சிற்றூரும் தளபதியும் – சென் ஷிஸு

சென் ஷிஸு எழுதிய சீனக்கதையின் மொழிபெயர்ப்பு. ஜியாங்ஸியின் நான்சாங்கைச் சேர்ந்தவர் சென் ஷிஸு. உயர்நிலைக் கல்வியை முடித்த பிறகு எட்டாண்டுகளுக்கு கிராமப்புறத்தில் பணியாற்ற அனுப்பி வைக்கப் பட்டார். 1981ல் எழுதத் தொடங்கி 1987ல் பட்டம் பெற்று இலக்கிய ஆய்வு மெற்கொண்டார். ‘சிற்றூரும் தளபதியும்’ மற்றும் ‘ஆக்ரோஷ அலைகள்’ ஆகிய சிறுகதைகள் தேசிய விருதுகள் பெற்றன. ‘கடற் காற்றைத் தாங்கும் சிப்பிகள்’, ‘அன்ன ஏரிக்கருகில்’ மற்றும் ‘சிற்றூரும் தளபதியும்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகள் பிரசுரமாகின.

three_genres_of_chinese_painting640f69f20d169bb8433a_jpg1

எங்கிருந்து போனாலும் மிக தூரமாகப்படும் எங்கள் சிற்றூரைப் போன்ற ஊர்களில் மிகச் சிறியதொரு மாற்றம் கூட மிகப்பெரும் கவனத்தை ஈர்க்கும். “ஏய், மலையடிவாரத்துல சிறைக்குக் கிட்ட ஏதோ கட்றாங்களே, அது யாரோட இடம்? சிறைக் கட்டடத்தைத் தான் விரிவு படுத்தறாங்களா?”

ஊர் மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மலை. அதை மலை என்பதை விட ஒரு பெரும்பாறை என்றே சொல்ல முடியும். முடிதிருத்துனர், “அதுகூடத் தெரியாதா?” ஏளனக் குரலில் அக்கேள்வியைக் கடைக்குள்ளிருந்து கேட்டார். உச்சந்தலையில் பெரியதாக சொட்டை விழுந்திருந்தது. காதருகில் மிச்சமிருந்த சில முடிகள் மிகக் கவனமாக எண்ணை தடவப்பட்டு சீவப்பட்டிருந்தன.

ஊரின் முக்கிய வம்பாளர் என்றறியப்பட்டவர் அதனாலேயே முக்கிய பிரமுகர் அந்தஸ்தையும் பெற்றிருந்தார். கடையிலேயே எப்போதும் காணப்படுபவருக்கு ஒரு கண்ணும் ஒரு காதும் வெளியில் ஊரெங்கும் விரிந்து விரவியிருந்தன. எந்த விஷயமென்றாலும் முதன்முதலில் அறிவது அவர்தான்.

ஊரில் யார் எந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டாலும், “நம்ம முடிதிருத்துனர் சொன்னது என்னன்னா,..”, என்று தான் தொடங்கினார்கள். அவரோ எந்தச் செய்திக்கும் கண் காது மூக்கு வைத்து சின்ன நாடகமாக்குவதைப் பழக்கமாக்கிக் கொண்டவர். ஏதேனும் முக்கியமானதாக அறிந்தாரென்றால் எப்போதுமே தன் கடையில் அதை வெளியிட மாட்டார். பல கடைகள் இருக்கும் முச்சந்தியில் நின்று கொள்வார். எல்லோர் கவனமும் தன் மீது இருக்கிறதா என்று உறுதி செய்து கொண்ட பிறகு, செய்தியை உரக்கச் சொல்வார். “உங்களுக்கெல்லாம் தெரியாதுனு நெனைக்கிறேன். மலையடிவாரத்துல கட்டிட்ருக்காங்களே வீடு, அது ஒரு தளபதியோடது. சீக்கிரமே இங்க வந்து வசிக்கப் போறாரு.”

“என்ன? தளபதியா? இங்கயா? நம்ம ஊர்ல நம்மளோட வந்தா வாழப் போறார்?” அச்செய்தி பெரிய அலையை ஏற்படுத்தியது. எங்களுடையது போன்ற பின் தங்கிய ஊரில் தளபதி வருவதெல்லாம் பிரமாண்ட பரபரப்புச் செய்தி. எங்களுக்கும் எங்களூருக்கும் பெரிய கௌரமும் கூட.

முடிதிருத்துனர் எல்லோரையும் அடக்கும் தொனியில் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். அனைவரது உற்சாகமும் சற்றே வடிந்தது. “ரொம்ப சதோஷப்பட வேண்டாம். இதொண்ணும் பெரிய விசேஷம் ஒண்ணுமில்ல.” ஆர்வம் பெருகியதில் எல்லோரும் கழுத்தை முன் வளைத்து ஏனென்று கேட்டனர்.

“ஏனா? ஐயோ! சரி, கேளுங்க. உங்க காதுக்கு மட்டும் சொல்றேன். யார் கிட்டயும் சொல்லாதீங்க. ரொம்ப ரகசியம். தளபதி
பணிநீக்கம் செய்யப்பட்ருக்கார். தண்டனையாக தான் இங்கே துரத்தப் பட்ருக்கார். இதுவும் ஒருமாதிரி நாடு கடத்தல்.”

“நாடு கடத்தலா? ஏன்?”

“அவரை ‘துரோகி’ என்கிறார்கள்.” அதிர்ச்சியில் வாய் பிளந்தனர். வெள்ளந்தி மனிதர்களின் மனங்களில் எங்கிருந்தோ விழுந்த இடியென இறங்கியது செய்தி. மிகுந்த ஏமாற்றமும் ஊக்கக்குறைவும் கொண்டனர்.

“பெயரளவில் ஓய்வு பெற்ற அதிகாரி.” விநோத செய்திப்பரப்பாளரான முடிதிருத்துனர் சிதற இருந்த மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார். “ஆனால், இன்னமும் தளபதி என்ற தகுதியைத் தக்க வைத்துள்ளார்.”

மிகத் தாழ்ந்த குரலில், “தேர்ந்தெடுக்கச் சொன்னாங்க. இராணுவ தளபதின்ற அந்தஸ்து அல்லது கட்சி உறுப்பினர் பதவி. அதைப் பத்தியும் முழுக்க சொல்லிர்றேன். அவரும் நம்மள மாதிரி சாதாரண குடிமகன் தான். முன்ன இராணுவ தளபதியும் கட்சி உறுப்பினருமாக இருந்தவர். அப்ப, தொடர்ந்தும் ஏன் தளபதியாக இருக்கறதத் தேர்ந்தெடுத்தார்னு சொல்லுங்க?” எனக் கேட்டுவிட்டு சடாரென்று நிறுத்தினார். எல்லோரும் அந்தக் கேள்வியை அனைவரும் அசை போடட்டுமென்று நிறுத்தினாற் போலிருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
பாரந்தூக்கிகள் குழுவிலிருந்து தன்னுடைய தள்ளுவண்டியை ஓரம் வைத்தவனாக அந்த அமைதியைக் குலைப்பது போல ஒரு இளம் கூலி முன்னால் வந்தான். “கட்சி உறுப்பினராகவே இருந்திருக்கணும்ன்றது என்னோட சொந்தக் கருத்து. அது தான் அவருக்கு கௌரவத்தைக் கொடுத்திருக்கும்.!” சிலர் அவனை கடிந்து கொண்டனர். இன்னும் சிலர் அவன் சொன்னதை ஒத்துக் கொண்டனர். முடிதிருத்துனர் ஒத்துக் கொள்ளாதவர் போல உதடுகளைச் சேர்த்து மூடிக் கொண்டார்.

