மகரந்தம்

மூலதனப் பொருளாதாரச் சூனியக்காரர்கள்

b113

மொத்தம் நூற்றிநாற்பது வாடிக்கையாளர்கள் மட்டுமே கொண்ட வங்கி உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. முதலாம் உலகப் போர் முடிந்தவுடன் 1930ல் ”சர்வதேச ஒப்பந்த வங்கி” (Bank for International Settlements — BIS) துவங்கப்பட்டது.  அப்போதிலிருந்து சமீபத்து வருடங்கள் வரை வருடத்திற்கு ஐந்து முறை உலக நாடுகளின் முக்கிய வங்கியாளர்கள் மிக ரகசியமாகச் சந்திக்கிறார்கள். முன்னெப்போதையும் விட இப்பொழுது பொருளாதார நிபுணர்களின் கிடுக்கிப்பிடியில் உலகம் சுழல்கிறது. இந்தியாவின் மன்மோகன் சிங்கை விட்டுத் தள்ளுங்கள். கிரேக்கத்திலும் இத்தாலியிலும் ஆட்சி கவிழ்ந்தவுடன் அரசியல்வாதிகளை நீக்கி, ’அறிஞர்’ தலைமையிலான ஆட்சிகளை நிலைநிறுத்தினார்கள். இதனால் ஒரு புண்ணாக்குக்கும் பயனில்லை என்பதை விடுங்கள்.

கந்தன் திருவிழாவில், சூரபத்மன் தலையை வெட்டிக் கொண்டே போய் இறுதியில் வேப்பிலையை வைப்பார்கள், அதே போல அரசியலாளர்களில் ஃபாசிஸ்டுகள், சர்வாதிகாரிகள், கொள்ளையர், பெருமுதலாளிகள் என்று ஒவ்வொருவராக மாற்றிக் கொண்டு வந்து இறுதியில் ஒரு பொம்மையான அறிஞரைப் பதவியில் வைத்துத் திரைமறைவில் இருந்து முந்தைய கொள்ளையரே ஆண்டால் ஆட்சியில் என்ன மாறுதல் வந்துவிடும்? மக்களையும் முன்பு போலத் தொடர்ந்து ஏமாற்றவும் முடிவதில்லை. கண்காணிப்பு அரசுச் சீனாவிலேயே மக்கள் எழுந்து போராட வருகிறார்கள். ஆனால் ஜனநாயகங்கள் என்று இத்தனை நாட்கள் பாவலா செய்து வந்திருந்த மேலை நாடுகளான ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா, ஸ்வீடன், நார்வே போன்றவற்றின் நிதிநிர்வாகத்தை நடத்துபவர்கள், அம்மக்களின் வாழ்வுத் தரத்தை நிர்ணயிப்பவர்கள், மக்களுக்குத் தெரிந்த, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் இடையூறின்றி, ஊடகங்களின் கண்காணிப்பின்றி, பணத்தைப் பதுக்குபவர்களின் அந்தரங்கங்களைப் பாதுகாப்பதற்குப்  புகழ்பெற்ற வங்கிகளைக் கொண்ட, அவற்றாலேயே பெரும் வளத்தை அடைந்திருக்கிற ஸ்விட்சர்லாந்தில் சந்திக்கிறார்கள்.

அப்படி என்னதான் குசுகுசுவெனப் பேசிப் பாட்டாளி மக்களின் நடுத்தர மக்களின் வாழ்வை, நாடுகளின் சரித்திரத்தை நிர்ணயிக்கிறார்கள் என்பதை இந்தப் புத்தகம் துப்பறிந்து சொல்கிறது:
http://www.nyjournalofbooks.com/review/tower-basel-shadowy-history-secret-bank-runs-world

