கணக்கும் க.நா.சுவும்: ஓர் இலக்கியச் சந்திப்பு

டான் ப்ரௌன் சமீபத்தில் எழுதி வெளிவந்த ‘இன்ஃபர்னோ’ நாவலை என் மகன் படித்துக் கொண்டிருந்தான்.அவன் சிபாரிசில் ‘டிசெப்ஷன் பாயிண்ட்’ நாவலை முழுதாகப் படித்திருக்கிறேன். அவரது மற்ற நாவல்கள் எதையும் என்னால் முழுதாகப் படிக்க முடியவில்லை. அவரது எழுத்து என்னைக் கவரவில்லை எனக் கூறினேன். என மகன் உடனே “அப்பா, நீங்கள் வயதானவராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சென்ற நூற்றாண்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்”  என்றான் (“you are getting old dad. Still living in 20th century”).

அதை மெய்ப்பிப்பதைப் போல் பழைய நினைவுகள் அலைகளாக வந்து மோதின. ஐம்பது வயதானால் இது ஒரு தவிர்க்க முடியாத அனுபவம் போல. அதில் க.நா.சு வை பார்த்த அனுபவமும் ஒன்று. முதலில் காலத்தைக் கையில் வைத்துக் கொண்டு எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் நீட்டி முழக்கி வாழ்ந்த பாளையங்கோட்டை யிலிருந்து காலத்தின் அடிமையாக வாழச் சென்னையை சென்றடைந்ததைப் பார்ப்போம்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற ஏதாவது ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும். கணிதம் என்றால் இங்கு “அல்ஜீப்ரா ஜாமெட்ரி”. அந்த காலத்தில் ஏதோ காரணத்தினால், கணிதத்தை விருப்பப் பாடமாக எடுப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. கணிதம் நன்றாக வந்தால்தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு முட்டாள்தனமான எண்ணம் என்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். அதிலும் முக்கியமாக, திருமணத்திற்குப் பின்.

மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் இப்படிதான் ஒரு தவறான புரிதல் இருந்தது.. அந்த தவறான எண்ணத்தினால் அல்ஜீப்ரா ஜாமெட்ரி விருப்பப் பாட வகுப்பில் முதல் நாள் குறைந்தது 65 மாணவர்கள் வந்தமர்ந்தார்கள்.

வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியர் எல்லோரையும் நோட்டம் விட்டுக் கொண்டு நேரே கரும்பலகையை நோக்கிச் சென்றார். x,y,a,b அது இது என்று அந்த வகுப்பு முடியும்வரை பின்னி எடுத்து விட்டார். “ஒரு மூதியும் விளங்கல” என்பது மாணவர்களின் பொதுவான கருத்து’. “ஏலே இந்த சார்வாள் கொளப்புதார்லே” என்று சில மாணவர்கள் வேறு விருப்பப் பாடத்தைச் சென்றடைந்தார்கள். அடுத்த நாளும் இந்தக் கதை தொடர, இறுதியில் 35 மாணவர்கள்தான் கணிதப் பாடத்தில் எஞ்சியிருந்தோம்.

Blackboard with mathematics sketches - vector illustration

பின்பு புகுமுக வகுப்பு முடித்து கல்லூரியில் சேரச் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு நானே நேராக தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் அவர்களை அவர் அலுவலகத்தில் பார்த்தேன். அவர், ‘உங்க அப்பாவை அழைத்து வா,’ என்றார்.

என் தந்தை அப்போது பாளையங்கோட்டை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இருந்த தொலைபேசி அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். அவர், நீ இயற்பியல் படித்தாக வேண்டும், என என்னை வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஏனோ இயற்பியல் மேல் அவருக்கு அப்படி ஒர் ஈர்ப்பு. அவரைக் கல்லூரிக்குக் கூட்டி வரும் வழியிலும் இதையேதான் கூறினார். கல்லூரிக்குச் சென்றால் அந்த ஃபாதரும் இயற்பியல் பட்டப் படிப்பையே சிபாரிசு செய்தார். இயற்பியல் படிக்க அப்போது அவ்வளவாக மாணவர்கள் சேரவில்லை.

