பன்னீர்

பெண்ணுக்குக் கல்யாணம் என்று முடிந்து விட்டால் ஜவுளிக்கடை வேலையை விட்டு நின்றுவிடுவதாகத் தான் இருந்தார் அப்பா. கண்ணு சரியாய்த் தெரியாமல் முதலாளி பத்தி முதலாளியிடமே எதோ சொல்லப் போய்விட்டார். காதுங் கூட அத்தனை விருத்தியாய் வேலை செய்யவில்லை. காது கேளாதவர்கள் சற்று மூக்கால் பேசுகிறார்கள். ஏன் தெரியவில்லை. புறம் பேசுவது, வத்தி வைப்பது, ஒட்டுக் கேட்பது… என அநேக கெட்ட பழக்கங்களுடன் இருந்த அவர் வாழ்க்கை உப்பு சப்பு அற்ற பத்தியச் சாப்பாடாய் ஆகிப்போனது.

இந்நிலையில் ஜவுளிக்கடையே தள்ளாடிக் கொண்டிருந்தது. எப்ப படுக்கும் என்கிற பைசா நகரத்து கோபுரப் பிரச்னை. இங்கேயும் பைசா தானே பிரச்னை? ஜவுளிக்கடை என்று போட்டு அதில் கடை என்பதை அடித்து கடல், என எழுதிய காலம் போய், மொத்தத்தையுமே அடித்து விடுகிற நிலைமை. கல்லாப் பெட்டி காசு இல்லாப் பெட்டியாகி யிருந்தது. முதலாளி யாரை முதலில் வெளியே அனுப்பப் போகிறார் என்று வேலையாட்களுக்குள் சஸ்பென்ஸ். எல்லாரிடத்திலும் லேசான உள்க் கலவரம். அப்பாவுக்கு தன் சீட்டு முதலில் கிழியுமோ என்று நடுங்கியது. வேலை வேணாம் என்கிறவர் தான். என்றாலும் பெண் குதிர்ந்து நிற்கிறாளே கல்யாணத்துக்கு…

முதலாளியே ஒருநாள் அப்பாவை… மாட்னான்யா, என்கிறாப்போல அவரை எல்லாரும் பார்த்தார்கள். தான் தப்பித்தோம் என்கிற ஆசுவாசம் அதில் இருந்தது.

சரி முதலாளி, பொண்ணு கல்யாணம் வரைக்குமாவது தாக்காட்டிறலாம்னு பார்த்தேன், என்றார் அப்பா தயக்கத்துடன். தன்னை நாயாகவும், சம்பளத்தை முதலாளி கை பிஸ்கெட்டாகவும் உணர்ந்தார். ஆட்ட அவரிடம் வால் இல்லை.

பொண்ணு கல்யாணத்துக்கு… முதலாளி அதை யோசித்திருந்தாரா தெரியவில்லை. இந்தா வெச்சிக்க… என்று எடுத்துப் போட்டார். அழகான, நாலு விரற்கடை ஜரி போட்ட பட்டுப்புடவை. உள்ளே லேசாய் சிறு இடத்தில் நூல் பிரிந்த டேமேஜ், அதொண்ணும் பெரிய விஷயம் அல்ல. ஃப்ளௌசுக்குள் மறைத்து அம்சமாய்க் கட்டிக்கலாம். பத்து ஐயாயிரம் இருக்குமே. அசந்துபோனார் அப்பா. கல்யாண சமயம் அவரே இப்படியொரு புடவையை லபக்கி விட யோசித்திருந்தார்.

ரமணிபாய்க்கு மாப்பிள்ளை அமையும் முன்னாலேயே கல்யாணப் புடவை அமைந்துவிட்டது. இதே அதிர்ஷ்டத்தில் உனக்கு மாப்பிள்ளையும் அமையும் பார், என்றார் அப்பா பயத்துடன். எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத, கோவில் கல்யாணம் போதும் என்கிற மாப்பிள்ளை. பரந்த மனசு இல்லாதவர்களெல்லாம் மாப்பிள்ளைகள் பரந்த மனசோடு வர எத்தனை ஆசைப்படுகிறார்கள்.

