சீனா – சவால்களும் குற்றச் செயல்களும்

இடம்பெயர்தலால் குற்றங்கள் நடப்பது கூடுகிறதா? சீனாவில் உலகிலேயெ பெரும் எண்ணிக்கையில் தனி மனிதர்களும், குடும்பங்களும் இடம் பெயர்கின்றன. மிகக் குறுகிய காலத்தில் நடந்திருக்கும் இந்தப் பெரும் எண்ணிக்கையுள்ள இடப்பெயர்ச்சிக்குச் சீன அரசும், சமூக அமைப்புகளும் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன. இதனால் சமூகத்தில் கட்டுப்பாடு தளர்ந்து, குற்றச் செயல்கள் கூடி விட்டனவா என்று கிட்டும் தகவல்களை வைத்துப் பார்க்கிறார் ஜெயந்தி சங்கர்.

சீனா-சில வரலாற்றுத் தகவல்கள்

சீனச் சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மிகக் குறைவாக இருந்த 1966-1976களில் இடப்பெயர்வுகளும் தொழில்மயமாதலும் இருக்கவில்லை. அப்போதெல்லாம் குடிபெயர்தல் 100,000க்கு 60 என்ற விகிதத்தில் தான் இருந்திருக்கிறது. அதற்கு முன்பு 1954-1961களில் 64-65 என்றிருந்த அதே எண்ணிக்கை குறைந்திருப்பதைக் காண முடிகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர், பொருளாதாரத் தேக்கம் உருவான போது தேசியத் தலைவர்கள், “கருப்போ வெள்ளையோ எந்த நிறமென்றாலும் எலியைப் பிடிக்கும் பூனை தான் மிகச் சிறந்தது”, என்று மேடைகளில் முழங்கினர். அதை விட ஒருபடி மேலே போய், “பணக்காரராவது தான் வாழ்வின் வெற்றி”, என்றும் சொன்னார்கள்.[1] இதெல்லாம் தேசத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிந்தன. ஆனால், மக்களிடம் பொருள் வளத்துக்கான பேரவா மிகவும் கூடி, அதை நாடி நடந்த இடப்பெயர்வுகள் மிகவும் அதிகரித்து, குற்றச் செயல்கள் கூடுவதற்கும் வழி விட்டன.

1970களின் இறுதியிலிருந்து தான் விவசாயத் துறையில் எந்திரங்கள் நுழைந்தன. தொழில்முறை விவசாயம் துவங்கி விவசாயத்தில் ‘மேம்படுத்தல்’ ஏற்பட்டது. ஒரு விளைவாக, விவசாயத் தொழிலாளிகளுக்கு வேலை மிகக் குறைந்தது. அதே நேரம் ஓரளவு வாழ்நிலையில் மேம்பாடு ஏற்பட்டதாலோ என்னவோ மக்கள் தொகைப்பெருக்கமும் ஏற்பட்டது என்று சொல்லலாம். இந்த இரண்டு போக்குகளின் கூட்டால், குற்றங்கள் நடப்பது அதிகரித்தது எனப்படுகிறது.

1984ல் தான், பேரூர்களுக்கும் நகரங்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களால் இடம்பெயர முடிந்தது. 1984 கணக்கெடுப்பின் படி 95 மில்லியன் கூடுதல் தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்தனர். 1986ல், 114-152 மில்லியனாக உயர்ந்து 1990ல் 170 மில்லியனைத் தொட்டது இந்த எண்ணிக்கை. 1994லில் 200 மில்லியனாகவும் 2000ல் 300 மில்லியனாகவும் இந்த விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகியது. இந்த வருடங்களில் சீனாவின் நகரமயமாக்கலும் கூடியே வந்துள்ளது.

இடப்பெயர்வுகளை முற்றிலும் நிறுத்தாமல் கட்டுப்படுத்துவது தான் சீனாவுக்கு ஏற்றதாக இருந்தது. ஏனெனில், நகரமயாகி வரும் அந்நாட்டுக்கு தொழிலாளிகள் வேண்டித் தான் இருக்கிறார்கள். 1985ஆம் ஆண்டில் பேய்ஜிங்கின் எட்டு பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மொத்த வெளியூர்காரர்கள் 662,000. இது மொத்த மக்கள் தொகையில் 12.5%. ஒவ்வொரு நாளும் பேய்ஜிங்கிற்குள்ளேயும் வெளியேயும் போய்வருவோர் 880,000 பேர். 1986ல், இதை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த சில விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன. பேய்ஜிங்கில் மூன்று தினங்கள் வரை தங்கும் வெளியூர்காரர்கள் கண்டிப்பாக முன்பே அனுமதிக்குப் பதிய வேண்டும். அதற்கு மேல் தங்க நினைப்பவர்கள் தற்காலிக வாச உரிமைக்கு விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

இடம்பெயர்தல், விளைவுகள், குற்றங்கள்

மேலைச் சிந்தனையின் வரவும் தாக்கமும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் கொணர்ந்தது என்பது ஒருசாரார் கருத்து. ஆய்வாளர்களோ இடப்பெயர்வுகள் கூடியதும், மிதந்து திரியும் மக்கள் தொகை அதிகரிப்பும் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர். இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கும் குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கும் உள்ள தொடர்பு சிக்கலானது என்று நாம் அறிவோம்.

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.

கிராமத்திலிருந்து வருபவருக்கு குடும்ப மற்றும் உற்றார் உறவினர், ஊர்வாசிகளின் மரபார்ந்த ஆதரவுகள் எதுவுமே இருப்பதில்லை. ஊரில் இருக்கும் வரை தம் மீது பூசியிருந்த வறுமையின் வண்ணம் தனித்துத் தெரிந்ததில்லை. நகரில் அது பளீரென்று கண்ணை உறுத்துகிறது. நகரின் வாழ்க்கைமுறைகள், மாறிவரும் விழுமியங்கள் எல்லாமே இவர்களைக் குழப்பத்தில் தள்ளுகின்றன. பொருளாதாரத் தேடலின் அடிப்படையில் மட்டுமே நகருக்கு வரும் இவர்கள் இயல்பாகவே பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேர்கிறது. இயல்பற்ற சூழலும், சமூக ஆதரவின்மையும், பிரச்சினைகளின் நெருக்கடியும் சேர்ந்து குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கின்றன.

கிராமத்திலிருந்து புறப்படும் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோரது இடப்பெயர்வுகள் பருவமாற்றத்தைப் பொருத்தே அமைகின்றன. இவர்கள் சராசரியாக ஆண்டுக்கு ஏழெட்டு மாதங்கள் சொந்த ஊரையும் வீட்டையும் விட்டு விலகியிருப்பார்கள். வசந்தகாலத்தில் வரும் சீனப்புத்தாண்டுக்கு தான் பெரும்பாலோர் கிராமத்துக்கே திரும்புவர். அதன் பிறகு, அறுவடைக்கும் விதைப்புக்கும் கிராமத்தில் இருப்பார்கள். விதைப்பானதும் மீண்டும் நகரங்கள் நோக்கிக் கிளம்புவார்கள். சிலர் புத்தாண்டுக்குத் திரும்பும் எண்ணமில்லாமலோ வர முடியாமல் நகரிலேயே மாட்டிக் கொள்வதுமுண்டு. சொந்த கிராமத்துக்குப் போக நினைத்தாலும் மூன்று நாட்கள் வரை பயணத்திலேயே போய்விடும்.

இடம் பெயர்ந்தோரின் வாழ்க்கையில் குற்றம் என்பது சர்வ சகஜமாக அரசின் விதிமுறைகளின் கடுமையாலேயே, இறுகலான வார்ப்பாலேயே துவக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது சீன அரசுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் அந்த அரசின் தொலை நோக்குக்கு இந்த மக்களின் தற்காலிக அவசரங்கள் இடையூறாகவே கருதப்படுவதால் அரசு அப்படி ஒரு இறுகல் தன்மையைக் கைக்கொள்கிறது என்பதே பிரச்சினையின் ஆணி வேர்.

குடியுரிமை கொடுப்பதில் அரசு தன் மக்களையே நம்புவதில்லை, அவர்களுக்குச் சீன மக்கள் என்ற பெயர்தான் இருக்கிறதே தவிர ஒரு ஊரைத் தவிர வேறெங்கும் சென்று வாழ அவர்களுக்கு உரிமை கிட்டுவதில்லை. கருத்தியல் ரீதியாகவும், நடப்புஅரசியல் பார்வையாலும் மக்களைக் கட்டுப்படுத்தி கருவிகள் போலப் பயன்படுத்துவதே தக்க அணுகுமுறை என்று எண்ணும் ஒரு கட்சி அதிகாரத்தில் உள்ளது. அது வேறெந்த மாற்று அரசியல் நிறுவனங்கள்/ அமைப்புகள்/ முயற்சிகளையும் நாட்டில் வேரூன்றவோ, வளரவோ அனுமதிப்பதில்லை. அப்படிப் பட்ட ஒரு கட்சி, அரசும் தானும் ஒன்றாகவே இருக்கும் ஒரு அமைப்புக்கு, மக்களுக்குச் சுயேச்சையாகச் செயல்படும் உரிமையை, விருப்பப் பட்ட ஊர்களில், இடங்களில் வாழும் உரிமையைக் கொடுக்க விருப்பமிருப்பதில்லை.

அரசு தராத உரிமையைக் கேட்டுப் பெறவோ, அல்லது விண்ணப்பித்துப் பெறவோ ஒற்றைக் கட்சி ஆட்சியே எங்கும் உள்ள நாட்டில், வேறு வழிகள் மிகக் குறைவாகவே உள்ள ஒரு அடைத்த நிலையே நாட்டின் அரசியல் வடிவம். இந்த வகையில் வேறு கதவுகளோ, ஜன்னல்களோ இல்லாத ஒரு அடைப்பு நிலையில் மக்கள் வெள்ளம் எப்படியோ வாழ்ந்தாக வேண்டியதால் பெருவாரி மக்கள் சட்டத்தை மீறி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். அதன் பிறகு குற்றம் புரிதல் என்பது ஒன்றும் பெரிய பிரச்சினையாக அவர்களுக்குத் தெரியப் போவதில்லை. குற்றம் என்பதில்தான் எத்தனை படிகள் உள்ளன, அவர்களின் பார்வையில் அன்றாட அத்துமீறல்கள், வாழ்க்கைக்கு உதவாத, வளைந்து கொடுக்காத அரசு விதிகளில் பலவற்றையும் தம்மால் ஆன வரை வளைத்துக் கொள்வது அல்லது கண்டு கொள்ளாமல் தம் போக்கில் செயல்படுவது போன்றன வாழ்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகள்.

