க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்

kanasu2

க.நா.சுவின் இலக்கிய விமர்சனச் செயல்பாடுகள், பொய்த்தேவு நாவலின் சிறப்பு இவற்றைத் தாண்டி அதிகம் பேசப்படாத புனைவிலக்கியச் செயல்பாடுகள் குறித்து ஒரு தொகுப்புப் பார்வையை முன்வைக்கிறார் ஜெயமோகன். இது அவரெழுதிய ‘சென்றதும் நின்றதும்’ என்ற இலக்கிய விமர்சனப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. வெளியீடு: தமிழினி பதிப்பகம்.

11401770

க.நா.சு வை ஒரு படைப்பிலக்கியவாதியாக பலர் பொருட்படுத்துவது இல்லை. அதற்குக் காரணம் விமரிசகராக அவரது இடம் பெரும்பாலானவர்களின் நினைவில் பதிந்திருப்பதே. க.நா.சு மூன்று தளங்களில் தீவிரமாக எழுதியிருக்கிறார். நாவல்களில் அவரது எழுத்தின் அளவு வியப்பூட்டுவதே. ’பொய்த்தேவு’, ‘ஒருநாள்’ முதல் ‘பித்தப்பூ’ வரை. இவற்றில் முதலிரு நாவல்கள் தவிர பிறவற்றை தேர்ந்த வாசகன் பொருட்படுத்தமாட்டான் என்றே எண்ணுகிறேன். ‘வள்ளுவரும் தாமஸும்” நாவல் அதன் அடிப்படைக் கருத்தியல் உருவகம் சார்ந்து முக்கியமான ஒன்று என்று ஞானி கூறியிருக்கிறார். அசோகமித்திரன் அவரது ‘அவதூதர்’ குறிப்பிடத்தக்க முயற்சி என்று கூறியிருக்கிறார். ‘அசுரகணம்’ அதன் புகைமூட்டமான கூறுமுறைக்காக முன்னோடியாகக் கருதப்பட்டது. நகுலன் அந்நாவலில் இருந்துதான் தன் எழுத்துமுறையை கண்டறிந்தார். இப்படிப் பலவகைகளிலும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பல நாவல்களில் இருந்தாலும்கூட அவை இலக்கியப்படைப்புகளாக முழுமை பெறவில்லை என்பதே என் எண்ணம். எவ்விதமான படைப்பூக்கதிற்கும் ஆளாகாமல் வெறும் கருத்துக்களாகவே நாவல்களை உருவகித்து தளர்வான நடையில் அவற்றைச் சொல்லிச் செல்கிறார் க.நா.சு. அவரது சிறுகதைகள் வெறும் கருத்துத் துளிகள் மட்டுமே. புதுக்கவிதையில் அவரது பங்களிப்பு அதன் கருத்தியல், அழகியல் அடிப்படையை நிறுவுவது சார்ந்து முக்கியமாகக் கூறத்தக்கது. அவர் கவிஞர் அல்ல, ஆக, எஞ்சுவது இரு நாவல்கள் மட்டுமே.

அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன் மயன் என்ற பேரில் க.நா.சு. எழுதிய கவிதைகளைப் பற்றி ஒரு எளிய புரிதலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமிழில் புதுக்கவிதை என்ற சொல்லாட்சியை உருவாக்கியவர் க.நா.சு. என்பது சொல்லப்பட்டுவிட்டது. இரண்டாயிரம் ஆண்டு பழமை கொண்ட ஒரு மொழியில் புதிய கவிதைவடிவம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்துவது எளிய விஷயமல்ல. தமிழில் புதுக்கவிதை பாரதியிலிருந்து தொடங்கியது. ந.பிச்சமூர்த்தி அதன் ஆரம்பகால வடிவங்களை அமைத்தார். ஆனால் பாரதியும் பிச்சமூர்த்தியும் ஏற்கனவே உருவான நவீனகற்பனாவாதக் கவிதைகளின் மனநிலையையே யாப்பு இல்லாத வடிவில் எழுதினார்கள். அந்த மனநிலையையும் மாற்ற முற்பட்டவர் க.நா.சு. இன்றும் தமிழ் புதுக்கவிதை உலகை ஆளும் பல கருத்துகள் க.நா.சு. உருவாக்கியவையே. க.நா.சுவின் கருத்துக்களுக்கு முன்னோடி படிமவியலாளரான எஸ்ரா பவுண்ட் என்பது வெளிப்படை. அலங்காரம் இல்லாத கறாரான நடை, குறிப்புணர்த்தலை நம்பி இயங்கும் தன்மை, உணர்வுகளை வெளிப்படுத்த முயலாமல் மன எழுச்சியை மட்டுமே வாசகனுக்குப் பகிர்ந்து கொள்ள முயல்தல், ஒலியழகை முற்றாகத் துறத்தல் ஆகியவை எஸ்ரா பவுண்டின் கவிதைக் கோட்பாடுகள் (படிமவியல் ஒரு மறுபார்வை). அவற்றையே க.நா.சுவும் முன்வைத்தார். அவற்றை வலியுறுத்தியும் மாதிரி காட்டவும் கவிதைகளை எழுதினார். அவரது கவிதைகள் அதிர்ச்சிகளை உருவாக்கி கவனத்தை ஈர்த்தன. அதையொட்டி அவர் கூறிய  விவாதக்கருத்துகள் (தன்னை உள்ளடக்கி அவர் போட்ட மேஜர் கவிஞர்களின் பட்டியல்) பெரிய அளவில் சலசலப்பை உருவாக்கியது. விளைவாக, புதுக்கவிதையின் வடிவம் பெரும்பாலான நவீன இலக்கிய வாசகர் மனதில் ஆழப்பதிந்தது. இது அவரது பெரும் பங்களிப்பே. ஆனால் அவரது கவிதைகளின் உள்ளே போதாமை என்னவென்றால் அவை கவிதைக்கு அவசியமான மன எழுச்சியே இல்லாமல் சாதாரண மனநிலையில் சகஜமாக வெளிப்படுகின்றன என்பதே. உணர்ச்சியில்லாமல் இருப்பதல்ல, உணர்ச்சிகளைக் குறிப்புணர்த்தலே நவீன கவிதையில் உத்தி. க.நா.சுவின் கவிதைகள் மட்டுமல்ல, அவர் மேஜர் கவிஞராக எண்ணிய ஷண்முக சுப்பையாவின் கவிதைகளும் இன்று உதிர்ந்து மட்கிவிட்டன.

க.நா.சுவின் சிறு நாவல் ‘ஒருநாள்’. வடிவரீதியாக இதைக் குறுநாவல் என்றே கூறிவிடலாம். 1951ல் இரண்டே மாலை நேரங்களில் சென்னை பல்கலை நூலகத்தில் வைத்து இதை எழுதி முடித்து உடனே அச்சுக்கு அளித்துவிட்டதாக க.நா.சு கூறியிருக்கிறார். இது மிக எளிமையான அமைப்பு கொண்டது.மேஜர் மூர்த்தி ஒருநாள் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்தில் தங்குகிறான். அன்று அவன் காண்பதும் பேசுவதும் இறுதியில் அவ்வூருடன் அவனுக்கு ஒரு நிரந்தர தொடர்பு ஏற்படுத்வதும்தான் கதை.மேஜர் மூர்த்தியின் கதாபாத்திரத்தை அதிகச் சிக்கலில்லாமல் சரளமாக உருவாக்கிவிட்டார் க.நா.சு. உலகம் சுற்றி, போர்களைக் கண்டு திரும்புபவன் அவன். அதே சமயம் உறுதியற்ற ஆளுமை கொண்டவன். இந்தக் கதாபாத்திர உருவாக்கத்தில்தான் க.நா.சுவின் மொத்தப்படைப்பூக்கமும் செயல்படுகிறது. ‘உலகம் கண்ட’ ஒருவன் உறுதியான ஆளுமை கொண்டவனாக உருவாகியிருப்பதுதான் சாதாரணமாக நமது பொதுவான ஊகத்திற்குச் சிக்குவது. தன் முதிர்ந்த விவேகம் மூலம் அதை வேறு கோணத்தில் பார்க்கிறார் க.நா.சு. அவன் உலகம் சுற்றுவதே இயல்பான, ஓர் ஆழமின்மையினால், நிலையின்மையினால்தான். ஆழமும் நிலையும்  கொண்டவர்களால் இருந்த இடத்திலிருந்தே உலகை அறியமுடியும்.அப்படிப்பட்ட கதாபாத்திரமாக மூர்த்தியின் மாமியை அதிகத் தகவல்கள் இல்லாமல் உருவாக்கிக் காட்டிவிட்டு இரு கதாபாத்திரங்களையும் வாசகன் மனதில் மோதவிட்டு விட்டு விலகிவிடுகிறர் நாவலாசிரியர்.

