kamagra paypal


முகப்பு » இயற்கை விவசாயம்

முகுந்தன் – முரளி: புலியின் வாரிசுகள்

விடுதலைப் புலியோ, வேட்டைப் புலியோ அல்ல. டைகர் வரதாச்சாரி மிகப் பிரபலமான வக்கீல்.

பிரிட்டிஷ் இந்தியாவில், மதராஸ் ராஜதானி உயர்நீதிமன்றத்தில் வழக்காடுவதில் புலியாம், அந்தப் புலியின் பேரப்பிள்ளைகளான முகுந்தனும், முரளியும் இயற்கை விவசாயத்தில் புலிகள் மட்டுமல்ல, நஞ்சில்லா உணவு வியாபாரத்திலும் புலிகளே. டைகர் வரதாச்சாரி வாழ்ந்த இல்லம் சென்னை நகரில் தோன்றிய முதல் இயற்கை அங்காடியாகத் திகழ்ந்து வருகிறது. நுகர்வோர் நல வாழ்வை முகுந்தனும் முரளியும் கருத்தில் கொண்டு இந்த நஞ்சில்லா உணவு அங்காடியை நடத்தி வருகின்றனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, முகுந்தன் மூளையில் உதயமானதுதான் மயிலை  ஆழ்வார்ப்பேட்டைத் திருப்பத்தின் அருகே உருவான தமிழ்நாட்டின் முதல் நஞ்சில்லா உணவு அங்காடி.”சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால்பணம்” என்று பழமொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதத்தில் செங்கற்பட்டில் உள்ள முகுந்தனின் தோட்டத்தில் விளைந்த காய்கறி, கீரை எல்லாம் மயிலாப்பூரில் வாழும் முரளி வீட்டுக்குக் காரில் வந்துவிடும். வீட்டின் முன்புறம் அங்காடி. அன்று நஷ்டம். இன்று லாபம். இருவரின் உழைப்பும் வீண்போகவில்லை. இவர்கள் கதையை விரிவாகக் கவனிக்கும் முன்பு நம்மாழ்வாருடன் முகுந்தனை செங்கற்பட்டில் சந்தித்த நிகழ்ச்சியைக் குறிப்பிடவேண்டும்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செங்கற்பட்டு ஏரியின் எதிர்வாயிலில் ’கார்ட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒரு சக்தியாக இயங்கி வந்த காலகட்டத்தில் ஓர் இயற்கை விவசாயக் கருத்தரங்கை நடத்தினார். பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றி அங்கு எனக்குப் பேச வாய்ப்பு வழங்குமுன், என் சரியானபடி இயற்கை விவசாயிகளிடையே அறிமுகமும் செய்தார் அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு. எந்தக் குறிப்பும் இல்லாமல் மளமளவென்று மடை திறந்தால் போல் நான் பேசியதைப் பாராட்டிய அன்பு சுந்தரானந்தாவை மறக்கமுடியாது. வருவோர்க்கெல்லாம் குமிழ்மரவிதையை வழங்கி குமிழ்மரத்தின் மருத்துவ குணங்களை அவர் கூறுவதுண்டு.

நம்மாழ்வார் செங்கற்பட்டை மையமாக வைத்து கிராமம் கிராமமாகப் பயணம் செய்து விவசாயிகளைத் திரட்டி இயற்கை விவசாயத்துக்கு மாறும்படி பிரசாரம் செய்தபோது உடனிருந்த அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருப்போரூர் ஆர்.ரங்கநாதன், செங்கற்பட்டு முகுந்தன் ஆழ்வாருக்கு உதவியுள்ளனர். அந்த வகையில் மேற்படி மூவரும் எனக்கு அறிமுகமாயினர்

