kamagra paypal


முகப்பு » கவிதை, மொழிபெயர்ப்பு

பாத்திரங்கள் சுருங்கும்

பாத்திரங்கள் சுருங்கும்

குழந்தைகள் வளர்கின்றன,
சந்தேகமில்லை சந்தோஷமாகத்தான்
வினைச்சொற்கள் நம் கண்முன்
வீங்குகின்றன அல்லது பிய்யுமெனப்
பிதுங்குகின்றன, எல்லாமே எதையோ செய்கின்றன
வேறு வழியின்றி சந்தோஷமாய் இருக்க
பெர்னார்டி ஒளிப்பட நிலையத்தில் ஓட்ஜ் நகரின்,
17 பயொதிர்கொவ்ஸ்கா தெருவில் என் இரண்டு வயது அம்மா
அவளது தாய் மடியில் அமர்ந்திருக்கிறாள்
கைகளை அவள் கழுத்தை சுற்றிப்போட்டு.
”நெகடிவ்கள் சேமிக்கப்படும்.”
மன்னிக்கவும், எத்தனை காலம்வரை?
ஒரு கலைப் பணிமனையைத் தேடுகிறேன்
நானே, எங்கே அத்தனையும் அனுதினமும்,
பதிவாகிறதோ, நெகடிவ்கள்
தொடர்ந்து சேமிக்கப்பட்டு
இப்போதும் பதிக்கப் படுகின்றனவோ.
அங்கு படச்சுருளுள் பதிவாவது,
வகுப்புகளுக்குப்பின்
பள்ளியில் மதிய உணவு முடித்தபின்
வீட்டுக்குப் போவதைப்போல.
இன்று என்ன சாப்பிட்டாய்?
காஷா கஞ்சி அந்தச் சுவையான மாமிசக்
குழம்புடன். அனைத்தையும்
தொடமுடியும், சுவைக்கமுடியும்.
சீட்டு வைக்க வேண்டாம்
கதவில்: ”தயவு செய்து சத்தமாய் தட்டுங்கள்.
அழைப்புமணி நலிவடைந்துள்ளது!”
ஏனெனில் முதியவர்களுக்கு செவியும்
பசியும் நன்றாய் இருப்பதால், அவர்கள் வாந்தி எடுக்க வேண்டாம்.
புதிர்கள் நிறைந்த ஒரு ஆடை அலமாரி, இழுப்பறைகளுடன்,
அதன் கதவின் உள்பக்கம்
ஒரு விசாலமான கண்ணாடி (வளைவுகளுடன்,
வியன்னாவிலிருந்து), அதில் நான் சொல்லியிருக்கும்,
மேலும் இனியும் சொல்லப்போகும் அத்தனையும்
தன்னைப் பார்த்துக்கொள்கின்றன.
(கீல் திருகு இன்னும் நலியவில்லை, கடந்த காலம்
இன்னும் நின்று விடவில்லை). தபால்காரர்
கொணர்கிறார் கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும்,
ஆனால் தபால்பெட்டியில், என்ன அபத்தம்,
நூலகத்திலிருந்து கோரிக்கைச் சீட்டு காத்திருக்கவில்லை,
உம் கணிப்பில் அருமையான
அந்தப் புத்தகத்தை, திருப்பக் கோரி: ஒவ்வொரு
நோயாளியையும் குணப்படுத்த முடியும்
என்ற அப்புத்தகம்
இப்போது உபயோகப்படும்
வேறு யாருக்கேனும்.

