மகரந்தம்

முதலியத்தின் சரிவு ஏன்? – ஒரு அலசல்

உலக முதலியம் பெரும் சிக்கலில் இருக்கிறது. மேற்கு பல நூறாண்டுகளாக உலகைத் தன் வல்லமையால் ஆண்டு வந்தது. அதில் ஒரு அளவு உழைப்பும், ஏகப்பட்ட அறிவுத் திரட்டும் பங்களித்தன. கணிசமான பங்கு ராணுவ பலமும், சாமர்த்தியமும் கொடுத்தவை. இன்னொரு கணிசமான பங்கு இனவெறியும், தீவிரக் கிருஸ்தவத்தின் ஆதிக்கவெறி தந்த குருட்டுத்தனமும் கொடுத்த மிருகத்தனம் – தம் வெள்ளை இனத்தவரைத் தவிர, அவரிலும் கிருஸ்தவரைத் தவிர பாக்கி எல்லாரும் மிருகங்களே, தம் ஆதிக்கத்துக்கு உட்பட்டு அடிபட்டுச் சாகத் தக்கவர்களே என்ற அகங்காரமும், வெறியும் கலந்த அணுகலில் பல மிலியன் ஆஃப்ரிக்கரை அடிமைகளாக்கி நாடு கடத்துவதும், ஆசியர்களைக் கடுமையாகச் சுரண்டுவதும் யூரோப்பியருக்கு எளிய செயல்களாக இருந்ததோடு, ஆஃப்ரிக்கரிலும், ஆசியரிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியனரைத் தம் பண்பாட்டு மேன்மையின் ஆதரவாளராகவும் ஆக்கி விட்டதால் சுரண்டலை இன்னமும் தொடர அவர்களால் முடிகிறது. இத்தனை கொடுமைகள், வன்முறை, பெரும் சுரண்டல் எல்லாமும் அந்த நாகரீகங்களுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்த போதும் அவர்களால் அந்த வளத்தைத் தக்க வைக்க முடியவில்லை. இறுதிக் கணக்கில் அவர்கள் தம் மக்களிலேயே உழைப்பாளர்களையும், மத்திய வர்க்கத்தையும் ஓட்டாண்டிகளாக்கும் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதன் விளைவு அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் இன்று தத்தளிப்பில் இருக்கின்றன. இன்னும் இந்தியா அளவோ, புக்கினா ஃபாஸோ அளவோ ஓட்டாண்டியாகி விடவில்லை என்பது உண்மை. ஆனால் இன்றைய கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தலி போன்றன ஒன்றும் முந்தைய வளநாடுகள் இல்லை. பெரும் கடனாளி நாடுகள்.

இதெல்லாம் ஏன், எப்படி நடந்தது என்பதை இக்கட்டுரை ஒரு சிறு அளவு அலசிப் பேசுகிறது. கட்டுப்பாடற்ற, பேராசையால் செலுத்தப்படும் முதலியத்தால் அழிந்த நாகரீகங்கள் இவை என்பதை முன்வைக்கிறது. இக்கட்டுரையில் மார்க்ஸ் பற்றிய ஒரு குறிப்பு மட்டும் இக்கட்டுரையாளருக்கு மார்க்ஸ் பற்றியோ, உலகப் பொருளாதாரம் அழிந்ததில் மார்க்சியரின், கம்யூனிஸ்டுகளின் பெரும் பங்கு என்ன என்பதைப் பற்றியும் ஒரு துளிக் கூடத் தெரியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். முதலியத்தையும் விட உழைப்பாளிகளின் பெரும் எதிரி மார்க்சியமும், கம்யூனிஸமும்தான் என்பதை இவர் இன்னமும் அறியவில்லை என்பது வருந்தத் தக்கதே, ஆனால் உலக இடது சாரிகளின் குருட்டுத் தனத்துக்கு எல்லையும் உண்டா என்ன? அந்தக் குருட்டுத் தனம் எப்படி ஆனாலும் முதலியத்தை இவர் வருணிப்பது சரிதான். அத்தனை கொடிய நோய் உலக முதலியம் என்பதில் ஐயம் இல்லை.

