இணைய உரையாடல் – ஆண்பார்வை

தேவந்தி:

பார்க்க டீஸண்டா படித்தவர்  போல இருக்கற ஆண்கள்கூட ஏன் பொது இடங்களில் பெண்களை முறைத்துப் பார்க்கிறார்கள்? இப்படிப்பட்ட நேரங்களில் தம்மோட வயசு, பொசிஷன் எல்லாம்கூட அவங்களுக்கு மறந்து போய்விடுகிறது.

சிக்கி:

இது சகஜம்தான். பெண்களை முறைத்துப் பார்க்காத ஆண்கள் அனேகமாய் நம்மூரில் இருக்க மாட்டார்கள். பதினைந்து, பதினாறு வருடங்களுக்கு முன் என் தோழி முதல் முறையாக வெளிநாடு போனார் – சிங்கப்பூர். ஒன்றரை மாதங்கள்தான். வழக்கமான சிங்கைப் புராணங்களுக்கு மத்தியில் ஒன்று சொன்னார். அங்கிருக்கும் போது ப்ரீயாக, இலகுவாக உணர்ந்தேன், ஏனெனில் யாரும் வெறித்து பார்ப்பதில்லை  எனவே உடை மற்றும் மற்ற விஷயங்களில். எனவே சந்தோஷமாக உணர்ந்தேன் என்றார்.

நாங்கள் எல்லாரும் அவரை ஓட்டினோம் – கணவர், குழந்தை, மாமியார் இல்லாத இடம் அப்படி நன்றாகத்தான் இருக்கும் என்று.

பின், எனக்கு திருமணமாகி, இங்கிலாந்து வந்தபோது என் மனைவியும் இப்படியே சொன்னபோதும் கிண்டலாகத்தான் தோன்றியது – வெள்ளைக்காரர்களுக்கு உங்க மூஞ்சியெல்லாம் பிடிக்காது, he would ignore எனவே ப்ரீயாக இருங்க பெண்களா என்று.

அப்புறம் ஸ்வீடனில் அணியில் இருந்த logica பெண், சமீபத்தில் நண்பரின் மனைவி – எல்லாருமே இந்த தொனியில் சொன்னார்கள், வெவ்வேறு சந்தர்ப்பத்தில்.

சமீபத்திய இந்திய பயணத்தில் மனைவியின் அக்கா பெண் பதினான்கு வயதுதான் இருக்கும் – அவள் பள்ளிக்கும் ட்யுஷனுக்கும் போகும் போது படும் பாட்டை கேட்டபின், மற்றும் கூட வெளியே செல்லும் போது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்கள் பார்வையில்…பகீரென்றது…

தேவந்தி:

சட்டத்தில் இதற்கு தண்டனை இருக்கிறதோ இல்லையோ ஒரு பெண் சங்கடப்படும்படி அவளை வெறித்துப் பார்ப்பதும் ஒரு வகை பாலியல் தொல்லைதான்.

காரொளிவண்ணன்:

பார்ப்பது இயல்பு. மனம் உருவாக்கிய மர்மத்தால் எத்தனை முறை, எத்தனை விதம், எத்தனை பார்த்தலும் போதவில்லை.தவிர தீராத ஆசை. எனவே பார்ப்பது நடக்கிறது. அப்பார்வை பார்க்கப் படுபவரை சங்கடப் படுத்தினால் நிறுத்திவிடுவதுதான் நற்றன்மை. இந்த நற்றன்மையால்தான் உலகம் இயங்குகிறது. ‘நான் அப்படித்தான் பார்ப்பேன், உன்னால் என்ன செய்ய முடியும்’ என்பது வன்முறை. இது வெளிப்படை. ஒருவர் காலை மிதித்து விடுகிறார். மிதிபடுபவர் ‘ஐயோ’ என்கையில் காலை எடுத்து வருந்துபவரே நற்றன்மையுடையவர். நாகரிகம், கலாச்சாரம் எல்லாம் இதிலிருந்துதான் வருகிறது. ‘அப்படித்தான் மிதிப்பேன் போய்யா’ என்பது வன்முறை.

பார்க்கப்படுபவரின் சங்கடத்தையும் மீறி வெறிப்பது என்பது இதர நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்கிறது. பெண்ணுடலை சதா சர்வ காலமும் முகத்தில் எறிந்து கொண்டேயிருக்கும் பத்திரிகை, டி.வி., சினிமா ஊடகங்கள் இந்த தீக்கு எண்ணை வார்க்கின்றன. வன்புணர்ச்சி இதன் ஓர் எல்லை.

Style: "Mad Men"

பேராசிரியர் கேசவன்:

மற்றவர்கள் எப்படியோ. ஆனால் இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், ஒரு அளவில் இலக்கியம் போன்ற நுண்கலைகளில் சௌந்தர்ய உபாசனை என்பது அடிப்படைக் குணம். அதில் பற்பல தன்மைகள் காணக் கிட்டும். கலைகளில் நல்ல நுட்பமும், பரந்த வெளிப்பாடும் வேண்டுமென்றால் ‘ஒழுக்க’ அரண்களைத் தாண்டிப் போக முடிய வேண்டும். அவற்றைக் கலைஞரே பழக வேண்டும் என்று பொருளில்லை. ஆனால் பரந்த சமுதாயத்தில் இப்படி அரண்கள் இருப்பதையும் விவரிக்கத் தெரிய வேண்டும். அரண்களுக்கு இரு புறமும் எத்தனை விலகல்கள், ஒட்டுதல்கள் இருக்கின்றன என்றும் அறியத் திறமையும், சாதுரியமான அலசலும் வேண்டும்.