ரமணிபாய்க்கு வயதாகி விட்டது. அக்கா என்றல்ல, குழந்தைகள் அவளை ஆயா என அழைக்கிறாப் போல ஆயாசமாச்சு. அலங்காரம் அவளுக்கு ஒட்டவில்லை. சற்று எண்ணெய் வழியும் முகம். அடர்த்தியான வியர்வை. விக்கிரகம் மாதிரி இருப்பாள். கறுப்பு முகத்தில் ஆ அந்தக் கண்கள் மாத்திரம் அபாரமாய்ப் பொலியும். ராத்திரி மினுங்கும் சீரியல் பல்புகள்! புகைப்படம் பார்த்தே நிறையப் பேர் தவிர்த்திருந்தார்கள். புகைப்படம் பார்த்ததையே தவிர்த்திருக்கலாம் என அவர்கள் நினைத்தார்கள். சில படங்கள் ப்ரிவியூ தியேட்டரிலேயே நூறு நாள் பிய்த்துக்கொண்டு போகின்றன. எனக்கு என இனி யாரோவா பிறந்து வரப் போகிறான்? ஏற்கனவே எங்கோ இருக்கிறான்.

கடைசியில் பார்த்தால், ஏற்கனவே அஞ்சி வருஷம் முன்னால் பார்த்த வரனே திரும்பக் கேட்டு வருகிறாப் போலாச்சு. இந்த அஞ்சி வருஷமாய் அவனும் எங்கெல்லாமோ முட்டிமோதிப் பார்த்திருக்கலாம். இப்ப ரமணிபாயின் புகைப்படம் கேட்காமலேயே சரி என்றுவிட்டான். ராத்திரி திடீர்னு பார்க்க பயமாய் இருக்கலாம். லைட் போட்டுக்க வேண்டிதான். மாப்பிள்ளை ஒருமாதிரி நீர்க்காவி வேட்டியின் ரத்தசோகை வெள்ளை. பாம்பணிந்த சிவ பெருமானைப் போல இவன் உடம்பெங்கும் நரம்புகள் ஓடியது. கழுத்து அல்ல, அது கோலிசோடா. இவளுக்கு நேர் எதிர் நிறம். இவன் காளைமாடு எனில் அவள் எருமை. எளிய கல்யாணம், கோவில் கல்யாணம் என்று அப்பா தனது நிலைமையை விறைப்பாய், முன்பு இதைச் சொல்ல சற்று பவ்யப்பட்டார், எடுத்துச் சொல்ல தலையாட்டினார்கள். கார்டு பச்சைக்கொடி காட்டினாப் போல.

மாப்பிள்ளை உடைக்கும், பெண்ணின் பட்டுப்புடவைக்கும் ஒட்டவே இல்லை. அவன் உடைகள் எதோ தள்ளுபடி விலையில் தள்ளிவிட்ட மாதிரி இருந்தன. அவனே அவளிடம் தள்ளிவிட்டாப் போல வந்தடைந்தவன் தானே. ஆனால் அவள் புடவை… அத்தனை தூக்கலான அம்சமான புடவை. அதில் மதுரை மீனாட்சியாய் ஜ்வலித்தாள் ரமணிபாய். அவள் பார்வதி என்றால் அவள்அருகில் சிவ பெருமானின் வாகனமாய் அவன்.

கூட்டத்தில் அத்தனை பேரும் அவள் புடவையையே பார்த்துப் பாராட்டிப் பேசியது அவளுக்கு மிதக்கிறாப் போலிருந்தது. திடீரென்று ஊரின் பார்வை அவள்மேல் விழுந்தாற் போல. எதோ முதலாளியின் நல்ல மனசு, அப்பா போய்க் ‘கேட்ட’ நேரம், முதலாளியின் ‘கெட்ட’ நேரமாக அது இருக்கலாம்… கோவில் கல்யாணம். விக்கிரகம் உள்ளே. வெளியேயிருந்து சாமி கும்பிடும் அவளே விக்கிரகமாய் இருந்தாள்.

காதருகே அம்மா, என் கண்ணே பட்டுரும் போலிருக்கேடி, என்றபோது ரமணிபாய்க்கு சந்தோஷம். கல்யாணம் இத்தனை விசேஷ அனுபவமாய் அமையும் என அவளே எதிர்பார்க்கவில்லை. நல்லுடைகள் ஒரு நபருக்கு உள்க் கிளர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் இன்னும் என்னவெல்லாமோ கொண்டு வரத்தான் செய்கிறது. பக்கத்தில் மாப்பிள்ளை அத்தனைக்கு தான் சோபிக்காததில் பல் கடித்தாப் போல நிற்கிறான். இந்த மாமனார் கூமுட்டை எனக்கும் சேர்த்து முதலாளியிடம் பேசியிருக்கலாம்.

