ஆறு பேர் ருசிக்கிறார்கள் – ஆடு

twitter-512

விதூஷகன் : தமிழில் ஆடு என்றால் ஆடுவாயா? ஆட்டை வளர்த்து வெட்டுவாயா? ஆடு, புலி, ஆட்டம் வியூகம் வகுப்பாயா? ஆட்டை போடுவாயா?

தேவந்தி : நான் இருந்த மதுரைப் பக்கத்து கிராமங்களில் ஆட்டுச் சந்தைகள் மிகவும் பிரபலம். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் விற்பனைக்காக வாரந்தோறும் கொண்டுவருவார்கள்.

சிக்கி : கிடா வெட்டினால் மழை பெய்யும் என்பது ஐதீகம். ஆடுகள் தலையில் தண்ணீர் தெளித்து, அதன் ஒப்புதல் வாங்கிய பிறகே வெட்டி படையலிடுவோம்.

அமெரிக்காவில் கூட இதே மாதிரி ஐதீகம் உண்டு. நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணி இருக்கிறது. கால்பந்து விளையாடும். அதை கால்பந்து என்று சொல்லக்கூடாது… என்றாலும் அவ்வப்போது காலிலும் பந்து அடிபடும். ஆட்டத்திற்கு நான்கு மணி நேரம் முன்பே எல்லோரும் குழுமி விடுவோம். ஒருத்தர் கோழி சமைப்பார். இன்னொருவர் மக்கா சோளம் சுடுவார். மற்றொருவர் ஆட்டுக்கால் சூப் வைப்பார்.

நேர்த்திக்கடன் கழிக்க ஆடி அமாவாசை அன்று கறிக்குழம்பு வைத்துக் கொண்டிருப்பது போல் ஆளுக்கொன்றாக சமைப்பார்கள். பெருசுகளும் சிறுசுகளும் சேர்ந்து வறுப்பார்கள். இரு பாலினரும் சுடுவார்கள். பேட்ரியாட்ஸ் பார்வையாளர்களும் பயபக்தியுடன் தங்கள் அணி ஜெயிக்க வேண்டுமே என்னும் வேண்டுதலுடன்தான் கிடா வெட்டுகிறார்கள்.

ஜேம்ஸ் : தமிழ் சினிமாவில் இப்பொழுது கிடா வெட்டை வெகு விலாவாரியாகக் காட்டுகிறார்கள். தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் ஆட்டுக்கிடாக்களுக்கு இடையே சண்டைக்காட்சி வைத்திருந்தார்கள். பின்னிரவுகளில் அடுத்த ஊருக்குப் போய் ஆடுகளைத் திருடுவதுதான் நாயகியின் குடும்பத்தொழில்.

twitter-512விதூஷகன் : மிஷ்கின் எடுத்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்துட்டீங்களா? ஓநாய் குலச்சின்னம் வாசிச்சுட்டீங்களா? The Wolf of Wall Street கேள்விப்பட்டீங்களா?

Goat_Parts

பேராசிரியர் கேசவன் : தமிழ் இலக்கியத்திலே பரவலாகப் பேசப்பட்ட எழுதுபொருள் என்றால் ஆட்டைத்தான் சொல்ல வேண்டும்.

கி ராஜநாராயணன் எழுதிய கிடை குறுநாவலைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும். ஆடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ப்பு முறைகளைப் பற்றியும் பிரத்தியேகமாக கவனித்து கூர்மையான விவரிப்புகளுடன் சொல்லப்பட்ட கதை. நாய்களைப் போல் ஆடுகளிலும் சாதி இருக்கிறது. அவற்றுக்கிடையே கலப்பு என்பது எப்போது நிகழும்? இனக்கலப்பு நிகழ்ந்தால் ஆண்டை இனம் அதை ஒத்துக் கொள்ளுமா? எங்கே மேய வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் ஆட்டிற்கு சுதந்திரம் எப்படி சாத்தியமாகும் போன்றவற்றை அடக்குமுறை ஜாதிகளுக்கு குறியீடாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

