புளியந்தொக்கு

வீட்டின் முன் வாசல் திறந்திருந்தது. ஓட்டுநர் வேலை பார்க்கும் செண்பாவின் அப்பா முன் அறையின் ஓரத்தில் நார்க்கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். சமையலறையில் இருந்து பால் குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டது. முன்னறையைத் தாண்டினால் சிறிய படுக்கையறை. அதை ஒட்டினாற் போல் இருந்தது சமையலறை. சற்று தயக்கத்துடனே சமையலறை நோக்கிச் சென்றான் மகேஷ்.

“செம்பளி எங்…?”

சத்தம் கேட்க திரும்பியனாள் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த செண்பாவின் அம்மா.

“உங்க வீட்டுக்கு வரலையா? அப்ப முத்துவும் அவளும் புறத்தால விளையாடிட்டு இருப்பாங்க. போ போய்ப் பாரு. சத்தம் கூட வரல அப்படி என்ன பண்ணுதுங்க?”

மகேஷ் செண்பாவின் அம்மாவை சுற்றிக்கொண்டு பின்கட்டுக்குச் செல்லவும், “யம்மா… யம்மா…” என்று சத்தமாக கூப்பிட்டபடி செண்பா வரவும் சரியா இருந்தது.

“மெதுவாடீ, அப்பா முழிச்சிக்க போறார். எதுக்கு இப்படி கிடந்து கத்துற? மகேஷை கூட்டீட்டு வெளிய போய் விளையாடு. முத்து எங்கடி?”

“அண்ணன் டேங்கு பக்கத்தல இருக்குற புளிமரத்ல நிறையா காய் அடிச்சதுமா. சுட்டுட்டு இருக்கு. என உப்பும் மிளாவத்தலும் வாங்கியாறெ சொல்லிச்சு.”

“என்னது? உப்பும் மிளாவத்தலுமா? எதுக்குடி? அங்க எதுக்கு போறீங்க? அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான், கொன்னுடுவார். ஸ்கூல் இல்லைனா உங்களோட ஒரே ரோதனதான்”.

அவர்கள் இருந்த தெருவுக்கு அருகில் குடிநீர் தேக்கிவைக்கும் பெரிய தொட்டி ஒன்று உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரை சிவலப்பரியில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் கொண்டு வந்து அங்குதான் தேக்கி வைப்பார்கள்.

“சரி இந்தா. ஒரு மிளாவத்தல்தான் தருவேன். டேங்கு பக்கத்தில ஒரே செதுவலா இருக்குமேடி செருப்பு போட்டுக்கோ. மகேஷ பத்திரமா கூட்டீட்டு பத்திரமா போய்ட்டு வரணும். சரியா?”

மிளகாவற்றலையும் உப்பையும் வாங்கிக் கொண்டு செண்பாவும் மகேஷும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.செண்பாவின் வீட்டோடு சேர்த்து அந்த வரிசையில் மொத்தம் நான்கு வீடுகள் இருந்தன.அவர்கள் இருந்த தெரு சற்று அகலமானது.தெருவைக் கடந்தால் முட்புதர்கள் நிறைந்த பகுதி வரும். அதைத் தாண்டி சிறிது தூரத்தில் ஓங்கி வளர்ந்த புளியமரங்கள் மூன்றும் பத்து பதினைந்து வேப்ப மரங்களும் இருந்த அடர்ந்த வனம் போன்ற ஒரு பகுதி இருந்தது.

தெருவைக் கடக்கும்போதே சற்று தொலைவில் புகை வருவது தெரிந்தது.முட்புதர்கள் இடையே உள்ள ஒற்றையடிப் பாதையை கடக்கும் போதே ஏதோ ஒன்று தீயில் கருகிய நெடி அடித்தது. அது முத்துவின் வேலையாகத்தான் இருக்கும்.வீட்டிலிருந்து குப்பைகளைக் கொண்டு வந்து எரித்துக்கொண்டிருந்தான். அந்த ஊர் தீப்பட்டி தயாரிப்புக்கு பெயர் போன ஊர். அந்த ஊர் தீப்பட்டிக்கு காஷ்மீர் வரை கூட மதிப்பிருந்தது. அடிப்பெட்டி, மேற்பெட்டி ஒட்டுவது, தீக்குச்சி அடுக்குவது என பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பெண்கள் அதை ஒரு கைத்தொழிலாகவே செய்து வந்தார்கள். செண்பாவின் அம்மா கூட தீக்குச்சி அடுக்குவார். ஒடிந்த தீக்குச்சிகள், கிழிந்த மேற்பெட்டிகள் என தினமும் அவர்கள் வீட்டில் ஒரு கூடை குப்பை தேறும்.

மகேஷ் செண்பாவை விட்டுவிலகி முத்து இருக்கும் இடம் நோக்கி ஓடத் துவங்கினான்.

“டேய் இருடா, ஓடாத நானும் வாரேன்,” கத்தியபடியே மகேஷை பின் தொடர்ந்தாள் செண்பா.

செண்பா எல்.கே.ஜி படிக்கும் மகேஷை விட நான்கு வயது மூத்தவள். முத்து அவளைவிட ஒரு வயது பெரியவன். வயதிற்கு மீறிய மூர்க்கத்தனம் கொண்டவன். பல நேரங்களில் செண்பாவை அடித்ததை பார்த்ததனாலோ என்னவோ மகேஷூக்கு முத்துவை அறவே பிடிக்காது.

பாதி எரிந்து முடிந்திருந்த குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தான் முத்து.

“உப்பும் மிளாவத்தலும் வாங்கியாந்த்யா? இவன எதுக்கு கூட்டியாந்த? அவங்க அம்மா பாத்தா திட்டும்” மகேஷை கண்டதும் முத்துவிற்கு சிறிது கோபம் வந்தது.

“அம்மாதான் கூட்டிப்போக சொல்லிச்சு. இந்தாண்ணா,” கையில் இருந்ததை முத்துவிடம் நீட்டினாள் செண்பா.

