மானிடர்க்கென்றுப் பேச்சுப்படில்!

கோதை சித்தியின் முகத்தில் எப்படி முழிக்கப்போகிறோம் என்றே இரண்டு நாட்களாகவே எனக்கும், என் கணவருக்கும் சஞ்சலமாக இருந்தது. ஒருமுறை கூட மைசூருக்கு அத்தனை மனசஞ்சலத்தோடு பயணித்ததில்லை. எப்போதும் அதிகாலைப் பறவைகளையும், காற்றையும், சி.டி ப்ளேயரில் ஓ.எஸ்.அருணோ வீணா சஹஸ்ரபுத்தேவோ பாடிக்கொண்டிருக்க பெங்களூரிலிருந்து மைசூருக்குச் செல்லும் கார்ப்பயணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிற்சில சந்தோஷங்களில் ஒன்றாகிவிட்டிருந்தது. ஆனால் இந்தமுறை போல ஒருமுறையும் மனசஞ்சலத்தோடு பயணித்ததில்லை. நாளை இரவு மகள் வைஜெயந்தி இந்தியாவுக்குத் திரும்பி வரப்போகிறாள் என்ற சந்தோஷம் கூட மனதில் அவ்வளவாகப் படியவில்லை.

நாங்கள் தமிழகத்திலிருந்து மைசூருக்கு நான்கைந்து தலைமுறை முன்னரே குடியேறிய வகுப்பினர். எம் முத்தாத்தாக்கள், உடையார் அரண்மணையில் பஞ்சாங்கம் படித்தும், வேதம் ஓதியும், இராமானுசர் ஸ்தாபித்த கோயில்களையும் மடங்களையும் பராமரித்தும், பிரபந்தங்களும் வேதங்களும் கற்றுத்தரும் குருகுல ஆசான் வழியில் 1920-30கள் வரை செம்மையோடிருந்தனர். பிறகு சமுத்திரம், நதியாகி, குட்டையான கதையாய், பெயருக்கென வம்சாவழியினராய், பணம் பண்ணும் கருவியினராய் அருகி அவ்வப்போது வீட்டுப் பெரியவர்களைக் குளிர்விக்கவும் வைணவத் தலங்களை தரிசிக்கவும், சென்னையும், காஞ்சிபுரமும், ஸ்ரீரங்கமும் இரு வருடத்திற்கு ஒரு முறை என வருவோம். அறுபது எழுபதுகளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை வருபவர்கள் 2000-ஆம் ஆண்டில், உலகம் வரவேற்பரைக்குள் வந்து விட்ட பரபரப்பு யுகத்தில் எங்கள் வேர்களைத் தேடி நாங்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது.

மைசூரில் இப்போது என் கணவரின் பெற்றோர் மட்டுமே. நான் கடந்த 30 வருடங்களாய் பெங்களுர்வாசி. என் பெண்ணும் பிள்ளையும் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை டாலர் கணக்குக்கேற்ப வேலை மாற்றும் தெளிந்த சிந்தையினர். என் கணவர் மோட்டார் உதிரிப் பாகங்கள் உருவாக்கும் ஒரு தொழிற்சாலையிலிருந்து ஓய்வு பெற்று இன்றுடன் 6 மாதங்கள் கழிகின்றன. தன் தாய் தந்தையரை மைசூரிலிருந்து பெங்களுருக்கு அழைத்துவர முடியவில்லை என்பதுதான் அவரை வருத்தும் ஒரே குறை.

என் மாமியார் கனகவல்லி மாமி 83 வயதில் உடலில் பல அவஸ்தைகளோடு கடந்த 1 ½ வருடங்களாக படுக்கையில் தான் வாழ்க்கை. சின்னக் காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் விஷ்ணுக்காஞ்சியில், அவரது தந்தை வைணவமடத்தை ஒட்டி ஒரு வேத பாடசாலை நடத்தி வந்தார். அதில் பயின்ற வேதங்களும், பிரபந்தங்களும் என் மாமியார் கனகவல்லிக்கும், அவரின் இளைய சகோதரி கோதைநாயகிக்கும் இப்போதும் மனப்பாடம்.

