முறுகல் தோசை மனிதன்

தாயின் வயிற்றில் தண்ணீரில் மிதந்தேன்
குழந்தை வயதில் காற்றாய்த் திரிந்தேன்
விடலை வயதில் வானத்தில் லயித்தேன்
வாலிப வயதில் தீயாய் இருந்தேன் – இந்த
நடுத்தர வயதில் மண்ணாய்ப் போனேன்.

– யாரோ

‘பஞ்ச பூதம்’ என்று தலைப்பிட்டிருக்கக்கூடிய இந்தக் கவிதை நான் எழுதியது அல்ல; எப்போதோ படித்து நினைவில் தைத்த கருவை என் வார்த்தைகளில் திரும்ப வார்த்திருக்கிறேன்.

‘மிடில் ஏஜ் க்ரைஸிஸ்’ என்ற நடு வயது அவஸ்தைகள் இப்போதெல்லாம் இருபது வயதிலேயே வந்துவிடுவதாகத் தோன்றுகிறது. நம் அறிவுக் கூர்மை இப்போது முன்னை மாதிரி இல்லையோ என்ற கவலையைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நம் கூகிள் கலாச்சாரம் இதை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது என்று கருதுகிறார் நிக்கோலஸ் கார் : ‘என் மூளைக்குள் ஏதோ பெருச்சாளி குடைகிறது. ஒயர்களைக் கடிக்கிறது. கனெக்ஷன்களை மாற்றி இணைக்கிறது. ப்ரொக்ராம்களை அழித்து எழுதிக் கொண்டிருக்கிறது’ என்கிறார்.

‘என் சிந்தனை இப்போது முன்னைப் போல் இல்லை. அப்போதெல்லாம் நான் ஒரு புத்தகத்தையோ, நீண்ட கட்டுரையையோ மூழ்கிப் படிப்பது வழக்கம். கண்ணுக்கு எட்டிய வரை புரளும் பச்சை வயல் போன்ற வார்த்தை வெளிகளில் மணிக் கணக்காகக் காலாற நடப்பேன். இப்போது முடியவில்லை…’

உண்மைதான். இரண்டு மூன்று பக்கம் படித்த பிறகு உட்காரும் இடத்தில் அரிக்கிறது. கவனம் கலைகிறது. அலையும் மனத்தை இழுத்து வந்து புத்தகத்தில் விட்டால் தும்பை அறுத்துக்கொண்டு ஓடத்தான் பார்க்கிறது.

சின்ன வயதில் எங்கள் வீட்டு அலமாரிகளில் வாரப் பத்திரிகைகளிலிருந்து பின் விடுவிக்கப்பட்டு பைண்டு செய்யப்பட்ட புத்தகங்களில், கல்கியும் அகிலனும் சாண்டில்யனும் வால்யூம் வால்யூமாக வரிசை கட்டி நின்றிருப்பார்கள். மற்றொரு பக்கம் சர் வால்டர் ஸ்காட் போன்று இங்கிலீஷ் கல்கிகள். அம்புலிமாமாவில் சளைக்காமல் முருங்கை மரம் ஏறும் வேதாளம். புரவிகளும் இளவரசர்களும் பளபளக்கும் கேடயங்களும் நிறைந்த ஒரு மாய உலகத்தில் மணிக் கணக்காக அமிழ்ந்து கிடந்தோம். பழுப்பேறிய அந்தக் காகித வாசனைக்காகவே, நாட்டு ஓடு வேய்ந்த எங்கள் வீட்டை மறுபடி உயிர்ப்பித்து ஒரு நாளைக்காவது போய் வசிக்க முடியுமா என்று ஆதங்கமாக இருக்கிறது.

ஆனால் இப்போதெல்லாம் பரோட்டா தின்பது போல் சொற்களைப் படித்து, நினைத்து, ருசித்து, கிழித்து, மென்று, தின்று, ஜீரணித்து, தனதாக்கிக்கொள்ள யாருக்கும் அவகாசம் இல்லை. ‘சொல்ல வந்ததை காப்ஸ்யூல் காப்ஸ்யூலாகக் கொடு, டபக்கென்று விழுங்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போக வேண்டும்’ என்றுதான் குதிகாலில் நின்று பரபரக்கிறோம்.

