யந்திர மொழிபின் மாந்திரிக பயன்பாடுகள்

மொழிபு என்ற சொல் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஒரு சிறு குறிப்பு – இது மொழிதலையும் மொழிதலின் விரிவாக்கத்தையும் சுட்டும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. துவக்கங்கள் முடிவுகளைத் தீர்மானிப்பதில்லை என்று மட்டுமல்ல, துவக்கமும் துவக்கத்தில் உள்ள நோக்கங்களும் அவற்றின் தொடர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை என்றும் இந்தக் கட்டுரை பேசுகிறது. இதை ஏற்றால், இதன் நீட்சியாக முடிவைக் கொண்டு துவக்கத்தையும் துவக்க நோக்கத்தையும் அனுமானிக்க இயலாது என்பதையும் நாம் ஏற்க முடியும்

“இயற்கையில் ஏதோ குறிக்கோளும், செயல் திட்டமும் நிச்சயம் இருப்பதாக நம்பும் காட்சிப்பிழை அல்லது கருத்துப்பிழைதான் அறிவியல் அன்றாடம் எதிர்கொள்ளும் மகத்தான மாயை” என்று முந்தைய சொல்வனம் இதழ் ஒன்றில் லாரன்ஸ் க்ரௌஸ்ஸை(:awrence M. Krauss) மொழிபெயர்க்கிறார் கோரா. இந்த உலகின் இருப்புக்குப் படைப்பாளியும் குறிக்கோளும் தேவையில்லை என்று க்ரௌஸ் போன்ற அண்ட அறிவியலாளர்கள் குதூகலிப்பதற்கொத்த எதிரொலியாய் டேனியல் டென்னட்(Daniel Dennett) போன்ற தத்துவ அறிஞர்கள் பிரக்ஞை ஒரு இயந்திர இயக்கத்தின் காட்சிப் பிழையே; அகமும் அதன் அனுபவங்களும் முதற்பிழையைச் சார்ந்த கருத்துப் பிழைகளே என்று கொண்டாட்டத்துடன் விவாத மேடைகளில் உரையாடுகின்றனர். டார்வினின் பரிணாம தத்துவத்தை மூர்க்கத்தனமாய் எதிர்க்கும் ஆத்திகர்களின் நம்பிக்கைகளை அறிவியல் வலுவான ஒரு சவப்பெட்டியில் போட்டுப் பூட்டிவிட்டது என்று சொன்னால், க்ரௌஸும் டென்னட்டும் முன்வைக்கும் ஆணித்தரமான வாதங்கள் அந்த நம்பிக்கைகள் உயிர்த்தெழாமல் பார்த்துக் கொள்ளும் வேலையைச் செய்கின்றன. ஆனால் நம்பிக்கைகளின் ஆதாரங்கள் சவப்பெட்டிக்குள்தான் இருக்கின்றனவா? கண்ணுக்குத் தெரியாத கடவுளை இந்த உலகை விட்டு நீக்குவதுபோல் நிதர்சன அனுபவமாக இருக்கிற நம் தன்னுணர்வை, பிரக்ஞையையும் நீக்குவது சாத்தியமா? தலைவனற்ற, நடமாடும் பிரேதங்கள்தானா நாம்? அறிவியல் எந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் நீக்கப்பட வேண்டிய மாயைகளை அடையாளம் கண்டு பிரகடனப்படுத்துகிறது?

