சென்னையில் வாலி வதம் – தோற்பாவைக் கூத்து

நன்றி : The Hindu
நன்றி : The Hindu

இன்று போல ஐம்பது ஆண்டுகளுக்குமுன் சினிமா என்னும் மோகினிப்பிசாசு மக்களைப் பிடித்திருக்கவில்லை. பெருநகரங்கள் தவிர சிற்றூர்களிலும் கிராமங்களிலும் தியேட்டர்கள் கிடையாது. சினிமா விளம்பர வண்டி அவ்வப்போது எங்கள் கிராமத்திற்கு வரும். பாட்டுச் சத்தம். ஒலிபெருக்கி அறிவிப்பு கேட்டதும் சிறுவர்கள் வண்டியின் பின்னால் ஓடுவோம். அறிவிப்பாளர் தரும் துண்டுப் பிரசுரங்களை வாங்குவதில் பெரும் போட்டி. துண்டுப் பிரசுரத்தில் நடிக நடிகையர்களின் படங்களிருக்கும். கதைச் சுருக்கமிருக்கும். முடிவிருக்காது. பிற வெள்ளித்திரையில் காண்க என்று முடியும்.

நான்கைந்து குடும்பங்கள் வண்டி கட்டிக்கொண்டு பத்துமைல் தொலைவிலுள்ள தியேட்டருக்குப் போய் படம் பார்ப்போம். மர்மயோகி மனோகரா, தூக்குதூக்கி, காவேரி, நிரபராதி. இன்ன பிற….தரை டிக்கெட் ஒன்றரை அணா. பெஞ்சு நாலணா பேக் பெஞ்சு ஆறரை அணா. பேக் பெஞ்சில் உட்கார்ந்து சினிமா பார்ப்பது கௌரவமான சமாச்சாரம். ஆறுமாதத்துக்கொரு முறைதான் வாய்க்கும். மற்றபடி உல்லாசமான பொழுதுகள் கூத்தாண்டவர் தேரின்போதுதான் நேரும். ஆற்றங்கரையில் நிலாவெளிச்சம், பெட்ரோமேக்ஸ் வெளிச்சத்தில் மணலைக் குவித்து அதில் சாய்ந்துகொண்டு இராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவுகளைக் கேட்கும்போதும், தெருக்கூத்து பார்க்கும்போதும் கிராமத்துக்காரர்களெல்லாம் இந்திரர்களாகிவிடுவார்கள். வள்ளித் திருமணம், அரிச்சந்திரன் கதை, விடிய விடிய நடக்கும். தெருக்கூத்து பழங்காலத்துச் சினிமா. கதை, வசனம், பாடல்கள், நடனம், நகைச்சுவை நடிப்பு, பின்னணி இசை எல்லாமும் தெருக்கூத்திலும் இருக்கின்றன. ஆனால் சற்று வித்தியாசமான சினிமா. மனிதமனங்களில் காம வக்கிரங்களையும் வன்முறைகளையும் வளர்க்காத சினிமா.

கூத்தின் முதல் சுவாரசியம் கட்டியக்காரன்தான். கட்டியக்காரன் நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத் தருவான். ஊர்பிரமுகர்கள் பற்றி, சுற்று வட்டாரத்து சம்பவங்கள் குறித்து நிறைய நகைச்சுவையுடன் பேசத் துவங்கி மெல்ல கூத்திற்கு வருவான். கூத்து துவங்கும். இடையிடையே நகைச்சுவை இருக்கும்.

தற்காலத்தில் சினிமா வாய்ப்புக்காக அலையும் வாலிபர்களைப் போல அந்தக் காலத்திலும் குக்கிராமத்து இளைஞர்கள் வேஷங்கட்டுவதில் ஆர்வம் கொண்டு அலைவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர் கூத்துக் கலைஞர். பெண்ணைப் போல நீண்ட முடி வளர்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஆர்வம்மிக்க இரு தலைமுறைகள் தொழில்நுட்பம், வர்த்தகம் இரண்டினாலும் டைனோசாராக வளர்ந்திருக்கிற சினிமாவையும் மீறி மரபுக் கலைகளில் ஒன்றான இந்தக் கூத்துக் கலையை காப்பாற்றிவந்திருக்கிறார்கள். இதன் இன்னொரு வடிவமாக தோற்பாவைக் கூத்துகளையும் நிகழ்த்துகிறார்கள்.