“இல்லை. இராணுவத்திலேயே இருப்பது தான் நல்லது.”, என்றார் தையல்காரர் துடிப்புடன். ”மனுஷனுக்கு சாப்டணுமில்ல. பணிநீக்கம் செய்யப்பட்டால் காசு எங்கிருந்து வரும்? வேற எந்தத் திறனும் இல்லாம இருக்கலாம்ல. இந்த வயசுல நெலத்த உழுது விவசாயமா செய்ய முடியும்?” தோளில் அழுத்தமாகத் தட்டி, “ரொம்பச் சரி. பொருளாதாரத் திட்டம் போடற மூளையிருக்கு உனக்கு”, என்றார் முடிதிருத்துனர். அதைக் கேட்டவன் பெருமையில் முகஞ்சிவந்தான்.

“மேலிடத்துலயும் எல்லாரும் அப்டி தான் நெனச்சாங்கன்னு வைங்க. ஓய்வூதியம் கொடுத்து இராணுவச் சீருடை போட்டுக்க அனுமதியும் கொடுத்துத் துரத்தி விட்டாங்க.” ஒரு கணம் நிறுத்தினார். கூலியைப் பார்த்து, “உயரதிகாரின்றதால பெரிய தொகை அவருக்கு சம்பளமாக் கெடைக்கும்னு உனக்குத் தெரியுமா?”

கூடியிருந்தோர் ஆச்சரியத்தில் விழிவிரித்தனர். காசைப் பற்றிப் பேசிய கணத்தில் தான் அன்றைய வேலையை இன்னும் தொடங்கவில்லை என்ற ஞாபகம் வந்தது. கடையைத் திறக்கவென்று அவசர அவசரமாக விரைந்தார்.

யாரோ ஒருவர் பின்னால் ஆடையைப் பிடித்திழுத்து, “எப்ப குடி வறார்னு சொல்லுங்க”, எனக் கேட்டார். “மண்டைக்குள்ள என்ன இருக்கு? ம்? இதென்ன கேள்வி? வீட்டப் பாத்தா தெர்ல? வீடு கட்டி முடிச்சதும், குடி வருவாரு”, அரை மனதுடன் மக்கள் யூகங்களுடனும் ஹேஷ்யங்களுடனும் அவரவர் பாடுகளைப் பார்க்கவென்று சிதறினர். துரதிருஷ்டம் பிடித்த தளபதியைப் பற்றிய செய்திகளை மூலை முடுக்கெல்லாம் பரப்பும் வேலை வேறு புதிதாய் வந்து சேர்ந்திருந்தது.

***

கேட்டுக் கொண்டு நின்றவர்கள் அவ்விடம் விட்டு நகர்ந்தாயிற்று. இனி, ஊரைச் சுற்றிப் பார்ப்போம். ஒரு மோட்டார் வாகனம் போகுமளவு அகலத்தில் இரண்டே இரண்டு வீதிகள் இருந்தன. இரண்டின் நீளமும் சேர்ந்து அறுநூறு மீட்டர் தூரம் தான் இருக்கும். ஊர் மையத்தில் ஒன்றையொன்று சந்தித்துப் பிரிந்தன. வீதிகளில் ஆங்காங்கே கொடிக் கம்பங்கள் நட்டு வைக்கப் பட்டிருந்தன. கட்டங்களில் அடித்திருந்த வண்ணங்கள் உரிந்து பல்லிளித்தன. எல்லாமே பழமையின் அடையாளத்தைக் காட்டின. கணுக்கால் ஆழமே இருந்த சிற்றோடை ஊரைச் சுற்றி ஓடியது. துரதிருஷ்டம் என்னவென்றால், அதன் கரைகளில் குப்பைகளும் செத்தைகளும் மலைகளாய்க் குவிந்திருந்தன.

ஊர் மக்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்! தளபதியைக் கண்ட நொடியிலேயே அனைவரும் வாய்பிளந்தனர். எல்லோர் மனதிலும் ஒரே போல, “பணிநீக்கம் செய்யப்பட்டதுல ஒரு ஆச்சரியமும் இல்ல. இது போல ஒரு பித்தனை எப்படி தளபதியாக ஒத்துக் கொள்ள முடியும்?”

தளபதி என்றால் பார்க்க எப்படித் தான் இருக்க வேண்டும்? நாங்கள் அதற்கு முன்பு ஒரு தளபதியைச் சந்தித்ததில்லை என்றாலும் அவரைப் பார்த்தால் தளபதி போலவே இல்லை. கேசம் நரைத்து விரைத்த புருவங்கள், தொந்தியுடன் இருக்க வேண்டும். உயரமாகவும் பலசாலியாகவும் மிடுக்குடன் அதிசயிக்கக் கூடிய தோற்றத்துடன் தானே காட்டுவார்கள் திரைப்படங்களில்? ஆனால், இவரோ சிறிய உருவத்துடன் வற்றிச் சுருங்கியிருந்தார். அதுவுமில்லாமல், கூன் வேறு போட்டிருந்தார். இவை தவிர, ஒரு கால் நொண்டி.

உடலின் துரதிருஷ்டத்தை நினைத்துக் கலங்காமல் அவற்றுக்கு ஈடு செய்வதைப் போல தன் உருவத்திற்கு வேண்டியதையெல்லாம் கூடுதல் கவனமெடுத்துச் செய்திருந்தார். தெருவில் இறங்கி நடக்கும் போதெல்லாம் சுருக்கமே இல்லாமல் அவருடுத்திய சீருடை மிக நேர்த்தியாகத் தேய்க்கப்பட்டிருக்கும். போர்வீரரைப் போலவே விரைப்பாக நடப்பார். தொப்பியிலிருக்கும் சிவப்பு நட்சத்திரமும் மேல்சட்டையின் மீதிருக்கும் விருதுப் பதக்கங்களும் பளிச்சென்று மின்னும். வானிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் கம்பிளி மேலாடையின் மேல் பொத்தானைப் போட்டிருப்பார். முன்பு நடந்த போரில் காலை இழந்திருந்தாலும் மிக மிடுக்குடனே நடந்தார். ஆனாலும், இதெல்லாம் அவரது அவமானங்களைத் தான் நினைவு படுத்தின.

பலநேரங்களில் ஆச்சரியமோ அலட்சியமோ செய்யாமல் அவரைக் கூர்ந்து கவனித்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. மாறாக, வந்து சேர்ந்த இரண்டாம் நாளே கொஞ்சம் சிரமப்பட்டாலும் அங்குமிங்கும் நடந்தார்.