சித்தி பெயருக்கேற்ற கோதைதான், 75 வயதிலும் அழகும் மெருகும் குலையாமல், சிக்கென, சின்னப் பெண்போல காரியங்களைக் கண்ணும் கருத்துமாகச் செய்வாள். எப்போதும் யாராவது உறவினர் வீட்டு கல்யாண கலாட்டா நிரம்பிய சமையலறையிலோ, இல்லை குழந்தைப் பேற்றுக்காக அழைத்து வரப்பட்ட உறவினர் வீட்டுச் சமையலறையில் பத்திய உணவு தயாரிப்பதிலோ, பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி, சீராட்டி, தாலாட்டுவதிலோ தன்னை மறந்திருப்பாள். முக்காலே மூணுவீசம் அவளது தாலாட்டில் தன்னை இழந்த சோகம் அப்பிக் கப்பிக் கொண்டிருக்கும். அவள் பாடும் அந்த சில நேரம் தவிர மற்ற எப்போதும் அவளிடம் சுய பச்சாதாபமோ, கழிவிரக்கமோ இருக்காது. அத்துணை மனதிடம் வாய்ந்த பெண்மணி.

மைசூரில், என் மாமியாருக்கு சகலமும் சித்தி கோதைநாயகிதான். காஞ்சீபுரத்தை ஒட்டியே வாழ்ந்த சித்திக்கு முதலில் மைசூர் கசந்ததென்னமோ உண்மைதான். பரபரப்பற்ற காலைப் பொழுதுகளும், புரியாத கன்னட மொழியும், காலை எட்டரை மணிக்கு கோயில் நடை திறப்பும் முதலில் அவளுக்கு வெறுப்பாயிருந்தன.மெல்ல மெல்ல அவள் அந்தச் சூழ்நிலைக்குத் தன்னைப் பழக்கிக் கொண்டாள். அதிகாலையில் அவளுடைய பெருமாள் ஆராதனைகள், பிரபந்த மனனம் அன்றைய சமையலின் துவக்கமாக அமையும். முதல் நாள் இரவே காய்கறிகளைத் தயார் செய்து கொண்டு விடுவாள். காலை ஏழரை மணிக்குள் சிற்றுண்டி சமையல் முடிந்து விடும். பின் தன் அக்கா, என் மாமியாரின் அறைக்குச் சென்று, அவரை ஒருவாறாக நிலைக்குக் கொண்டு வந்து, சிற்றுண்டியும், மாத்திரைகளும் கொடுத்து அவளை ஹாலுக்கு அழைத்துவந்து அமர்த்தி வைப்பாள்.

கோதை சித்தி வந்த பிறகு என் மாமனார் வரதராஜன் தான் இழந்திருந்த இலக்கியத் தேடலைத் தொடர்ந்தார். இருமுறை சென்னை சென்று, லாசரா, அசோகமித்திரன், திஜாவிலிருந்து தற்போதைய ஜெயமோகன் வரை ரயில் வண்டியில் அள்ளிக் கொணர்ந்தார். அவை அவர் மற்றும் அவரது மைத்துனி கோதையின் ரசனைகளுக்கு வடிகாலாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். இவர்களின் உறவு தாண்டிய நட்புக்கும், அதிகம் பேசிக் கொள்ளாத, ஆனால் சரியான புரிதலில் பயணிக்கிற தோழமையுடன் கூடிய வாத்சல்யத்துக்கும் இவர்களிடம் இழையோடிக் கொண்டிருக்கும் பெயர் என்ன, என்று என் கணவரை நான் பலமுறை குடைந்ததுண்டு. அதற்கான விடையை அவரால் உளுந்து அரைத்த அம்மி போல்தான் தரமுடிந்திருக்கிறது.