ஆனால் நான் கணிதம்தான் படிப்பேன் என்பதில் தீர்மானமாக இருந்தேன். என் அப்பாவும், பாதிரியாரும் என்னிடம், “நீ ஏன் இவ்வளவு பிடிவாதமாக கணிதம்தான் படிப்பேன் என்று சொல்கிறாய்?” என்று கேட்கவில்லை. நானும் அப்போது சொல்லவில்லை.

Math_Animated_4_Ping_pong_Table_Tennis_Action_Algebra

இறுதியில் கணிதப் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தாகிவிட்டது. மாலைதான் என் தந்தை, காபி அருந்திக் கொண்டே, “நீ ஏன் கணிதம்தான் படிக்கணும்னு ஆசைப்படறே?” என்று கேட்டார்.

நான் தயங்கிக் கொண்டே, “படிக்க வேண்டாம், இல்லையா?” என்றேன்.

“என்ன சொல்றே?”. நான் சொன்னது அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.

வீட்டிற்கு வந்தும் படிக்க வேண்டாம். வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கொண்டே புரிந்துகொண்டு கொஞ்சம் யோசித்தால் கணக்கு போட்டு விடலாம். அதிக நேரம் கிரிக்கெட் விளையாடலாம். மேலும் கிரிக்கெட் பற்றி நண்பர்களுடன் விவாதிக்கலாம். இதைத் தவிர ரஜினி-கமல், எம்ஜியார் – கருணாநிதி என கட்சி கட்டி சண்டை போடலாம் என்ற நினைப்பு. ஆனால் கல்லூரி கணிதம் விருப்பப் பாடமாகப் படிப்பது அப்படியல்ல எனத் தெரிய ரொம்ப காலம் பிடிக்கவில்லை.

எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் கணிதம் படித்து கொஞ்சம் புத்தி பேதலித்தவராக வாழ்ந்தார் என்பதால்தான் என் தந்தை கணிதம் படிப்பதை ஏன் அவ்வளவாக விரும்பவில்லை என பல ஆண்டுகள் கழித்துதான் தெரிந்தது. கணிதம் படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்றுகூட எனக்கு எதுவும் தெரியாது. அப்போதெல்லாம் வங்கி வேலை கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டக்காரன் என்று பெயர். வேலையில்லா திண்டாட்டம் ரொம்பவும் இருந்த காலம்.

எப்படியோ நானும் படிக்கிறேன் என்று பேர் பண்ணிக் கொண்டிருந்த காலத்தில், மூன்றாம் ஆண்டில் “ரியல் அனலிசிஸ்” வகுப்புகள் ஆரம்பித்தபோதுதான் கணிதத்தின் அழகு தெரிந்தது. பிறகு முதுகலை பட்டப் படிப்பில் மேலும் சில தூய கணிதம் படித்ததில் இன்னும் ஆர்வம் அதிகரித்தது..

முதுகலை படிக்கும் சமயம் என் நண்பனின் மாமா ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர் வங்கியில் ஆபீசர் வேலையில் இருந்து விலகி, அகமதாபாத் IIM இல் MBA முடித்து கனடாவில் முனைவர் பட்டப் படிப்பிற்குத் தான் செல்ல உள்ளதாகச் சொன்னார். அது ஒரு பெரிய தூண்டுதல் நான் மேலும் படிக்க.

எனக்கு தொடர்ந்து படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. பலருக்கும் அது கிடைக்காமல் போகிறது. உதாரணமாக நான் கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்தபோது மிக நன்றாக கணிதப் பாடத்தை புரிந்து படித்து வந்த பெண் குழந்தைகள் மேலே படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் மறைவதை பார்த்திருக்கிறேன் ஆனால் என் நல்ல நேரம் கணித மேற்படிப்பிற்கு சென்னை ஜன சமுத்திரத்தில் ஐக்கியமானேன்..