4308118640_815a7560f2_b

முதலிரவு கூட அற்புதமாய் அமைந்தது. தி.க. கொடி போன்ற அவள் கை மருதாணியை அளைந்தபடியே குமரேசன் நீ ரொம்ப அழகா இருக்கே, என்றான் விளக்கை அணைக்காமல். ரமணிபாய்க்குப் பெருமையாய் இருந்தது. புகுந்த வீடு செல்ல அப்பாக்கள் சில வசதி அம்சங்களைச் செய்து தரத்தான் வேண்டும், என நினைத்துக் கொண்டாள். தத்துவம் எல்லாம் தெரிய ஆரம்பித்தது அவளுக்கு.

ஏங்க நம்ம கல்யாணப் படத்தை பெரிசாக்கி மாட்டலாமா, என்று கேட்டாள் அவள். அதில் அந்தப் புடவையில் அவள் எத்தனை அழகாய் இருந்தாள். ச். அதெல்லா வேணா, என்றுவிட்டான் குமரேசன். அவன் பேர் குமரேசன். அப்பா பேர் கதிரேசன். எல்லாரும் சாப்பிடுவது ரேசன். என்ன பெயர்ப் பொருத்தம்!

குமரேசன் நல்ல சினிமா ரசிகன். தல படம் என்றால் அவனுக்கு ஒரு தலைக் கிறுகிறுப்பு. வீட்டிலேயே சமய சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி அஜித் வசனங்களை மேற்கோளாக்கிப் பேசுவான். அஜித்தின் படங்களின் வரிசையோடு கவிதை மாதிரி எதாவது எழுதுவான். (உன்னைக் கண் தேடுதே. மச்சானைப் பாத்தீங்களா. பார்த்த ஞாபகம் இல்லையோ.) பாட்டு என வாயில் வந்தால் அது கட்டாயம் அஜித் பாட்டுதான்.

சினிமா பார்ப்பியா இவளே, என்று கேட்டான் குமரேசன். இல்ல, எனக்கு சினிமா பிடிக்காது… என்ன டங் டங்குனு ஆட்டம் போடறாங்க… என்றாள் அவள். படம் பார்க்க துட்டு கிடையாது அவர்கள் வீட்டில். ஆனால் அக்கம் பக்கத்து வீடுகளில் துடடு இல்லாவிட்டாலும் சினிமாவுக்கும் குடிக்கவும் எப்படியோ காசு தேற்றிக் கொண்டாடினார்கள்.

ஒருநாள் அவன் வேலைமுடிந்து வீடு திரும்பினான். என்னா இவ்ள லேட்டு, என்று கேட்டாள் ரமணிபாய். இன்னிக்கு தல படம் ரிலீசுல்ல, என்றான் சந்தோஷமாய். அதுக்கு? என்றாள். முதல் நாள் படம் பார்க்காதவன் தல ரசிகனா என்ன, என்றான் கடன்பட்டாப் போல.

இது ஒருமாதிரி போதை விஷயமாய் இருந்தது அவளுக்கு. இதெல்லாம் என்ன என்று நாமளும் தெரிந்து கொள்ளலாம் போலிருந்தது. முதல்நாள், முடிந்தால் முதல் ஷோ பார்த்து, முதன்முதலில் தன் அபிமான நாயகன் முகம் திரையில் தெரிகையில், என்னவோ கர்ப்பகிரகத்தில் திரை விலகினாப் போல பரவசப்பட்டு, ஊய்யென்று விசில் கிளப்புதல். தியேட்டரே கொந்தளிக்கிறது.

கோவிலில் யாரும் விசில் அடிக்கிறது இல்லை.

தல படம் எத்தினைவாட்டி பார்ப்பீங்க, என்று கேட்டாள். அ அதுக்குல்லாம் கணக்கே இல்ல, என்றான் அலட்சியமாய். சபரிமலை வருடா வருடம் போகிற பக்தி சிரத்தை இருந்தது அவனிடம். அடுத்த வாட்டி என்னியும் கூட்டிட்டுப் போறீங்களா, என்றாள் அவன் கையை வருடிவிட்டபடியே. ஆ அதெல்லா உனக்குப் பிடிக்காது, துட்டுச் செலவு, என அவன் எழுந்து போய்விட்டான்.

எங்கேயும் வெளிவேலை போக கொள்ள அவளுக்குப் பழக்கம் இல்லை. அப்பா இருந்தவரை அவளை வேலைக்கு என்று எங்கேயும் அனுப்பவில்லை. போனாலும் அவளுக்கு என்ன தெரியும். எட்டாங் கிளாஸ் வாசிக்கையில் வயதுக்கு வந்து அடுத்த நாள் முதல், பள்ளிக்கூடப் படிப்பு பிடிப்பு விட்டுப்போனது. அதற்கு முன்னாலும் ஒழுங்காய் ஆர்வமாய் அவள் பள்ளிக்குப் போனவளும் இல்லை. ஆகவே அதில் பெரிய வித்தியாசம் இல்லை. அம்மா கொஞ்சம் ஆஸ்துமாக்காரி. இயல்பாய் ஒரு மூச்சு. இழுப்பாய் இன்னொரு மூச்சு. மூச்சுக்குழல் அல்ல அது பாம்புப் புத்து. சரி என வீட்டுக்குள்ளே சமையல், தண்ணி எடுத்தல், துணி துவைத்தல், என ரமணிபாய் வாழ்க்கை போனது.