என் கணவருக்கு மணமாகும்முன், அவரது இருபத்தாறாம் வயது வரை வருடத்தில் பத்து பதினைந்து நாட்கள் என் கணவரின் குடும்பத்தினர் மைசூரிலிருந்து காஞ்சீபுரம் செல்வதும், கோதை சித்தி தேவைப்பட்டபோது மைசூர் வந்து சரீர உபகாரம் செய்வதும் வழக்கம். என் கணவரின் பூணூல் கல்யாணத்திலிருந்து, இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த என் நாத்தியின் மகன் அபிஷேக்கின் பூணூல் கல்யாணம் வரை எல்லாம் சித்தி சொல் பேச்சுப்படிதான் நடந்தன. அவ்வளவு கனகச்சிதமாக எங்கள் அனைவரையும் ஒரே நூலில் அவள் கோர்க்கும் நேர்த்தி, இவள் எந்த கல்லூரியில் மனிதவளம் பயின்றாள் என பலமுறை என்னை வியக்க வைத்ததுண்டு. உறவுகளுக்குள் எழும், சிறுசிறு பூசல்கள், கொண்டான் கொடுத்தான் பிரச்சனைகள், இளம்பெண்களுக்கான ஆலோசனைகள், வாலிபப் பிள்ளைகளுக்கான அறிவுரைகள் எல்லாவற்றையும் தேன் கலந்த சூரணம் போல் மூக்கை மூடி, தலை அழுத்தி பிறந்த குழந்தை வாய் புகட்டும் செவிலித்தாய் போல் அத்தனையும் செவ்வனே செய்வாள். கோதை சித்தி வீட்டுக்கு வந்திறங்கி விட்டால் அவள் ஆளுமை வீடெங்கும் கோலோச்சும்.

கடந்த ஏப்ரல் மாதம் பெங்களுர் வந்த என் பெண் தன் பாட்டன் பாட்டியைக் காண மைசூர் சென்றிருக்கிறாள். அப்போது அவளுக்கு என் மாமனார் மற்றும் கோதை சித்தியின் நட்பு கலந்த உரிமை விகாரமாகத் தோன்றியிருக்கிறது. அவள் என் மாமனாரோடு பெரிதாக வாக்குவாதம் செய்திருக்கிறாள். கடைசியில், இனி அவர் பெங்களுருக்குத் தன் மகனோடு சேர்ந்து வந்து இருந்தால், தான் அங்கு இருக்கப் போவதில்லை என்றும். தனியாக வீடு எடுத்துக்கொண்டு வாழப் போவதாகவும் சொல்லியிருக்கிறாள். இது அனைத்தையும் முந்தாநாள் என் கணவரிடம் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும், கணவருக்கும் ஒன்றுமே ஓடவில்லை. என்ன காரியம் செய்தாள் இந்தப் பெண் வைஜயந்தி! அவளுக்கு வைஜயந்தி என்று பெயர் சூட்டியதுகூட சித்திதான். பெண் குழந்தை கோதையின் அம்சமாய் ஆடிப்பூரத்தில் ஜனித்ததில் அவளுக்கு ஏக மகிழ்ச்சி. ஒரு முறை அவள் ஆசைப்படி எங்களை வில்லிபுத்தூர் அழைத்துச் சென்று கோதைவனத்திலிருந்து மண் எடுத்து நாவில் தீற்றணும் என்று சொன்ன வண்ணம் செய்தாள். அப்படி அன்பும் அரவணைப்பும் கொண்டவளை, இந்தப் பெண் இப்படிப் புண்படுத்திவிட்டதே?

சித்தியை நேரில் சந்திக்கத் தயக்கமாக இருந்தாலும், அவளை நேரில் சந்தித்து சாஷ்டங்கமாக விழுந்து சேவித்து மன்னிப்புக் கேட்டால்தான் கொஞ்சமாவது மனம் ஆறும் என்று மைசூருக்குக் கிளம்பிவிட்டோம். வழி நெடுக இருவர் மனம் முழுதும் சித்திதான் நிறைந்து நின்றாள். கொஞ்ச கொஞ்சமாக என் கணவர் சித்தியைக் குறித்த பழங்கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

