மகரந்தம்

வெற்றிடம் எல்லோருக்கும் வெற்றிடமாக இல்லை

5qaw

வெற்றிடத்தில் புழுக்களால் பிழைத்திருக்க முடியுமா? முடியும் என்று சொல்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள். ஒரு நானோ உடுப்பு அல்லது மேல்மூடி இருந்தால் போதுமாம்.

http://www.biotechniques.com/news/Nanosuit-Protects-Small-Animals-From-Vacuum/biotechniques-342191.html#.UXhd3rWko4P

***

எத்தனை எத்தனை மூட்டைப் பூச்சியடா, அவை எல்லாம் நமக்கே பண மூட்டையடா?

Bb234

மூட்டைப் பூச்சிக்கு அந்நாளில் இருந்த ஒரு தடுப்பு முறை. ராஜ்மா எனப்படும் சிவப்புக் காராமணிச் செடியின் இலைகள் மூட்டைப் பூச்சிகளின் கால்களை நுண் தளைகளில் சிக்க வைத்து பிடித்துக் கொள்கின்றனவாம். இலை காயும்போது மூட்டைப் பூச்சியும் காய்ந்து போகுமா என்று தெரியவில்லை. ரோம் மக்கள் இந்த இலைகளைப் படுக்கையைச் சுற்றிப் பரப்பி விட்டுக் காலையில் அகப்பட பூச்சிகளை இலைகளோடு எடுத்துப் போய்க் கொன்று விடுவார்களாம். சமீபத்திய தலைமுறை மூ.பூச்சிகள் இதுவரை பயன்பட்ட பல பூச்சிக் கொல்லி மருந்துகளை எல்லாம் ஜிலேபி போலச் சாப்பிட்டு விட்டு ஜம்மென்று ஊர்வலம் வருவதால், அவற்றைக் கொல்ல வழி தெரியாமல் 5 நட்சத்திர விடுதிகளில் இருந்து தெருக்கோடி லாட்ஜ் வரை எல்லாரும் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்களாம். அறிவியலாளர்கள் இரண்டாம் உலகப் போர் வாக்கில் இந்த இயற்கை தடுப்பு முறை பற்றி எழுதப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை இப்போது அகழ்ந்தெடுத்து, இந்த இலைகளைப் போன்ற அமைப்பு முறை கொண்ட துணிகளை உருவாக்கி பூச்சிகளை அவற்றின் மீது நடக்க விட்டபின் அவை இலையளவு பூச்சிகளைத் தடை செய்யவில்லை என்றறிந்திருக்கிறார்கள். ஆனாலும் மனம் தளராமல் இன்னும் மேம்பட்ட அமைப்பை அடையத் தவம் செய்யத் துவங்கி இருக்கிறார்கள். ’எத்தனை எத்தனை மூட்டைப் பூச்சியடா, அவை எல்லாம் நமக்கே பண மூட்டையடா?’ என்று பாடியபடி ஆய்வு செய்வதாகக் கேள்வி.

http://blogs.smithsonianmag.com/science/2013/04/bean-leaves-dont-let-the-bedbugs-bite-by-using-tiny-impaling-spikes/

***

இயற்கை உணவு மனிதர்களுக்கு மட்டுமல்ல

organic-fruit-fly

இப்படி பள்ளி மாணவர்களை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள் சில அமெரிக்கப் பல்கலைப் பேராசிரியர்கள். இந்த ஆய்வைப் பற்றிப் படித்தல் நமக்கு வியப்பு கூட எழலாம். இத்தனை எளிய கருத்து, இதை ஏன் வேறு யாரும் செய்யவில்லை? ஆனால் அதுதான் அறிவியலின் அதிசயமே. யாராவது ஒரு அபூர்வமான விஷயத்தை எடுத்துச் செய்து காட்டினால் அட, இது ஏன் முன்னாலேயே கண்டு பிடிக்கப்படவில்லை என்று தோன்றும்.

http://well.blogs.nytimes.com/2013/04/17/is-organic-better-ask-a-fruit-fly/?src=me&ref=general

***

கவலைப்படாத இந்தியர்களும் தைரியசாலி சீனர்களும்

c85

சீனாகாரர்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல் விருப்பமானது என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜார்னல் எடுத்த கருத்துக்கணிப்பின் முடிவு. வாழ்க்கைத்தரத்தை ஐம்பது சதவிகிதமாக உயர்த்த சரி பாதி வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு தூரம் இழப்பிற்கு நீங்கள் தயார் என்பது கேள்வி. இந்தியர்களும் நிறைய சோதனைகளுக்குத் தயாராகவே இருப்பதாக பதில் அளித்திருக்கிறார்கள். வருவாய்க்கு பதில் நிதிபங்கம் ஏற்பட்டால் நடந்ததை நினைத்து எவ்வளவு தூரம் நினைந்து நினைந்து வருந்துவீர்கள் என்பது இன்னொரு கேள்வி. இந்தியர்கள் சராசரியுடன் ஒத்துப் போகிறார்கள்.

http://online.wsj.com/article/SB10001424127887323415304578368362532120512.html

***