கவிஞர் குறிப்பு : பியொட்ர் சோமர்(Piotr Sommer) என்ற போலிஷ் கவிஞரது கவிதைகள் இவை. இக் கவிதை அவரது “Utensils Shrink” என்ற கவிதையின் இங்கிலீஷ் வடிவின் தமிழாக்கம். இங்கிலீஷுக்கு மாற்றியவர்கள் மார்டின் W, மேலும் க்ரிஸ்டியன் ஹாகி.  பதிப்பித்த பத்திரிகை: வோர்ட்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் (Words Without Borders)

இங்கு சோமரின் கவிதைகள் பற்றிய ஒரு மதிப்புரையைக் காணலாம்:

http://www.guardian.co.uk/books/2005/sep/17/featuresreviews.guardianreview17

அந்தோனியோ கமொனெடாவுக்காக

அந்தோனியோ கமோனெடாவைப்போல
எழுதவிரும்பினேன்
அதனால் லெயோனுக்குச் சென்றேன்.
கடவுளிடம் என்னை மறக்கச் சொல்வதற்காக
தேவாலயத்துக்குப் போய் விட்டு,
கவிஞரின் வீட்டுக்குப் போனேன்.
மேதையே, எனக்குச் சொல்லுங்கள் என்றேன்,
கவிதையின் ரகசியத்தை எனக்கு வெளிப்படுத்துங்கள்.
நான் மேதை ஒன்றும் அல்ல, ஒரு வாணிகன்
உபயோகமற்ற பொருட்களுக்கு. இப்பொருட்களிடையில்
கவிதை தன் பரிசுகளை அளிக்கிறாள்
ஒரு உணர்வற்ற தேவதை போலிருந்து.
உங்களுக்கு கற்பனை செய்ய முடிகிறதா?
நான் எழுதுவது போல் எழுத
வேண்டுமென்றால் எழுதுங்கள்.
பின்பு அதை அழித்துவிட்டு மீண்டும் எழுதுங்கள்.
உங்களைப் போல் எழுதுங்கள், முடிந்தால்,
இல்லையேல் முலாம்பழத் தோட்டத்துக்குப் போய் ஒன்றைத்
திருடி வீட்டுக்குப்போய் அதன்
இனிப்பான அரற்றலைச் சுவையுங்கள்.
எழுதாமல் இருப்பதற்கு
முன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது
சிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி
வளர்த்திருக்கும் ரகசியம். மேலும் இங்கே
லெயோனில் ஒரு தேவாலயமும்
சில மதுக்கூடங்களும் உண்டு அங்கே கடவுள்
எப்போதும் இருக்கிறார். நான் இங்கு
எழுதும்போது, நான் தனியே இருக்கிறேனோ இல்லையோ,
எனக்குத் தெரியவில்லை, நான் தனியே இருக்கிறேனா
இல்லையா என்று.

இரண்டாவது கவிதை ”For Antonio Gamoneda” என்ற ஸ்பானிய மொழிக் கவிதையின் இங்கிலீஷ் வடிவிலிருந்து தமிழாக்கப்பட்டது.  இங்கிலீஷ் மொழியாக்கம்: ஸமாந்தா ஷ்னீ.

இங்கிலீஷ் வடிவைப் பதிப்பித்த பத்திரிகை: வோர்ட்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் (Words Without Borders)

இக்கவிதையை எழுதியவர்:  யுவான் அண்டோனியோ மஸோலிவெர் ரொடீனாஸ் (Juan Antonio Masoliver Ródenas) எனும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கவிஞர். கடலன் (catalán ) மொழி இவரது தாய் மொழியாக இருந்திருக்கலாம் என கிட்டும் தகவலிலிருந்து ஊகிக்க முடிகிறது. அம்மொழியிலும் இவரது கவிதைகள் ஒரு புத்தகமாகக் கிட்டுகின்றன. இவர் இங்கிலாந்தில் ஒரு பல்கலையில் ஸ்பானிய மொழி இலக்கியம் போதிக்கும் பேராசிரியராக இருந்திருக்கிறார்.  இவரது ஒரு வாழ்க்கைக் குறிப்பை இங்கு காணலாம்:

http://wordswithoutborders.org/contributor/juan-antonio-masoliver-rodenas/


இரு கவிதைகளையும் தமிழாக்கியவர்: உஷா வை.

Comments are closed.