http://www.salon.com/2012/07/14/fifty_shades_of_capitalism/

-o00o-


உங்கள் அந்தரங்க வெளி சுருங்குகிறது

9/11 சம்பவத்திற்கு பிறகு உலகெங்கிலும் உள்ள அரசு தனது மக்கள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது. தனிமனிதனின் அந்தரங்கம் இதனால் பறிபோகிறது என்று தாராளவாதிகள் கதறுகின்றனர். இவர்கள் கூற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை. அரசு தனது நடவடிக்கைகளுக்கு வழக்கம் போலவே புது புது நியாயங்களை கற்பிக்கிறது. இன்னும் இந்த விவாதம் நடந்து கொண்டுதானிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த விவாதம் ஆவி பறக்கிறது. ஆனால் அமெரிக்க அரசு தனது நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் அமெரிக்க அரசு அனைத்து பொது இடங்களிலும், குறிப்பாக விமான நிலையங்களில், ஒரு புது கருவியை உபயோகிக்கப் போகிறது. ஒரு லேசர் கருவி. இது 50 மீட்டர் தொலைவிலிருந்தபடியே உங்களை வருடி உங்கள் மொத்த தகவலையும் பெற்றுவிடும்; நீங்கள் உட்கொண்ட உணவு, உங்களது அப்போதைய அட்ரினலின் அளவு உட்பட அனைத்தும். இந்த கருவி குறித்து விரிவான கட்டுரை ஒன்று இங்கே :

http://gizmodo.com/5923980/the-secret-government-laser-that-instantly-knows-everything-about-you

இது அமெரிக்காவில் எப்படிப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

-o00o-

அமெரிக்க நிறுவனத்தை பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள்

அபூர்வமான விஷயம்தான் இது. இந்தியாவை மேற்கின் பிரதியாக ஆக்கினால்தான் அது முன்னேற்றம் என்று கருதிக் கொண்டு சுதந்திரம் பெற்ற போது பல அரசியல்வாதிகளும் அறிவாளிகளும் இந்தியாவை ‘நவீன’ உலகுக்கு நகர்த்த முயன்றார்கள். இருந்தும் அரசின் அதிகாரிக் கூட்டமும், கிராமங்களிலிருந்து தில்லிக்குப் போன அரசியலாளர்களுமாகக் கூட்டணி வைத்து ‘நவீன’மாதலைப் பல பத்தாண்டுகள் தோற்கடித்திருந்தனர். சுயலாபத்துக்கும், உழைக்கும் மக்களைச் சுரண்டவும்தான் இந்த வகை எதிர்ப்பு இவர்களிடம் இருந்து வந்தது என்பது நிஜமாக இருக்கலாம், ஆனால் விளைவு என்னவோ 90கள் வரை கூட இந்தியாவில் பெரும் திரள் மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர்.

இன்றோ நிலைமை நிறைய மோசமாகி விட்டது. விளை நிலங்களை எல்லாம் பல விதங்களில் பாழாக்கி, வீடுகள் கட்டும் நிலங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் சந்தையைத் துரத்தும் ‘நவீன’ இந்தியர்கள். இடையில் ஒரு கீற்றொளி இங்கே. குவார் என்ற ஒரு வகை பருப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைய வளர்கிறது. இது ஏழை விவசாயிகளால் தம் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறதாம். உலகில் மொத்த குவார் பருப்பு உற்பத்தியில் 85% இந்தியாவில்தான். இந்த குவார் பருப்புக்கு இன்று உலகச் சந்தையில் ஏக கிராக்கி.