“மாலு, இது நடந்து சுமார் நாப்பது வருஷமிருக்கும். அப்போதுதான் நாங்கள் பெல்காமிலிருந்து மைசூர் வந்திருந்தோம். நானும் என் தங்கை வசுமதியும் பள்ளியில் சேர்க்க அழைத்துப் போகையில் சித்தி காஞ்சிபுரத்திலிருந்து வந்து இறங்கினாள், புது ஊரில் எங்களுக்கு உதவியாக. விடுமுறை நாட்களில் பலமான பகல் சாப்பாட்டிற்கு பின் அம்மா, அப்பா, சித்தி வாசல் திண்ணையில் அமர்ந்து கல்கியின் பொன்னியின் செல்வனை உரக்க ஆள் மாற்றி மாற்றி வாசிப்பதும், விதவிதமான சமையல், பலகாரங்கள், நொறுக்குத் தீனிகள் செய்வதும், சனி ஞாயிறுகளில் ஸ்ரீரங்கப்பட்டணம் செல்வதும், வழிப் பயணத்திற்கென கலந்த புளியோதரை, தயிர் சாதப் பொட்டணங்களைக் கருவடாத்தோடு சேர்ந்து சம்புடங்களில் எடுத்துச் செல்வதும் என்ன சொல்ல!

சித்தியுடைய சங்கீத ஞானம் வெறும் கேள்வி ஞானமே! அதில் அவள் பெற்றிருக்கும் பாண்டித்யம் அபாரம். விவிதபாரதியில் கேட்ட லதா மங்கேஷ்கர் பாடல்களையும் அவள் பாடி அசத்துவாள். அக்கம் பக்கக் குழந்தைகளுக்கு பாரதியாரிலிருந்து கம்பராமாயணம் வரை தனக்குத் தெரிந்த நடையில் பாடல்களைப் பயிற்றுவிப்பாள். சித்தியின் மைசூர் விஜயம் எங்கள் தெருவில் எல்லோர் வீட்டிலும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு சங்கதி என்றால் பார்த்துக் கொள்! புகழ்! இதனோடு உடன் விளைவது பொறாமை. பக்கத்து வீட்டு வாசுதேவ ராவின் மனைவி பத்மாவுக்கு என் சித்தியின் மீது எப்போதும் ஒரு புகைச்சல் உண்டு.

பத்மாமாமி கும்பகோணத்துத் தமிழாசிரியரின் அருமைப் பெண். தந்தையின் தூண்டுதலால் சமய இலக்கியங்களில் பயிற்சி உள்ளவள்! அவள், என் சித்தியோடு பிரபந்தமா தேவார திருவாசகமா என்று விவாதிப்பாள். என் அம்மாவுக்கு அந்த மாமி மீது அபார மரியாதை! என்னமா தமிழ்ல அசத்தறாடா… என்று வியப்பாள். ஒரு முறை தியானத்தைப் பற்றி பேச்சு வரும்போது மாமி கூறினாள், ‘தியானம் மனசை அமைதிப்படுத்தும், சரிதான். ஆனால் மனசு அமைதியானா தானே தியானம் லயிக்கும்’ என்று. மேலும் இதைப்பற்றி கூடத் திருமுறையில் படித்த ஞாபகம், என்று புருவம் சுருக்கினாள். கோதை சித்தியோ படாரென்று ‘ஆமாம் பத்மா! திருமந்திரம் சொல்லிருப்பது போல அதைத் தெளிவாகக் கூறியவர்கள் வெகு சிலரே’ என்று அந்த அடியினைக் கூறினாள்.

“மணிக்கடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழ நாதங்கள் தாம் இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே!

மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் என்பவற்றின் நுட்பமான ஒலிகள் பத்தும் தியானத்தை மேற்கொள்பவர்க்கன்றி மற்றவரால் அறிய முடியாது. நுட்பமான ஒலிகள் அறிவது மனத்தை ஒருமுகப்படுத்தி நன்மை தீமைகளை தெளிவாக்கும் என்று விளக்கமும் கூறினாள் சித்தி.

சித்தி எப்போதும் நான்கு பேருக்கு சேர்த்தே சமையல் செய்வாள். என்னேரமும் வீட்டில் அன்னலட்சுமி நர்த்தனம் செய்யணும்னு சொல்வாள். வீட்டில் இருப்போர் உண்டது போக மீந்தவற்றை பண்டாரங்கள், மாட்டுக்காரன், இராப்பாடிகள், என வஞ்சனையில்லாமல் உணவளிப்பாள்.

யார் கண் பட்டதோ ஒரு நாள் நாங்கள் அனைவரும் ரங்கண்ணத்திட்டு சென்றிருந்தோம் வாசுதேவராவ் குடும்பத்தோடு. எல்லாம் சுகமாய் சுபமாய் முடிந்தது எனத் திரும்பிய போது, தாழம்பூ விற்கும் கிழவன் எட்டணாவுக்கு மூன்று தாழம்பூவை விற்றான்! பிரச்சனையைக் கொண்டு வந்தது தாழம்பூ என அப்போதுகூட நாங்கள் உணரவில்லை.

