வாசகர் எதிர்வினை

200px-chandraguptastampசொல்வனம் இதழ் கவிதைத் தேர்வில் செலுத்தும் கவனம் பாராட்டுக்குரியது. எப்படிப் படித்தாலும் புரியாதவையே கவிதைகள் என்று நிலை கொண்டுவிட்ட நேரத்தில், மனதைத் தொடும் கவிதைகள், அத்தோடு நின்றுவிடாமல், புதிய புதிய தளங்களைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்லும் கவிதைகள் என சொல்வனத்தில் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் நேரடி வாசிப்பில் சிறிய புன்னகையையும், தொடர்ந்த யோசிப்பில் வாழ்க்கையின் பெரிய குரூரத்தையும் ஒரு சேர முன்வைத்தன.

‘நீங்கள் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை

அனுதாபங் கொள்வதும் காத்திருப்பதும் தவிர’

என்னும் வரிகள் கொடுக்கும் யதார்த்தத்தை என்ன செய்வது என்று புரியவில்லை. கவிதையையும் அப்படியே அநாதரவாகக் கடந்துகொண்டு போய்விடவேண்டியதுதான் என்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவகையில் இக்கவிதைகள் நம்பிக்கையின்மையை விதைக்கின்றன என்கிற விமர்சனங்கள் எழலாம். ஆனால் யதார்த்தத்தில் இப்படித் தொடரும் நம்பிக்கையின்மையின் வழியாகவே ஒரு நம்பிக்கை பிறப்பதைப் பார்க்கிறேன் என்பதால் இக்கவிதைகளை வெகு அருகில் என்னால் உணரமுடிகிறது.

— ஹரன் பிரசன்னா

ist2_5116410-indian-postage-stampசொல்வனம் இதழில் திரு.விக்கி எழுதிய இளையராஜாவைக் குறித்த கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. ஒரு வாத்தியக் கலைஞனாக இருந்ததில் இந்தக் கட்டுரைக்காக விக்கி எப்படி உழைத்திருக்கிறார் என்பது புரிந்தது. சிறு சிறு நுணுக்கங்களில் இளையராஜா காட்டியிருக்கும் வித்தை வெகு அபாரம். அதே சமயம் அந்த தேர்ந்த நுணுக்கங்களைப் புரிந்து ரசிக்க முடியாத மேல் நிலை ரசிகனையும் திருப்தி படுத்துமளவுக்கு எளிமையானவை அவருடைய பாடல்கள். அதனால்தான் ஒரே சமயம் ஒரு தேர்ந்த இசைக் கலைஞரையும், சாதாரண ரசிகரையும் அவரால் சென்றடைய முடிந்தது. விக்கிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.

கண்ணையன்.

1933_doon_valley_railwவிக்கியின் கட்டுரையைப் பலமுறை படித்துவிட்டேன். மிக மிக மகிழ்ச்சியாக உணருகிறேன். மிக்க நன்றி. இசைத் துணுக்குகளை கட்டுரையில் இணைத்த விதம் வெகு அருமை. படிக்கும் ஓட்டத்தைத் தடை செய்யாமல், பின்னணியில் இசைத் துணுக்குகளைக் கேட்க வைத்தீர்கள். நன்றி சொல்வனம்.

— முரளி ரமேஷ்.

s258‘இட்லிவடை’ வலைப்பதிவு வழியாக சொல்வனம் இதழைப் படித்தேன். மிக நேர்த்தியாக இதழைத் தயாரிக்கிறீர்கள். ஹரிவெங்கட்டின் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. மிதமான குரலில், உணர்ச்சிவசப்படாமல் தன் கருத்துகளை முன் வைத்திருந்தார். உண்மையில் இப்படிப்பட்டப் பெரும் தவறுகள் எப்படி பல அதிகாரிகளையும் தாண்டி நடந்தன என்று ஆச்சரியமாக இருக்கிறது. இன்னொரு விஷயம். இவை நடந்ததாகக் கூட நம் மீடியாக்கள் காட்டிக்கொள்ளவில்லையே? எங்கோ ஒரு ஓரத்தில் பெட்டிச் செய்தியாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அவ்வளவே! முந்தாநாள் அமெரிக்க ஏர்போர்ட்டில் ஷாருக்கான் இரண்டு மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததைக் குறித்து கட்டுரையெழுதிக் குவிக்கிறார்கள். நம் தேசத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாதென்று நினைக்கிறேன்.

வருத்தத்துடன்,
செல்லப்பா.

652_cv_ramanசொல்வனம் இதழில் வெளிவரும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை விரும்பிப் படித்து வருகிறேன். சாம்.ஜி.நேதன், ராமன்ராஜா இருவரும் ஆழமான கருத்துகளை மிகவும் எளிமையான நடையில் எழுதி வருகிறார்கள். இத்தகைய கட்டுரைகள் நம் காலத்த்தின் தேவை.

– வின்செண்ட், திருச்சி.