பளபளவென்று மினுங்கிய ஊன்றுகோலை வைத்துக் கொண்டு தெருவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு நடந்தார். சிலநேரங்களில், குப்பைகள் மண்டிக் காய்ந்து கிடந்த ஓடைக் கரையில் நடந்தார். சீனமெங்கும் நடந்து பழகியதால் அனிச்சையாக நடந்தார் என்று யாரோ வாய்க் கூசாமல் சொன்னார்கள்.

சில நாட்களானதும், தளபதி ஊரைப் பற்றி விமரிசிக்க ஆரம்பித்தார். வாழ இடம் கொடுத்த ஊரைப் பற்றியே பேசுகிறார் என்று எல்லோரும் கூறிக் கொண்டார்கள். “கொஞ்சம் செலவிட்டு ஊரின் இரண்டு வீதிகளுக்கும் நல்ல சாலையை உருவாக்கக் கூடாதா?”, என்றோ, “குப்பையையெல்லாம் கொட்டவென்று ஓடையின் மறுகரையில் குழி வெட்டக் கூடாதா? மட்கினதும் நல்ல உரமாகுமே?”, என்றோ சொன்னார். அதற்கு பதிலாக எங்கள் ஊரின் கம்யூன் ஊழியர்கள், “பணம் எங்கிருந்து வரும்? எங்களோட ஊதியமே மிகக் குறைவு”, என்றோ, “எங்களுக்கு ஏது நேரம்?”, என்றோ கேட்டனர்.

தளபதியைக் குறித்த எங்கள் கருத்துகள் விதவிதமாக இருந்தன. அவமானப் பட்டிருந்தாலும் அவருக்கு கணிசமான ஓய்வூதியம் கிடைத்தது. அவரது கருத்துகளும் விமரிசனங்களும் ஊருக்கு நல்லது நினைத்து எழுந்தவை. ஆனாலும், ஒருவருக்கும் அவரிடம் நட்பு கொள்ள விருப்பமில்லாதிருந்தது.

சீக்கிரமே எங்கள் மனங்களைப் படித்து விட்ட தளபதி, விமரிசிப்பதை நிறுத்தி விட்டார். வீதிகள் கூடிய இடத்தில் பெரிய மரத்திற்குக் கீழே தனக்கென்று ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். முடிதிருத்துபவரின் கடைக்கு நேரெதிரில் இருந்தது அம்மரம். மரத்தின் உச்சி இடி விழுந்து கருகியிருந்தது.

அவ்விடத்தில் பல மணிநேரங்கள் கைத்தடியை ஊன்றிச் சிலை போல நின்றார். சின்னக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு அலாதி அமைதியுடன் நின்ற அவரது மனதில் என்ன இருந்ததென்று யாருக்குமே தெரியவில்லை.

அவரது இருப்பு எல்லோருக்கும் வேடிக்கையாக இருந்தது. கடைக்காரர்கள் அவ்வப்போது தலையை நிமிர்த்தி அவரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டனர். வழிப்போக்கர்களும் நின்று பார்த்து விட்டுத் தொடர்ந்து நடந்தனர். முடிதிருத்துனர் தன் சன்னல் கண்ணாடி வழியாகப் புழுதி படிந்த வீதியில் அவர் நிற்பதைப் பார்த்து விட்டு வேடிக்கையாக, “பார்க்க எப்டியிருக்காருன்னு சொல்லு?”, என்று கேட்பார்.

“காவல்காரன் போல”, என்பார் ஒருவர். முடிதிருத்துனர் தலையாட்டி மறுப்பார்.

“சாலைப் போக்குவரத்துக் காவலர் மாதிரியா?” மீண்டும் தலையாட்டி மறுப்பு. இதே போல சில அனுமானங்களுக்குப் பிறகு ஏதோ சாதாரண விஷயத்தைச் சொல்வது போல, “ஹோன்கோவ்விற்குப் போய்ருக்கீங்களா? ஸன்மின் சாலையின் கோடியில் கையில் கைத்தடியை வைத்துக் கொண்டு ஒரு வெண்கலச் சிலை நிமிர்ந்து நிற்கும். இதோ, இப்டியே தான் இருக்கும். அச்சு அசல் இவரப் போலவே!”, என்பார்.

நாளடைவில், வெண்கலச்சிலை போல தளபதி அங்கே நிற்பது மக்களுக்குப் பழகி விட்டது. தெருவோரங்களில் இருந்த செம்புக்கலம் விற்வர், காலணி தைப்பவர், மற்றும் ஈயம் பூசுபவர் ஆகியோரைப் போல அவ்விடத்தின் ஓர் அங்கமாகிப் போனார். என்றைக்காவது ஏதேனுமொரு சிறுவியாபாரியைக் காணாவிட்டால் ஏதோ குறைவது போன்ற உணர்வேற்பட்டது அனைவருக்கும்.

ஆனால், அவரொன்றும் வெண்கலச் சிலையில்லை. ஒரு மனிதர். அதுவும் கூரறிவு படைத்தவர். என்றேனும் ஒரு நாள், அவருக்கும் கோபம் வருமென்று அவ்வூர் மக்கள் அறிந்து கொண்டனர்.

ஒரு ஞாயிறன்று, கசாப்புக் கடைக்கு முன்னால் ஒரே ரகளை. முதுகில் கூடை மாட்டியிருந்த வாலிபர்கள் ஏதோ பிரச்சனை செய்தனர்.

நடந்தவற்றைக் கண்டவாறே நின்றிருந்தார் தளபதி. கைத்தடி பிடித்திருந்த கை கோபத்தில் லேசாக நடுங்கியது. திரீரென்று நொண்டிக் கொண்டே முன்னால் பாய்ந்தார். வியர்த்து விறுவிறுத்தவாறே கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறி வந்தவர் தடியை வைத்து இராணுவ வீரனுடைய முதுகில் தட்டினார். கண்டபடி இரைந்து கத்தினார். வீரன் திரும்பி கிழவரின் கண் சிவந்த முகத்தைப் பார்த்தான். கூட்டத்திலிருந்து விலகியவனாக, “ஐயா, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?”, என்றான்.
புதிய இராணுவ வீரனாக இருந்ததால் கிழவர் உயரதிகாரி என்று நினைத்து விட்டான்.

“என்னிடம் பேசுவதற்கு முன்னால் சீருடையைச் சரி செய்து கொள்!”

தளபதியைப் பயந்தவனாகப் பார்த்தான். சடாரென்று தன் தொப்பியைச் சரியாகப் பொருத்திக் கொண்டான். சட்டைப் பொத்தானைப் போட்டுக் கொண்டான். மடக்கியிருந்த கையைப் பிரித்து நீட்டி பொத்தான்களைப் பூட்டினான். குனிந்து காலணிகளைக் கண்டான்.

“எந்தப் பிரிவு? என்ன வேலை?”

“அருகில் முகாமிட்டிருக்கும் படையில் சமையல்காரன்.”