களவும் கற்று, மற என்று சொல்லப்படுவது இந்த நோக்கில்தான். அமைதியும், அடக்கமும் இருக்க வேண்டிய பிக்குகள் உலகின் அசாதாரண துவந்த யுத்தக் கலைகளைக் கற்று, போதிக்கத் துவங்கியதும் தற்காப்புக்கு என்பதோடு, அக்கலைகள் உடலைக் கட்டுப்படுத்தி மனோபலத்துக்கு அடிமையாக்க உதவின என்பதும்தான்.

சிக்கி:

என் நண்பர் அற்புதமான பரதநாட்டியக் கலைஞர்..கல்யாணத்துப்பின்னும் தொடர்கிறாள். கன்னியாஸ்திரியாக முயற்சித்து, அங்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிடச் சொல்கிறார்கள் என வெளியேறிவிட்டாள்.  நான் முதலில் நாட்டியக்கலைஞர் – மாத்திரைகள் சாப்பிட்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால் எப்படி சரியாவரும் எனச் சொன்னாள். நான் கல்லூரி படித்த நாட்களில் புதுச்சேரியில் ஒரு பெண் இப்படி பப்ளிக்காகப் பேசியது ஆச்சர்யம் தான்..

ரசவாதி:

தி.ஜா, உயிர்த்தேன் என்று ஒரு நாவல் எழுதினார். இதில் நேரடியாகவே சௌந்தர்ய உபாசனைதான் கதையின் மையம். ஆனால் சௌந்தரியான பெண்ணோ ‘ஆதிக்க’ ஜாதியைச் சேராத உழைப்பு ஜாதியினள் என்பதோடு அல்லாமல் அவளே தன்னை வேலைக்கமர்த்தும் குடும்பத்தையே நேர்ப்படுத்துகிறாள். பின் கிராமத்தையே நேர்ப்படுத்துகிறாள். சக்தி- சௌந்தரியை, வலியவள், மேலும் செயல் திறமையும், நோயாற்றும் ஔஷதமும் ஆகக் கூடியவள் என்று இன்னமும் மரபுக்குள் வரம்புடைத்தலையே செய்து கொண்டிருக்கிறார். அதற்குள்ளும் நிறைய சுதந்திரம் இருப்பது அவருக்குப் புலப்படுகிறது. அதைப் பயன்படுத்த போர் மனோபாவமில்லை, கருணையும், மாபெரும் அன்பும் தேவை என்பது அவருடைய மையக் கருத்து.

மரப்பசுவோ பாடகர் ஒருத்தர் ஒரு இளம்பெண்ணைக் கவர்வதில் துவங்குகிறது. இந்தப் பிரச்சினையை தி.ஜா மறுபடி மறுபடி எழுதி இருக்கிறார். மலர் மஞ்சத்தில் நடனத்தில் கவனம் கொண்ட பெண்ணை அதில் அத்தனை ஈடுபாடற்ற இரு ஆண்கள் விரும்புகிறார்கள். உடல் என்பது என்ன அழியக் கூடிய ஒன்றுதானே, அதைப் பார்த்து ஏன் அத்தனை மயக்கம் என்று யமுனா கேட்பதற்குப் பாபுவிடம் பதில் இல்லை. ஆனால் அவன் தன் இசைக்காக விட்டு விலகிப் பல வருடம் அஞ்ஞாத வாசம் போகத் தயாராக இருக்கிறான். அதற்கும் யமுனாதான் தூண்டுகோல்.

ஆனால் நாவலில் பெண்கள் இன்னமும் ஆண்களுக்குக் கிரியா ஊக்கிகளாக வந்து போகிறார்கள். மரப்பசுவில் பெண் கிரியா ஊக்கியாகச் சிறிது இருந்து விட்டுப் பின் தானே நாயகி ஆகிறபோது அவளுக்குக் கிரியா ஊக்கியாக ஒரு இளைஞன் வந்து சேர்கிறான்.

காரொளிவண்னன்:

மனம் எல்லா விஷயங்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டு விடும். பின் ஆளும். தன்னிஷ்டத்துக்கு மாற்றி விடும். கடவுள் மதமான மாதிரி. காமம் தீயாகிவிட்டது.

” I think, therefore I am ” என்பது சிந்தனையின் பெருமையைக் குறிப்பதாக இருக்கலாம். என் கவனிப்பில் ‘நான்’ என்பது ஒரு எண்ணம். எண்ணுவதால்தான் ‘நான்’ இருக்கிறேன். எண்ணாதபோது ‘நான்’ இல்லை; எண்ணாதபோது என்னோடு என் கவலை, பயம், வன்முறை – என் மரணமும் கூட – இல்லை.

எண்ண்த்தின், அதாவது மனதின் அபாரத் திறனால் காமம் சர்வ வியாபியாகி விட்டது.

இயல்பாகவே ஒருவருக்குள் இருக்கும் உந்துதல். ஹார்மோன்களின் தாக்கம். சமூகம் பொத்திப் பொத்தியும், போற்றிப் போற்றியும்  வளர்த்த இமயமளாவிய தீ. இது எப்போதும் உள்ளது.

இதன் பயங்கர சக்தி காரணமாகத்தான் பிரம்மசாரிகள் (உண்மையை நாடியவர்கள்) உணவு, செக்ஸ் ஆகிய இரு விஷயங்களிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வலியுறுத்தப் பட்டார்கள். விரதம் இருப்பவர்களும். மனதின் மிருக பலத்தை பன்மடங்கு பெருக்குபவை இவ்விரு ஆதாரத் தேவைகளும் .

