சாப்ளின் : செம்மையும் சமூகமும் – 1

சென்ற இதழில் வ.ஸ்ரீநிவாசன் எழுதிய ’செம்மை’ பற்றிய கட்டுரையின் துவக்கம் அருமை. சார்லி சாப்ளினின் சுயசரிதையிலிருந்து எடுத்த பத்தியில், அவர் சுட்டிய அந்தக் கடைசி வரியின் இறுதிப் பகுதி, ‘’ I wanted to weep, for she personified the tragedy of perfection.” என்பது சிறப்பு.

சிரிக்க வைப்பதில் திறமைசாலியான சாப்ளினை அழ விரும்ப வைத்த நிகழ்ச்சியின் சிறப்பு என்ன? 1 வெறும் அழும் விருப்பத்திற்கு விளக்க சக்தி குறைவு. உணர்த்தும் சக்தி இருக்கிறது, போதாதா என்றால், விளக்கம் என்பதன் பரப்பு வேறுவகைத்து. இரண்டும் கிட்டினாலே அறிவு சேகரமாகும்.

சாப்ளின் ஒற்றை வாக்கியத்தில் சொல்கிறார் அந்நடனத்தின் அற்புதத்தை. ஆனால், பாவலோவாவின் நடனத்தில் துல்லியம், கருக்கு, ஓர் அற்புத நிகழ்வு ஆகியன, அழத் தோன்றும் உணர்வைச் சாப்ளினுக்குக் கொடுத்ததேன்? செம்மை (perfection) என்பதில் அவர் சொல்வது போல என்ன பெருஞ்சோகம் உள்ளது? அது கிளர்வை, ஊக்கத்தை, உத்வேகத்தை அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?

’பர்ஃபெக்ஷன்’ என்று அவரே கருதும் ஒரு நிகழ்வை சோகமானது என்றும் சாப்ளின் கருதுகிறார். அதை எதார்த்தமாக உடனே ஒரு சில வாக்கியங்களில், ஏன் ஒரே வாக்கியத்தில் கூட விளக்க முடியலாம். அந்த விளக்கம் அனேகமாக எல்லாருக்கும் உடனே புரியக்கூடியதாகவும் இருக்கும். எந்த பர்ஃபெக்ட் நிலையும் ஒரு மலைச் சிகரம் போன்றதுதான். ஏறி அடையும் வரை முயல்வோருக்குப் பெரும் சவாலாகவும், செயலூக்கம் தருவதாகவும் இருக்கும் அச்சிகரம், அந்த ‘பர்ஃபெக்ஷன்’ எனப்படும் நிலை. ஆனால் சிகரத்திலேயே வாழ முடியுமா என்ன? இறங்கித்தான் ஆகவேண்டும். அப்படி ஒரு துல்லியத்தில் நிலைக்க முடியாது, சாதாரணத்துக்கு எல்லா மனிதரும் இறங்கித்தான் ஆகவேண்டும். அதுதான் ஒரு சோகம் என்கிறார் சாப்ளின் என்பது ஒரு விளக்கம். அனேகமாக, தேவை அற்ற விளக்கம். யாருக்கு இது தெரிந்திராது?

தடங்களும் தடங்கலும்

ஆனாலும், சாப்ளின் இதைப் போய் ஏன் சொல்கிறார் என்று கருதினால் ஒரு கணம் அது ஒரு அசாதாரணமான கவனிப்பு என்றும், இன்னொரு கணம் எத்தனை சல்லிசான (cliche) கவனிப்பு என்றும் தோன்ற வாய்ப்புண்டு. அது நம்மை ஈர்க்கக் காரணமே அது ஒரே நேரம் எளிய விளக்கத்தையும், சற்று விவரச் செடுக்குள்ள பின்னணியைப் புதைத்து வைத்து இருப்பதும்தான் என்று எனக்குத் தோன்றியது. எளிய விளக்கத்தை மேலே கொடுத்து விட்டேன். இனி விவரச் செடுக்கு பற்றி.

இதை அறிய, தடயங்களைத் தொடர்ந்தால்தான் தெரியும். தடயங்கள் எனப் பேச இதென்ன மர்மக் கதையா? இங்கு உடலின் நலிவும், மனித சமூகத்தின் தோல்விகளும் பங்கு கொண்டவை என்பதால் தடயங்கள் என்பவை தடங்களும், தடங்கலும் சேர்ந்த புதிர்தான்.

