kamagra paypal


முகப்பு » அனுபவம்

தாத்தாவுக்குக் கடிதம்

an_indian_post_office

தாத்தாவுக்கு அந்த முக்கியமான கடிதத்தை நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எழுதினேன். தபால் பெட்டியில் போட்ட கொஞ்ச நேரத்தில் அதை திரும்ப எடுக்க வேண்டியிருந்தது. ஏன் என்று தெரிந்து கொள்ள எனது சுயபுராணம் கொஞ்சம்…

மின்னஞ்சல், செல்பேசி, வீட்டுக்கு வீடு தொலை பேசி என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் செகந்திராபாத்தில் இருக்கும் என் தாத்தாவுக்கு மாதம் ஒருமுறை ‘இன்லாண்ட்’ கடிதம் எழுதுவேன். இன்லாண்டில் நிறைய சௌகரியங்கள்; ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம்; எழுத நிறைய இடம் இருக்கும்; முக்கியமாக தாத்தாவைத் தவிர வேறு யார் கையில் கிடைத்தாலும் போஸ்ட் கார்ட் மாதிரி பிரிக்காமலே படிக்க முடியாது.

மாதா மாதம் என்ன எழுதினேன் என்று தெரியாது. சேகரித்து வைத்திருந்தால் ‘தாத்தாவுக்கு எழுதிய கடிதங்கள்’ என்று ஒரு புத்தகம் போட்டிருக்கலாம். இன்லாண்ட் லெட்டரில் எழுதுவதில் உள்ள ஒரே சவால், அது ‘அன்ரூல்ட்’. அதனால் முதலில் பென்சிலில் லேசாகக் கோடு போட்டு எழுதிவிட்டு பின்னர் கோடுகளை அழித்துவிடுவேன். எழுத்துத் திறமை என் ரத்தத்திலேயே ஊறியது என்று தப்புக்  கணக்கு போடாமல் இருக்க நான் எழுதிய ஒரு கடித நகலைக் கொடுத்துள்ளேன்.

Dear Thatha,
How are you ? I am fine.
How is Patti ? My regards to both of you.
Here A&A are fine.
My exams starts next month.
When do you plan to come to Tiruchy.
Last week I saw Jungle book in Aruna theatre with Appa. The cinema was good.
You also see there.
yours..

இந்த மாதிரி ஆங்கில இலக்கியம் எழுதிவிட்டு மீதி இரண்டு பக்கத்துக்கு இயற்கை காட்சி,  பூ, பழம், பட்சி என்று ஏதாவது ‘எக்கோ ஃபிரண்ட்லி’யாக வரைந்து இடத்தை நிரப்பி அனுப்பிவிடுவேன். தீபாவளி சமயம் என்றால் புஸ்வாணம், மத்தாப்பு, பொங்கல் என்றால் பானைக்கு ‘பாடிகார்ட் மாதிரி இரண்டு கரும்பு என்று நிறைய ஸ்டாக் கைவசம் வைத்திருந்தேன்.

நான் எழுதிய கடிதம் தாத்தாவுக்குப் போய்ச் சேர ஒரு வாரம் ஆகும். நானே மறந்துவிடுவேன். பதில் வர ஒரு மாசம் ஆகும். அம்மாவுக்கு அனுப்பும் கடிதத்தில் எல்லா இடத்தையும் நிரப்பியிருப்பார். ஓரத்தில் “சிரஞ்சீவி … எப்படி இருக்கிறான்… அவன் அனுப்பிய கடிதம் கிடைத்தது. கையெழுத்து மணி மணியாக இருக்கிறது. படமும் நன்று. குழந்தைக்கு (நான் தான்!) என் ஆசிர்வாதங்கள். இது தான் எனக்கு வழக்கமாகக் கிடைக்கும் பதில்.

ஒரு கடிதம் மட்டும் ஸ்பெஷல் என்று சொன்னேன் அல்லாவா? அதைப் பற்றிச் சொல்லுகிறேன். வழக்கம் போல் கடிதம் எழுதிவிட்டு எக்ஸ்டராவாக இருக்கும் இடத்தில் வீட்டுக்கு வந்த தீபாவளி மலரிலிருந்து பெருமாள் படம் ஒன்றைப் பார்த்து வரைய ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில் கடிதத்தில் அவதாரம் எடுத்தார் பெருமாள். கலர் அடித்த பிறகு பார்த்தால் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் அளவிற்கு ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ ஆகியது.

உடனே தாத்தாவுக்கு இதை அனுப்பிவிடவேண்டும் என்ற ஆவலில் அவசரமாக குழந்தைக்கு டயப்பர் போடுவது மாதிரி இன்லேண்ட் லெட்டரை மடித்து ஒட்டிவிட்டு,

“அம்மா லெட்டர் போஸ்ட் பண்ணிட்டு வரேன்”

“எனக்கு கொஞ்சம் இடம் கொடு கடைசியில இரண்டே வரி எழுதிடறேன்” என்ற அம்மாவின் கோரிக்கையை

“நீ தனியா எழுதிக்கோ… இது பர்சனல்” என்று நிராகரித்து விட்டு,  சைக்கிளில் பறந்தேன்.

