‘இசையால் வளமாகும் ஆளுமை’ – ஆர்.கே.ஸ்ரீகண்டனுடன் ஒரு நேர்காணல்

dsc_4221-1பெங்களூரில் வசிக்கும் கர்நாடக சங்கீத மேதை ஆர்.கே.ஸ்ரீகண்டன் அவர்களுக்கு  இந்த வருடத்துக்கான பத்மபூஷண் விருது கிடைத்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. தாமதமானாலும் (ஸ்ரீகண்டனுக்கு வயது 91),  சிறு அங்கீகாரமுமில்லாமல் மறைந்துவிட்ட மேதைகள் எத்தனையோ பேர்களைப் போல் ஆகாமல், இப்போதாவது கெளரவித்தார்களே என்று ஆறுதல்பட்டுக்கொள்ளத் தோன்றியது.  கர்நாடகாவின் ருத்ரபட்டினம் கிராமத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஸ்ரீகண்டன் மைசூரில் நிலவிய வளமான சங்கீதச்சூழலை நேரில் கேட்டு அனுபவித்துக் கற்ற மேதைகளில் ஒருவர். சிறந்த கர்நாடக சங்கீத வித்வானாகப் பரிமளிப்பது மட்டுமில்லாமல், தேர்ந்த குருவாகவும் விளங்கித் தன் இசைப் பாரம்பரியத்தைப் பல சீடர்களுக்குக் கைமாற்றிக் கொடுத்தவர்.

சொல்வனத்துக்காக “ஸ்ரீகண்டன் அவர்களை ஒரு பேட்டி எடுத்தால் என்ன?” என்று தோன்றியது. என் நண்பரும், ஸ்ரீகண்டனிடம் சங்கீதம் கற்றுக்கொண்டிருந்த  சீடருமான ஜி.ரவிகிரண் இந்த சந்திப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.

பெங்களூர் சேஷாத்ரிபுரத்தில் ஒரு சின்ன சந்தில் அவர் வீடு. வீட்டை நெருங்கும்பொழுதே அவர் பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது. ஒரு சின்ன அறையில் உட்கார்ந்திருந்த அவர் எழுந்து என்னை வரவேற்கிறார். நான் அவர் பாதங்களை தொட்டு ஆசி பெறுகிறேன். அறையில் உள்ள அலமாரி முழுக்க புத்தகங்கள். சுவரில் பல இசைமேதைகளின் புகைப்படங்கள், அவர் முன்னோர்களின் புகைப்படங்கள், ஸ்ரீகண்டன் அவர்கள் பிற இசை மேதைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

91 வயதான ஸ்ரீகண்டனுக்கு எழுபது வயதுதான் என்று சத்தியம் செய்து கூறலாம். எல்லோரும் நம்பிவிடுவார்கள். மெலிந்த தேகம், கூர்மையான பார்வை, சின்ன ஓசையையும் துல்லியமாகக் கேட்கும் காது. அவர் பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. மிக அருமையாகத் தமிழ் பேசுகிறார். கையோடு எடுத்துப் போயிருந்த லாப்டாப்பில் சொல்வனத்தில் வந்த சில இசைக்கட்டுரைகளைக் காட்டினேன். ஆர்வமாகப் பார்த்தார். சாவகாசமாகப் படித்துப் பார்க்கவேண்டும் என்று அக்கட்டுரைகளின் ப்ரிண்ட்-அவுட்டுகளைத் தரச்சொல்லிக் கேட்டார். பின் உரையாடத் தொடங்கினோம். [நன்றி: இந்த சந்திப்பை எற்படுத்திக் கொடுத்த இளம் வித்வான் ஜி.ரவிகிரண் அவர்களுக்கு.]

முதலில் உங்களுக்கு பத்மபூஷண் விருது கிடைத்ததற்கு என்னுடைய வாழ்த்துகள். மிகவும் தாமதமான கெளரவம்தான். இது போன்று உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும் நேரங்களில் நீங்கள் யாரை நினைத்துக்கொள்கிறீர்கள்? யாருக்கு நன்றி சொல்வீர்கள்?

வாழ்த்துகளுக்கு நன்றி. முதலில் இறைவனுக்கும், என் முன்னோர்களுக்கும்தான் என் நன்றிகள். அவர்கள் ஆசிர்வாதங்களால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். அதைப் போல என் அண்ணா ஆர்.கே.வெங்கட்ராம சாஸ்திரி, வயலின் கலைஞர் – அவர் ஆசிர்வாதங்களையும் நினைத்துக் கொள்கிறேன்.