உதாரணமாக, உள்ளூரில் வாங்கியிருக்க வேண்டிய தற்காலிக அல்லது நிரந்தர வசிப்புரிமை அடையாள அட்டை இல்லாவிட்டால், எப்போதும் பதட்ட நிலையிலேயே வாழ வேண்டியிருக்கிறது. குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்தாவது அதை வாங்கி வைத்திருப்பவர்கள் நிலை சற்றே சகிக்கக் கூடியது. இல்லாதவர்கள், பிடிபட்டால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், சில நாட்களோ, வாரங்களோ காவலில் இருக்க வேண்டும். பெரும்பாலான தொழிலாளிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் வசதி இருப்பதில்லை என்பதே நிதர்சனம்.

ஒரு கட்டிடத் தளத்திலிருந்து இன்னொன்றுக்குப் போகும் குழுவுடன் போகும் தொழிலாளிகள் புறம்போக்கு நிலங்களில் தாமே கட்டிக் கொள்ளும் தற்காலிக கூடாரங்கள், கண்டெயினர்கள் என்றே தங்க வேண்டியுள்ளது. கட்டிடத் தளங்களில் இருக்கும் தங்குமிடங்களில் 10 மீட்டர் நீள கூடத்தில் 40 பேர் அடைந்து படுத்திருப்பதைக் காணலாம். இடம்பெயர்ந்த இடத்தில் நீண்ட காலம் வசிப்போரில் முறையான அடையாள அட்டை இருப்பவர்கள் தான் தொழிலாளர் குடியிருப்புகளில் வசிப்பர்.
சில கட்டிடத் தளங்களில் ஒரே படுக்கையை வெவ்வேறு வேலைநேரத்தில் பணியாற்றும் 2-3 தொழிலாளிகள் மாறி மாறிப் படுத்துறங்கப் பயன்படுத்துவர். பொதுப் பூங்காக்களின் திறந்தவெளியில் கிடைக்கும் நீள் இருக்கையிலோ புல்வெளியிலோ கிடைப்பதைப் பொருத்து படுத்துறங்கிப் பிழைப்போர் நிறையவே பெருநகரங்களில் இருக்கிறார்கள். சில இணையகங்களில் (internet cafe) ஓர் இரவுக்கு $2 வாடகைக்கு படுத்துறங்க இடம் விடுவதுண்டு. உயர் அடுக்ககக் கட்டடங்களின் தரைத் தளம் அல்லது வாகனங்களை நிறுத்தும் நிலத்தடித் தளங்களில் $42 மாத வாடகைக்குத் தங்குவோரும் உளர். பேய்ஜிங்கில் தெருவோரங்களில் நின்றபடியும் குந்தியபடியும் உணவுண்ணும் தொழிலாளர்களைக் காண்பது மிகவும் சகஜமான காட்சி. கையேந்தி பவன்களில் நின்றவாறே $0.14க்கு கிடைக்கும் ஆட்டுக்குடல் சூப்பு குடிப்போரையும் பெருவாரியாக நாம் காணலாம்.

இடம்பெயர்ந்து நகரங்களுக்கு வரும் தொழிலாள சமூகம் எல்லாவற்றையும் விட அதிகமாகச் சந்திப்பது சமூகத்தில் பெருகும் குற்றச் செயல்களை. இடம்பெயர்ந்தோர் சமூகமும் குடியிருப்பும் இரண்டு முக்கிய காரணங்களினால் உருவாகி வளர்ந்தன. 1978லிருந்து நடந்த தேசிய அளவில் பொருளாதார மறு ஆக்கம். மற்றொன்று, அரசின் கோட்பாடுகள் மற்றும் சட்டங்களை சீனக் குடிமக்கள் அணுகும் முறை.
பேய்ஜிங்கில் மட்டும் 1995-1997 வரையிலான காலகட்டத்தில் பேருந்துகளில் நடந்த பிக்பாக்கெட்டுகள் 10,000. இதிலும் இடம்பெயர்ந்தோரே முக்கிய குற்றவாளிகள். பேய்ஜிங்கின் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில், 1986ஆம் ஆண்டின் கணக்குப் படி அடைத்து வைக்கப்பட்டோரில் 18.5% பேர் மிதந்தலையும் விவசாயத் தொழிலாளிகள். 1990ல் 22.5%, 1992ல் 37.6%, 1993ல் 43%, 1994ல் 50% என்ற ரீதியில் இந்த எண்ணிக்கையும் வருடப்போக்கில் கூடிவந்திருக்கிறது. சில பெருநகரங்களில் 70% வரை கூடியுள்ளது.

1980களிலும் 1990களிலும் குற்றங்களின் எண்ணிக்கை கூடிவந்த போது இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் 1988ல் இருந்த 18.7%லிருந்து 1994ல் 33%க்கு எகிறியது. அப்போது கடற்கரையோர நகரங்களின் முகமே முற்றிலும் மாறியது. கொள்ளை மற்றும் திருட்டுகளுக்கு எதிரான பாதுகாப்புக்காக நகரவாசிகள் அவரவர் வீடுகளில் மர gateயை அகற்றி விட்டு இரும்பு கிராதிக் கதவுகள் பொருத்தினர். குவாங்ஜோவ் போன்ற நகரங்களில் 90% வீடுகள் சிறை போன்ற அடுக்ககங்களளாக இருந்தன.
சூதாட்டம், விபசாரம், போதைப் பொருள் போன்ற தளங்களில் சண்டை மற்றும் வன்முறை குற்றங்களும் இடம்பெயர்ந்தோர் வசிக்கும் குடியிருப்புகளில் தான் அதிகம் என்று கண்டறிந்திருக்கின்றனர். 1990 முதல் 1995வரையிலான வருடங்களில் பேய்ஜிங் நகர நீதிமன்றத்திலும் அதே தான் கண்டறியப்பட்டது. 1990ல் வழக்காடப்பட்ட குற்றச் செயல்களில் 12.5% இடம்பெயர்ந்த வெளியூர்வாசிகளின் கைங்கரியம். 1991ல் 13.6%, 1992ல் 22.6%, 1993ல் 20.65, 1994ல் 25.9, 1995ல் 34.1% என்று தொடர்ந்து மேலேறுகிறது இந்த எண்ணிக்கை.

விவசாயத் தொழிலாள வர்க்கத்தினர் குற்றம் புரியும் போது அதிகாரிகள் கொடுக்கும் தண்டனையும் குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்தே அமைந்து வருகிறது. 1990ல் 42.4% குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதுவும் 1991ல் 41.4%, 1992ல் 44.6%, 1993ல் 50.3%, 1994ல் 63.7% என்று கூடியபடியே இருக்கிறது. பெருந்திருட்டு, கொலை, போதை பொருள் கடத்தல், மோசடி, கொள்ளை, அடித்துக் கொலை, கொடுங்கொலை, போன்ற தீவிரக் குற்றங்களும் 1993ல் 98 (28%), 1994ல் 128 (32%) என்று கூடியே வருகின்றன.

சீனா 1979 முதலே சீரான 10% பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம், சமூகத்தில் குற்றங்களின் அதிகரிப்பும் மிக அதிகமாகவே இருந்து வந்துள்ளது. நகரமயமாதல் இடப்பெயர்வுகளுக்கும், இடப்பெயர்வுகளும் மக்கள் தொகை அதிகரிப்புக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுத்தன. மிகவும் பேராசையுடன் சீனா தனது பொருளாதாரத்தை உயர்த்தத் தலைப்பட்ட போதே தலை வலியும் தொடங்கியது. எதிர்பாராத எண்ணற்ற பல விளைவுகள் முளைத்தன. அதில் முக்கியமானது ஏழை-பணக்காரர்களுக்கிடையில் இருந்த இடைவெளி மேலும் வளர்ந்தது தான். இந்த ஏற்றத் தாழ்வுகள் தான் சமூகத்தில் பெரும்பகுதி குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணமாகிறது.

பெரும்பாலும், குற்றச்செயல்கள் சிறியது முதல் பெரியது வரையிலான திருட்டுகள் தான். பொருள்கள் களவு போவது தவிர, கொலை, கும்பலாகக் கொள்ளையடித்தல் போன்றவையும் நடக்கின்றன. கூட்டாகச் செய்யும் குற்றங்கள் மொத்தத்தில் 23%. இவை பெரும்பாலும் குடும்பமாகவோ உள்ளூர்வாசிகளின் தொடர்பு அல்லது ஒத்துழைப்பாலோ தான் நடக்கின்றன.

சொந்த நாட்டிலேயே இரண்டாம் குடிமக்களாகவும் அல்லது அகதிகள் போலவும் வாழவேண்டியிருப்பது மிகக்கொடுமையாகவே இருக்கிறது. பெரும்பாலான சட்டத்திருத்தங்கள் சிற்றூர் மட்டத்திலே தான் செய்யப்படுகின்றன. இடம்பெயர் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் ஸிச்சுவான் மாகாணத்திலிருந்து தான் வருகின்றனர். மத்திய அரசும் இங்கிருக்கும் நகரங்களில் முதலீடுகள் நிறையச் செய்கிறது. சில ஊர்களில் தான் இடம்பெயர்ந்தோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சுகாதார மற்றும் கல்விச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் தலைநகரை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதில் முக்கியமான பிரிவினர்கள் விளைநிலத்தை நகரமயமாக்கலுக்கு தாரை வார்த்து விட்டு, பதிலுக்குக் கிடைக்க வேண்டிய வீடோ, நிலமோ கிடைக்காதவர்கள். கிராம மற்றும் மாவட்ட அளவில் நீதி கிடைக்காத பரிதாபத்துக்குரிய இவர்கள் வழக்கை உயர்நீதி மன்றத்தில் பதிந்து விட்டு வழக்கு முடியும் வரை தலைநகரிலேயே தங்க வேண்டியிருக்கிறது. 500 வழக்குக்கு ஒரு வழக்கு என்ற விகிதத்தில் தான் பெரும்பாலும் நீதியே கிடைக்கிறது. இருந்தாலும், தொடர்ந்து ஹென்னன் போன்ற மாகாணங்களிலிருந்து பத்து மணிநேரத்துக்கு மேலாக ரயிலில் பயணம் செய்து வருவோர் நிறைய பேர் இருக்கிறார்கள்.
பதிவலுகத்திற்கு அருகிலேயே பகலென்றும் இரவென்றும் பாராமல் தெருவில் தங்குவோர் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். பனிக்காலத்தில் வெட்டவெளியிலும் மேம்பாலத்துக்கு கீழும் தங்கும் சவாலை குடும்பத்துடன் வந்தவர்கள் இன்னும் கூடுதலாக அனுபவிக்க வேண்டியுள்ளது. தம்மைக் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில், உடன் குழந்தைகள் இருந்தால் அவர்களைக் குளிரிலிருந்து காக்கும் பணி மேலும் ஆயாசத்தைக் கொடுக்கக் கூடியது. கடந்த வருடங்களில் பனியில் உறைந்து இறந்து போனோர் நிறைய பேர். தனியார் தொண்டு நிறுவனங்கள் தம்மால் முடிந்தவரை நகரங்களில் இப்படி மாட்டிக் கொள்வோருக்கு போர்வைகளையும் கம்பளிகளையும் வினியோகிக்கின்றன.