குமரேசன் சிகெரெட் குடிப்பான். புகை பிடிப்பதால் கான்சர் வரும், என்று அச்சிட்ட சிகெரெட் பெட்டியில் இருந்து எடுத்து, சிகெரெட்டால் பெட்டியை ஒரு தட்டு தட்டிவிட்டு வாயில் வைத்து ஒரு தினுசாய் இழுப்பான். எந்தப் படத்தில் அஜித் இப்படிச் செய்கிறானோ தெரியாது. எதாவது பேசினால் அந்த சிகெரெட்டை கத்திரிப் பிடியாய்ப் பிடித்தபடி ஆட்டியாட்டிப் பேசுவதில் ஒரு அம்சம், ஆம்பளை தோரணை இருக்கிறாப் போல அவனே நினைத்தான். இந்த லோகத்தில் ஆம்பளை என நிரூபிக்க எப்படியெல்லாம் போராடுகிறார்கள்.

இங்கே வந்தஇடத்தில் அவளுக்கு ரொம்ப வெறுப்படித்தது. எதிர்வீட்டில் பக்கத்து வீட்டில் குமருகள் இருந்தார்கள். என்றாலும் அவர்கள் எக்ஸ்போர்ட் கம்பெனி அது இதுவென்று துட்டுக்கு ஆலாய்ப் பறந்தார்கள். வேலை என வெளியிறங்கிய ஜோரில் மாப்பிள்ளை பிடித்தார்கள். அவர்கள் அவசரத்துக்கு சில சமயம் வேலைக்கே போகாத மைனர் மாப்பிள்ளைகள் கிடைத்தன.

வீட்டில் அடங்கிக் கிடக்காமல் எல்லாருமே எதாவது வேலை பார்த்தார்கள். நாலு வீடு தள்ளி ஒரு பெண் ஆட்டோ ஓட்டினாள். ஆயா ஒருத்தி மெயின் ரோட்டில் கையில் குச்சி வைத்துக்கொண்டு குந்தி உட்கார்ந்து குறி சொன்னாள். இன்னும் பிளாட்பாரத்தில் கர்ச்சீப், கூலிங்கிளாஸ், குழந்தை ஜெட்டி, பெரியாள் ஜெட்டி, (ரெண்டுக்கும் மழையில் நனைந்தது தான் வித்தியாசம்.) தொப்பி என விற்றார்கள். பொழுதும் போகும். உட்கார்ந்து பல் குத்தியபடியே வியாபாரமும் கவனிக்கலாம். பெரிய அண்டாவில் கூழ் கரைத்து சொம்பு சொம்பாய் விற்றாள் ஒருத்தி. வீட்டிலேயே இட்லிக்கடை. இன்னும் இன்ஸ்டால்மென்ட்டில் புடவை விற்க, சீட்டு பிடிக்க, குழு அமைத்து காசு பிரித்துக்கொள்ள என பணம் கோலிகுண்டாய் உருண்டு புரண்டு கொண்டிருந்தது நாலா பக்கமும்.

நீயும் இப்பிடி எதாவது செய்யி இவளே, என்று குமரேசன் யோசனை சொல்லிப் பார்த்தான். சிறிய எஃப் எம் ரேடியோ இருந்தது வீட்டில். எப்பவுமே அலறிக்கொண்டிருக்கும். கலைஞர் ஓசி கொடுத்த டிவியை முன்பே கிடைத்தவிலைக்கு விற்று குமரேசன் தல படம் பார்த்துவிட்டான். கலைஞர் இலவச டிக்கெட்டே எடுத்துத் தந்திருக்கலாம்.

பொழுது போகாத சமயம் அவள் இரும்புப் பெட்டியைத் திறந்து அந்தப் பட்டுப்புடவையை கையில் எடுத்துப் பார்ப்பாள். ஒருமாதிரி பாச்சா உருண்டை மணத்துக் கிடக்கும் அது. அல்சேஷன் நாய் வழிதப்பி சேரிக்குள் வந்தா மாதிரி… அற்புதங்கள் எப்பவாவது நிகழ்கின்றன. பிரத்யேகமாய் அதைக் கட்டிக்கொண்டு அவள் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெட்டியில் வைத்திருந்தாள். கொஞ்சம் அவ்ட் ஆஃப் ஃபோகஸ் படம் தான். கலரில் எடுக்கச் சொன்னால் கறுப்பு வெள்ளை மாதிரி யிருந்தது, அவளே கறுப்பு என்பதால்.