தேவந்தி : கி.ரா.வின் கிடை நாவலை அம்ஷன் குமார் “ஒருத்தி” திரைப்படமாக எடுத்தார். ஆடு மேய்ப்பவள் மேல்சாதி நாயக்கருடன் சேர்ந்து இருந்துவிடுவாள். விளைச்சல் நிலத்தை ஆடுகள் மேய்ந்துவிடும். இது தமிழ் சினிமாவின் தேய்வழக்காக பாலச்சந்தர் படங்களில் இருக்கும். இந்தக் கதையில் இது முக்கியமான தொடர்பைக் கொடுக்கின்றன. ஆடு போல் எதற்கெடுத்தாலும் மேய்ப்பன் சொல்வதை தலையாட்டுபவன் எல்லப்பன். தமக்கு விதிக்கப்பட்ட கண்காணிப்பை மீறுபவள் செவனி. ஆடுகளால் பயிர் அழிகிறது. கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருந்தால் பெருக்கம். அதுவே, சாதி தாண்டி இணைந்தால் அழிவாகப் போகிறது.

aries_zodiac_Sunsignபூதம் : ஜோசியத்தில் ஆட்டிற்கு தனி இடம் இருக்கிறது. சீன உணவகங்களுக்குச் சென்றால் அங்கே பன்னிரெண்டு மிருகங்களைப் போட்டிருப்பார்கள். கூடவே சுவையான குணநலன்களும் கொடுப்பார்கள். அடுத்த 2015ஆம் வருடம் ஆடு வருடம். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அபுதுல் கலாம் போல் இளகிய மனம் கொண்டிருப்பார்களாம். பில் கேட்ஸ் போல் கூச்ச சுபாவம் கொண்டவர்கள் மார்க் ட்வைன் போல் சிறந்த படைப்பாளிகளாகவும் இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் ஆருடங்கள்.

தமிழில் மேஷ இராசி என்போம். லிண்டா குட்மேன் என்பவர் Aries இராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கு யார் பொருத்தம் என்றெழுதிய புத்தகம் இன்றும் வாசிக்க ரசமாக இருக்கும்.

விதூஷகன் : மேஷராசிக்காரர்களுக்கு குருப் பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் எனத் தெரியாது… ஆனால், மேஷத்தை வைத்து நிறைய பழமொழிகளும் சொலவடைகளும் உலவுகின்றன!

சிக்கி : “ஆட்டாளுக்கு ஒரு சீட்டாள்!
சீட்டாளுக்கு ஒரு மூட்டாள்!”
(ஆட்டாள் – ஆட்டிடையன்; சீட்டாள் – சீட்டு (கடிதம்) எடுத்துப் போகும் வேலையாள்; மூட்டாள் – மூட்டைத் தூக்கும் தொழிலாளி)

தேவந்தி : ஆட்டிடையன் என்றால் யார்? கோகுலத்துக் கிருஷ்ணரா?

பூதம் : ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் கீதையக் கடித்த கதையா? கிருஷ்ணர் என்றால் கொண்டாட்டம். சிலுவையில் அறைபட்ட துன்பம் போலோ, பக்ரீத் போல் துன்பத்தை நினைந்து நினைந்து வலிமேற்கொள்வது என்பது இந்து மதத்தில் கிடையாது.

Koola_Maadhari_Perumal_Murugan_Fiction_Booksபேராசிரியர் கேசவன் : ஆடு என்றால் பெருமாள் முருகன் கதைகள் நிழலாடுகிறது. ஆடு மேய்க்கும் சிறுவர்களை வைத்து எழுதிய ’கூளமாதாரி’ குறிப்பிடத்தக்க நாவல். அந்தச் சிறுவயதிலேயே சாதி ஏற்றத்தாழ்வுகள் எப்படி தோன்றுகிறது என்பது பற்றிய நாவல். இவரின் எழுத்துக்கள் மெதுவாகத்த்தான் நம்மை ஆக்கிரமிக்கும். முதல் இரண்டு அத்தியாயங்களில் ஆற அமர கதாபாத்திரங்களை அறிமுகம் செய்விப்பார். கதைச்சூழலும் அந்த இடத்திற்கான வருணைனைகளிலும் ஆழ்ந்து சென்றபின் சம்பவங்கள் தீவிரமாக நிதர்சனமாக யதார்த்தத்தை முன்னிறுத்தும். இதில் கவுண்டர் வீடுகளில் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக உழலும் சக்கிலியர்களின் நிலையை கூளையன், நெடும்பம், வவுரி, செவுடி, மொண்டி என்னும் இவர்களின் ஆடுகள் மூலமாக சொல்கிறார்.