பல முறை மில்லியன் கணக்கில் இடம்பெயர் தொழிலாளர்களை நகரிலிருந்து அகற்ற முயன்றிருக்கிறார்கள் அதிகாரிகள். 1995ல், பேய்ஜிங்கின் 100,000 பேர் வசிக்கும் ஒரு தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 2,000 போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகள் இருந்ததைக் கண்டறிந்ததால் இரண்டு வாரக் கெடு கொடுத்து பலரை அங்கிருந்து வெளியேறச் செயதனர். சட்டத்திற்குட்பட்ட வசிப்பிட உரிமையோ, வேலையனுமதிப் பதிவட்டையோ இல்லாத நிறையபேர் சிறையில் தள்ளப்பட்டனர். குடும்பமோ உறவோ நகரில் இல்லாதவர்களே இவகளில் மிக அதிகம். ஆகவே, பெரும்பாலோருக்கு ஜாமீனில் வெளியே வரவும் வழியில்லாமல் இருந்தது. இருந்தாலும் பிணைத் தொகை கட்டும் வசதி அவர்களுக்கு இருப்பதில்லை. அதேபோல, ஒலிம்பிக்ஸ்ஸுக்கு முன்னாலும் 1 மில்லியன் இடம்பெயர் தொழிலாளிகளை வெளியேற்றியது அரசு.

அரசதிகாரிகள் இது போன்றோரைக் கைது செய்யும் போக்கு சமீபகாலங்களில் நடந்து வருகிறது. அவரவர் ஊரிலிருக்கும் அரசதிகாரிகளுக்கு தகவல் சொல்லி, அங்கிருந்து ஆள் வரவழைத்து அவர்களுடன் ஊருக்கே அனுப்பி வைக்கிறார்கள். எல்லாவற்றையும் அறிந்த பிறகும் இவ்வாறு நீதி கேட்டு சொந்த ஊர்களிளிருந்து பயணப்பட்டு வருவோரின் எண்ணிக்கை இருந்து கொண்டே தான் இருக்கிறது. நீதிக்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்க வேண்டும் என்று மரபில் படிந்து போயிருக்கும் இம்மக்களுக்குள் அதற்கான விழைவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. நீதி கிடைக்க அதையே இறுதி வாய்ப்பாகவும் வழியாகவும் கருதுகிறார்கள். சிலர் சாமர்த்தியமாக புறநகர் பகுதிகளில் தங்கிக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்கு வந்து வந்து போகிறார்கள். அப்படிச் செய்யாமல் நகர மையங்களில் இருக்கும் தெருக்களில் தங்குவோரும் நிறைய இருக்கிறார்கள்.
இப்படி எதெதையோ செய்தபடி, பல விதங்களில் சிறு தண்டனை, அபராதங்கள் ஆகியவற்றைச் செலுத்தி மீண்டபடியும் நகரத்தில் பிழைப்பைத் தேடுவார்களே அன்றி திரும்பித் தம் சொந்த ஊரான கிராமங்களுக்கோ, சிற்றூர்களுக்கோ போவது என்ற தேர்வு அவர்களுக்கு சாத்தியமில்லை. நோய்ப்பட்டாலோ, விபத்துகளில் சிக்கி ஏதோ ஊனமுற்றாலோ அன்றி அவர்களுக்குத் திரும்பிப் போவது என்பது பயனற்ற ஒரு செயலாகவே தெரியும். ஏனெனில் பெருநகர், நகர வாழ்வின் அடி நிலை வாழ்க்கையில் கூட அவர்கள் சம்பாதிப்பது கிராமத்தில் அவர்களின் வேலையில்லாத நிலைகளை விட மேலானதாகவே தெரியும். நகரங்களில் இன்றில்லையேல் நாளையாவது ஏதோ ஒரு வழி திறக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. கிராமத்தில் மாறுதல் என்பதே எப்போதோ நேர்வதுதான். அந்த நிலையில் இளைஞருக்கும், 20களில் இருக்கும் குடும்பஸ்தர்களுக்கும் நகரத்தின் தொலைவில் தோற்றமளிக்கும் நம்பிக்கை என்பது வெறும் கானல் நீர் என்று தெரியாது, மாறாக சுனையுள்ள சோலை என்றே தெரியும். இது சீனா என்றில்லை, உலகில் பல ஏழை நாடுகளிலும் கிராமத்து மக்கள் பெருநகரங்களுக்குக் குடி பெயர்வதற்கு இந்த வகை எதிர்பார்ப்புதான் காரணம் என்று நகரச் சமூகவியலாளர்கள் பல நாடுகளிலும் இருந்து ஆய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள். உலகில் எல்லா நாடுகளும் நகரமயமாதல் என்பதைக் கடந்து வந்திருக்கின்றன, அல்லது கடந்து கொண்டிருக்கின்றன என்பதே இதை உறுதி செய்கிறது. உலகில் எந்த நாடும் திரும்பிப் போய் கிராமமயமாதலை நோக்கிப் பயணிப்பதாகச் செய்தி இல்லை என்பது இதை மிகத் தெளிவாக்கும்.

குற்றக்கணக்கெடுப்பும் சமூக அமைப்பும்

அதே நேரம் நாம் குற்றச் செயல்களின் அதிகாரக் கணக்கெடுப்பை அத்தனை தூரம் உறுதியாக நம்பவும் முடியாது. ஏனெனில் உலகெங்குமே குற்றக் கணக்கெடுப்பு முறை அத்தனை நம்பகமானதல்ல. இதைப் பலவிதங்களில் பேசலாம்.

இங்கு ஒரு குறையை மட்டும் கவனிப்போம், ஏனெனில் இதுவே குற்றங்களின் கணக்கெடுப்பில் உள்ள குறைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. கணக்கெடுப்பு என்பது அதிகார பூர்வமாக எடுத்துக் கையாளப்பட்ட குற்றங்களை மட்டுமே காட்டுகிறது. ஆனால் சீனாவில் இப்படி அதிகார பூர்வமான கணக்கெடுப்பு என்பது குற்றங்களில் ஒரு கணிசமான அளவு குற்றங்களைக் கருதுவதும் இல்லை என்பது பரவலாகத் தெரிந்த ஒரு விஷயம்தான். உதாரணமாக, சீனத்தில் திருட்டு/ கொலைகளுக்கான முயற்சிகளைக் கணக்கிலெடுப்பதில்லை. குற்றத்தில் வெற்றியடையும் முயற்சிகளை மட்டுமே கணக்கிலெடுப்பார்கள். சிறுகுற்றங்கள் என்று பொருட்படுத்தாமல் விடுபவை தனி. அந்தக் குற்றச் செயல்களில் பெரும்பகுதி காவல் நிலையம் வரைக்கும் கூட போகாது. குடியிருப்பு/கிராம அதிகாரிகள் அளவிலேயே பேசித் தீர்க்கப்பட்டுவிடும். சமரசங்களும் செய்யப்படும். ஏனெனில், முடிந்தவரை சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் மனோபாவம் கொண்டவர்கள் சீனர்கள்.

அடுத்த கட்டமாக காவல்துறையும் முடிந்தவரை கோப்புகளில் குற்றங்களைப் பதிவதையும் தவிர்க்கவே விரும்பும். எச்சரிக்கை, அபராதம், 15 நாள் காவல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு, விடப்படும் குற்றங்களும் இந்தக் கணக்கில் வருவதில்லை. எனவே முன் சொன்ன குற்றங்களில் அதிகரிப்பு என்பது இந்த வகைக் குற்றங்களைப் பார்க்காதே சொல்லப்பட்ட கணக்குதான். இப்படி அதிகாரப் பார்வைக்கு வெளியிலிருக்கும் குற்றங்கள் என்ன வளர்ச்சி பெற்றன என்பது குறித்த ஊகங்கள் பத்திரிகைகளில் கிட்டுகின்றன. அவை கூடியுள்ளன என்பதும், குறிப்பாக கட்சி சார்ந்த பிரமுகர்களின் ஈடுபாடு இருந்தால் அவை குறித்த தகவல்கள் வெளியில் கிட்டாமல் போகின்றன என்பதும் இப்போது உலகப் பத்திரிகைகளில் பரவலாகக் கிட்டும் தகவல்.

சில நடப்புச் சித்திரங்கள்

காங்ஸு மாகாணத்தின் லாங்ஜோவ் நகரில் இருக்கும் தொழிற்பேட்டையில் இருப்போர் எல்லோருமே குடும்பங்களற்ற மணமாகாத தனியாட்கள். தற்காலிகமாகவோ, நாள் கூலிக்கேனும் வேலை கிடைக்காதா என்ற பதைப்புடன் கிழிந்த ஜீன்ஸ், அழுக்குச் சட்டை அணிந்திருக்கும் இந்த மக்கள் தொழிற்சாலை வளாகங்களில் கம்பி வேலிகள் வழியாக அந்தப் பக்கம் வரும் உயரதிகாரிகள் மற்றும் மேலதிகாரிகளின் பார்வை படாதாவென்று பரபரப்பார்கள். ஒரு கவளம் சோற்றை யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்கள் போல நிற்பார்கள். தொழிற்சாலையில் அப்போதிருக்கும் வேலைப்பளுவைப் பொருத்து நிரந்தரத் தொழிலாளிகளால் சமாளிக்க முடியாத அளவில் அதிக வேலையிருந்தால் இவர்களுக்கு சில சமயம் ஒரு நாள் அல்லது ஒரு வார வேலை கிடைக்கக்கூடும்.