.சென்னையில் வாலாஜா சாலையில் சேப்பாக் கிரிக்கெட் மைதானத்திற்கு பின்புறம் இருந்த இராமானுஜன் இன்ஸ்டிட்யூட்டில் கணித மேற்படிப்பைத் தொடர்ந்தேன். மேற்கு மாம்பலத்தில் வாசம். 12G தான் வாகனம். என் அக்காவின் வீட்டிலிருந்துதான் படித்தேன். அக்காவின் கணவருடன் கர்நாடக இசை கச்சேரிகளுக்குச் செல்லுதல், அரசியல், சினிமா என அரட்டை, படிப்பு இதுதான் வாழ்க்கை.கொஞ்சமாக இலக்கிய ஆர்வமும் இருந்தது. அதுதான் கணையாழி மூலம் அடுத்த கட்ட வாசிப்புக்குச் செல்ல  உதவியது என நினைக்கிறேன்.

கணையாழி என ஒரு பத்திரிக்கை இருப்பது எனக்கு எப்படித் தெரியவந்தது எனத் தெரியவில்லை. சுஜாதாதான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். ஒன்று அவர் ஏதாவது வாரப் பத்திரிக்கையில் கணையாழி குறித்து எழுதியிருக்க வேண்டும் இல்லையெனில் அவர் கணையாழியில் எழுதியதைக் குறித்த குறிப்பு வந்திருக்க வேண்டும். எப்படியோ, எதுவோ ஒன்று என்னைக் கணையாழியை தேடிச் செல்ல வைத்தது. நண்பர் ஒருவர் பைக்ராஃப்ட்ஸ் ரோட்டில் ஒரு கடையில் கணையாழியைப் பார்த்ததாக நினைவு எனக் கூறினார். அந்தக் கடை புகழ்பெற்ற முரளி கபே அருகில் கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதையில் இருந்தது. அப்போது கணையாழி விலை மூன்று ரூபாய். கணையாழியில் வந்த கவிதைகள் மற்றும் கதைகள் சந்தேகத்துக்கிடமில்லாமல் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தன. கஸ்தூரி ரங்கன் ஆசிரியர் என நினைவு.

படிக்கும் காலத்தில் மாலை ஐந்து மணிவாக்கில் அரசு அலுவலகங்கள் இருந்த எழிலகத்தின்  பங்க் கடை ஒன்றில் நண்பர்களுடன் காபி குடித்துவிட்டு சிறிது நேரம் அரட்டை. வேறு என்ன, சினிமா அல்லது அரசியல். சில சமயங்களில் கணித ஆராய்ச்சி சம்பந்தமாகவும் விவாதம் செல்லும். பிறகு ஒர் ஒன்பது மணி வரை படிப்பு.

கணையாழி வெளிவருமன்று சற்று முன்பே புறப்பட்டு கணையாழியை வாங்கிக் கொண்டு அண்ணா சதுக்கம் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து அங்குள்ள 12Gயில் வசதியான இடம் பார்த்து உட்கார்ந்து கணையாழியை படித்துக் கொண்டே செல்லும் இனிய அனுபவம் இன்று நினைத்தாலும் சுவையாகத்தான் உள்ளது. அத்தனை கணையாழி இதழ்களையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன். ஆனால் காலப்போக்கில் தொடர்ந்து பாதுகாக்க முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. பின்பு கணையாழி வெளியிட்ட கவிதை, கட்டுரைகள் தொகுப்புகூட வாங்கினேன். அது ஏதோ நண்பருக்குக் கொடுத்து அவர் படிக்காமல் பத்திரமாக வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

கணையாழியில்தான் ஒரு முறை க.நா.சுவின் புகழ்பெற்ற ‘படிக்க வேண்டிய தமிழ் நாவல் பட்டியல்’ குறித்து படித்தேன். அதில் ‘மோகமுள்’ மற்றும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ தவிர வேறு ஒன்றும் கேள்விப்பட்டதாகக்கூட இருக்கவில்லை. ஏதோ சொல்கிறார் என்று அப்போது அதற்கு மேல் எதையும் படிக்காமல் இருந்துவிட்டேன்.

1985 ஆம் ஆண்டு என நினைவு க.நா.சு கலந்து கொள்ளும் ஒர் இலக்கிய வட்டக் கூட்டம் திருவல்லிக்கேணியில் நடக்கவிருக்கிறது என்ற அறிவிப்பைப் கணையாழியில் படித்தவுடன் அவரைப் பார்த்து விட வேண்டும் என்ற அவா மேலோங்கியது.