பாவலோவாவின் நடனச் சாதனைகள் என்று ஒரு தடம் உண்டு. அந்த நடனத்தை, நடன நிகழ்ச்சிகளை நாம் காண்பது சாத்தியமில்லை. ஒரு வேளை அவை ஏதும் தகவல் படங்களாகவோ, ஆவணப் படங்களாகவோ கிட்டினாலுமே, சாப்ளின் பார்த்த அந்த நிகழ்ச்சியின் ஆவணப் படமாக அது இருக்குமா என்பது ஐயமே. தவிர, பாலே நடனத்தின் நுட்பங்களை நானறியேன். இங்கு வாசகர்களில் சிறு தொகையினருக்கே பாலே நடனத்தின் நுட்பங்கள் தெரிந்திருக்கும்.

அதில் எது சாதனை, எது சாதாரண நிகழ்ச்சி என்பதெல்லாம் தெரியாத பாமரராக அதைப் பார்த்தால், சாப்ளினுக்கு அது ஏன் சோகத்தைக் கொணர்ந்தது என்பது புரிய வாய்ப்பில்லை. இங்கு பாவலோவாவின் நடனம் எப்படி அமைந்தது என்பது குறித்து அல்ல நம் கவனம். அது பற்றிப் பேசும் சாப்ளினுக்கு நடனம், உடலசைவு சார் கலைகளில் பாமர அணுகலைத் தாண்டிய, நுணுகிப் பார்க்கக் கூடிய நிபுணத்துவம் இருந்திருக்கும் என்று ஏற்பதில் எனக்கு தயக்கமில்லை.2

அடுத்த தடத்தில், பின்னோக்கிய பார்வையில் எழுதும் சாப்ளின், பாவலோவாவின் பிந்தைய வாழ்வையும் மனதில் கொண்டு இப்படிச் சொன்னாரா என்று நாம் யோசிக்கலாம். அதை விட, தன் அன்றைய மனநிலையை சாப்ளின் மறக்காது வைத்திருந்து சுயசரிதை எழுதும் காலத்தில் அதைக் குறிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளுதல் மேல். இதெல்லாம் சாத்தியமா, அல்லது இன்னொரு விதமான புனைகதைதானா என்று கேட்க இடம் உண்டு. நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்வில் சில அனுபவங்களை, அவற்றின் தாக்கங்களைச் சுமந்துதானே நெடுநாள் திரிகிறோம்? வாழ்வனுபவங்களை மறப்பதை ஒரு கலையாகவே பயின்று வைத்திருக்கும் எனக்கே, கலை நிகழ்வுகள் பாதித்த, பெரும் ஊக்கம் தந்த சம்பவங்கள் சிலவேனும் நெடுநாட்களாக நினைவிருக்கின்றன. சொல்வனத்தில் தொடர்ந்து எழுதும் சுகா, நினைவு கூர்ந்து எழுதுவதில் தன் அசாதாரணத் திறமையை ஏகப்பட்ட தடவை நிரூபித்திருக்கிறார். என் நண்பர்களில் பலருக்கு இந்தத் திறமை இயல்பாக இருப்பதைப் பார்த்து நான் அடிக்கடி வியப்புறுகிறேன். என் முடக்கு வாதம் வந்த நினைவுத் திறனை ஒப்பிட்டு நோக்குகையில் இவர்களெல்லாம் நினைவு சக்தியில் ஒலிம்பிக் சாம்பியன்களாகத் தெரிவதில் வியப்பேதும் இருக்கக் கூடாது, ஆனால் வியப்பு தொடர்ந்து எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

சாப்ளின் நினைவிலிருந்து சொல்வதை நம்பலாமா என்ற கேள்வி அவரது கருத்துகளில் நம்பிக்கை வைத்து நாம் செல்லும் தடத்தில் ஒரு தடங்கலாக இருக்கிறது. அதை நீக்க முயல்கிறேன்.