முறையான வேலையனுமதி உரிமம் இல்லாதவர்கள் குறைந்த ஊதியமெ பெறுவர். அதிலும் பெண்ணாக இருந்தால், கேட்கவே வேண்டாம். இன்னமும் ஊதியம் குறைவு. தொழில்கள் அதிகமிருக்கும் பேட்டைகளில் மிக நீண்ட வேலை நேரம், குறைந்த வருவாய், பாதுகாப்பற்ற வேலைச் சூழல், கொடுக்கப்படாத ஊதியம் என்று ஏராளமான இடர்களை இடம்பெயர் தொழிலாளிகள் சந்திக்கிறார்கள். ஏற்றத் தாழ்வு பாராட்டும் இணக்கமற்ற சூழல், அவமதிப்புகள் எல்லாமே இவர்கள் வாழ்வில் சகஜமாக இருக்கக்கூடியன.

மொத்த உடைமைகளையும் இரண்டு மூட்டைகளில் கட்டி மூங்கில் கழிகளின் இருமுனைகளிலும் தொங்க விட்டுக் கொண்டு நகரில் திரியும் சில தொழிலாளிகள் தான் சிறு திருட்டுகள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சைக்கிள் திருட்டு ஆகியவற்றுக் காரணம் என்கிறார்கள் நகரவாசிகள். வெயிலில் கருத்துப் போன கன்னங்களுடன் காலியான சிமெண்ட்டு மூட்டையிலோ உரப்பையிலோ தன் பொருட்களைப் போட்டு தோளில் சுமந்து திரிவோரும் பலருண்டு.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வும் குற்றவாளிகளில் 85% பேர் இடம்பெயர்தொழிலாளிகள் என்றே சொல்கிறது.

குவாங்ஜோவ்வில் வசிக்கும் ஒருவர், “இவர்கள் அதிகமானதால குற்றங்கள் பெருகுதுன்றது உண்மைதான். இவங்களுக்கு கல்வியறிவும் குறைவு. வேலையிருந்தா பிரச்சனையில்ல. வேலையில்லாம இருந்தா பிழைக்கறது எப்டி?”என்கிறார். இடம்பெயர் தொழிலாளிகள் நகரவாசிகளிடம் இரக்கத்தையோ பரிவை பெறுவதில்லை. “இந்த கிராமத்தான்கள் எவ்ளோ பிரச்சனையேற்படுத்தறாங்க தெரியுமா? எல்லாரையும் சொந்த ஊர்களுக்குத் துரத்தணும்,” என்கின்றனர்.

ஃபூஷான் என்ற ஊரில், ஸிச்சுவானிலிருந்து வந்த இடம்பெயர் ஊழியர்கள் ஒன்றிணைந்து பணம் போட்டு ஒரு உணவகத்தைத் திறந்தனர். உள்ளூர்காரர்களில் சிலர் சாப்பிட்டுவிட்டு காசு தரவில்லை என்று காவலரிடம் முறையிடப் போன இந்தப் பெண்கள் திரும்பி வந்த போது அதிர்ச்சி தான் மிஞ்சியது. குண்டர் கும்பல் உணவகத்தை அடித்து நொறுக்கி நண்பர்களை நகரை விட்டே விரட்டியது. சீக்கிரமே, நஷ்டங்களை ஈடுகட்ட இப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டனர். இத்தொழிலுக்கு பெண்களை இழுப்பதற்கான வாய்ப்புகளைக் கப்பென்று பிடித்துக் கொள்ளும் கும்பல்கள் நகரங்களில் ஏராளமுண்டு. பாலியல் தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் பெரும்பாலும் அபராதமாகவே இருக்கும். கும்பலை எடுத்து நடத்தும் குற்றவாளிகளுக்கான தண்டனை நகரவாசியா இல்லை இடம்பெயர்ந்த வெளியூர்காரரா என்பதைப் பொருத்து வேறுபடும்.

இடம்பெயர் தொழிலாளிகளின் சராசரி மாத வருவாய் என்று பார்த்தால், அது வெறும் $100. அதில் மூன்றில் ஒரு பங்கை அவன் கிராமத்திலிருக்கும் குடும்பத்துக்கு அனுப்புகிறான். சில ஐந்தில் நான்கு பங்கு வரையில் கூட அனுப்பிவிடுகிறார்கள். ஒரேயொரு இடம்பெயர் தொழிலாளி இருக்கும் குடும்பம் வறுமையிலிருந்து வெளியே வருகிறது. இவர்கள் வருடந்தோறும் வீட்டுக்கு அனுப்பும் மொத்தப் பணம் $45 பில்லியன். இந்தத் தொகை தான் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சி, வீடுகள் உருவாக, பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்ப, கால்நடைகள் வாங்க, உழவுச்சாதனங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சிப் பெட்டி, குளிப்பதனப்பெட்டி, சலவை இயந்திரம் போன்ற வீட்டுச் சாதனங்கள் வாங்கப் பயன் படுத்துகிறார்கள். கிராமத்துக்குத் திரும்பும் தொழிலாளிகள் தொழிலறிவையும் பொருளாதாரத்தையும் கூடவே கொண்டு வருகிறார்கள். புதிய கட்டடங்கள், வீடுகள், கல்வி, சிறு தொழில் மற்றும் தையல் கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள் போன்றவற்றில் பொருளையும் அறிவையும் மறுமுதலீடுகள் செய்து கிராமத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றனர். உள்ளூர் அதிகாரிகள் இம்முதலீடுகளால் பயனடைகிறார்கள். வெளிநாடுகளுக்குப் போய் சம்பாதிக்கும் தொழிலாளிகளைப் போலவே தான் இதுவும். நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைக் கோடுகள் இங்கு இல்லை என்பதே முக்கிய ஒரே வேறுபாடு. ஆனால், இடம்பெயர் தொழிலாளிகளுக்கு சொந்த நாட்டிலேயே அகதி நிலை.

உடலுழைப்பைக் கொடுக்கும் இடம்பெயர் விவசாயத் தொழிலாளிக்கு மட்டுமல்ல நகரில் சவால்கள். ஓரளவு கல்வி பெற்று போதுமான வருவாயுடன் இருக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ஜியாங் யீஃபேய் என்பவர் ஹென்னன் மாகாணத்திலிருந்து ஜேஜியாங் மாகாணத்தின் வென்ஜோவ் நகருக்கு வந்து ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருக்கிறார். பெருநகரின் ஹூகோவ் ஒன்றை வாங்குவதே கடந்த பத்தாண்டுகளாக இவரது லட்சியமாக இருந்து வந்தது. ஹென்னனில் பிறந்த இவர் லௌயாங் நகருக்கு தனது பதிவட்டையை மாற்றினார். அங்கே தான் 1996ல் கல்லூரியில் சேர்ந்திருந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜேஜியாங் மாகாணத்தின் வென்ஜோவ் நகரில் அவருக்கு வேலை அமைந்தது. அவரது முதலாளியால் உள்ளூர் ஹூகோவ்வை வாங்கித் தரமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது வேலையும் போனது. சான்றிதழ்கள் இரண்டும் திரும்பக் கிடைத்தன. மீண்டும் பூர்வீக ஊருக்கே ஹூகோவ் மாற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், அவரது எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. ஜியாங் கல்லூரிக்குப் போய் விசாரித்த போது, கோப்புகள் யாவும் காணாமல் போயிருந்தது தெரிந்தது. நீக்கல் சான்றிதழுக்கு விண்ணப்பித்து விட்டு வென்ஜோவ் ஹூகோவ்வுக்கு விண்ணப்பிக்க முயன்றார். தொலைந்து போன கோப்புகள் வேண்டியிருந்ததால் அதுவும் வெற்றி பெறவில்லை. பத்தாண்டுகளாக முறையான ஹூகோவ் இல்லாததால் அடையாள அட்டையும் இல்லை. அதனால், இவரால் திருமணம் செய்ய முடியவில்லை. வங்கிக்கணக்கு தொடங்கவும் முடியவில்லை. சேமிப்பையெல்லாம் தன்னுடன் ஒரே கூரையின் கீழ் வசித்த காதலியிடம் கொடுத்து வைத்திருந்தார். பெரிய சண்டைக்குப் பிறகு அவள் ஜியாங்கை விட்டுவிட்டு ஓடிப் போனாள். அவள் தன் வங்கிக்கணக்கில் போட்டு பத்திரமாக வைத்திருப்பாள் என்று நம்பிய பணமெல்லாம் கைவிட்டுப் போனது.

2008ல், அதிருஷ்ட வசமாக கல்லூரிப் பட்டதாரிகள் சொந்த கிராமங்களுக்குப் போவதைத் ஊக்குவித்தது. அப்போது தான், ஜியாங் ஒருவழியாக தனது சொந்த ஊர் ஹூகோவ்வைப் பெற முடிந்தது.

இடம் பெயரும் பெண் தொழிலாளிகள்

இடம்பெயர் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள். இவர்களில் பெரும்பாலோர் திறன்களுக்குத் தேவையற்ற, குறைந்த ஊதியத்திற்கு அதிகமான உடலுழைப்பை வேண்டும் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள். இளமையான பெண்களையே முதலாளிகள் அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்களை மிரட்டி உருட்டி அடக்குவது எளிதென்று அவர்கள் கருதுகிறார்கள். அத்துடன், தொழிலாளர்களுக்கான உரிமைகள் குறித்து இவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை என்பதும் காரணம். சீனாவின் சட்டப்படி பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், வருவாய் குறையும் என்ற அச்சத்தில் இந்த உரிமையைக் கேட்காது விடுக்கும் பெண் ஊழியர்களும் இருக்கிறார்கள்.

