தணிக்கையாளர்கள்

பாவம் ஹுவன்! அரசாங்கத்திடம் வசமாக மாட்டிக் கொண்டுவிட்டான். எதை தன்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைத்தானோ அதுவே அவனுக்கு வினையாக அமைந்துவிட்டது. இதெல்லாம் எப்போதும் கவனக்குறைவுடன் செயல்படுபவர்களுக்கு நிச்சயம் அடிக்கடி நடக்கும். மகிழ்ச்சி என்பது எப்போதும் வில்லாங்கமான ஒரு உணர்ச்சி. அதை யாரும் கொஞ்சம் கட்டுக்குள் வைப்பது அவசியம். ஹுவன் அதை செய்யத் தவறினான். மரியானாவின் தற்போதைய முகவரி அவனுக்கு நம்பத்தகுந்த ஒருவரிடமிருந்து கிடைத்தது. அவள் தற்போது பாரீஸில் இருந்தாள். இவனுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த நொடியே அவளுக்கொரு கடிதம் எழுதத் துவங்கிவிட்டான். அந்தக் கடிதம்; அங்கு துவங்கியது பிரச்சனை. கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. அன்றிலிருந்து அவனால் எந்த வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபட முடியவில்லை. நிம்மதியாக உறங்க முடியவில்லை. அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று யாரிடமும் அவன் சொல்லவில்லை.

கடிதத்தில் எழுதப்பட்ட விஷயம் எதுவும் தனக்கு பிரச்சனை ஏற்படுத்தாது என்று அவனுக்கு உறுதியாக தெரியும். ஆனால், மற்ற விஷயங்கள்? நாட்டில் அனுப்பப்படும் அனைத்துக் கடிதங்களும் ”அவர்களால்” படிக்கப்படும்; வரிக்கு வரி, வரிகளுக்கிடையே கூட. அங்கங்கிருக்கும் நிறுத்தக்குறிகள் கூட கவனிக்கப்படும்; கடிதம் எழுதும்போது ஏதும் கறை ஏற்பட்டிருந்தால் அது கூட கவனிக்கப்படும். கடிதத்தாளின் ஓரங்கள் மடங்காமல் இருந்தால் இன்னும் நல்லது. ஏதேனும் சிறிது சந்தேகம் ஏற்பட்டால் கூட கடிதம் அனுப்பியவருக்கோ அல்லது பெறுநருக்கோ எதுவும் நடக்கலாம். அவர்களின் சுதந்திரம் முற்றிலும் முடக்கப்படலாம். அவர்கள் திடீரென மாயமாகலாம். பிறகு அவர்களை குறித்த எந்த தகவலையும் யாராலும் பெறமுடியாமல் போகலாம். ”அவர்கள்” நினைத்தால் எதுவும் சாத்தியம். எந்த கடிதமும் ”அவர்கள்” கண்காணிப்பை தாண்டி தான் ஒருவரை கடிதம் சென்றடையும். கடிதம் சென்றடைய ஓரிரு மாதமோ, சமயங்களில் ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம்.

“அவர்கள்”? அரசாங்கத்தின் “ரகசிய தணிக்கையாளர் படையினர்”. தாங்கள் செய்யும் பணி உலகநன்மைக்கு என்ற “உயர்ந்த” எண்ணம் எப்போதும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்களுக்கு அசாத்திய பெருமையுண்டு. அவர்கள் உலகம் முழுதும் பரவியுள்ளனர். அவர்கள் நினைத்தால் உலகத்தின் எந்த மூலைக்கும் மிக எளிதாக செல்லமுடியும். ஆகையால் பாரீஸில் இருந்தாலும் மரியானா ஒன்றும் அவர்களிடமிருந்து தொலைவில் இல்லை. அவர்களால் மரியானாவிற்கு நிச்சயம் துன்பம் விளைவிக்கமுடியும். இது தான் ஹூவானின் கவலை.

ஹூவான் அவர்களிடமிருந்து மரியானாவை காக்க ஒரே வழிதான்; அனைவரும் கடைபிடிக்கும் அதே வழி. அமைப்பின் உள்ளேயிருந்த படியே அந்த அமைப்பின் செயல்பாடுகளை குலைப்பது. பிரச்சனையை அதன் வேர் வரை சென்று களைவது. அதாவது ரகசிய படையில் சேரவேண்டும். ரகசியபடையில் சேர்ந்துவிட்டால் அந்தக் கடிதத்தை நிச்சயம் கைபற்றலாம். தான் எழுதிய கடிதம் தன் கைக்கு சிக்கியவுடன் அந்தப் வேலையை விட்டு விலகிவிடலாம். இது ஒன்றும் யாரும் செய்யாத விஷயமல்ல. தனக்கும் இது நல்லபடி நடக்கும் என்று ஹூவான் நம்பினான்.

