள்ளது. அதற்கு அவருடனான உரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

குறிப்பாக, அம்பை போல் இருமொழிப் புலமையும் இருக்கும் படைப்பாளியுடன் விவாதித்து மொழியாக்கம் செய்வது மிகவும் நல்லது. சில நுண்மைகள் அவர்கள் நினைத்தபடி வருவதற்காக நம்முடன் சேர்ந்து உழைப்பார்கள். அல்லது, புனைவில் பிடிபடாத இடங்களை அவர்களிடம் கேட்டுச் சரிபார்த்துக்கொள்ள எனக்கு அவை பயன்படும். ஆனால், பொதுவாகக் கதையின் மொழிச்சமநிலையில் என்னுடைய பங்களிப்பு முழுமையாக இருக்கும். அது படைப்பின் சீர்மையை, இசைத்தன்மையைத் தக்க வைக்கும்.

கிரி: ஒரு குறிப்பிட்ட படைப்பை மொழியாக்கம் செய்ய நீங்கள் எடுத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றிக் கூறுங்களேன்?

லக்ஷ்மி: என்னைப் பொருத்தவரை, ஒரு ஆசிரியரின் பெரும்பாலான நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போதுதான் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட படைப்பை மொழியாக்கம் செய்ய முடிவு செய்கிறேன். அதில் நான் ரொம்பவும் கறாராக இருக்கிறேன். அதனால்தான், என்னால் ஒப்பந்தப்படியான உடன்படிக்கையில் வேலை செய்ய முடியாது. அந்த ஆசிரியரின் பெரும்பாலான படைப்புகள் என்னைக் கவர்ந்தவையாக இருக்க வேண்டும். அவரது மொழிப்பயன்பாடு, கூறுமுறை, சொல்ல வரும் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையவையாக இருக்கும்பட்சத்தில் நான் மொழியாக்கம் செய்யத் தொடங்குவேன்.

மொழியாக்கம் செய்யும் வழிமுறை எனத் திட்டவட்டமாக எதுவும் இல்லை என்றாலும், அந்தக் குறிப்பிட்ட படைப்பை 4-5 முறை முழுவதுமாகப் படித்த பின்னர்தான் மொழியாக்கம் செய்யத் தொடங்குவேன். அதுவும், முதல் பிரதி முழுமையாக இருக்காது. சந்தேகம் இருக்கும் பகுதிகளை, ஆசிரியர் குறிப்பிட விரும்பிய அர்த்தத்தோடு மொழியாக்கத்தில் வந்துள்ளதா என, அவருடன் பேசிப்பார்த்துத் திருத்தங்கள் செய்வேன். என்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு மொழியாக்கப் படைப்பும் தனித்து நிற்க வேண்டும். அதே சமயம், அது மொழியாக்கம் செய்யப்பட்டதுதான் எனும் தெளிவு படைப்பைப் படிக்கும்போது வாசகனுக்குக் கிடைக்க வேண்டும். நான் மொழியாக்கம் செய்த படைப்பை, என்னுடைய ஆக்கம் என யாராவது சொன்னால் எனக்கு மிகவும் கோபம் வந்துவிடும். அதேபோல, மொழிபெயர்ப்பாளரின் பெயர் விடுபட்டாலும் (சிரிக்கிறார்).

கிரி: உங்கள் மொழியாக்கங்களுக்கு வாசகர் எதிர்வினை எப்படி இருக்கிறது?

லக்ஷ்மி: அதில் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். எனக்கு மொழியாக்கம் செய்வதில் ஆர்வம் வந்த புதிதில், இன்னும் சில வருடங்களில் லண்டன் புத்தகக் கடைகளில் இந்திய ஆசிரியர்களுக்கு என ஒரு அலுமாரி ஒதுக்கிவைப்பார்கள், அதில் அவர்களது மூல மொழியில் புத்தகங்களும், மொழியாக்கங்களும் அருகருகே இருக்கும் என்றெல்லாம் கனவு இருந்தது. ஆனால், நடந்தது என்னவோ அதற்கு நேர்மாறாக இருந்தது. அறுபது, எழுபதுகளில் இங்குள்ள ஆங்கிலேயர்களுக்கு இந்தியப் பண்பாட்டின் சூட்சுமங்களை அறிவதற்கு மொழியாக்கங்கள் மட்டுமே துணையாக இருந்தன. ஆனால், 80களுக்குப் பின்னர், குறிப்பாக சல்மான் ரஷ்டியின் வரவுக்குப் பின், இந்திய ஆங்கில எழுத்துகள் கிடைக்கின்றன. அவை இந்திய மொழியாக்கங்களை மறைந்துவிட்டனவோ எனும் சந்தேகம் உண்டு.