2003ல், 21% பெண் ஊழியர்கள் கருவுற்றதலோ பிள்ளை பெற்றதாலோ வேலை நீக்கம் செய்யப்பட்டனர். பாலியல் ரீதியிலான சீண்டல்களும், தொந்தரவுகளும் மிக அதிகமாகவே புகார் செய்யப்படுகின்றன. சில இடங்களில் இன்னமும் கூட இளம்பெண்களின் ஒப்பனை, கவர்ச்சியான ஆடைகள் தடை செய்யப்படுகின்றன. வேலைக்குச் சேர்ந்த முதல் சில ஆண்டுகளில் வேறொரு ஆணுடன் பேசுவதும் மிகவும் தீவிரமாக தண்டிக்கப் படுகிறது. குழந்தைகளும் பெண்களும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் ஆசைநாயகிகளாகவும் மனைவிகளாகவும் விற்கப்படுவதுண்டு. அநாதையாகத் திரியும் பிள்ளைகள் குண்டர் கும்பல்களால் பிச்சையெடுக்கப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள்.
வேலை கிடைத்தாலும், வேலையிட விபத்தில் நிகழும் விபத்துகளை மூடி மறைக்க சம்பந்தப்பட்ட தொழிலாளியை வசிப்பிடத்தில் பூட்டி வைக்கும் முதலாளிகளும் உளர்.

சீனா முழுவதும் சுமார் 150-200 மில்லியன் இடம்பெயர் தொழிலாளிகள் இருக்கிறார்கள். ஊதியமும், கூடுதல் பணிநேரத்துக்கு உபரிச் சம்பளமும் தவறாமல் கொடுக்கப்படவேண்டும், வாரத்திற்கு 40 மணிநேரத்தை வேலை தாண்டக் கூடாதென்றெல்லாம் சட்டம் சொல்கிறது. முக்கியமாக, வேலை நியமன ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு மகப்பேறு விடுப்பளிக்கப்பட வேண்டும். குழந்தைகளை வேலைக்கமர்த்துவது கூடாது. இருந்தும், இதெல்லாம் பின்பற்றப்படுவது குறைவுதான். வேலை தேடி வரும் வெள்ளந்தி கிராமத்தான் எங்கேயும் எப்படியும் வேலை செய்யத் தயாராக இருக்க, நிறுவனங்கள் அதைப் பயன் படுத்தவே நினைக்கின்றன.

மீறப்படும் ஒப்பந்தங்கள், சட்டங்கள்

உற்பத்தி இடைவிடாமல் தொடர தொழிலாளிகள் பன்னிரெண்டு மணிநேரம் உழைக்க வேண்டியுள்ளது. ஆனாலும், வேலைக்கிடையில் கழிவறைக்குப் போகக் கூட சில நிமிடங்கள் அளிப்பதில்லை மேற்பார்வையாளர்கள். அருகில் வேலை செய்வோருடன் பேசுவதும் அந்தச் சூழலில் பெருங்குற்றம். சிற்றூர் அரசலுவலகங்களில் சட்ட மீறல்களைச் சகிக்கிறார்கள். அதற்குக் காரணம் நிறுவனங்கள் வட்டாரத்துக்கு கொண்டு வரும் வருவாய். “ஒரு கண்ண மூடிகிட்டு இன்னொரு கண்ணத் தெறந்துக்கணும்”, என்று முதுமொழி பேசுகிறார்கள். அடிப்படைச் சம்பளமான 900 யுவான்களில் ஜீவிப்பது இவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. வேலையில் சேரும் போதே ‘மனமுவந்து கூடுதல் வேலை நேரத்துக்கு’ ஒத்துக் கொண்டு தான் தொழிலாளிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

பாதுகாப்பற்ற வேலைச் சூழல், முறையான வேலை ஒப்பந்தம் இல்லாமை இரண்டும் தான் இடம்பெயர்தொழிலாளிகளின் மிகமுக்கிய பிரச்சனைகள். முறையான வேலை ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள், குறிப்பாக கட்டடத் தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். பணியிட விபத்துகள் ஏற்பட்டால் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயம் கிடைப்பதில் தாமதமும், கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. சமீப வருடங்களில் தான் 21% இடம்பெயர் தொழிலாளிகளுக்கு முறையான வேலை ஒப்பந்தங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக நாடெங்கும் ஆங்காங்கே இடம்பெயர் தொழிலாளிகள் நியாயம் கேட்டுப் போராட்டங்களை மேற்கொள்கின்றனர். கூடி வரும் இந்தப் போராட்டங்களில் கொடுக்கப்படாத ஊதியங்கள் மற்றும் மோசமான வேலைச் சூழல் தான் தொழிலாளிகளின் முக்கிய புகார்களாக இருந்து வருகின்றன. வேலையில்லாத தொழிலாளர்கள் வேலை கேட்டுப் போராட இன்னும் ஆரம்பிக்கவில்லை.
வெளிநாட்டு நிறுவனங்கள் செலவைக் குறைக்கவென்று திறனில்லாத மற்றும் திறன் குறைந்த புதிய தொழிலாளிகளை பெரிய எண்ணிக்கையில் வேலைக்கமர்த்துகின்றன. இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியம் குறைவு என்பது தான் முக்கிய காரணம். இது சட்டத்திற்குட்பட்டதென்றாலும், சமீப காலங்களில் நடக்கும் போராட்டங்களில் இதுவே சில தொழிலாளிகளின் புகாராகவும் இருக்கிறது. இந்தப் போக்கு தமது வாய்ப்புகளைப் பறிக்கின்றது என்பது தான் அவர்களது முக்கியப் புகார்.

தொழிலாளிகள் போராடும் போது காவலர்படை வருகிறது. காவலர்களால் அடித்து நொறுக்கப் படுவதும் கொல்லப்படுவதுமான நிறைய கதைகள் சமீப ஆண்டுகளில் நாடெங்கும் உலவுகின்றன. நிறுவனங்கள் மிகக் கடுமையான உடலுழைப்பை உறிஞ்சிவிட்டு ஊதியம் கொடுக்காமலிருப்பதே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்தப் போராட்டங்கள் பரவி அதிகரிக்கும் என்று அரசும் உள்ளூர அஞ்சுகிறது. சில முதலாளிகள் தொழிலாளிகளுக்கு மொத்தமாகப் பணம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தனர். அப்படிக் கொடுத்தவர்களுமுண்டு. கிடைத்த பணத்தைக் கொண்டு தொழிலாளிகள் சொந்த ஊர்களில் சிறுதொழில்கள் அல்லது வியாபாரங்கள் தொடங்கினர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஸிச்சுவான் மாகாணத்தில் தொழிலாளிகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்ததால் அங்கு போகுமாறு இடம்பெயர்வோர் ஊக்குவிக்கப்பட்டனர். வேலைவாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்கும் பணிகளையும் அரசு நிறுவனங்கள் முடிந்த அளவில் செய்து வருகின்றன.

வேலையில்லாத 4 மில்லியன் தொழிலாளர்களுக்கான ‘மறு பயிற்சி’த் திட்டங்கள் அரசால் முன்வைக்கப்பட்டன. அத்துடன், அரசு சிறுதொழில்களுக்குக் கடனும் கொடுத்தது. இதற்காக அரசு $35 மில்லியன் ஒதுக்கியது. இது பொருளாதாரத் திட்டங்களுக்கும் உறுதுணையாக இருக்கும்; கிராப்புறத் தொழிலாளிகளின் மேம்பட்ட வேலைகளுக்கான வாய்ப்புகளைப் பெருக்கவும் முடியும் என்பதும் நோக்கம். அதன் மூலம் அனைத்துலச் சந்தையில் சீனாவின் பங்கை உறுதிப்படுத்துவது நீண்ட கால ஆசை. இடம்பெயர் தொழிலாளிகளுக்குத் தேவைகள் பிரும்மாண்டமாக இருப்பதால் எந்த உதவியும் பேருதவியாக இருக்கிறது. அதே சமயம், எந்த உதவித் தொகையும் போதுமானதாக இல்லை.
வாழ்க்கை கொணரும் அழுத்தங்களைச் சமாளிக்க முடியாமல் சில தொழிலாளிகள் கட்டுமானத் தளங்களில் உயரப் போய் கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தென்சீனத்தில் கும்பலாகப் போய் இரும்புக் கழிகளைக் கொண்டு முதலாளி மற்றும் அவரது மனைவியின் கைகால்களை அடித்துத் துண்டித்து விட்ட பிறகு, கசாப்புக் கத்தியால் உடலைத் துண்டுதுண்டாக வெட்டப் போனார்கள்.

2005ல், ஓர் இடம்பெயர் தொழிலாளி, முதலாளியுடன் சண்டை போட்டு விட்டு நான்கு பேரைக் கொன்று விட்டு வெறிகொண்டவராக மாடிப்படிகளில் ஏறிக் கடந்து மேலியிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்றார். இரண்டு வருடங்களாக ஊதியம் கொடுக்கப்படாமல் இருந்திருக்கிறார். பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர் வேகவேகமாக நடந்து முடிந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்றார். தூக்கிலேற்றப்படும் முன்னர், “நா செத்த பிறகு இனி யாரால தன் சுயநலத்துக்காக என்னோட உழைப்பை முதலாக்க முடியும்?” என்று கேட்டிருக்கிறார்.

ஊதியம் தர மறுக்கும், அல்லது தாமதமாக ஊதியம் அளிக்கும் முதலாளிகளுக்கு அரசாங்கத்தால் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. அதையும் தாண்டி தொடர்ந்து அநியாயங்கள் செய்து வரும் முதலாளிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். இயற்றப்படும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப் படுவதே இல்லை.

உலகப்பொருளாதார நெருக்கடியின் போது, 2008-2009களில் நிறைய நிறுவனங்களில் வேலை குறைந்ததால், நிறைய தொழிலாளர்கள் வேலையிழக்க நேர்ந்தது. 20 மில்லியன் இடம்பெயர் தொழிலாளிகள் வரை செய்வதறியாமல் குழம்பினர். வேலையில்லாத இடம்பெயர்தொழிலாளிகள் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்பு தான் 6 மில்லியனாக இருந்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. நாட்டின் அரசியல் நிலைத்தன்மையே பாதிக்கப்படும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டது. வேறு வேலைவாய்ப்புகள் தேடித் தவித்தனர். பாதிகட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன. குழந்தைகளின் பள்ளிப்படிப்பை நிறுத்தினர் பெற்றோர். கிராமத்துக்குக் கட்டாயமாக அனுப்பப்படுவதை அறிந்த இளம் தொழிலாளிகள் கோபமும் விரக்தியும் கொண்டனர். வேலை இழக்காமலிருந்தவர்களும் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யத் தயாராக இருந்தனர்.
தொழிலாளர் போராட்டங்களும் கோஷங்களும் ஆங்காங்கே எழுந்தன. ஆனால், பெரியளவில் ஏதும் நடந்து விடவில்லை. அவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் இடம்பெயர் தொழிலாளிகளுக்கு ஏற்படும் விரக்தியோ கோபமோ நகரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. கிராமங்களுக்குப் போவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவரவர் சிறுசேமிப்பு சிற்சில ஆட்களுக்கு உதவியது. கிராமத்தில் இருந்த நிலங்களும் ஓரளவிற்கு பொருளாதார நிலைத்தன்மையைக் கொடுத்தன.