சாப்ளின் தன் நினைவு சக்தியின் கூர்மையைப் பல விதங்களில் நிரூபித்திருக்கிறார். காட்டாக, அவர் எடுத்த பல படங்களுக்கு அவரிடம் ஒரு முன்கூட்டி எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதை என்பதே இருந்ததில்லை என்று நமக்குத் தகவல் இன்று கிட்டுகிறது. இன்றைய திரைப்படத் தயாரிப்பில் அடிப்படை உத்தியான காட்சித் தகவலைக் காட்டும் க்ளாப் போர்ட், (இன்று இருப்பது டிஜிடல் வடிவில்) இல்லாத காலம் சாப்ளினின் படத் தயாரிப்பு காலம். ஒரு அட்டையில், ஸ்லேட் பலகையில் காட்சியின் எண்ணிக்கை வரிசையாக எழுதப்பட்டுத் துவங்கி, படம் எடுக்கப்படுமாம். ஆனால் இதன் உதவி இல்லாமல், துவக்கத்திலிருந்து இறுதி வரை காட்சிகளையும், பலமுறை எடுத்த ஒரே காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவுகளையும் நினைவு வைத்திருந்தே படத்தை அவர் தொகுத்து விடுவார் என்று அவரோடு இயங்கிய நடிகர்கள், உதவியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அன்றாடம் படம் எடுக்கும்போது நிறைய மாறுதல்களைத் தன்னிச்சையாகக் கொணரும் பழக்கமும் அவருக்கு இருந்ததாம். தன் 70-களில் அவர் ஒரு படத்தை இயக்கியதோடு, அதற்கு இசை அமைப்பதைக் கூடச் செய்தார். அந்த இசை பல வருடங்கள் மிகப் பிரசித்தி பெற்றதாக இருந்தது. எனவே, முதிர் பிராயத்துச் சாப்ளினின் நினைவு கூரல் எவ்வளவு பிழையற்றதாக இருக்கும் என்ற கேள்வியைத் தள்ளி வைத்தால், அந்நிகழ்ச்சிக்கு சாப்ளினின் மறுவினை பல விஷயங்களைப் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும் உள்ளது.

இன்னொரு தடம், பார்வையாளராகவும், ரசிகராகவும் உள்ள நிலையில் சாப்ளினின் சொந்த வாழ்வனுபவம் என்ன விதத்தில் அவரது ரசிப்பைப் பாதித்தது, உருவாக்கியது என்று அறிவது, நேரடித் தகவல் இல்லாத போது கிட்டுகிற சுற்றுத் தகவல்களை வைத்து ஊகிப்பது.

செம்மையின் உலையில் வேகும் மானுடர்

வ.ஸ்ரீநிவாசன் எழுதிய கட்டுரை சாப்ளினுடன் துவங்கினாலும், அந்த நடனம், பாவலோவா, சாப்ளினின் மனோநிலை ஆகியவற்றைப் பற்றி அதிகம் பேசாமல், செம்மை (perfection) என்பதைப் பற்றிய விசாரத்தைத் தொடர்ந்தது, ஓரளவு அரூபமான ஒரு கோட்பாட்டைப் பற்றிய தர்க்கமாக அல்லது உரையாடலாக இருந்தது.

மாற்றுக் கோணத்தில், செம்மை என்பதை சாப்ளினின் வாழ்வைத் தொட்டும், அதோடு சம்பந்தப்பட்ட வேறு சில விஷயங்களைத் தொட்டும் பேசலாம் என்று எனக்குத் தோன்றியது. உரையாடல்களுக்கு அர்த்த புஷ்டி கிட்டுவதே இப்படி அவரவர் கை மணலைக் கொஞ்சம் ஆற்றுவதில்தானே?

சாப்ளின் தன் வாழ்வைத் துவக்கிய காலத்துக்கும் இன்றைக்கும் வேறுபாடு ஏராளம். அவற்றில் பல சாப்ளின் போன்றாரால் துவக்கப்பட்ட மாறுதல்களால் எழுந்தவை. வாழ்வின் பல பரிமாணங்களிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட அடிப்படை மாறுதல்களைச் சொல்கிறேன். துவங்குகையில் எளிய, ஆனால் தீர்மானமான மாறுதல்களாக அவை இருந்தன, படிப்படியாக மாறி இன்று சாதாரண மனிதர் தம்மைச் சுற்றி ஏற்படும் மாறுதல்களில் சிறு பகுதியை மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய வகைத்தாக ஆகி விட்டன.