கிரி: உங்களைப் பொருத்தவரை மொழியாக்கம் என்றால் என்ன?

லக்ஷ்மி: மொழியாக்கம் என்பது இரு கலாசாரவெளிகளுக்கு இடையே அமைந்திருக்கும் பாலம் போன்றது. மொழி என்பது வெறும் சொற்குவியல் அல்ல. அது ஒரு வரலாற்று ஆவணம்; பண்பாட்டுத் தொகுப்பு. அதனாலேயே, ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மொழியாக்கம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. மூல ஆசிரியரின் சொற்சித்திரங்கள் எனக்குப் பழக வேண்டியது மிக அவசியம். எல்லாவிதமான படைப்புகளையும் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்கிறேன் என்றாலும், மெளனியின் படைப்பு அமைதிக்கும், அம்பையின் படைப்பு ஆழத்துக்கும் வித்தியாசம் இருக்கின்றதுதானே? ஆங்கிலத்தில் படிக்கும்போது, இந்த வித்தியாசத்தை வாசகரிடம் கடத்த வேண்டியது அவசியம்.

கிரி: மூன்றாம் மொழியிலிருந்து ஆங்கிலத்து மொழியாக்கம் செய்தபின் தமிழுக்கு வரும் படைப்புகளைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? உதாரணத்துக்கு,ஆங்கிலம் வழியாக தமிழுக்கு வரும் அரபு இலக்கியம் எப்படி இருக்கிறது?

லக்ஷ்மி: அதில் எப்போதும் சிக்கல் வரும் சாத்தியம் உண்டு. உதாரணத்துக்கு, தமிழுக்கு மொழிமாற்றம் செய்பவருக்கு மூல மொழியின் அசைவுகளும், நுண்மைகளும் புரியாதபோது தமிழாக்கம் தரமுள்ளதாக இருக்காது. அவருக்கு அரபு மொழியின் நுணுக்கங்கள்மீது பிடிப்பு இருக்கும் பட்சத்தில், அதில் நெடுங்கால அனுபவமோ அல்லது சந்தேகங்களை மூல ஆசிரியருடன் தெளிவுபடுத்தியிருந்தால் மட்டுமே, மொழியாக்கம் வெற்றி பெற வாய்ப்புண்டு. அப்படி இல்லாமல் செய்யப்படும் மொழியாக்கங்கள் மிகவும் தட்டையாகிவிடும்; வெறும் கதைச் சுருக்கம்போல மாறிவிடும் அபாயம் உண்டு. வாய்ப்புகள் வந்தபோதும் இதுவரை அப்படி ஒரு மொழியாக்கத்தை நான் எடுத்துக்கொண்டதில்லை.

கிரி: மெளனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அம்பை, இமையம் – எனத் தொடர்ந்து நவீனத்துவ எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டுமே மொழியாக்கம் செய்துவருகிறீர்கள். உங்கள் தேர்வுக்கான அடிப்படைக்காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

லக்ஷ்மி: உண்மைதான். நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்கள் பிரதானமாக நகர வாழ்வின் நுண்மைகளைச் சித்தரித்தவர்கள். அபூர்வமாக, சுந்தர ராமசாமி போல ஒரு காலகட்ட மாற்றத்தை பதிவு செய்தவர்களும் என்னைக் கவர்ந்துள்ளனர். `ஒரு புளியமரத்தின் கதை`, `குழந்தைகள், பெண்கள், ஆண்கள்` போன்ற நாவல்களில் வரும் காலகட்ட மாற்றங்கள் எனக்கு மிக நெருக்கமானவை. நகரமயமாக்கப்படும் சித்திரங்களும், சுதந்திரத்துக்குப் பின்னான காலகட்டங்களும் பெரும் கனவுகளைச் சுமந்த காலகட்டங்கள். அவற்றில் இருக்கும் முன்னோக்குப் பார்வை என்னை ஈர்க்கிறது. ஒரு சமூகத்தின் மாற்றத்தைப் பதிவுசெய்வதோடு, அதன் வெளிநோக்குப் பார்வையும் என்னைப் பொருத்தவரை மிகவும் முக்கியமானது. உலக சமூகங்களுக்கிடையே நமது இடம் என்ன எனப் பெரிய கான்வாஸை முன்வைக்கும் படைப்புகள் எனக்கு உவப்பானவை.