“என்ன செய்ய முடியும்? வீட்டுக்கும் போக முடியாது. ஆனா, இங்க வேலையும் கொறச்சலா தான் இருக்குது. சம்பளமும் ஒழுங்காக் கொடுக்க மாட்றாங்க,” என்று பல தொழிலாளிகள் வருந்தினர். ஊர் திரும்ப விரும்பாத ஒரு தொழிலாளி, “விவசாயத்துக்கும் போக முடியாம இருக்கு. வேலையில்லைங்க. கோதுமை விதைச்சாச்சி. இன்னும் மூணு மாசமிருக்கு அறுவடைக்கி,” என்றார். மிகுந்த வருத்தமும் அவமானமும் கொண்டவர்களாக நிறையபேர் கிராமங்களுக்குத் திரும்பினர். திரும்பியவர்களில் பெரும்பகுதியினர், கிராமத்தில் தமது விளைநிலம் நகர மேம்பாட்டுப் பணிகளுக்கும் தொழிற்சாலைகள் நிறுவவும் விற்கப்பட்டு விட்டதை அறிந்து அதிர்ந்தனர். கைபேசியும் மற்ற பொருட்களும் வைத்திருந்த சற்றே வசதி வாய்ப்புகள் கொண்டிருந்த சில இடம்பெயர் ஊழியர்களும் தொழிலாளிகளும் கூட தெருவோரங்களில் படுத்துறங்கினர். பெரிய அட்டையில் தமது வேலை அனுபவம், திறன்கள் போன்ற விவரங்களை எழுதி கழுத்தில் மாட்டிக் கொண்டு வேலை கேட்டு தெருவோரங்களில் நின்றனர். இவர்களில் வேலை கிடைத்தவர்களும் உண்டு. இருப்பினும், கிடைக்காதவர்களே மிக அதிகம்.

முதலாளிகளின் அராஜகம் மட்டுமே இடம்பெயர்தொழிலாளிகளின் சவால் என்றில்லை. நகருக்குள் வந்த பிறகு, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் தனியார் தரகர்களிடம் பணத்தை இழப்போர் மிக அதிகம். ஏதேதோ பெயரில் ஏதேதோ கட்டணங்கள் வசூலிக்கும் தரகர்கள் வாங்கித் தருவதாகச் சொல்லும் வேலையை மட்டும் வாங்கிக் கொடுப்பதே இல்லை. இதனால் மனமுடைந்து போவோரில் சிலர் திரும்ப கிராமத்துக்கே போய்விடுவர். கொஞ்சபேர் அடையாள அட்டை இல்லாமலே செய்யக்கூடிய உதிரி வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவுவர். சிறிய பகுதியினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட ஆரம்பிப்பர். தொழிலாளர் சங்கத்திடமோ சமரசம் செய்யக்கூடிய அமைப்பிடமோ தம் புகார்களைக் கொண்டு செல்லவும் தெரியாத தொழிலாளிகள் நிறையவே இருக்கிறார்கள்.

கிராமத்திலிருந்து நகருக்கு வரும் கணத்திலிருந்தே சவால்கள் தொடங்குகின்றன. ஷாங்காய் நகருக்கு அருகிலிருக்கும் நிங்போ என்ற ஊரில் லீ வந்து இறங்கியதுமே ஒரு கும்பல் அவரைச் சூழ்ந்தது. கைகளில் கத்தி வைத்திருந்த முரடர்கள் லீ கையில் வைத்திருந்த $20ரை மிரட்டிப் பறித்தனர். அவருடைய மொத்தப் பணமுமே அது தான். பதினைந்து வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு பெற்றோருடன் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர் இவர். இவருக்கு நல்லவேளையாக சீக்கிரமே ஷிச்சிங் இயந்திரத் தொழிற்சாலையில் வேலை அமைந்தது.

தொழிற்சாலை இருக்கும் வட்டாரத்தில் நடக்கும் தொலைவில் முதலாளிகளும் அதிகாரிகளும் உள்ளூர்வாசிகளும் குடியிருக்கும் நவீன குடியிருப்பு வளாகம் இருக்கிறது. அங்கே யாரும் உள்ளே நுழைய முடியாது. அருகில் போகக் கூடாது என்று இடம்பெயர் தொழிலாளிகள் அச்சுருத்தப் படுகிறார்கள். “எல்லாருக்கும் தெரியும்ல, நாங்க ஏழைங்கனு. எங்கள்ள பாதிக்கும் அதிகமான ஆட்களுக்கு அடிப்படைக் கல்வியுமில்ல. அதான்,.” என்று சொல்கிறார் ஒரு தொழிலாளி. பொருளாதார மற்றும் அந்தஸ்து வேற்றுமைகள் சமூகத்தில் அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது.

ஸிச்சுவான்னிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளிகளில் ஒரு பகுதியினர் குப்பைகளைக் கிளறி மறுசுழற்சிப் படுத்தக்கூடிய காகிதம், ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களைச் சேகரித்து மாதம் $50 சம்பாதிக்கிறார்கள். தொழிற்சாலைத் தொழிலாளிகளோ வாரத்தில் 7 நாட்களும் 14 மணிநேரம் வரை உழைத்து வெறும் $40 முதல் $120 ஈட்டுகிறார்கள். இது கிராமத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களில் கிடைக்கக் கூடிய வருவாயை ஒப்பு நோக்க அதிகம் தான். என்றாலும், உள்ளூர் தொழிலாளிகளுக்குக் கிடைப்பதை விட மிகக் குறைவு. பலருக்கு நாள் ஊதியமாகக் கொடுப்பதாகச் சொல்லப்பட்ட $1.72க்கு பதில் வெறும் $0.57 மட்டுமே கொடுக்கப் படுகிறது.

சில தொழிலாளர்களுக்குத் தமது உழைப்புக்கான ஊதியத்தைப் பெறக் கூட தெரியாமலிருக்கின்றது. அன்றாடம் சமைத்துச் சாப்பிட அரிசியோ நூடில்ஸோ ரேஷன் முறையில் கொடுப்பார்கள். அதுவும், நெருக்கிக் கூட்டமாக உறங்குமிடமும் மட்டுமே இவர்களுக்கானது. வருடக்கணக்கில் ஊதியம் பெறாமலே வேலை செய்வார்கள். நெருக்கடியான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாத கூட்டமும் அசுத்தமும் கொண்ட சூழலில் தங்குவோருக்கு டீபீ போன்ற நோய்கள் எளிதில் பரவுகின்றன. உள்ளூர்காரர்கள் செய்யத் தயங்கும் ஆபத்தும் அழுக்கும் நிறைந்த வேலைகளையெல்லாம் இவர்கள் தான் செய்கிறார்கள். விவசாயத் துறை சார்ந்த பொருட்களின் விலை கூடிவிடுவதால் நகரத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது.

ஆண்கள் மட்டுமே தங்குமிடங்களில் ஒருபாலுறவுகள் உருவாகும் வாய்ப்புகள் பெருகுவதால் பாலியல் நோய்களும் சர்வ சாதாரணமாகப் பரவுகிறது. பேய்ஜிங்கின் மொத்த ஹெச்ஐவீ நோயாளிகளில் 80% பேர் இடம்பெயர்ந்த தொழிலாளிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தொழிலாளிகளுக்கு வசிப்பிடத்தில் மிகச் சிறிய வசதியைச் செய்து கொடுத்து விட்டு ஊதியத்தில் கழித்து விடும் முதலாளிகள் அநேகர். விபத்தோ மருத்துவச் செலவோ வருமென்று சொல்லி ஊதியத்தைக் கொடுக்காமல் பிடித்து வைத்துக் கொண்டு உழைப்பை உறிஞ்சும் முதலாளிகளுமுண்டு. இதோ கொடுக்கிறேன், அதோ கொடுக்கிறேன் என்று ஊதியத்தைக் கொடுப்பதைத் தள்ளிப் போடுவார்கள். 3-10 ஆண்டுகளுக்கு கூட ஊதியமே கொடுக்காமல் உழைப்பை உறிஞ்சுகிற முதலாளிகள் இருக்கிறார்கள். கட்டுமானத் தளங்களில் கட்டிடவேலை முடியும் வரை தொழிலாளிகளுக்கு ஊதியம் கொடுக்கப் படாமலே இருக்கும். சில முதலாளிகள் பிடித்து வைத்த ஊதியத் தொகையை சீனப்புத்தாண்டுக்குக் கிளம்பும் தொழிலாளிக்கு ஒழுங்காகக் கொடுப்பார்கள். வேறு பலர் அதிலும் முடிந்தவரை அநியாயம் செய்வார்கள்.

ஷென்ஜென்னில் 1996ல் கைதான குற்றவாளிகளில் 98% பேர் இடம்பெயர்ந்த விவசாயத் தொழிலாளிகள். 2005 ஆம் ஆண்டில் அதே ஷென்ஜென்னில் எட்டு நிறுவன முதலாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் போடப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 1200 தொழிலாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய $890,500 வரை கொடுக்காமல் வைத்திருந்தது கணக்கிடப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகளையும் தாண்டி முதலாளிகள் தொடர்ந்து ஊதிய பாக்கி வைக்கிறார்கள்.

ரோபாட்களாக மாற்றப்படும் தொழிலாளிகள்

சென்ற ஆண்டில் தென்சீனத்தில் இருக்கும் கைபேசிகள் போன்ற பொருட்கள் செய்யும் ஃபாக்ஸ்கான்’ஸ் இலெக்ட்ரானிக்ஸ் என்ற பெருநிறுவனத்தில் வேலைபார்த்த பத்து இடம்பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். “குடும்பங்களிலிருந்து பிரிந்த வேரற்ற இடம்பெயர்வு வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ளது இவர்களுக்கு. குடும்பத்தின், பெற்றோரின், மனைவியின், குழந்தைகளின் நினைவுகளுடன் மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். மொத்தத்தில் மதிப்பில்லாத வாழ்க்கை,” என்கிறார்கள் அறிஞர்கள்.