“அவசியத் தேவை என்பது நம்பிக்கைக்கான ஆதாரமாக இருக்க முடியும் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். வங்கியில் ஐநூறு டாலர்கள் கையிருப்பில் இருந்தாக வேண்டும் என்பது எனக்கு ஒரு அவசியத் தேவையாக இருக்கலாம் – நான் அந்தத் தொகைக்கு ஒருவருக்குக் காசோலைகள் தந்திருக்கலாம். ஆனால் அவசியத் தேவைகள் என் வங்கியின் கையிருப்புத் தொகையைக் கொஞ்சம்கூட பாதித்ததேயில்லை,” என்கிறார் சி.எஸ். பியர்ஸ்(C.S.Pierce). இதே வாதத்தை வேறு வடிவில், ‘அவசியமில்லை என்பதால் இல்லை என்று சொல்ல முடியாது’, என்றும் திருப்ப முடியுமல்லவா? ஆனால் இதற்கு அறிவியலாளர்கள் ஒக்காம்’ஸ் ரேஜர்(occam’s razor) என்ற ஒன்றைக் கையிலெடுக்கிறார்கள். அதாவது, குறைந்தபட்ச நம்பிக்கைகளைக் கொண்டுதான் ஒரு விஷயம் அறியப்பட வேண்டுமாம். அழகியல் சார்ந்த ஒரு முடிவாக இருக்கிறது என்பதற்கு அப்பால் இதில் ஏதும் அறிவியல் இருப்பதாகத் தெரியவில்லை.

க்ராஸ், டென்னட் போன்றவர்கள் கூறுவதில் உள்ள சந்தேகங்களை மொழி குறித்த புரிதல்கள் வழியாக நாம் அணுக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், கணிதத்தின் வேர்களில் புனைவுத் தன்மை இருக்கிறது. அது சார்ந்த அறிவியலும் ஒரு கட்டத்தில் மொழிபாக மாறிவிடுகிறது, எழுத்தும் குறியீடுகளும் சார்ந்த எந்த ஒரு மொழிபும், துவக்கத்துக்கும் நோக்கத்துக்கும் அப்பாற்பட்ட, வேறொரு தளத்தில் இயங்குகிறது, அதன் பாதிப்புகளை மட்டுமே நாம் உணருகிறோம்.

மனிதனை எழுத்து தனிமைப்படுத்துகிறது என்று சொல்கிறார் டேவிட் அப்ராம்(David Abram) – வாய்மொழி சமூகங்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகின் அங்கங்களாகத் தம்மை உணர்கின்றன, அங்கு ஒவ்வொரு இலையும் இலைகளை ஊடுருவி விழுந்தசையும் ஒவ்வொரு ஒளிக் கீற்றும் பொருள் பொதிந்தவையாக விவரிக்கப்படுகின்றன. மௌனம் நிறைந்த உலகம் ஒளியாலும் ஒலியாலும் இதயத்துடன் நேரடியாக உரையாடும் துலக்கம் கொண்ட தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த உலகம் ரகசியங்களற்ற உலகம் – இது கணத்துக்குக் கணம் தன்னைப் புதிதாய் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையை மனிதன் இவ்வகையில் நேரடியாக அறியும் தருணங்கள் இலக்கியப் படைப்புகள் பலவற்றில் எழுச்சிமிகு மொழியில் விவரிக்கப்படுகின்றன. எழுத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட இத்தகைய அனுபவங்கள் நமக்கும் அன்னியமானவையல்ல.

வாய்மொழிச் சமூகங்கள் எழுத்துச் சமூகங்களாக மாறும்போது, இயற்கையுடனான நேரடிப் பிணைப்பு- உணர்வுத் தளத்தில் அதை அறியும் பிணைப்பு – அறுபட்டுப் போகிறது. சொற்கள் உள்ளதை மறைக்கும் திரையாகின்றன – இந்த மறைப்பின் பின்னணியில்தான் அவை தம் பொருளை விரிக்கின்றன: எழுத்துச் சமூகங்களின் உலகம் அந்நியர்களின் உலகம், இது ரகசியங்கள் நிறைந்த ஒன்று. வாய்மொழிச் சமூகங்களைப் போலல்லாமல் இந்த உலகம் மிகச் சுருங்கிய ஒன்று : அறிவின் வரைகளுக்குட்பட்ட உலகம் இது.