கிரி: சமீப காலங்களாக பல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மொழியாக்கம் செய்கிறீர்கள்.

லக்ஷ்மி: ஆமாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. நான் முன்னர் சொன்னதுபோல 60-70களுக்கு முன்னர் தமிழ் இலக்கியத்திலிருந்து இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டவை மிக அதிகம் எனலாம். ஒருவிதத்தில், ஒரே மொழியைக் கொண்டு இரு கலாசாரங்களும் கிட்டத்தட்ட ஒரே பாதையில் பயணம் செய்த காலகட்டம் என மிக எளிமையாக அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், அதற்குப் பின்னர், அவர்களுக்கெனத் தனி அடையாளம் உருவானது. அவர்களது படைப்புகளுக்கும் தனிப்பட்ட அடையாளம் வந்தது. நாடு, மற்றும் சொந்தங்களை இழந்தவர்களாகச் சிதறிப்போன காலகட்டத்துக்கு வருகிறோம். பெரும் பிரவாகமாக அரசியல் சார்ந்த படைப்புகள் வெளியான காலகட்டம். முற்றுமுழுதாக இந்தியத் தமிழ் அடையாளங்களிலிருந்து துண்டித்துக்கொண்ட காலகட்டமாக அதைப் பார்க்கிறேன். உதாரணத்துக்கு, அம்பையின் படைப்புகள் உள்நோக்கி, ஒடுங்கிய குரலாக, சமையலறையின் மூலையிலிருந்து உலகை நோக்கிப் பேசியதாக வைத்துக்கொண்டால், சேரன், சுகிர்தராணி போன்றோரின் படைப்புகள் தங்கள் அடையாளங்களை இழந்தவர்களின் கோஷங்களாகக் கேட்கின்றன. They are activists.

TimesofBurning

இன்னொன்று சொன்னால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். ஆனால், என்னைப் பொருத்தவரை இது ரொம்ப முக்கியமான விஷயம். படைப்பாளிகளுக்குப் பாரதியார் ஒரு ஆதர்சம். மிகவும் தேர்ந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது கனவு நடைமுறை சாத்தியமில்லாதது. He was an Idealist. சாதிகள் இருக்கக்கூடாது, எல்லாரும் சமம் – என சமூக நடைமுறைக்கு சாத்தியமாகாத கனவு அவரிடம் இருந்தது. பின்னர் வந்த பல படைப்பாளிகளும் இந்த அரசியலைத் தங்கள் படைப்புப்பொருளாக்கினார்கள். ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் ஈழ நிலைமை மண்ணில் கால்பதித்த அரசியல். பாரதியின் கனவிலிருந்து மிகுந்த தொலைவில் இருக்கும் அரசியல் இது. அடிப்படை உரிமைக்கான போராட்டம். 1960களில் பெரும் அலையாக வந்த `புதுக்குரல்கள்` தனிப்பாதை அமைத்தாக எண்ணுகிறேன். இன்றுள்ள ஈழப்படைப்பாளிகளிடம் இந்தக் குரல் ஓங்கி இருக்கின்றது. இதுதான் நிதர்சனம். அடிப்படை உரிமைக்கான அறைகூவல் வரலாறு எங்கும் எப்போதும் ஒலித்திருக்கிறது. அதன் நீட்சியாகவே இந்த இலங்கைப் படைப்பாளிகளை நான் பார்க்கிறேன். என்னை ஈர்க்கும் அம்சமும் இதுவே. உதாரணத்துக்கு கனடாவில் வாழும் கவிஞர் சேரனின் கவிதைத் தொகுப்பை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அதில் அவரது படைப்புமொழி 70களின் காலகட்டத்திலிருந்து இன்று எப்படி மாறியுள்ளது என்பதைப் பதிவுசெய்திருக்கிறது.

கிரி: அசோகமித்திரன் படைப்புகளைப் பற்றி பேசுவோம். அவரது கதைகளை மொழியாக்கம் செய்தபோது நீங்கள் சந்தித்த சிக்கல்கள் எப்படிப்பட்டவை?