அவர் உங்களுக்கு ஒரு குருவைப் போல இருந்திருக்கிறார் இல்லையா?

ஆம். ஆனால் என்னுடைய முதல் குரு என் அப்பா கிருஷ்ண சாஸ்திரி. பெரிய இசைமேதை; கவிஞர், நாடக ஆசிரியர், சங்கீத வித்வான், ஹரிகதை வித்வான் என்று பல்துறைக் கலைஞராக இருந்தார். சமஸ்கிருதம், கன்னடத்தில் சிறந்த புலமை கொண்டிருந்தார். ஆசிரியராகவும் இருந்தார். அதனால் ‘பண்டித ராஜா’ என்ற பட்டம் அவருக்கிருந்தது. அவருடைய அப்பா வெங்கடரமண சாஸ்திரி வேதங்களைக் கரைத்துக்குடித்த பண்டிதராக இருந்தார். என்னுடைய பெரியப்பா ஷாமு சாஸ்திரியும் கன்னடம், சமஸ்கிருதத்தில் ஆழந்த புலமை கொண்டவராகவும், ஆசிரியராகவும் இருந்தவர். என் அம்மாவின் அப்பா பெட்டதப்புரா நாராயண சாஸ்திரி. அவரும் மிகச்சிறந்த சங்கீத வித்வான். அவர் காலத்தில் மைசூர் வாசுதேவாச்சாரியார், வீணை பத்மநாபய்யர், வீணை சுப்பண்ணா போன்றோர் என் தாத்தாவின் சங்கீதத்தைக் கேட்டுப் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். GNB-யின் குரல் எப்படிப் பேசுமோ அப்படிப் பேசுமாம் அவர் சாரீரம். அவர் வீணையும் வாசிப்பார். வீணை சேஷண்ணா என்ற இசைமேதையின் நண்பர். ஆனால் அவரை நான் பார்த்ததில்லை. என் அம்மா சன்னமாவும் மிக நன்றாகப் பாடுவாராம். என் மாமா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் கேட்டதில்லை. எனக்கு இரண்டு வயதாகியிருக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டார். எங்கள் ருத்ரபட்டிணம் கிராமத்தையே ‘சங்கீத கிராமம்’ என்றுதான் சொல்வார்கள். கர்நாடகத்தின் தஞ்சாவூர் என்றும் சொல்வார்கள். நல்ல நல்ல வித்வான்கள் இங்கே இருந்திருக்கிறார்கள். தஞ்சாவூரைப் போலவே ருத்ரபட்டிணமும் காவிரிக்கரையில்தான் இருக்கிறது. [சிரிக்கிறார்.]

உங்கள் அண்ணா உங்களுக்கு எப்படி சொல்லிக்கொடுத்தார் என்பதைக் குறித்துக் கொஞ்சம் கூறுங்கள். அவருடைய கற்பிக்கும் முறை எப்படியிருந்தது?

கீதம், ஸ்வரஜதி, வர்ணம் என சம்பிரதாயமான முறையில்தான் அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். வர்ணம் கற்றுக்கொள்ளும்போது முதலில் இரண்டு கால வேகத்தில் பாடவைப்பார். அது முறையாகக் கைவந்தபின் மூன்று காலத்தில் பாடவைப்பார். இப்படிப் படிப்படியாக வேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்வார். ஆனால் அப்படி வேகமாகப் பாடும்போதும் ஸ்ருதி சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். லயம் ஒழுங்காக இருக்கவேண்டும். உச்சரிப்பும் தெளிவாக இருக்கவேண்டும். கமகங்கள் சரியாக இருக்கவேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தாலும் முழுவதுமாகக் கேட்பதற்கு நன்றாக இருக்கவேண்டும். வேகம் மட்டும் இருந்தால் போதாது. சங்கீத சுகமும் இருக்கவேண்டும். சரியாகச் சாதகம் செய்யவில்லையென்றால் அடிவிழும். எனக்கும் அவருக்கும் 14 வயது வித்தியாசம் இருந்தது. சகோதரர்களிலேயே மூத்தவர் அவர். கடைசி நான். பள்ளி சென்ற நேரம் போக மற்ற நேரங்களில் பல மணி நேரங்கள் இசைப்பயிற்சி செய்துகொண்டிருப்பேன். அப்போது நாங்கள் மைசூரில் வசித்துக்கொண்டிருந்தோம்.