‘எழுத்தாளன் என்ற முறையில் என் தொழிலைச் செய்வதற்காக மணிக் கணக்காக லைப்ரரி தூசியை சுவாசிக்க வேண்டியிருந்தது. கடந்த சில வருடங்களாக அந்தத் தொல்லை இல்லை. கூகிளில் தேடினால் ஆள்காட்டி விரல் ஆணையில் அத்தனை தகவலும் மேற்கோள்களும் கிடைத்துவிடுகின்றன. வேலை செய்யாத பொழுதுகளிலும் வாழ்க்கை ஆன்லைனில்தான் கழிகிறது. தலைப்புச் செய்திகளை மேய்வது, வலைப் பூக்களில் ஏதாவது அவல் கிடைக்கிறதா என்று பார்ப்பது, வீடியோ துண்டுகள் அல்லது பாட்காஸ்ட்கள் கேட்பது. இதேதான் வேலை. குரங்கு கிளை தாவுவது போல் சட்டுச் சட்டென்று லிங்க் மாற்றிச் சுட்டியைச் சொடுக்குவதுதான் பாதி நேரம்’.

பிரச்னை என்னவென்றால், இந்த மாதிரி புதிய மீடியாக்கள் (‘மீடியா’ என்ற சொல்லே பன்மை இல்லையோ?) நமக்குத் தகவல் கொடுப்பதுடன் நின்று கொள்வதில்லை. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்ற நம்முடையை thought process-ஸையும் தாமே வடிவமைக்க ஆரம்பித்துவிட்டன.

online-offline-mediaநெட் என்னுடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தும் திறமையைக் குலைத்து, கருத்துக்களை அசைபோடும் பழக்கத்தையும் கொன்று கொண்டிருக்கிறது. என் மூளை இப்போது ‘எந்தத் தகவலாக இருந்தாலும் இண்டர்நெட் வடிவத்தில் கொண்டுவா!’ என்று அதட்டுகிறது. இனி சிந்தனைக் கடலில் மூழ்கி முத்தெடுக்க யாருக்கும் ‘தம்’ இல்லை.

நான்தான் நடுத்தர வயதின் மண்ணாங்கட்டி ஆகிக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல. என் நண்பர்கள் பலரும் – அதில் பலர் அக்மார்க் அறிவு ஜீவிகள் என்றே சொல்லத் தக்கவர்கள் – தங்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்காட் கார்ப் போன்ற வலைப் பூவினரும் இதையேதான் சொல்கிறார்கள். ‘நெட் வந்த பிறகு என் படிக்கும் பழக்கம் மாறிவிட்டது. அதுகூடப் பரவாயில்லை; ஆனால் என் சிந்திக்கும் விதமே மாறிவிட்டதே!’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘இனிமேல் என்னால் ஒரு டால்ஸ்டாய் நாவலைப் படிக்க முடியாது. ஒரு ப்ளாக்கூட நாலைந்து பாராவுக்கு மேல் இருந்தால் வயிறு நிரம்பிவிடுகிறது. மேலோட்டமாக சாம்பிள் பார்த்துவிட்டு அடுத்த சுட்டிக்குப் போய்விடுகிறேன்’.

லண்டன் பல்கலைக் கல்லூரியில், ஆராய்ச்சிப் பழக்கங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். நாம் படிக்கும், சிந்திக்கும் விதங்களில் பெரும் மாறுதல்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று நினைக்க இடம் இருக்கிறது. பிரிட்டிஷ் லைப்ரரியின் ஆன்லைன் ஆராய்ச்சித் தளங்களுக்கு வந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்ததில், யாருமே ஒரு கட்டுரையை இரண்டொரு பக்கத்துக்கு மேல் படிப்பதில்லை; ஒரு முறை பார்த்த சுட்டிக்கு அநேகமாக மறு முறை வருவதில்லை என்று தெரிந்தது.

‘நம் அப்பா-அம்மா தலைமுறையில், படிக்கிற பழக்கத்தை டெலிவிஷன் பிடுங்கிக் கொண்டது. இப்போது இண்டர்நெட், எஸ்.எம்.எஸ் எல்லாம் வந்த பிறகு எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு மறு வாழ்வு கிடைத்திருக்கிறது. ஆனால் அவசரத் துணுக்குத் தகவல்களால் மூளை நிரம்புகிறதே தவிர, தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, கேள்வி கேட்டு, ஒப்பிட்டு, உணர்ந்து கொள்ளும் நம் உயர் திறமைகள் நழுவிக் கொண்டிருக்கின்றன.’

google-cartoon-03
google-cartoon-01

பேசும் மொழி என்பது உள்ளுணர்வால் மனிதனுக்கு உடன் பிறந்த திறமை. ஆனால் படிப்பது என்பது, கற்றுக்கொண்ட திறமைதான். எழுத்து வடிவத்தில் உள்ள குறியீடுகளைக் கோர்த்து வார்த்தையாக்கி மொழியாக்கிப் பொருளாக்கிப் புரிந்துகொள்வதற்கு, நம் மூளைக்குள் உள்ள நியூரான்களில் சில பல இணைப்புக்கள் தேவை. இந்த இணைப்புக்கள் அனுபவத்தின் வழியே மெல்ல மெல்லத்தான் உருவாகும்.