மனித குலத் தோற்றம் பற்றி எனக்கு சில பார்வைகள் உண்டு. முதலில் பெண். பின்னர் தன் இன நீட்டிப்புக்காக அவள் உருவாக்கிய வெளிக் கருவியான ஆண். அந்த ஆண்  ஃப்ரான்கன்ஸ்டீன் மாதிரி, பஸ்மாசுரன் மாதிரி பெண்ணை அடக்கி, அடிமையாக்கித் தன் காலடியில் போட்டுக் கொண்டுவிட்ட கதை.

இதற்கு நேராக முதலில் தோன்றிய ஆண். அவன் இனத்தின் நீட்டிப்புக்காக அவன் விந்தைச் சுமந்து விருத்தி செய்ய அவனால் உருவான பெண். தன் சிருஷ்டி என்பதால் அவனுக்கு அவள் மேல் தீராத காமம்.

இவை அறிவியல் அடிப்படையிலான ஆய்வால் விளைந்தவை அல்ல. எது எப்படியோ கட்டற்ற சுதந்திரத்தில் ஆண்கள்; கருவுறல், பிள்ளைப் பேறு போன்ற பொறுப்புகளாலும், இயற்கையான படைப்பிலேயே ஒப்பீட்டில் பலஹீனமானவர்களாக உள்ள பெண்கள். இது நிதர்சனம்.

அப்படியென்றால் எல்லா ஆண்களும் ‘ரேபிஸ்ட்’களாக சுற்றித் திரிந்து கொண்டிருக்க வேண்டியதுதானே. அப்படியில்லாமல் போகவும் மனிதரின் அறிவு, விசாரம், பார்வை போன்றவை உதவியுள்ளன.

ஆக 20,40,60,80 என்கிற வயது வரம்புகளுக்குள் சிக்காமல் இந்த உந்துதல் இயல்பாகவோ, மனது படுத்தும் பாடாகவோ இருந்து கொண்டே இருக்கிறது. பயிற்சிகள் தேவைப்படாத, சொல்லித் தெரிவதாக இல்லாத இயற்கை என்பதால் இது எங்கும் செல்லுபடியாகிறது.

பேராசிரியர் கேசவன்:

இந்த உடலுறவுப் பிரச்சினை ஏதோ தமிழகத்தில், இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. (காந்தி இதில் சிக்கித் திண்டாடினார் என்பதையும் நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.) ஃப்ரான்ஸில் சமகாலத்தில் கூட இந்தப் பிரச்சினை இன்னமும் இருக்கிறது. இதோ ஒரு எழுத்தாளர், Elle என்கிற சஞ்சிகையின் பதிப்பாசிரியர் சமீபத்தில் எழுதிய கதைத் தொகுப்பு பற்றிய கட்டுரை இங்கே.

http://www.telegraph.co.uk/women/10216298/Why-is-it-so-shocking-not-to-have-a-sex-life.html.

தி.ஜாவோ, நா.பாவோ, நபகோவோ, அப்டைக்கோ கதைகள் எழுதுகையில் பெண்களின் உடலைப் பற்றி விலாவாரியாக வருணிக்கிறார்கள். அவர்களெல்லாம் நிச்சயம் 40 வயதுக்கு மேற்பட்ட போதும் இப்படி எல்லாம் எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள். 40 வயதைத் தாண்டியிருக்கும் இன்றைய எழுத்தாளர்களில் சிலரும் இன்னும் உடலையும், உடலுறவையும் வெளிப்படையாக்த்தான் வருணித்து எழுதுகிறார்கள். அதெல்லாம் எங்கிருந்து கிட்டுகிற தகவல்கள், சும்மா மனதில் சுற்றுகிற பஞ்சு மிட்டாயா? இல்லை வெளிப்புறத் தகவல்கள் உள்ளே சேர்ந்து பல அகச் சாய்வுகளோடு கலந்து கிட்டுவனதான் வருணனையாக வெளிப்படுகின்றன.

படைப்பாளிகள் கலையில் ஊறுபவர்கள், இப்படி வரம்பு தாண்டித்தான் யோசிப்பார்கள்.. வரம்பு மீறுதல் என்பது வாழ்வில் எப்போதும் நடப்பது, அதுவும் கலைகள் இதைத் தம்முள் அடக்கியிருக்கின்றன என்பது வாதம். கலை என்பது வாழ்வின் ஆடி என்று நாம் கொள்ள முடியாது. ஏனெனில் தத்ரூபமாகச் சித்திரிப்பது கலை ஆகாது. இதையே போர்க்கெஸ் (அவருக்கு முன்பு சில யூரோப்பிய சிந்தனையாளர்) ஒரு கேலிச் சித்திரமாகவும், அதே நேரம் நல்ல முன்னோடியாகவும் கதையில் எழுதிச் சென்றிருக்கிறார்.

http://www.edwardwinkleman.com/2006/05/all-art-is-caricature.html
Courtesy :http://www.edwardwinkleman.com/2006/05/all-art-is-caricature.html

தேவந்தி:

இயல்பாகவே நம் சமூகத்தில் உள்ள உடலுறவு பற்றிய இறுக்கங்களும், மனக்கட்டுப்பாடுகளும் இதற்குக் காரணமாகவும் இருக்கலாம். நடப்பில் சொல்ல முடியாததை எழுத்தில் கொண்டுவருகிறர்களோ?