மைசூரில் பல இசைக்கலைஞர்களும் வந்து கச்சேரிகள் செய்திருக்கிறார்கள் இல்லையா?

ஆமாம். அப்படிப் பல மேதைகளைக் கேட்டிருக்கிறேன். அப்படி சங்கீதத்தைக் கேட்டுக்கேட்டு அது எனக்குள் ஊறிக்கொண்டிருந்தது. சங்கீதத்தின்பால் விருப்பமும் தீவிரமாக ஏற்பட்டது. படிப்பே வேண்டாம், இசைதான் என் வாழ்க்கை என்றெல்லாம் முடிவெடுத்தேன். ஆனால் வீட்டில் பெரியவர்கள், ”இப்போதைக்குப் படிப்பை நிறுத்தவேண்டாம், ஒரு காலகட்டத்துக்கு மேல்தான் முழுநேரமாக இசைத்துறையில் இயங்குவதைக் குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கட்டாயப்படுத்திப் படிக்கவைத்தார்கள்.

அப்போது மைசூர் சமஸ்தான அரசாக இருந்தது. பெரிய ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைமேதைகள் அங்கே அரசவையில் பாட வருவார்கள். மும்முடி கிருஷ்ணராஜ உடையார்தான் ராஜாவாக இருந்தார். அவர் பெரிய சங்கீத ரசிகர், புரவலர். அவரே பல ஜாவளிகள் எழுதி ஒரு வாக்கேயக்காரராகவும் இருந்தார். வாசுதேவாச்சாரியார், முத்தையா பாகவதர், வீணை சேஷண்ணா, வீணை சுப்பண்ணா, மைசூர் சதாசிவ ராவ், பத்மநாபய்யா, வெங்கட்ரமணய்யா போன்றோர் அரசவைக்கலைஞர்களாக இருந்தார்கள். நவராத்திரி சமயத்தில் சென்னையிலிருந்து பல இசைக்கலைஞர்கள் பாடகர்கள், நாகஸ்வரக் கலைஞர்கள் வருவார்கள். அதில் முக்கியமாக மதுரை பொன்னுசாமி ஆஸ்தான வித்வானாகவே இருந்திருக்கிறார். கிருஷ்ணராஜ உடையார் திருமணத்தில் சிவக்கொழுந்து வாசித்திருக்கிறார்.

அரசவை மட்டுமில்லாமல் கோயில்களிலும் கச்சேரிகள் நடக்கும். ராமர் கோயிலில் வருடந்தோறும் நடக்கும் ராமநவமி உற்சவத்தில் பல பெரிய வித்வான்களும் வாசிப்பார்கள், பாடுவார்கள். பல்லடம் சஞ்சீவராவ், காரைக்குடி ப்ரதர்ஸ் வீணை, தட்சிணாமூர்த்திப்பிள்ளை, தஞ்சாவூர் வைத்யநாத ஐயர் என்று எல்லோரும் ராமநவமி உற்சவங்களில் பாடியிருக்கிறார்கள். அப்போது எனக்கு ஐந்து, ஆறு வயதுதான் இருக்கும். என் அண்ணா எல்லா கச்சேரிகளுக்கும் அழைத்துச் செல்வார். அவற்றைக் கேட்டுக்கேட்டு என் மனதில் ஆழமான இசைப்பிடிப்பு ஏற்பட்டது. இப்போது நடக்கும் ராமநவமி கச்சேரிகளோடு அவற்றை ஒப்பிடவே முடியாது. அவற்றை மறைந்துபோன பொற்காலமாகவே நான் பார்க்கிறேன்.