சைனீஸ் போன்ற பூச்சி எழுத்து மொழிகளில், இடியோக்ராம் என்று முழுதாக ஒரு கருத்தை அல்லது செயலை ஒரே சித்திரத்தால் குறிப்பிடுகிறார்கள். (ஒன்றாம் வகுப்பு பாஸ் செய்வதற்குள் குழந்தைகளுக்குத் தாவு தீர்ந்துவிடாதோ?) தமிழ், ஆங்கிலம் போல எழுத்துக் கோவைகள் – ஸிலபிள்களின் – அடிப்படையில் அமைந்த மொழி பேசுபவர்களுக்கும் சீனர்களுக்கும், மூளையின் நியூரான் இணைப்புகளில் வேறுபாடு உண்டு. மூளையின் நினைவகங்கள் மட்டுமின்றி, காட்சி, ஒலிகளை அறியும் பிரதேசங்களிலும் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

இதே போல், ஆர அமறப் புத்தகம் படித்து அறிவு பெற்றவர்களுக்கும், அவசரமாக கூகிளில் தேடிப் பத்தே செகண்டுகளில் அடுத்த லிங்க்கிற்கு ஓடி விட்டவர்களுக்கும், மூளையின் அமைப்பில் வேறுபாடு உண்டா?

1882-லேயே நீட்ஷே இப்படி ஒரு விளைவை அனுபவித்திருக்கிறார். கண் பார்வைக் குறைபாடு காரணமாக அவருக்கு எழுத முடியாமல் போய்விட்டது. டைப்ரைட்டர் ஒன்று வாங்கிக்கொண்டு அதில் தட்ட ஆரம்பித்தார். கண்ணைத் திறக்காமலே சுலபமாக டைப் செய்ய முடிந்தது. ஆனால் இப்போது அவரது வாசகர்கள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார்கள். ஏற்கனவே சிக்கனமான அவரது எழுத்து நடை, இன்னும் தந்தி பாஷயாகச் சுருங்கிவிட்டது. வாதங்களுக்குப் பதிலாக போதனைகள். சிந்தனைகளுக்குப் பதிலாக சிலேடைகள்!

நாம் உபயோகிக்கும் கருவிகள் நிச்சயம் நம் சிந்தனையைப் பாதிக்கின்றன.

நம் மண்டை ஓட்டுக்குள் பத்தாயிரம் கோடி நியூரான்கள். அவற்றுக்கு இடையே எத்தாயிரம் கோடி இணைப்புக்களோ. இந்த நரம்பு செல் இணைப்புகள் நிரந்தரம் அல்ல; பிரிந்தும் பிணைந்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நம் அனுபவம், சிந்தனை, படிப்பு, நினைப்பு எல்லாமே இந்த இணைப்புகளை பாதிக்கின்றன. சிம்ரன், குஷ்பூவுக்கான நியூரான் சங்கிலிகள் முறிந்து, அங்கே அசின், ஸ்ரேயா என்று புதிய நரம்பு இணைப்புகள் ஏற்படுகின்றன. மூளை என்பது, தன்னைத் தானே ப்ரொக்ராம் செய்துகொள்ளும் கம்ப்யூட்டர் மாதிரி.

நம் மூளையை விரிவாக்கும் டெக்னாலஜிகளை அதிகம் கையாளக்Better Be Prompt! கையாள, நாமும் அந்த டெக்னாலஜியின் வடிவத்தை எடுத்துக்கொள்கிறோம். உதாரணம் வேண்டுமா? 14-ம் நூற்றாண்டில் கடிகாரம் பரவலாக உபயோகத்துக்கு வந்தது. அதற்கு முன்னால் சூரியன், ருது, கொட்டாவி இவற்றை வைத்து மனிதன் நேரத்தைக் கணித்துக் கொண்டிருந்தான். நீட்டலளவைகளும் சாண், முழம் என்று நமக்கு மிகவும் பர்சனலாக நெருங்கியிருந்தன. கடிகாரம் வந்த பிறகு அது காலம் என்பதை, மனிதனின் சுய அனுபவத்திலிருந்து தனியே கழற்றி விட்டு விட்டது. நமக்கு சம்பந்தமில்லாமல், கணித பூர்வமாக அளவிடக்கூடிய நிகழ்ச்சிகளின் கோர்வையாக மாறிவிட்டது.