891526’ஒருநாள்’ நாவலின் ஒட்டுமொத்தமான தர்க்க அமைப்பு இப்படித்தான் இருக்கிறது. சாத்தூர் சர்மானிய அக்ரஹாரத்துக்கு வரும் மூர்த்தி உலகமே பலவிதமான புயல்காற்றுகளில் தலைசுற்றி ஆடிப் பறக்கையில் எளிமையும் நிதானமும் அழகும் கொண்ட நிலையான அமைதியான இடமாக அதைக் காண்கிறான். அதை அப்படி வைத்திருப்பது நம்முடைய குடும்பம் என்ற அமைப்புதான் என்ற முடிவுக்கு வருகிறன். அதில் தன்னையும் இணைத்துக்கொள்ள முடிவெடுக்கிறான். அந்த ஒரு நாவலில் மூர்த்தி சந்திக்கும் பலவிதமான கதாபாத்திரங்கள் பல கோணங்களில் குடும்பம் சார்ந்த உறவுகளைப் பற்றிப் பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதைத் தளை என்றும் மனிதனுக்கு அவசியமான இயல்பான அவசியமான கடமைகள் அவை என்றும் இரு கோணங்களில் வாதகதிகள் விரிகின்றன. அவ்வுரையாடல்களில் கவித்துவமும் ஆழமும் கைகூட முடியா தென்றாலும் சகஜத்தன்மையும் கூறவேண்டியதை மட்டும் கூறிவிடும் கூர்மமும் உள்ளது என்றே படுகிறது. ஆகவேதான் இந்நாவல் இப்போதும் படிக்கத்தக்கதாக உள்ளது. க.நா.சுவின் பிற்கால நாவல்களில் உள்ள உரையாடல்களில் இந்த இனிமையும் சரளமும் இல்லை என்று படுகிறது.

‘ஒருநாள்’ நாவலை தமிழின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக ஆக்குவது க.நா.சு பிரக்ஞையுடன் நகர்த்திச் செல்லும் திசைக்கு எதிராகத் திரும்பி ஓடும் பல ஆழமான ஓட்டங்களையும் அந்நாவல் கொண்டுள்ளது என்பதுதான். சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் எளிய அழகிய முழுமையான வாழ்வைக் கூறும் க.நா.சுவின் சித்தரிப்புதான் வம்புகளிலேயே வாழும் மனிதர்களைச் சொல்லிச் செல்கிறது. விதவைகள் நீரோடையின் ஆழத்தில் குளிர்ந்து கிடக்கும் கற்கள்போல சாத்தூர் அக்ரஹாரத்தில் காலத்திற்குள் நிரம்பிக் கிடப்பதைச் சொல்கிறது. அதைவிட முக்கியமாக எப்படி சர்வசாமானிய அக்ரஹாரம் நமது மரபு உருவாக்கிய நிலையான குடும்ப வாழ்வின் விளைவான அமைதியால் ஆனது என்று மேஜர் மூர்த்திக்குப் படுகிறதோ அதேபோல அவனுடைய ஆழ்மனத்திற்கு அந்த அக்ரஹாரத்தின் அழகிய மூங்கில் மரக்கூட்டம் சிலுவையில் ஏறிய ஏசுவாகவும் படுகிறது. அக்ரஹாரத்தில் அனைவருமே மூர்த்தியை மங்களத்தின் பிள்ளை என்று மட்டுமே அடையாளப்படுத்துவது, மாமாவின் பெண்ணுடன் மேஜர் மூர்த்தியின் திருமணம் இயல்பாகத் தீர்மானமாவது, அப்போது ஏற்படக்கூடிய குழப்பமும் இனிமையும் கலந்த உணர்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாகவும் மிதமாகவும் கூறியிருக்கிறார் க.நா.சு. இந்நாவலின் குறை என்றால் க.நா.சுவால் முழுமையாகவும் நிறைவாகவும் புற உலகச் சித்தரிப்பை அளிக்கமுடியவில்லை என்பதுதான். அந்த அக்ரஹாரத்தை நம்மால் மனக்கண்ணில் முழுமையாக விரித்துக்கொள்ள முடியவில்லை. அவரால் செவிவழிச் செய்திகளைக் கூறுவதுபோலத்தான் கூறமுடிகிறது. கண்ணெதிரே சித்தரித்துக் காட்ட  இயலவில்லை. அவரது மொழியும் பலவீனமானது. நுட்பங்களைத் தொடும்படித் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளத் திராணியில்லாத சாதாரண உரையாடல் போன்ற மொழி. சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் என்ற சொல்லை எடுத்துவிட்டால் நாவலில் பல பக்கங்கள் குறைந்துவிடும் என்று சிறந்த வாசகராகிய ஒரு நண்பர் கூறியிருந்தார்.