அந்த கூட்டமும் முரளி கபே அருகில் ஒரு மாடியில் நடந்ததாக நினைவு. அப்போதெல்லாம் ஜோல்னா பை, கொஞ்சம் தாடி இருந்தால் அவை ஒரு அறிவாளி களை கொடுக்க உதவும் என்பது நடைமுறை. தாடி வைப்பதும் எடுப்பதும் அந்த வயதின் கோளாறு – இன்று என மகனும் அப்படிச் செய்கிறான். ஜோல்னா பையும் வசதிதான். எது வேண்டுமானாலும் அதில் போட்டுக் கொள்ளலாம். ஆக, ஜோல்னா பையுடன் அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கு பலருக்கும் இதே கெட்டப்தான். முதலில் பெரிய அளவில் ஆட்கள் இருக்கவில்லை. சிறிது நேரத்தில் கணிசமான அளவு ஆட்கள் வந்து சேர்ந்தனர்.

தலைமுடி நன்கு நரைத்து, தடித்த கண்ணாடி, சற்று பெருத்த ஜோல்னா பையுடன் இன்னும் நான்கைந்து பேருடன் உள்ளே நுழைந்தது க.நா.சு எனக் கண்டறிவதில் சிரமம் இருக்கவில்லை. வரவேற்புரை, அறிமுகம் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கூட்டம் தொடங்கியது. க.நா.சு என்ன பேசினார் என்று முழுவதும் நினைவில்லை. ஆனால் இலக்கியம் என்பதைத் தேடிப் படிக்க வேண்டும். நிறையப் படிக்கப் படிக்க இலக்கிய எழுத்தை இனம் காண்பது கடினமில்லை என்றார் என நினைவு. மேலும் அவர் பட்டியல் குறித்த காரசார விவாதம் சண்டை போல வலுத்து வாக்குவாதம் பெரிதாகி, ஏன் அந்தப் படைப்பு சிறந்தது, ஏன் இது சிறந்ததில்லை என அடிதடியில் இறங்காத குறைதான். ஆனால் மனுஷன் எதற்கும் அசரவில்லை. எனக்கு சற்று பயமாகக்கூட இருந்தது. ஒன்றும் புரியவில்லை. ஒரு சினிமாவில் நாகேஷ் சென்னை வந்தவுடன் நகரத்தை பிரமித்துப் பார்ப்பார். அது போல் இருந்தது எனக்கு.  நல்ல வேளை, அருகில் ஒரு நெல்லைக்காரர் இருந்தார். அவர் பேச்சை வைத்து அவரும் நம்மூர்காரர் என்று அடையாளம் கண்டுகொண்டேன்.

என்னைப் பார்த்து, ‘புதுசா வரிகளா?’ என்றார். ‘ஆமாம்,’ என தலையாட்டி வைத்தேன்.

‘எப்பவும் இப்பிடித்தான், கண்டுகிடாதீக,’ என்றார்.

அது என் அச்சத்தைப் போக்க உதவியது. அந்தக் கூட்டத்தில் அவர் என்ன பேசினார் என்று நான் ஒரு குறிப்புகூட எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. இப்போது போயிருந்தால் பரிட்சைக்கு பிட் எடுப்பவன் போல் எல்லா பக்கங்களையும் நிரப்பிக் கொண்டு வந்திருப்பேன். ப்ளாக் எழுதி, முகநூலில் பகிர்ந்து நானே படித்துக் கொள்ள உதவியிருக்கும்.

இறுதியில் க.நா.சு இரண்டு மூன்று கேள்விகளுக்கு, கிட்டத்தட்ட ஒரே பதில் கூறினார். கூட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின் இவர்களா இப்படிப் பேசினார்கள் என்பதுபோல் முன்னர் சண்டை போட்டுக் கொண்டவர்களுக்கிடையே பாசம் பொங்கி வழிந்தது. ஒரே சிரிப்பு. உடன்பிறப்புகள் போல ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டார்கள்.

‘சொன்னோமில்லே!” என்றார் புது நண்பர்.

