அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம்

ந்தியர்களின் வரலாற்றுப் பிரக்ஞையும், கலைப்படைப்புகளைப் பாதுகாத்துவைப்பதில் இருக்கும் ஆர்வமும் உலகப்பிரசித்தமானது. 2009-ஆம் ஆண்டு கேன் (Cannes) திரைப்பட விழாவில் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மிருணாள் சென்னின் படைப்புகளைத் திரையிட்டு கெளரவிப்பதாக இருந்தது. ஆனால் அத்திரைப்படங்களின் படச்சுருள்கள் மிக மோசமான நிலையில் இருந்ததால் அது நடைபெறாமல் போனது. உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படியொரு அக்கறையின்மையைப் பார்க்கமுடியுமா எனத் தெரியவில்லை. உலகப்போர் சமயத்தில், பாரிஸ் நகரம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டபோது கூட புகழ்பெற்ற ஃப்ரெஞ்சு இயக்குநரான ஜான் ரென்வாவின் (Jean Renoir) படச்சுருள்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன.

மிருணாள் சென்னின் படைப்புகள் திரையிடப்பட முடியாமல் போனதையடுத்து, பல கண்டனக்குரல்கள் எழுந்தன. அதையடுத்து இந்திய அரசு கிட்டத்தட்ட அழிந்த நிலையிலிருக்கும் முக்கியமான இந்தியத் திரைப்படங்களை மீட்கும் திட்டத்துக்கான ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சரிசெய்யப்பட்டுவரும் பல திரைப்படங்களில் மிருணாள் சென்னின் திரைப்படங்களும் அடக்கம். அவ்வாறு மீட்கப்பட்ட மிருணாள் சென்னின் திரைப்படங்களில் ஒன்றான “கண்டர்” திரைப்படம் 2010-ஆம் ஆண்டு கேன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

file_1274437686749

மிருணாள் சென்னின் திரைப்படங்களிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் கண்டர் திரைப்படம், 1983-ஆம் ஆண்டு வெளியாகி, 1984-ஆம் ஆண்டு மாண்ட்ரியால் (மொஹயால்- ஃப்ரெஞ்சு உச்சரிப்பு) திரைப்பட விழாவிலும், சிகாகோ திரைப்பட விழாவிலும் பரிசுகள் பெற்றது. இத்திரைப்படத்திற்காக மிருணாள் சென் சிறந்த இயக்குநருக்கான இந்திய தேசிய விருதும் பெற்றார். கண்டர் என்றால் ‘இடிபாடுகள்’ என்று பொருள். [Khandhar என்று ஆங்கிலத்தில் எழுதப்படும். க, ட – இரண்டுக்கும் ‘ஹ’ விகுதியோடு கூடிய அழுத்தம் தந்து உச்சரிக்கவேண்டும். என்ன காரணத்தாலோ இது காந்தஹார் என்றே பலராலும் சொல்லப்பட்டு, மிருணாள் சென்னின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கூட ‘காந்தஹார்’ (Kandahar) என்றே எழுதப்படுகிறது. கலைப்படைப்புகளை மட்டுமல்ல, வார்த்தைகளையும் நாம் இழந்து வருகிறோம்.]

இந்தப்படம், புகழ்பெற்ற பெங்காலி எழுத்தாளர் பிரேமேந்திர மித்ராவின் ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இவர் பல வகையான கதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதைகள், விஞ்ஞானக் கதைகள், அதிபுனைவுக் கதைகள், பேய்க்கதைகள் என்று பலதரப்பட்ட கதைகளை எழுதி பெங்காலிகளுக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவருடைய இன்னொரு சிறுகதையான ‘காபுருஷ்’ஷை சத்யஜித் ராய் படமாக்கினார். அச்சிறுகதை பெங்க்வின் வெளியிட்ட ‘சிறந்த வங்காளச் சிறுகதைகள்’ தொகுப்பில் கிடைக்கிறது. இவருடைய ‘மஸ்கிடோ’ என்ற சாகசக்கதைகள் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்க்வின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