அகி:

பெரும்பாலும், இலட்சியவாதங்களெல்லாம் இளமையில்மட்டும் வசீகரமாக இருக்கிறதோ என்னமோ. வயதாக ஆக அவற்றை ஒரு பாவனையாக, ஒரு கவசமாக பலர் மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். வார்த்தைகளுடன் நின்றுவிடும். என் நண்பர் ஒருமுறை சொன்னார் பாரதியை அடிக்கடி மேற்கோள் காட்டறவனெல்லாம் ஆயோக்கியன் என்று. நடுவயது, அரசு வேலை பார்க்கும் பெண். மிகவும் தெளிவான தைரியமான பெண். அவர் சொல்லும்போது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

தமிழ் எழுத்துக்களில் நிறையவே ஆண் பார்வை பரவியிருக்கிறதோ? பெண்களை ஒரு தொன்மத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது இன்னொரு கோடியில் கேலிச்சித்திரமாகவோ சுருக்கிவிடுகிறார்கள். மரப்பசு நாவல் படிக்கும்போது இது ஒரு ஆணால் பெண்ணைப் பற்றி எழுதப்பட்டது என்று அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. (தி.ஜா-வின் மற்ற நாவல்களைப் படித்ததில்லை). ஆனால், கி.ரா-வோ ஜெயகாந்தனோ எழுதும்போது நிஜமாகவே இது ஒரு ஆணால் எழுதப்பட்டதா என்று வியப்பாகவே இருக்கிறது.

ரசவாதி:

தமிழ் எழுத்துகளில் மட்டுமா? அகில இந்திய எழுத்திலும்தான். ஏன் உலக எழுத்தில் கூடத்தான். இப்போதுதான் உலக அளவில் பெண்கள் நிறைய எழுதவும், அவர்களின் புத்தகங்களுக்கு அங்கீகாரம் கிட்டுவதும், அவர்கள் தம் பார்வையைக் கவனமாக இரு பாலருக்குமானதாக மாற்றி வருவதும் நடக்கின்றன.

ஆண் பாலரின் objectifying’ பார்வை என்பது இயல்பானது. அவர்களில் பலரும் தம் பார்வை சென்று சேரும் பெண்களை அறியாதவர்கள், அல்லது அறிய மாட்டாதவர்கள்.

தவிர பெண்களின் பண்பாட்டுக் கட்டமைப்பு என்று ஒன்று இருக்கிறது.

[இதுதான் ஆண்களை அனேக நேரம் ‘clean bowled’ and out என்று ஆக்குகிறது. ஏனெனில் அவர்கள் அதனுள் வளர்க்கப்படுவதில்லை. பிள்ளைப் பிராயத்தில் அதனுள் கொஞ்ச வருடங்கள் இருக்கிறார்கள், ஆனால் சிறுகச் சிறுக அதிலிருந்து அகற்றப்படுகிறார்கள். இதில் ஹார்மோனல் சுரப்புக்கு ஏற்ப, அவர்கள் அகன்று போவதைக் கூடதிகமாகத் தாமே செய்து கொள்வார்கள், அல்லது சிறுகச் சிறுக.

விளைவு என்னவோ, பதின்ம வயதுக்குள் அவர்களுக்குப் பெண் பாலரின் உலகம் என்பது இன்னொரு துருவம் என்பது போலவே தோன்றத் துவங்குகிறது. மறுபடி அந்தத் துருவத்தின் சில அம்சங்களை அவர்கள் வசீகரமாகப் பார்க்கத் துவங்குகையில் அதுவும் சுரப்புநீரின் விளையாட்டு என்று வைத்துக் கொண்டாலும், அங்கு கொஞ்சம் புரிந்து கொள்ளாத, ‘rational action’ என்பதும் செயல்படுகிறது. புரிந்து கொள்ளாத ‘rational action’ என்று ஒன்று இருக்க முடியுமா என்றால் முடியும். அதை நாம் உள்ளுணர்வால் செலுத்தப்படும் அறிவுக்கேற்ற செயல் என்று புரிந்து கொள்ளலாம். அதாவது the rationality in the action is more visible to the onlooker than the agent of the action. That rationality or the logic of the action and its consequences – the relationship between action and consequence as reasonable- will dawn on the agent himself/ herself later on. ]

twitter-512விதூஷகன்:

ஆண் பார்வை என்பதைத் தவிர்க்க இயலாது. அது evil என்று பார்ப்பது இருபாலாகப் பிரிந்து இனப்பெருக்கத்திலிருந்து, romance, relationship, alternate ways of looking at reality என்று பல காரணங்களால் வாழ்வைச் செழுமையாக்கியுள்ள ஒரு நிலையை மோசமாகப் பார்க்கும் தவறு என்றுதான் சொல்வேன். ஆண் ஆதிக்கப் பார்வை என்பதை ஆண் பார்வை என்பதோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று என் கருத்து.

Adam and Eve

அகி:

ஆண் பார்வை என்பதை ஆண் ஆதிக்கப் பார்வை என்று சொல்ல வரவில்லை. ‘male gaze’ என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு பல கலாசார காரணிகள் இருக்கின்றன. ஆனால், இதுவே மீண்டும் சில கலாசார போக்குகளுக்கு வழிவகுக்கலாம். அதாவது, இதுபோன்ற எழுத்துக்களும் சினிமாக்களுமே அதிகம் வரும் பட்சத்தில், இதைப் பார்க்கும் பல பெண்களும் தங்கள் சுய அடையாளத்தை அதனுடனேயே அதிகம் ஒப்பிட்டு பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு ஆணின் பார்வையைத் தம்முடையதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது மாறவேண்டுமென்றால், பெண்களின் பார்வையும் எழுத்திலும் பிற கலைகளிலும் அதிகம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்களைப் பற்றி பெண்கள் எழுதும்போதும் இது போன்ற வரையறைகளுக்கு உட்பட்டே எழுதுவார்கள் என்றாலும், அவர்கள் பார்வை அதிகம் சொல்லப்படாதது, ஒரு சமமின்மையை உருவாக்குகிறது.