அன்று இரவு, தாழம்பூ பாதுகாக்கப்பட்டு மறுநாள் என் தங்கை வசுவும் பக்கத்து வீட்டுப் பெண் சரோவும் தாழம்பூ வைத்து பின்னிக் கொண்டனர். சித்தியிடம். சித்தி வாகாய்ப் பின்னிக் கொண்டிருந்தாள். அம்மா உள்ளே வேர்க்கடலை தோலியை உரித்துக்கொண்டிருந்தாள். ஏதோவோரு புத்தகத்தில் மூழ்கியிருந்த அப்பா பெண்களின் குரல் கேட்டு வெளித்திண்ணைக்கு வந்தார். தாழம்பூ வாசத்தில் கிறங்கி, ‘என்ன வாசனை, கும்முன்னு’, என்று குரல் கொடுத்தார். இதைப் பலவாறாகக் கூட்டிப் பெருக்கி பக்கத்து வீட்டு பத்மா மாமி அம்மாவிடம் வத்தி வைத்தாள். முதலில் புகையாய்த் தோன்றிய மனக்கசப்பு, விஸ்தாரமாய் நெருப்பாய் எரிய, அம்மா எங்களை அழைத்துக் கொண்டு தன் தந்தையிடம் நியாயம் கேட்க சித்தியைப் பலவாறாக ஏசியபடி காஞ்சிபுரம் சென்றது இப்போதும் வேதனையளிக்கும் விஷயம்,” என்று என் கணவர் ஆசுவாசப்பட்டுக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

“நாங்க காஞ்சிபுரம் போனோம். தாத்தா ஸ்ரீனிவாச வரதன் எங்களை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் அப்பா இல்லாமல்… மெதுமெதுவாக அம்மா விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். சித்தியோ சிலையாக மௌனம் காத்தாள். அவள் மௌனமே அவள் ஆயுதமாகத் தோன்றியது. அன்று ஸ்னானபானாதிகள் (என் தாத்தாவின் பிரயோகம்) முடித்து திண்ணையில் அமர்ந்து இருந்தோம். மாலை வரதனின் புறப்பாடு, ஏதோ உற்சவம் நடந்து கொண்டிருந்தது. வேதபாராயண பிரபந்தக் கோஷ்டிகள் களை கட்டியது எனக்கு மங்கலாக நினைவிலிருக்கிறது.

களையான முகமும் ஒடிசலான உடம்பும் கொண்ட சுமார் 40 வயது மனிதர் ஒருவர் எங்களைப் பார்த்ததும் திண்ணைக்கு வந்து அமர்ந்தார். அவருடைய கட்டையான சுருண்ட சிகைக் குடுமியும், வைரக்கடுக்கனும், பட்டு வேட்டி அங்கவஸ்திரமும் அவருடைய நேருக்கு நேர் பார்வையும் எங்களைப் பரவசப்படுத்தியது. அவர் வந்தமர்ந்ததும் ‘மாமா! கோதையைக் கூப்பிடுங்கோ நான் அவளைப் பார்க்கணும், இரண்டொரு வார்த்தை சொல்லணும்’ என்றார்.

‘கோதை! வாம்மா ராமானுஞ்சு வந்திருக்கான்! உன்னைப் பார்க்க’ என்றார் என் தாத்தா.

‘அப்பா! அவர்ட்ட பேச நேக்கு ஒண்ணுமில்ல, இது முற்றுப்புள்ளி. இதிலொரு சந்தேகமில்லை! அவரை கால காலத்தில் கரையேறச் சொல்லுங்கோ வயசாறது’ என்றாள் சித்தி உள்ளிருந்தபடியே. வந்தமர்ந்திருந்த கட்டுக்குடுமிக்காரர், மறு வார்த்தை பேசாமல் கண்ணில் தளும்பிய நீரைத் துடைத்தபடி புறப்பட்டார்.