பெருமாள் முருகனின் ‘ஒடை’ கதையில் ஆட்டு கிடாய்க்கு ஒடை (விரய்) அடிக்கும் சம்பவத்தை வைத்து எழுதப்பட்டதாகும். விதை நீக்க அறுவைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் வீட்டின் முன்பு ரொம்ப நேரம் ஒருவன் இனப்பெருக்க ஆற்றலை அழிக்க ஆட்டுடன் காத்துக் கிடக்கிறான். ஆனால் அவன் தன் மனைவியுடன் புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறான். இந்த முரண் மிக நன்றாக வெளியாகியிருக்கும்.

தேவந்தி : அப்புறம் க்ரேக்க தொன்மத்தில் ஆட்டுக்கு முக்கிய இடம் உண்டு தெரியுமோ? ஜீயஸுக்கு பால் கொடுத்து வளர்த்ததே ஒரு ஆடுதான். Zeus ன் அப்பா பிறந்தவுடன் தன் குழந்தைகளை விழுங்கிவிடுவாராம்- நல்ல அப்பாதான். அதனால் ஜீயஸின் அம்மா இவரை காட்டில் ஒளித்து வைக்க அங்கிருந்த காட்டு தேவதைகள் அவர் ஆட்டுப் பாலுடன் வளர்த்தார்களாம். அதான் நட்சத்திரங்களிடையே Capricorn என்ற Constellation ஆக ஆடு வடிவத்தில் உருவாக்கிவைத்தாராம்.

cain_Abel_First_Kill_Goat_God_Mass_Holy_Father_Dead_Sacrifice_Offerings

பேராசிரியர் கேசவன் : உலகின் முதல் கொலையே ஆட்டினால்தான் நடந்தது… தெரியுமில்லையா சேதி?

காயீனும் ஆபேலும் தத்தமது பலிகளைக் கடவுளுக்குக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் தனித்தனியே இரண்டு பலிபீடங்களைக் கட்டி அவற்றின் மீது ஆட்டின் நல்ல இறைச்சித்துண்டுகளை வைப்பார்கள். விண்ணிலிருந்து நெருப்பு இறங்கி வந்து அவற்றை எரிக்கும். தங்களின் நைவேத்தியத்தை இறைவர் ஏற்றுக் கொண்டதற்கு அதுவே அடையாளம்.

ஒவ்வொரு நாளும் நல்ல துண்டை ஏன் தீயில் இட வேண்டும்? பலியினால் என்ன பயன்? நம் உழைப்பை ஏன் வீணடிக்க வேண்டும்! என காயின் யோசிக்கிறான். அந்த எண்ணத்தின் மேற்சென்று மிச்சமீதிகளை பலி பீடத்தில் வைக்கிறான். ஆபேலோ தன்னுடைய மந்தையில் இருந்து கொழுத்த ஆட்டை வெட்டி படைக்கிறான். கேயினின் பலி ஏற்றிக் கொள்ளப்படாமல், ஏபலின் கண்ணப்ப நாயனார் போன்ற காணிக்கை மட்டும் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

போதாக்குறைக்கு தம்பி ஏபெல், அண்ணன் கேயினிற்கு ஆலோசனையும் புத்திமதியும் வேறு வழங்குகிறான். “ஒரு தடவைதானே கடவுள் எடுத்துக்கொள்லவில்லை… கவலைப்படாதே… அடுத்த முறை ஆட்டின் தொடையை நன்கு செய்து எடுத்து வா! இறைவரிடம் நானே உனக்காக இறைஞ்சிக் கேட்கிறேன். எடுத்துக் கொள்வார்!” என்கிறான். கோபம் தலைக்கேறிய கெயின், தம்பியைக் கொல்கிறான்.