“வச்சிருடி.பக்கத்துல வராத, கங்கு பட்டுரும்.அவன கூட்டிட்டு அந்தால நவுருடி.”

மகேஷின் கையைப் பற்றிக் கொண்டு புளிய மரத்தடி நோக்கிச் சென்றாள் செண்பா. முத்து தீயில் குச்சியை விட்டுக் கிளறி கருகிய நிலையிலிருந்த ஐந்து புளியங்காய்களை வெளியில் எடுத்துப்போட்டான். இரண்டு குச்சிகளை வைத்து லாவகமாக ஒரு பெரிய புளியங்காயை பக்கத்திலிருந்த பெரிய கல்லில் வைத்தான். அதில் கை வைக்க சூடு தாளாமல் வெடுக்கென கையை உதறினான்.

ஏற்கனவே எட்டு புளியங்காய்களை சுட்டு வைத்திருந்தான். தீயில் வாட்டாத புளியங்காய்கள் பத்து எண்ணம் மீதமிருந்தது. எரிந்து கொண்டிருந்த குப்பையைக் கிளறியதாலோ என்னமோ நெருப்பு அணைந்திருக்கும் போல. புகை பரவ ஆரம்பித்தது. முத்து மறுபடியும் கிளற, தணல் முற்றிலும் அணைந்து அந்தப் பகுதி முழுவதும் பெருங்புகை பரவத் தொடங்கியது. கொண்டுவந்த மேற்பெட்டிகளையும் ஒடிந்த தீக்குச்சிகளையும் ஏற்கனவே பாதி எரித்துவிட்டிருந்தான். ஏதோ யோசித்தவனாய் எழுந்து வேப்ப மரங்கள் நிறைந்த பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினான். புளியமரத்தடியில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த மகேஷ் முத்து செல்வதை பார்த்து அவனை பின்தொடர்ந்து ஓடத் துடங்கினான்.

“டேய் ஓடாதடா,கீழ வூழுந்திருவ” செண்பாவின் குரல் கேட்டு திரும்பிய முத்துவை பார்த்த மகேஷ் நான்கு அடிவிட்டே அவனை பின் தொடர்ந்தான்.

வேப்பமரங்கள் நிறைந்த பகுதியின் முடிவில் குறவர் கூடாரம் ஒன்று இருந்தது. கூட்டமாக வசிப்பதே குறவர்களின் வழக்கம். பெரும்பாலும் அவர்கள் நிலையாக ஒரு இடத்தில் தங்குவதில்லை. அந்த பகுதியில் நான்கு கூடாரங்கள் இருந்தன. நேற்றுதான் மூன்று குடும்பங்கள் வேறு ஊருக்கு குடிபெயர்ந்து சென்றிருந்தார்கள். ஊருக்கு அருகே உள்ள மலையில் வேட்டையாடிய காட்டு முயல், காடை, கவுதாரி, போன்றவற்றை ஊரில் கொண்டு வந்து விற்பார்கள். பெண்டுகள் பாசிமணிகள் கோர்த்து பஸ்டாண்ட் ரயிலடி போன்ற இடங்களுக்கு சென்று விற்பது வழக்கம். குடும்பத்திற்கு குறைந்தது நான்கு ஐந்து குழந்தைகளாவது இருப்பார்கள். எப்போதும் ரேடியோவில் பாட்டு கேட்டபடியே இருப்பார்கள். மயில், வேல், முருகன் அல்லது எம்ஜிஆர் உருவங்களில் ஏதாவது ஒன்றை பச்சை குத்தியிருப்பார்கள். மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள்.

“யக்கா… யக்கா…” கூடாரத்தை நெருங்கிய முத்து மெதுவாக குரல் கொடுத்தான்.

பகலில் பெரும்பாலும் அவர்கள் கூடாரங்களில் தங்குவதில்லை. பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்தன.ஆள் அரவம் இல்லை. கூண்டில் அடைபட்டுக் கிடந்த இரண்டு மைனாக்கள் மிரட்சியுடன் பார்த்தன. முத்துவின் வயதே நிரம்பிய ஒரு சிறுவன் கூடாரத்தின் பின்புறமிருந்து எட்டிப் பார்த்தான். பழுப்பேறிய சடை முடி. கருத்த தேகம். கழுத்தில் வெண்ணிற பாசி மாலை. கையில் வேலும் மார்பில் முருகனும் பச்சை குத்தப்பட்டிருந்தது.இடுப்பில் ஒரு வயது குழந்தை இருந்தது. அநேகமாய் அது அவனது தம்பியாகத்தான் இருக்கும்.

“தீபட்டி இருக்கா? வேணும்”

“தீபட்டி இருக்கா? வேணும். புளியங்காய் சுடணும்” மறுபடியும் கேட்டான் முத்து.

பதிலேதும் சொல்லாமல் கூடாரத்தினுள் சென்றவன் சில நொடிகளில் வெளியே வந்தான். கையில் தீப்பெட்டி இருந்தது. கூடாரத்தின் மேலிருந்த துணியை வாசலில் திரைபோல் பரவவிட்டுவிட்டு முத்துவிடம் வந்து தீப்பெட்டியை நீட்டினான்.

“அங்கனதான் இருக்கேன்” புளியமரத்தடியை நோக்கி கை காட்டியபடி அச்சிறுவனின் கையிலிருந்த தீப்பெட்டியை எடுத்துக்கொண்ட முத்து திரும்பி நடக்க ஆரம்பித்தான் .

அந்த பகுதி முழுவதும் புகை பரவியிருந்தது.

“தீப்டி முத்து வாங்கிச்சி” செண்பாவிடம் ஓடிய மகேஷ் அவளின் கையை பற்றிக்கொண்டான். சிறுவனும் இவர்களை பின் தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். முத்து மண்டியிட்டமர்ந்து மறுபடியும் குப்பைகளைக் குவித்தான். செண்பாவும் மகேஷும் அருகில் வந்து அவன் செய்வதை வெடிக்கை பார்க்கத் தொடங்கினர். தீக்குச்சியை உரசி குப்பைக் குவியலில் போட தீ பற்றி எரிந்தது.