o0o0o0o

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

கடந்த சில வருடங்களில் மட்டுமே எத்தனை ஆயிரம் இந்தியப் பெண்கள், சிறுமிகள் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்பட்டு, கொல்லவும் பட்டிருக்கிறார்கள். செய்தித்தாள்களை என்று திறந்தாலும் நாம் அப்படி ஒரு சில செய்திகளைக் காணலாம். இவையோ தெரியவந்த கேஸ்கள் மட்டுமே. கட்புலனுக்குத் தெரியாது ஆழங்களில் பன்மடங்கு மோசமான சம்பவங்கள் இருப்பதாகவே நமக்கு ஊகம் கிட்டுகிறது. இந்தியாவில் இந்தப் பெரும் மாறுதல் நடந்து சில பத்தாண்டுகளாயின. இந்த மாறுதல்கள் குறித்தோ, ஏகமாக அதிகரித்து விட்ட வன்முறையைப் பற்றியோ ஒரு அதிர்ச்சியும் இல்லாத, முனைந்த தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கத் தயாராக இல்லாத இந்திய அரசு, சமீபத்தில் இரண்டு மூன்று வெள்ளைப் பெண்கள் தாக்கப்பட்டதால், சுற்றுலா வரும்  மேலை நாட்டுப் பெண்கள் எண்ணிக் சட்டெனக் குறைந்து விட்டதைக் கண்டதும், அப்பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறதாம்.

r881

இதைப் போல ஒரு அற்பமான அரசு இந்தியாவில் இருப்பதற்கு நாம் எல்லாருமே மிகவுமே வருந்த வேண்டும். இந்தியர்களில் கணிசமான தொகையினர் வறுமையில் வாடுவதே பெரும் தலைகுனிவு. இன்னும் என்னென்னவோ தலைகுனிவுகளோடு நாம் வலம் வந்து கொண்டிருக்கிறோம். இத்தனைக்கு நடுவில் செயலற்ற ஒரு பாராளுமன்றம், தொடர்ந்து சுரண்டும் அரசியலாளர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என்று ஏகப்பட்ட காளான்கள் இந்தியாவில் காற்றை, நீரை, உணவை, குடியிருப்புகளை, ஊடகங்கள் மூலம் பண்பாட்டை, ஏன் மொத்த மனிதர்களையுமே  நாசம் செய்கின்றன. இவை போதாதென்று இப்போது பால்-வன்முறை வேறு அத்தனை நகரங்களையும், மூலை முடுக்குகளையும் தன் கருமையால் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத இந்திய அரசு, ஒரு சில வெள்ளையருக்கு ஆபத்து என்றதும் ஓடி வருகிறது பாருங்கள். அத்தனைக்கு சுயமே இல்லாத, அடிமைப் புத்தி கொண்ட நாடாக ஆகி இருக்கிறோமென்பதுதான் என்னவொரு வருந்தத் தக்க நிலை.  இந்தியப் பெண்களுக்கு வன்முறை இருப்பதால் எப்படி ஆடை உடுத்தி வீட்டோடு அடைந்து கிடக்க வேண்டுமென்று புத்திமதி சொன்ன அறிவாளிகளெல்லாம் இப்போது எங்கே போனார்களாம்?

இப்படித் தொடர்ந்து நாசங்கள் நடந்த பிறகே, தீயில் எல்லாம் கரிந்து போன பின்பே நெருப்பணைக்க ஓடிவரும் ஒரு அரசை மக்கள் எப்படி மதிப்பார்கள்?
http://www.nytimes.com/2013/06/11/world/asia/rape-cases-are-making-tourists-wary-of-visiting-india.html

o0o0o0o

சரித்திரங்கள் திருத்தி எழுதப்படலாம்!

சென்ற மே மாதத்துடன் மவுண்ட் எவெரெஸ்ட்டில் மனிதக் கால்கள் பதிந்து அறுபது ஆண்டுகளாகி விட்டன.இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்ட சர். எட்மண்ட் ஹில்லாரி என்ற நியுசிலாந்து நாட்டவரும் டென்சிங் என்ற நேபாளியரும் தான் முதன்முதலில் எவரெஸ்டை அடைந்தவர்கள் என அதிகார பூர்வமாக அறியப்படுவோர் . ஏன் இந்த “அதிகாரப்பூர்வம்” என்ற பொடி என்றால் 1924`ல் ஜார்ஜ் மாலரி என்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியரும், இர்வின் என்ற ஆங்கிலேயரும் எவெரெஸ்டை அடையும் முயற்சியின் போது திரும்பி வரவே இல்லை.

