kamagra paypal


முகப்பு » கட்டுரை

அயோவா, அன்று வேறு கிழமை, அசோகமித்திரன்…

சில தினங்களுக்கு முன் பொறியியல் மேற்படிப்புப் படிக்க அமெரிக்கா வந்திருக்கும் அவருடைய உறவுக்காரப் பையனை நண்பர் வீட்டில்  பார்த்தேன். இந்த வருடம் இங்கு  பனியும், குளிரும் ரொம்பவுமே அதிகம். சென்னையிலிருந்து வந்து இந்தக் குளிரில் மாட்டிகொண்டாயே எனக் கேட்டேன். ஆமாம் அசோகமித்திரன் ஒற்றன் நாவலில் எழுதியது போல்தான் என்றார். அசோகமித்திரனின் எழுத்துக்கள் தொடர்ந்து இளம் வாசகர்களாலும் வாசிக்கப்படுவதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர் எழுத்தில் இருக்கும் எளிமை தான் இதற்கு முதல் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ami_tn copyஇன்று பேஸ்புக்கில் கூட தங்கப்பதக்கம் சிவாஜி போல விரைப்பான மொழியில் எழுதுவதைப் படிக்க எரிச்சலாக இருக்கிறது. அடுத்ததாக அவருடைய எழுத்தில் இருக்கும்  துல்லியம். அனாவசியமான தகவல்களோ, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதோ காணக்கிடைக்காது. அப்படியே சில இடங்களில் திரும்பச் சொன்னாலும், அதில் கர்நாடக இசைக் கலைஞன் ஒரே வரியை மீண்டும், மீண்டும் பாடும் போது மேற்கொள்ளும் சிறு வேறுபாடுகள் கொடுக்கும் சந்தோஷத்தை ஒத்ததாக இருக்கும். எப்படி கூர்ந்து நோக்கினால்தான் அழகான வேலைப்பாடுகளைக் கொண்ட நகையை ரசிக்க முடியுமோ, அது போன்றுதான் அசோகமித்திரனின்  நுணுக்கமான விவரணைகளும்.

அவர் புனைவுகளின் முக்கிய அம்சம் அவர் எழுதாமல் விட்டுச் செல்வதில் தான் இருக்கிறது. அதனால் மீண்டும், மீண்டும் படிக்கும் போது புதுப் புது கற்பனைகளுக்கும், சிந்தனைகளுக்கும் இடமளிக்கும். ஜவுளிக் கடையில் ஒரு புடவையை பல தடவை வாடிக்கையாளர்களுக்கு விரித்துக் காட்டுவார்கள். ஆனாலும் அதன் புதுமையில் எந்த மாறுதலும் காண முடியாது. அது போல் அசோகமித்திரனின் கதைகளை எத்தனை முறை படித்தாலும் அதன் சுவையில் குறைவிருக்காது. இன்று பிரபல தமிழ் எழுத்தாளர்களைப் பின்பற்றி அவர்கள் போல் பலரும் எழுத முயல்கிறார்கள். ஆனால் அசோகமித்திரன் எழுத்தைப் பொறுத்தவரை அது சாத்தியமில்லை. ஒரேயொரு அசோகமித்திரன்தான் இருக்க முடியும்.