பேராசிரியர் கேசவன்:

பெண்ணியர்கள் இந்தப் பண்பாட்டுக் கட்டமைப்பு என்பதை மாற்றி அமைப்பதன் மூலம், தம் ‘விடுதலை’க்கு ஏற்றfeminism-1 வகையில் மறு உருவாக்கம் செய்வதன் மூலம் பெண்களைத் தனிக்குழுவாக்கும் பாதையிலிருந்து பிரிந்து பால் வேறுபாடற்ற ஒரு உலகு, பாதை, பண்பாட்டில் கொண்டு நிறுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அப்படி ஒரு முயற்சி உடோப்பிய முயற்சி. இதுவும் அறிவொளி யுகம் என்று யூரோப்பில் துவங்கிய ஒரு பண்பாட்டியக்கத்தின் விளைவுதான். இது யூரோப்பிலேயே இன்னும் அரைப் பகுதி கூட நிறைவேறவில்லை. ஆனால் ஒரு சிறு அளவு, சுமார் 20% என்று வைக்கலாம் நிறைவேறி இருக்கலாம். அது கூட ஆண்களால் தடுக்கப்பட்டதால், அல்லது முறியடிக்கப்பட்டதால் குறைந்த அளவு உள்ளது என்று நம்புவதை விட, பெருவாரிப் பெண்களே இந்த முயற்சியில் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை என்பதால் இருக்கலாம் என்றே நம்ப வாய்ப்பு அதிகம். அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிலோ ஒரு கணிசமான அளவு பெண்களின் குழுக்கள் இந்த சிந்தனையை வலுவாக எதிர்த்து நிற்கின்றனர். [கருக்கலைப்புரிமையைப் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் இயக்கங்களை ஆண்கள் முன்னின்று நடத்தினாலும், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், நடுவயதுப் பெண்கள், பாட்டிமார் என்று பல தலைமுறைப் பெண்கள் தென் மாநிலங்களெங்கும் கிருஸ்தவக் குடையில் கீழ் திரண்டு கருக்கலைப்பு மருத்துவ மனைகளையும், மாநிலச் சட்ட மன்றங்களையும், நீதிமன்றங்களையும் முற்றுகை இடுகின்றனர். நாடு பூராவும் இத்தகைய குழுக்கள் இருப்பதோடு, இவர்களே பல மாநிலங்களில் பெரும் சக்தியாக வாக்களித்து வலது சாரியில் சில மோசமான மூடர்களுக்கு மக்கள் மன்றங்களில் பெரும்பான்மை நிலையை உருவாக்கி இருக்கின்றனர்.]

மிக மிக உச்ச கட்ட பெண் அதிகாரப் பகிர்வு என்று சொன்னால் சில ஸ்காண்டிநேவிய நாடுகளில் மூன்றில் ஒரு இடம் போல மக்கள் மன்றங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே ஒவ்வொரு தேர்தலிலும் மாறி விடுமோ, குறையுமோ என்று அச்சப்பட வேண்டி இருக்கிறது. நிர்வாகம், மேலாட்சி, அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் பெண்கள் இன்னுமே ஐந்தில் ஒரு பங்கு கூட வாய்ப்புப் பெறவில்லை.

இதற்கு வேறு ஏதோ அணுகல் தேவைப்படுகிறது. அது பால் அடையாளங்களை மறுத்த, அழித்த உலகை உருவாக்குவது என்ற பொய்த்தேவைத் துரத்துவதை விட வேறு, எதார்த்தத்தை அங்கீகரித்து, அதை மேம்பட்ட நிலைக்கு நகர்த்துவதன் மூலம் சாதிக்க முடியுமா என்று பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பெண்கள் தமக்குள் கலந்தாலோசித்து சில வகைத் திட்டங்களை முன்கொணர வேண்டும் என்பது நல்ல முறை என்றாலும், மாற்றுப் பாலருடன் கலந்து பேசியே செயல்படுத்த முற்பட வேண்டும். அப்போது அவை நிறைவேற வாய்ப்பு கூடுதல்.

twitter-512விதூஷகன்:

சில நாட்களுக்கு முன்  நியுயார்க் டைம்ஸ் முதல் பக்க மையப் படமாக இப்படி ஒரு வழக்கை ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டி இருப்பதைச் சொல்லிப் பிரசுரித்திருக்கிறார்கள்http://www.nytimes.com/2013/10/24/us/case-explores-rights-of-fetus-versus-mother.html?_r=0&hp=&adxnnl=1&adxnnlx=1382617008-aricIsDijhxXl5yoVRbOiw

பேராசிரியர் கேசவன்:

என் நண்பர் ஒரு ஆஃப்ரிக்க அமெரிக்க இளைஞர் 1994 இலேயே இப்படி ஒரு ஆபத்து அமெரிக்கப் பெண்களை நோக்கி எழப் போகிறது என்ற கருத்தில் தன் பெண்ணியம் பற்றிய வகுப்புக்கான இறுதிக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதையே தன் முனைவர் பட்ட ஆய்வுக்கான தலைப்பாகவும் தேர்ந்தெடுத்திருந்தார். அது இன்று நிஜமான ஆபத்தாக தென் மாநிலங்களெங்கும் பரவி இருப்பதோடு, அமெரிக்காவில் இதர மாநிலங்களுக்கும் பரவுகிறது.