“ஏ முருகா, ஏய்ய்ய் முருகா,” கூடாரத்தின் பக்கமிருந்தது குரல் வந்ததது.குரல் வந்த திசையில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் நின்றிருந்தார். அநேகமாய் அவர் அவன் அம்மாவத்தான் இருக்கும்.வெளியே சென்றிருந்தவர் திரும்பியிருப்பார் போல. முத்துவிடம் தீப்பெட்டிக்காக கை நீட்டினான் அந்த சிறுவன்.முத்து தீப்பெட்டியை நீட்ட அவசரமாக அதை புடுங்கியவன் “ஓய்ய்ய்” எனப் பெருங்குரலெடுத்தபடியே ஓடத் தொடங்கினான். அவன் இடுப்பில் அமர்ந்திருந்த குழந்தை அழத்தொடங்கியது.

“ஏட்டி இவன அந்தால கூட்டிட்டு போடி கங்கு வரும். போளெ அந்தால” முத்து கோவமாக கத்தினான்.

செண்பாவின் முகம் சுண்டியது. “வாடா அந்த மரத்துக்கு போவம்” மகேஷின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு விறுவிறுவென புளியமரம் நோக்கிப் போனாள்.

புகைவருவது நின்று தீ நன்றாக எரியத் தொடங்கியது. முத்து மிச்சமிருந்த வாட்டாத புளியங்காய்களை அதில் போட்டு குச்சியை வைத்து சிறிது கிளறிவிட்டான். கல்லின் மேலிருந்த ஏற்கனவே சுட்ட வைத்த புளியங்காயில் ஒன்றை எடுத்து நசுக்கிப் பார்த்தான். கருகிய தோடு அப்படியே பிய்ந்து வந்தது. நன்றாக வெந்து பழுப்பு நிறத்திலிருந்த அந்த சுட்ட புளியங்காயை சிறிது வாயில் போட்டு சுவைத்து பார்த்தான். முத்துவின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது. தீ குறைய மறுபடியும் புகை வர ஆரம்பித்தது. பாதி சுட்ட நிலையில் இருந்த புளியங்காய்களை குச்சியை வைத்து தள்ளி வெளியில் எடுத்தான்.

அளவில் சற்றே சிறிய கற்களை தேடி பொறுக்கத் தொடங்கினாள் செண்பா. ஐந்தாறு கற்களை பொறுக்கிய பின் ஓங்கி வளர்ந்த அந்த புளியமரத்தை பார்த்தாள். கொத்து கொத்தாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் புளியங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. சில வாரங்களில் பழுக்க தொடங்கி விடும்.

கையிலிருந்த கற்களில் ஒன்றை மட்டும் தன் வலது கையிற்கு மாற்றி ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு குறி பார்த்து எறியத் தயாரானாள் செண்பா.

செண்பாவை பின் தொடர்ந்து வந்து அவள் முன் வந்து நின்ற மகேஷை “அங்கன போய் உக்காருடா கல்லு படும்” என்று சொல்லி தள்ளி விட்டாள். மகேஷ் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு அவள் செய்வதை வேடிக்கைப் பார்த்தான். செண்பா ஒவ்வொரு கல்லாய் குறிபார்த்து எறிந்தாள். ஐந்தாறு கற்கள் எறிந்திருப்பாள் ஒன்று கூட புளியங்காயை தொடவில்லை.

முத்து சுட்ட புளியங்காய்களை தன் காற்சட்டையில் துடைத்து ஒவ்வொன்றாக கல்லில் வைத்தான். பாதி வெந்திருந்ததாலோ என்னவோ அவ்வளவு வெப்பம் ஏறியிருக்கவில்லை. பின் கல்லில் இருந்த காய்களை எடுத்து தன் காற்சட்டைப் பையில் நிரப்பினான். காலால் மணலை தள்ளி எரிந்து கொண்டிருந்த குப்பையை அணைத்தான்.

“ஏளெ செண்பா,செத்த இங்க வாடி”

புளியமரத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த செண்பா, “வாடா மகேஷ் போவம்” அவனின் கையை பற்றியபடியே முத்துவினிடத்தில் கூட்டிச் சென்றாள்

“அப்பா இருக்காளெ?”

“உறங்குது”

சில நொடிகள் நின்று யோசித்தவன் ஒற்றையடிப் பாதை நோக்கி நடக்கத் தொடங்கினான். மகேஷும் செண்பாவும் ஓட்டமும் நடையுமாய் அவனை பின் தொடர்ந்தார்கள். முட்புதர்கள் தாண்டி தெருவைக் கடந்து மூவரும் செண்பாவின் வீட்டை அடைந்தார்கள். முத்து படிக்கட்டிலிருந்தபடியே மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான். அவன் அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். உதட்டின் முன் ஆட்காட்டி விரலை வைத்து செண்பாவிடம் சப்தம் ஏழாமல் பின் தொடருமாறு சைகை செய்தான். வீட்டின் பக்கவாட்டிலிருந்த அம்மிக் கல் அருகே சென்றவன் காற்சட்டைப் பையிலிருந்த புளியங்காய்களை எடுத்தான்.

அந்த வரிசையில் நான்கு குடும்பங்கள் வாடகைக்கு குடித்தனம் இருந்தனர். நான்கிற்கும் ஒரே உரிமையாளர். எல்லா வீடுகளுக்கும் சேர்ந்தாற்போல் ஒரு அம்மிக்கல்லும் ஆட்டுரலும் வாங்கிப் போட்டிருந்தார். முத்து பொறுமையாக புளியங்காய்களின் தோடை உரிக்க ஆரம்பித்தான்.மொத்தமாக உரித்தபின் அருகிலிருந்த ஆட்டுரலின் குழியில் போட்டான். சாத்தி வைத்திருந்த ஆட்டுக்கல்லை நகற்றி குழியிலிட்டு மெதுவாக ஆட்டினான். செண்பாவின் அம்மா இட்லி மாவு அரைக்கும் சமயங்களில் மாவு தள்ள செண்பாவிற்கும் முத்துவிற்கும் பெரிய போட்டியே நடக்கும். ஆகையால் அவனுக்கு ஆட்டுரலை இயக்குவது இலகுவாக வந்தது .ஓசை எழும்பாமல் மெதுவாய் அரைக்க ஆரம்பித்தான்.