சில நொடிகள் அமைதியாகப் போயின. “அட்டெண்ஷன்!”, திடீரென்று உரக்கக் கத்தினார். அவரது தொழில்முறை முரட்டுத் தனம் கூட்டத்தை திடுக்கிட வைத்தது. எல்லார் பார்வைகளும் இவ்விரு இராணுவர்கள் மீது நிலைகுத்தின. இருவருக்குமோ சூழலே சூன்யமாக இருந்தது.

மூச்சு வாங்கியவாறே கிழவர் அடுத்த ஆணையைப் பிறப்பித்தார். “லெஃப்ட் டெர்ன். அட் த டபிள்! க்விக் மார்ச்!”

விரைப்பாக நிமிர்ந்து நின்றவர் தூரத்தே போன இராணுவ வீரனின் முதுகைப் பார்த்தவாறே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார்.
வீதிகள் சந்தித்த முக்கில் கொஞ்ச நேரத்துக்கு எல்லாமே அமைதியில் ஆழ்ந்தன. ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் ஒன்று படக்கென்று ஆட்டுவித்தது போல கூச்சலிட்ட கூட்டம் அடரமைதியில் வீழ்ந்த அன்று தான் முன்பு ஆயிரக்கணக்கான வீரர்களைப் பயிற்றுவித்த தளபதியின் ஆளுமை அனைவருக்குமே புரிந்தது.

***

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஊரில் நடந்த இன்னொரு சம்பவம் அதிர்ச்சியளித்தது. திடீரென்று, வறியவருக்கு ஆதரவு காட்டும் மனோபாவம் கொண்டவர்களுக்கு சூழ்நிலை குறித்த குழப்பத்தையும் கொணர்ந்தது.

கடுமையான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த தளபதியின் ஆரோக்கியம் கெட்டது. முன்பு பெரியதொரு மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரது மனைவியின் கவனிப்பைத் தவிர, நூறு மைல் தொலைவில் இருந்த இராணுவ மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற அனுமதிக்கப் பட்டார்.

ஒருநாள், மிகவும் நோயுற்று வெளிறிக் காணப்பட்டார். வியர்த்து விறுவிறுத்தவர், மனைவி தாங்கிப் பிடிக்க உள்ளூர் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அங்கிருந்த நீளிருக்கையில் இருவரும் அமர்ந்தனர். அங்கிருந்த கிராமத்துப் பெண் தளபதியின் சட்டையைப் பிடித்து உலுக்கி, “என் குழந்தையக் காப்பாத்துங்க. விடிகாலைலயே வரணும்னு அறுபது மைல் தொலைவிலிருந்து டாக்டரப் பாக்க வந்திருக்கேன். ஆனா,..”

ஒருவர் முகத்தை இன்னொருவர் காணமுடியாத அளவிற்கு உள்ளே அரையிருட்டாக இருந்தது. சிறுவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்த தளபதி, “சீக்கிரம்!”, என்று விரட்டினார். “இவனை உடனே டாக்டர்ட்டக் கூட்டுப் போங்க”, என்றவர் மருத்துவர் அறைக்குள் பாய்ந்தார். “டாக்டர், இது அவசரக் கேஸ்”, என்றார்.

மருத்துவமனையின் தலைவியும் ஊர் மேயரின் மனைவியுமான மருத்துவர் மேசைக்குப் பின்னால் இருந்தார். அவரது தொழில், சமூக அந்தஸ்து, அவரது ஆளுமை மற்றும் மெய்ப்பாடுகள் எல்லாமே ஊரின் முக்கியப் பெண்மணி என்பதைக் காட்டின. அப்போது, தன் உறவினருடன் அவரது இதயத்தைப் பற்றியும் தன் மகளுக்குக் கொடுத்த வரதட்சணை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். பேச்சில் ஆழ்ந்திருந்தவர், இதயத் துடிப்பையுணரும் கருவியை கழுத்தில் தொங்கவிட்டிருந்தார்.

தளபதியின் கூச்சல் கேட்டதும், திரும்பி அவரை முறைத்தார் மருத்துவர். “முதல்ல பதியுங்க”, என்றார், மீண்டும் திரும்பி முகமெல்லாம் புன்னகையாக உறவினருடன் கதையாட ஆரம்பித்து விட்டார்.

“பதிஞ்சி மாமாங்கம் ஆச்சி.”

“சரி, காத்திருங்க,.. ம் மகளாப் பிறந்ததுல எனக்கு ரொம்பப் பெரும,..”

“இந்தக் குழந்தை தான் முதல்ல பதிஞ்சது.”

சடாரென்று திரும்பி, “ஒன்றாம் எண்ணைக் கூப்பிட்டாயா, வாங் குட்டி?”, என்று கேட்டார்.

பதிலுக்கு குனிந்து நோயாளிக்கு ஊசி குத்தியவாறே, “ஆமாம்.”, என்றாள் தாதி.

“பாத்தீங்களா”, என்றார் மருத்துவர். மீண்டும் தன் உறவினர் பக்கம் திரும்பிக் கொண்டார்.

“உன்னோட எண்ணை அழைத்த போது நீ இங்கில்லை. அதான். மறுபடியும் வரிசையில் இணைய வேண்டும்.”

“இங்கே தானே இருந்தேன். என் மகனுக்கு கடும் நிமோனியா என்று கிராம மருத்துவர் சொன்னார்,..” குழந்தையைக் கையிலேந்திக் கொண்டிருந்தாள் கிராமப் பெண்மணி.

“நீங்க கூப்டது சரியாக் காதுல விழலையோ என்னவோ,..”, என்றார் தளபதி.

“இங்க இருக்கற விதிமுறைகள் பத்தி அவங்க மொதல்ல தெரிஞ்சிக்கணும். நாடுன்னிருந்தா சட்டமிருக்கும். மருத்துவமனைன்னு இருந்தா விதிமுறைகள் இருக்கும். கடைபிடிக்கல்லைன்னா குழப்பம் தான் மிஞ்சும். இல்லையா?”, என்றார் மருத்துவர் இதயத் துடிப்பையுணரும் கருவியைக் கழுத்திலிருந்து எடுத்து மேசைமீது வைத்தவாறே. தளபதியை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்தார்.

“ஆனா இது அவசர கேஸ் டாக்டர். இவ்வளவு கடுமை வேணாமே. அந்த நோயாளியோட எண் என்ன?”, என்று உறவினரைக் காட்டியவராக கிழவர் பணிந்து கேட்டார்.

“ம், பிரச்சனை செய்யணும்னே வந்திருக்கீங்களா? நீங்க அந்தப் பிள்ளையோட அப்பாவா, தாத்தாவா?”

“சீ, இப்டி பேச வெக்கமால்ல?”

“வெக்கமா? எதுக்கு? கிழட்டுமுட்டாள், நா எதுக்கு வெக்கப்படணும், கட்சிக்கு எதிரானவளா? இல்ல ‘துரோகி’யா?”
தளபதி தன் கைத்தடியை உயர்த்தினார். குனிந்து தன் தலையை விலக்கிய அந்தப் பெண் மருத்துவர் வீரிட்டலறினார்.

ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு சட்டென்று அவ்வறையில் மௌனம் கவிழ்ந்தது. மருத்துவரின் உறவினர் அதிர்ந்துறைந்தார். கைத்தடியைத் தடுத்து நிறுத்த அங்கு யாரும் முன் வரவில்லை. காற்றில் நின்ற தடி மருத்துவரின் மண்டையைப் பதம் பார்க்குமோ என்று அங்கிருந்தோர் பயந்தனர்.

தடி மருத்துவர் மீது விழவில்லை. ஆனால், தளபதி தடியை எடுத்து இரண்டாக பட்டென்று ஒடித்தார். சிரமப்பட்டு திரும்பியவர் மனைவியைப் பார்த்து, “வீட்ல ஏதும் மருந்திருக்கா?”, எனக் கேட்டார். நிமோனியாவுக்கான மருத்தைக் கேட்கிறார் என்று புரிந்த மனைவி ஆமென்று தலையாட்டினார். நடுங்கும் குரலுடன், “என்னய நம்பறியா? அப்ப என் பின்னால வா”, என்றார்.

இச்சம்பவம் பற்றிய செய்தி பரவியது. அச்சூழலைக் பயந்தவர்கள் கூட கண்டிப்பாக அதிருப்தியடைய மாட்டார்கள். உலகிலிருந்து துண்டிக்கப்பட்ட கிராமம் எங்களுடையது என்பது உண்மைதான். அதனால்தான் நாங்கள் எளிதில் ஏமாறுவோம். அதனாலேயே எங்களுடைய சொந்த அனுமானங்களையே நாங்கள் நம்பினோம். ‘துரோகிகள்’ துன்பத்தில் இருக்கும் பிறருக்கு உதவுவார்கள் என்பதோ ‘செங்கட்சி உறுப்பினர்’ மக்களைத் துன்புறுத்துவார்கள் என்பதோ உண்மையெனில், இதில் யார் துரோகி? யார் செங்கட்சி உறுப்பினர்?

அடுத்த இரண்டு நாட்களுக்கு மரத்தடியில் தளபதியைக் காணோம். ஊர்மக்கள் அவரைப் பற்றி விதவிதமாக வம்புபேச ஆரம்பித்து விட்டனர். அவருடைய ஆரோக்கியம் சரியில்லை என்றனர். அவரது நோய் முற்றியிருந்தது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த நகரிலிருந்த இராணுவப் பொதுமருத்துவமனைக்குப் போக அளிக்கப்பட்ட அரசாங்க ஜீப் சவாரி மறுக்கப் பட்டிருந்தது. ஓர் இரவில், கண்ணியம் மின்னிய சில இளைஞர்கள் வந்தனர். முன்னால் இரண்டு கூலிகள் நடந்தனர். டோலியில் கிடத்தித் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

***

1979 மிக மோசமாகத் தொடங்கியது. வானில் கருமேகங்கள் திரண்டு கனத்தன. நிலமோ சேறு குழைந்து வழுக்கியது. எங்கள் சிற்றூரோ முன்பெப்போதும் விட அதிகமாகத் தனித்துக் கிடந்தது. விதியின் நல்வழியில் மிக மோசமான வானிலையையும் கடந்து சுவாரஸியமில்லா அன்றாட வாழ்வில் உழன்ற மக்களுக்கு ஒரு நற்செய்தி வந்தது.

சந்திரப் புத்தாண்டு முடிந்ததும், முடிதிருத்துனர் இருவீதிகள் கூடுமிடமான கடைவீதிக்கு வந்தார். பகிரவென்று அவரிடம் ஏதோ முக்கியச் செய்தி இருந்ததென்றது அவரது உடல் மொழி. எல்லோரையும் அசத்த அவரிடமிருந்த செய்தி என்னவாக இருக்குமென்று எல்லோர் மனதிலும் குறுகுறுப்பு. அவரைச் சுற்றிக் கூடினர் மக்கள்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டார் முடிதிருத்துனர். “தளபதி இனி துரோகி இல்லை. அவரோட வழக்கு அவருக்குச் சாதகமாக வெற்றியடைந்துள்ளது.”

”நெஜமாவா? உனக்கெப்படித் தெரியும்?”

“ஓ, என்னய நம்பலல்ல நீங்க?”, என்று கேட்டார் முடிதிருத்துனர் கேள்வி கேட்டவரை முறைத்தபடி. தான் கொண்டு வரும் தகவல்களில் யாரும் சந்தேகம் கொண்டால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. தொடர்ந்து, “என்ன நம்பல்லைன்னா இவங்கிட்ட கேளுங்க”, என்றார்.

முன்னால் அடிவைத்து, “நாந்தான் இவருக்கு விஷயத்தையே சொன்னேன்”, என்றான் டோலி தூக்கி. கூட்டத்துக்கு முன்னால் பேசிப் பழக்கமில்லாததால், கூச்சப்பட்டான். “மருத்துவமனையில் இருந்த போது, அவர் முன்பிருந்த பிரிவிலிருந்து இரண்டு அதிகாரிகள் வந்தனர். தளபதி செம்படையில் இணையும் முன்னர் இருந்த வழக்குகள் தீர்ந்து போயின என்றார்கள். அவர் புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டதே இல்லை என்றும் கூறினர்”, என்று கூறி முடித்தார்.

“ம், இவ்வளவு நேர்மையான ஓர் உயரதிகாரியை இத்தனை காலம் தவறாக நினைத்திருந்தோமே”, என்று கூறிப் பெருமூச்செறிந்தார் முடிதிருத்துனர். “ஆனால், முன்பே எனக்குத் தெரியும் தளபதி மிக நல்ல மனிதர் என்று,..”
“காய்த்த மரம் தானே எப்போதும் கல்லடி படுகிறது!”, என்று தத்துவமாகப் பேசினர் கிழவர்களில் சிலர்.

“அப்பன்னா, சீக்கிரமே ஊர விட்டுப் போயிடுவார்னு சொல்லுங்க”, என்றது ஓர் இளசு. கிராம மக்கள் வருத்ததில் ஆழ்ந்தனர். எத்தனை திடமான மனிதர் என்ற எண்ணமும் உடனெழுந்தது.

“ம், அது நடக்கக் கூடியது தான். நம்ம ஊர் ரொம்பச் சின்னது. சின்னதோர் ஆலயம் எப்படி பிரமாண்ட புத்தரை உள்ளொடுக்கும்?” எல்லோரும் சோகம் கொண்டனர். எப்போதுமே அவர்கள் அப்படித் தான். ஒன்றை இழக்கும் போது தானே மக்களுக்கு அதன் மதிப்பே தெரிகிறது.

“நீங்கள்ளாம் எவ்ளோ மோசம்?”, கூலி கோபத்துடன் வெடித்தான். “கட்சிக்கும் மாகாணத்துக்கும் இப்போது இவர் வேண்டும். அவருக்கு நல்லது நடக்கணும்னு நெனச்சிருந்தீங்க. இப்ப, நல்ல காலம் வரும் போது போறாரேன்னு நெனைக்கறீங்க. சுயநலம் இல்லையா இது?”

