kamagra paypal


முகப்பு » அனுபவம்

கடல் தின்ற காலம்…

26.12.2004. கோடிக்கணக்கான வருடங்களாய் இருண்டும் விடிந்தும் தனக்குத்தானே சிருஷ்டித்துக் கொள்ளும் நாட்களின் லயத்தில் பொங்கித் தங்கும் காலப் பிரவாகத்தின் ஏதோ ஒரு துரும்பின் அணுவாய் ஆக்கப்பட்டிருந்த நான், அன்றைய தினத்தை துவங்குவதற்கான ஆயத்தத்தில் சூடான காபியை ஆற்றியபடி காலைச் செய்திகளுக்காக தொலைக்காட்சியை “ஆன்” செய்தேன்.

அத்தனை செய்தி சேனல்களையும் ஆழிப்பேரலை ஆக்கிரமிப்பு செய்திருந்தது. முதலில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆயிரம் பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது போன்ற செய்திகளே வந்தன. நேரம் ஆக ஆக, பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பாதிப்புகள் தெரியத் துவங்க, ஒரு பெருந்துக்கத்தின் கனம் உள்ளேறத் துவங்கியது. தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நகரங்களில் இருந்து வடதமிழக கடல் பகுதிகள் நோக்கித் திரள, அத்தகைய குழுக்கள் ஒன்றில் இணையும் பொருட்டு நான் கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்தபொழுது சுனாமி சூறையாடிய நாளின் அந்தி நெருங்கியிருந்தது.

உச்சிமேடு என்ற இடத்தை தாண்டியவுடன் பேருந்தில் இருந்த அனைவரின் பார்வையும் ஒரே இடத்தை நோக்கித் திரும்பின. கழிமுகத்தின்மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்தபடி நின்றிருந்தது கப்பல் என்று சொல்லுமளவு பெரிதாக இருந்திருக்கக்கூடிய ஒரு படகின் உடைபட்ட மிச்சம். குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தூரம் அதை கடல் இழுந்து வந்திருக்கக்கூடும் அல்லது வீசியிருக்கக்கூடும். கடற்கரையோர கிராமங்களையும் அங்கிருந்த மக்களையும் கடல் என்ன செய்திருக்கும் என்று நினைப்பதற்கே பீதியை ஏற்படுத்திய அந்த காட்சி அடுத்தடுத்த அதிர்ச்சிகளுக்கான ஆரம்ப சாட்சியாக‌ இருந்தது.

கடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியபின், துயரத்தின் மையப்புள்ளியில் இருக்கிறோம் என்பதை உணர சில நிமிடங்களே போதுமானதாக இருந்தது. சிறுசிறு கூட்டமாக இருந்த மக்களில் பெரும்பாலோர் எவரையோ அல்லது எதையோ இழந்தோ தொலைத்தோ அடுத்த கட்டம் என்ன என்றறியாத பதைப்பில் இருந்தனர். தேவனாம்பட்டினம், தாழங்குடா, கள்ளை, செல்லான்குப்பம் என்ற ஊர்களின் பெயர்கள் அவர்களின் உரையாடல்களில் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியின் உணர்வுகளாக காதில் விழுந்தபடி இருந்தன.

சற்று நேர காத்திருப்புக்குப் பின் தேவனாம்பட்டினம் செல்லும் உள்ளூர் பேருந்தில் ஏறினேன். கண்டக்டரிடம் டிக்கெட்டுக்காக சில்லரையை நீட்டினேன். அவர் மறுதலிப்பது போல் தலையை ஆட்டிவிட்டுப் போனார். அந்தப் பேருந்தில் எவரிடமும் டிக்கெட் கேட்கப்படவில்லை. வழியில் கைகாட்டிய எவரையும் எந்த இடத்திலும் ஏற்றிக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது பஸ். அன்றைய தினம் கடலூர் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சென்ற பெரும்பாலான பேருந்துகளும் இவ்வாறே பயணித்தன என்று பின்பு அறிந்து கொண்டேன்.