கல்யாணத்துக்குப் பிறகு அதைப் பயன்படுத்த வாய்க்கவே இல்லை. வெளியிடம் என்று அவளை அவன் அழைத்துப் போவதே இல்லை. வேலை என்று ஒரு கண்ணாடி தயாரிக்கும் கம்பெனியில் ஒன்பது மணிநேர வேலை. ஞாயிறு வேலைசெய்தால் கேட்டநாளில் ஒருநாள் ஆஃப் வாங்கிக்கொள்ள மேஸ்திரியைக் கைக்குள் போட்டு வைத்திருந்தான். தல படம் வெளியாகும் நாளில் அவன் ஆஃப், என தனியே சொல்ல வேண்டியது இல்லை. அதற்கு அவன்போய்ப் பார்க்க மட்டும் துட்டு இருக்கிறது. அவளையும் அழைத்துப் போகலாம். செலவு பத்தி கூட இல்லை. மேல்சட்டையை சற்று தூக்கி விட்டாப்போல கூட சகாவுடன் முன்னும் பின்னுமாக அசிங்க அர்த்தம் வரும்படி தியேட்டரில் ரகளையாய் ஆட அவனுக்கு வெறி இருந்தது. தல வரவும் இங்கே உடம்பு விரைக்க தன்னைப்போல சொருகலாட்டம்… ரமணிபாயை வைத்துக்கொண்டு இதெல்லாம் முடியுமா. வீட்டுக்குள் அமைதி காக்கும் அநேக ஆண்கள் வெளியே சற்று ரௌடித்தனம் பண்ணி அகமகிழ்கிறார்கள்.

தெருவோரத்தில் மாரியம்மன் கோவில். தலையில் சடைபோட்ட ஒருத்தி தான் அங்கே கற்பூரம் காட்டுவாள். உபரி தொழில் வட்டிக்கு விடுதல். இன்னொரு உபரி தொழில் ஜுரம் வந்த குழந்தைகளுக்கு வேப்பிலை சடாரென்று அடித்து குங்குமம் தருவாள். அவள் நெற்றியே குங்குமத் தொட்டியாய்க் கிடந்தது. என்னா இவள், ஆக்சிடென்ட் ஆயி அப்பிடியே எழுந்து வந்துட்டாளா?

உள்ளே உக்ர காளி. அதைவிட இவளைப் பார்க்க பயந்து கிடந்தது. வாசலில் டிக்கி கூரையெடுத்த கடை. காசிக் கயிறு, தகடில் அடித்த சாமி பாதம். பிரார்த்தனைக்காக வாங்கி உண்டியலில் அதைச் சேர்த்தால் கால் ஆணிகள் குணமாகும். அரைஞாண் கயிறு, நோம்புக்கயிறு. தாலிச்சரடு, லக்கி அட்டை கிழித்து பிரைஸ் பார்க்கலாம். தடை வருமுன்னால் லாட்டரி சீட்டும் கிடைத்தது. சாமிக்கு ஊதுபத்தி, மனுச சாமிக்கு கிகெரெட்… குங்குமம், திருஷ்டி சாமான்கள் என கலவையாய் வியாபாரம். தெருவோரக் கோவிலின் சிறு பிராகாரத்தை தெருநாய்கள் பயபக்தியுடன் சுற்றி வந்தன. கோவில் வாசலில் குடிகாரர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்தார்கள்.

சாக்கடை நாறும் இந்தக் கோவிலுக்கு பட்டுப்புடவையுடன் போய்வர முடியுமா? வெளியே என அவள் போவது ரேசன் கடைக்கு தான். அங்கே பட்டுப் புடவையோடு போக முடியுமா? போனால் ஒருவேளை உங்களுக்கெல்லாம் அரிசி கிடையாது என்று கைவிரித்துவிடக் கூடும்…

நாள் கிழமை என்று பட்டுப் புடவை கட்டிக்கொண்டு வீட்டில் விளக்கேற்றி நாலு பாட்டு பாடும் வழக்கமும் இல்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் எஃப் எம் பாடல்களே. அவர்கள் பக்திப்பாடல் டியூனிலேயே கெட்ட பாடல்கள் போடுகிறார்கள். அதைக் கேட்கும்போது, சிவன் முன்னால் பார்வதி ரெகார்ட் டான்சாடுகிறாப் போலத் தோணும்.

