20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 21

எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) (1905 – 1940s)

03) இயல்பு வாழ்க்கையில் கட்டிடமும் வண்ணமும்

(BAUHAUS 1919-1933)

(Bauhaus: Bau=Building {Bauen=To Build} + Haus=House)

1919இல் கட்டிடக் கலைஞர் வால்டர் க்ரோபியஸ் (Walter Gropius) ஓவியர்களையும் கைவினைக் கலைஞர்களையும் இணைத்து ஒரு சங்கம் நிறுவினார். (Guild of Craftsmen without class Distinction) இரு பிரிவினரிடமும் எவ்வித ஏற்ற தாழ்வும் இல்லாத ஒரு அமைப்பாக அது இயங்கியது. கலையின் மைய ஓட்டத்திலிருந்து விலகி து ஸ்டைல் (De Stijl), கன்ஸ்ட்ரக்டிவிஸம் (Constructivism), சுப்ரீமடிஸம் (Supermatism) போன்ற சிந்தனைகளில் பயணித்தவர்களின் நோக்கங்கள், அணுகு முறைகள், கோட்பாடுகள் போன்றவை அங்கு பயிலும் பாட திட்டமாக அமைந்தன. உலகெங்கும் கட்டிடக் கலையின் வளர்ச்சியும், அணுகுமுறையும், அதன் தாக்கத்தால் பெரும் மாற்றங்களை ஏற்றன.

பள்ளியின் தொடக்கமும், குறிக்கோள்களும்

சமகாலக் கட்டிடக்கலை ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஒரு புதிய பொலிவைப் பெறத் தொடங்கியது. வைமா(ர்) (Weimar) நகரில் 1919இல் நிறுவப்பட்ட பாவ்ஹவ்ஸ் (Bauhaus) பள்ளியின் தாக்கம் வலுவானதாக இருந்தது. லூட்விக் மீஸ் வான் டெர் ரோஹ் (Ludwig Mies Van der Rohe) என்னும் கட்டிடக் கலைஞரின் வழிகாட்டுதலுடன் பள்ளியின் பாணி உலகின் மூலைகளுக்கும் பரவியது. இன்று அதன் அடையாளங்களை நாம் எங்கும் காணலாம். அப் பள்ளியின் தலையாய இலட்சியம் கட்டிடக்கலையைப் புதுப்பிப்பது. அப்பள்ளியின் பயில்விப்பு முறை முந்தைய முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. கற்பித்தல் என்பது நவீன அனுபவம் சார்ந்த அறிவாற்றலைக் கொண்டதாக விளங்கியது. “ஒரு கலைஞன் தனது சமூகம் சார்ந்த பொறுப்பை உணர்ந்தவனாக இருக்க வேண்டும். அவ்விதமே, சமூகமும் கலைஞனைப் போற்றி அவன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்” என்பது அப்பள்ளியின் கோட்பாடாக அமைந்தது.

இவற்றுக்கு மேலாக, அக்கல்வி கலைஞனின் படைப்புத் திறனை, தொழிலை வளர்க்கவும், கலையழகும், படைப்பு நுட்பமும் ஒருங்கிணந்த பயன்பாட்டுப் பொருள்களை (Utensils) உற்பத்தி செய்யவும் ஆயத்தம் செய்தது. பள்ளி வளாகம் நூதன அமைப்புக் கொண்ட வீடுகள், அனைத்து விதமான பயன்பாட்டுப் பொருள்கள், விளம்பரக்கலைப் பகுதி, அரங்க நிர்மாணம், புகைப்படக் கலை, அச்செழுத்து வடிவக்கலை (Typography) போன்ற பல்வித பயில் வளாகங்களைக் கொண்டிருந்தது. அங்கு காண்டின்ஸ்கி, பவுல் க்ளீ (Kandinsky, Paul Klee போன்ற புகழ்பெற்ற ஓவியர்கள் ஆசிரியராகப் பணியாற்றினர்.