 

பசியும் பரிவும் – பாவண்ணனின் கவிதை நூல் விமர்சனம்.288-1

பாவண்ணனின் விமர்சனத்தில் இளங்கோ கிருஷ்ணனின் உழைப்பில் உருவாகி இருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியின் கவிதைகளை அழகுற எடுத்துச் சொல்வதுடன் தற்குறிப்பையும் ஏற்றி அது எவ்விதத்தில் சிறந்ததாகிறது என்பதை அருமையாக விளக்கியுள்ளார். பழம் பாடல்களில் ஒரு வரி “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே” என்ற ஒரே வரியில் உணவின் மகத்துவத்தைச் சொல்லிவிடுகிறார். ( யார் எழுதியது, எப்போது படித்தேன் என நினைவில்லை.. ஆனால் இந்த ஒற்றைவரிமட்டும் நினைவில் உள்ளது) அதே கருத்துடன்தான் காயசண்டிகை கவிதையில் இளங்கோ கிருஷ்ணன் சொல்வதாக பாவண்ணன் கூறுவதுடன் அதன்பின்னர் அவர் எழுப்பும் கேள்வியான

’சுயபிரக்ஞையே இல்லாத ஒருவரிடம் மிகஇயல்பாக இருக்கிற தாய்மையுணர்வை சுயஉணர்வுள்ள நாம் எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறோம்?”

பிறருக்கு பதில் சொல்ல வேண்டாத ஆனால் நம்மைநோக்கி நாம் அவசியம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி இது.

இதுதவிர கிட்டத்தட்ட காத்திருத்தலும், எதிர்பார்ப்புமே வாழ்க்கை என்ற ரீதியில் எழுதப்பட்ட பிறகவிதைகளைப் பற்றிய பாவண்ணனின் கருத்துக்களும் அருமை…

வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்

பாஸ்டன் பாலா எழுதிய இந்தக் குறிப்புகள் அ.முத்துலிங்கம் அவர்களைப் பற்றிய ஒரு மனச்சித்திரத்தை அளிக்கின்றன. ஜெயமோகனின் எழுத்துக்கள் குறித்தான அ.முத்துலிங்கம் அவர்களின் கருத்தான தமிழில் ” நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன்” என்பதை பாஸ்டன் பாலா தடாலடி எனக் குறிப்பிடுகிறார். முத்துலிங்கம் அவர்கள் ஜெயமோகனை மகிழ்ச்சியூட்டுவதற்காக இதைச் சொல்லி இருக்க முடியாது. மனதில் பட்டதை எந்த எதிர்பார்ப்புமின்றி சொல்லி இருக்கிறார் என்பதாகவும், ஜெயமோகனின் உழைப்பின் மீதான அ.முத்துலிங்கத்தின் மரியாதையாகவும் கொள்ளலாம். வழக்கமான சடங்கு ரீதியான கேள்விகளால அவரை சங்கடப்படுத்தாமல் இயல்பாய் இருந்தது அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரை.

விக்கியின் இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணத்தை எங்கோ ரயிலில் இருவரும் போயிருப்பார்கள் போல அநுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் என நினைத்தால் இளையராஜாவினது ரயிலிசை குறித்தான ஆளுமையை அழகாக விவரிக்கிறார், தகுந்த இசைக்குறிப்புகளுடன்.. நன்றாய் இருந்தது.

மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி” என்ற ஹரிவெங்கட்டின் கட்டுரை மிக மிக அருமை.

இக்கட்டுரையில் வரும் ”காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல.” என்ற வரிகள் எவ்வளவு பொருத்தம் இன்றைக்கு நமது பிரதமர் செய்திருக்கும் தவறுகளைக் காணும்போது… குடிகள்மீது அக்கறையே இல்லாத ஒரு மாஃபியா கும்பல் ஆள்வதைப் போன்ற நிலையில் இன்றைய இந்தியாவின் உயர் அதிகாரிகள் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

இது தவிர மகரந்தம் இதழுக்கு இதழ் பொலிவாக வருகிறது, நிறைய அரிய விஷயங்களைத் தாங்கி…

வாழ்த்துக்கள் சொல்வனம் குழு.

ஜெயக்குமார்

tagore1சொல்வனம் இதழ் வாசித்தேன்.பாவண்ணனின் புத்தகவிமர்சனம் நன்று. யூமாவாசுகியின் நகைச்சுவை இழையோடும் ‘பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்‘ லத்தீன் அமெரிக்க நாடோடி கதை அருமையாக உள்ளது. மதியழகன் சுப்பையாவின் ‘பஞ்சம்‘ சிறுகதையும் அருமை.சிறுகதைக்கு முன் மூல ஆசிரியரை பற்றிய அறிமுகமும் அவரை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. மற்ற பகுதிகளும் சிறப்பு.
* கி.சார்லஸ்*
காரப்பிடாகை
நாகப்பட்டினம்(மாவட்டம்)