பாதி அரைத்துக் கொண்டிருக்கும்போதே ஏதோ ஞாபகம் வந்தவனாய், “உப்பும் மிளாவத்தலும் எங்கடி?”

தன் மேற்சட்டைப்பையிலிருந்து உப்பையும் மிளகாய் வற்றலையும் எடுத்துக் கொடுத்தாள் செண்பா. அவற்றையும் ஆட்டுரல் குழியிலிட்டு மறுபடியும் அரைக்க ஆரம்பித்தான். புளியங்காய்கள் சுடப்பட்டு இருந்ததால் நழுவாமல் எளிதாய் அரைபட்டது. அரைத்த பதம் பார்க்க கல்லைத் தூக்கினான். மிளகாய் வற்றல் அரைபடாமல் முழுதாய் கிடந்தது. அதை மட்டும் எடுத்து சிறிது சிறிதாய் கிள்ளிப் போட்டான். மறுபடியும் அரைக்கத் துவங்கினான். அரைபடும் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்கவே பக்கத்து வீட்டு கலா அத்தை எட்டிப் பார்த்தாள். வெறுப்பதுபோல் முகத்தை வெடுக்கெனத் திருப்பிக்கொண்டாள் செண்பா. இருவர் வீட்டுக்கிடையில் பேச்சுவார்த்தை கிடையாது.

உள்ளே சென்ற கலா அத்தை “லீவுவிட்டா போதுமே இதுக சும்மாவே இருக்காது”. மாமாவிடம் சொன்னது வெளியே கேட்டது .

“புள்ளைங்கனா அப்படித்தான் இருக்கும்”. வெங்கடு மாமா இவர்களை பார்த்தால் எப்பொழுதும் வாஞ்சையுடன் கன்னத்தை தட்டிவிட்டுப் போவார். கலா அத்தைதான் கொஞ்சம் முசுடு.அவர்களுக்கு குழந்தை இல்லை.

ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், முத்து ஆட்டுரலைத் தூக்கி சுவற்றில் சாத்தி வைத்தான். குழியிலிருந்து புளிக்கலவையை கையால் முழுவதும் அள்ளினான். பளுப்பு நிறத்தில் மிளகாய் வற்றலின் சிவப்புத் தோலும் விதைகளும் அங்கங்கே எட்டிப்பார்க்க அழகாகத்தான் இருந்தது. வாயில் எச்சில் ஊற ஆள்காட்டி விரலால் அந்த கலவையை கொஞ்சம் எடுத்து நாக்கின் நுனியில் வைத்தான். முகம் அஷ்ட கோணலாய் மாறியது. உப்பும் காரமும் அதிகமாய் இருந்திருக்கும் போல.

“அண்ணா எனக்குணா” முத்துவின் தோளைப் பற்றினாள் செண்பா.

காரத்தினால் ஏற்பட்ட எரிச்சலும் புளிக்கலவையின் சுவை தவறாய் போனதால் வந்த கோவமும் ஒன்று சேர்ந்ததாலோ என்னவோ “போடி” என்று செண்பாவை தள்ளிவிட்டு புளிக்கலவையை கையில் அள்ளிக்கொண்டு போய் தெருவின் ஓரம் ஓடிய சாக்கடையில் போட்டுவிட்டு அதைப் பார்த்தபடியே நின்றான் முத்து.

ஏமாற்றமும் கோவமும் ஒரு சேர தாக்க செண்பா பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். விக்கித்து போய் செண்பாவையும் முத்துவையும் மாறி மாறி பார்த்தான் மகேஷ்.மெல்லிய கோடாய் ஓடிய கழிவு நீரில் முத்து வீசியெறிந்த புளிக்கலவை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.

“என்னடி ஆச்சி, ஏன் அழுவுற?” படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த செண்பாவின் அம்மா விசாரித்துபடியே வந்தார்.சத்தம் கேட்டு அவள் அப்பாவும் முழித்திருந்தார்.

“ம்ம் அண்ணன் தரமாட்குது ம்மா ..” அம்மாவை கட்டிக்கொண்டு குரலை மேலும் உயர்த்தி அழ ஆரம்பித்தாள் செண்பா.

“என்னடி தர மாட்டேன்னான்? ஏலே முத்து இங்க வா” சாக்கடை அருகில் நின்றிருந்த முத்துவை அழைத்தாள் அவன் அம்மா.

செய்வதறியாமல் திகைத்த முத்து, “ஒண்ணுமில்லைமா, அவ பொய் சொல்லுறா’ அங்கிருந்தபடியே பதிலளித்தான்.

“என்னடி இவ எதுக்கு இப்படி அழுறவ?” கைலியை சரி செய்தபடியே வாசல்படியில் வந்து நின்றார் செண்பாவின் அப்பா.

“தெரியலிங்க. ஏலே முத்து இங்க வா அப்பா கூப்பிடுறாங்க பாரு. ” மறுபடியும் அவனை அழைத்தாள்.

முத்து நடுங்கத் தொடங்கினான். “அவ பொய் சொல்றாம்மா ..”

எப்படியும் அடி உறுதி என்று எண்ணிய முத்து அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.

“ஏலே முத்து எங்க போற? இங்க வந்துட்டு போடா”

அம்மாவின் அழைப்பை உதாசினப்படுத்திவிட்டு பக்கத்து சந்தில் நுழைந்து அடுத்த தெரு நோக்கி ஓடினான் முத்து.

“சரி. வா அழாத. அம்மா உனக்கு பிஸ்கட் தாரேன். அவன் கிடக்கான்.நீ வாடி என் செல்லம். அழக் கூடாது, வா” செண்பாவை அணைத்தபடியே உள்ளே அழைத்துச் சென்றார் அவள் அம்மா.