காட்டாக, அனேகமாக எல்லாம் குடிசைத் தொழிலாக, குலத் தொழிலாக இருந்த பொருள் உற்பத்தி முறை, கூட்டமாக மனிதர் சேர்க்கப்பட்டு உழைத்துத் தயாரிக்கும் தொழில் கூட உற்பத்தி முறையாக மாறியது 19ஆம் நூற்றாண்டிலேயே துவங்கி இருந்தது என்றாலும் ஒரு பொருளின் உற்பத்தி என்பதைச் சிறு சிறு பங்குகளாக, செயல்களாகப் பிரித்து அவற்றை தனித் தனியாகக் குழுக்கள் செய்து பொருளில் சேர்த்து மொத்தமாக ஒரு உருவைக் கடைசியில் கொடுப்பது என்ற உத்தி 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆரம்பிக்கிறது. இன்று அசெம்ப்ளி லைன் உற்பத்தி முறை என்று பரவலாக அறியப்படுவதை, ஆய்வாளர்கள் ஃபோர்டிஸம் என்றும் அழைக்கிறார்கள். ஃபோர்ட் கார் உற்பத்தியில் இந்த முறை பெருமளவில் புகுத்தப்பட்டு உலகெங்கும் பரவியதால் இந்தப் பெயர் அதற்குக் கிட்டியது. இதையே டெய்லரிஸம் என்றும் அழைப்பாருண்டு. இந்த முறையை முதலில் சிந்தித்து, கோட்பாடாக முன் வைத்து, அதை உருவமைப்பது எப்படி என்றும் திட்டமிட்டவர் ஃப்ரெடரிக் (உ)வின்ஸ்லோ டெய்லர் (Frederic Winslow Taylor) என்ற அமெரிக்கர். ஆனால் ஹென்ரி ஃபோர்ட் தான் முதலில் இதை ஒரு தொழில் நிறுவனத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். இடது சாரி சாப்ளின் எதிர்த்த அதே தொழில் முறையை செந்தாரகை லெனின் ஆரச் சேர்த்துத் தழுவிக் கொண்டாரென்பது வரலாற்றுப் புதிர்தான். ஆனால் தொழிலாளர்களையோ, விவசாயிகளையோ சோவியத் யூனியன் எப்போது மதித்தது?

கிட்டத் தட்ட இதே போன்ற தயாரிப்பு முறை பல துறைகளிலும் பரவ அந்த நூற்றாண்டின் முற்பகுதியில் பெரும் சமூக மாறுதல்கள் நிகழ்ந்தன. மேற்கின் வாழ்க்கை நகர மையமானதே இந்த மாறுதல்களின் உந்து சக்தியால்தான். இந்த உற்பத்தி முறையின் அடிப்படைத் தர்க்கங்கள் சில. ஒன்று, ஏராளமான பொருட்களைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்வது. இன்னொன்று பொருட்களில் ஒரே தன்மையான தரத்தைக் கொணர்தல். தொடர்ந்து பல ஊர்களிலும், ஏன் பல நாடுகளிலும், வேண்டும்போதெல்லாம் கிட்டும் வகையில் இப்பொருட்களைத் தயாரித்து விநியோகிப்பது. இந்த வகை உற்பத்தி முறையில் ஒரு அத்தியாவசிய அம்சமாக தரக் கட்டுப்பாடு என்பது கச்சாப் பொருட்களிலும், உற்பத்தி முறைகளிலும், இறுதிப் பொருட்களிலும் தேவை என்பதை உற்பத்தியாளர்கள் சீக்கிரமே அறிந்து கொண்டனர். உற்பத்தி செய்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையே முகமறிந்த, பரிச்சயமான உறவு முறை ஏதும் இல்லாத ஒரு சந்தையில், பொருள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டு, தானாக விற்கக் கூடியதாக இருக்க வேண்டிய நிலை. அதாவது பொருளின் தரமே அதன் வலு.

