மகரந்தம்

பிறநாட்டு நிருபர்களை அடித்துத் துவைக்கும் சீனா:

மத்தியக்கிழக்கு நாடுகளில் நடைபெற்ற பெரும் மக்கள் எழுச்சியைப் போலவே சிறிய அளவில் அமைதியான முறையில் சீனாவிலும் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். உள்நாட்டில் இது குறித்து தகவல் ஏதும் வெளியாகாதபடி சீனா பார்த்துக்கொள்ளும். ஆனால் பிறநாட்டு ஊடகங்களை என்ன செய்வது? அந்த பிறநாட்டு நிருபர்களை மிரட்டுவதும், அவர்கள் தகவல் சேகரிக்க முயன்றால் அடித்து உதைப்பதும் தான் ஒரே வழி. சீனா அதை வஞ்சனையில்லாமல் செய்கிறது. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள சீன உள்நாட்டு பாதுகாப்புத் துறை இந்த பணியை செவ்வனே நிறைவேற்றுகிறது. இந்த அமைப்பின் செயல்பாட்டை இன்னும் வலுப்படுத்த கூடுதல் நிதியை செலவழிக்கவும் சீனா தயாராக உள்ளது.

http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12666701

லியனார்டோ டா வின்ஸியும் டார்வினும்:

லியனார்டோ டா வின்ஸி குறித்து கூறுவதுண்டு: ஐரோப்பிய புத்தெழுச்சியின் போது அவரே கலையையும் அறிவியலையும் இணைத்த பெரும் மேதை என்று. ஆனால் அதன் பிறகு டார்வினிய அறிவியலின் உதய காலத்தில் உயிரியலாளர் ஹேகல் நீர் வாழ் நுண்ணுயிர்களை ரசித்து ஓவியங்களாக தீட்டியிருக்கிறார். இதில் தெரிவது அறிவியல் வகைப்படுத்தல் மட்டுமல்ல என்பது தெளிவு. நுண்ணுயிரிகளை இப்படி வகைப்படுத்தி வரைவது ஒரு புள்ளியில் தியானமாகவே மாறியிருக்கிறது போலும் ஹேகலுக்கு, ”eternal unity in manifold manifestation,” எனப் பேசுகிறார். லெப்ரூன் என்கிற தத்துவ துறை மாணவர் இவற்றை ஒரு அழகிய விவரண படமாக எடுத்திருக்கிறார். மேலதிக விவரங்களுக்கு: http://www.the-scientist.com/news/display/58110/


அதிகரித்து வரும் அணு உலை விபத்துகள்:

சர்வவல்லமை பொருந்திய தொழில் நுட்பத்தால் வல்லாண்மை அடைந்து விட்டதாகக் கருதப்பட்ட ஜப்பான், இயற்கையின் வலிய கரங்களால் முகத்தில் அறையப்பட்டிருக்கிறது- மனிதனின் தொழில்நுட்பத்துக்கு எதிராக இயற்கை பிரயோகிக்கக் கூடிய பேராற்றலுக்கு அவன் விடை கண்டாக வேண்டும். முன்னெப்போதும் இல்லாத பின்னடைவை ஜப்பானியர்கள் இப்போது கண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரும் அணு குண்டுக்களும்கூட இப்படிப்பட்ட அடியை ஜப்பானுக்குத் தந்திருக்காது. இருப்பினும் துவளாமல் எஞ்சிய எச்சங்களைக் கொண்டு அமைதியாக அவர்கள் புனரமைப்புப் பணியில் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.

http://www.spiegel.de/international/world/0,1518,756328,00.html

நம்மில் பலரும் அறியாத, அறிய விரும்பாத அணு உலை விபத்துகளின்  பட்டியல் வளரத் துவங்கியிருக்கிறது.  அவை குறித்த ஒரு சர்வே இங்கே –

http://www.spiegel.de/international/world/0,1518,756369,00.html

சீனப் பொருளாதாரம் பின்னடைவு காணுமா?