Tsunai_2004_Tamil_Nadu_Sri_Lanka_India_Sea_Waves_Homeless_Shelter

இழப்பின் சாயத்தில் தோய்த்து துயரத் தூரிகையால் கடல் கிறுக்கிய அலங்கோல ஓவியம் போலக் கிடந்த தேவனாம்பட்டினம் சாலையில் இறங்கிவிட்டிருந்தேன் நான். இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருந்தார்கள். கணக்கற்றவர்கள் காணாமல் போயிருந்தார்கள். வீடுகளை விழுங்கி கற்களையும் மணலையும் துப்பி விட்டு போயிருந்தது கடல். எங்கோ இருக்கும் கடல் நீர் அங்கெப்படி வந்திருக்கக்கூடும் என்ற வியப்புக்கான பதிலை மனித அறிவு தர இயலாது. எல்லா வியப்புகளுக்கும் நம்மால் விடைகாண முடியுமா என்ன? கடற்கரை நோக்கிச் சென்ற வீதியொன்றில் மரணம் தன் நெடியதும் கொடியதுமான கால்களினால் பல வீடுகளுக்குள் நடந்து போயிருந்தது. அழுகை, ஆவேசம், ஆதங்கம் என வலியின் திசைகள் இட்டுச் சென்ற வழியில் மனித மனங்கள் தத்தளிப்பதை பார்க்கப் பார்க்க அடிவயிற்றில் எழுந்த கெட்டித்த ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பது போல இருந்தது.

வீதியின் முடிவில் விரிந்திருந்த‌ கடற்கரையின் துவக்கத்தில் ஒரு சிறிய கூட்டம். கூட்டத்தின் அருகில் கடலூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் வாகனம் நின்றிருந்தது. அனைவரும் ஒரு முதியவரை வாகனத்தில் ஏற்ற பெருமுயற்சி செய்து கொண்டிருந்தனர்.அந்த முதியவருக்கு எழுபது வயதிருக்கும். சிதிலமடைந்திருந்த ஒரு கல் திட்டின் மீது கடல் பார்த்தபடி எவரின் இழுப்புக்கும் அசைந்து கொடுக்காமல் அவர் அமர்ந்திருந்தார். அவரிடத்தில் எந்தவித சலனமும் இல்லை. கண் மட்டும் கடலை வெறித்தபடி இருந்தது. மீனவப் பெருங்குடும்பம் ஒன்றின் மூத்தவரான அவரின் சொந்த பந்தம் வீடு வாசல் என அனைத்தையும் அரை நிமிடத்தில் அள்ளிக் கொண்டு போயிருந்தது கடல்.

அவரின் அருகே சமவயது மதிக்கத்தக்க அவரின் நண்பர்கள் சிலர் நினைவுப் புயலில் சிக்கிக் கொண்ட அவரின் மனத்தோணியை நிகழ்காலத்தின் கரையில் இழுக்க முயன்று கொண்டிருந்தார்கள். அவர் கடல் மேல் பெருங்காதல் கொண்டிருந்திருக்கக் கூடும். அவர் அப்பகுதியின் அற்புதமான கடலோடியாக அறியப்பட்டிருந்திருக்கிறார். கட்டுமரங்கள் பிரதானமாக இருந்த அறுபதுகளிலும் எழுபதுகளிலும், அக்கம்பக்கத்து மீனவ குப்பங்களிலிருந்தெல்லாம் வந்து “மரம் கட்டுவதற்கான” யோசனைகள் கேட்டுச் செல்வார்களாம். காற்றின் வாசனையை வைத்தே வரப்போகும் பருவ நிலையை கண்டறிந்து கட்டுமரத்தின் திசையை கடலில் நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றவராக அவர் திகழ்ந்திருக்கிறார்.

“புலியன புடிப்போமாடா…” என்று அவரை உலுக்கினார் இன்னொரு நண்பர். அந்த உலுக்கலில் முதியவரின் கடல் சார்ந்த வாழ்க்கை ஒளிந்திருந்தது. வரிப்புலியன் என்பது ஆபத்தான ஒரு பெரிய வகை சுறா மீன் என்று எங்களுக்கு விளக்கினார் இன்னொருவர். நம் முதியவர் வரிப்புலியனை பிடிப்பதில் அசாத்திய சூரராக விளங்கியிருக்கிறார். அதை பிடிப்பதற்காக பல தினங்கள் தொடர்ந்து கடலிலேயே தங்கி விடுவாராம். வரிப்புலியன்கள் ஜோடியாகவே இருக்குமாம். “பிடிச்சா இரண்டையும் பிடிக்கணும், இல்லையா விட்டுறணும் – ஜோடிகள பிரிக்கக் கூடாது” என்பாராம். பல முறை ஆண் மீனோ பெண் மீனோ தனியாக சிக்கி அவரின் இத்தகைய பண்பினால் தப்பியிருக்கிறதாம். மீன்கள் ஏதுமின்றி கரை திரும்பும் நாட்களிலும் கடலையோ தொழிலையோ சலித்துக் கொள்வது அவருக்கு பிடிக்காதாம். கடலம்மாவுக்கு தன்னோட பிள்ளைகளுக்கு எப்போ என்ன தரணும் அப்படின்னு தெரியும் என்பாராம்.