இந்த பரிச்சயமற்ற தன்மையைப் பெரும் பளு என்று இடது சாரியினர் எந்திரத்தனமாக விமர்சித்தாலும், நகரத்தின் திரள்களில் கலந்த விவசாயிக் கூட்டங்கள் நாளாவட்டத்தில் தம்மிடையே பரிச்சயமற்ற மனிதர், தாம் தினம் கடக்கும், கூடும் நகர் வெளியைச் சாதகமான அம்சமாகக் கருதத் துவங்கினர். முதியோர், குடும்பங்கள், பல உறவினர்கள் ஆகியோரின் கண்காணிப்பு, பண்பாட்டுத் தளைகள், உணர்வுக் கடமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுத் தனியராக, உதிரிகளாக உலவுவதில் இருக்கும் நிலையில் உள்ள பெரும் சுதந்திரத்தை இளைஞர்கள் நிச்சயம் வரவேற்றனர். சாப்ளினின் படங்களில் இந்தச் சுதந்திர உணர்வைப் பல பெண் பாத்திரங்கள் வெளிப்படுத்துகின்றனர்.

தரமற்ற தயாரிப்போ, கட்டமைப்போ கொண்ட பொருள் துரிதமாகவே நுகர்வாரின் புறக்கணிப்பால் சந்தையில் இருந்து ஒழிக்கப்படலாம். அல்லது மேன்மேலும் மலிவாகவே விற்கப்பட வேண்டிய நிலை வரும். இது முதலியக் கோட்பாட்டின் வழித் தர்க்கம். திறந்த சந்தை, நேர்மையான போட்டி போன்ற மேன்மையான கோட்பாடுகளைப் பயன்படுத்தி சந்தையால் பொருளாதாரம் செலுத்தப்பட வேண்டும் என்று வாதிடும் முதலியக் கோட்பாட்டாளர்கள், மனிதர் தம் தனிநலனுக்காக எதையும் வக்கிரமாக்குவர் என்ற உளநிலை குறித்த அனுபவ அறிவைப் பொருட்படுத்தத் தவறுவார்.
எனவே இந்தக் கோட்பாட்டின் தர்க்கத்துக்கு மாறான நிலையே சந்தையில் பெருமளவு காணப்படும் என்றாலும், காலப் போக்கில் தொடர்ந்த நஷ்டம், அல்லது நுகர்வாரின் இளக்காரம் ஆகியனவற்றால் தரமற்ற பொருட்கள் சந்தையிலிருந்து உதிர்க்கப்படுவது நடக்கவே செய்யும். இந்த உதிர்ப்பு கோட்பாடு எதிர்பார்க்குமளவு துரிதமாக நடப்பதில்லை என்பது வேறு விஷயம்.

இதன் விளைவாக, தொடர்ந்து தம் உற்பத்திப் பொருட்களின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவது என்பதன் அவசியம் தயாரிப்பாளர்களுக்கு சீக்கிரமே புலனாயிற்று. இப்படிப்பட்ட ஒரு உற்பத்தி முறை திரைப்படத் துறையிலும் துவங்கியது என்பதொரு விசித்திரம். ஆனால் மக்களின் கூட்டங்கள் பெருகிய நகரங்கள் பல நாடுகளிலும் நிறைய உருவானதில், அவர்களுக்குத் தொடர்ந்து கேளிக்கைகளை அளிப்பதில் நல்ல வருவாய் உண்டு என்பதைத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டு கொண்டன. அதில் சாப்ளின் போன்றார் பங்கெடுக்க நேர்ந்ததில் வியக்க ஏதும் இல்லை. முன் பத்தியொன்றில் சொன்னபடி, நகரங்களில் உதிரிகளாக உலவிய இளைஞர்கள், இந்தக் கேளிக்கையை நாடிய திரளின் பெரும்பங்கினர் என்பதால் திரைப்படம் என்ற ஊடகமே வெகு சீக்கிரமே இளைஞர்களின் விழைவுகளைச் சித்திரிக்கும் ஒரு ஊடகமாக மாறி வந்தது.