கோர்ட் பஸ் ஸ்டாப் பிள்ளையார் கோயில் பக்கம், பிள்ளையாரை விட கொஞ்சம் பெரிதாக இருந்த அந்த போஸ்ட் பாக்ஸில் சட்டை ஜோபியிலிருந்த கடிதத்தை சேர்த்துவிட்டு, சோழியன் கடையில் கமர்கட்டை வாங்கி எனக்கே பரிசு கொடுத்துக்கொண்டு  வீடு வந்து சேர்ந்ததுமே அம்மா ஆரம்பித்தாள்…

“என்னாடா போட்டாச்சா?”

“ம்”

“எனக்கு ஒரு வரி எழுதத் தரக்கூடாதா?”

“நீ தனியா எழுதிக்கோமா”

“சரி பின்கோட் என்ன போட்ட?” என்று அம்மா கேட்ட அந்க்த கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது.

“பின்கோடா ?…. ஐயோ… அட்ரஸ்ஸே எழுதலையே…”

“அதுக்குதான் என்கிட்ட காமிக்கணுங்கறது. ஒட்டிக்கு ரெட்டிச் செலவு. பரவாயில்லை வேற ஒரு லெட்டர் எழுதிப் போடு”

திரும்பவும் அன்ரூல்ட், கோடு, லெட்டர் எழுதிவிடலாம் ஆனால் அந்த மாஸ்டர் பீஸ் ஓவியம்?  நோ சான்ஸ். போஸ்ட் பாக்ஸ் பக்கம் போய் அந்த லெட்டரை வாங்கி அட்ரஸ் எழுதிப் போட்டுவிடலாம் என்று மிச்சமிருந்த இருந்த கமர்கட்டை அவசரமாக கடித்து முடித்துவிட்டு மீண்டும் சைக்கிளில்.

போஸ்ட் பாக்ஸ் பக்கம் போன போது பூட்டுக்கு பக்கத்தில் கருப்பு நிறத்தில் 4.30 pm என்று எழுதியிருந்தது. பக்கத்தில் இருந்த பூக்கடையில் விசாரித்தேன்.

“அண்ணே போஸ்ட்மேன் எப்ப லெட்டர் எடுக்க வருவாரு ?”

“நாலே முக்கா … என்ன விஷயம்?”

“இல்ல சும்மா தான்” என்று வீட்டுக்கு வந்துவிட்டேன்.

சரியாக நான்கு மணிக்கு திரும்பவும் போஸ்ட் பாக்ஸ் பக்கம் போய் அதற்குப் பக்கத்தில் நின்றுக்கொண்டேன். கையை உள்ளே விட்டு எடுத்துவிடலாமா என்று யோசித்தேன். கை மாட்டிக்கொண்டு… எதிர்த்தாற்போல் போலீஸ் ஸ்டேஷன் வேற இருந்தது.  யோசனையைக் கைவிட்டேன். கிட்டதட்ட நாலே முக்கால் மணிக்கு காக்கி யூனிபார்மில் போஸ்ட் மேன் பழைய சைக்கிளில் பழசாக வந்தார். நான் அவரிடம் மெதுவாகச் சென்று அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

“என்ன?”  என்பது போல சைகை காண்பித்தார்.

“அண்ணே தாத்தாவுக்கு லெட்டர் எழுதினேன்”

“சரி”

“இன்லாண்ட் லெட்டர்”

“சரி”

“அட்ரஸ் எழுதாம போட்டுட்டேன்… “

திரும்பி பார்த்தார்

“மறந்துட்டேன்….. நீங்க கொடுத்தீங்கனா அட்ரஸ் எழுதிடுவேன்”

“அது முடியாதே”

“அண்ணே பென் கூட கொண்டு வந்திருக்கேன்”

“அப்படில்லாம் தர முடியாது… ” என்று பேசிக்கொண்டே எல்லா கடிதங்களையும் அந்த போஸ்ட் பாக்ஸிலிருந்து அள்ளி தன் சாக்குப் பைக்குள் திணித்தார்.

நான் இன்னமும் பரிதாபமாக நிற்பதைப் பார்த்து, “போஸ்ட் ஆபீஸுக்கு போய் போஸ்ட்மாஸ்டரைப் பாரு” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் போய்விட்டார்.

கண் ஆஸ்பத்திரிக்குப் பக்கம் இருக்கும் ஹெட் போஸ்ட் ஆபிஸுக்கு சைக்கிளை விரைவாக அழுத்தினேன். அங்கே நிதானமாக பால்பாயிண்ட் பேனாவில் காது குடைந்துக்கொண்டு இருந்த ஒருவரை அணுகி, “போஸ்ட் மாஸ்டரைப்” பார்க்க வேண்டும் என்றேன்.

காது குடைவதை நிறுத்தாமல் “என்ன விஷயம்?”

அவரிடமும் நான் மறந்த கதையைச் சொல்ல. காது குடைவதை நிறுத்திவிட்டு, “எந்த போஸ்ட் பாக்ஸ்?”