முரளிக்கு முன்பே முகுந்தன் முழுமூச்சுடன் இயற்கைக்கு மாறியவர். முரளியைவிட முகுந்தனிடம் எனக்கு அதிக பழக்கம் உண்டு.அசாத்தியமான துணிச்சல் இவரிடம் உண்டு. ஆங்கிலக் கல்வி கற்றுப் படித்துப் பட்டம் பெற்ற இவர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கியவர் .செங்கற்பட்டில் அவருக்கு நிலபுலம், சொத்து சுகம், அரிசி அரவை ஆலை எல்லாம் இருந்தது. என்ன காரணத்தினாலோ அவர் வாலிபம் துள்ளிவிளையாடிய வயதிலேயே அந்த வேலையை உதறிவிட்டு, விவசாயத்துடன் கோழிப்பண்னை ஒன்றை நடத்தினார். இதனால் அவருக்குக் காட்டுப்பாக்கம் கால்நடை மருத்துவ மையத்துடன் நெருங்கிய தொAviary Photo_130302724569548076டர்பு கிட்டியது. கோழிவளர்ப்பில் கிட்டாத வெற்றியை கோமாதா எங்கள் குலமாதாவழங்கிவிட்டாள். ஆம், எல்லாம் காமதேனுவின் அருள்தான்!

நான் எழுதிய ஒரு புத்தகம், ‘நாட்டுப் பசுக்களே நாட்டின் செல்வம்’  இவரின் பால்பண்ணையைப் பார்த்துவிட்டு வந்ததன் விளைவுதான்.  இன்று பால்பண்ணைகளில் சீமைப் பசுக்களாகிய ஜெர்சியையும் பிரீசியனையும் பார்க்கலாம். அதில் புதுமை எதுவும் இல்லை. ஆனால் ராஜஸ்தான், குஜராத் பகுதிகளிலிருந்து தார்ப்பார்க்கரையும் காங்கிரஜையும் கொண்டு வந்து வளர்த்து விருத்தி செய்தது பெரிய சாதனைதான்!

பசுமைப் புரட்சியில் வீரியரக விதைகளான குள்ளரக மெக்சிகன் கோதுமை, ஐ ஆர் 8, தைச்சுங் போன்ற குள்ளரக நெல் அறிமுகமானதைப் போல 1960களில் ஜெர்சி, எச். எஃப்., பிரீசியன், போன்ற சீமைப் பசுக்களும் வெள்ளைப் புரட்சி ஏற்படுத்த அறிமுகமாயின. குளிர்தேசத்தில் இப்பசுக்கள் சாதாரணமாக 20 முதல் 40 லிட்டர் பால் கறக்கும். திமில் இல்லாத இப்பசுக்களின் மடி திமில் போலப் பெரிது. அதே சமயம் பலம் இல்லாதவை. எதிர்பார்த்த அளவு பால் பெற நாளொன்றுக்கு 20 கிலோ வரை பச்சைத் தீவனம் வழங்க வேண்டும். ஏ.ஸி.யில் வளர்க்க வேண்டும். இந்திய உஷ்ணம் தாங்காது.

அரசின் நோக்கம் எதுவெனில் அதிகப்பால் தரும் சீமை இனப்பசுக்களுடன், நாட்டுப் பசுக்களை கலப்பினமாக்குவதுதான். ஜெர்சி. எச்.எப். காளைகளின் விந்துக்களை நாட்டுப்பசுக்களுக்குக் கருவூட்டம் செய்து கலப்பினங்களை உருவாக்கினார்கள். முதல் தலைமுறையில் நிறையப் பால் வந்தது. அடுத்தடுத்த தலைமுறையில் பால் அளவு குறைந்துவிட்டது. இன்றைய இந்தியாவில் இப்படிப்பட்ட கலப்பினப் பசுக்கள் மிகுந்துவிட்டன. கோமாறி நோய்கள் தொற்றிப் பசுக்களின் இறப்பும் உயர்ந்துவிட்டது.