அரசவையில் நடக்கும் கச்சேரிகளை loud speaker மூலம் பொதுமக்கள் கேட்பதற்காக ஒலிபரப்புவார்கள். நாங்கள் பூங்காக்களில் அமர்ந்து கேட்போம். நாகஸ்வரச் சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை ஒரு முறை நவராத்திரிக்கு வந்திருந்து ஒரு வாரம் வாசித்தார். எப்பேர்ப்பட்ட மேதை, எப்பேர்ப்பட்ட வாசிப்பு! என் சங்கீத ரசனைக்கு நாகஸ்வரக் கச்சேரிகள் பெரிய ஊக்கம் தந்திருக்கின்றன. நாகஸ்வரத்தை ரசித்துக் கேட்டால் அது நம் கற்பனையை வளர்க்கும். அவர்களுடைய வாசிப்புக் கற்பனை அப்படிப்பட்டது. ஒரு ராகத்தை எவ்வளவு நேரம் அவர்கள் வாசிப்பார்கள்! ராக ஆலாபனைக்கு நாகஸ்வரம்தான் மூலம். அங்கப்ப பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, வீருசாமிப் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், வேதாரண்யம் வேதமூர்த்தி இவர்கள் வாசிப்பையெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். மீனாட்சிசுந்தரம் தவில், நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை, சிலோன் தட்சிணாமூர்த்தி இவர்களெல்லாம் வாசிப்பார்கள். சிலோன் தட்சிணாமூர்த்தி ஒரு பிறவி மேதை. பெங்களூர் தர்மராயா கோயிலில் நடக்கும் கரக விழாவின்போது தவில் வாசிக்க சிலோன் தட்சிணாமூர்த்தி வந்திருந்தார். என்ன அபாரமான வாசிப்பு!

உங்களுக்கு மைசூர் வாசுதேவாச்சார், முத்தையா பாகவதர் இவர்களோடெல்லாம் பரிச்சயம் இருந்ததா? அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த வேறு இசைக்கலைஞர்களுடனான பரிச்சயங்கள் குறித்தும் கூறுங்களேன்…

மைசூர் வாசுதேவாச்சாரியாருடன் ரேடியோ கச்சேரியில் பாடியிருக்கிறேன். அவருடைய கச்சேரி ஆல் இந்தியா ரேடியோவில் ஏற்பாடாகியிருந்தது. நான் அப்போது AIR-இல் நிலைய வித்வானாக இருந்தேன். அப்போது வாசுதேவாச்சாரியாரின் பேரன் கிருஷ்ணமூர்த்தி என்னிடம் வந்து “தாத்தா பாடப்போகிறார். கூட யாராவது பாடவேண்டும். நீங்கள் பாடுகிறீர்களா?” என்று கேட்டார். “அது எனக்குக் கிடைத்த பாக்கியம்” என சந்தோஷமாகப் பாடினேன். அது ஒரு அரைமணிநேரக் கச்சேரி. தோடியில் ஒரு கிருதி பாடினார் என நினைவு. வாசுதேவாச்சார் அரசவையில் நிறைய பாடியிருக்கிறார். பாவபூர்வமாகப் பாடுவார். தானம் பாடினால் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும். அவரே ஒரு வாக்கேயக்காரராகவும், சங்கீதத் தொழில்நுட்ப விவரங்கள் நிறைய தெரிந்தவராகவும் இருந்தாலும் அவர் ரக்திபூர்வமாக இனிமையாகப் பாடுவதைத்தான் முன்வைத்தார். எதைப் பாடினாலும் அதை நேர்த்தியாக, devoted-ஆகப் பாடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ரக்தி, பக்தி, பாவம் இந்த மூன்று குணங்களும் வாசுதேவாச்சாரின் சங்கீத ஆளுமையைக் குறிக்கும். தியாகராஜர், மானம்புச்சாவடி வெங்கடசுப்பையர், பட்ணம் சுப்பையர் இந்த சங்கீதப் பரம்பரையில் வந்தவர் வாசுதேவாச்சார்.

முத்தையா பாகவதரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர் முன்பும் நான் பாடியிருக்கிறேன். முத்தையா பாகவதருக்கு M.D.ராமனாதன் போல bass voice. மிக அருமையாகப் பாடுவார். ஹரிகதைகள் செய்வார். ஏராளமான கிருதிகளைக் கற்றிருந்தார். வித்வான் மட்டுமல்லாமல் அவரே ஒரு Musicologist-ம் கூட. இவைபோக அவர் வாக்கேயக்காரரும் கூட. நானூறுக்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியிருக்கிறார்.

என் அண்ணா ஆர்.கே.வெங்கட்ராம சாஸ்திரி இவர்களுக்கெல்லாம் வயலின் வாசித்திருக்கிறார். அவருக்கு ஏராளமான கிருதிகள் தெரியும். எனக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் சென்னைக்குச் சென்று AIR-இல் சேர்ந்தபின் முசிறி சுப்ரமணிய ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் எனப் பல கர்நாடக சங்கீத ஜாம்பவான்களின் தொடர்பு ஏற்பட்டது. அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டார். அவர் மூலமாக எனக்கும் பல வித்வான்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் மைசூருக்கு வரும்போது  என் வீட்டில்தான் தங்குவார்கள். அப்போது அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.

