kamagra paypal


முகப்பு » அனுபவம், இயற்கை விவசாயம், தாவரவியல்

பயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்

தினமணி நாளிதழில் திரு எஸ்.எம்.சம்பந்தம் ஓய்வு பெற்றபிறகு ஆசிரியர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. தினமணி உதவி ஆசிரியர்களின் குழு அந்த காலியிடத்தை நிறைவு செய்தனர். தற்காலிகமாக திரு சந்திரசேகரன் பொறுப்பாசிரியராகவும் அவருடன் திரு ராயப்பா, திரு இளையபெருமாள், முதல்நிலைச் செய்தி ஆசிரியர் திரு முருகேசன் அடங்கிய குழுவின் அதிகாரத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் (2004-2005) தினமணியை நடத்தி வந்தபோது அவர்கள் ஒரு விஷயத்தைப் புது மாதிரியாகச் சிந்தித்தார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் ஒரு துறைசார்ந்த நிபுணரின் மேற்பார்வையில் ஒரு பக்கம் ஒதுக்கினர். வணிகம், விவசாயம், மருத்துவம், வாழ்வியல், கல்வி ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

அப்போது விவசாயம் தொடர்பாக் என்னை எழுதத் தூண்டினர். எப்படி கொண்டு செல்லலாம் என்று சந்திரசேகர் கேட்டபோது, விவசாய தொழில்நுட்ப கட்டுரை ஒன்றை மையமாகக் கொண்டு, கூடுதலாக “வாரம் ஒரு மரம்” என்ற தலைப்பில் ஒரு விஷயமும் கேள்வி பதில் இரண்டு பத்தியும் கொண்டதாக  வடிவமைக்கலாம் என்று முடிவானது. செவ்வாய்க்கிழமை விவசாயப் பகுதி எனக்கு ஒதுக்கப்பட்டது. இன்றுள்ள இயற்கை விவசாய முன்னோடிகளிடம் கட்டுரை வழங்கும்படி தூண்டினேன். நானும் எழுதினேன். விவசாயம் தொடர்பான கேள்வி பதில் பகுதியும் வாரம் ஒரு மரம் பகுதியும் பரவலான வரவேற்பைப் பெற்றன. அநேகமாக இந்தக் காலகட்டத்தில் இயற்கை விவசாய பிரசாரத்தில் ஒரு வலுவான முதன்மை சக்தியாக நான் மதிப்பிடப்பட்டேன்.

WP_20131115_003

பாண்டியில் பாடம் எடுக்கிறார் கோ.சித்தர்

எனக்கும் மாரியம்மன் கோவில் சித்தருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நெருக்கம் அதிகமானது. தஞ்சை மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள புன்னைநல்லூர் கிராமத்தில் 24 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல்வகைகளுடன் உளுந்து, எள், பாசிப்பயறு, துவரை, காய்கறிகள், பசுந்தாள் உரப் பயிர்கள், செங்கரும்பு, தென்னை, வாழை ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார்.

தஞ்சாவூரில் சித்தருக்கு வேறு வியாபாரங்களும் உண்டு. விவசாயத்தை இவர் தந்தை கவனித்தபோது ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பயனாயின. உரம், பூச்சி மருந்து கடையும் இருந்தது. முதலில் நம்மாழ்வாரின் பேச்சால் கவரப்பட்டு இயற்கையில் மாற முயன்று ரசாயனத்துடன் அதிகபட்சம் உயிரி உரங்களைப் பயன்படுத்தி வந்தார். உரம், பூச்சி மருந்துக் கடையை மூடினார். சரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார். இரண்டு நாட்கள் அங்கு தேடி இங்கு தேடி தொலைபேசி மூலம் என்னைப் பிடித்துவிட்டார். ஒரு புதிய முயற்சியை குரு இல்லாமல் சாதிக்க முடியாது என்றும், தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு வழிகாட்ட வேண்டுமென்றும் வேண்டினார். முன்பின் பார்த்தறியாத ஒரு மனிதர் இவ்வளவு தூரம் என்மீது நம்பிக்கை கொண்டிருப்பது வியப்பாக இருந்தது. நேரில் வருமாறு பணித்தேன். ஒரு நாள் நேரில் வந்தார். நான் அப்போது மண்புழு விற்பனையும் பார்த்து வந்தேன். சித்தர் சந்திப்பு நடந்து பத்தாண்டுகள் கழித்து இப்போது அசைபோட்டுப் பார்க்கிறேன்.