கூடிய சீக்கிரமே அமெரிக்காவில் எங்குமே பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை இராது என்பதோடு, தற்செயல் கருக் கலைப்பு நிகழ்ந்தாலோ, அல்லது உடல்நலமின்மையால் கருக்கலைப்பு நேர்ந்தாலோ பெண்களுக்கெதிராகக் குற்றப்பத்திரிகை எழுதப்படுவதோடு அவர்கள் சிறைத் தண்டனையும் பெற நேரிடலாம் என்பது ஒரு பேராபத்து. இதோடு மேற்படி 28 மாநிலங்களில் இலவச மருத்துவக் காப்பீடு அல்லது மலிவு விலை மருத்துவக் காப்பீடு ஏழைபாழைகளுக்குக் கிட்டக் கூடாது என்று வெள்ளை இனவெறியர்களும், மேல் தட்டு மனிதர்களும், கிருஸ்தவத் தீவிர வாதிகளும் பெரும் இயக்கம் ஒன்றை நடத்தி அம்மாநிலங்களில் மைய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதை ஒரு குற்றச் செயலாகக் கருதும் தீர்மானங்களைக் கூட மாநில மக்கள் மன்றங்களில் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த அளவுக்குக் கருப்பர் ஒருவர் தம்மை ஆள்வதா என்ற இனவெறியில் எழும் எதிர்ப்புப் பார்வை அங்கு ஊடுருவி இருக்கிறது.

இந்த நாடு மனித உரிமைகளைக் காப்பது பற்றி உலக நாடுகளுக்குப் புத்திமதி சொல்கிறது என்பதைப் போல அபத்தம், அற்பத்தனம் ஏதும் உண்டா?

பெண்கள் முழு விழிப்புணர்வோடு ஒன்று கூடித் தம் உரிமைகளைக் காக்கத் தவறினால் முட்டாள் பெண்களும், வெறியரான ஆண்களுமாகச் சேர்ந்து அவர்களை அடிமைகளாக்கி விடத் துடிப்பார்கள் என்பதற்கு அமெரிக்காவின் இன்றைய அரசியல் ஒரு நிரூபணம்.

தேவந்தி:

பெண் அவளது உரிமைகள் பற்றிய விஷயங்களில் உலகம் முழுவதிலும் ஒரு ஹிப்பாக்கிரஸி இருக்கிறது. பெண்களுக்கிடையேயே ஒரு குழப்பமும் இருக்கிறது.

காரொளிவண்ணன்:

தங்கள் கவர்ச்சியை பயன் படுத்திக் கொள்ளும் பெண்களை நான் அலுவலகத்திலும், பிற இடங்களிலும் சந்தித்து இருக்கிறேன். எங்கள் கல்லூரியில் வேதியியலில் முனைவர் பட்டம் வாங்கிய ஒரு பெண் இது குறித்து கூறுகையில் “ஆண்கள் தங்கள் உடல் வலுவை எல்லா இடங்களிலும் உபயோகப் படுத்திக் கொள்ளும்போது பெண்கள் தம் இனக் கவர்ச்சியை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?”

“நீ பார்ப்பதால்தானே அவன் உன்னை வெறிக்கிறான் என்பது தெரிகிறது?” என்று என் சக ஊழியை இன்னொரு ஊழியையின் புகருக்குப் பதிலாகக் கூறினார். இது பழமை வாதமா? உண்மையா?

இந்த உலகம் எல்லோருக்குமானது, இதில் பிரிவினை செய்பவர் பொய்யை உயர்த்துபவர் ஆகியோரைத் தவித்தால் விடிவு உண்டு.

தன் தாயை வணங்கும், சகோதரிக்காக சர்வபரித் தியாகம் செய்யும் கதாநாயகன் நாயகியை மட்டும் கேலி செய்வதும், ஆடை விலக்கி ஆடியன்ஸுக்குக் காட்டுவதும் என்ன லாஜிக்?

வெகுஜனப் பத்திரிக்கைகள்  வெளியிடுகிற பல கதைகள் ‘ரிமோட் மாஸ்டர்பேஷன்’ அல்லாமல் வேறென்ன? இவர்கள்தானே பெண்கள் மீது கட்டவிழ்கப்பட்ட வன்முறையை அவ்வப்போது உரக்கக் கண்டிக்கிறர்கள். அதை எப்படி நம்ப முடியும்? எவ்வளவு அரசியல் கட்சிகள் பெண்கள் மீதான உரிமை கோரல் காரணமாக உருவாகியுள்ளன? பிரிந்துள்ளன? எவ்வளவு அரசுகள் கவிழ்ந்துள்ளன?, அரசர்கள் மாண்டுள்ளனர்? யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன? ஆநிரை கவர்தல் போல் பெண்டிரைக் கவர்வதும் யுத்த தர்மாகத்தானே உள்ளது?

twitter-512விதூஷகன்:

பெண்களின் விடுதலையிலேயே உலகின் விடுதலை இருக்கிறது. இதற்கு சரியான கல்வியும், பொறுப்பான ஊடகங்களும், ஞானிகளாலான அரசுகளும் வேண்டும். நடக்க முடியுமா?