வாய்மொழிச் சமூகங்களின் உணர்வு செறிந்த உலகம் எழுத்துச் சமூகமாக மாறும்போது தன்னைத் தன்னிலையில் அறிவுறுத்திக்கொள்ளும் ஒன்றாக இருக்கும் நிலையிலிருந்து வார்த்தைகளாலும் வடிவங்களாலும் அறியப்படும் உணர்வற்ற உலகாக மாற்றமடைகிறது என்கிறார் டேவிட் அப்ராம். அவர் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார்- காலடித் தடங்களும் இடம் பெயர்ந்த கற்களுமாய் உணர்வுகளின் மொழியில் நம்மோடு உரையாடிய உலகு, இன்று காகிதத்திலும் கணினியின் திரையிலும் தேடிப் பெறும் தகவல் உலகாகக் குன்றி விட்டது. அக உலகில் ஆழ்வது, புற உலகை அறிவது என்ற இருமைகளற்று, மண்ணில் தோன்றி மண்ணில் மறைவதாய் தம்மை அறியும், மண்ணோடு உறவாடும் வாய்மொழிச் சமூகங்களில் மனிதன் உயிருள்ள ஒரு மாந்திரிக உலகை இருவழி உணர்வின் விரிதலால் அறிகிறான் என்கிறார் அப்ராம்: இது உடலெனும் வேலியால் பிரிக்கப்படாத, உணர்வு வியாபக உலகம்.

ஒருமையை உணரும் ஆன்மிக அனுபவங்கள் அனைத்தும் எண்ணங்களற்றவையாக விவரிக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு அனுபவத்தை இங்குக் குறிப்பிடலாம்:

“சாலையை ஒருவன் செப்பனிட்டுக் கொண்டிருந்தான்; அவன் நான்தான்; அவன் தன் கைகளில் ஏந்தியிருந்த கோடரியும் நான்தான்; அவன் உடைத்துக் கொண்டிருந்த பாறையும் என்னில் ஒரு பகுதியே; மெல்லிய புல்லிதழில் எனது இருப்பே இருந்தது, அவனது அருகில் நின்ற மரமும் நானே. அந்தச் சாலையைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தவனின் உணர்வுகளையும் எண்ணங்களையும் நான் ஏறத்தாழ உணர்வது போலிருந்தது, மரத்தை ஊடுருவிச் சென்ற காற்றை என்னால் உணர முடிந்தது, அந்தப் புல்லிதழில் நின்ற சின்னஞ்சிறு எறும்பை என்னால் உணர முடிந்தது. மொட்டுக்களும் புழுதியும் ஓசையுமே என்னின் பகுதிகளாக இருந்தன. அப்போது சற்றே தொலைவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது; அதன் ஓட்டுனரும், என்ஜினும், சக்கரங்களும் நானே; கார் என்னை விலகிச் செல்லச் செல்ல நான் என்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தேன். நான் எங்குமிருந்தேன். இல்லை, அனைத்தும் என்னிலிருந்தன, உயிரற்றவையும், உயிருள்ளவையும், மலைகளும், புழுவும், சுவாசித்தவை அனைத்தும்.”

ஆன்மிக அனுபவங்களாகப் பேசப்படும் எந்த ஒரு அனுபவத்திலும் இந்த ஒருமை, பகுப்பின்மை இருப்பதைக் காணலாம். குறிகளால் மறிக்கப்படாத வாய்மொழிச் சமூகங்களில் உள்ளவர்கள் அனைவரும் இத்தகைய அனுபவ உலகை வியாபிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை – ஆனால் அவர்கள் தங்கள் புறவுலகை இயந்திர உலகாய்க் காண்பதில்லை என்பதைச் சொல்ல முடியும். நம்மினும் கூடுதல் உணர்வும் பொருளும் நிறைத்த உலகே அவர்களறியும் உலகு..