FathersFriend

லக்ஷ்மி: `அப்பாவின் சிநேகிதர்` மொழியாக்க நூல் முன்னுரையில், `எல்லாவித குணநலங்கள் கூடிய மனிதர்களை சமநிலையோடு காட்டக்கூடியவர் அசோகமித்திரன்`, என எழுதியிருந்தேன். அவருக்கு அது ரொம்பப் பிடித்துப்போனது. நேரில் சந்தித்தபோது மிகவும் பாராட்டினார். அசோகமித்திரன் கதைகள் மிகவும் யதார்த்தத் தளத்தில் இயங்குபவை. ஆதலால், அவரது படைப்புமொழியில் சமநிலை மிக அதிகமாக இருக்கும். அதீத உணர்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. அதே சமயத்தில், கதையில் மாயத்தன்மை மிக இயல்பாக அமைந்திருக்கும். இதுதான் அவரது படைப்புகளின் ஆகப்பெரிய சவால். மிக நுண்மையான இடங்கள் நிரம்பியிருக்கும். அதை வேறொரு பண்பாட்டுச் சூழலில் இருப்பவருக்குக் கடத்துவது சிரமமான காரியம். அதீத உணர்ச்சியில் சொல்லப்பட்டிருந்தால் உடனடியாக மொழி எல்லையைத் தாண்டி அது சென்று சேர்ந்துவிடும். மிக மெளனமான கணங்களைப் பற்றி போகிறபோக்கில் சொல்லும்போது, மொழியாக்கத்தின் இசைத்தன்மையில் மாறுதல் வராதவாறு இந்தக் கருத்து சொல்லப்பட வேண்டும். உதாரணத்துக்கு, அப்பாவின் சிநேகிதர் கதையில் வரும் இஸ்லாமிய சிநேகிதரின் நடத்தை வரலாற்றுப் பிரக்ஞை உள்ளவர்களுக்குப் பிடிபடும். ஆனால், இந்தியாவைப் பற்றி அறியாதவர் அதைப் படிக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். புறவய நிகழ்வுகளின் பின்கதையை footnotes கொண்டு சொல்லிவிடலாம். ஆனால், கலாசார உள்குறியீடுகளைக் கதையின் போக்கில்தான் சொல்ல வேண்டிவரும். கதையின் மையம் அவற்றின் நுண்மையானப் புரிதலில் இருப்பதால் அசோகமித்திரனின் படைப்புகளை மொழியாக்கம் செய்வது சிரமமாகிறது. ஒருவிதத்தில் மெளனி, அசோகமித்திரன் இருவரது படைப்புகளையும் பலமுறை வாசித்தபின்னரே மொழியாக்கத்தில் உட்புக முடியும்.

கிரி: அண்மைய காலங்களில் வட்டார வழக்கு சார்ந்த படைப்புகள் அதிகம் வெளியாகின்றன. சமூகத்தின் ஒரு குழுவின் வரலாறு பதிவாகும்போது மொழியில் கூடுதல் கவனம் குவிகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு எவ்விதமான சவால்களை இது கொடுக்கிறது?

லக்ஷ்மி: ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யும்போது ஒரு பொதுவான மொழிக்குள் அப்படைப்பை மாற்றுகிறோம். எவ்விதமான வட்டார வழக்காக இருந்தாலும், மொழிக்குறியீடுகள் நிரம்பியிருந்ததாக இருந்தாலும், பொதுவழக்கான ஆங்கிலத்துக்கு அதை மாற்றுவதுதான் சரியானது. இதனால்தான் இரு மொழியிலும் புலமை உள்ளவர்கள் மொழியாக்கங்களில் ஈடுபடவேண்டும் என்பது கட்டாயமாகிறது.

கிரி: நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் இரு மொழிகளிலும் தனது படைப்பை எழுதுகிறார். நேரடியான மொழியாக்கமாக அல்லாமல் மீண்டும் தமிழில் எழுதுகிறார். அது போலில்லாமல், மூல ஆசிரியரே மொழியாக்கத்தில் ஈடுபடுவது எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும்?

லக்ஷ்மி: அதற்கு மிகக் கறாரான கட்டுப்பாடு தேவை. வேறொரு மொழியில் மீண்டும் எழுதும்போது, அது புதுப் படைப்பாகிறது. மூல ஆசிரியரே மீண்டும் எழுதும்போது, அதை மெருகேற்றப் பார்ப்பார். அது மொழியாக்கம் ஆகாது. எனக்குத் தெரிந்த சில எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வேறு யாரும் மொழியாக்கம் செய்யக்கூடாது எனத் தடைகூடச்  செய்துள்ளார்கள் (சிரிக்கிறார்).