ரகசிய படையில் தணிக்கையாளராக சேர ஹூவன் விண்ணப்பித்தான். அந்தப் படைக்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வேலைக்கு ஆட்கள் தேவையாயிருந்தது. அதனால் ஹூவானுக்கு உடனே வேலை கிடைத்தது.

இந்தப் படையில் சேர முன்வரும் பலரும் தன்னுடைய தனிபட்ட காரணங்களுக்காகத் தான் இங்கு வருகின்றனர் என்பது அந்த தலைமையதிகாரிக்கு தெரியாமலில்லை. இருந்தாலும் அவர்களை பணிக்கு சேர்த்துக் கொண்டார். ஏனெனில் இந்தப் அப்பாவிகளின் நோக்கம் நிறைவேறுவது அவ்வளவு சுலபமில்லை என்பது அவருக்கு உறுதியாகத் தெரியும். அப்படியே அவர்கள் நோக்கம் நிறைவேறினால், ஓரிரு கடிதங்கள் தன் பார்வைக்கு வராமல் போகும். அதனால் அரசாங்கத்திற்கு பெரிதாக ஒன்றும் நஷ்டமில்லை. இப்படித்தான் ஹூவானுக்கு “தகவல் தொடர்புத் துறை”யின் “தணிக்கையாளர்கள் படை”யில் வேலை கிடைத்தது.

அந்த கட்டிடம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு அழகாக இருந்தது. மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. ஆனால் உள்ளே நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. அவன் அடிப்படை படிநிலையான 11-ஆம் நிலையில் இருந்தான். அவனின் தற்போதைய பணி கடிதங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா என்று பார்ப்பது. ஒவ்வொரு நாளும் மிகுந்த கவனத்துடன் கடிதங்களை பிரிக்க வேண்டும். அதில் வெடிபொருட்கள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். மிக அபாயமான பணி. ஆனால், தன் குறிக்கோள் மரியானாவிற்கு எந்த துன்பமும் நேராமல் காப்பது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவன் இந்த வேலையிலிருந்து அபாயத்தை மீறி அதில் ஈடுபடத் துணிந்தான். ஆகையால், எவ்வளவு கவனம் செலுத்தமுடியுமோ அவ்வளவு கவனம் கொண்டு தன் பணிகளை செவ்வனே செய்தான். முதலில் சிரமப்பட்டாலும், போகப் போக அந்த வேலைக்கு தகுந்தாற்போல் அவன் தன்னை மாற்றிக் கொண்டான்.

ஒரு நாள் ஒரு கடிதத்தை பிரிக்கையில் அதிலிருந்த வெடிகுண்டு வெடித்ததில் துறைப் பணியாளர் ஒருவரின் கை துண்டானது. முகம் முற்றிலும் சிதைந்தது. துறை அதிகாரி இது அந்தப் பணியாளரின் கவனக்குறைவால் நேர்ந்த விபத்து என்று சொல்லிவிட்டார். மற்ற பணியாளர்கள் வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அந்த ஆபத்தான பணியை மேற்கொண்டனர். பணியாளர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் ஆபத்தான பணிக்கு கூடுதல் சம்பளம் வழங்க கோரிக்கை விடுத்தனர். ஹூவான் இதில் கலந்துகொள்ளவில்லை. மேலும், இந்தப் போராட்டத்திற்கு அவன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தான். இதையறிந்த அந்த துறை அதிகாரி அவனுக்கு பதவியுயர்வு அளித்தார்.

தன் சுயநலத்துகாக பிறரை சுரண்டுவது அவனுக்கு தவறாகப்படவில்லை. “ஒரு முறை செய்வது வாழ்நாள் பழக்கமாகிவிடாது” என்று நம்பினான். இப்போது அவன் 10-ஆவது படிநிலைக்கு உயர்ந்திருந்தான். கடிதங்களில் ஏதும் அபாயமான பொடிகள் அனுப்பப்படுகிறதா என்பதை சோதிப்பது தான் அவனது தற்போதைய பணி. முன்பு இருந்ததைப் போல் இனிமேல் பிறரது சொந்த வாழ்க்கையில் ஈடுபடாமல் வாழமுடியும் என்று நம்பினான்.

தன்னுடைய சீரிய உழைப்பால் 10-ஆவது படிநிலையிலிருந்து வெகு வேகமாக 5-ஆவது படிநிலைக்கு ஹூவான் முன்னேறினான். அவனுக்கு ஏக மகிழ்ச்சி. இந்தத் துறையில் தான் கடிதங்கள் படிக்கக் கிடைக்கும். தான் மரியானாவிற்கு எழுதிய கடிதம் மற்ற நிலைகளை தாண்டி இப்போது தான் இந்தத் துறைக்கு வந்திருக்கும். நிச்சயம் அந்தக் கடிதத்தை கைப்பற்றிவிடலாம் என்று மகிழ்ந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. அவன் தற்போது மேலும் விழிப்புடன் கடிதங்களை படிக்க ஆரம்பித்தான். தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.