“எழவு கொஞ்ச நேரம் தூங்க முடியுதா. நமக்குன்னு வந்து சேர்ந்தது பார் சனியங்கள்” செண்பாவின் அப்பா அலுத்துக் கொண்டே மறுபடியும் கட்டிலில் படுத்து தூங்கப் போனார்.

அனைத்தையும் சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்த மகேஷுக்கு அழுகை வரும் போல இருந்தது. தன் வீட்டுக்கு அருகிலிருந்த பெரிய வாகை மரத்தடியின் துறுத்திய வேரின் மீது சென்றமர்ந்தான். சிறிது நேரம் தெருவை வேடிக்கை பார்த்தான். செண்பாவின் வீட்டிற்கு செல்வதற்கோ பயம். அவள் அப்பா இருப்பார். முத்து வருவதற்குண்டான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அவன் வீட்டிற்கு செல்லவும் மனமில்லை. எதிரில் தெரிந்த முட்புதர்களையும் தூரத்தில் இருக்கும் புளிய மரங்களையும் வெறித்து பார்த்தபடியே இருந்தான். பின் ஏதோ யோசித்தவனாய் தெருவைக் கடந்து முட்புதர்களின் ஊடே செல்லும் ஒற்றையடிபாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

தூரத்தில் கூடாரத்தின் வெளியே அவன் இருப்பது தெரிந்தது. புளியமரத்தடி வந்து சேர்ந்த மகேஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். புளியமரத்தில் கொத்து கொத்தாய் நிறைய காய்கள் தெரிந்தன. சிறிய கற்களை பொறுக்கினான். ஒரு கண்ணை மட்டும் மூடியபடி குறி பார்த்தான் மகேஷ்.செண்பா செய்ததை முழுவதும் கவனித்திருந்திருந்த படியால் அவள் போலவே கல்லை விட்டெறிந்தான். பத்தடி உயரம் போய் கீழே இறங்கியது. இரண்டு மூன்று நான்கு… இந்த முறை மிகக் கூர்மையாக குறி பார்த்தான். பலம் அனைத்தையும் திரட்டி எறிந்தான். பதினைந்து அடி உயரம் போய் கீழே இறங்கியது. கையிலிருந்த கற்கள் தீர்ந்து போகவே மறுபடியும் கற்களை பொறுக்க ஆரம்பித்தான். பின்னால் யாரோ இருப்பது போல் உணர சட்டென திரும்பப் பார்த்தான்.பக்கவாட்டில் அவன் சிரித்தபடியே நின்றிருந்தான். சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்தது. சிரிப்பில் ஒருவித சிநேகம் தெரிந்தது. காற்சட்டை பின்னாலிருந்து ஏதோ எடுத்தான். இரண்டாய் பிளந்த குச்சியின் இரு முனையும் ரப்பரால் இணைக்கப் பட்டிருந்தது. ரப்பரின் நடுவில் தோல் போன்ற ஏதோ ஒன்று இருந்தது. அதன் பெயர் கவுட்டை என்று அந்த பகுதியில் சொல்வார்கள். ஒரு சிறிய கல்லை பொறுக்கி எடுத்து தோல் போன்ற பகுதியில் வைத்து இடது கையால் மரப்பாகத்தை கெட்டியாக பிடித்துகொண்டு வலது கையால் தோலுடன் இணைந்திருந்த ரப்பரை பலம் கொண்டமட்டும் பின்னால் இழுத்து குறிபார்த்தான். மகேஷுக்கு அவனின் செய்கை ஆச்சரியமூட்டியது.

வலது கைப்பிடியை நழுவ விட வீச் என்ற சத்தத்துடன் அந்த சிறிய கல் பறந்தது. அலாதியான வேகத்துடன் ஒரு கொத்து புளியங்காயை மயிரிழையில் உரசிக் கொண்டு சென்றது. மகேஷுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. தன் கையில் வைத்திருந்த கற்களை அவனை நோக்கி நீட்டினான். புன்சிரிப்புடன் ஒரு கல்லை எடுத்து மறுபடியும் குறிபார்க்கத் தொடங்கினான் .பின் பிடியை நழுவ விட்டான். இந்த முறை சரியாக அது இலக்கை தாக்கியது.ஒரு கொத்திலிருந்து மூன்று புளியங்காய்கள் விழுந்தன.

“ஹைய்யா!” உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான் மகேஷ்.

மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு… மூன்று முறை இலக்கைத் தாக்கியது. ஐந்து புளியங்காய்கள் விழுந்தன. மகேஷ் விழுந்த காய்களைப் பொறுக்கி தன் காற்சட்டையில் சேமித்தான். ஒரு இருவது முறையாவது கவுட்டை கொண்டு அடித்திருப்பான், சின்னதும் பெரியதுமாய் பத்து பதினைந்து புளியங்காய்கள் தேறும். மகேஷுக்கு சந்தோசம் பிடிபடவில்லை.வெற்றிக் களிப்பில் கைகொட்டி சிரித்தான். சிறிது நேரம் அங்கு நின்றிருப்பார்கள். பின் மகேஷை தன் பின்னால் வருமாறு சைகை செய்தபடியே அவனின் கூடாரமயிருக்கும் இடம் நோக்கி நோக்கி நடக்கத் தொடங்கினான்.

கூடாரத்தில் யாரும் இல்லை.அவனைப் பின் தொடர்ந்த மகேஷ் கூடாரத்தின் அருகில் வந்ததும் நின்றான். கூடாரத்தின் பின்புறம் சென்ற அந்த சிறுவன் திரும்பி வந்தான்.கையில் நீளமான மெல்லிய கம்பி. கூடாரத்தின் பக்கவாட்டில் அருகருகே மூன்று கற்கள் இருந்தன.அதன் மேல் கம்பியை வைத்துவிட்டு மறுபடியும் பின்புறம் நோக்கிச்சென்றான். மகேஷ் மைனாவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். எங்கிருந்தோ ஒரு கட்டு சுள்ளியைக் கொண்டு வந்தான்.பின் அதைப் பிரித்து கொஞ்சமாக அந்த மூன்று கற்களின் இடையில் சொருகினான். அதைத்தான் அவர்கள் அடுப்பாக பயன்படுத்துவார்கள் போல.காற்சட்டையிலிருந்து தீப்பெட்டி எடுத்து ஒரு தீக்குச்சியை உரசி பற்ற வைத்து அந்த சுள்ளி மேல் போட்டான்.