ஆமாம். உண்மை தான். தளபதிக்கும் செய்ய வேலை இருந்தது. அதுவும் முக்கியமான வேலைகள். ஊர்மக்கள் அவரை மேயராக்கவா விரும்புவார்கள்? அவரது விலகல் அவர்களுக்கு கவனத்திற்கு உரியதானது.

மலையிருந்த திசையில் மக்கள் பார்த்துக் காத்திருந்தனர். வெளியே வந்து மரத்தடியில் நிற்பார் என்றெதிர் பார்த்தனர். அவரைக் காண விரும்பினர். வந்தால், அவருடன் உரையாடவும் விரும்பினர்.

அனைவரிலும் அவரைக் காணும் விழைவு வலுத்தது. நேரில் போய் அவரைச் சந்திக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். முன் தினம் தான் மருத்துவமனையிலிருந்து வந்திருந்தார். அவரால் நடக்க முடியாதிருந்தது.

போவோமே என்று ஒத்துக் கொண்டு மலையை நோக்கி ஒரு கூட்டம் நடந்தது. தனித்து சீந்துவாரற்றிருந்த மலைப் பகுதி திடீரென்று பரபரப்பானது. அந்தப் பக்கமே பெரும்பாலும் யாரும் போவதில்லை. வெட்ட மரமோ மேய்க்க புல்லோ அங்கில்லை. அதுவுமில்லாமல், நூற்றாண்டுகளாக மரண தண்டனையென்று தலை கொய்யப்பட்டவர்கள் அங்கே புதைக்கப் பட்டிருந்தனர். அவ்விட்த்தைக் கடப்பதென்றால், கண்டிப்பாக யாருமே விருட்டென விரைந்தனர்.

இன்றைக்கோ, சிறையருகில் இருந்த வீடு எல்லோருக்கும் புனிதத் தலமாகத் தெரிந்தது. வீட்டுக் கதவருகே கூடினர். குனிந்திருந்த தளபதி மெலிந்திருந்தார். கூச்சமும் நெருடலுமாக உள்ளே நுழையத் துணிவில்லாமல் எல்லோரும் சட்டென்று நின்றனர். முடிதிருத்துனர் போன்ற வாயாடிகள் கூட பேச வார்த்தைகளில்லாமல் திணறினர். பிறருடைய உந்துதலால், “காம்ரேட்!”, என்றார் முடிதிருத்துனர். அவர் கூப்பிட்டது அவருக்கே கேட்டிருக்காது.

கொஞ்ச நேரத்துக்கு தளபதியாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆச்சரியத்தில் விழித்த அவரது விழிகள் விரிந்தபடியே இருந்தன. ஆனால், சீக்கிரமே அம்மக்கள் அங்கு வந்ததன் நோக்கத்தை உணர்ந்து கொண்டார். கண்கள் சட்டென்று குளங்கட்டி கன்னங்கள் மீது நீள்கோடெனப் பெருகின.

அம்மலையடிவாரம் ஊரிலிருந்து அதிக தொலைவில் இல்லை. இருந்தும், இப்போது தான் மக்கள் அந்த இடத்தை மகிழ்ச்சியோடு கண்டனர் என்று சொல்ல வேண்டும். வீட்டுக்குப் பின்புறத்தில் வரிசையாக மரங்கள் நடவென்று குழிகள் வெட்டப் பட்டிருந்ததைக் கண்டனர்.

“மரங்கள் நடப் போகிறீர்களா தளபதி?”

“ஆமாம். பாதாளலோகத்தில் மார்க்ஸைச் சந்திக்கும் முன்னர் இம்மலையின் நிறத்தை மாற்ற முடிந்தால் மிக மகிழ்வேன். இங்கே கனிவகைகள் வளராதென்பதில் கொஞ்சம் வருத்தம் தான். பைன் மரங்களாவது நடுவோமே என்று தான்,..”

“துறவியா வாழப் போறீங்களா?”

“துறவியா?”

“ஆமா.”

“என்னவொரு விநோத சிந்தனை! ஹ்ஹ்ஹாஹ்ஹா!” பெரிதாகச் சிரித்தார். அவருக்கு இருமலே வந்து விட்டது. இருமி முடித்ததும், “பெரிதாக வளரும் வரை இந்தச் சின்ன மரங்களைப் பராமரிக்க வேண்டும். உங்களுக்கெல்லாம் கொஞ்ச நேரம் கிடைக்குமென்றால், நம் ஊர் ஓடையையும் தூர்வாறி பாலம் கட்டி ஓர் ஏரியை உருவாக்கலாம். உங்களோட விளைநிலங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வருடம் முழுவதும் மலைகள் பசுமையுடனும் ஓடை நீருடனும் இருந்தால் நன்றாக இருக்குமில்லையா? பூச்செடிகள் வளர்த்து பறவைகளும் விலங்குகளும் பறந்து திரிந்தால் ஊரே பூங்காவாகி விடும். ஒரு பூங்கா உருவாக்கி அதை நானே பராமரிப்பேன். நீ,..”, என்று கூறியவாறே டோலி கூலியான இளைஞன் தோளில் தட்டினார். “உன்னோட அழகான மனைவியக் கூட்டிட்டு வரலாம். வாயிலைச் சாத்த மாட்டேன்.”

“ரெண்டு பேரும் உங்க வீட்டுக்குப் பின்னால ரகசியமா நின்னு முத்தம் கொடுத்தா கைத்தடியால அடிக்க மாட்டேன்னும் உறுதி கொடுங்க காம்ரேட்”, என்று கேலி பேசினார் முடிதிருத்துனர். மக்கள் அனைவரும் தம்மை மறந்து சிரித்தனர்.

“இவருக்கு விடை கொடுத்தனுப்பும் போது நினைவுப் பொருள் என்ன கொடுக்கலாம்? இவரோடு நாம் தொடந்து எப்படித் தொடர்பிலிருப்பது?” என்று ஏதேதோ கேள்விகள் ஊர் மக்கள் மனங்களில் எழுந்தன. யார் யார் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பதென்று அவர்களுக்குள் போட்டியே பிறந்தது.

அப்போது தான் தேச அதிபர் ஜோவ் இறந்து சீனமே சோகத்திலாழ்ந்தது. நாட்டுக்கு மிகவும் தேவைப்பட்ட காலத்தில் இறந்து போயிருந்தார். அதிகாரத்துவச் செய்தி அறிவிக்கப்பட்ட அன்று தன் மனைவியுடன் மரத்தடிக்கு வந்தார். அவர் முகம் மரணம் போல மரத்து வெளிறி இருண்டிருந்தது. குழியில் கிடந்த அவர் கண்களில் நிழலாடின. கிழித்துக் கொண்டு அடித்த காற்றில் வெண்கலச் சிலையாக உறுதியாக நிமிர்ந்து நின்றார்.