பள்ளியில் ஒவ்வொரு மாணவனும் தொடக்க நிலைக் கல்வியைக் கட்டாயம் முடிக்கவேண்டும். பின்னரே அவன் தான் விரும்பும் துறை சார்ந்த மேற் கல்வியைத் தொடரமுடியும். பள்ளியில் உலோக வேலைப்பாடு, மரச் சிற்பம் செதுக்குதல், கண்ணாடி ஓவியம், தறி நெய்தல், பானை வனைதல், தச்சகம், புடைப்புக் கலை, எழுத்துக் கலை, சுவர் ஓவியம் என்பதாக ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தொழிற் கூடங்கள் இருந்தன. மாணவன் அவற்றில் ஒன்றைத் தனது விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து, பயிற்சி பெற்று, வெளியேற முடிந்தது.

பள்ளியின் நோக்கம் பற்றிய புரிதலுக்கு நாம் வாய்டர் க்ரொபியொஸ் (Walter Gropius) இன் உரையிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

“அனைத்துப் படைப்பு இயக்கங்களும் முடிவில் கட்டிடக் கலையில் சென்று சேர்கின்றன. கட்டிடக் கலை ஒரு காலத்தில் நுண் கலையின் மதிப்புமிக்க பகுதியாக விளங்கியது. நுண்கலையும் கட்டிடக் கலையும் பிரிக்க முடியாதவை. இன்று அவை தனித்து, தொடற்பற்று, வெவ்வேறாகச் செயற்படுகின்றன. சிற்பிகள், ஓவியர்கள், கட்டிடக்கலைஞர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். கட்டிடக் கலையில் அவை மூன்றும் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் கைவினைக் கலையின் பாற் நமது பார்வையைச் செலுத்த வேண்டும். நம்முள் எந்தவித வேறுபாடோ ஏற்ற தாழ்வோ கிடையாது. ஒரு ஓவியன் அல்லது சிற்பி சிறப்புமிக்க கைவினைக் கலைஞனும் கூட. எனவே நாம் ஒரு புதிய சங்கம் அமைப்போம். நம்மிடையில் எழுப்பப்பட்டிருக்கும் சுவரை உடைத்துத் தள்ளுவோம். ஒன்றிணைந்து எதிர் காலத்தை நோக்கிப் பயணப் படுவோம்.”

ஆனால், இவ்வித நவீனபாணிப் பள்ளியை நிறுவி இயக்குவது என்பது எளிதாக இருக்கவில்லை. தொடக்க முதலே அரசியல் குறுக்கீடு என்பது உணரப் பட்டது. 1925 இல் அப்போதைய ட்யூரிங்ஙர் அரசு (Thüringer
Government) பள்ளிக்கு அளித்துவந்த உதவித்தொகையை நிறுத்தி விட்டது. பள்ளி டெஸ்ஸாவ் (Dessau)  நகருக்கு இடம் பெயர்ந்தது. நகர உறுப்பினர்கள் பள்ளிக் கட்டிடத்துக்குத் தேவையான நிலம் கொடுத்து, கட்டிடமும் தொழிற்கூடமும் கட்டிக் கொடுத்தனர். இன்றும் அது வரலாற்றுப் புகழ்மிக்க சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

1926 ஆம் ஆண்டில் பள்ளி நிலம் அரசால் முறையாகப் பதிவு செய்யப் பட்டது. அங்கு பயில்வித்த ஆசிரியர்கள் பேருரையாளராகப்  பதவி உயர்வு பெற்றனர். பள்ளிக்கு ‘ஸ்கூல் ஆஃப் டிசைன்’ (“School of Design”) என்னும் புதிய பெயர் சூட்டப் பட்டது. அதன் கல்வி முறை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேர்வு பெற்றவருக்குப் பட்டயமும் வழங்கப்பட்டது.

பள்ளியின் வீழ்ச்சியும் முடிவும்

தனிப்பட்டவர்களின் உணர்வுகளின் காரணமாக, அங்கு பயில்வித்த கலைஞர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும், விரோதமும் வளர்ந்தன. பவுல் க்ளீ போன்றோர் அங்கிருந்து விலகிக் கொண்டனர். கண்டின்ஸ்கி, ஆல்பர்ஸ் (Albers)  போன்றோர் நிறுவனத்துக்கு விசுவாசமானவர்களாக 1933 இல் அது மூடப்படும் வரை பணி புரிந்தனர்.