மகேஷுக்கு அவன் செய்கை புரிந்தது. முகத்தில் புன்னகை அரும்ப தன் காற்சட்டையிலிருந்து புளியங்காய்களை எடுத்து அவனிடத்தில் கொடுத்தான். மகேஷிடம் அதை வாங்கி கற்களின் மேல் வைத்து பின் கூர்மையான அந்த கம்பியின் முனை வழியே ஒவ்வொரு புளியங்காயாய் சொருகினான். ஏழெட்டு காய்கள் சொருகிய பின் எரிந்து கொண்டிருந்த தீயில் அதை காட்டினான். புளியங்காய்களை நன்றாக வாட்டத் தொடங்கினான்.இரண்டு நிமிடம் கழித்து கூடாரத்தின் பக்கவாட்டிலிருந்த தகர டின்னில் அந்த கம்பியைப் போட்டான். அதில் ஏற்கனவே தண்ணீர் இருந்திருக்கும் போல “சர்ர்ர்..”என சத்தம் வந்தது. தீயின் அருகில் அமர்ந்து அனைத்தையும் கவனித்தபடியே இருந்தான் மகேஷ் .

தகர டின்னிலிருந்து கம்பியை வெளியே எடுத்து அருகிலிருந்த துணியில் வைத்தான். கையை புளியங்காயின் மேல் வைத்து அழுத்திக் கொண்டு கம்பியை உருவி எடுத்தான். பின் மிச்சமிருந்த புளியங்காய்களையும் முன்பு செய்தது போல் கம்பியில் சொருகி தீயில் காட்டத் தொடங்கினான். திரும்பி மகேஷை பார்க்க மகேஷ் சிரித்துக் கொண்டிருந்தான். மகேஷ் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பான். ஆனால் எல்லோரிடமும் எளிதாக பழகி விடுவான். அவர்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர், அவரின் மனைவி, மகன், மகனின் நண்பர்கள் என அனைவரும் மகேஷை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

புளியங்காய்கள் நன்றாக சுட்டுவிட்டது போல. கம்பியை வெளியே எடுத்தவன் அதை தகர டின்னில் கொண்டு போய் போட்டான். சிறிது நேரங்கழித்து துணியில் வைத்து கையால் புளியங்காய்களை அழுத்தி கம்பியை உருவினான். .துணியை மூடி சிறிது கசக்க தோடின் மேலிருந்த கரி சற்று போனது. ஒரு சுட்ட புளியங்காயை எடுத்து தோடை நீக்கி வாயில் போட்டான். அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் அதன் சுவை நன்றாக இருந்ததை காட்டியது . பின் துணியை மூடி அதை அப்படியே எடுத்து வந்து மகேஷிடம் நீட்டினான். அதை வாங்கிய மகேஷ் துள்ளலுடன் திரும்பி நடக்கத் துடங்கினான். முட்புதர் பகுதி தாண்டும் வரை நான்கு முறையாவது திரும்பி அவனைப் பார்த்து சிரித்திருப்பான் .ஒற்றையடிப்பாதையை வேகமாக ஓடிக் கடந்து தெருவை அடைந்த மகேஷ் நேராக செண்பாவின் வீடு நோக்கி சென்றான்.

செண்பாவின் அப்பா இருக்கும் சமயங்களில் பெரும்பாலும் அவர்கள் வீட்டு முன் கதவு திறந்துதான் இருக்கும். அவள் வீட்டில் விசாலமான அறைகள் கிடையாது. முன் பக்க கதவை திறந்தால்தான் காற்று நன்கு வரும். அவள் அப்பா முன்னறையில் அமர்ந்து கொண்டுதான் சாப்பிடுவார். ஓட்டுனர் தொழிலில் இருப்பதால் நேரம் தவறி சாப்பிடுவதே அவரின் பழக்கம்.மதிய உணவு அநேகமாக மாலை ஐந்து மணிக்குதான் இருக்கும்.

மகேஷ் அங்கு சென்ற சமயம் செண்பாவின் அப்பா மதிய உணவு எடுத்துக் கொண்டிருந்தார். வாசலில் நின்று கவனித்த மகேஷ் சற்று பின்னடைந்து பக்கவாட்டில் பதுங்கினான். அருகிலிருந்த ஆட்டுரலின் மீதமர்ந்து ஒரு நிமிடம் யோசித்தான். இருகைகள் குவித்து பிடித்திருந்த துணியால் மூடிய சுட்டபுளியங்காய்களை ஆட்டுரலின் பின்புறம் போட்டு விட்டு தெருவில் வந்து நின்றான். சுவர்கள் சந்திக்கும் ஓரத்தில் இருந்தது அந்த ஆட்டுரல்.ஆட்டுரலுக்கும் சுவற்றிற்கும் இடையில் கொஞ்சம் இடமிருந்தது. செண்பா சில சமயங்களில் முத்துவிற்கு தெரியாமல் ஏதேனும் பதுக்கிவைக்க அந்த இடத்தைதான் தேர்ந்தெடுப்பாள். மெதுவாக இருட்டத் தொடங்கியது.தெருவில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகேஷ் தன் வீட்டின் முகப்புக்கு வந்து படிக்கட்டில் ஏறினான்.