இந்நிறுவனத்தின் தொழிலாளி, 6.10க்கு எழுந்து தயாராகி தொழிற்சாலையை 6.50க்கு அடைவார். கேமரா இல்லாத கைபேசி எடுத்துப் போக அனுமதியுண்டு. இசை கேட்கும் கருவிகளுக்கு அனுமதியில்லை. உணவகத்தில் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு 7.30க்கு வேலையைத் தொடங்குவார். 1600 கணிப்பொருட்களைச் சரி பார்ப்பதோ பெட்டியில் வைத்து சந்தைக்கு தயார் செய்வதோ தான் இவரது ஒருநாள் வேலை. 8-12 மணிநேரம் வரை போகக்கூடிய வேலையில் துல்லிய நுட்பமும் சோதனையும் தேவைப்படுகிறது. கவனச் சிதறல்கள் குழப்பங்களுக்கு வழிவிடும் என்பதால், பேசுவதற்கு அனுமதியில்லை. இராணுவ ஒழுங்கும், மிகத் துல்லியமும் எதிர்பார்க்கப்படும் இது போன்ற சூழலில் பணியாற்றுவது ஒன்றும் சாமான்யமில்லை. சில அரசு நிறுவனங்களில் மட்டும் சூழலில் சற்றே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களிலும் ஊழியர்களின் வேலையை உறிஞ்சும் பேராசையில் எந்த மாற்றமும் இல்லை.

“நாளெல்லாம் ஒரே வேலைய செஞ்சிகிட்டே இருந்தா மூளை மரத்து தான் போகுது,” என்று சொல்லும் தொழிலாளி, “இதெல்லாம் பழகிப் போயிருச்சு,” என்று முடிக்கிறார்.

அடுத்த தலைமுறையினரில் மாற்றங்கள்

இளம் தொழிலாளிகள் பெற்றோரைப் பிரிந்து அடிமனதில் ஏங்குகிறார்கள். முந்தைய தலைமுறையின் மனோ தைரியமும் இவர்களுக்கு இல்லை. ஆனால், சட்ட உரிமைகள் பற்றி நன்கறிந்து வைத்திருக்கிறார்கள். வேலை நியமனச் சட்டங்கள், மிக அதிக வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறார்கள். துணிச்சலாக, ஆனால் கவனமாக சூழலைப் பார்த்து வாய்திறந்து பேசவும் கற்று வருகிறார்கள்.

தொழிற்துறை சார்ந்த சட்டங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு வருவதிலும் படிவதிலும் தாமதம் ஏற்கிறது. தொடர்ந்து நடக்கும் போராட்டங்களாலும் தொழிலாளிகளால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளாலும் பல நிறுவனங்கள் தத்தமது தொழிற்சாலையை ஹீபேய்க்கும் ஷென்ஜென் போன்ற வேறு வட மாகாணங்களுக்கும் மாற்றிக் கொள்ள முடிவெடுத்தன. அங்கே உழைப்பின் விலை குறைவு. கூட்டுப்புகார்களும் கோரிக்கைகளும் தாமதமாகவேனும் தொழிலாளர்கள் எதிர்பாக்கும் மாற்றங்களைக் கொண்டு வருகின்றன.

இடம்பெயர் தொழிலாளிகளுக்கான பொற்காலம் சீக்கிரமே வரவிருக்கிறதென்று சீனக் குடிமக்கள் கொஞ்சகாலமாகவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஹோண்டா’ பூட்டு நிறுவனம் இருவரை தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதாயகத் தேர்ந்தெடுத்தது. யூனியனைவிட இந்த இருவர் தமக்காக மேலும் தீவிரமாக வாதாடுவர் என்றே நம்புகின்றனர் தொழிலாளிகளும். “யூனியன் சும்மா பேருக்கு தான். அதுவும் மேனேஜ்மெண்ட்டைச் சேர்ந்தது தான். அவங்களால என்ன பயன்? எங்களப் பொருத்தவரைக்கும் உண்மையான யூனியன்னு ஒண்ணுமே இல்ல,” என்கிறார்கள்.

உலகப்பொருளாதார நெருக்கடி சீராகும் தருவாயில், நிறுவனங்களுக்கு அதிக வேலைகள் கிடைக்கின்றன. அதிக ஊதியம் கேட்கிறார்கள் தொழிலாளிகள். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் இந்தப் போராட்டம் மாகாணம் தாண்டிப்பரவும் என்று தொழில்துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசின் அலட்சியத்தால் பெருகும் பிரச்சினைகள்

பெரும்பாலான சீன விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்மைகளோ நியாயங்களோ ஏற்பட அதிக காலமெடுக்கின்றது. சட்டத்திருத்தங்கள் பல நேரங்களில் சாத்திமற்றே இருக்கின்றன. திருத்தங்கள் செய்யப்பட்டாலும் எதிர்பார்க்கக்கூடிய பலன்கள் இருப்பதில்லை. அப்படியே ஏதும் பலன்கள் இருந்தாலும் மிகவும் மெதுவாகத் தான் ஏற்படுகின்றன. அந்தக் காலகட்டத்துக்குள் மேலும் பல எதிர்பாராத எதிர்மறை விளைவுகள் உருவாகிவிடுகின்றன. இந்த விஷயத்தில் அரசின் நிலை ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

குடிமக்களின் பல முக்கிய அக்கறைகளை இன்னும் தீர்க்கவில்லை என்று ஒத்துக்கொள்ளும் அரசாங்கம் நீதிமன்றத்துக்கு வரும் விண்ணப்பங்களும் நியாயம் கிடைக்க ஆவன செய்வதாகத் தொடர்ந்து சொல்லி வருகிறது. அதே நேரம், மத்திய அரசின் ஆணைப்படி இவ்வாறு வழக்கு ஆவணங்களுடன் கிளம்பி பேய்ஜிங் வருவோரைத் தடுக்கிறார்கள் அதிகாரிகள். அதையும் மீறி வருவோர்களின் கூடாரங்கள் அரசதிகாரிகளால் கிழிக்கப் படுவதை அனுபவிக்கவும் வேண்டியுள்ளது. பொருட்களையெல்லாம் கண்டபடி வீசி எறிகிறார்கள். குற்றவாளிகளைப் பிடிப்பது போல சுற்றி வளைத்துப் பிடிக்கிறார்கள். சொந்த ஊர்களுக்கு அனுப்பப் படுபவர்களைத் தவிர தொழிற்கூடங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் சிறைகளுக்கு நிறையபேர் அனுப்பி வைக்கப் படுகிறார்கள்.

லியூ குவோஜின் என்றொருவர் ஹென்னன் மாகாணத்திலிருந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பேய்ஜிங் வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாகன விபத்தில் காலில் ஏற்பட்ட பலத்த அடியால் நிரந்தர உடல் குறைபாடு ஏற்பட்டுவிட்டதால் விந்தி விந்தி நடப்பார். இவர் இடித்தது அரசாங்க அலுவலக வாகனத்தின் மீது. பல ஆண்டுகளாக இவரும் அரசதிகாரிகளுக்கு அவ்வப்போது தன் சக்திக்கு மீறி கடனுடன் வாங்கி லஞ்சம் கொடுத்து ஏதேனும் நியாயம் கிடைக்குமா என்று முயன்று தோற்றுப் போனவர். நகரில் வேலையில்லாமல் குடும்பத்தைப் பராமரிக்கத் தவிக்கும் இவர் மொத்த விற்பனைச் சந்தையின் குப்பைத் தொட்டியில் கிடைத்த சக்கரைவள்ளிக் கிழங்கைக் கொண்டு வந்து நெருப்பில் சுட்டு பிள்ளைகளுக்குக் கொடுத்தார். இவரது மனைவிக்கும் உடல்நலமில்லை.

உடன் கொண்டு வந்த சொற்ப உடைமைகளையும் நகரத் திருடர்களிடம் இழந்து விட்டு அன்றாடச் செலவுகளுக்கும் உபயோகங்களுக்கும் கையில் ஒன்றுமில்லாமல் தவிப்போரும் உளர். தேடி வந்த நீதி கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் தனியாகவும் குடும்பத்துடனும் தற்கொலை செய்து கொள்வோரும் இருக்கிறார்கள். வேறு சிலர் வேலையும் கிடைக்காத நிலையில் பசி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு அதையே தொடர்கிறார்கள் சிலர். இன்னும் கொஞ்ச பேர் மெதுவாக பெருங்குற்றங்களிலும் குண்டர் கும்பல்களிலும் சேர்ந்து குற்றவாளிகள் ஆகிறார்கள்.

நகரமயமாகி வந்த போது தனிநபர் மட்டத்தில் மட்டுமின்றி நிறுவன அளவிலும் இலைமறைகாய்மறையாய் நடக்கும் ஊழல்களும் லஞ்சமும் வெண்சட்டைக் குற்றச் செயல்களும் முன்பை அதிகரித்தன. குறிப்பாக, இவை அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் மிகவும் அதிகமாக நிலவக் கூடியதாக இருந்தது. எந்த வழியிலும் எந்த விதத்திலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினர்களுக்கும் சொத்துசுகங்களைச் சேர்க்கும் போக்கு சீனமரபில் ஏற்கனவே இருந்தது தான் என்பது வரலாறு நெடுகிலும் காணக் கூடிய விஷயம். அரசியல் கோணத்தில் பார்த்தோமென்றால், ஊழல்கள் மற்றும் லஞ்சலாவண்யங்களை ஒடுக்கும் இயல்புகள் எதுவுமே கம்யூனிஸக் கட்சியில் இல்லை என்பதும் உண்மை. கட்சியின் பிம்பத்தைக் காப்பதே ‘காம்ரேட்’களின் குறியாக இருந்ததே தவிர உண்மையில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் குறைப்பதற்குமான விருப்பங்களோ முனைப்புகளோ எப்போதுமே இருந்ததில்லை. அது போன்ற வெண்சட்டைக் குற்றங்கள் புரிவோர் யாரையும் தண்டிக்கும் நியாயங்களைக் காட்டிலும், தம் செயல்களுக்கு இடையூறாக இருப்போரை அகற்றும் போக்குகளே நிலவி வந்திருக்கின்றன.