அவர் கதைகளில் கீழ்தட்டு மத்தியதர மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடே வெளிப்படும் மனிதாபிமானம், உறவில் ஏற்படும் சிக்கல்கள், எதிர்மறையான பாத்திரங்கள் மூலம் தீட்டப்படும் சித்திரங்கள்  மிக அழகாக அங்கதத்துடன் சொல்லப்பட்டிருக்கும். இரவெல்லொம் விழித்திருந்து சிரமப்பட்டு குழாயில் தண்ணீர் அடித்து, அதை ஒரு பசு மாடு குடிக்க அனுமதிக்கும் பங்கஜமாகட்டும்(விடிவதற்குள்), இறந்து போனவரிடம் தான் வாங்கிய ஐம்பது ரூபாய் கடனை ஏமாற்றி விட்டு ஊரை விட்டே ஓடிய ஆரோக்கியசாமி நாக்பூரிலிருந்து மணியாடர் மூலம் அனுப்புவது(கடன் பாக்கி), அன்றைய பேப்பரில் வந்த தனக்குப் பிடித்த சினிமா நட்சத்திரத்தின்  படத்தை தாங்கி வந்த பக்கத்தில் வாங்கிய புளியை வைத்ததால் அந்த நட்சத்திரத்தின் முகம் சிதைக்கப்பட்டதால் கோபமுற்றதின் விளைவை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் ஸ்ரீராம் (அவனுக்கு பிடித்த நட்சத்திரம்), தினப் பத்திரிகையை பணம் கொடுத்து வாங்க முடியாமல், ரீடிங்க் ரூமில் படிக்க எத்தனிக்கும் ஒருவன் படும் அவஸ்தையை அங்கத்ததின் உச்சத்துடன் வெளிப்படுத்துவது (எண்கள்), எலியைப் பிடிப்பதே குறிகோளாக இருப்பவன், அது மசால் வடையைக் கூட சாப்பிடாமல் இறந்து போவது குறித்து வருத்தப்படுவது(எலி), அறுபது ஆண்டுகளுக்கு மேல் சமுதாயப் பணியில் ஈடுபட்ட காந்தியை ஒரு ஐந்து அல்லது ஆறு சம்பவங்களை வைத்து எடைப்போடும் மடத்தனத்தை அருமையாக வெளிப்படுத்தும் காந்தி என்ற கதை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அவர் நாவல்களிலும் இதே போன்ற நிகழ்வுகளைத்தான் கையாண்டிருப்பார்  எனினும் ஒற்றன் என்ற நாவல் முற்றிலும் வேறுபட்டது. அவருடைய அமெரிக்க பயணத்தையும், அங்கு பல்வேறு நாட்டு  எழுத்தாளர்கள் மற்றும்  கவிஞர்களுடனான அனுபவங்களையும் அவருக்கே உரிய பாணியில் புனைவாக எழுதியுள்ளார். பல நாட்டு எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் அழைப்பின் பேரில் ஐயோவாவிற்கு அழைக்கப்பட்டு ஏழு மாதங்கள் அங்கு இருந்த அனுபவத்தை ஓர் ஆங்கில சஞ்சிகைக்கு எழுதி அனுப்பியதை கதை என வெளியிட்டதில், ஒற்றன் உருவானது என முன்னுரையில் அசோகமித்திரன் கூறியுள்ளார். இந்த நாவலில் கணேசன், பாலு, பங்கஜம் என்று யாருமே இல்லை. அதற்கு பதிலாக ஜான், பர்ட், ஜிம், இலாரிய என்ற பாத்திரங்கள். அவர் முன்னுரையில் கூறியுள்ளது போல் “துக்கம், சங்கடம் என வரும் போது எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்” என்பதை நாவலைப் படித்து முடிக்கும் போது தெளிவாக உணர முடிகிறது.

 அமெரிக்க பயண அனுபவம் என்றவுடன் அங்கு சாம்பார், இட்லி சாப்பிட்டது, அது அதிசயம், இது பிரமாதம் என இதயத்தில் இருந்து பேசவில்லை. அங்கும் மக்களின் கஷ்டத்தையும், உறவில் இருக்கும் சிக்கல்களையும் பற்றிதான் எழுதியுள்ளார். விமான நிலையத்தில் இமிக்ரேஷன் கியூவில் தன்னுடன் நிற்கும் மனிதர்களைப்  பற்றி தொடங்கும் நாவல் ஐயோவா பல்கலைக் கழகத்தின் மேப்ளவர் கட்டிடத்திற்கு நகருகிறது. இலவசமாக தினசரி கிடைக்கும், தனக்கு வரும் கடிதங்களை எடுத்துக் கொள்ள தனி வசதி என எல்லாமே புதிய அனுபவமாக இருக்கிறது. அந்தக் குளிர் மற்றும் சைவ உணவு கிடைக்காமல் அவதி போன்ற நடைமுறை சிக்கல்களை நுணுக்கமாக விவரித்துச் செல்கிறார்.