தாத்தா அம்மா பக்கம் திரும்பினார். ‘தெரியறதா கனகா, இவன் எதுக்கு வந்தான்னு? நீ உன் உலகத்துல இருக்கே! சுத்தி நடக்கறதையும் பாரு, புரிஞ்சுக்கோ’ என்றார்.

நிச்சயம் ஆன இரண்டு மாதங்களில் கோதையின் புருஷனாக வேண்டியவன், தேவராஜன், வாழைக் கொல்லையில் பாம்பு தீண்டி இறக்க, உற்றமும் சுற்றமும், சித்தியை ராசியில்லாதவள் என முத்திரை குத்த, ஐந்து வருடங்கள் அஞ்ஞாதவாசமாய் சென்னையில் இளநிலை ஆசிரியையாய் தன் தமையன் வீட்டில் தங்கி… நீண்ட கதை அது!

அவள் கணவனாக வாய்க்க வேண்டிய தேவராஜனின் நெருங்கிய பந்து இந்த ராமானுஞ்சு. சித்திமேல் கருணையும் காதலும் கொண்டு மணக்க முன் வந்து இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறான். சித்தி நிச்சயித்த நாளிலிருந்து தேவராஜனிடம் ஒன்றி விட்டவள். காஞ்சி தேவாதி தேவன் சந்திதியில் பிரபந்தக் கோஷ்டியில் இவர்களுக்கெனத் தனியிடம் அமையப் பெற்றது. பிரபந்தம் மனனம் செய்வதில் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சி, காதலும் கவிதையும் தேவனின் சந்நிதியில் பரிமளித்தது யார் கண் பட்டதோ, இல்லை பிறப்பிலேயே முடிவு செய்யப்பட்டதோ, எல்லாம் கனவாய் மறைந்தது.

அன்றிலிருந்து பூவோடும் பொட்டோடும் பட்டும் படாத துறவறம். உடலில் எண்ணை தடவியது போல் மனதில் தாமரை இலைத் தண்ணீர் வைராக்கியம் எந்தவொரு புலம்பலும் குறையும் நிறையும் பொருட்படுத்தாத பரிபூர்ணம்.

‘எப்படி சித்தி! எப்படி உன்னால யாரு மேலயும் குற்றம் காண முடியலை, யார் சொல்லிக் கொடுத்தா?’ என்று நான் கல்லூரியில் படிக்கும்போது கேட்டிருக்கிறேன்.

‘அந்த பகவான்தான்டா சொன்னான்- எவனிடமிருந்து உலகம் துன்புறுவதில்லையோ, மேலும் எவன் உலகத்தினிடமிருந்து துன்புறுவதில்லையோ தவிர எவன் மகிழ்ச்சி, சினம், அச்சம், மனக்கிளர்ச்சி இவற்றின்று விடுபட்டவனோ அவன் எனக்குப் பிரியமானவன் என்று பகவான் கீதையிலே சொன்னதைத்தான், நான் பின்பற்றுகிறேன். இன்பமும் இல்ல, துன்பமும் இல்ல’ என்றாள் சித்தி.

‘நான் அவனுக்குத்தான் பிரியமானவளாய் இருக்கணும்டா, அதிலேயே எல்லாம் அடங்கிவிட்டதில்லையா?’ என்றாள் கோதை சித்தி. நான் பிரமிப்பித்துப் போய் விட்டேன்,” என்று முடித்தார் என் கணவர்.

கார் வீட்டு வாசலில் நிற்கவும், மாமனார் கேட்டைத் திறந்தார். “வாடா! உனக்காகத்தான் காத்துண்டிருக்கோம். இன்னிக்கு ஆடிப்பூரம்! ஆண்டாள் திருநட்சத்திரம்! நம்ம வைஜு பிறந்த ஜன்மம நட்சத்திரம்! நம்மாத்து ஆண்டாளுக்கு உன் சித்தி இதோ இந்த மோதிரம் பண்ணி வைச்சிருக்கா பாரு!” என பரபரத்தார்.

சித்தி என் மாமியாரின் கட்டிலருகில் பளிச்சென்ற புடவையும் ஸ்ரீசூரணமும் அணிந்து பிரபந்தம் வாசித்துக் கொண்டிருந்தாள்-

வானிடைவாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடையாழி சங்கு உத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என்தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!