இதுதான் முதல் கொலை.

தேவந்தி :திருவாடானை சுக்கிர தோஷ பரிகாரத்துக்கான திருத்தலம்..

Goat_Elephantஒருமுறை துர்வாசர் தவம் செய்து கொண்டிருக்கையில் வருணனின் மகன் வாருணி என்பவன், முனிவரது தவத்துக்கு இடையூறு செய்ய, கோபக்காரரான துர்வாசர் கொடுத்த சாபத்தில் ஆட்டுத் தலையும் யானை உடலும் கொண்ட வினோத வடிவத்தைப் பெற்றான். பிறகு துர்வாசரிடமே மன்னிப்புக் கேட்க, பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே தண்டனை அனுபவிக்க வேண்டும் அதன்பின், பாரிஜாதவனத்துக்குச் சென்று ஆதிரத்தினேஸ்வரரை வழிபட்டால், சாபம் நீங்கும் என்றார்.

வாருணி அவ்வாறே செய்ய, ஆடும் ஆனையுமாக வழிபட்டுச் சாபம் நீங்கிய இடம் என்பதால், ஆடானை ஆனது; இறைவனும் ஆடானைநாதர் (அல்லது அஜகஜேஸ்வரர்; அஜம்- ஆடு, கஜம் – யானை) ஆனார்.

சிக்கி : ஆனைப்பசிக்கு ஆடு வாய்மூலம் தழை சாப்பிட்டு என்றைக்கு பசியாறுவது யோசியுங்கள். 12 வருஷம் வாருணி பசியில் தவித்தானாம். இந்த துர்வாசர் இப்படியெல்லாம் சாபம் கொடுப்பதிலே ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கியிருப்பாரோ!

தேவந்தி :வசிஷ்டர் சாப்பாட்டு ருசிப்பிரியர் மட்டுமல்ல ரொம்ப உயர் தரக்கட்டுப்பாடெல்லாம் வெச்சிருந்தாராம். விருந்தினரா போயிருந்த இடத்தில் சாப்பாடு சரியில்லைன்னா அவ்ளோதான், நாஸ்தி பண்ணிடுவாராம். ஒரு முறை மஹாபாரதக் கதையில் வரும் சமையற்காரர் ஒருவர் வீட்டுக்கு வசிஷ்டர் சாப்பிடப்போயிருக்கார். வீட்டுக்கார் பேஸ்மெண்ட் வீக்காக நடுங்கியபடி வரவேற்றிருக்கிறார். எப்படியாச்சும் சமாளிச்சிடுப்பா என சமையற்காரரைப் பார்க்க, நான் தான் இருக்கேன்ல என அவர் கோணையா சிரிச்சிருக்கார்.

வசிஷ்டர் சாப்பிடத்தொடங்கியதும் வீட்டுக்காரர் வாசக்கதவோரமா உசைன் போல்ட் கணக்கா ஒரு கால் காத்துலன்னு ரெடியா இருந்திருக்கார். சமையக்காரர் கூலா பரிமாறிவிட்டு அப்படி ஓரமா காத்திருந்திருக்கிறார். நல்லா சப்பகட்டு சாப்பிட்டுவிட்டு ஃபினிஷிங்கில் ஒரு ஏப்பமும் விட்டிருக்கார் வசிஷ்டர். நான் இப்படி ஒரு ருசியான சாப்பாடு சாப்பிட்டதேயில்லைன்னு சொல்லும்போது, இது ஏதோ போட்டு வாங்கிற பிஸினஸு என வீட்டுக்காரரும் மையமா தலையாட்டியபடி ரெடியா இருந்திருக்கார். வசிஷ்டரும் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு தெரு தாண்டியதும், வீட்டுக்காரர் கபகபவென சமையக்காரர் கிட்ட போயி, கண்ணுல நீர் தளும்ப எப்படிடான்னு நலந்தானா ஸ்டைலில் கேட்காம கேட்டிருக்கிறார். அதெல்லாம் அப்படித்தான், வசிஷ்டர் அம்மாவின் கைப்பக்குவத்தை அப்படியே என் சமையலில் காட்டினேன். யாருக்குத்தான் அம்மாவின் சமையல் பிடிக்காதுன்னு ஒரு போடு போட்டுவிட்டு அசால்டா அவர் சமயலறைக்குள் போய்விட்டார்.