msகண்டர் திரைப்படத்துக்காக இந்தக்கதை தெரிவு செய்யப்பட்டது தற்செயல்தான். முதலில் மிருணாள் சென் பிரேமேந்திர மித்ராவின் வேறொரு சிறுகதையைத்தான் திரைப்படமாக்குவதாக இருந்தது. அதற்காக முன்பணக் காசோலையையும் வாங்கிவிட்டார். “ஆனால் வீட்டுக்கு வந்தபின் யோசித்துப் பார்த்தால் அந்தக்கதையின் கவித்துவத்தை என்னால் காட்சிப்படுத்தமுடியுமா என்று சந்தேகமாக இருந்தது. ஏற்கனவே பிரேமேந்திர மித்ரா வேறொரு இயக்குநர் தன் சிறுகதையைப் படமாக்கியத்தைப் பார்த்தபின் தற்கொலையே செய்துகொள்ளலாம் என்று தோன்றியது என்று சொன்னது வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. இரவு மித்ராவைத் தொலைபேசியில் அழைத்து என் கலக்கத்தைச் சொல்லி, இப்படத்தைக் கைவிடப்போவதாகவும், காசோலையைத் திருப்பிக்கொடுத்துவிடப் போகிறேன் என்றும் சொன்னேன். ஆனால் அவர் எனக்கு எல்லாம் நல்லபடியாக அமையும் என்று ஊக்கமளித்து ஃபோனை வைத்துவிட்டார். இதே யோசனையில் என்னால் தூங்கவே முடியவில்லை. நள்ளிரவு தாண்டியதும், விளக்கைப் போட்டுக் கையில் கிடைத்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். என் அதிர்ஷ்டம், அதுவும் மித்ராவின் கதைதான். அக்கதையில் சினிமாவை ஒவ்வொரு ஃப்ரேமாகவே என்னால் பார்க்கமுடிந்தது. அடுத்தநாள் காலையிலேயே மித்ராவைச் சந்தித்து எல்லாவற்றையும் பேசி முடிவெடுத்து அதைத் திரைப்படமாக்கினேன்.” என்கிறார் மிருணாள் சென்.

இப்படி உருவாக்கப்பட்டதுதான் கண்டர். நகர வாழ்க்கையில் ஊறிப்போன மூன்று இளைஞர்கள், ஓய்வுக்காக ஒரு கிராமத்து மாளிகைக்குச் செல்கிறார்கள். அந்த மாளிகை அந்த இளைஞர்களில் ஒருவனின் முன்னோர்களின் வீடு. மாளிகை என்று சொல்வதைவிட மிகப்பெரிய அரண்மனை என்றுதான் சொல்லவேண்டும். பல பகுதிகளும், சாளரங்களும், தோட்டங்களும், கோயிலும், குளமும் கொண்ட அந்த மாளிகை முற்றிலும் பாழடைந்து கிடக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வௌவால்கள், ஒட்டடைகள், இடிபாடுகள். எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பது போன்ற உத்திரங்கள். ஒருகாலத்தில் அது அந்தக் கிராமத்து ஜமீன்தார்களின் மாளிகையாக இருந்தது. பல குடும்பங்கள் அந்த மாளிகையில் செல்வச் செழிப்போடு வசித்திருக்கின்றன. காலம் மாறி, அரசு ஜமீன்தார் அமைப்புகளை நீக்கியபிறகு, அக்குடும்பங்கள் நகரங்களுக்கு வெவ்வேறு வேலைகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. மலேரியா நோய்க்கும் பலர் பலியாகிவிட்டனர். இப்போது அந்த மாளிகையின் ஒரு பகுதியில் ஒரே ஒரு ஜமீன்தார் வழிக்குடும்பமும், இன்னொரு பகுதியில் மொத்த மாளிகையையும் கவனித்துக் கொள்ளும் ஒரு வேலைக்காரரின் குடும்பமும் மட்டுமே வசித்துவருகிறது. அந்த ஜமீந்தார் குடும்பத்தில் ஜாமினி என்றொரு இளம்பெண் தன் தாயுடன் அங்கு வாழ்கிறாள். தாயார் படுத்த படுக்கையாக இருக்கிறாள். கண் பார்வையை இழந்துவிட்டிருக்கிறாள். கட்டிலில் தானாகவே திரும்பக்கூட முடியாத நிலைமை.