கிரி: மொழியாக்கங்களுக்கு பரவலான வரவேற்பு உள்ளதா? மேற்கில் படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கும்போது மொழிபெயர்ப்பாளருக்கும் விருதுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும் பழக்கம் உண்டு. தமிழில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு உள்ளது?

லக்ஷ்மி: மொழியாக்கங்களின் விற்பனை குறைவுதான். உண்மையில் வரவேற்பு குறைந்துள்ளது என்றுதான் நினைக்கிறேன்.

சாப்பிட நேரமாயிற்று என நினைக்கிறேன். சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்.

அதற்குள் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமின் கணவர் மார்க் அறைக்குள் நுழைகிறார். மானுடவியல் ஆய்வாளராக இருக்கும் மார்க் 1950களிலிருந்து இந்தியாவுக்குப் பல முறை பயணம் செய்தவர். பெங்களூர், தில்லி நகரங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றிருக்கிறார். `இந்தியும் தமிழும் எனக்கு நன்றாகப் புரியும்`, என்றார்.

100_1348

சாப்பாட்டு மேசையில் இருவரது இந்திய அனுபவங்களையும்  பகிர்ந்துகொண்டனர். எனது அபிமான எழுத்தாளர் W.G. Sebaldஉடன் ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதால், அவரைப் பற்றிச் சிறிது நேரம் பேசினோம். பேச்சு மெதுவாக, பண்டைய இந்திய மொழி ஆய்வாளர்கள் பக்கம் திரும்பியது. ஒரு சந்தர்ப்பத்தில், ஜி.யூ. போப் பற்றி நான் சொன்னபோது, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். எதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா எனக் கேட்டதற்கு, சமீபத்தில் நடந்த நிகழ்வைப் பகிர்ந்துகொண்டனர்.

மார்க்கினுடைய பண்டைய குடும்ப வரலாற்று ஆவணத்தைத் தயாரிக்கும் பணியில் அவரது சொந்தக்காரர் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அவர் காட்டிய வரைபடத்தில் ஜி.யூ. போப்பின் பெயர் இருந்ததை மார்க்கிடம் சுட்டிக் காட்டியபோதுதான், ஜி.யூ. போப் மார்க்கின் பாட்டிவழிச் சித்தப்பா என்ற விஷயம் தெரியவந்தது என்றும், அதற்குப் பின்னர் கடந்த மாதம் இந்தியா சென்றபோது, நாகப்பட்டினம் பகுதியில் இருந்த அருங்காட்சியகத்தில் மேலும் பல விவரங்கள் கிடைத்ததாகவும் சொன்னார். `தமிழுக்கு மொழியாக்கம் செய்பவர்களோடு எங்களுக்குக் காலங்காலமாகத் தொடர்பு உண்டு போலிருக்கு`, என்று கண்சிமிட்டினார்.

சாப்பிட்டு முடித்ததும் காபி அருந்தியபடி இந்தியாவுக்கு வரும் சில வெளிநாட்டு எழுத்தாளர்கள் குறித்தும், இந்திய யோகா, மாற்று மருத்துவம் என நம்பி ஏமாந்துப்போன நண்பர்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். வானம் மெல்ல இருளத் தொடங்கியது. இந்த ஊரில் நேரம் எத்தனை மெதுவாகப் போகிறது எனத் தோன்றியது. அவர்கள் தினசரி நிகழ்வுகளைப் பற்றியும், மலைப் பிரதேசங்களில் செல்லும் நடைப் பயணங்கள் பற்றியும் பேசத்தொடங்கும்போது, நான் கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்தேன்.

மேலும் சில மணிநேரங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க மனம் விரும்பியது. சமீபத்தில்தான் அவரது மொழியாக்கங்களைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், மூன்று மணிநேரத்தில் கிட்டத்தட்ட அறுபது வருட உலகைத் திரும்பிப்பார்த்த உணர்வில் நெடுநாள் பழகியது போன்றதொரு பாந்தம். வெதுவெதுப்பான கைகளால் என் கையைப் பிடித்து பிரியாவிடை கொடுத்தார். என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிடத் தனது காரைத் தயார் நிலையில் வைத்தபடி காத்திருந்தார் மார்க்.

நேர்காணலுக்காக நேரம் ஒதுக்கிய லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் அவர்களுக்கும், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்த திரு. பத்மநாப ஐயர் அவர்களுக்கும் மிக்க நன்றி

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான ஆங்கில நேர்காணல் பகுதி 1

லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான ஆங்கில நேர்காணல் பகுதி 2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.