எங்காவது அவனுடன் வெளியூர் போகும் சந்தர்ப்பம் வராதா என காத்துக் கிடந்தாள். பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கும் புடவை போல, அவள் அந்த வீட்டுக்குள் அடங்கிக் கிடந்தாள். திடீரென்று பாதிப் பகலில் குமரேசன் வீடு வந்தான். வேலை போய்விட்டதா என்றே பயந்து போனாள். கல்யாணத்துக்கு முன்னாலேயே அப்பாவின் வேலை போனதைப் பார்த்தவள் அவள். சிலருக்கு ஏனோ அடிக்கடி வேலை போய்க்கொண்டே யிருக்கிறது.

கிளம்புடி, என்றான். (எங்க?) ஊருக்கு, என்றான். ஆகாவென்றிருந்தது. பெட்டிக்குள் இருந்து புடவை வெளியே வரும் நாள். சந்தோஷத்தை அடக்கி, என்ன திடீர்னு, என்றாள். ஒரு துட்டி, என்றான் அவன். இந்நேரம் பார்த்து தல படம் வேற ரிலீசாவுது, என்றான். அவன் கவலைகள் வேறு.

சாவு வீட்டுக்குப் பட்டுப்புடவையுடன் கிளம்ப முடியாது. (நீங்க மாத்திரம் போயிட்டு வாங்க.) அறிவிருக்கா உனக்கு, என்று கத்தினான். நான் உன்னை மாத்திரம் அனுப்பலாம்னு பார்த்தேன். அங்க யாரையும் உனக்குத் தெரியாது, அதான்… என்று மோவாயைத் தடவியவன் கிளம்புடி, என்றான் அதட்டலாய்.

பட்டுப்புடவை கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. புடவை என்றால் புடவையோடு போச்சா என்ன? அதோடு கழுத்தில் எதாவது பளபள கிடக்க வேண்டும். வெறுங்கழுத்து, மாரியம்மன் கோவில் மஞ்சக்கயிறு எடுபடாது. தலையில் எவ்வளவு முடியுமோ பூ, குறைந்தபட்சம் கனகாம்பரம். (அவளது புடவைக்கு மேட்சாய்.) முகத்தில் பவுடர் ஒரு ஏத்து ஏத்த வேண்டும். ஒரு அவசரத்துக்கு என்று சின்ன பவுடர் டப்பியும், கில்ட் நகையும் (கல்யாண சமயம் வாங்கியது) புடவையோடு பெட்டிக்குள் பத்திரமாய் வைத்திருந்தாள்.

ஆ அந்த நாள் வந்தது.

குமரேசனின் சிநேகிதன் ஒருத்தன் வீட்டில்… கல்யாணம்! தல ரசிகர் மன்றத்தில் செயலாளர் BKJvJGWCYAEcnj9அவன். அவன் தங்கைக்குக் கல்யாணம். கண்ட இடமெல்லாம் ஃப்ளெக்ஸ் அமர்க்களங்கள் பற்றி அவர்கள் தீவிர யோசனையில் இருந்தார்கள். வீட்டுக்கே வந்து கலைப்ரியன், அவன் சொந்தப்பேர் என்னவோ, பத்திரிகை தந்தபோது குமரேசனைவிட அவளுக்கு தான் சந்தோஷம். அஜித்தின் பெரிய படம் போட்ட பத்திரிகை. தலைவருக்கு பததிரிகை அனுப்பி வெச்சீங்களா அண்ணே, என்று கேட்டாள் ரமணிபாய். பின்னே?… என்றான் பெருமையாய். அத்தான், நம்ம கல்யாணத்தின்போது நம்ம பத்திரிகையும் அனுப்பினீங்களா, என்று குமரேசனிடம் திரும்பிக் கேட்டாள். குமரேசன் பதில் சொல்லவில்லை. அவன் உற்சாகப்படாதது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.     அவனுக்கு கலைப்ரியனைப் பிடிக்காது. குமரேசன் அவனை அமுக்கிவிட்டு தான் செயலாளர் ஆகத் துடித்துக் கொண்டிருந்தான்.

கலைப்ரியனின் தங்கையை அவள் பார்த்ததே இல்லை. என்றாலும் அவள் கல்யாணம் இவளுக்கு முக்கிய விஷயமாச்சு. பத்திரிகையைப் பார்ப்பதும், அப்படியே காலண்டரைப் பார்ப்பதும், அவள் கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று மனசில் கணக்கு போடுவதுமாக உள்ளே சிறு மின்மினியாட்டம்.