“காம்ரேட்ஸ்”, என்று இரைந்து கொரகொரத்த குரலில் கூவினார். சட்டென்று ஊர்மக்கள் அவரைக் கவனித்தனர். குனிந்தார். சிரமப்பட்டு பையைத் திறந்தார். கருப்புப் பட்டைகளை எடுத்தார். “வாருங்கள்,..” மேலதிகம் சொல்லத் தேவையிருக்கவில்லை. ஒவ்வொருவராக வந்து நின்று ஒன்றை எடுத்துக் கைகளில் கட்டிக் கொண்டனர்.

“யாருடைய யோசனையிது?”, என்று கேட்டவாறே தளபதியின் தோளைத் தொட்டது புகைத்துப் புகைத்துப் பழுப்பேறிய விரல்களைக் கொண்ட கை. அவர் தான் ஊர் மேயர்.

தளபதி ஒன்றுமே பேசாமலிருந்தார்.

“துக்கம் அனுஷ்டிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே சொல்லியிருந்தோமே. நீங்க இப்டி உங்க பாட்டுக்கு,..” கண்களைக் கூட உயர்த்தாமல் நின்றார் தளபதி.

ஆத்திரத்துடன் திரும்பிய மேயர், “யாரும் நகரக் கூடாது. எல்லோரும் கருப்புக் கைப்பட்டிகளை அகற்றுங்கள்.” யாரும் சொன்னதைக் கேட்கவில்லை. “கீழ்படிய மாட்டீங்க, இல்லையா? கிழட்டுத் துரோகி, நீ எடு முதல்ல.”

தையல்கடைக்காரர் அதிர்ந்து கருப்புப் பட்டையையும் மேயரின் கோப முகத்தையும் பார்த்தார். சில கணங்கள் நடுங்கினார். விடியலுக்கு முன்பு தான் தளபதி வீட்டுக் கதவைத் தட்டி ஒரு சுருள் கருப்புத் துணியைத் தந்தார். துக்கச் செய்தி அவரை மிகவும் ஆட்டிவிட்டிருந்தது. இருந்தாலும் அவர் கொண்டு வந்த வேலை எதற்கென்று புரிந்து விட்டது. சோகம் அகலாமலே வேலையில் அமர்ந்தார்.

சோகத்தைப் பிரதிபலிக்கும் கருப்புப் பட்டையைக் கழற்றி எறியச் சொல்கிறாரே மேயர்! வெறும் சோகத்தை மட்டுமா காட்டியது அது? அதிபர் மீது அவருக்கு இருந்த அபிமானத்தையும் மதிப்பையும் தானே! இதை விட வேறு யாரும் ஒருவரை அவமதிக்க முடியுமா? புத்திசாலியும், சட்டத்திற்குட்பட்டு வாழ்ந்தவரும் யாருக்காவது தீங்கிழைக்க முடியுமா? அவமானங்களும் அவமதிப்புகளும் அவருக்கொன்றும் புதிதில்லை. ஆனால், இந்த அளவுக்கு என்றுமே அவர் பட்டதில்லை. அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மேயர் நிமிர்ந்து தளபதியின் சிவந்த கண்களைச் சந்தித்தார். உதடுகள் துடிக்க, “அதிபர் ஜோவ்வின் மரணத்திற்கு துக்கமனுஷ்டிப்பது சட்டவிரோதமா? என்ன செய்வீர்களோ செய்யுங்கள். எப்படியும் நான் துரோகி தானே. எங்கே போனாலும் நானொன்றும் பட்டினியில் செத்து விடமாட்டேன். மன்னியுங்கள், நான் கரும்பட்டையை எடுக்க மாட்டேன்”, என்றார்.

சாந்தமான எளிய ஊர்மக்கள் சட்டென்று சினங்கொண்டனர். கலகத்தில் கைகோர்த்தனர். மரபார்ந்த கட்டுப் பெட்டித் தனங்களையும் பணிவையும் மீறி அடியாழ் மனங்களில் உறைந்த அறம் சீரியது. மௌனமாக இருந்த மேயர் அவர் பக்கம் திரும்பினார். கிழவர் அவர் பார்வையைச் சந்திக்கவில்லை. போர்க்களத்தில் முன்னிற்பவர் போல அமைதியாக கவனத்தைக் குவித்தார்.

அவரது மனைவிக்குத் தான் அவருக்குள் கவிந்திருந்த சோகத்தின் அடர்த்தி புரிந்த்து. மனம் மிக பாதிக்கப்பட்ட போதிலும் அவர் கணவனைப் பார்த்து எதுவும் சொல்லத் துணியவில்லை. துவண்ட நரம்புகளும் தொடந்த இருமலுமாக பலகீனமாக இருந்த கிழவர் நிமிர்ந்து நின்றார்.

“நிச்சயம் இதற்கு வருத்துப்படுவீர்கள்”, என்று உறுமினார் மேயர். அவர் முகம் கோபத்தில் கண்டபடி கோணியது. விடுவிடுவென்று விரைந்து தெருமுனை திரும்பி நடந்தார். தளபதி திடீரென்று மூச்சுமுட்டிக் கீழே சரிந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, தளபதி செய்த புதிய தவறினால் தொடந்தும் அதே ஊரில் ‘கௌரவ’ தளபதியாக வாழ்ந்து முடிப்பார் என்று முடிதிருத்துனர் அறிந்து அதிர்ந்தார். அச்செய்தியைப் பிறருக்குக் கடத்துவதில் அவருக்கு மனமே இல்லை.

***

more_info90e94bfa377aa8734a10

சட்டென்று மாறும் வசந்த காலத்தின் முற்பகுதியைப் போல சில நாட்களின் மகிழ்ச்சிக்குப் பிறகு ஊர்மக்கள் மீண்டும் சோகத்திலாழ்ந்தனர். மலைப்பகுதி மீண்டும் அமைதியானது. மக்கள் அடிக்கடி தளபதியைக் காணச் சென்றனர். ஆனாலும், அவர்கள் முகங்களில் மகிழ்ச்சியில்லை.

மயங்கி விழந்ததற்குப் பிறகு அவர் படுக்கையை விட்டு எழவேயில்லை. மயக்கத்திற்குள் போவதும் வெளியாவதுமாகவே இருந்தார். ஏதேதோ பிதற்றியபடியும் முனகியபடியும் படுக்கையில் பளபளத்த கண்களுடன் விட்டத்தையே வெறித்தபடி கிடந்தார். சில சமயங்களில் அவருக்கு கடுங்காய்ச்சலும் ஏற்பட்டது.

ஒருநாள், அவர் மனம் தெளிந்தது. ஒவ்வொரு முகமாகக் கவனித்தார். முகம் பிரகாசமடைந்தது. மிக மெதுவாக ஆனால் தெளிவாக, “நா உங்கள,.. விட்டுட்டுப் போ,…க மாட்டேன். ஊர்ப் பூங்காவ,.. ப்பரா,….மரிப்பேன். சாலைகளச் செப்பனிடணும்,.. கால்வாய்,.. வெட்,..டணும். என்னையத் தொரத்த,.. மாட்டீங்களே? நல்லது”, என்றார்.