இடம்பெயர்ந்து உழைத்துப் பிழைக்கும் குறைந்த வருவாய் கொண்ட எளிய ஏழை மக்களின் வசிப்பிட நிர்வாகத்தில் இருக்கும் ஓட்டைகள் அனைத்தும் அரசதிகாரிகள் ஊழல் புரிய நிறைய இடமளிக்கின்றன. அரசதிகாரிகள் இவ்வாய்ப்புகளை சொத்துபத்துகள் சேர்க்க மிகச் சிறப்பாகப் பயபடுத்திக் கொள்கின்றனர். பொருளாதாரக் காரணங்களுக்காக நிகழும் விவசாயத் தொழிலாளர்களின் இடப்பெயர்வுகள் அரசதிகாரிகளுக்கும் அவர்களது ஊழல் திருவிளையாடல்களுக்கும் மிகவும் சாதகமாகிப் போயின.
சீனாவின் சமீபகால இடப்பெயர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அரசதிகாரிகளின் ஊழல்களும் கூடியே வருகின்றன. சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சொத்து சேர்க்கின்றார்கள். கம்யூனிஸ சித்தாந்தங்களை முற்றிலும் மறந்து போன புதிய தலைமுறை அங்கே உருவாகி விட்டது. அடிப்படை அறநெறிகள் கூட பெரும்பாலான அரசதிகாரிகளின் மண்டைகளில் மழுங்கிப் போனயிருக்கிறது.

1980களின் தொடக்கத்திலிருந்தே மாகாணங்களில் இடப்பெயர்வுகளின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அப்போதே விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களையும் பேரூர்களையும் நோக்கிப் போகும் போக்குகள் சிறுகச் சிறுகத் தொடங்கின. மிதந்தலையும் சமூகமும் உருவாக ஆரம்பித்தது. அப்போதிலிருந்தே நகரங்களின் மக்கள் தொகை கூட ஆரம்பித்து விட்டது. இந்த நகர்வுகள் படிப்படியாகச் சமூக, இட, பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆரம்ப கட்டத்தில் அம்மாற்றங்கள் நன்மை நாடுவனவாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். அதே வேளையில், கலாசாரப் புரட்சியின் போதும் பிறகும், துவக்க காலக் கம்யூனிஸ்டு ஆட்சியில் இருந்த சட்ட ஒழுங்கு குறைந்து பாதுகாப்பின்மை பெரிதும் கூடியது என்பதையும் மறுக்க முடியாது. சமீபகாலங்களில் ஏழை-பணக்காரர்களிடையே நிலவுகிற இடைவெளியும் முக்கியக் காரணம்.

சீனப் பாட்டாளி மக்களுக்கு நற்பொழுது விடியுமா?

இடம்பெயர் தொழிலாளிகளே சமூகத்தில் கூடி வந்த குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணம் என்று அதிகாரத்துவ கணக்கெடுப்புகள் எல்லாமே சொல்கின்றன. சில நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி குற்றச்செயல்களில் பாதிக்கும் மேல் இவர்கள் செய்தவை. 70-80% திருட்டுகள் இந்த சமூகத்தின் செயல்கள் தான். இம்மக்களின் எண்ணிக்கை அதிகரித்த போது குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியது.

உடைந்த குடும்பங்கள், பிள்ளைகளைப் பிரிந்து நகரில் உழைக்கும் பெற்றோர், அதனால் பாட்டி தாத்தாக்களிடம் விடப்படும் பிள்ளைகளின் தரமற்ற கல்வி போன்ற முக்கிய குழப்பங்களையும் சிரமங்களையும் சந்திக்கும் தொழிலாளிகள் இடம்பெயர்ந்த இடத்தில் எதிர்கொள்வது வாழுந்தரமற்ற கேவலமான வசிப்பிடமும் காப்பீடுகளோ சலுகைகளோ இல்லாத மருத்துவச் செலவுகளும். வேலையிட விபத்து, காயம், குறைந்த ஊதியம் போன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் புகார் கொடுக்கவோ நியாயம் கிடைக்கவ்ஓ பெரிய அதிர்ஷ்டம் வேண்டும்.

இத்தனை சவால்கள் நிறைந்திருக்கும் இடம்பெயர் வாழ்க்கையைத் தொழிலாளிகள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயற்கை தான். எளிமையாகச் சொல்வதென்றால், நகர/ பெருநகரங்களில் வாய்ப்புகளும் ஊதியங்களும் அதிகம் என்பது தான் ஒரே பதிலாக இருந்து வருகிறது. தொழிற்சாலைகளில் கிடைக்கும் ஊதியம் மற்ற இடங்களை விடக் குறைவு தான். ஆனால், விவசாயம் கொடுக்கும் வருவாயை விடக் கூடுதல். தொழிற்சாலையில் பணிபுரியும் ஓர் இளம் தொழிலாளி பணம் சேர்த்து சொந்த கிராமத்தில் வீடு கட்டி விடுகிறான். அங்கேயே பலகாலமாக விவசாயம் செய்யும் மத்திய வயதினரால் பெரும்பாலும் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட முடிவதேயில்லை.

அடிக்கடி வேலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதால், இடம்பெயர் தொழிலாளிகளுக்கு நண்பர்களோ நட்புவட்டங்களோ உருவாவதற்கு வழியில்லாமலே இருக்கும். சொந்த ஊருக்கும், குடும்பத்துக்கும் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வதைத் தவிர பெரும்பாலும் தனிமையிலேயே வாழ வேண்டியுள்ளது. பெரிய தியாகங்களுக்கிடையில் தான் விவசாயத் தொழிலாளிகள் இடம்பெயர்கின்றனர். குடும்பம் பிள்ளைகுட்டிகளை விட்டு விட்டு வேறிடம் போகும் இவர்கள் இழப்பது ஏராளம். சுகாதாரம் மற்றும் கல்விச் சலுகைகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. கல்விபெற்றோருக்கு வாழ்க்கை சற்றே இலகுவாக இருந்தபோதிலும் அவர்களுக்கும் வேறு மாதிரியான சவால்களைக் கொணர்கின்றன. கல்வியுடன் பணமும் இருந்தால் இடம்பெயர்ந்தோர் வாழ்க்கை கொஞ்சம் சுலபமாகலாம்.

இடம்பெயர் சமூகத்தினரின் குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது வறுமையும் சமூகத்தில் நிலவும் பொருளாதார வேறுபாடுகளும். பணக்காரர்களும் பெரும்பணக்காரகளும் வாழும் நகர வாழ்க்கை எளியமக்களுக்கு ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களுடைய வாழ்க்கை முறையைக் காணும் இவர்கள் தம் வாழ்க்கையில் செய்ய முயலும் மாற்றங்களுக்கு நகர விலைவாசி இடமளிப்பதில்லை. சட்டவிரோதமாய் வேலைக்கமர்த்தினால் அபராதமுண்டு என்று தெரிந்தும் கூட இடம்பெயர்ந்து வரும் இவர்களிடம் முறையான அடையாள அட்டை இல்லாவிட்டால், இவர்களது உழைப்பை மிகக் குறைந்த ஊதியத்திற்கு உறிஞ்சவே காத்திருக்கின்றன நிறுவனங்கள். பொருளாதார மேன்மையைக் கொண்டுவர இந்தத் தொழிலாளர்கள் எத்தனை முயன்றாலும் முடியாமலே போகிறது. எண்ணற்ற சவால்களையும் கடந்து தான் இந்தத் தொழிலாளர்கள் தம் வாழ்வைத் தேடியபடியே திரிகிறார்கள். பணம், பொருள் சார்ந்த திருட்டுகள் நடைபெறுவதற்கான காரணமாக சமூகவியல் வல்லுனர்கள் சொல்வது போல குறைந்த வருவாய், வேலையில்லாமை போன்றுடன் சேர்ந்து குற்றச் செயல்களை அதிகரிக்கின்றன. இடப்பெயர்வுகளையும் அதனால் அதிகரிக்கும் குற்றச் செயல்களையும் சமாளிப்பதே தொடர்ந்து நகரமயமாகி வரும் இன்றைய சீனத்தின் முக்கிய சவால்கள்.

(தொடரும்)

[1] இதே போன்ற கருத்துகள், அரசியல் முழக்கங்களாகப் பொதுமேடையில் பிரச்சாரப்படுத்தப்படாமல், பண்பாட்டு அரசியல் விளக்கங்களாக, பட்சங்களாக, மென் – மூளை சலவைச் செயல்களாக சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அமெரிக்காவில் புழங்கின. முன்னது, எது வாழ்வில் வெற்றிக்கு உதவுகிறதோ அதுவே சரியான கருத்து, கொள்கை, நடத்தை என்ற கருத்து, ‘நடைமுறை வாதம்’ (Pragmatism) என்று அறியப்பட்டது. ’தேவனின் அங்கீகரிப்பு பெற்றவன் வென்று வாழ்வான்’ என்ற நம்பிக்கையால், வென்றவர்களாகத் தெரிபவர்களே தேவ அங்கீகரிப்புள்ளவர்கள் எனக் கருதப்பட வேண்டும் என்றும், அதனால் எல்லாரும் வெற்றியையே நாட வேண்டும் என்றும் கருத்தியல் பரப்பப் பட்டது. இது அமெரிக்காவின் தோற்றுவாய்க்குக் காரணமான இறையியல், கருத்தியல், பெரும்புனைவு, மேலும் இன்னும் தொடரும் ஒரு பெருமித வாதம் (Triumphalism). இரண்டின் இணைப்பால் அமெரிக்க அரசும், பெரும்பான்மை மக்களும் இன்னமும் தாம் உலகில் எந்த மூலையிலும் ஊடுருவி தம் விருப்பை நிறைவேற்றிக் கொள்வது சரியே, ஏனெனில் தாம் தேவ அங்கீகாரம் பெற்ற வெற்றி நாடு என்றே நம்புவதாகத் தெரிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் எனப்படும் கருத்தியல் இங்கிருந்தே வேர் பிடித்துக் கிளைத்து வளர்ந்திருக்கிறது என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர்கள் பொதுவாக முதலியத்தின் எதிர்ப்பாளர்கள் என்ற போதும் அது அவர்களுடைய வாதங்களை மூளி ஆக்கி விடாது. உலகப் புரட்சி மூலம் உலகப் பாட்டாளிகளை விடுவிக்கப் போவதாக முழங்கிய செஞ்சீனாவின் அரசும், கம்யூனிஸ்டு கட்சியும் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பு/ பிம்பங்கள் போல ஆனது வரலாற்றின் பழிவாங்கல் என்று பார்க்க முடியலாம். தம் விருப்புக்கு வரலாற்றை வளைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த 20 ஆண்டு காலச் சீன வரலாறு உடைக்கிறது என்றும் வாதிடலாம்.