ஊராட்சி சமூகக் கூடத்தில் கல்யாணம். எதிர் பூவரசு மரத்தில் இருந்து மண்டப வாசல் அளி வரை நீளமாய் காகித தோரணம் போல, அஜித் படங்கள் தொங்கின. மணமக்கள் படங்களுடன் வாழ்த்து சொல்லி போஸ்டர்கள் தெருவெங்கும். எங்க வீட்டு மனுசன் ஒத்துக்கொண்டிருந்தால் அவள் தன் பட்டுப்புடவைப் படத்தை எடுத்துக்கொடுத்து ஃபிளக்சில் சேர்த்திருக்கலாம். தலையை முன்சுருளாய் வாரி தன் படத்தை மாத்திரம் தந்திருந்தான் குமரேசன்.

கல்யாணப் பெண்ணின் முகூர்த்தப் புடவையை விட இவளது புடவை ஜோராய் இருந்தது. அலங்கார எடுப்பும் கல்யாணப் பெண்ணை விட ஒரு உப்பு தூக்கல். (கல்யாணப் பெண்ணுக்கானால் ஒரு பல் தூக்கல்.) வந்தவர்கள் இவள்தான் கல்யாணப் பெண்ணோ என்றும், அவளுக்கு, கல்யாணப் பெண்ணுக்கு இவள் சொந்தம் என்றும் நினைக்கும்படி ஆச்சு. அவள் பக்கத்தில் அந்த ஒளியில் நிற்க கூசினாற் போல தள்ளியே நின்றான் குமரேசன். இதுகுறித்து அவளுக்குச் சின்னச் சிரிப்பு வந்தது.

கல்யாணப் பெண்ணுக்கே ரமணிபாய் வந்தது வெறிக்கிறாப் போல ஆயிற்று. கலைப்ரியனிடம் அவள் இவளைக்காட்டி ஜாடையாய் விசாரித்தாள்.

யாருமே அவளிடம் வந்து பேசவில்லை. சற்று விலகியே நின்றார்கள். காதடைக்கிற சினிமாப்பாட்டு. என்னவோ சந்தம். கிட்டவாடி லேடி, நீயே எந்தன் ஜோடி என்கிறாப் போல. இப்பதான் இப்படி, ரிப்பன், அப்பன் என்றெல்லாம் சந்தம் எழுதுகிறான்கள். கல்யாண ஜுஸ் வந்தபோது அவளுக்கு பிரத்யேகமாக கிட்டே வந்து கொடுத்தாப் போலிருந்தது. அது அவள் கற்பனையாகக் கூட இருக்கலாம். யாருமே கூடப்பேசாமல் எத்தனை நேரம் இப்படி உட்கார்ந்திருப்பது. தெரியாத இடங்களில் சில சமயம் ஃப்யூஸ் போனாப் போல ஆகிவிடுகிறது. அப்படி நேரங்களில் தம்பதியாய் வந்திருந்தால் அவர்கள் தங்களுக்குள்ளேயே, இங்கேயிருந்தே காட்டி யார் எவன் அல்லது எவள், என சிறு அறிமுகம் நடக்கும்…

இவன் வாசல்பக்கம் நின்றபடி லேடி ஜோடி பாட்டை மெய்ம்மறந்து ரசித்தாகிறது. கூட இருந்தாலும் என்னா பேசிறப் போறான். இந்தப் பாட்டு படத்தில் அர்ருமையா இருக்கும், என்பான். யாரோடும் ஒட்டாமல் தான் தனித்து விடப்பட்டதாய் உணர்ந்தாள். யாராவது கிட்டே வந்து புடவை பற்றி ஒரு பாராட்டு, அல்லது அவளைப் பற்றி ஒரு நல்வார்த்தை சொல்ல… அவள் காத்திருந்தாள். மேலும் காத்திருந்தாள். தலைக்கு மேலே ஃபேன் இல்லை. பேன் தான் இருந்து சொறியல் எடுத்தது. இத்தனை அலங்காரத்துடன் சொறிந்து கொள்வதாவது, என அடக்கிக் கொண்டாள்.

முகூர்த்தம் முடிய கும்பல் ஒட்டுமொத்தமாக எழுந்துகொண்டு பிரியாணி சாப்பிட ஆலாய்ப் பறந்தது. தாமதிக்கிற பந்திகளில் கறித் துண்டுகள் இரா. அவளுக்கும் நல்ல பசிதான். என்றாலும் இததனை அலங்காரத்துடன் தான் அப்படி பந்திக்கு ஓடினால் நன்றாய் இருக்குமா என்ன, என அடக்கிக் கொண்டாள். அத்தோடு இந்த ரசிக சிகாமணியும் கூட வந்தால் தானே அவள் சாப்பிடப் போக முடியும்?