க.நா.சு இந்நாவலில் முன்வைக்கும் ‘கிராம தரிசனத்திற்கு’ எந்த வகையான கருத்தியல் மதிப்பும் இல்லை. க.நா.சு வெகுகாலம் முன்பே அக்ரஹார வாழ்விலிருந்து வெளியே வந்துவிட்டவர். ஆனால் அவரில் எப்போதுமே பழமைக்கான ஒரு ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. இந்த அக்ரஹாரம் அவர் ஒருநாள் தங்க நேர்ந்த ஓர் ஊர்தான் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்த ஓர் அக்ரஹாரம் குறித்து அவர் ‘பொய்த்தேவு’ உள்பட பல கதைகளில் எழுதியிருக்கிறார். காரணம் இந்த அக்ரஹாரம் அவருக்குள் ஒரு குறியீடாக மாறி விட்டிருக்கிறது என்பதே. சென்ற யுகத்தில் இருந்ததாக அவர் எண்ணும்  எளிமைக்கும் அழகுக்கும் குறியீடு அது. க.நா.சுவின் இந்த அக்ரஹாரத்தை நாம் உடனடியாக ஒப்பிட வேண்டியது யூ.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ என்ற நாவலில் வரும் அக்ரஹாரத்துடன்தான். தேங்கி, நாறிப்போன ஒரு குளம் போலிருக்கிறது பிளேக் வந்து சூறையாடும் சம்ஸ்காராவின் அக்ரஹாரம். க.நா.சுவின் அக்ரஹாரத்தில் சாம்பமூர்த்தி ராயர் அந்த அக்ரஹாரத்திலேயே தன் முழுமையை அடைந்து பண்டரிபுரத்திற்குப் போய் வருகிறார். அனந்தமூர்த்தியின் பிராணாச்சாரியாருக்கு அக்ரஹாரம் மூச்சுத் திணறலையே அளிக்கிறது. தான் பிரதிநிதித்துவம் செய்யும் வைதிக நெறிக்கும் அக்ரஹார வாழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் உணர்கிறார். அதனூடாக மிகப் பெரிய மன மோதல்களையும் தெளிவையும் அவர் அடைகிறார். சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் என்பது க.நா.சு தன்னுடைய அக ஆழத்தில் ஓர் இனிய கனவாகச் சுமந்து அலைந்த ஓர் அந்தரங்க உருவகம் மட்டுமே. பெரும்பாலான மனிதர்களுக்கு ‘ஓய்வு பெற்ற பிறகு’ போய் தங்கி ’நிம்மதியாக வாழவேண்டிய’ ஓர் இடம் உள்ளூர இருக்கும். அதுதான் இது. காலத்தில் எவரும் பின்னோக்கிச் செல்ல முடியாது. ஆகவே எவருமே அங்கு சென்று சேர்வதில்லை. காரணம் அந்த இடம் எப்போதும் கவலையில்லாமல் தனித்துத் திரிந்த இளமைக்காலத்தின் நினைவுகளில் இருந்துத் திரட்டப் பட்டதாகவே இருக்கும். சாத்தூர் சர்மானிய அக்ரஹாரமும் எங்கும் இல்லாத இருக்கமுடியாத, க.நா.சு தன் கனவுகளில் மட்டுமே சென்று சேரக்கூடிய ஓர் இடம் மட்டுமே.ஆனால் வெறுமொரு பகற்கனவாக அது பதிவாகவில்லை. க.நா.சுவிற்குப் பழமை மீதான ஈர்ப்புடன் சேர்ந்து அவருக்கு இருந்த கூச்சங்கள், பலங்கள் ஆகியவையும் அந்நாவலில் பதிவாகியுள்ளன. அதனூடாகச் சிக்கலான பல உள்ளோட்டங்கள் இந்நாவலில் நிகழ்ந்துள்ளன. ஆகவேதான் ‘ஒருநாள்’ எப்போதுமே புறக்கணிக்க முடியாத ஆக்கமாக உள்ளது.