சந்தைக் கிடுக்கியில் கலை

அந்த நூறாண்டின் துவக்கம் வரை, நாடகம், இசை, நடனம் போன்றவை ஒரு இடத்தில், ஒரு நேரத்தில் மட்டுமே காணப்படக் கூடியவை, கேட்கப்படக்கூடியவை, அனுபவிக்கப்படக் கூடியவை என்றிருந்த காலம் மாறி எங்கும் எப்போதும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் காட்சியாக, ஒலியாக, நிகழ்வாகக் காணப்படக் கூடியவையாக கலை நிகழ்வுகள் ஆகத் துவங்கின. வானொலியில் துவங்கி, திரைப்படங்களில் வளர்ந்து, தொலைக்காட்சி எனும் ஊடகம் மூலம் வீடுகளின் மையத்திற்கே படையெடுத்த இந்த நிகழ்வுகள் படிப்படியாக தர முன்னேற்றத்தை தொழில் நுட்ப ரீதியில் அடைந்தன என்றாலும், அவற்றின் தாக்கம் கலை வடிவச் செம்மைப்படல் மூலம் என்று சொல்ல வழியில்லை. உதிர்ந்த மரபுப் பண்பாட்டின் துகள்களிலிருந்து ஒரு திரள் பண்பாடு நாடு தழுவியதாக உருவாக இந்த ஊடக மாறுதல்கள் பெரிதும் உதவின. இன்று நாம் அவற்றின் காட்சிப் பரவலில் முக்குளித்து நிற்கிறோம். சாப்ளினின் தலைமுறையினர் துவக்கிய பெருமாற்றங்களே இந்த நிலைக்கு நம்மைக் கொண்டு நிறுத்தி இருக்கின்றன.

சாப்ளினே தொழிற்சாலை உற்பத்தி முறை போன்ற ஒரு முறையில்தான் துவக்கத்தில் படங்களை எடுத்தார். அதில் தன் திறமையை, நடிகர் திறமையை முன்னிறுத்த, பொறிகளின் நுணுக்கங்களை பின்னிறுத்தினார். காமிரா நிலையாக இருக்க, நடிகர்கள் முன்னிலும், பின்னிலும் இயங்கியதை அப்படியே படமெடுத்தார். ஒளியூட்டுவதில் அடிப்படை ஒளியூட்டல்தான். அரங்கில் எந்த இடமும் நன்கு படமாகும் விதமாக ஒளியூட்டப்பட்டதாக அவருடைய நெடுநாள் ஒளிப்பதிவாளர் சொல்கிறார்.

படிப்படியாக அவருடைய ஆகிருதி பெரிதாகுகையில் இந்த உற்பத்தி முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார். ஆனாலும் முழு விடுதலை கிட்டவில்லை. இன்னும் விநியோகம், ரசிகரின் ரசிப்புத் தன்மை ஆகியன அவருடைய கற்பனை விரிவதைக் கட்டுப்படுத்துகின்றன. தனக்குக் கிட்டிய விடுவிப்பு அளவு கூட தன் சக கலைஞர்களுக்குப் பெரும்பாலும் கிட்டவில்லை என்பது அவருக்குத் தெரியும். அதே போல தொழிற்சாலை உற்பத்தியாளர்களில் பெரும்பாலாருக்கு எந்த விடுவிப்பும் கிட்டாது என்பது அவருக்குத் தெரிந்து மொத்த உற்பத்தி முறையே மேலும் மனிதம் உள்ளதாக ஆக வேண்டும் என்று சொல்கிறார்.

தன் போன்றாரின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாறுதல்களில் பலவற்றைச் சாப்ளினே எதிர்த்தார் என்பது ஒரு குறிப்பிடத் தக்க விஷயம். முதல் கட்ட சினிமாவில், மௌனப்படங்களில் இருந்தே தன் வாழ்வைத் துவக்கிய சாப்ளின் தன் காலத்திலேயே தொழில் மயமாகி வரும் உற்பத்தி முறை எங்கும் பெரிதும் பரவுவதைக் கண்டு அச்சுற்றிருந்தார். அதன் அசுர கதியில் ஆலைவாய்க் கரும்பாகப் பிழியப்படும் சாதாரண மனிதரை அவர் அடிக்கடி தன் படங்களில், கதைகளில் சித்திரித்தார்.

அந்த மாறுதல்களின் அடி நாதமாக அமைந்தது செயல்முறைகளில் அறிவியல் உள்ளீட்டைக் கூட்டி, தனி மனிதரின் அனுபவ உள்ளீட்டைக் குறைக்கும் ஒரு சிந்தனை, செயலமைப்பு முறை. தனி மனிதரை பெரும் அமைப்பில் அத்தனை தாக்கமிராதவராக, எளிதில் வேறு வேறு நபர்களால் இடம் பெயர்க்கப்படக் கூடியவராக, எத்தனையோ சக்கரங்களில் ஒரு சிறு சக்கரமாக மாற்றும் ஒரு வழி முறையைக் கண்டு அதன் அநாகரீகத்தை விமர்சித்த சாப்ளின் தன் வாழ்விலேயே பல வருடம் அப்படி ஒரு உற்பத்தி முறைக்குத்தான் தீனி போட்டுக் கொண்டிருந்தார். அப்படி ஒரு வலுக்கட்டாயம் அவருக்கு இருந்தது. இணங்கிச் செயல்படாவிடில் திரைப்படங்களில் இன்னொரு கவனிக்கப்படாத, உதிரி நடிகராகவே அவர் இருந்து போயிருப்பார்.