மாளிகைக்கு வந்திருக்கும் மூன்று நண்பர்களில் ஒருவனான தீபுவுக்கு உறவுக்குடும்பம் இது. தீபுவுக்கு ஜாமினி தங்கை முறையாகிறாள். ஜாமினியின் தாய்க்குத் தன் மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை, இப்படித் தன்னோடு இந்த இடிபாடுகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறாளே என்று ஒரே ஆற்றாமையாக இருக்கிறது.. ஜாமினியின் குடும்பம் வசதியான நிலையிலிருந்தபோது, ஜாமினிக்கும் அவள் உறவுக்காரப்பையன் நிரஞ்சனுக்கும் திருமணம் என்று உறுதியாகியிருந்தது. நிரஞ்சனோ வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுவிடுகிறான். அது ஜாமினிக்குத் தெரியும். ஆனால் தன் தாய்க்குத் தெரிந்தால், அவள் கலங்கிவிடுவாள் என்று சொல்லாமல் இருக்கிறாள்.

ஜாமினியின் தாய், அந்த மாளிகைக்கு யார் வந்திருந்தாலும், நிரஞ்சன்தான் வந்திருக்கிறான் என்று நினைத்துவிடுகிறாள். அப்படித்தான் தீபுவுடன் நிரஞ்சனும் வந்திருக்கிறான் என்று உறுதியாக நினைக்கிறாள். தீபு ஜாமினியையும் அவள் தாயையும் பார்க்கப் புறப்படுகிறான். தீபுவின் நண்பன் சுபாஷும் அவனுடன் செல்கிறான். தீபு முதலில் வீட்டிற்குள் நுழைந்து ஜாமினியின் தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு அவளைப் பற்றி விசாரிக்கிறான். அவனைப் பின் தொடர்ந்து வந்த சுபாஷ் வெளியில் நிற்க, அவனை உள்ளே வருமாறு ஜாமினி கூப்பிடுகிறாள். நிரஞ்சன்தான் வந்துவிட்டான் என்று நினைக்கும் ஜாமினியின் தாய், “நிரஞ்சன், வந்து விட்டாயா? நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். வா வா” என்று கூப்பிடுகிறாள். பிறகு அவள், “நிரஞ்சன், வா, என்னிடம் வந்து ஜாமினியை திருமணம் செய்துக்கொள்வேன் என்று உறுதி கொடு. என் பெண் பாவம். எவ்வளவு நாள்தான் தனியாக இருப்பாள்? அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டால் நான் நிம்மதியாக இருப்பேன். வா நிரஞ்சன். என்னிடம் வா. என் கையைப் பற்றிக்கொள். ஜாமினியைக் கல்யணம் செய்துக்கொள்வாய் அல்லவா? செய்துக்கொள்வாய் அல்லவா?” என்று கதறுகிறாள். ஜாமினி, தீபு, சுபாஷ் மூவரும் தாயிடம் வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல், வேறு எதுவும் பேசவும் முடியாமல் திகைத்துப் போகிறார்கள். ஜாமினியின் தாயின் நிலைமை தெரிந்த சுபாஷ் வேறு வழி தெரியாமல், “ஜாமினியை திருமணம் செய்துக்கொள்வாயா?” என்ற அவளுடைய தொடர்ந்த கேள்விக்கு, “ஆம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறுகிறான்.

kh-1

இதைக்கேட்ட தாய் உடனே நிம்மதியாக தூங்க ஆரம்பித்துவிடுகிறாள். இந்தக் காட்சிதான் கண்டர் திரைப்படத்தின் முடிச்சு. இதைத் தொடர்ந்து கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் மற்றவரோடு எப்படி நடந்துகொள்கிறார்கள், அவர்கள் மனோநிலை என்னவாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறார் மிருணாள் சென்.