க.நா.சுவின் மிகச்சிறந்த ஆக்கம் ‘பொய்த்தேவு’தான். இந்நாவலின் சிறப்புகளில் முக்கியமானதை ஏற்கனவே பலதடவை நான் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழில் நாவல் என்ற வடிவம் நோக்கிய மிக முக்கியமான முன்னகர்வு இப்படைப்பு. இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அ.மாதவையா, ராஜம் அய்யர், வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் எழுத்துக்கள் வெறும் முன்னோடி முயற்சிகள் மட்டுமே. கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அள்ளிப்போட்டு நிரப்ப உகந்த கோணிகளாகவே அவ்வடிவை அவர்கள் கண்டிருக்கிறார்கள். அவற்றில் அவர்களுடைய வாழ்க்கை சார்ந்த அவதானிப்புகள், அனுபவப் பதிவுகள், சிந்தனைகள் உள்ளன என்பதனாலேயே அவை குறிப்பிடத்தக்கவையாக ஆகின்றன. நாவல் என்ற வடிவத்தை நோக்கி பிரக்ஞையுடன் எடுத்து வைக்கப்பட்ட முதல் எட்டு ‘பொய்த்தேவு’. ஆனால் நாவலாசிரியனுக்குத் தேவையான ‘எதையும் நிகழ்த்தக்கூடிய’ புனைவு மொழி, விரிவான வாழ்க்கை அவதானிப்புகள், புற உலகை நிகழ்த்திக் காட்டும் திறன் ஆகியவை ‘பொய்த்தேவு’வில் இல்லை. என்பதால் அது நாவலாக முழுமை பெறவில்லை. தொடர்ந்துதான் ‘தலைமுறைகளும்’ ‘ஒரு புளிய மரத்தின் கதை’யும் வெளிவந்தன. இந்நாவலின் மிகச்சிறந்த அடுத்த அம்சம் நாவல் என்ற புனைவு வடிவில் கவித்துவ உருவகம் (மெட்டஃபர்) என்பது எந்த அளவுக்கு முக்கியமான ஒன்று என்று அது எடுத்துக் காட்டியது என்பதுதான். புனைவின் சாத்தியங்களினூடாக விரியக்கூடிய ஒன்றல்ல இந்நாவல். கவித்துவச் சாத்தியக்கூறுகள் மூலமே விரிந்து கவித்துவமான உச்சத்தைத் தொட்டது. அவ்வகையிலும் தமிழ் நாவலுக்கு இது ஒரு வழிகாட்டியே, சோமு முதலியை அழைத்து ‘இட்டுச் செல்லும்’ அந்த ஆலயம ணியோசை தமிழிலக்கியத்தின் முக்கியமான கவித்துவ வெளிபாடுகளில் ஒன்றுதான்.

’பொய்த்தேவு’வின் சோமு முதலியை சற்று வேறுபாடுகளுடன் ‘மலர் மஞ்சம்’ (தி.ஜானகிராமன்) நாவலில் கோணவாய் நாயக்கராகக் காண்கிறோம். உண்மையிலேயே கும்பகோணத்திலிருந்த ஒருவராக அவர் இருக்கலாம். இந்நாவலின் மையக்கரு, மனிதனுக்குக் கணந்தோறும் எத்தனை கோடி தெய்வங்கள் தேவைப்படுகின்றன என்ற மன எழுச்சி புதுமைப்பித்தனின் ‘கயிற்றர’வில் உள்ளது.