ஒலி இயற்கையின் அங்கம் – காற்றில் அசையும், காற்றை அசைக்கும் அனைத்தும் ஒலிக்கின்றன. இந்த முழுமைச் சூழலில் மனிதனின் வாய்மொழிக்கு அதற்குரிய இடமுண்டு. ஆனால் மொழி குறியீடுகளாக எழுத்துருவம் பெறும்போது அது இயற்கையின் பதிலியாக மாறி விடுகிறது. மொழியில் புழங்குபவன், இந்த பதிலியில் புழங்குகிறான். அதன் பல்பொருள் விரிபாடு இயற்கையுடன் நேரடியாக உரையாடுவதில்லை. ஒரு புதிராக, பல்வகை பகுப்புகளுக்குட்படுத்தப்பட்டு விடை தேடத்தக்க, இருண்ட ரகசியங்கள் பொதிந்திருக்கும் மாபெரும் ஒற்றைக் கேள்விக்குறியாக, குறிகளின் வழி தன்னையறியும் எழுத்துச் சமூகத்தைச் சேர்ந்தவன் முன் இயற்கை நிற்கிறது.

குறிகளின் இலக்கணம் இயற்கையின் இலக்கணம் அல்ல- இயற்கையின் இலக்கணம் தன் சூழலனைத்துடனும் அது நிகழ்த்தும் தொடர் உரையாடலின் நிகழ்கணங்களில் மட்டுமே வெளிப்படுகிறதெனில், குறிகளின் இலக்கணம் முன்வரை செய்யப்பட்டு விரியும் இயல்புடையது. யந்திரத் தன்மை கொண்டது. இந்த பகுப்புப் பிழையில்தான் (category error) க்ரௌஸ், டென்னட், டாக்கின்ஸ் போன்ற அறிவியல் சிந்தனையாளர்கள் திளைக்கிறார்கள்.

-o00o-

எனினும், குறிகளாலான சொற்கட்டமைப்பும் வாழ்வனுபவத்தைச் சார்ந்தே எழுகிறது. இதனாலதான் அறிவியலின் முடிபுகள் யதார்த்த அனுபவங்களோடு பொருந்தும் வகையில் இருக்கின்றன. இங்கு சார்ந்து என்று சொல்லும்போது, வாழ்வனுபவத்தால் கட்டுப்பட்டு, அதனால் தீர்மானிக்கப்பட்டு என்றாகாது. புற உலகை ஆய முனையும் இயற்பியல், இயற்கையான தூல உலகைச் சார்ந்து எழுந்தாலும், அது கணிதம் எனப்படும் முழு அருவக் கட்டமைப்பால் வடிவம் பெற்று, அதன் மொழியில் விளக்கப்பட்டு, அதன் தரவுகளைக் கொண்டே அறியப்படுகிறது. அது மட்டுமல்ல, கணிதத்தின் கற்பனைக் கட்டுமானத்தால் மட்டுமே விரிக்கப்படும் தன்மை கொண்டதாகவும் இயற்பியல் இயங்குகிறது. இயற்கையைப் புற உலகாய் அறிந்து விவரிக்கும் இயற்பியல் முழுக்க முழுக்க கணிதக் குறிகளால் மட்டுமே அறியப்பட்டு, வேறெந்த மொழியிலும் விளக்கப்படமுடியாத பதிலி நிலையை அடைந்து விடுகிறது.

இங்கே நாம் கணிதத்தைக் கற்பனைக் கட்டுமானம் என்று சொல்வதில், ஒரு யந்திரத்துக்குரிய திண்மையுடன் தூலத்தில் காலூன்றி நின்று, உயரும்போது அருவத்தில் பல பரிமாணங்களாக விரிவதைத் தன் குணமாகக் கொண்டிருக்கும் மாந்திரிக இயல்பே சுட்டப்படுகிறது. க்ரௌஸ் விவரிக்கும் குறிக்கோளில்லாத பிரபஞ்சம் இப்படிப்பட்ட கற்பித மொழிபின் முடிபுதான் என்பதை நாம் மறக்கக்கூடாது.

இந்தக் கற்பனையின் விரிதல்தான் முப்பரிமாணக் காட்சியுலகை மட்டுமே அறியக்கூடிய மனிதருக்கு இருபத்து மூன்று பரிமாணங்களில் எண்ணிறந்த வகைகளில் இயற்கை விரிகிறதான ஒரு உணர்த்துதலைக் கற்பிக்கும் திறனை கணிதத்துக்குத் தருகிறது. குறிச்சொற்கட்டுமானத்தின் தனித்தன்மை இது. புலன்களின் பயன்பாட்டுக்கு இல்லாத தூலப் பொருட்களை, அல்லது தூலத்திலில்லாத பொருட்களை, குணங்களை, வடிவுகளை, கற்பனை செய்து நிகழ்த்த இத்தகைய மொழிதல் உதவுகிறது.