மற்றவர்கள் இணையத்திலிருந்து கலைந்துபோனபின்னும் பேராசிரியர் கேசவன் தன் சிந்தனைகளை பதிவுசெய்கிறார்:

பெண்களின் மனோநிலைகள், சமூக நிலைகள்,  பெண்ணியம் என்ற கருத்தியலால் ஏற்பட்ட மாறுதல்கள், பாதிப்புகள் போன்றவற்றைப் பற்றி உரையாடினோம்.  இலக்கியத்தில் மட்டுமல்லாது அன்றாட வாழ்விலும் ’ஆண் பார்வை’ என்பது என்னவொரு உபாதை, அது கரிப் பிசின் போல எல்லாவற்றையும் குறைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து பற்றியும் பேசி இருக்கிறோம்.

ஆண் பார்வை என்பது குறித்துச் சிறிது கூடுதலாக இங்கு நோக்கியிருக்கிறோம். இதைத் தொடருமுன் கருத்தியல் என்பதன் தன்மை பற்றி நோக்குவோம்.

சுத்தி எடுத்தவனுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் ஆணிதான் தெரியுமாம். எந்த ஒரு கருத்தியலும் அதைத்தான் நமக்குச் செய்கிறது. உலகைக் குறித்த ஒரு பார்வை கருத்தியலாக வனைத்துக் கட்டப்படும்போது, உள்ளுணர்வுகள், அனுபவங்கள், எதிர்பார்ப்புகள், வரலாற்றுப் படிப்பினைகள் என்ற பலவும் அந்தக் கட்டில் சேர்கின்றன. எல்லாமே அதில் அலசி அறிந்து சேர்க்கப்படுவதில்லை. எதிர்பார்ப்புகளை என்ன விதத்தில் அலசி அறிய முடியும்? அலசலாம், அறிவது கடினம். ஆக அனேக மனிதச் செயல்கள் போல கருத்தியல் கட்டுகளும் அறிந்த துலக்கமும், அறியாத ஊகங்களுமாகவே பின்னிக் கிட்டுவன.

கருத்தியல் என்பது பொதுப் பார்வையாக இருக்கும் வரை அதற்கொரு புறத்தன்மை இருக்கிறது. அதையே நம்முடையதாக்கிக் கொண்டு மொத்த உலகை அதன் வழியே நோக்குவதே நம் கடமை என்று நினைத்து நம்மையே ஒரு கருத்தியல் சல்லடையாக ஆக்குவோமானால், நமக்கும், சமூகத்துக்கும் அதனால் பின்னடைவுதான் நேரும். கருத்தியல் கண்ணாடியின் சாயம் எதையும் நிறம் மாற்றிக் காட்டுகிறது.  நாம் எதார்த்தத்திலிருந்து படிப்படியே விலகிச் செல்லத் தலைப்படுகிறோம்.

gender

சில சமயம் இப்படிப்பட்ட சல்லடை புத்தி, அல்லது குழாய் வழியே உலகை நோக்கும் விருப்பு பயனுள்ளதாக அமையலாம். புதிதாக இயற்பியலையோ, புவியியலையோ கற்றுக் கொள்ளும் ஒரு இளம்பருவத்தினருக்கு அதற்குப் பின் சில மாதங்களாவது எதையும் இயற்பியல் வழியே அல்லது புவியியல் வழியே அணுகுவது என்பது ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருக்கும். இவை ஓரளவு அறிவியலான வழி முறைகள் என்பதால் இவற்றைச் சுட்டினோம். இதே சாய்வு, மனத் தேர்வு, பார்வைத் தத்தெடுப்பு என்பன அரசியல் கண்ணோட்டமாக, பண்பாட்டு அடிச்சுவடுகளாக உருவாக்கும் ஒரு கருத்தியலில் சென்று சிக்கினால், அப்போது அறிவியல் என்பதை அதில் சல்லடை போட்டுத்தான் தேட வேண்டி இருக்கும். கிட்டினால் அதுவே ஒரு சிறு அதிசய ஜாலம் என்றிருக்கும்.

அதனால் கருத்தியல் என்பதே கூடாதென்றில்லை, எப்போது அதைப் பயன்படுத்த வேண்டும், எங்கே கை விட வேண்டும் என்றறிவதில்தான் சூட்சுமம் இருக்கிறது. புலப்படுத்தச் சில நேரம், பலப்படுத்தச் சில நேரம், அம்பலப்படுத்த சில நேரம் என்று கருத்தியல் அதிகாரத் தேட்டைக்கும் பயன்படும்; மாறாக அதிகாரப் பகிர்வில் சரி பங்கைக் கேட்கவும் பயன்படும்; பொதுவில் அனைவரையும்  நெறிப்படுத்தவும், வளர்பாதையைக் காணவும் கூடப் பயன்படும்.

சுத்தியலைத் தக்க இடத்தில் பயன்படுத்தாமல் இருப்பிடங்களையோ, பாலங்களையோ, பாதைகளையோ, ஏன் மனித நாகரீகத்தையே கூடக் கட்டி இருக்க முடியாது. ஆனால் சுத்தியலைக் கொலை செய்யப் பயன்படுத்தும் புத்தியை என்னவென்று சொல்ல? கருத்தியலைக் கத்தியைப் போலப் பயன்படுத்தி அறியாமை மீது சஸ்திர சிகிச்சை செய்யப் பயன்படுத்தலாம். ஆனால் அதை புல்வெட்டும் அரிவாளைப் போலப் பயன்படுத்தி மனிதர்களை அறுத்து வாழ்வொழிக்கப் பயன்படுத்தினால் என்ன செய்ய?