சீனா கட்டுமானத் துறையில் மிகையான அளவில் முதலீடு செய்திருப்பதன் பலனாக அங்கு புல்லட் ரயில்கள் காலியாக ஓடுகின்றன. சிறுநகர்களின் கட்டிடங்களில் குடியிருக்க ஆளில்லை, விமான நிலையங்களில் பயணிகள் இல்லை, அரசு கட்டிடங்களில் பணியாற்ற அலுவலகங்கள் இல்லை, தனியார் குடியிருப்புகளும் வாங்க ஆளின்றி கிடக்கின்றன. காரணம் இவை எல்லாம் அபரிமிதக் கட்டணங்கள், விலை வைத்து விற்கப்படுவதுதான். சீன அரசு சீன மக்கள் தம் உழைப்பின் ஊதியத்தால் நல்ல வசதிகளை அனுபவிப்பதைத் தடுப்பதேன்? மேற்படி பொருட்கள் நுகரப்படாமல் சும்மா கிடப்பதால் யாருக்கு என்ன பயன்? உள்நாட்டு வளம் பரவலாக விநியோகிக்கப்பட்டால் பணவீக்கத்தில் கொண்டு நிறுத்திவிடும் என்றும், அதனால் சீனப் பொருட்கள் உலகச் சந்தையில் போட்டியிட முடியாதென்றும் சீன ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். ஏற்றுமதியால் செலுத்தப்படும் வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு அரசு தன் பொருளாதாரக் கொள்கையை அமைப்பது என்பது புலி வாலைப் பிடிப்பதைப் போல ஆபத்தானது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டை இப்படி வீணடித்தால் சீனப் பொருளாதாரம் பின்னடைவு காணும் என்று  பொருளாதார குரு நூரியல் ரூபினி கணித்திருக்கிறார். சீனா அவரது கணிப்பைப் பொய்ப்பிக்குமா? வளர்ச்சிக்கு வேண்டிய உழைப்பை நல்க ஆட்களும்,  பயன்படுத்தத் தேவையான தொழிலறிவும் சீனாவுக்கு இருக்கிறது, ஆனால் பொருளாதாரத்தை வழிநடத்தத் தேவையான அரசியல் சூட்சுமமும், உறுதியும் இருக்குமா? இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

http://www.slate.com/id/2291271/

அமெரிக்காவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்

மெயின் மாநிலத்தில் சிறுவர் தொழிலாளர்கள் குறித்த சட்டம் ‘இளக்கப்’ பட்டிருக்கிறது.  அதாவது இத்தனை ஆண்டுகளாகச் சிறுவர் நலம் காத்த விதிகள் இனி கடைப்பிடிக்கப்பட வேண்டாம்.  கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியா சீனா போன்ற நாடுகளை நோக்கி சிறுவரைத் தொழிலாளராகப் பயன்படுத்துவது பெருங்குற்றம் என்று, மனித உரிமைப் பறிப்பு எனவும் சுட்டுவிரலை நீட்டி எச்சரித்தும், குற்றம் சாட்டியும் வந்த அமெரிக்கா இன்று ஒவ்வொரு மாநிலமாக நவீன காலத்துக்கு முந்தைய காலத்துக்குச் சரிந்து கொண்டிருக்கிறது.

அனேக மாநிலங்களில் இப்போது எந்தப் பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை இல்லை, அப்படிக் கருக்கலைப்பு செய்ய மருத்துவ மனைகளே இராது, இருந்த ஓரிரு மருத்துவர்களையும் குண்டு வைத்துத் தாக்கி, அல்லது சுட்டுக் கொலை செய்து அச்சுறுத்தி விரட்டி விட்டனர்.