“கோர்ட் பிள்ளையார் கோவில் பக்கம்… மாங்கா மரத்துக்குப் பக்கத்துல..”

“அந்த லெட்டர் எல்லாம் இங்கே வராது. கோர்ட்டுக்குள்ள ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கு அங்கே போய் கேட்டு பாரு… சீக்கிரமா போ.. குளோசிங் டைம்” என்று சொல்லிவிட்டு, காது குடைவதைத் தொடர்ந்தார்.

சைக்கிள், கோர்ட் வளாகத்துக்குள் சென்றது. அங்கே இருப்பவர்களை விசாரித்த போது, சின்ன ஓட்டு வீடு மாதிரி ஒன்றை காண்பித்து, அது தான் போஸ்ட் ஆபீஸ் என்றார்கள்.

உள்ளே நுழைந்து அந்த போஸ்ட் ஆபிஸில் மேனேஜர் மாதிரி இருந்தவரைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவரை ஏதோ கல்யாணத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். முதலில் கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும் கேட்டுவிடலாம் என்று அருகில் போனேன்.

“மாமா” என்று ஆரம்பித்து என் கதையை சொன்னேன். ஏற்கனவே இரண்டு பேருக்கு என்னுடைய கதையை சொல்லிப் பழக்கப்பட்ட காரணத்தால் அவருக்குச் சொல்லுவது சுலபமாக இருந்தது.

“நாநி பையன் தானே நீ… அடடே அட்ரஸ் எழுத மறந்துட்டையா?”

அந்த ‘அடடே’வில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் சும்மா இல்லாமல் “பாருங்க சார் அட்ரஸ் எழுத மறந்துட்டானாம்” என்று பக்கத்தில் இருந்தவர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு வெற்றிலை பாக்கு போட்ட வாயுடன் சிரித்தார்.

“லெட்டர் எல்லாம் போஸ்ட் ஆபிஸுக்கு வந்தப்பறம் கொடுக்கபிடாதுப்பா இப்ப அது கவர்மெண்ட் பிராப்படி… எங்களுக்கு ரூல்ஸ் இல்லை”

“கொடுக்க வேண்டாம் மாமா… நா சொல்ற அட்ரஸை நீங்களே எழுதிடுங்க”
“அது எப்படி முடியும் … என்ன கிளாஸ் படிக்கிற?”

“ஏழாவது…”

“லெட்டர் ரைட்டிங் எல்லாம் சொல்லி தந்திருப்பார்களே ஸ்கூல… அதில அட்ரஸ் எழுத சொல்லித் தரலையா?”

கூட்டணி சிரித்தது.

“சரி நான் கிளம்பறேன் மாமா”

“என்ன கோபமா?” சொல்லிவிட்டு, பக்கத்தில் கடிதங்கள் மேல் சாப்பா குத்துபவரைக் கூப்பிட்டு, “அட்ரஸ் இல்லாமல் ஒரு லெட்டர் வந்தா அது தம்பிது” என்றார்.

சாப்பா குத்துபவர் சிரித்துக்கொண்டே இடது கையால் அந்த லெட்டரை உடனே என்னிடம் தந்தார்.

வெற்றிலை மாமா விடவில்லை.

“நீ தான் இந்த லெட்டரை எழுதினாய்ங்கறதுக்கு என்ன சாட்சி?”

“உள்ளே பெருமாள் படம் வரைஞ்சிருக்கேன்”

“லெட்டரை பிரிக்கக் கூடாதே. பின்ன எப்படிப் பார்க்கறது?”

திரும்பவும் முழிக்க ஆரம்பித்தேன்.

“சரி உன்னை நம்பறேன்… அப்பாவைக் கேட்டதாச் சொல்லு”

அட்ரஸை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது டிரவுசர் லூசான மாதிரி இருந்தது.
“என்னடா ஆளையே காணோம்… சோர்ந்து போய் வந்திருக்க .. லெட்டர் ..?”

“போட்டாச்சு” என்று முற்று புள்ளி வைத்தேன்.

ராத்திரி என் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு தாத்தா உடனே ரயில் ஏறி வருவது மாதிரி கனவு வந்தது.

மறுநாள் தூங்கி எழுந்த போது தாத்தா காபி குடித்துக்கொண்டு இருந்தார். யாரோ ‘ஒன்று விட்ட’ போய்விட்டதாக துரித ரயில் பிடித்து வந்திருந்தார். நான் எழுதிய அந்த கடிதத்தை திரும்பப் போய் படித்தாரா என்று நினைவில்லை.

* *

சில வருஷங்கள் முன் வீட்டில் திருமணத்துக்கு பெற்றோர் பெண் பார்க்க ஆரம்பித்த போது ஒரு பெண் ஜாதகம் போஸ்டில் வந்தது. படிப்பு, கோத்திரம்,… எல்லாம் இருந்தது ஆனால் பெண் வீட்டு அட்ரஸ் இல்லை.

பெண்ணின் அப்பா ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் என்று இருந்தது!

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.