கண்டர் என்னும் அழிவு நிலையில் உள்ள கட்டடங்களை குறிப்பிடும் வார்த்தையை, இடிந்த மாளிகையில் வாழும் ஜாமினியின் வாழ்க்கைக்கும், அவள் தாயார் வாழ்கைக்கும் குறியீடாகச் சொல்லலாம். ஜாமினியின் தாயார் இடிந்த மாளிகையிலிருந்து வெளியேற மறுக்கிறார். அவருடைய மூத்த மகள் கல்யாணமாகி கல்கத்தாவில் இருக்கிறாள். அவள் பல முறை கூப்பிட்டும் அங்கு செல்ல மறுக்கிறார் அந்தத் தாய். பெண் வீட்டில் தான் சென்று தங்கினால் அது மரியாதையாக இருக்காது என்று அங்கு செல்லாமல் இடிந்து போய்க்கொண்டிருக்கும் அந்த வீட்டிலேயே இருக்கிறார். மாறிக்கொண்டிருக்கும் காலத்தில், பழைய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தேங்கிவிட்ட ஒருவர் எவ்வாறு மெதுவாக அந்த கட்டிடங்களை போல் அழிகிறார் என்று நாம் இந்த கதையைப் பார்க்கலாம். அவர் அழிவது மட்டுமல்லாமல், அவர் மகளும் தாயைப் பிரிய முடியாமல் தானும் அழிகிறார்.

ஜாமினியின் எதிர்காலத்துடன் அவர்களுடைய குடும்ப வரலாறும், குடும்ப அகங்காரமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஜாமினிதான் இளைய மகள் என்பதால் தாயைப் பார்த்துக்கொள்ளவேண்டியது அவள் கடமையாகிறது. அந்தப் பாழடைந்த மாளிகைகளை விட்டுவிட்டு அவளால் எங்கும் செல்ல முடியாது. படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவள் தாய் உதவிகேட்டு எப்பொழுது கூப்பிடுவாள் என்பதையும் சொல்ல முடியாது. தாய்க்கு சேவை செய்துகொண்டு தன் கனவுகளைப் புதைத்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. சுபாஷ் வருகையும், அவள் வீட்டில் நடக்கும் சம்பவமும், அவளுக்கு வேறு ஒரு பாதை இருப்பதைக் காட்டுகின்றன. இந்தப் பாதை ஒரு கனவுலகப் பாதையாக இருந்தாலும், அதில் சற்று நேரம் அவள் சஞ்சரிக்கிறாள். எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் இருந்தாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்க்கையைக் கடத்துகிறாள். சுபாஷுக்கு அன்று நடந்த சம்பவம் மன உளைச்சலை கொடுத்திருக்கும் என்று அறிந்து, அவளாகவே அவனை அணுகி, அவன் எதற்காக அப்படி செய்தான் என்பது தனக்குப் புரிகிறது என்று ஆறுதல் கூறுகிறாள். அதேபோல் தீபுவுடன் பேசும்போதும் அவள் எந்த ஒரு உதவியும் கேட்பதில்லை. அவள் தாயாருக்கு ஏன் மருத்துவமனையில் சிகிச்சை செய்யவில்லை என்று தீபு கேட்கும்பொழுது, அவள் மௌனம் அவள் நிலையைத் தெளிவாக உணர்த்துகிறது. அவர்கள் வறுமையில் வாடினாலும் வேறொருவரின் உதவியை நாடத் தயாராகவில்லை என்பது தெரிகிறது. வறுமையிலும் தன் கம்பீரத்தையும், தன்மானத்தையும் விட்டுக்கொடுக்காத பாதையை அவள் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