1932 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஹிட்லரின் நாஜி கட்சி டெஸ்ஸாவ் நகரில் பெரும்பான்மை பெற்றுவிட்டது. பள்ளிக்கு பிடித்தது சனி. பள்ளியின் இயக்குனரை நீக்கிவிட்டு அரசு புதிய இயக்குனரை அமர்த்தியது. பள்ளியில் அது வரை பயில்வித்து வந்த பன்முகக் கல்வி என்னும் ‘குப்பை’யை அகற்றி, பதிலாக ‘கலப்பற்ற’ ஜெர்மன் கலையை நிறுவுவதே அதன் நோக்கமாக இருந்தது. பள்ளிக்கு அளித்து வந்த உதவித் தொகையும் நிறுத்தப்பட்டு விட்டது. வேறு வழியின்றி 1932 இல் பள்ளியை பெர்லின் நகருக்கு எடுத்துச் செல்ல நேர்ந்தது. பள்ளியின் இயக்கம் செயலிழந்து அங்கு அது ஒரு தனியார் நிறுவனமாக ஆகி விட்டிருந்தது. அப்படியும், நாஜி அரசாங்கத்தின்  வெறுப்பு காரணமாக ஏப்ரல் 11, 1933ஆம் ஆண்டு காவல் துறை பள்ளியை ஒட்டு மொத்தமாக மூடிவிட்டது. 1937இல் அரசு ‘தரமிழிந்த படைப்புகள்’ என்று அடையாளப்படுத்தி ஏராளமான ஓவியங்களை அருங் காட்சியகத்திலிருந்தும், ஓவியக் கூடங்களிலிருந்தும் அகற்றிக் காட்சிப்படுத்தியது. பின்னர் அவை அழிக்கப்பட்டு விட்டன. அவற்றில் பல பள்ளியின் ஆசிரியர்களுடையதாக இருந்தன.

ஆனால், பள்ளியின் செல்வாக்கையும் புகழையும் எவ்வளவு முயன்றும் நாசி அரசால் அழிக்க முடியவில்லை. நாடு கடத்தப்பட்ட பல கலைஞர்கள் பாரிஸ், இங்கிலாந்து, நியூயார்க் போன்ற நகரங்களுக்கு சென்று தொடர்ந்து பள்ளியின் புகழ் பரப்பினார்கள். 1937 இல் சிகாகோ நகரில் அதே பெயருடன் ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. 1950 களில் அது ‘இல்லினாய் தொழில் நுட்ப நிலையம்’ (Illinois Institute of Technology) என்னும் நிறுவனத்துடன் இணைந்தது. அவ்விதமே, 1939 இல் பாரிஸ் நகரிலும், 1945 இல் இங்கிலாந்திலும், அந்தக் கல்விவழிப் படைப்புகளுக்குக் களம் ஏற்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் விளைவாக அது வரை பாரிஸ் நகரில் நிலை கொண்டிருந்த கலை மையம் அங்கிருந்து இடம் பெயர்ந்து நியூ யார்க் நகரில் நிலை கொண்டது. 1950 களில் அந்நகரம் நவீன கலை உத்திகளுக்கும், அரூப கலை வெளிப்பாடுகளுக்கும் உகந்த களமாக உணரப்பட்டது. பாப் ஆர்ட், ஓப் ஆர்ட் (Pop Art, Op Art) போன்ற நவீன உத்திகள் தோன்றி, மக்கள் கலையாக விரிவடைந்தன.

[DDET ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]
01-bauhaus-movement02-bauhaus-manifesto-image03-cradle-by-peter-keler04-typography05-the-bauhaus-and-de-stijl06-nude-by-sharka07-by-paul-smith08-teapot09-chair10-lamp11-chessmen12-sink-a-creation-by-bauhaus-movement
[/DDET]
(தொடரும்)