மைசூர் அரசவை வித்வானாக இருந்த பிதாரம் கிருஷ்ணப்பா கச்சேரிகளை நிறைய கேட்டிருக்கிறேன். அவர் ஒரு மாபெரும் வித்வான். அவரோடு எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. “இந்தப் பையன் கச்சேரிகளை நன்றாகக் கேட்கிறான். யார் கச்சேரியை நன்றாகக் கேட்கிறார்களோ அவர்கள் நன்கு முன்னுக்கு வருவார்கள். இவன் அப்படி நன்கு முன்னுக்கு வருவான்.” என்று என் அப்பாவிடம் அவர் சொல்லியிருக்கிறார்.

என் அன்ணாவுக்கு மைசூர் செளடய்யா குரு. அதனால் எனக்கும் செளடய்யா அவர்களை நன்றாகத் தெரியும். எங்கள் வீட்டில் நடக்கும் எல்லா சுபகாரியங்களுக்கும் செளடய்யா கச்சேரிதான்.

முசிறி சுப்ரமணிய ஐயரின் சங்கீதம் உங்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அவரிடமிருந்து நிறை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறீர்கள். அதைக் குறித்துக் கூறுங்களேன்…

முசிறி ஐயரின் பாடுமுறையில் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டியவது அவர் கமகங்களைப் பிரயோகிக்கும் விதத்தை. கமகத்தை எப்படித் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும் என அவருக்கு நன்றாகத் தெரியும். கிருதியை பாவபூர்வமாகப் பாடுவது, உச்சரிப்பைத் தெளிவாகப் பாடுவது, அப்படிப்பாடும்போது ராக ஸ்வரூபம் எப்படி வெளிப்படவேண்டும் போன்றவற்றுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் தருவார். நிரவல் செய்வதும் மிக அழகாக இருக்கும். நிரவல் செய்யும்போதும் ராகபாவத்தோடு மிக அழகாகச் செய்வார். ரீதிகெளளை, தோடி, முகாரி ராகங்கள் அவர் பாடிய கீர்த்தனைகள் அற்புதமாக இருக்கும். ”எந்தவேடு கொந்து ஓ ராகவா” கீர்த்தனையை எப்படிப் பாடுவார் தெரியுமா! அதையெல்லாம் நான் ப்ராக்டீஸ் செய்திருக்கிறேன். ரீதிகெளளையில் “ஜனனி நின்னுவினா”, ஆனைய்யா எழுதிய “பராகேல பாலா” இவையெல்லாம் அவர் பாடுவார்.

[ஆர்.கே.ஸ்ரீகண்டன் குரலில் முசிறி சுப்ரமணிய ஐயர் குறித்துக் கூறுவதில் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம்.]

dsc_4222-1

அந்தக் காலத்து வித்வான்கள் வேறு யாரிடமிருந்தெல்லாம் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?

மகராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து தர்பாரில் ஒரு கிருதி, முகாரியில் ’காருபாரு’ கிருதி, அவருக்கு மிகவும் பிரியமான மோஹனராமா (மோகனம்) கிருதி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடமிருந்து ‘எவரி மாட’, ‘தாசரதே’, ‘அக்‌ஷய லிங்க விபோ’, செம்மங்குடியிடமிருந்து ‘மரகத மணி வர்ணா’ (வராளி) கிருதிகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆரபி, ஷண்முகப்ரியா, சஹானா போன்ற ராகங்களை அவர் மிக அருமையாகப் பாடுவார்.

உங்கள் சமகாலத்திய இசைக்கலைஞர்கள் (உதாரணமாக டி.கே.பட்டம்மாள், டி.கே.ஜெயராமன்) உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்களா? நீங்கள் ஏதேனும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

நான் பாடிய “ஸ்ரீனிவாஸா நன்ன பிட்டு” என்ற என் ஸ்ரீரஞ்சனி கிருதியைக் கேட்டுவிட்டு மிகவும் பிடித்துப்போய் டி.கே.ஜெயராமன் என்னை பாடச்சொல்லி பதிவு செய்துக்கொண்டு சென்றார். டி.கே.ஜெயராமன் கச்சேரிகளுக்கு நானும், என் கச்சேரிக்கு அவரும் வருவார். என் சமகாலத்திய கலைஞர்கள் அத்தனை பேருடனுமே எனக்குப் பரிச்சயம் இருந்தது; இருக்கிறது.