சுபாஷின் மனநிலை வேறு மாதிரி இருக்கிறது. ஒரு பார்வையாளனைத் திடீர் என்று நாடகத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கச்சொன்னால் எப்படி ஸ்தம்பித்து நிற்பானோ, அது போல் இருக்கிறது சுபாஷின் மனநிலை. எந்தத் தளைகளும் இல்லாமல் வெகு இயல்பாக பயணித்துக்கொண்டிருக்கும் அவன் பாதையில் திடீர் என்று ஒரு திருப்பம் தெரிகிறது. இது அவன் எதிர்பார்க்காதது. அவன் நிலை ஜாமினியின் மனநிலைக்கு எதிரான ஒன்றாக இருப்பதை நாம் காணலாம். ஜாமினிக்கு எந்தப் பாதை அழகாகத் தெரிகிறதோ, அதே பாதை இவனுக்கு பீதியை உண்டாக்குகிறது. தன் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்ன என்று இன்னும் நிர்ணயிக்காத சராசரி இளைஞனின் மனநிலை சுபாஷுடையது. அவன் ஜாமினியின் நிலைமையை நன்றாக உணர்ந்திருக்கிறான். ஜாமினியின் கஷ்டங்கள் தெரிவதற்கு முன்னரே அவனுக்கு அவள் மீது மெல்லிய ஈர்ப்பு கூட ஏற்பட்டிருக்கிறது. இக்கட்டான சூழலையும் முதிர்ச்சியோடு கையாளும் ஜாமினியின் பக்குவம் அவனை ஆச்சரியப்படுத்துகிறது. தீபுவிடம், ஜாமினியின் எதிர்காலம் என்ன என்று கேட்கிறான். அவளை இந்த மாளிகையில் வசிக்கும் அரசியாகக் கற்பனை செய்து பார்க்கிறான். இவ்வளவு மென்மையாக இருக்கும் அவன், தன் எதிர்காலம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தவிக்கிறான்.

khanda8f

[கண்டர் படப்பிடிப்பு சமயத்தில் மனைவி கீதா சென்னுடன் மிருணாள் சென்]

தீபு ஒரு வாகனத்தில் பயணம் செய்பவன் வெளியில் நடக்கும் ஒரு சம்பவத்தை பார்த்துக்கொண்டு போகும் ஒருவனை போல் இருக்கிறான். அவன் ஜாமினியின் கஷ்டம் நன்றாக அறிந்திருக்கிறான். ஆனால் அவன் அந்தப் பிரச்சினையிலிருந்து விலகியே இருக்க விரும்புகிறான். நண்பன் அணில், தீபுவிடம், “நீ ஏன் ஜாமினிக்கு வரன் பார்க்க கூடாது? அவள் உன் தங்கை முறைதானே. அவள் கல்யாண விஷயத்தில் நீ ஏதாவது செய்யலாமே?” என்று கேட்கிறான். “என்னை அவளுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அலையச் சொல்கிறாயா? அவளுக்குக் கல்யாணமாவது சுலபமான காரியமில்லை. அவளை மணமுடித்துக்கொள்பவன் அவள் தாயையும் பார்த்துக்கொள்ளவேண்டும். இதெல்லாம் நடக்ககூடிய விஷயம் இல்லை. எங்களில் எந்த ஒரு உறவுக்காரரும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஏதோ நாம் இங்கு வந்ததினால் இதையெல்லாம் பார்க்கிறோம்,” என்கிறான். இயக்குனர் இதை நம் முன் வைக்கும் விதத்தில் அவனுடைய பார்வையும் நமக்கு புரிகிறது.

ஒரு தேர்ந்த இயக்குனரான மிர்ணாள் சென் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை அந்தச் சூழலுக்குள் அழைத்து சென்று விடுகிறார்.  மொத்தத் திரைப்படமும் ஒரு மாளிகைக்குள் நான்கு – ஐந்து கதாபாத்திரங்கள் வழியே நகர்கிறது. எங்கு திரும்பினாலும் இடிபாடுகளுடனும், செல்லரித்த புகைப்படங்களோடும் இருக்கும் மாளிகையும் இக்கதையின் ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது. மாளிகைகள் எவ்வளவு பாழடைந்தவை என்பதைக் காட்ட, கூரையில் தொங்கும் வௌவால்களையும், அறைக்குள் வசிக்கும் ஆந்தைகளையும் காண்பிக்கிறார். கே.கே.மஹாஜனின் காமிரா வழியாக அந்த அரண்மனையின் பிரம்மாண்டத்தையும், இழிபட்ட நிலையையும் உணர்த்துகிறார்.