Kalari Heritage and charitable Trust சார்பில் மணல்வீடு இதழின் ஆசிரியரும் நண்பருமான ஹரிகிருஷ்ணன் .6.1.2013 அன்று எலியட் பீச் அருகில் சந்திரலேகா ஸ்பேசஸ் என்ற இடத்தில் அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் வாலிவதம் தோற்பாவைகூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வெளி ரங்கராஜன் தலைமை தாங்கிப் பேசியபோது அம்மாபேட்டை கணேசன் குழுவினரின் அரவான் களப்பலி கூத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினார். பேராசிரியர் செ.ரவீந்திரன் நாட்டுப்பறக்கலைகளுக்காக நடத்தப்படும் ‘சங்கமம்’ பெரும்பாலும் திரைப்படச் சங்கமமாகிறதென்று குறிப்பிட்டார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்ற மாநிலங்களில் மரபுக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தமிழ்நாட்டில் இல்லையென்றார். எழுத்தாளர் பிரளயன் நாரத்தேவன்குடிகாடு கூத்துக் கலைஞர்கள், காஞ்சிபுரம் ராஜகோபால், புரிசை தம்பிரான் போன்றவர்களை நினைவுகூர்ந்தார். பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி மரபுக்கலைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டுமென்று பேசினார். இவர் பல கூத்துக் குழுவினரை நேரில் சந்தித்து ஆய்ந்து விரிவான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். திரைப்பட எடிட்டர் பி.லெனின். பயலா என்ற இலங்கையின்கூத்துவடிவப் பாடல்களை மறைந்த நடிகர் சந்திரபாபு நன்றாகப் பாடுவாரென்ற தகவலைத் தெரிவித்தார். தானும் கூத்துக்களில் பங்கேற்கப்போவதாக அறிவித்தார்.

மரங்கள் நிறைந்த இடத்தில் தோற்பாவை கூத்தைப் பார்க்கும்போது ஒரு கிராமிய சூழ்நிலை மனதில் தோன்றியது. திரையில் பிம்பங்களைக் கண்டாலும் மனநிலையை அது மாற்றுவதில்லை. வால்மீகிக்கும் கம்பனுக்கும் வணக்கம் சொல்லி நிகழ்ச்சி துவங்கியது. கணத்தில் தோற்பாவைகள் திரை விலகியது, மாயாவிக்கும் துந்துபிக்கும் நிகழும் போர்காட்சியும் வாலி சுக்ரீவனுக்குமிடையே நிகழும் போர்காட்சியிலும் தெரிந்த வித்தியாசங்கள், நாட்டிலே குரங்கெல்லாம் நான்தான் அரசனென்று சொல்கிறதென்ற ஜாம்பவானின் வசனமும், யானைக்கும் பானைக்கும் வித்தியாசம் தெரியாமல் மறைந்திருந்து அம்பெய்தவனின் மகன்தானே நீயென்று வாலி ராமனை இகழ்வதும், ராமா, மறைந்திருந்து நீ என்னைக் கொன்றாய், அதேபோல் நானும் மறைந்திருந்து உன்னைக் கொல்லவேண்டும் என்று வாலி கேட்பதும், கிருஷ்ணாவதாரத்தில் யாதவர்களின் போர் முடிந்தபிறகு, புல்தரையில் நான் படுத்திருக்க என் காலின் கட்டைவிரல் உனக்கு முயலின் காதாகத் தெரிய, நீ வேடனாக மறைந்திருந்து என்னைக் கொல்வாய் என்று ராமன் சொல்வதும் இந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் ரசித்த விஷயங்கள். ஒரு மணிநேரம் கடந்ததே தெரியவில்லை.

வீடு திரும்பும்போது பெங்களூரில் பார்த்த பள்ளிச் சிறுவர்கள் அனாயாசமாக நிகழ்த்திய யக்ஷகான நிகழ்ச்சி நினைவுக்கு வந்த்து. அதுபோல மரபுக்கலைகளை இளஞ்சிறார்களிடையே கொண்டுசெல்வது நல்ல பலன்களைத் தருமென்றும் நினைத்துக்கொண்டேன் வாலிவதம் போன்ற தோற்பாவைக்கூத்துகளை பள்ளிகளில் நிகழ்த்தினால் பிள்ளைகள் நிச்சயம் ரசிப்பார்கள். பிள்ளைகள் மரபுக்கலைகளை அறியவும் ஆர்வம் கொள்ளவும் உதவும்.