‘எத்தனை ஏமாற்று…எத்தனை கடவுள்கள்… வாய்க்கு ருசி கொடுக்க ஒரு கடவுள்…வயலுக்கு நீர்பாய்ச்ச ஒரு கடவுள்…வியாச்சியம் ஜெயிக்க, ஜோசியம் பலிக்க, அப்புறம் நீடித்து நிசமாக உண்மையான பக்தியுடன் கும்பிட…எத்தனையடா எத்தனை! நான் தோன்றியபிறகு எனக்கு என்று எத்தனை கடவுள்கள் தோன்றினார்கள், எனக்கே இத்தனை என்றால் என்னைப்போன்ற அனந்தகோடி உயிர் உடம்புகள்கொண்ட ஜீவநதியில் எத்தனை! ஆற்றுமணலைக்கூட எண்ணிவிடலாம். இந்தக் கடவுளர்களை? ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனை கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்களும் மடிந்துவிடுகிறார்களா?…அவர்கள்தான் மனம் என்ற ஒன்று கால வெள்ளத்துக்கு அருகே அண்டி விளையாடும் மணல் வீட்டை பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள் க.நா.சு தனக்கு திருமுறைப் பாடல் ஒன்றிலிருந்து ‘பொய்த்தேவு’ என்ற வரி கிடைத்ததாக எழுதியிருக்கிறார். அவரை அறியாமலே புதுமைப்பித்தனின் வரிகள் அவரைத் தூண்டியிருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நம் சித்தர் சித்தாந்த மரபில் பலகாலமாக இருந்துகொண்டிருக்கும் ஒன்றுதான். அதை ஒரு மனிதனின் வாழ்க்கை முழுக்க, செயல்படுத்திப் பார்த்திருக்கும் படைப்பு ‘பொய்த்தேவு’.

தன்மொழியால் எதைச்செய்யமுடியுமோ அந்த எல்லைக்கு அப்பால் சற்றும் நகரமுயலாமல் சீராக இக்கதையை சொல்லியிருக்கிறார் க.நா.சு. சோமு முதலியின் சிறு வயதிலேயே ததும்பும் உயிர் சக்தி, இச்சா சக்தி என்று அது மரபில் கூறப்படுகிறது. அந்த இச்சா சக்தியே சோமு முதலியை போகங்களை, வெற்றியை, அங்கீகாரங்களை நோக்கி இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு படியில் ஏறிய பிறகும் எஞ்சும் சக்தி மேலும் மேலும் என்று இலக்குகளைக் கோரி முட்டி மோதுகிறது. அது அனைத்தையும் அடைந்த பிறகு அடையவே முடியாத  ஓர் இடத்தையே குறி வைக்கும். வேறு வழியே இல்லை. சோமு முதலி, சோமு பண்டாரமாகி அதை நோக்கிச் செல்கிறான். கணம்தோறும் தெய்வங்களைப் படைத்து அத்தெய்வங்களையே படிகளாக மிதித்து ஏறி ஒரு தெய்வமற்ற வெறுமை வரை செல்கிறான். வழிகாட்டி அழைத்துச் செல்கிறது அந்த ஆழத்துக் கண்டா மணியோசை. ‘வேறு ஒரு’ சாத்தூர் அருகே சோமு முதலி செத்துக்கிடக்கையில் கூட, அவனுக்குச் சற்று அப்பால் அந்த மணியோசை ஒலித்துக்கொண்டிருக்கும்.