இருவரும் சிகரத்தின் அருகில் காணப்பட்டார்கள். அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை…. மறைவு குறித்த கேள்விகளுக்குச்  சுமாரான விடை சற்றே தாமதமாக, 75 ஆண்டுகளுக்கு பின் கிடைத்திருக்கிறது. மாலரியின் உடல் 8,157 மீட்டர் (26,760 அடி) உயரத்தில் கண்டெடுக்கப்பட்டது. 75 வருடங்களுக்குப்பின்னும் உடலைப் பத்திரமாக எவரெஸ்ட் வைத்திருந்தது.

இர்வினின் பனிக் கோடாரி 1933ல் கண்டெடுக்கப்பட்டது, உடல் இன்னும் கிடைக்கவில்லை.

மாலரி எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முன்னரே இறக்க நேரிட்டதா அல்லது மேலே ஏறிவிட்டு திரும்பும் வழியில் இறக்க நேரிட்டதா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை.  மலை ஏறும்போது அவர் மனைவியின் புகைப்படத்தை எடுத்துச்சென்றார். சிகரத்தில் மனைவியின் புகைப்படத்தை வைத்துவிட்டு வருவதாக ஏற்பாடு.

1999ல் கிடைத்த உடலில் மற்ற எல்லா உபகரணங்கள், உடை எல்லாம் பத்திரமாக இருந்தன, ஆனால் புகைப்படம் இல்லை!

 

g883

 

இந்த 2013 வருட கடைசியில் இன்னொரு பயணக்குழு இந்த விபரங்களைத் தேடிச் செல்கின்றது. இந்தக்குழு, இர்வினின் காமிராவைக் கண்டெடுத்தால் உண்மை தெரியவரலாம். டென்சிங், ஹிலாரி என்று நாம் பள்ளி நாட்களில் மனனம் செய்த பெயர்களுக்கு மேல் ஜார்ஜ் மலரி, இர்வின் என்ற பெயர்கள் பதிக்கப்படலாம்!
o0o0o0o
நூற்றாண்டின் இணையற்ற பந்து

இதோ இன்னொரு ’ஆஷஸ்’ தொடர் – இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் ஒரு முறை வரும் ஜூலையில் மோதப்போகின்றன. ஆனால் அந்த சம்பவம் நடந்து ஆயிற்று, இருபது வருடங்கள். இன்னமும் பேசப்படுகின்ற “இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பந்து” என்று பெயர் பெற்ற சம்பவம்.

எட்ஜ்பாஸ்டன், மேன்செஸ்டர். 1993 ஆஷஸஸ் தொடர் – பின்னாளில் உலகின் தலைச்சிறந்த லெக் ஸ்பின்னராக புகழ் பெறப்போகும் ஷேன் வார்னின் முதல் மேட்ச், இங்கிலாந்து மண்ணில்.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா சுமாரான 289 ஆட்டங்களை மட்டுமே எடுத்தது. பின் ஆடிய இங்கிலாந்து 71 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கட் மட்டுமே இழந்து வலுவோடு உற்சாகமான நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன், ஆலன் பார்டர் ஷேன் வார்னைப் பந்து வீச அழைத்தார். சந்திக்கப்போகும் பேட்ஸ்மன் மைக் கேட்டிங், ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் திறன் பெற்றவர்.

ஷேன் வார்னின் முதல் பந்து – லெக் ஸ்டெம்பிற்கு வெளியே விழுந்தது. கேட்டிங்கும் மற்ற ஃபீல்டர்களும் அந்தத் திசையை நோக்கினார்கள்; நகர்ந்தார்கள். விழுந்த பந்து எழுந்த போது, நம்பவே முடியாத அளவிற்கு எதிர் திசைக்குத் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தொட்டது…
 

sw881

அந்த சுழற்சிக்குப்பின், ஷேன் வார்னும், ஆஸ்திரேலியாவும் “எங்கேயோ” மேலே போய்விட்டார்கள், திரும்பிக் கீழே பார்க்கவே இல்லை!அப்போது வீழ்ந்த இங்கிலாந்து மறுபடி மேலெழச் சில பத்து வருடங்கள் ஆயின. சமீபத்தில்தான் இங்கிலாந்து ஒரு அளவுக்கு மேலெழுந்திருக்கிறது.
 
o0o0o0o

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.