இவை அறிமுகம் ஆவதற்கு முன் கராய்ச்சிப் பசுக்கள் எனப்படும் சாஹிவால், சிந்தி, தார்ப்பார்க்கர், காங்கிரஜ், நெல்லூர் போன்றவை வழக்கில் இருந்தன. இவை நல்ல முறையில் வளர்க்கப்பட்டால் சராசரி 10 லிட்டர் பால் தினம் கறக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். மேற்படி இனங்களின் காளைகள் மூலம் நம் நாட்டுப் பசுக்களுக்குக் கருவூட்டப்பட்ட காலம் எல்லாம் மறைந்துவிட்டது. இந்தியாவில் உள்ள திமில் பருத்த காளைகளில் குறிப்பாக ஓங்கோல்/ நெல்லூர் இன்று அரிதாகிவிட்டன. இன்று அவை விலை மிக்கவை. பிரேசிலுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டதால் ஓங்கோல்/நெல்லூர் இனம் இல்லாமல் போய்விட்டன. ஓங்கோல் காளையின் விலை ஐந்து லட்சம் ரூபாயாம்!நமது அரிய இனங்கள் எல்லாம் ஏற்றுமதி ஆகிவிட்டன.

இன்று நம்மிடம் சீமைக்கலப்பினமே எஞ்சியுள்ளன. தூய நாட்டினம் அரிதாகிவிட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் முகுந்தன், ராஜஸ்தானிலிருந்தும், குஜராத்திலிருந்தும் தூய தார்ப்பார்க்கர், காங்கிரஜ், கிர் போன்ற பசுக்களையும், பொலிகாளைகளையும் வரவழைத்து பால்பண்ணை நடத்துவது ஒரு துணிச்சலான செயல்தானே! இன்று அவரிடம் சுமார் 120 கராய்ச்சிப் பசுக்கள் + கன்றுகள் உள்ளன. எப்போதும் சுமார் 30,40 பசுக்கள் கறவையில் உள்ளவாறு நிர்வாகம் செய்து வருகிறார்.

manisekar

மணிசேகரும் தார்ப்பார்க்கர் பொலிகாளையும்

நாட்டுப்பசுக்களில் எவற்றைத் தேர்வு செய்யவேண்டும் என்ற பொறுப்பை முகுந்தனின் நண்பர் புத்திரக் கவுண்டன்பாளையம் மணிசேகர் எடுத்துக்கொண்டார். மணிசேகரின் கருத்துப்படி வியாபார ரீதியாக பலன்பெற கராய்ச்சிப் பசுக்களே உகந்தவை. நம்மூர் உம்பளச்சேரி, காங்கேயம் அந்த அளவுக்குப் பால் தராது. 1 லிட்டர், 2 லிட்டர்தான் பெற இயலும். ஆனால் கராய்ச்சிப் பசுக்களாகிய சாஹிவால், தார்ப்பார்க்கர், சிந்தி, கிர், காங்கிரஜ் போன்றவை தினம் 10 முதல் 20 லிட்டர் வரை பால் வழங்ககூடியவை. தென்னாட்டு ரகங்களில் நெல்லூர் பசு உகந்தது, அது முற்றிலும் அற்றுவிட்டது.

நாட்டுப்பசுக்களில் பாரம்பரியமான ‘திராவிடப்பசுக்கள்’ கருப்பு-வெள்ளை. ‘ஆரியப்பசுக்கள்’ சிவப்பு-வெள்ளை.  எனினும் தூய வெள்ளையில் ஓங்கோலின் மாற்று தார்ப்பார்க்கர்.  ஓங்கோல் வெள்ளைமாடும் சிந்து சமவெளியிலிருந்து வந்ததாக வரலாறு உண்டு.. முழுக்கருப்பாகவும் காங்கிரஜ் உண்டு. கருப்பு-வெள்ளையும் உண்டு. அவை ஆரியமே! சிந்தி, கிரி, சாஹிவால் எல்லாம் சிவப்பு. இங்குள்ள பசுமாடுகளில் செவலை என்று கூறப்படும் ரகங்கள் எல்லாம் கருப்பு-வெள்ளையில் ஏற்பட்ட சிந்தி, ஜெர்சி கலப்பால் ஆகும்.