பலமுறை அவர் செலவில் அவர் பண்ணைக்குச் சென்று ரசாயன உரப்பயனைப் படிப்படியாகக் குறைத்துவிட வேண்டுமென்றும்,  இயற்கை வழி பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுரை கூறினேன். சித்தருக்கு நான் கூறிய மற்றொரு அறிவுரை – ஒவ்வொரு விவசாயப் பண்ணையும் இயற்கை இடுபொருள் தொழிற்சாலையாக மாறிவிட்டால் ரசாயன தொழிற்சாலைகளை மூடிவிடலாம். இந்தக் கருத்தைக்கூறி மண்புழு உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவர், களர் மண்ணை மாற்றுவது எப்படி, என்று கேட்டார். தொடர்ந்து ரசாயன உரம் இடத்தால் அயன் நஞ்சை களர் நஞ்சையானது. அவரிடம் புக்குவோக்காவின் ஒற்றை வைக்கோல் புரட்சியின் மையக்கருத்தைக் கூறினேன். அறுவடை முடிந்தவுடன் வைக்கோலைச் சமமாகப் பரப்பி மடியச் செய்து மறு சீசன் தொடங்கும்போது நீர் கட்டி உழச் சொன்னேன். அப்படி உழும்போது தொடர்ந்து தொழு உரமிடவும் வற்புறுத்தினேன். 2, 3 ஆண்டுகளில் களர் நிலை கட்டுப்பட்டு விளைச்சல் பெருகும் என்று நான் கூறியதை அப்படியே கடைபிடித்து வெற்றி பெற்றார். புஞ்சை நிலமென்றால் மூட்டை மூட்டையாக உலர்ந்த இலைச்சருகுகளை நிலத்தில் மூடாக்குப் போட்டு மக்கச் செய்தாலும் கரிச்சத்து ஏற்பட்டு களர் / உவர் நிலை மாறும்.

தஞ்சை மாவட்டத்தில் வைக்கோலுக்குத் தட்டுப்பாடு இல்லை. கிழக்குத் தஞ்சையில் அறுவடை முடிந்ததும் வைக்கோலை எரிக்கும் பழக்கமும் உண்டு. சித்தரின் செயல்பாட்டால் வைக்கோலை உரமாக மாற்றும் பழக்கத்தைச் சில விவசாயிகள் கடைபிடித்தனர். வைக்கோல் பசுக்களின் உணவு. பசுக்களின் தேவை போக எஞ்சுவதை மடித்து உழலாம். மண்ணை வளப்படுத்தும் சாதனமாகவும் பயன்படுத்தலாம். சித்தரின் தொடர்பால் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்குப் பரவலாக அறிமுகமானேன். பூண்டி புஷ்பம் கல்லூரியில் பெரிய மாநாடு கூட்டி திரளான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் போதிக்கப்பட்டது.

சித்தரோடு இணைந்து இயற்கை விவசாயத்தை நான் பரப்பி வந்த காலகட்டத்தில்தான் இந்த “வான்கோழி” பலருக்கு மயிலாகப் புலப்பட்டது. இயற்கை விவசாயப் பிரச்சாரத்தில் நம்மாழ்வார் – சுந்தரராமன் என்ற போட்டி மறைந்து நம்மாழ்வார் – நாராயணன் என்று போட்டி களைகட்டி வருவதாகச் சித்தர் கூறுவதுண்டு. இவர் நம்மாழ்வார் கட்சி, இவர் நாராயணன் கட்சி என்று வேற்றுமை பாராட்டும் போக்கு விரும்பத்தக்கதல்ல என்றாலும் பிரித்து எண்ணும் போக்கு மனித இயல்பு போலும்!