தீவிரமான அவன் உழைப்புக்கு பலன் கிடைத்தபடியிருந்தது. அடுத்தடுத்து பதவியுயர்வு பெற்று மேலே உயர்ந்தபடி இருந்தான். தற்போது 2-ஆம் படிநிலைக்கு உயர்ந்திருந்தான். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் அவனுக்கு வரும் கடிதங்கள் குறைவாகத்தான் இருந்தது. மற்ற படிநிலைகளை தாண்டி கடிதம் அவ்வளவு எளிதாக அவனை வந்தடைந்துவிடாது. ஆனால் வேலை பளு மிக அதிகமாக இருந்தது. கடிதங்களை மின்-நுண்ணோக்கி மூலம் கூர்ந்து வாசிக்கவேண்டும். அதற்காக தன் புலன்களை மிக உச்சநிலையிலேயே வைத்திருக்க விரும்பினான். அநாவசியமாக ஒரு சிறு புள்ளி இருந்தால் கூட அவன் அதை அலட்சியம் செய்யத் தயாராகயில்லை. பகல் பொழுதில் அவன் வேலையில் காட்டிய தீவிரத்தால் இரவு வீட்டிற்கு திரும்புகையில் அவன் முற்றிலும் சோர்ந்திருந்தான். பசித்தால் ஒரு சில பழங்களை சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடுவான். ஆனால் நிம்மதியான உறக்கம். அரசாங்கத்தின் சொல்படி நடக்கும் நம்பிக்கைக்குரிய சேவகனாக தன்னை உணரும் ஒவ்வொருவருக்கும் வரும் நிம்மதி.

அவன் தாய் அவனது இந்த போக்கைக் கண்டு மனம் வருந்தினாள். தன்னை மகனை மீண்டும் பழையபடி மாற்ற முயற்சித்தாள். ஆனால் அவளுக்கு அதில் தோல்வியடைந்தாள். ஹூவானுடன் பழக பல பெண்கள் விருப்பம் தெரிவிப்பதாக சொன்னாள். அது உண்மையிமில்லைதான். இருந்தாலும் தன் மகனை இத்தகைய பொய்களால் மாற்ற முயன்றாள். ஆனால் ஹூவான் இத்தகைய அநாவசியமான செயல்களில் ஈடுபடி விரும்பவில்லை. பிறருடனான தொடர்பு தன் புலன்களின் கூர்மையை குறைத்துவிடும் என்று நம்பினான். அவன் அரசாங்கத்தின் உண்மையான ஊழியன். தான் செய்யும் பணி அரசாங்கத்திற்கு விசுவாசமானது. தான் செய்யும் பணி சுயத்தை வெறுக்கக் கோரினாலும், அது மிக உன்னதமான பணி. அந்த பணியை செம்மையாக மேற்கொள்ள தன் புலன்கள் மிகக் கூர்மையாக இருக்க வேண்டியது அவசியம் என்று நினைத்தான்.

ஒரு கட்டத்தில் அவன் தன் துறையின் பிற பணியாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினான். அவன் குப்பைக்கூடைக்கு தள்ளிய கடிதங்கள் யாவும் பிற தணிக்கையாளர்களுக்கு பாடமாக அமைந்தது. அனைவரும் தணிக்கை செய்வதில் ஹூவானின் வழிமுறைகளை பின்தொடர வலியுறுத்தப்பட்டனர். அவன் புகழ் துறையெங்கும் பரவியது. தன்னைக் குறித்தே ஹூவானுக்கு மிகப்பெருமையாக இருந்தது. தன் உண்மையான வாழ்க்கைப் பாதையே இது தான் என்று எண்ணினான். இந்த நேரத்தில் மரியானாவிற்கு அவன் எழுதிய கடிதம் அவனிடமே வந்து சேர்ந்தது. வேறு எந்த சிந்தனையுமின்றி அதை குப்பைக்கூடைக்கு அனுப்பினான். அடுத்த நாள் காலை அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்தத் துறையின் பல விசுவாசமான முன்னாள் பணியாளர்களுக்கு கிடைத்த அதே ”பரிசு” அவனுக்கும் கிடைத்துவிட்டது.

(முற்றும்)

லூயிசா வேலன்சொய்லா அர்ஜெண்டினாவின் முக்கிய எழுத்தாளர். ஆறு நாவல்கள் மற்றும் எட்டு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவரது படைப்புகள் பாடப்புத்தகங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.