காரணம், ஏதோ இது அருமையான உணவு என்று எண்ணி உலகம் வாங்குகிறது என்று நினைத்தீர்களானால் அது பெரும் தவறாகும். அமெரிக்காவில் இத்தனை காலம் கழித்து இந்த பத்தாண்டுகளில் நிலத்தடி எண்ணெயை வெளிக் கொணர முயற்சி செய்யத் துவங்கி இருக்கிறார்கள். இந்த எண்ணெய் மேற்காசிய எண்ணெய்க் கிணறுகள் போலவோ, கிழக்காப்ஃரிக்காவின் கிணறுகள் போலவோ நேரடியாக நிலத்தடியில் இருந்து குழாய்கள் மூலம் வெளியேற்றப்படக் கூடியதல்ல. மாறாக நிலத்தை வெடித்துப் பிளக்கச் செய்து அந்தப் பிளவுகளில் குழாய்களைப் பொருத்தி, அக்குழாய்கள் மூலம் நீரையோ, வேறு ரசாயனப் பொருட்களையோ நிலத்தில் அழுத்தத்தோடு பாய்ச்சினால் எண்ணெய் இன்னொரு புறம் மேலே வரும். அந்த மண்ணில் இருக்கும் எண்ணெயை வெளியேற்ற கடினமான ஒரு பொருள் ஆனால் எளிதில் குழாய்கள் மூலம் பாய்ச்சக் கூடியதாக இருப்பதாக வேண்டும். அது குவார் பருப்பு என்று அமெரிக்கர்கள் கண்டதன் விளைவு இன்று குவார் பருப்புக்கு பெரும் சந்தை உருவாகியிருக்கிறதாம்.

முன்பு வழக்கம்போல விவசாயிகள் இன்னும் மண்குடிசைகளில் இருந்து இதை உற்பத்தி செய்தனர், இடைத் தரக நிறுவனமான ஹாலிபர்டன் என்ற அமெரிக்க நிறுவனம் பெரும் லாபத்தை அள்ளிக் கொண்டது. சமீபத்தில் விவசாயிகளின் எதிர்ப்பால் அவர்களுக்குக் கிட்டும் பங்கு உயர்ந்திருக்கிறதாம். இதுவுமே இன்னும் அமெரிக்க நிறுவனத்துக்குத்தான் லாபம் பெருமளவில் போகிறபடி இருக்கும். அமெரிக்கர்கள் லாபத்தைப் பிறருக்கு விட்டு விடுவார்களா என்ன? ஆனால் ஏதோ ஒரளவு ராஜஸ்தானின் விவசாயிகள் வாழ்வில் சிறிது முன்னேற்றம் வந்திருக்கிறது. மண் குடிசைகளை விட்டு, கல் கட்டிடங்களுக்கு நகர்ந்திருக்கிறார்களாம். ஹாலிபர்டன் நிறுவனத்துக்கு எத்தனை நஷ்டம் என்று அங்கலாய்க்கிறது அமெரிக்கப் பத்திரிகை நியு யார்க் டைம்ஸ். சபாஷ் என்று கைதட்ட வேண்டும் போலிருக்கிறது. இந்த விவசாயிகளின் கூட்டுறவுச் சங்கமே மொத்த லாபத்தையும் அள்ளும் நாள் என்று வரும…

http://www.nytimes.com/2012/07/17/world/asia/fracking-in-us-lifts-guar-farmers-in-india.html?_r=1&hpw

…அன்றுதான் இந்த அதிகாரி, அரசியலாளர், மேற்கின் இடைத்தரகக் கூட்டணியின் பெரும் சுரண்டல் ஒழியும், இந்திய உழைப்பாளர்கள் வாழ்வில் ஒளியும், மகிழ்ச்சியும் மலர ஆரம்பிக்கும். அந்த நன்னாள் எப்போது வரும்?