பல மாநிலங்களில் தெருக்களில் உலவ அடையாளச் சீட்டு இல்லாமல் போனால் சிறைவாசம் சாத்தியம். பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் போன்ற பல இடங்களுக்குத் துப்பாக்கியோடு செல்ல உரிமை வழங்க வேண்டும் என்று மறை கழண்ட (மத)அமைப்புகள் கத்தி வருகின்றன. அவற்றுக்குச் செவி சாய்க்க அவர்களையும் விட கூடவே மறை கழண்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது உண்மைதான், ஆனால் பணம் போனால் பத்தும் பறந்தும் போம் என்பார்களே அதுவும் அமெரிக்கர்களைப் பொறுத்து மிகச் சரியே. ஏழ்மை, வேலையின்மை, மருத்துவ வசதிகள் இன்மை, வீடின்மை, பசி ஆகியன அமெரிக்க ஏழைகளைப் பெரிதும் வருத்தத் துவங்கிய இந்த ஆண்டுகளில் அமெரிக்க மேல்தட்டினர் சராசரி மக்களை மேன்மேலும் மிருகங்களாக்க என்ன வழி என்று தேடி, ரூம் போட்டு ஆலோசிக்கின்றனர் என்பது தெளிவு. வலது சாரிச் சிந்தனை என்பது எத்தனை தூரம் மக்களெதிர்ப்பு மிருகத்தனம் என்பது அமெரிக்க வலதுசாரியினரின் நடத்தை, கொள்கை, அரசியல் ஆகியவற்றைப் பார்த்தால் சட்டெனப் புரியும்.

http://www.huffingtonpost.com/2011/04/19/paul-lepage-child-labor-laws_n_851113.html

திபெத்தின் பெளத்தத்தை அழிக்கும் சீனா:

tibet-monastery-chinese-p-007

தன் சிறுபான்மையினங்களை ஒடுக்கி ஹான் இனத்துடைய கீழ்ப்பட்ட மக்களாக ஆக்குவதில் சீனா வெகு காலமாகத் தனி கவனம் செலுத்தி வருகிறது. திபெத் ஆகட்டும், சிங்கியாங் பகுதியாகட்டும், சீனா கிட்டத்தட்ட இன அழிப்பையே நடத்தி அந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் சீனாவின் ஹான் இனத்து மக்களைப் பல லட்சம் பேராக இந்நிலங்களில் குடியேற்றி அந்தப் பகுதி மக்களைச் சிறுபான்மையினத்தவராக்கிப் பின் இந்தப் பகுதிகள் சீனாவின் பிரிக்க முடியாத சொந்த நிலம் என்று அறிவித்து வருகிறது. சிங்ஜியாங் பகுதியில் 17ஆம் நூற்றாண்டில் 10 லட்சம் பேரைக் கொன்று குவித்த ‘பெருமை’ சீனாவின் மஞ்சு சிங் சாவ் பரம்பரை ஆட்சியினரைச் சேரும். இந்தியாவின் மத்தியப் பகுதியைக் கைப்பற்றி ஆண்டு வரும் ‘மாவோயிச’ர்களுக்கு சீனா தாயகம் என்பதில் பெருமை, ஆனால் சீனாவின் பெருமபான்மை இன வெறி பற்றி அடிப்படை அரசியல் அறிவு கூடக் கிடையாது. இன்று கூட திபெத்தின் பௌத்த மதத்தை அழிப்பதில் சீனா பெரும் அக்கறை காட்டி வருகிறது. திபெத்தியரின் கடும் எதிர்ப்பை இது லட்சியம் செய்வதில்லை. பிரிட்டிஷ் இடது சாரிப்பத்திரிகையும், தமிழ்நாட்டின் ஆங்கில இடது சாரி சீனதேசியப் பத்திரிகையின் நேசப் பத்திரிகையுமான த கார்டியனில் இன்று வெளியான செய்தியைப் பாருங்கள்.

http://www.guardian.co.uk/world/2011/apr/23/two-die-chinese-police-clash-tibetan-monastery

நாளை இந்திய மாவோயிசங்களின் ஆட்சியில் சீனாவின் கொத்தடிமைகளாய் இந்தியர் வாழ்கையில் இந்தச் செய்தித் துண்டைப் படித்த நினைவு யாருக்காவது இருக்குமா என்பது ஐயமே.