mukunthan

பால்பண்ணையில் முகுந்தன் – தார்ப்பார்க்கர் காளையுடன்

ஆரியப்பசுக்கள் கராய்ச்சிப் பசுக்கள் எனக் கூறப்படுவதன் காரணம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கராய்ச்சியை ஒட்டியுள்ள ராஜஸ்தான், குஜராத் பிரதேச மாடுகளின் பூர்வீகம் பாகிஸ்தான் ஆகும். கி.மு 5000 காலத்தில் வாழ்ந்த ஆரியர்களின் பூர்வீகம் ஈரானில் தொடங்கி பாகிஸ்தான்- இந்தியாவின் சிந்துநதி சமவெளி வரையாகும். அன்று வேதம் ஓதியவர்கள் இன்று குரான் படித்தாலும் பசுவையும் போற்றி வளர்ப்பது உண்டு. இந்தப் பின்னணியில் செங்கற்பட்டு முகுந்தன் மணிசேகர் உதவியுடன் பாகிஸ்தான் எல்லைவரை பயணம் செய்து, ‘ஆரியப்பசுக்களை’ ஓட்டிவந்து அற்புதமாகத் தொழில் செய்கிறார்.

முகுந்தன் வளர்க்கும் மாடுகள் சுதந்திரமாகத் திரியும் அளவில் தன் தோட்டத்துப் புல்வெளியை அமைத்துள்ளார், இந்தப் பசுக்கள் வெயிலை விரும்புமாம். காலையில் பால் கறந்தபின் அவிழ்த்து விடுவார். காலாறத் திரியவிட்டு மாலை பால் கறக்கும் சமயம் கட்டிப் போடுவார். பச்சைத்தீவனப் புற்களுடன், வைக்கோல், கோதுமைத் தவிடு, அரிசித் தவிடு, உப்பு, மக்காச்சோள மாவு, கடலைப் பிண்ணாக்கு எல்லாம் ஊறப் போட்டு அடர்தீவனமாய் வழங்குகிறார். இவர் கறக்கும் பாலை திருப்போரூர் ரங்கநாதனும், இவர் தம்பி முரளியும் தினம் வந்து கொள்முதல் செய்து சென்னைவாசிகளுக்கு வழங்குகின்றனர். லிட்டர் 50ரூ வரை அடக்கமாகலாம். கொழுப்பு அளவு 7 சதவீதம் உண்டு. கெட்டித் தயிர், நெய் – ஸ்டாக் இருந்தால் மேற்படியாரிடம் கிட்டும்.

முகுந்தனின் இயற்கை விவசாயம் இன்னமும் சிறப்பானது. செங்கற்பட்டைச் சுற்றியுள்ள சில கிராமங்களில், பால்பண்ணைக்கு அருகில் உள்ள நிலங்களில் நெல், கரும்பு, வேர்க்கடலை சாகுபடியுடன்  சில புஞ்சை நிலங்களில் மா, தென்னை சாகுபடியும் உண்டு. பசுக்களுக்காக தீவனப்புல் (கோ-3), கொள், தட்டாம்பயறு சாகுபடியும் உண்டு.