வீட்டின் உள்ளிருந்து பாட்டியின் குரல் கேட்கவே சந்தோச மிகுதியில் “பாட்டீ!” கத்திக் கொண்டே படியேறினான் மகேஷ். ஊரிலிருந்து அவன் பாட்டி வந்திருந்தார். அவர் அங்கு வரும் சமயங்களில் எல்லாம் நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார். அதில் தேன்குழல் மிட்டாயும் செவிட்டுச்சேவும் கட்டாயம் இருக்கும்.

“ராசா. வாப்பா. எங்க போயிருந்த ராசா,” வாஞ்சையுடன் மகேஷ் அள்ளி அவர் மடியில் வைத்துக்கொண்டார்.

“ம் ம் செம்பளியிட்டுக்கு,” பாட்டியை கட்டிக்கொண்டே பதிலளித்தான் மகேஷ்.

“செம்பளி வீட்டுக்கா? செம்பளி எங்க?”

“ம் ம்… செம்பளி அங்…”

“மிட்டாய் வேணுமா?”

“ம்.. வேன்ம் ..”

தோளில் கிடத்திக்கொண்டு போய் தேன்குழல் மிட்டாய் எடுத்துக் கொடுத்தார் மகேஷின் பாட்டி.

“சாப்பிடுற நேரத்தில இது எதுக்கும்மா.மகேஷ் கைய கழுவீட்டு சாப்பிடணும் அம்மா பப்பு சோரு தருவேன்.சமத்தா சாப்பிடுனும் சரியா ” பாத்திரம் கழுவியபடியே சொன்னாள் மகேஷின் அம்மா.

சிறிது நேரம் மகேஷ் அவன் பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சூடான சோற்றில் பருப்பு மற்றும் உருளைக் கிழங்கு பொறியலும் கலந்து பாட்டி ஊட்டிவிட விளையாடிக் கொண்டே சாப்பிட்டான் மகேஷ்.உணவு உண்ட சற்று நேரத்தில் தூங்கிப் போனான். குளிர்ந்த காற்று வீசியது. கருமேகங்கள் சூழ்ந்தன. வானம் மனமிறங்கியது. முதல் மழைத்துளி பூமி தொட்டது. …

“ஆகாசவாணி. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி. தலைப்புச் செய்திகள். வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த நிலையால் கடலோர மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ..” காற்றில் கலந்து வந்த வானொலியின் ஓசை மழையின் இரைச்சலில் காணாமல் போனது.

மகேஷின் பாட்டி அதிகாலையிலே எழுந்து விடும் பழக்கம் உள்ளவர். ஊரில் சொந்தமாக நடுநிலைப்பள்ளி நடத்தியவர். அதே பள்ளியில் தலைமையாசிரியர் பணியிலும் இருந்தவர். ஓய்வு பெற்ற பின் நிலபுலன்களை நல்ல முறையில் கண்காணித்து வந்தார். மிகவும் கறாரானவர். இரவு பெய்த மழையில் வயலில் கண்டிப்பாக தண்ணீர் தேங்கி நிற்கும். வரப்புகளை வெட்டிவிட்டு தண்ணீர் வடியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று நாள் மழை நீடித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் இருப்பதால் தானே சென்று மேற்பார்வையிட்டு அதை சரி செய்ய வேண்டும் என மகேஷின் அம்மாவிடம் சொல்லிவிட்டு அதிகாலையிலே கிளம்பிச் சென்றிருந்தார். மகேஷின் அப்பா வெளியூரில் நடக்கும் உறவினர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார். இரவு தான் திரும்புவார். விடுமுறை தினமானதால் அவர்களின் அன்றைய காலைப் பொழுது தாமதமாகவே புலர்ந்தது.

அதிகாலை முதல் கதிரவன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான். மகேஷின் அம்மா எழுந்து குளித்து விட்டு சிற்றுண்டி தயாரிக்க ஆரம்பித்தார்.

“மகேஷ் மகேஷ் குட்டிமா எழுந்திருமா”- மகேஷை எழுப்பிவிட்டார் அவன் அம்மா.அரைத்தூக்கத்தில் புரண்டு படுத்தான் மகேஷ். மறுபடியும் எழுப்ப எழுந்து உட்காந்தான். சுற்றும் முற்றும் பார்த்தவன் பாட்டியைக் காணாது திடுக்கிட்டான்.

“பாட்டீ பாட்டீ ” வீடு முழுவதும் சுற்றி வந்தவன் “பாட்டி எங்?” சமையல் அறை சென்று அம்மாவின் சீலையை இழுத்துக் கொண்டே கேட்டான்.

“மழ பெய்ஞ்சதா பாட்டி தோட்டத்த பாத்துக்க ஊருக்கு போய்ட்டாங்க.”

மழை என்ற சொல் கேட்டதும் வீட்டின் முகப்பிற்கு ஓடினான். மழை அவனுக்குப் பிடித்தமான விடயம். மழையை அலுக்காமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

முன்தினம் சுட்ட புளியங்காய்களை தான் ஆட்டுரலின் பின்னால் போட்டுவிட்டு வந்தது நினைவு வரவே வாசல்படி நோக்கி ஓடினான்.

“எங்க ஓடுற மகேஷ்? ” அம்மா குரல் அவனிற்கு கேட்கவே இல்லை.

சற்று நேரம் தெருவை வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பி விடுவான் என அவரும் விட்டுவிட்டார். செண்பா அவள் வீட்டு வாசல்படியில் உட்காந்திருந்தாள். முத்துவும் அவள் அம்மாவும் அவள் எழும்பும் முன்னரே ஏதோ திருமணத்திற்கு கிளம்பிச் சென்றிருந்தார்கள். செண்பாவையும் கூட்டிச் சென்றால் நிச்சயம் முத்துவிற்கும் அவளுக்கும் சண்டை வரும். தர்ம சங்கடம். அதை தவிர்க்க முத்துவை மட்டும் அழைத்துச் சென்றிருந்தார் அவள் அம்மா. முன் அறையில் செண்பாவின் அப்பா தூங்கிக் கொண்டிருந்தார்.

“செம்பளி,” அவளின் முன் சென்று நின்றான் மகேஷ்.