ஆண் பார்வை என்பதை விமர்சிக்கப் புறப்படும் கருத்தியல் அணுகுமுறை எதார்த்தத்தோடு பிணைந்து பேசும் வரை பயனுள்ள விமர்சனப் பார்வையாக இருக்கிறது. அதாவது பற்பல பண்பாடுகளில் ஆண்கள் தமக்குப் பயனுள்ள கருவியாக, ஒரு வசதியாக, தம் விருப்பப்படி நடக்க வேண்டிய ஒரு ஊழியராக என்று பல எஜமான நிலைகளிலிருந்தே பெண்களை நோக்குவதை ஒழிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் போராட்டத்துக்கான உந்துதலாக இருக்கையில் அது சத்திய தரிசனமாக வலுவாக இருக்கிறது.

ஆணெனப்பட்ட பிராணியே அவலமென்ற அளவுக்கு அதே விமர்சனம் கசப்பின் உச்சிக்குப் போக முயல்கிறபோது மனித ஜீவராசி என்ற ஒரு உயிரினத்தின் தற்போதைய இருபால் இருப்பை மறுத்து, மறந்து பேசும் அதிபுனைவாகிற போது அவலச் சுவை நாடகமாகி விடுகிறது.

இத்தனைக்கும், ஆண்பார்வை என்பது எப்படித் தம் இயல்பான வகையில் தாம் இருக்க விடாமல் தம்மை எங்கும் சிறைப்படுத்துகிறது, குறைக்கிறது, அல்லது இரையாக்க முயல்கிறது என்று பேசுவது ஏதோ நவீன காலத்தில் தோன்றிய எண்ணக் கூட்டு அல்ல. பண்டைக் காலத்திலிருந்தும் இதே சிந்தனை பெண்கள் நடுவே எழுந்திருக்கிறது. ராமாயணம், மஹாபாரதம் போன்ற புராணங்களின் சித்திரிப்புகளில் கிட்டும் விமர்சனங்களில் இருந்து காரைக்கால் அம்மையார்  வருந்திப் பெற்ற முதுமை பற்றிய கதையின் காலம் வரை கூட நாம் இப்படிச் சிந்தித்த சில முக்கியமான பெண்களைப் பற்றிக் கேட்டிருக்கிறோம். இது இந்தியாவைப் பொருட்டுச் சொல்லப்படுவது என்றாலும் இதே நிலை பன்னாடுகளிலும், பல பண்பாடுகளிலும் இருந்திருக்கும் என்பதில் ஐயம் என்ன இருக்க முடியும்?

இதை இன்று அதிகம் பிரபலப்படுத்திப் பொதுத்தளங்களில் சர்ச்சைக்கு முன் வைத்து, அதன் மூலம் சட்ட அமைப்பு வழி உரிமைகள், நிறுவனங்கள்/ அமைப்புகளில் மனித நடத்தையின் எல்லைகள் போன்றனவற்றை மறு வரையறை செய்ய சென்ற அரை நூற்றாண்டில் உலகெங்கும் பெண்ணியக் கருத்தியலாளரும், ஆர்வலரும் முயன்றிருக்கின்றனர். இந்த முயற்சிகள் இன்று ஒரு சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு கருத்தியலாகக் கிட்டுவது என்பதுதான் பெரும் மாறுதல் எனலாம். இந்தக் கட்டமைப்பு என்பது, எதுவும் புனிதமல்ல என்று மாற்றுப் பார்வைகளை ஊக்குவிக்கும் நவீனக் காலத்து அணுகலின் நீட்சியே, என்பதிலும் ஐயமில்லை.

அதில் ஓரளவு வெற்றியும், கிட்டிய வெற்றியை விடப் பன்மடங்கு அதிகமான விளம்பரமும் கிட்டி இருக்கிறது. என்றாலும், அவற்றிடையே இருக்கும் பெரும் வெற்றிடத்தாலோ என்னவோ, பெண்ணியம் என்பது குறித்து மேற்கில் பல நாடுகளிலும் கடந்த சில பத்தாண்டுகளில் நிறைய எதிர்ப்பார்வைகள் எழுந்திருக்கின்றன. பெண்களிலேயே கணிசமான எண்ணிக்கையினர்- அறியாமையாலும், மதச் சாய்வினாலும் ஒரு சாரார், கல்வியால் அறிந்தும் கூட, சுய மையப் பார்வை முன்னுந்தப் பொருள், வாழ்வுச் சுகங்களின் தேட்டையால் பொதுநலப் பார்வையின் அவசியத்தைப் புறமொதுக்கி வைக்கத் துணிந்தவர் என்ற இன்னொரு சாரார் எனப் பற்பல வகையினர்- பெண்ணியம் என்ற சொல்லைத் தகாச் சேர்க்கை என்பது போலக் கருதத் துவங்கி இருக்கின்றனர்.  எல்லாப் பெண்களின் உரிமைக்காகவும் போராடும் பெண்கள், இவர்களோடும் பொருத வேண்டி இருக்கிறது.

மேலே நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் கூடஆய்வாளர்களோ, அல்லது சமூகப் போராளிகளோ வெளியிடும் கருத்துகள் இல்லை. அனேகமாக அன்றாட வாழ்வு, கடந்த கால அனுபவங்களிலிருந்தும், சுய சிந்தனை மூலமும் கிட்டிய பல முடிவுகளை ஓரளவு கருத்துலகில் கிட்டிய தகவல்/ கருத்துகளோடு பொருத்திச் சோதித்துப் பார்த்துத் தமக்கு முடிவாகக் கிட்டியவற்றைத் தரும் முயற்சி போலத்தான் அது இருக்கிறது. இந்த வகை முயற்சிகளில் ஓரளவு பொதுப்புத்தியே மேல்தூக்கிய அணுகலே இருக்க வாய்ப்பு அதிகம்.

0 Replies to “இணைய உரையாடல் – ஆண்பார்வை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.