-o00o-


பெளத்தம், பர்மா மற்றும் அமெரிக்க ‘மனித உரிமை’

பௌத்தம் புனிதமான மதம் என்று கருதும் சில இந்திய இடதுசாரியினர் இலங்கையில் தமிழருக்குக் கிட்டிய பேரவதிக்குப் பிறகு பௌத்தத்தை விட்டு விட்டுச் சமணத்தை முன்வைக்கத் துவங்கி உள்ளனர். சமணம் சம்ஸ்கிருதத்துக்கு எதிரானது என்ற ஒரு கருத்தே போதும் இந்த நிலைபாட்டுக்கு. இடையில் பௌத்தம், இஸ்லாம் போன்ற இந்து மதமல்லாத எல்லாக் குழுக்களையும் ஒன்றிணைத்து இந்து நாகரீகத்தை அழிக்கலாம் என்று இன்னொரு கூட்டணி முயற்சியும் தமிழகத்திலும் இந்தியாவிலும் துவங்கி இருக்கிறது. குட்டையைக் குழப்பவென்று இந்திய பௌத்தம் என்பதில் தாழ்த்தப்பட்ட மக்களின் பௌத்தம் வேறு, மரபு பௌத்தம் வேறு என்று சில வாதங்களும் உண்டு.

அடிப்படையில் இந்து நாகரீகத்தைத் தவிர வேறெல்லா நாகரீகங்களும் நல்லவை என்பது இந்திய இடதுகளின் மனநோய். அதிலிருந்து விடுபட அவர்களுக்கு வழியேதும் இல்லை. இப்போது பௌத்தமும் இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றையொன்று எதிர்த்து நின்ற மரபு தொடர்கிறது. இஸ்லாம் இந்தியாவிலிருந்து பௌத்தத்தைக் கிட்டத் தட்ட சுத்தமாகத் துடைத்து எறிந்து விட்டது. பல கிழக்காசிய நாடுகளிலும் பௌத்தம் அழியக் காரணம் இஸ்லாமிய இயக்கங்களே. இப்போது பர்மிய பௌத்தர்கள் தெற்காசியாவில் இருந்து அந்நாட்டில் குடியேறியவர்களை, முன்பு தமிழர்களை அடித்து விரட்டிய மாதிரி, விரட்ட முயன்று கொண்டிருக்கிறார்கள்.(தெற்காசியா என்ற சொல்லை இந்திய உபகண்டம் என்று படிக்கலாம்- தெற்காசியா என்பது ஒரு புகை மூட்டச் சொல், இந்தியா என்று சொன்னால் ஏதோ அவமானம் ஒட்டிக் கொள்ளுமாம், அதனால் தெற்காசியா என்பது பயன்படுத்தப்படும். இதுவும் வழக்கமான இடதுசாரிகளின் கருத்துப் புகை மூட்டம்தான். இது இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘வெளிநாட்டுக் கொள்கைக்கு’- அது என்னவென்று நமக்குத் தெரியும்- பயன்படும் சொல்லாகி அங்கு பல்கலைகளில் ஒரு துறையாகவும் ஆகி விட்டது- ‘தெற்காசிய ஆய்வுகள்’.)

இது உடனே அமெரிக்க வெளியுறவு ஆய்வுத் துறைக்காரர்களுக்கு விஷக் கடுப்பாகி விட்டது. உலகிலேயே ‘மனித உரிமைகளைக்’ காக்கும் எவாஞ்சலிய உந்துதல் அவர்களுக்கு மட்டுமே உண்டு, ஏன் அந்த ’உரிமை’ என்ற சொல்லே அவர்களின் காப்புரிமை பெற்ற சொல்லாயிற்றே. அதனால்தானே இந்திய இடதுசாரிகள் இந்திய தேசத்துக்கு எதிரான எல்லா இயக்கத்திலும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பர்மாவில் நடக்கும் இந்த மஞ்சள் தோல் எதிர் கருப்புத் தோல் போராட்டத்தில், பௌத்தம் எதிர் இஸ்லாம், பர்மியம் எதிர் வந்தேறிகள் என்ற எதிரிடைகள் குறித்து அமெரிக்க ‘மனித உரிமை’க் காவலரின் புலம்பலைப் பாருங்கள். கட்டுரையின் கீழே பல வாசகக் குறிப்புகளையும் பாருங்கள்.

http://www.foreignpolicy.com/articles/2012/07/05/high_minded_bigots?page=full