“என்னடா?” செண்பாவின் கையைப் பிடித்து இழுத்தான். “என்னடா எங்க கூப்பிடுற?” எழுந்து அவனின் பின் சென்றாள். நேராக ஆட்டுரலின் அருகில் அவளை இழுத்துச் சென்றான் மகேஷ் .

“அங் ..” .தான் புளியங்காய்களை போட்ட அந்த இடைவெளியைச் சுட்டிக்காட்டினான். “அங்க என்ன இருக்கு?” செண்பா எட்டிப் பார்த்தாள் .

ஏதோ துணி தென்பட கையை நுழைத்து வெளியே எடுத்தாள்.

“என்னதுடா இது?” கேட்டுக் கொண்டே பிரித்தவள், “ஐய் புளியங்காய். ஏது உனக்கு? யார் கொடுத்தாடா?” மிகுந்த சந்தோசம் அடைந்தவளாய் அவனிடம் கேட்டாள் செண்பா..

“அங் குடுத்தான்”.கூடாரம் இருந்த இடம் நோக்கி கை காட்டினான் மகேஷ் .

“அங்கயா? அங்க யாருடா?”

சில நோடிகள் யோசித்தவன், முகம் மலரச் சொன்னான் “ம்ருகா”

“முருகாவா? ஓ அந்த அண்ணனா? நேத்துகூட தீப்பட்டி கொடுத்திச்சே அதுவாடா?”

“அங்…” சிரித்துக் கொண்டே பலமாக தலையாட்டினான் மகேஷ் .

“சரி இரு” புளியங்காய்களை ஆட்டுரலின் மீது வைத்து விட்டு வீட்டிற்குள் ஓடினாள். செண்பாவின் வீடு சற்றே மேடான பகுதியில் இருந்தது. வீட்டின் முன் அறை மட்டும் ஓடு வேயப்பட்டிருந்தது.வீட்டின் முகப்பிற்கு வெளியே சற்று நீட்டினால் போல் முடிந்திருந்தது. புளியங்காய்களை சுற்றியிருந்த துணிகூட நனைந்திருக்கவில்லை. திரும்பிய செண்பாவின் கைகளில் உப்பும் மிளகாவற்றலும்.

மிளகாவற்றலை சிறிது சிறிதாக கிள்ளி உப்புடன் சேர்த்து ஆட்டுரலின் குழியில் போட்டாள். பின் புளியங்காய்களின் தோடை ஒவ்வொன்றாக நீக்கி அதையும் குழியில் போட்டாள். ஆட்டுரலின் கல் எடுத்து குழியிலிட்டு அரைக்கத் தொடங்கினாள். சில நிமிடங்கள் அரைத்தபின் நிறுத்தி பதம் பார்த்தாள். நன்றாக அரைபடவில்லை என்று தெரிந்தபின் மறுபடியும் அரைத்தாள். நல்ல பதத்தில் புளிங்காய்கள் சுடப்பட்டிருந்தன போலும் பளுப்பு நிறத்தில் மாவாக அரைபட்டிருந்தது. செண்பா அதை அப்படியே அள்ளி துணியில் வைத்தாள்.

“செண்பா ஏ செண்பா ” முன் அறையிலிருந்து அவள் அப்பாவின் குரல் கேட்டு திடுக்கிட்டாள்.

“ஐயோ அப்பா ” துணியில் வைத்த அந்த புளிக்கலவையை மகேஷ் கையில் திணித்து விட்டு “நா வாரேன்ப்பா” கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் செண்பா. செய்வதறியாத மகேஷ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் வீட்டின் முன் இருக்கும் வாகை மரத்தடியில் சென்றமர்ந்தான். துணியை மெல்ல விலக்கிப் பார்த்தான். நல்ல மணத்துடன் பார்க்க அழகாக இருந்தது அந்த புளிக்கலவை.சிரித்துக்கொண்டே தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான் மகேஷ்.

பத்து… பதினைந்து…இருபது …இருபத்தி ஒன்றாம் நிமிடம் செண்பாவும் அவள் அப்பாவும் வந்தார்கள்.அழகான உடை உடுத்தியிருந்தாள்.

“நாங்க கல்யாணத்திக்கு போறமே,” கையசைத்தபடியே மகேஷை கடந்து போனாள் செண்பா.

அவள் போவதையே வெறித்துப் பார்த்தவன் அவளின் தலை மறைந்ததும் மறுபடியும் அந்த புளிக்கலவையை ஆட்டுரலின் பின்னால் போட்டுவிடலாம் என எண்ணியவனாய் செண்பாவின் வீடு நோக்கி சென்றான். பக்கத்துவீட்டு கலா அத்தை உட்காந்து மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.பெருத்த ஏமாற்றமடைந்தவனாய் மறுபடியும் வாகை மரத்தடியில் வந்தமர்ந்தான். சிறிது நேரம் அப்படியே இருந்தான். தெருவிற்கு அப்பால் முட்புதர் பகுதி இரவு பெய்த மழையின் விளைவால் பச்சை நிறத்தில் பளீரன அழகாக தெரிந்தது. மகேஷின் முகம் மலர்ந்த்தது. தெருவைக் கடந்து முட்புதர்கள் இடையே உள்ள ஒற்றையடிப்பாதையில் துள்ளியபடி ஓடினான். நேராக கூடாரம் இருக்கும் பகுதியை நோக்கிச் சென்றான். ஒரு கணம் அவனின் இதயத்துடிப்பே நின்று போனது. நேற்று இருந்த கூடாரம் இப்போது அங்கில்லை. புளியங்காய்களை சுட பயன்படுத்திய மூன்று கற்கள் மட்டுமே அங்குகிருந்தன.சுற்றும் முற்றும் பார்த்தபடியே போனான். சில நிமிடங்கள் கடந்தன. பின் ஏதோ யோசித்தவனாய் கையிலிருந்த புளிக்கலவையை அப்படியே கல்லில் வைத்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான். தூரல் விழ ஆரம்பித்தது..

2 Replies to “புளியந்தொக்கு”

Comments are closed.