இது போன்ற மென்மையான திரைப்படங்களுக்கு திரைக்கதையும் வசனங்களும் மிக முக்கியமாகின்றன. சென் திரைக்கதையை அமைத்த விதம் ரோலர் கோஸ்டரில் செல்வது போல் இருக்கிறது. அமைதியான காட்சிகளும், உணர்ச்சிகரமான காட்சிகளும் மாறி மாறி வருகின்றன. அது இரண்டுவிதமான காட்சிகளுக்குமே அழுத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. அமைதியான காட்சிகளில் கதாபாத்திரங்களின் இயல்பு நிலையை நிறுவுகிறார். கதாபாத்திரங்கள் நமக்கு நெருக்கமாகிறார்கள். நண்பர் கூடி இயல்பாகக் கிண்டல் அடித்துக்கொள்கிறார்கள். ஜாமினி தன் தாய்க்கு உதவிகள் செய்துக்கொண்டிருக்கிறாள், நண்பர்கள் சேர்ந்து சமைக்கிறார்கள். இதை நிறுவிய பிறகு, அவர்களை உணர்ச்சிகரமான சூழ்நிலையில் வைத்து அவர்கள் எப்படி அதை எதிர்கொள்கிறார்கள் என்பதை நமக்குக் காண்பிக்கிறார். முதலிலேயே கதாபாத்திரங்களின் இயல்பை நன்றாக நிறுவிவிட்டதினால், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நமக்கு வெகு இயற்கையான ஒன்றாகப்படுகிறது.

வசனகர்த்தாக்கள் ப்ரதிவா அகர்வால், சோமேந்த்ரநாத் இருவரும் இந்தப் படம் நம்மை பாதிப்பதற்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறார்கள். இது போன்ற படங்களில் வசனம் இயற்கையாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் வெகு சில வாத்தைகளின் ஊடே ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் மெலோட்ராமாவாகிவிடக் கூடிய உணர்ச்சிகரமான கதை இது. இந்தப் பணியை அவர்கள் அருமையாகச் செய்கிறார்கள். “எல்லாம் போய்விட்டது, ஆனால் குடும்ப அகங்காரம் மட்டும் போகவில்லை” என்று ஜாமினி தீபுவிடம் சொல்லும்போது அவளுடைய நிலை நமக்கு முழுவதாகவும் புரிந்துவிடுகிறது. அதே போல் ஜாமினியின் தாய் அவளை கேள்விகளால் துளைக்கும்போது நமக்கு எரிச்சல் வருகிறது. “நான் அப்படி சொல்ல வேண்டியதாகிவிட்டது. நீங்கள் எல்லோரும் மெளனமாக இருந்தீர்கள்,” என்று சுபாஷ் சொல்லும் பொழுது அவன் மனநிலையையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அற்புதமான வசனகர்த்தாக்கள் இல்லை என்றால் இந்தப்படம் நம்மை இந்த அளவிற்கு பாதித்திருக்காது என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.

the-ruins-2

வசனகர்த்தாக்களுடன் சென்னுக்கு உறுதுணையாக நிற்பவர்கள் இந்த படத்தில் நடித்த எல்லா நடிகர்களும். அந்த காலகட்டத்தில்தான் இந்தியாவின் மிகச்சிறந்த நடிக நடிகைகள் உருவாகி, பல அற்புதமான படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள். நஸ்ருதின் ஷா, ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில், ஓம் பூரி, அம்ரிஷ் பூரி, பங்கஜ் கபூர் போன்றவர்கள் மாற்றுத்திரைப்படங்களின் உச்சியில் இருந்த காலம். இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான ஜாமினியை ஷபானா ஆஸ்மி கையாள்கிறார். தாய் நிரஞ்சனை பற்றி கேட்கும்போது அவள் மேல் கோபப்படுவதும், தன் சொற்களால் தாயைப் புண்படுத்திவிட்டாள் என்று அறியும்போது தாயை சமாதானப்படுத்துவதும், தீபுவிடம் தன் நிலைமையைச் சொல்லவும் மறைக்கவும் முடியாமல் பேசுவதும், சுபாஷை ஆசையுடன் பார்ப்பதும் என்று சிறு சிறு முகமாற்றங்களில் பாத்திரத்தின் அகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். ஜாமினியின் வேதனை, ஆசை, துயரம், தன்மானம் எல்லாவற்றையும் புரிய வைக்கிறார். ஷபானாவிற்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கொடுக்கப்பட்டது. மிருணாள் சென் இப்படியொரு திரைப்படத்தை இயக்கப்போகிறார் என்று தெரிந்ததும், ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் இருவருமே தாங்களாகவே முன்வந்து இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்கள். ஷபானா ஆஸ்மியைத் தெரிவு செய்த மிருணாள் சென், அடுத்த திரைப்படத்தில் ஸ்மிதா பாட்டிலுக்கு வாய்ப்பு கொடுப்பதாக வாக்களித்தார். (அதன்படியே தன் அடுத்த படமான ஆகாலேர் சந்தானேவில்(আকালের সন্ধানে ; Akaler Sandhane) ஸ்மிதா பாட்டிலைக் கதாநாயகியாக்கினார் சென்.)