இங்கு நிகழ்த்துதல் என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன? கற்பனையின் நீட்சிக்குக் குறிகளைக் கொண்டு ஒலியையொத்த வடிவம் கொடுப்பதோடு, அதற்கு விளக்கமும் தந்து, கிட்டத்தட்ட தூல இருப்பையே புலனுக்குக் கொண்டு வரமுடிகிற தன்மையே நிகழ்த்துதலாய்ப் பேசப்படுகிறது. எனவேதான் மொழியை, அனிச்சைச் செயல்களால் ஆளப்படும் தளைகளை நீக்கி மனிதனை தன்னிச்சையாக செயல்படும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடிய அற்புதம் என்று நாம் அறிகிறோம். இந்த உணர்வையே க்ரௌஸ், “என் இருப்பை நியாயப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட கற்பனையான தேவதைக் கதை(fairy tale) உலகில் வாழ்வதைவிட, என் விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் கருதாமல் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வினோதமான, தனிச்சிறப்புடைய பிரபஞ்சத்தில் வாழ்வது எனக்கு நிறைய மனத் திருப்தி அளிக்கிறது.” என்று வெளிப்படுத்துகிறார்.

ஆனால், கணிதம் என்பதும் மொழி என்று அறிவது இந்த அற்புதத்தின் எல்லைகளைப் புரிந்து கொள்ள உதவும். ஒலியும் காட்சியின் ஒழுங்கும் கூடிப் பெறும் பெரும்பேறே மொழி. ஒலியின் இடத்தைக் குறிகள் நிரப்பும்போது, இதுவரை அறியப்பட்ட காட்சியொழுங்கை குறிகளின் தனித் தர்க்கம் குலைக்கிறது. அப்போது விளையும் குறிமொழிபு வாய்மொழி சமூகங்களுக்குப் பழக்கப்பட்ட மாந்திரிக உலகின், மாயங்கள் நீக்கப்பட்ட பதிலி ஒன்றை எழுத்துச் சமூகங்களில் நிர்மாணிக்கிறது. இந்தப் பதிலி உலகில் மட்டுமே நாம் நடமாடும் பிரேதங்களாய்த் திரிவதற்கான நியாயங்கள் இருக்கின்றன.

இதை இன்னும் எளிமையாகச் சொல்வதானால் மொழியை ஒலி வடிவாக மட்டுமே கற்று, பழகி, மேன்மைப்படுத்திய நாகரீகங்கள் மனித மேம்படுத்தலுக்குப் பாதை போட்டு பயணித்தனர் என்று சொல்லலாம். அதை அடுத்த கட்ட பிரதிநிதித்துவத்துக்கும் பிரதிபிம்பத்துவத்துக்கும் பதிலி நிலைக்கும் மாற்றியபோது- பேச்சு மொழி குறிகளாகவும் குறியீடுகளாகவும் பிரதிமைகளாகவும் உருமாற்றம் பெற்றபோது-, அது பிரதி சார்ந்த பல்வித பயன்பாடுகளுக்கும் வித்திட்டது. இது முற்றிலும் வேறு வகைப்பட்ட, படைப்பூக்கம் கூடிய கற்பிதச் செயல்பாட்டு சாத்தியம் கொண்டது. குறியீடுகளால் விவரிக்கப்பட்டு மெய்ப்படும் உலகம், மனித அனுபவத்தால் வரையறுக்கப்பட்ட பொருள் சார்ந்த பயன்பாட்டைத் தாண்டி, அனுபவம் சார்ந்த உளவியல் வரைகளையும், மொழி மற்றும் பிரதிமைப்படுத்துதல்களின் சட்டகங்களையும் சாராத, யந்திர உற்பத்திக்கான மூலக்கூறுகளாக உருவாக்கம் பெறும்போது மொழிபு மைய விரிவாக்கம் மட்டுமே அது துலக்கம் பெறப் போதுமானக் காரணமாக இருக்கிறது.