பாரம்பரிய நெல் வகைகளில் கிச்சடிச் சம்பா, கார்சம்பா, இலுப்பைப்பூ சம்பா ஆகியவை சாகுபடி செய்கிறார். அவரே அரிசியாகவும், அவலாகவும் தயாரித்து விற்கிறார்.  காய்கறி, கீரை சாகுபடி உண்டு. இவர் தோட்டத்துக் காய்கறிகள்  வெள்ளிக்கிழமை மாலை மயிலாப்பூரில் நஞ்சில்லா உணவு அங்காடி,  77, லஸ்சர்ச் ரோட்டில் கிட்டும். மற்ற பொருள்கள் எப்போதும் கிட்டும்.

murali

முரளியின் நஞ்சில்லா இயற்கை அங்காடி

முகுந்தனைப் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு முரளியைப் பற்றியும் கூற வேண்டும். முரளி அங்காடிப் பொருளாதாரத்தில் வல்லவர். மிகத் திறமையுடன் நஞ்சில்லா அங்காடியைத் திருப்போரூர் ரங்கநாதனின் துணையுடன் பெருக்கிவிட்டார், இன்று திருப்போரூர் ரங்கநாதன் தன்னுடைய வீட்டு முன்புறம் I.T. Highway  கேளம்பாக்கத்தில்  நஞ்சில்லா உணவு அங்காடியைத் திறந்துவிட்டதால் ஒன்று இரண்டாகப் பெருகிவிட்டது. சென்னையில் என்று கூறூவதைவிட தமிழ்நாட்டில் முதல் நஞ்சில்லா உணவு அங்காடியை நிறுவியுள்ள பெருமை முகுந்தன் -முரளியுடன் ஆர்.ரங்கநாதனுக்கும் உண்டு.

முகுந்தனைப் போல முரளியும் புன்னம்மை, கலியம்பேட்டை (வேடந்தாங்கல் அருகில்) கிராமங்களில் கிச்சிலிச்சம்பா நெல்சாகுபடியுடன் மா,தென்னை, காய்கறிகள், வேர்க்கடலை சாகுபடியும் செய்கிறார். முரளிக்குத் தன்னை ஒரு விவசாயியாகவும் பார்க்கவேண்டும் என்று கொள்ளை ஆசை. நஞ்சில்லா உணவு அங்காடியை குடும்பத்தினர் கவனிப்பார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் காய்கறி பழ அங்காடியை இவர் கவனிப்பார். கொடைக்கானல், ஊட்டியிலிருந்து தரமான இயற்கையில் விளைந்த ஆங்கிலக் காய்கறிகளும் இங்கு கிடைக்கும். எல்லா நாட்களிலும் இயற்கையில் விளைந்த தானியங்களான அரிசி, எல்லாவகை பருப்புகள், கேப்பை, கம்பு, சிறு தானியங்கள், புளி, வற்றல், அப்பளம், கறிவடாம், ஊறுகாய், தேன் எல்லாம் கிடைக்கும். கேளம்பாக்கத்திலும் அப்படியே.

முகுந்தனின் எதிர்காலத்திட்டம் இன்னமும் சுவையானது. தான் பயிரிடும் கரும்பிலிருந்து சுண்ணாம்பு கூட  போடாமல் இயற்கை வெல்லம் தயாரிக்க உள்ளார். மரச்செக்கிலிருந்து ஆட்டப்படும் நல்லெண்ணெய்க்கும் தொடக்கவிழா. எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை நகரில் புதுமாதிரியான ஓட்டல் திறக்க எண்ணியுள்ளார். கன்னியாகுமரியிலிருந்து அதற்கான மண் அடுப்பில் கரியைப் பயன்படுத்திப் பால் காய்ச்சி’பில்டர் காபி’ வழங்கப்போவதுடன் இயற்கையில் விளைந்த உணவால் தயாரிக்கப்பட்ட போண்டா, வடை, தோசை, தவலைவடை, இட்டிலி எல்லாம் உண்டாம். இ[ப்படிப் பேசும்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறது!

-தொடரும்

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு எண்கள்:

1.ஆர்.எஸ்.நாராயணன் 94421 13588

2. P.B. முகுந்தன்      93823 37818

3. P.B. முரளி         93806 91203

4.R..ரங்கநாதன்       94433 46369

5. R.மணிசேகர்       094493 46487  (பெங்களூர்).

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.