அவளவளுக்குப் பொறாமை, அதான் என் கிட்டவந்து கூட ஒரு வார்த்தை பேசவில்லை, என நினைத்தாள். சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்கள். இந்தக் கடங்காரன் கட்டையில் போகிறவன், குமரேசன், அவனேகூட ஒரு வார்த்தை புடவை பற்றி பேச்செடுக்கவில்லை, என்பதைத் தாள முடியவில்லை அவளால். அழவேண்டுமாய் இருந்தது.

பைக்கில் வீட்டில் அவளை இறக்கி விட்டுவிட்டு குமரேசன் திரும்ப மண்டபம் போய்விட்டான். தனித்து விடப்பட்டாள் அவள். கசகசவென்றிருந்தது. புடவை சோளி என்று அத்தனையும் அவிழ்த்துப் போட்டாள். பிரா, உள்ப்பாவாடை பழையது. இந்தப் புதுப்புடவைக்கு சமமாய் அமையவில்லை. (முதலாளி தரவில்லை.) சரி, உள்ளேதான் இருக்கிறது, யார்கண்ணில் படப்போகிறது என்று அணிந்து போய்வந்திருந்தாள். கல்யாண நாள் வரக் காத்திருந்துக்கும் அதுக்கும் கடைசியில் யாருமே கண்டுகொள்ளாதது போல நடந்துகொண்டது தாள முடியவில்லை. இருக்கிற பொருமலில் இன்றைக்குத் தூங்க முடியுமா என்றே தெரியவில்லை. நின்ற நிலைக்கு நேரே கண்ணாடி. இதன் முன்னால் நின்றபடி எத்தனை ஆசையாய் அலங்காரம் செய்துகொண்டாயடி பெண்ணே…

ராத்திரி வந்தான் குமரேசன். கண்டுகொள்ளாத பாவனையில் கண்மூடிக் கிடந்தாள். ஒரு விஷயம்… தூங்கிட்டியாடி, என்று கேட்டான். என்ன கேள்வி, தூங்கிட்டியான்னா ஆமாம்னா பதில் சொல்ல முடியும், என்றாள் எரிச்சலுடன். அவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. கல்யாணம் எப்பிடி இருந்தது இவளே, என தொடர்ந்தான். அவளுக்குத் தலை வலிக்கிறாப் போலிருந்தது. எதுக்குக் கேட்கிறான் தெரியவில்லை. நீ வந்தது கலை உட்பட எல்லார்த்துக்கும் ரொம்ப சந்தோசம், என்றான்.

அவள் அவனைப் பார்த்தாள். அந்தப் பொண்ணு, அதான் அவன் தங்கச்சி, உன் புடவை ரொம்ப பிடிச்சிருந்ததாம் அதுக்கு, என்றான். அவள் புன்னகைத்தாள். அதான், மறுவீடு போறபோது… என தயங்கினான். ஒருநாள் உன் புடவையை கட்டிக்கிடத் தருவியான்னு கேட்டுவிட்ருக்கா.

ஜிவ்வென்று ஏறியது அவளுக்கு. இத பாருங்க, ஒருத்தியோட புடவைய இன்னொருத்தர் கேட்கறதும் வாங்கிக் கட்டறதும், அதெல்லா நல்லாவா இருக்கு?

கட்டிக்கிட்டா நல்லாதாண்டி இருக்கும்.

இந்த நக்கலெல்லாம் வேணாம்… என்ன பழக்கம் அது. நான் அவ புடவையை இப்பிடி ஒருநாள் கேட்டால் தருவாளாக்கும்? தருவாங்காதீங்க, அதெல்லாம் சும்மா… நீங்க பாட்டுக்கு வாக்கு குடுத்திறப்டாது. என்னைக் கேட்காமல் நீங்க புடவையைத் தொடப்டாது சொல்லிட்டேன். அவள் நெஞ்சு ஏறியேறி இறங்குவதைப் பார்த்தான்.

அவளுக்குக் கேட்காத குரலில் அவன் முணுமுணுத்தான். குடிக்கிறது கூழாம். கொப்பளிக்கிறது பன்னீராம். (என்ன சொல்றீங்க?) ஒண்ணில்ல என அவன் திரும்பிப் படுத்தான்.

ஆறவில்லை அவளுக்கு. போதும். இஷ்டம் இல்லாட்டி அத்தோடு விடுறி, என்றான் அவன். அவள்தான் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். போச்சி, இன்னிக்கு இவள் தூங்க மாட்டாள், என்றிருந்தது அவனுக்கு.

அன்றிரவு அவள் அருமையாய்த் தூங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.