இப்போது சித்தர் இயற்கை விவசாய பீரங்கியாக மாறிவிட்டார். என் பயணம் நின்றுவிட்டது. என் சார்பில் சித்தர் பயணம் தொடர்கிறது. வேளாண்மையுடன் தோட்டத்திலேயே மழைநீர் சேகரிப்புக்கான பண்ணைக் குட்டை, உயிர் உரங்கள், விருட்சாயுர்வேத முறையில் எலிகுணபம், ஈ எம் என்று கூறப்படும் திறமி நுண்ணுயிரிகள், மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி, பாரம்பரிய நெல் விதை வங்கி என்று தன் தோட்டத்தை இயற்கை உரத் தொழிற்சாலையாக மாற்றியுள்ளார்.

சித்தரின் சிறப்பு அம்சம் தன்னுடைய வேளாண் விளைபொருட்களை தானே சந்தைப்படுத்தும் வழியில் “லெகோ ஆர்கானிக்ஸ், மூலிகை இயற்கை மருத்துவப் பொருட்கள்,” என்ற பெயரில் அங்காடி நடத்தி வருகிறார். காய்கறி, கனிகள், தானிய மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணைகள், வெல்லம், சர்க்கரை எல்லாம் இவர் கடையில் உண்டு.

இயற்கை மருத்துவமும் செய்து வருகிறார். இயற்கை விவசாய பயிற்சி வழங்குகிறார். தஞ்சை – நாகை – திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை மெல்ல மெல்ல இயற்கைக்கு மாற்றும் வழியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

சத்தியமங்கலம் சுந்தரராம அய்யர்:

WP_20131115_002

இயற்கை கரும்புடன் சுந்தரராமன் – வேர்மண்ணில் உள்ள கரிமம் கவனிக்க

நம்மாழ்வார் அறிமுகமாவதற்கு முன்பே சுந்தரராமன் எனக்கு அறிமுகமாகி விட்டார். சுமார் 16 ஆண்டுகளாக அவரை நான் நன்கு அறிவேன். இயற்கை விவசாயத்தில் கடுமையான உழைப்பாளர். மாபெரும் சாதனையாளர். 1998ல் அவரை நான் சத்தியமங்கலத்தில் சந்தித்தபோது இயற்கையை நோக்கி மாறிவருவதாகக் குறிப்பிட்டார். சத்தியமங்கல விவசாயிகள் அவரை மிகவும் மரியாதையுடன், “சுந்தரராம அய்யர்” என்று அழைப்பதுண்டு.

நம்மாழ்வாரின் யோசனைகளைப் பெற்று அவர் முழுமையாக மாறியவர். அவர் பெற்ற பாடம் வித்தியாசமானது. எங்களுக்குள்ள உறவுகள் வித்தியாசமானவை. நானும் சுந்தரராமனும் எங்கள் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுண்டு. இயற்கை விவசாய அனுபவங்களில் சுந்தரராமன் சீனியர், நான் ஜூனியர்.

சத்தியமங்கலத்திலிருந்து புறப்பட்டு பண்ணாரியம்மன் கோவில் சாலை வழியே 2 கி.மீ. தொலைவில் கோப்புப்பள்ளம் என்ற இடத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அய்யரின் பண்ணை உள்ளது. கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம், மஞ்சள், தென்னையுடன் இணைந்த பல்வகை மரங்கள், மலைவேம்பு, காங்கேயம் பசுக்கள், சாண எரிவாயுக்கலன், மண்புழு உரப்படுகைகள், உயிரி உற்பத்தி அடுக்குகள், பஞ்சகவ்யம், பழக்காடி, மீன் குணபம், தேங்காய்ப் பால், மோர்க்கரைசல் எல்லாம் நம்மை வரவேற்கும்.

முன்னொரு காலத்தில் பசுமைப் புரட்சி மயக்கம் இவருக்கு இருந்தது. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் இவரது நிலத்தையே ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி இவருக்கு வகுப்பு நடத்தியது. புதிய விதைகள் முதலில் இவர் பண்ணையில் விதைக்கப்பட்டு உகந்த பேக்கேஜ் வழங்கப்பட்டது. இவ்வளவு ரசாயன உரம் போட வேண்டும், இவ்வளவு பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் என்பார்கள். இம்மியளவும் பிசகாமல் பல்கலைக்கழகம் கூறியதை அய்யர் அப்படியே கடைபிடித்ததோடு நிற்காமல் இந்தப் பாடத்தை இவரைச் சுற்றியுள்ள சுமார் 30, 40 விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுத்தாராம். ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் நிலத்தில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இது ஏன் என்று கேட்டால் சரியான பதில் வரவில்லை.

