மழை – கவிதைகள்

காகிதக்கப்பல்

மழை
விட்டதறிந்து
சன்னல்களூடே
சந்தித்துக்கொள்கிற
எதிரெதிர்
வீட்டுச்சுட்டிப்பயல்களின்
கண்களில்
நிலைத்துவிட்டது
மின்னலின்
ஒளி

ஆர்ப்பரித்துத்தெருவுக்கு
வரும்
அவர்தம்
கைகளில் தவழ்கின்றன
நூற்றுக்கணக்கில்
கப்பல்களை
தம்முள்
பதுக்கி வைத்திருக்கும்
எழுதித்தீர்ந்த
நோட்டுப்புத்தகங்கள்

பிஞ்சு
விரல்களால் தாள்கள்
கிழிபடுவதிலிருந்து
துவங்குகிறது
காகிதம்
தவிர
உதிரி
பாகங்கள் எவையுமின்றி
கப்பல்கள்
கட்டும் பணி
ஆயிற்று
..
மழை
நீரின் ஓட்டத்தில்
மெல்ல
உந்தப்பட்டு நகர்கிறது
மாலுமியொருவன்
செலுத்துவதன்
நிர்பந்தங்களேதுமற்ற
கப்பல்களில்
முதல்
கப்பல்

மேலும்
நகர்கிறது,

சிறுவர்களின்
பார்வையிலிருந்து
மறையும்வரை
பயணப்பட்டு
ஈரலித்தலினிமித்தம்
அவிழ்தலில்
மழை
நீருடன் தன்னை
காகிதமாகவே
சமரசம்
செய்துகொள்வதை நோக்கி.

ப.தியாகு

******

மதில்மேல் பெய்த மழை

விழுந்ததும் மலர்ந்துவிடுகிற
விதைகளைத் தூவியபடி
மதில்மேல் பெய்கிறது மழை
காணாததைக் கண்டதாய்
ஏந்த நீளும்
விரல்களுக்கு அகப்படாமல்
உள்ளங்கையிலும் மலர்த்தி வழிகிறது
இந்தப் பொல்லாத மழை.

ராஜா

******

மழை, காலம்

மேகங்கள் கீழிறங்கி தெருக்களில் நடக்கின்றன,
வீடு, ஜன்னல்களை வேகமாக அசைத்து
பறக்க முயற்சிக்கிறது.
தோட்டத்தின் சிறு கைகள்
மேல் நோக்கி எம்புகின்றன.
அவசரத்தில்,
மேகங்கள் இடித்துக்கொண்டு,
சிரித்துக்கொள்கின்றன.
மகிழ்ச்சியின் கனம் தாங்காது,
தள்ளாடும் தென்னைகள்,
தேங்காய்கள் உதிர்க்கின்றன.
பெருங்காற்று முற்றத்தை
கடந்துவிட்டது.
இன்னும் சில நிமிடங்களில்
வந்துவிடும் என,
தரைக்கும் கூரைக்குமாய்
குதித்துக்கொண்டிருக்கிறேன்.

-o00o-

அடைந்த வீட்டினுள்
நானும் மழையின் சத்தமும்.
மழை பெருக பெருக
வீடு மௌனமாகிறது.
சுவர்களெல்லாம் வேர் விரித்து
வளர்ந்துகொண்டேயிருக்கிறது
போதி மழை.
சத்தம் மழையென பெய்யும்போது
நானும் வீடென நனைகிறேன்.

-o00o-

நான் இருக்குமிடம்a_1
என் உலகம்.-மற்றது,
நான் இல்லாத உலகம்.
என் அலுவலக அறைகள்
சுவர்களாலானவை.
சுவர்களுக்குள் சூரியன்
விடிவதுமில்லை, மறைவதுமில்லை.
முட்கள் மட்டுமே
நகர்ந்துகொண்டிருக்கின்றன.
வெளியே,
நனைந்திருக்கும் சாலைகளில்,
மழை என்றும்
பெய்து முடிந்திருக்கிறது.

ச.அனுக்ரஹா