இதையே இன்னும் எளிமையாகச் சொல்வதானால், அப்படியொரு சாத்தியம் இந்தக் கட்டுரையில் பேசப்படும் விஷயத்துக்கு உள்ளதெனில், நாம் அப்பைய தீக்ஷிதரின் சமகாலத்தவரான தர்மராஜர் என்ற அத்வைத வேதாந்தியை நினைவுகூர வேண்டும். எந்த ஒரு வாக்கியமும் அதன் பொருளை உணர்த்திக் கொள்ளும் ஆற்றலுக்கான காரணங்களில் தாத்பர்யத்தையும் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் இதைச் சொல்வதானால், எந்த ஒரு வாக்கியமும் தன்னாலும் தான் சுட்டும் சூழலாலும் வெளிப்படையாக விலக்கப்படாத அனைத்து பொருளையும் கொண்டுள்ளதாக அதன் தாத்பர்ய காரணத்தைக் கொள்ள வேண்டும் என்கிறார் தர்மராஜர். இவ்வகையிலேயே கணிப்பொறியியல், அறிவியல், கணிதம் என்று பல்துறைகளிலும் துலக்க காரணத்தால் கட்டுப்படுத்தப்படாமல் பல்பொருள் விரிவாக்கம் பெறும்போது குறிகள் மாந்திரீகத் தன்மை பெறுகின்றன.

இந்த விரிவாக்கத்தின் விளைவுகள் நம்மால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத, எல்லையற்ற சாத்தியங்கள் கொண்டவை. அவற்றை ஆய்வதோ, விளக்குவதோ, அவற்றின் பற்பலப்பட்ட தன்மைகளை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வருவதோ எளிய செயலல்ல. பலர் இப்படிப்பட்ட ஒரு பகுப்பாய்வை முயற்சித்துள்ளனர். ஆனால் அத்தகைய பகுப்பாய்வின் முடிபுகள் பொதுபுத்திக்குப் புரியக்கூடிய தளத்துக்கு இன்னும் கொணரப்படவில்லை. ஆனால் இந்த நிலையிலும்கூட இத்தகைய விரிவாக்கத்தின் முடிவுகளை, குறிகளின் விரிவாக்கத்தில் வெளிப்படும் பதிலி உலகின் தர்க்கங்களை, எங்கும் எப்போதும் பொருந்தக்கூடிய உண்மைகளாக முன்னிறுத்துவதில் பிழைபுரிதல்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம். நிற்க.

துலக்க காரணத்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்படாமல் பல்பொருள் விரிவாக்கம் பெறும் குறிகளின் மாந்திரீகத் தன்மைக்குச் சில காட்டுகளை நாம் பார்த்தால் இந்த விஷயம் புரியும்..

புதிதாக வடிவமைக்கப்படும் வேதிப் பொருட்களின் நச்சுத் தன்மையை அறிய முற்படும் ஆய்வாளர்கள் தங்கள் சோதனைக் கூடங்களில் அவற்றின் தன்மைகளைப் பகுப்பாய்வு செய்வது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. இன்றைய உலகளாவிய அறிவுபுல பெருவெடிப்பின் விளைவாக எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஒரு தகவல்திரட்டியில் சேமித்து, புதிதாக வடிவமைக்கப்படும் வேதிப் பொருட்களின் மூலக்கூறுகளை தனிச்சொல் தேடுதலுக்கு உட்படுத்தி அவற்றின் நச்சுத் தன்மையை அறிய முடிகிறது. புற்றுநோய்க்கு காரணிகளாக அமையக் கூடிய வேதிப் பொருட்களை, சோதனைக் கூடத்துக்கு வெளியே, கணிப்பொறியில் உள்ள தகவல்களைக் கொண்டு அடையாளம் காண்கிறார்கள். இதை எந்திர மொழிபின் மாந்திரிக பயன்பாடு என்று சொல்லலாமல்லவா? இந்தத் தேடுபொறியின் மென்பொருளை எழுதிய கணிப்பொறியாளர் அவர் படைத்த மொழி அதன் எந்திர விரிவாக்கத்தில் அடையும் விளைவுகளை முன்கூட்டியே தீர்மானித்திருக்க முடியுமா? அது சாத்தியமுமில்லை. இந்தச் செய்தி இங்கிருக்கிறது.