khanda2f1சுபாஷின் கதாபாத்திரத்தை வகிப்பவர் இந்தியாவின் தலை சிறந்த நடிகராக நான் கருதும் நஸ்ருதின் ஷா. நகர்ப்புற இளைஞனின் குழப்பங்களை வெகு சுலபமாகவும், இயற்கையாகவும் வெளிக் கொண்டு வந்து விடுகிறார். ஊர் சுற்றிப் பார்க்க வந்த ஒரு உல்லாசமான இளைஞனாக, ஜாமினியின் தாயிடம் வாக்கு கொடுத்த பின் மிகவும் குழம்பிப் போயிருக்கும் ஒரு இளைஞனாக, ஜாமினியின் மீது ஈர்ப்பு ஏற்படும் ஒரு இளைஞனாக, இப்படி கதாபாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அனாயாசமாக நமக்குக் காட்டுகிறார் ஷா. இவர்களுடன் தீபுவாக வரும் பங்கஜ் கபூரும் தன் பங்கை அருமையாகச் செய்கிறார். ஜாமினியின் தாயாக மிருணாள் சென்னின் மனைவி கீதா சென்னே நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்திற்குக் கண் தெரியாது என்பதாலும், அவரால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்பதாலும், வெறும் வசனங்கள் மூலமும், வெகு சிறிய உடல் அசைவு மூலமும் எல்லாவற்றையும் உணர்த்தவேண்டும். கீதா சென் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வெல்கிறார்.

இந்தப்படத்தைப் பற்றி ஒரு விஷயத்தை எல்லா விமர்சகர்களும் சொல்கிறார்கள். மிருணாள் சென் புரட்சிகரமான சிந்தனை கொண்ட படங்களை இயக்கியவர். அடிப்படையில் கம்யூனிஸ்ட் சிந்தனை உடையவர். ஆனால் இந்தப் படத்தில் அவருடைய முந்தைய படங்களின் தாக்கமே இல்லை. பிரச்சாரமோ, புரட்சி வேகமோ இல்லை. இந்தப்படம் ஒரு மென்மையான மனிதனின் சாதாரண ஆசைகளையும், கஷ்டங்களையும் காட்டும் ஒன்று என்பதை எல்லா விமர்சகர்களும் சொல்கிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் மிருணாள் சென் என்னும் கலைஞன், தான் நம்பிய சித்தாங்களைத் தாண்டி முதிர்ச்சியடைந்த படம் இது என்று சொல்லலாம். மிருணாள் சென்னின் மற்றெந்தப் படத்தைக் காட்டிலும் இந்தப்படம் 2010-ஆம் ஆண்டு கேன் விழாவின் க்ளாஸிக்ஸ் பிரிவில் திரையிடப்பட்டது மிகவும் பொருத்தமானதாகவே படுகிறது. அறுபதுகளிலும், எழுபதுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் கேன் விழாவில் விருது பெற்று திரையிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது அது மிகவும் அரிதாகிவிட்டது. தொழில்நுட்பத்தில் எவ்வளவோ வளர்ந்துவிட்டாலும், இந்திய சினிமாவின் கலையுணர்வில் ஏற்பட்டிருக்கும் வறட்சியைச் சுட்டிக்காட்டுவதைப் போல், “இடிபாடுகள்” கேன் விழாவில் திரையிடப்பட்டது தற்செயலாக அமைந்துவிட்ட பொருத்தமான குறியீடாகத் தெரிகிறது.

One Reply to “அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம்”

Comments are closed.