“அன்று வேறு கிழமை” என்ற ஞானக்கூத்தனின் கவிதையை ஆங்கில மொழியாக்கம் செய்து வாசித்த2006-07_Ottaran-196x300து குறித்தும், அதற்கு கிடைத்த வரவேற்பும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் சமயம் சொந்தங்களின் மரணச் செய்தியைப் போல மனதைத் துன்பப் படுத்துவது வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த நிலையை தன்னுடன் அறையை பகிர்ந்து கொள்ளும் சே மூலம் விவரிக்கிறார். நம்முடைய துன்பத்திற்கு நம் செயல்களே தான் காரணம் என்பது இலாரியா நடத்தைகளின் மூலம் தெளிவாகிறது. கேமார்ட்டில் பணிக்குத் தகுந்தாற்போல் பயன்படும் ஜோடுகள் வாங்கியது, பஸ்நிலையத்தில் உண்டாகும் பிரச்சனை, ஆட்டோமேடிக் கடிகாரம் ஓடாமல் பேனாவுடன் கூடிய டிஜிட்டல் கடிகாரத்திற்கு மாறியது  என சம்பவங்கள் தொடர்கின்றன. தெற்கு அமெரிக்க நாடுகளான பிரேசில், பெரு, சிலி போன்ற நாடுகளின் எழுத்தாளர்கள் இடையே நிலவிய பரஸ்பர வெறுப்பு குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். ஜப்பானைச் சேர்ந்த கஜூகோ மற்றும் அவளின் டெக்ஸாஸ் நண்பன் மார்டின் உறவில் இழையோடும் அன்பும், மனிதத் தன்மையும் அழகியலுடன் வர்ணிக்கப்பட்டுள்ளது. அபே குபக்னா எனும் எத்தியோப்பியா எழுத்தாளனுடன் கதாசிரியருக்கு இருந்த சிக்கலான உறவு மற்றும் அவன் கதை ஒற்றன் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பானது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெரிய எழுத்தாளனாக இருந்தாலும் அபேயிடம் மென்மையாக பழகும் தன்மை இல்லை. அதற்கு நேர் எதிராக பெரு நாட்டைச் சேர்ந்த பிராவோ என்ற எழுத்தாளன். மிக நேர்த்தியாக, கச்சிதமாக தன் பணிகளை மேற்கொள்ளும் ஆற்றல் பெற்றவன்.

ஒரு நாவல் எழுதுவதற்கான வரைபடத்தை துல்லியமாக தயாரித்து, நாவல் எழுத முயன்று தோல்வி அடைகிறான். கட்டுரை வேண்டுமானால் திட்டமிட்டு எழுத முடியும். புனைவு என வரும் போது அது வளரும் விதமே தனிக் கலை என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாவலின் உச்சம் என்றால், பல்வேறு நாட்டுக்காரர்கள் வாசித்தக் கவிதைகளை ஒருங்கிணைத்து அருமையான ஒரு நாடகத்தைப் போட்டது எனலாம். அதில் ஞானக்கூத்தனின் “அம்மாவின் பொய்கள்” என்ற கவிதையை நாடகமாக்கியது தனிச் சிறப்புடன் அமைந்திருந்தது என்கிறார் கதாசிரியர். இந்த கவிதையை நாடகமாகப் போட்ட விக்டோரியாவிடம் கதாசிரியர் “கவிதையை இருவர் நிகழ்ச்சியாக மாற்றியது நல்ல யோசனை” என்கிறார். அதற்கு விக்டோரியா “எனக்கு பொய் சொல்ல அம்மா ஒருத்தி தான். அப்பா யார் எனத் தெரியாது என்கிறாள்”. அந்தக் கவிதை இலக்கியமாகுமிடம் என்பதை மறுக்க முடியாது.

தான் பல வசதிகளுடன் அயோவாவில் வாழும் போது, தன் குடும்பம் சென்னையில் மழை பெய்தாலும் தண்ணீருக்கு அலைந்து கொண்டும், பால் வாங்கக் கூட கஷ்டப் பட்டுக் கொண்டும் வாழ்வதை கதாசிரியர் நினைத்துப் பார்க்கும் இடத்தில், அவருக்கு ஏற்படும் குற்ற உணர்வு ஓர் இந்தியக் குடும்பத் தலைவனின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.. இறுதியாக, ஓர் இடத்தில்  “கலாசாரமே வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத்தான். ஆனால், அதுவே சில சந்தர்ப்பங்களில் சமூக வளர்ச்சிக்கு எதிரியாகப் போய்விடுகிறது” என கதாசிரியர் தன் எண்ணத்தைக் கூறுகிறார். இது பல சிந்தனைகளைத் தூண்டியது.

அசோகமித்திரனின் எழுத்தைக் குறித்து பல வித விமர்சனங்கள் உண்டு. வாசகனுக்கு அதைப் பற்றி கவலையில்லை. வாசகன் ஒரு படைப்பை கொண்டாடுவதற்கோ, அதை நிராகரிப்பதற்கோ காரணங்கள் கூறத் தேவையில்லை. அது விமர்சகனின் தொழில். எத்தனை சுப்புடுகள் வந்தாலும், இன்றும் செம்மங்குடியைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.