தளபதி இறந்து போனார். அவரது நல்லியல்பும் குணமும் ஊர் மக்கள் மனங்களில் அழியாது நின்றன. அப்போது அதிகாரிகளிடமிருந்து அவர் உடல் அம்மலையடிவாரத்திலேயே எரிக்கப்பட வேண்டும் என்ற ஓர் ஆணை வந்தது. இறுதிச் சடங்கோ மரியாதையோ கூடாது என்றும் உற்றார் உறவினர்களுக்குச் சொல்லக் கூடாது என்றும் கூறியிருந்தனர். மிக முட்டாள் தனமான முடிவு. ஆனாலும், எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அதையெல்லாம் யாருமே கேட்கவில்லை.
அமைதியாகவும் உறுதியாகவும் இருந்த மக்கள் தமக்குத் தோன்றியதைச் செய்தனர். இறுதி மரியாதைச் சடங்குக்குக்கென்றே குழு அமைக்கப்பட்டது. விமரிசையான பாரம்பரிய இறுதிச் சடங்கை நடத்தும் முனைப்பில் இறங்கினர்.

உயர்தர மரத்தில் தனக்கென்று செய்து வைத்திருந்த சவப்பெட்டியைக் கொடுத்தார் ஊரிலிருந்து தொண்டுக் கிழவர் ஒருவர். அன்றைய இரவே தையற்கலைஞர் சவச்சீலைகள் தயாரிக்க ஆரம்பித்தார். தளபதியின் உடல் பெட்டிக்குள் வைக்கப்பட்ட்தும், விளக்குகள் மற்றும் வத்திகள் கொளுத்தப் பட்டன. அவரால் காப்பாற்றப்பட்ட சிறுவனும் அவனது பெற்றோரும் தொலைவிலிருந்து வந்திருந்தனர். இறுதிக் கிரியைகளில் தளபதியின் மகனானான் அச்சிறுவன். பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் மரியாதை செலுத்த மக்கள் திரண்டனர். முன்பு அவரிடம் ஏச்சு வாங்கிய பக்கத்து முகாமிலிருந்து சமையற்கார வீரனும் மலர் வளையம் அனுப்பித் தன் அஞ்சலியைத் தெரிவித்திருந்தான். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தளபதியின் இறுதி மரியாதையன்று வானம் மூடியிருந்தது. மேகங்கள் கனத்துத் தாழ்ந்தன. அவர் தன் உயிலில் எழுதிருந்ததற்கேற்ப அவரது சாம்பல் மலையெங்கும் தூவப்பட்டது.

பதினாறு இளம் வீரர்கள் தூக்கி நடந்த சவப்பெட்டி முன்னால் போக நீண்ட ஊர்வலம் வீதிகளில் சென்றது. காலை நேரம் முழுக்கவே சடங்கில் கழிந்தது. இறுதியில் மரத்தருகே சென்றடைந்தது ஊர்வலம். அங்கே பலரும் அஞ்சலி உரையாற்றினர்.
இவ்வூர்வலகத்திற்கு எதிராக இருந்தவர்கள் முக்கியமாக இருவர். ஒருவர் தளபதியின் மனைவி. வாழ்நாளெல்லாம் கம்யூனிஸ்டாக இருந்த தன் கணவருக்கு எளிய இறுதி மரியாதை போதுமென்றார். அவர் முடிக்கும் முன்னரே மக்கள், “தளபதிக்குப் புரியும். கோவிக்க மாட்டார். இறுதியில் எரிக்கப்படுவதில் எங்களுக்கு ஆட்சேபமில்லை. ஆனால், ஊர்வலம் நடக்கட்டுமே”, என்று கண்களில் நீர்மல்க வேண்டினர். கண்ணீரைக் கட்டுப் படுத்தியவாறாக மெதுவாகக் கண்களை மூடித் தலையசைத்து ஏற்றார். எதிராக இருந்த இன்னொருவர் மேயர். ஒன்றுமே சொல்லமால் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். கடித்த பற்களுக்கிடையில், “ம், இருக்கட்டும், இருக்கட்டும். கவனிச்சுக்கறேன்”, என்று கறுவினார்.

முடிதிருத்துனரோ, தையற்கலைஞரோ அல்லது அவர்கள் நண்பர்களோ எதையும் சந்திக்கவில்லை. சிற்றூர் கொஞ்சம் நவீனங்கொள்ள ஆரம்பித்தது. தளபதியின் ஆசைகளை நிறைவேற்ற ஆரம்பித்தனர்.

அவ்வாண்டின் இறுதி மூன்று மாதங்களில் தளபதியின் வீட்டருகே இருந்த மலை மற்றும் பிற மலைகளுக்கருகில் மரங்கள் நட, குழிகள் வெட்டினர். இரண்டு சாலைகளும் செப்பனிடப் பட்டன. ஓடையருகில் இருந்த குப்பை மலை அகற்றப் பட்டது. ஓடை நீர் முறைப்படுத்தப் பட்டது. வசந்த கால விழாவிற்கு முன்னால் ஆயிரம் பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

எல்லாமே சீராகப் போய்க் கொண்டிருந்தன. ஆனாலும், அவ்வப்போது சிறிய வாய்ச் சண்டைகள் எழாமலில்லை. ஒரு முறை மூண்ட சண்டை மட்டும் மிகத் தீவிரமானது. மரத்தடியில் தளபதிக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதா வேண்டாமா என்பது தான் முக்கிய சச்சரவானது. கூலி இளைஞனும் மற்றவரும் எழுப்பியே தீர வேண்டும் என்று எண்ணினார்கள். முடிதிருத்துனருக்கு இரட்டை மனமாக இருந்தது. சூடாக விவாதித்தனர்.

தலையற்கலைஞர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உட்புகுந்தார். தழுதழுத்த குரலில் கையையுயர்த்தி மரத்தைக் காட்டி, “இந்த மரத்தை விட தளபதிக்கு இன்னொரு சிறந்த நினைவுச் சின்னம் இருக்க முடியுமா? பழைய மரம் தான். பட்டை உறிந்துள்ளது. ஆனாலும், இதன் வேர்கள் இன்னமும் உயிர்ப்புடனிருக்கிறது. பசிய இலைகளையும் புதிய கிளைகளையும் பாருங்கள்”, என்றார். அமைதியாக உணர்ச்சியை விழுங்கினார்.

திடீரென்று, அம்மரமே தலையில் தொப்பியுடன் கழுத்துப் பொத்தான்கள் எல்லாமே போட்ட விரைப்பான சீருடை அணிந்த தளபதியாக மாறிவிட்டது போல ஊர்மக்கள் உணர்ந்தார்கள். கைத்தடியின் மீது சாய்ந்து நேராக நிமிர்ந்து கண்களை அரிதாகச் சிமிட்டிக் கொண்டு ஊரில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றார். இந்தக் கற்பனை செய்ததும் அது வரை நிலவிய கருத்து வேறுபாடு நீங்கியது.

(1979)