பூதம் : “ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்” என்று பைலட் ப்ரேம்நாத்தில் டி.எம்.எஸ். உதவியுடன் சிவாஜி கர்ஜிப்பார். அந்த மாதிரி இருக்கிறது.

தேவந்தி : கறுப்பாடுகள் எல்லாம் வால் ஸ்ட்ரீட் போய் விட்டது. “ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியா இருக்கு!” என்பார்கள். எப்போதாவது கொஞ்சம் கறி கிடைக்கிறது. அதுவும் பிறர் வாய்க்குப் போய்விடுகிறது என்பது இன்றையப் பங்குச் சந்தைக்கும் பாஸ் சித்தாந்தத்திற்கும் பொருந்தும்.

ஜேம்ஸ் : சூரசம்ஹாரத்தின் போது ஆட்டின் மீது முருகன் வருவாரே! அதவாயு என்ற பசுவை வைத்துக் கொண்டு நாரதர் யாகம் செய்கிறார். அந்தப் பசு பயங்கரமாக சத்தமிட்டு, ஆட்டை பிரசவிக்கிறது. முருகனின் சேனாபதி வீரபாகு அதை அடக்கினார். கந்தனுக்கு காணிக்கையாக்கினார். அப்படித்தான் சிங்காரவேலனுக்கு ஆடு அரோகரா ஆனது.

twitter-512விதூஷகன் : எந்தப் பிரச்சினையிலும் அப்பாவிகளின் தலை உருள்வதே வழக்கமாகிறது.
ஆடு சுட்டவன் ஓடிப்போயிட்டான்!
ஆம சுட்டவன் மாட்டுக்கிட்டான்!

பூதம் : இந்த கிடார் வாசிக்கறாங்களே… அது கிடா மாடு வயசானாலும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாமா? அதற்கும் கிடாவிற்கும் சம்பந்தம் உண்டா?

விதூஷகன் : ’மானாட… மயிலாட’வில் ஆடுவது போல்தான் அதுவும். உள்ளுறைந்திருக்கும் சங்கநாதத்தை உணர்ந்தால் ஆடலாம்.

ஜேம்ஸ் : காந்தி ஆட்டுப்பால்தான் குடிப்பார்.

பூதம் : அவர் ஏன் சிங்கப்பால் குடிக்கல? அதிலேயே அகிம்சை எங்கே பலிக்கும்னு தெரியுதே… அதே மாதிரி எல்லோரும் சிங்கத்தையோ புலியையோ நேர்ந்து விடாம, ஏன் அப்பாவி ஆட்டை வெட்டுகிறார்கள்? அதுதான் எளிதாகவும் தோதாகவும் மாட்டுகிறது.

விதூஷகன் : இதெல்லாம் தெரிஞ்சுதான் அகத்தியர் “வாதாபி ஜீரணோ பவ” என ஆட்டை முழுங்குகிறார்.

தேவந்தி : இத்தனை என்னங்க தமிழின் ஆரம்பமே அ- அம்மாவுக்கு அடுத்தது ஆ-ஆடுதானே?

0 Replies to “ஆறு பேர் ருசிக்கிறார்கள் – ஆடு”

  1. “அதே மாதிரி எல்லோரும் சிங்கத்தையோ புலியையோ நேர்ந்து விடாம, ஏன் அப்பாவி ஆட்டை வெட்டுகிறார்கள்?”
    अश्वं नैव गजं नैव व्याघ्रं नैव च |
    अजापुत्रं बलिं दधातु देवो दुर्बलाघतक: ||
    -Ram

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.