சோமு முதலியின் தெய்வங்களின் கணங்களுக்கு மாற்றாக சாம்பமூர்த்தி ராயரின் பாண்டுரங்கன் நாவலில் வருகிறது. பாண்டுரங்கனை நெருங்கி, விலகியே அவர் அலை மோதுகிறார். சோமுவுடையது பயணம். ராயருடையது ஊஞ்சல். ராயர் எங்கேயும் போகமுடியாது. படிப்படியாக தன்னையழித்து பாண்டுரங்கனில் மறைவதைத் தவிர, அவர் எதையுமே  அறியமுடியாது. அறிந்தவற்றை இழந்து வெறுமை கொள்வதைத் தவிர.அந்த  வெறுமையை அஞ்சியே அவர் நடுவே பாண்டுரங்கனிடமிருந்து தப்பி ஓடுகிறார். பாண்டுரங்கன் விலகிச் சென்றபோதுதான் விஸ்வரூபம் எடுப்பான் என உணர்ந்து மீண்டு வருகிறார். சோமுவையும் ராயரையும் மனதில் ஒப்பிட்டு வளர்த்துக் கொள்ளும் நமது வாசகன் நமது மரபின் ஆன்மீகத் தேடல்களின் இரண்டு வகை மாதிரிகளுக்கு இடையேயான உறவை அறியலாம். அக்கதாபாத்திரங்களை க.நா.சு இந்தக் கோணத்தில் விரிவுபடுத்தவில்லை என்றாலும் இவ்வாசிப்புக்கான சாத்தியங்கள் உள்ளன. நாவல் முழுக்க வெறுமே சொல்லிப் போகும் பாவனையில்தான் க.நா.சு சோமுவின் வரலாற்றை முன்வைக்கிறார். பல இடங்கள் நுட்பமற்ற தட்டையான கூறல்முறைகளால் ஆனவை. ஆயினும் ‘பொய்த்தேவு’ தமிழின் ஒரு முக்கியப் படைப்பேயாகும்.

தமிழில் க.நா.சுவின் இடம் என்ன? அவரது இரு நாவல்களும் கலைச்சாதனைகளே. ஆனாலும் தமிழ் புனைவிலக்கியத்தில் அவரது இடம் ஒப்புநோக்க முதன்மையானதல்ல. அவர் விரிவான விமரிசன மதிப்பீடுகளை உருவாக்கியவர். ஆனால் அவரது விமரிசனங்கள் எவையுமே முழுமையான இலக்கிய விமரிசனங்கள் அல்ல. அவரை ஒரு இலக்கிய மையம் என்று கூறுவதே பொருத்தமானது. எல்லா மொழிகளிலும் இம்மாதிரி இலக்கிய மையங்கள் முக்கியமான மாறுதல் கணங்களில் உருவாகி வருவதைக் காணலாம். கேரளத்தில் கேசரி பாலகிருஷ்ண பிள்ளை, எம். கோவிந்தன் ஆகியோரை அப்படிக் குறிப்பிடுவார்கள். மேலை இலக்கியத்தில் பல பெயர்களைச் சொல்ல முடியும். அவர்கள் பிறரை எழுதத் தூண்டுகிறார்கள். பிறருடைய பார்வைகளை வடிவமைக்கிறார்கள். இதழ்கள், விவாதம் மையங்கள் முதலிய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். மொழிபெயர்ப்புகளைச் செய்கிறார்கள். சலிக்காமல் விவாதிக்கிறார்கள். படிப்படியான நீண்டகால முயற்சியினூடாகத் தாங்கள் விரும்பிய மாற்றத்தைப் பெரும்பாலும் சூழலில் நிகழ்த்திவிடுகிறார்கள். க.நா.சு அப்படிப்பட்ட முக்கியமான மையம். அப்படிப்பட்ட பிறிதொரு மையம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் பிற்பாடு உருவாகவில்லை. சுந்தர ராமசாமி க.நா.சுவின் நீட்சியே. அவர் வலுவான ஆளுமையே ஒழிய மையம் அல்ல. நாவலின் வடிவை க.நா.சு உருவாக்கினார். விமரிசனங்கள் மூலம் நவீனத்துவ இலக்கிய வடிவ போதத்தைப் பரப்பினார். புதுக்கவிதை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார், அவரது மொழிபெயர்ப்புகள் அவரது பட்டியல்கள் அனைத்துமே இந்த ஒட்டுமொத்தமான பெரும்பணியின் பகுதிகளாக நிகழ்ந்தன. நவீனத் தமிழிலக்கியம் க.நா.சுப்ரமணியத்திற்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது. அவரைத் தாண்டிச் செல்வதன் மூலமே அக்கடனை நாம் தீர்க்கமுடியும்.

நன்றி : சென்றதும் நின்றதும்- ஜெயமோகன், தமிழினி பதிப்பகம்

One Reply to “க.நா.சுப்ரமணியத்தின் படைப்பிலக்கியம்”

Comments are closed.