மற்றனைத்து மொழிபெயர்ப்புச் சாதனங்களையும்விட இன்று கூகுள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு மென்பொருள் வெற்றி பெற்றுள்ளது. அது சொற்களின் பொருளை அறிந்து மொழிபெயர்ப்பதைத் தன் அடிப்படையாகக் கொள்ளவில்லை. மாறாக, இரு மொழிகளிலும் பயன்படுத்தப்படும் சொற்கள் எந்த வரிசையில் வருகின்றன, எப்படிப்பட்ட பயன்பாட்டு ஒழுங்கைக் கடைபிடிக்கின்றன என்ற புள்ளி விவர அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. ஒரு மொழியில் உள்ள சொற்களின் பொருளைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையைக் கொண்டே மாற்று மொழியில் அச்சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டு அவை நமக்கு ஏறக்குறைய சரியான பொருளை உணர்த்துகின்றன. இப்படிப்பட்ட மென்பொருளின் முழுக்க முழுக்க யந்திர மொழிபின் விளைவுகள் மாந்திரிக பயன்பாட்டுக்கு உள்ளாகின்றன என்று சொல்லலாமல்லவா? இந்த மென்பொருள், தேவைக்களவுள்ள தகவல்திறட்சியைக் கொண்ட எந்த இரு வேறு மொழிகளிலும் தன் மொழிபெயர்ப்புப் பணியைப் பொருத்தமான வகையில் செய்கிறது. இந்தச் செய்தி இங்கிருக்கிறது

எந்த ஒரு மாந்திரிகனும் வியப்புடன் பாராட்டத்தக்க சாதனையை சில எளிய கருவிகளைக் கொண்டு ஆய்வுக் கூடங்களில் சாதித்துள்ளனர். காட்சிப் பிழையின் அடிப்படையில், நமக்கு இருக்கும் இரு கைகளோடு மூன்றாம் கை இருப்பதாக உணர்த்தியிருக்கிறார்கள். தவிரவும் ஒரு பொம்மையில் நாம் இருப்பதாகவும் அதன் கையை ஒரு ஊசியால் குத்தும்போது நம் கை வலிப்பதாகவும், அதன் பார்வையில் நம்மையும் நாம் இருக்கும் உலகையும் நாம் பார்ப்பதாகவும் உணர்வது சாத்தியப்பட்டுள்ளது. தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட இந்த உணர்த்துதலை காட்சி மொழிபின் யந்திரப் பயன்பாட்டின் துவக்கமாகக் கொள்ளலாம். உடலில் துளையிட்டு மிக நுட்பமான கருவிகளைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் போர்க்களத்தில் ரோபோக்களைத் துல்லியமாக இயக்கும் போர் வீரர்களுக்கும் இந்த தொழில் நுட்பம் பயன்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவரே இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட உடல்களாக உணர முடியுமா என்றும் ஆய்வு செய்கிறார்கள். ஒரு உடல், அதில் ஒரு உயிர், அதன் ஒரு பார்வை என்ற நிலையிலிருந்து பார்வையை உடல் சார்பற்ற மொழியாகப் பயன்படுத்தி விரிக்கும்போது இவ்வளவும் சாத்தியப்படுகிறது. ஆனால் இந்த மந்திரப் பயன்பாட்டுக்கு அடிப்படையாக இருப்பது முற்றிலும் எந்திரத் தன்மை கொண்ட மொழிதல் மட்டுமே.

இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இத்தகைய பயன்பாடுகள் சாத்தியப்பட்டிருப்பது மென்பொருள் மொழிகளின் யந்திர தர்க்கத்தால் மட்டுமே. ஆனால் இதுவும் மாறப் போகிறது. குவாண்டம் விசையியலின் அடிப்படையில் கணிப்பொறிகள் அமைக்கப்படுகின்றன. உண்டு இல்லை என்ற ஆணைக்கப்பால், இருந்தாலும் இருக்கலாம், இரண்டும் இருக்கலாம் என்ற நிலைகளிலும் நாம் பயன்படுத்தும் கணிப்பொறிகள் இயங்கப் போகின்றன. இத்தகைய கணிப்பொறிகளுக்கேற்ற மென்பொருள் மொழிகளைக் கையாள்பவர்களின் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஏனெனில், இது இயற்கையின் மொழிதலுக்கு மிக நெருக்கமான ஒன்று. அதைப் பயன்படுத்தக் கற்ற மனிதன், யந்திரப் பயன்பாடு என்ற நிலையைத் தாண்டி மெய்யாகவே மாந்திரிகப் பயன்பாட்டுக்குத் தன் மொழிபைக் கொண்டு செல்கிறான்.

மொழி மைய சிந்தனையும் காட்சி அமைப்பு சார்ந்த சிந்தனையும் ஒருமித்த ‘நவீனத்துவம்’ அதுவரை இருந்த பண்பாட்டு மற்றும் சிந்தனை மரபுகளின் செவித்துவப் புழக்கத்துக்கு ஏறத்தாழ முற்றுப்புள்ளி வைத்தது. அங்கு நாம் இழந்தது ஓர் உலகம். ஆனால் மனிதனின் அறிவு பற்பல வகைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒன்று. செவித்துவம் அதன் அடிப்படை இயல்பு. நாகரிகம் முழுக்க முழுக்க மௌன வாசிப்பில் தன்னை என்றும் பிணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் மொழிபு மைய சிந்தனை மொழியின் பயன்பாட்டை மேலும் கூர்மையானதாகவும் துல்லியமானதாகவும் மாற்றியுள்ளது. செவித்துவ பண்பாட்டுகளில் சாத்தியப்படாத துறைசார்ந்த, பகுப்பாய்வுக்குப் பயன்படக்கூடிய சிந்தனை முறைமைகளை மொழிபு மைய சிந்தனை சாதித்துள்ளது.

இங்கு நாம் துவங்கிய இடத்துக்கே திரும்ப வருகிறோம்: மண்ணில் தோன்றி மண்ணில் மறையும், மண்ணோடுடனானது நம் இருப்பு. ஒருமை எனப்படும் முழுமையுணர்வை, நாம் ஊடகமற்ற உணர்தலில் மட்டுமே பெறுகிறோம். எழுத்துச் சமூகமாக, குறிகளைப் புழங்கத் துவங்கும்போது நமக்கேற்படும் துணித்தல் ஒரு வகை எனில், குறிகளை மீமொழிபாய்ப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் நம் உணர்வுத் தளத்தை எங்கு செலுத்தும் என்ற கேள்வியின் துவக்கங்களை நாம் இன்று எதிர்கொள்கிறோம்.

இது ஒரு வகை வீடு திரும்பலாகவும் இருக்கலாம். இவ்வளவு நேரம் நாம் பேசிய யந்திர – மந்திர இருமை பொய்யானதாக, மொழியால் ஏற்பட்ட கருத்துப் பிழையாக இருக்கலாம் – க்ரௌஸின் குறிக்கோளில்லாத பிரபஞ்சத்தைப் போல. ஆய்வு செய்யவும் அறியவும் ஏராளமான விஷயங்கள் தொடர்ந்து வெளிப்பட்டு விரிவடைகின்றன : அவற்றின் விதைகளைத் தன்னில் துவக்கம் தொட்டே பொதித்துச் செல்கிறது அறிவியல். அந்த அறிவியலின் தொடர் பாதையின் ஓர் எதிர்காலத்தில் இந்த குறிக்கோளற்ற பிரபஞ்சம் ஒரு தற்காலிக ஓய்வறையாகவும் அறியப்படலாம்.