அந்த உயிரில்லாத இயந்திரத்தின் டிக்டிக்கைக் கேட்டுக்கொண்டுதான் நாம் எப்போது பல் தேய்ப்பது என்பதைக்கூட முடிவு செய்யும் அளவுக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது. இதற்கும் நாம் பழகிவிட்டதால், எதுவும் வித்தியாசமாக உறைப்பதே இல்லை. பசித்தபோது சாப்பிடுவதற்கு, களைத்தபோது தூங்குவதற்குப் பதிலாக, கடிகாரம் சொன்னபோது இவற்றைச் செய்ய ஆரம்பித்தோம். நம் புலன்கள் சொல்லும் நேரடி அனுபவத்தைப் புறக்கணித்து, இயந்திரத்தின் ஆணைக்கு கண்ணை மூடிக்கொண்டு கீழ்ப்படியப் பழகிவிட்டோம். நாலு ஸ்ப்ரிங், இரண்டு பல் சக்கரத்துக்கு நம் வாழ்க்கையின் மீது இத்தனை அதிகாரமா ?

அலாரம் டைம் பீஸை எடுத்துச் சுவரில் அடிப்பதற்கு முன்னால் இதையும் யோசியுங்கள்: இப்போது கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும்தான், நம்முடைய கடிகாரம், டைப்ரைட்டர், அச்சாபீஸ், கால்குலேட்டர், டெலிபோன், டிவி, ரேடியோ எல்லாமாகவும் அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் தலைப்புச் செய்திகளை மேய்ந்து கொண்டிருக்கும்போதே மூலையில் சிறு பலூன் புறப்பட்டு, ‘உனக்குப் புதிய மெயில் வந்திருக்கிறது’ என்று கவனத்தைக் கலைக்கிறது; மனதை ஒருமுகப்படுத்த விடாமல் சதா சட்டையைப் பிடித்து இழுத்து நச்சரிக்கிறது.

நெட்டின் அராஜக ஆட்சி, நம் கம்ப்யூட்டர் மானிட்டரின் நாலு மூலைகளுக்குள் அடங்கிவிடுவதில்லை. சாதுவான பழைய மீடியாக்களான டி.வி, செய்தித்தாள் இவையும் நெட்டைப் பார்த்துக் கெட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன. டி.வியில் மேலே சாவு நியூஸ் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்; கிழே பங்கு மார்க்கெட் ஓடுகிறது. அல்லது பாப்-அப் செய்தி ஒன்று ‘நாளைக்கு வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சி – காணத் தவறாதீர்கள்’ என்கிறது.

பத்திரிகைகளில் யாருக்கும் நாலு பக்க சிறுகதை படிக்கப் பொறுமையின்றி ஒரு பக்கம், அரைப் பக்கம் என்று சுருங்கி, இப்போது இடது பக்க மூலையில் காது மடிக்கும் இடத்துக்குள் கதை சொல்லி முடித்தாக வேண்டும். வார்த்தைக் காடுகளாக இருந்த சென்னையின் செய்தித்தாள்கள்கூட, பக்கம் நிறையப் படங்கள் நிரப்பி, கிட்டத்தட்ட இந்திரஜால் காமிக்ஸ் ரேஞ்சுக்கு வந்துவிட்டதைக் கவனித்திருக்கலாம். நியூ யார்க் டைம்ஸ் இரண்டு பக்கங்களுக்கு செய்திச் சுருக்கத் துணுக்குகளாகப் பிரசுரிக்க முடிவு செய்தபோது சொன்ன காரணம், ‘ஜனங்களுக்கு இனி படிக்க நேரமில்லை’. பழைய மீடியாவும் இனி புதிய மீடியாவின் விதிகளின்படிதான் 20-20 விளையாட முடியும்.

இதையெல்லாம் பார்க்கும்போதுதான் ரிச்சர்ட் ஃபோர்மன், நாமெல்லாமே ஆழம் இழந்து தட்டையாகிக் கொண்டிருக்கிறோம் என்கிறார். (pancake people.) இருக்கிற கொஞ்ச கவனத்தை, பல திசைகளில் தோசை மாதிரி மெல்லிதாகப் பரப்புகிறோம். இனி நம்மை ‘தோசை மனிதர்கள்’ என்றுகூடக் கூப்பிடலாம்.

நல்ல முறுகலான பேப்பர் ரோஸ்ட்!

One Reply to “முறுகல் தோசை மனிதன்”

Comments are closed.