(தொடரும்)

அடுத்த இதழில் : சாப்ளினின் சரிவு

குறிப்புகள்

1. எங்கிருந்தோ இந்த வரிகளைக் கண்டெடுத்தீர்களே அதுவே சிறப்புதான். மொத்தக் கட்டுரைக்கே அந்தப் பத்திதான் தூண்டுகோல் என்றும் இருந்ததோ?

2.சாப்ளின் இசை / நடன நாடகங்களில் சிறுவனாக இருக்கையிலேயே பயின்று, பங்கெடுத்தும் வந்த நடிகர். கீழே உள்ள வலைப் பக்கத்தில் சாப்ளினுடைய நடனத் திறன் குறித்து பாலே நடனக் கலைஞரில் உயரிய திறனுள்ளவராக அறியப்பட்ட வாத்ஸ்லாவ் நிஜின்ஸ்கி பாராட்டுதல் தெரிவித்த சம்பவம் பற்றிய குறிப்பு உள்ளது. http://www.charliechaplin.com/en/biography/articles/51-The-First-National-Shorts

இந்தப் பக்கத்திலிருந்து சம்பந்தப்பட்ட பத்தி இதோ:

One scene in particular is particularly remembered. Charlie, knocked unconscious, dreams that he dances with four wood-nymphs. This virtuoso performance is clearly a tribute to the ballet L’Après-midi d’un faune, created and performed by the great Russian dancer Vaslav Nijinski. Nijinski had visited Chaplin’s studio and the two men clearly had a great mutual admiration. Chaplin was understandably flattered when the Russian dancer and his colleagues complimented him on his own dancing skills.

3. அனைவருக்கும் துரிதம் என்பது இயலாத நிலையில் ஏற்கனவே இருக்கும் அசமத்துவப் பகிர்தல் துரிதத்தால் போய்விடுவதில்லை, மேன்மேலும் சிக்கலான அசமத்துவமாகவே படிகிறது. அமைப்பு என்பதன் அசமத்துவத்தால் மானுடர் முன்னேறுகிறார், அல்லது அழிகிறார் என்ற இரு துருவ வாதங்கள் பயனற்றவை, ஏனெனில் இயற்கையில் அசமத்துவம் என்பது தன்னியல்பாக இருக்கவே செய்கிறது. செயற்கையாக மானுடர் அமைக்கும் சமூகக் குழு சார்ந்த பேரமைப்புகள் இந்த இயல்பை நீக்குதல் கடினம், ஆனால் இந்த இயல்பை மேன்மேலும் உறுதிப்படுத்தாமலும், தீவிரப்படுத்தாமலும் இருப்பது அவசியம். அதுதான் அறம் என்றறியப்படுகிறது. அறம் என்பது ரோட் ரோலர் சமத்துவம் அல்ல, மாறாக ஒவ்வொரு உறுப்பினரின் இயல்புக்கும் ஏற்ற வாழ்வுப் பாதையைப் பெற வாய்ப்பு கொடுப்பதும், அதில் அவருக்கு முடிகிற சாதனையை அவருக்குச் சாத்தியமாக்குவதும். அப்படிப்பட்ட சாதனைகளை நன் முறையான பார்வையோடு ஏற்பதுமே. ஒவ்வொருவருடைய பங்கெடுப்பும், சாதனையும் சேர்ந்தே சமூகம் ஒரு நல்லமைப்பாக இருக்க முடியும் என்பதை அறிவதோடு , நன்குணர்ந்து அனைத்து மனிதருக்கும் சம மரியாதையை, மதிப்பைக் கொடுப்பது அவசியம்; அதுதான் சாத்தியம். ஆனால் சம ‘அதிகாரத்தை’க் கொடுப்பது சாத்தியமல்ல. இதை விளக்கத் தனியொரு கட்டுரைதான் எழுத வேண்டும்.