அவரின் நிலைகுத்திய பார்வையில், கடலுடன் உறவாடிய பொழுதுகளின் பிசுபிசுப்பு உவர்ப்பின் படலமாய் விழித்திரையில் ஒட்டிக் கொண்டிருக்குமோ? வாழ்க்கை முழுவதும் நாளும் பொழுதும் கடலின் ஸ்பரிஸத்திலேயே அல்லது கடல் வாசனையை நுகர்தலிலேயே நகர்ந்த‌ அந்த முதியவரின் முதுகில் ஆழமாக குத்தி துரோகம் செய்து விட்டதோ கடல்? தாள முடியாத துரோகத்தில் விக்கித்து போய் விட்டதோ அவரின் காலம்?

துக்கம் என்பதே இழப்பில் இடிந்து, அழுகையின் சொட்டுக்கள் அடி மனதில் வடிந்து கெட்டித்துப் போய், அர்த்தமின்மையின் வெறிப்பில் முடியும் உணர்வின் நிகழ்வுதானோ? மகிழ்ச்சியின் பொழுதுகளை ஒரு இறகின் இலகுவான வருடல் போல அனுபவிக்கும் நாம், துயரத்தை கடப்பதற்குள் அடைகின்ற தவிப்பு அதன் கனத்த தன்மையினால்தானோ? துயரத்தின் எடை முழுவதும் அதற்குள் சுருண்டு கிடக்கும், மீண்டும் நிகழ்வுகளாய் மாற்ற முடியாத, நினைவுகளின் கனத்தினால்தானோ? மன அழுத்தம் என்பதே காலத்தின் அழுத்தம்தானோ?

அத்தகைய அழுத்தத்தின் உச்சத்தில் அனைத்து உணர்வுகளும் உள்ளிருந்து தெறிந்து வெளியேறி நம்மிடம் வெறிப்பு மட்டுமே மிஞ்சுமோ?

பலரின் உதவியுடன் வாகனத்துக்குள் ஏற்றப்பட்டார் அவர். இன்றுவரை, கடலை பார்க்கும்பொழுதோ கடல் பற்றிய செய்திகளை பார்க்கும்பொழுதோ படிக்கும்பொழுதோ அவரின் அந்த நிலைகுத்திய பார்வை என்னுள் முளை விட்டுக் கொண்டே இருக்கிறது.

அவரை அழைத்துச் சென்ற வாகனத்தின் பாதையில் நீண்டிருந்த கடற்கரையின் விளிம்பில் பொது தகன மேடைகள் உருவாகியிருந்தன.

நேற்றுவரை ஊரில் ஓடியாடி உயிர் வாழ்ந்திருந்த பலர் வெறும் குவியல்களாய் எரிந்து கொண்டிருந்தனர். “நீயா இப்படிச் செய்தாய்” என்று கடலிடம் கேள்வி கேட்பது போல அங்கிருந்து வானம் பார்த்துக் கிளம்பிய புகை பரவத் துவங்கியிருந்தது. “மணிகர்ணிகா காட்”டை கங்கையின் கரையிலிருந்து கடலோரமாக‌ நகர்த்தி வைத்தது போல கனலாய் தகித்தது அந்தக் காட்சி. தனக்கும் முந்தைய தினத்தின் நிகழ்வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது போல காலக் குமிழ்களை அலைகளின் மடிப்புகளுக்குள் வைத்து கரை நோக்கி அனுப்பியபடி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடல்.

One Comment »

  • K.Kannan said:

    எங்கோ நிகழும் துயரத்தை சாய்நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியில் கண்டு தொடர்பில்லாத மனோபாவத்துடன் பிரதி வினை நிகழ்த்துவோரைக்கூட நிலைலகுலையச்செய்த சுனாமி செய்திகளை அதன் புயல்மையத்தின் சாட்சியாக இருந்தவர் கூறும் போது, அதுவும் கூர்மைப்படுத்தப்பட்ட தன் சொல்லாற்றலுடன் விவரிக்கும்போது, காலப்பிரமாணத்தால் விலகியிருந்தபோதும், மனம் குமுறத்தான் செய்கிறது.
    கண்ணன்

    # 16 January 2014 at 6:06 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.