கணையாழி படித்தவுடன் ஏதோ இலக்கியக் கொம்பு முளைத்தது போன்ற ஓர் எண்ணம். கூட்ட இறுதியில் அந்த எண்ணம் தவிடு பொடியாகி அறியாமையின் மொத்த உருவமாக நின்றது இன்றும் மறக்கவில்லை. பட்டியல் இடுவது ஓரளவிற்கு தனிமனித ரசனையையும், அனுபவத்தையும் பொறுத்தது என்றாலும், அது இலக்கியம் என்ற முடிவில்லா பாதையில் பயணிக்கக் கிடைக்கும் நுழைவாயிலாக மட்டுமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்று போல அன்று இணையம், இலவச நூல்கள் என்ற வசதி கிடையாது. நூலகங்களில் அல்லது நண்பர்கள் மூலமாகக் கிடைக்கும் புத்தகங்கள்தான்.

நல்ல இலக்கியத்தை நோக்கிச் செல்ல இந்தக் கூட்டம் வழி வகுத்தது. குறைந்த பட்சம் என்னளவில் படிக்கும் நூலகளைத் தரம் பிரித்துப் பார்க்க முடிகிறது இந்த வாசிப்பு ஒரு நல்ல நண்பனாக உடன் வருவது சொல்லொண்ணா மகிழ்ச்சியைத் தருகிறது..சென்னை வந்ததில் இரண்டு நன்மைகள். இலக்கியம் வாசித்தல் மற்றும் கர்நாடக இசைக் கேட்டல்.

‘க.நா.சு எங்க தங்கி இருக்கார்?’ எனக் கேட்டேன். அவரை சந்தித்துப் பேசும் ஆசைதான்.

நண்பர், ‘அவர் டில்லி. இங்கிருந்து நேரே போய் ரயில் பிடிக்கார்,’ என்றார்.

‘பெட்டி…” என இழுத்தேன்.

“அதா பை வெச்சிருக்காக இல்லே!”. என்றார்.

க.நா.சு எழுத்தில் இன்றும் அவரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

0 Replies to “கணக்கும் க.நா.சுவும்: ஓர் இலக்கியச் சந்திப்பு”

  1. திரு பாஸ்கர்,
    முத்திரை பதித்தால் அழியாத பச்சை மண் பருவத்தில் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிரீகள். நீண்ட பஸ் பயணத்தில் படிப்பதை விட சுகமான அனுபவம் வேறு எதுவும் இல்லை.பாளையங்கோட்டைக்காரருக்கு மட்டுமல்ல, சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கும், ஒரு இனம் தெரியாத, ஒன்றும் சரிவரப் புரியாத எதிர்பார்ப்புக்கள் நிறைய இருந்தன.எதை படிக்கிறோம்,ஏன் படிக்கிறோம், அதற்கு அப்புறம் என்ன? என்பதே தெரியாமலும், சிறிதும் அக்கறை இல்லாமலும் வளர்ந்து வந்தோம்.
    திருவல்லிக்கேணி அருகில் நிறைய விடுதிகளில், வெளியூரிலிருந்து வந்து தங்கி படித்தும் வேலை செய்துகொண்டும் பலர் இருந்தனர். அது ஒரு தனி அனுபவம்.
    க.ந.சு வை நான் படித்ததில்லை. விரைவில் படிப்பேன் என்று நினைக்கிறேன்.
    நன்றி,
    ராஜாராமன்

  2. Sri Bhaskar has given a painting of Chennai Kanayazi circle during 1985. Kanayazi was printed from Bells Road opp to Chepauk Cricket Ground. I was so familiar to the Press whenever I come to Chennai from BHILAI ( Steel Plant) , we will get on to the TOP of the Shelf and bring down all the old issues , will read till the press is closed.
    I was doing this from 1978 to say up to 1982.
    we subscribed for number of years.
    All my introduction to Good Tamil Literature is through Kanayazi. We had a small circle of 3 people at Bhilai and through the elder we had the GOLD mine of ALL MANIKODI WRITERS, especially BS Ramayya , KUPARA, MOUNI, Pudumaipittan, KU Venkataramani ,La Sa Ramamritum and many .
    We also had a first hand experience with T Janakiraman.
    It was a golden Period , as many things to read and no TV or other unwanted activities.
    MV Seetaraman
    Visakhapatnam Steel Plant

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.