அப்போதுதான் சுந்தரராமன் சிந்திக்கத்  தொடங்கினார். நம்மாழ்வார், நாராயண ரெட்டி போன்றோர் எச்சரித்தவை எல்லாம் உண்மையே என்று உணர்ந்து நம்மாழ்வார் யோசனையின் பேரில் மண்ணில் ஏற்பட்டுள்ள நஞ்சை நீக்கி சமச்சீர் சத்தைப் பெற பலதானிய விதைப்பைச் செய்து வளர்ந்தவுடன் மடித்து உழுதலைச் செய்தார். மெல்ல மெல்ல சுயமாகவே இயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிகச் செலவு இல்லாமல் மண்வளத்தையும் பாதுகாத்து விளைச்சலையும் உயர்த்தி சாதனை புரிந்தவர் சுந்தரராமன்.

முன்பு எந்த அளவில் சிரத்தையுடன் வேளாண்மைத்துறை போதித்த பேக்கேஜை கடைபிடித்தாரோ அதே அளவு சிரத்தையுடன் இயற்கை வழி பேக்கேஜை உருவாக்கி சத்தியமங்கல விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்ந்து வருகிறார். மண்புழு உரம், நன்கு மக்கி வேப்பமிழந்த கோழி எரு, கம்போஸ்ட் அடி உரமிட்டு பலதானிய விதைப்பு செய்து 40 நாட்கள் கழித்து மடித்து உழுது, பூத்துக் காய்த்து அறுவடையாகும்வரை முறைப்படி பஞ்சகவ்யம், மீன்குணபம், பழக்காடி தெளிப்ப்பானில் தெளிக்கும் முன்பே பயிர்ப்பாதுகாப்பு முறையில் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தி வருகிறார்.

மண்ணில் உள்ள உவர்/ களர் பிரச்சினைகளைத் தீர்க்க ஆங்காங்கே இயற்கை நொதியல் தொட்டி கட்டி அதில் மண்புழு உரம், ஆட்டு உரம் ஆகியவற்றைச் சாக்கில் கட்டி உள்ளே இறக்கி மேலே எல்லாவிதமான பச்சை இலைகள், கெட்டுப் போன பழங்கள், பழக்காடி மண்டி ஆகியவற்றை இட்டு ஊறிய நீரை பாசன நீருடன் விட்டு உவர், களர் பிரச்சினையைத் தீர்த்து நல மகசூலுக்குத் திட்டமிடுகிறார்.

இயற்கை விவசாயத்தில் தான் பெற்ற வெற்றிக்கதையை மற்றவரும் பெற வேண்டுமென்று தான் துவங்கிய தமிழர் உழவர் தொழில்நுட்பக்கழகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களில் இரண்டு நாள் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையாக இவரது பயிலரங்கம் விளங்கி வருகிறது.

சத்தியமங்கலத்தில் இயற்கை விவசாயப் பயிற்சி அரங்குகளில் மண்வளம் பற்றியும் இடுபொருட்கள் பற்றியும் உரைகள் நிகழ்வதுடன் தன் பண்ணையுடன் தான் உருவாக்கிய மற்ற இயற்கை பண்ணைகளையும் பார்வையிட நேரம் ஒதுக்கியுள்ளார்.

தஞ்சை மண்ணைச் சுற்றி மாரியம்மன் கோவில் சித்தரும் கோவை, ஈரோடு மண்ணைச் சுற்றி சத்தியமங்கலம் சுந்தரராம அய்யரும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் தடம் பதிய வைத்துள்ளார்கள். அவர்களது தொண்டினை வாழ்த்தி அடுத்த இதழில் புளியங்குடியை நோக்கி ஒரு புனிதப் பயணத்தை மேற்கொள்வோம்.

குறிப்பு:

கோ. சித்தர் தொடர்பு எண்: 94431 39788 / 04362 – 239788
எஸ். ஆர். சுந்தரராமன் தொடர்பு எண் : 98427 24778 / 04295 – 225047

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.