உங்கள் அண்ணாவில் தொடங்கி, இத்தனைப் பெரிய வித்வான்களிடமிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பாடுமுறை இதிலிருந்து எப்படி உருவாகி வந்தது?

எனக்கு முக்கியமாக இரண்டு தாக்கங்கள் (influences) இருந்தன. முதலில் ஹிந்துஸ்தானி சங்கீதம். அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஹிந்துஸ்தானியில் இருக்கும் full throated voice production மிகவும் முக்கியம். அப்புறம் ஸ்ருதி சுத்தமாகப் பாடுவது. நம் வித்வான்கள் ஸ்ருதி கொஞ்சம் அப்படியிப்படி இருந்தால் பரவாயில்லை என்று பாடிவிடுவார்கள். ஆனால் ஹிந்துஸ்தானியில் அப்படியில்லை. ஸ்வர சுத்தத்துக்கு அங்கே முக்கியத்துவம் மிக அதிகம். ஹிந்துஸ்தானியில் செய்யும் ‘ஆ’கார சாதகங்கள். அவர்கள் அந்த ‘ஆ’காரங்களை எப்படி, என்ன வேகத்தில் பாடுகிறார்கள்! ஆனால் அந்த வேகத்திலும் ஸ்வரங்கள் துல்லியமாக இருக்கும். கமகங்களை எந்த அளவுக்கு உபயோகப்படுத்தவேண்டும் என்பதையும் ஹிந்துஸ்தானியில் கேட்கலாம். இந்த மூன்று விஷயங்களையும் ஹிந்துஸ்தானி இசை வழியாக நான் கேட்டறிந்து ‘இப்படிப் பாடினால் நன்றாக இருக்குமே’ என என் சங்கீதத்தில் சேர்த்துக்கொண்டேன். கமகத்தில் முசிறி சுப்ரமணி ஐயரும் எனக்கொரு ஐடியல். ஹிந்துஸ்தானி, முசிறி ஐயர் சங்கீதம் இரண்டும் அடிப்படைத் தாக்கங்கள். மேலும் எல்லா இசைமேதைகளிடமிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு அவற்றை என் சங்கீதத்தில் சேர்த்துக்கொண்டு என் பாணியாக ஆக்கிக்கொண்டேன். இப்படி உருவாகிவரும் பாணி நிலைத்து நிற்க சிஷ்ய பரம்பரை மிகவும் முக்கியம். நம் சங்கீதத்தில் GNB பாணி, M.D.ராமனாதன் பாணி, அரியக்குடி பாணி எனப் பல பாணிகள் உண்டு. GNB பாணியில், அவர் சிஷ்யப்பரம்பரையில் வந்தவர்களுக்கு தொண்டை நன்றாகப் பேசும். திருச்சூர் ராமச்சந்திரனைக் கேளுங்கள். டி.ஆர்.பாலசுப்ரமணியன் GNB-யின் முதல் சிஷ்யர். அப்படியே GNB-யைப் போலவே பாடுவார். பாவம், இளம் வயதிலேயே காலமாகிவிட்டார். GNB சிஷ்யர்களுக்கு ஸ்பீட் ரொம்ப முக்கியம். அதே ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர்கள் மத்யம காலத்தில் பாடுவார்கள். முசிறி சிஷ்யர்கள் விளம்ப காலத்தில் மெதுவாகப்பாடுவார்கள்.

மைசூரிலிருந்து பெங்களூருக்கு எப்போது இடம்பெயர்ந்தீர்கள்?

கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் வேலை தேடிக்கொண்டிருந்தேன். மைசூர் ஆகாசவாணியில் ‘இசை ஆசிரியர்’ வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. நான் விண்ணப்பித்து வேலை கிடைத்ததும் 1949-இல் வேலைக்குச் சேர்ந்தேன். 1954-இல் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தேன்.

அந்த சமயத்தில்தான் சென்னை ம்யூசிக் அகாடமியில் முதல் கச்சேரி செய்தீர்கள் இல்லையா?

ஆமாம். 1954-இல் ம்யூசிக் அகாடமியில் முதல் கச்சேரி செய்தேன். சித்தூர் சுப்ரமணிய பிள்ளைதான் அப்போது ப்ரெசிடெண்ட்டாக இருந்தார். அந்தக் கச்சேரிக்கு ராம்நாட் கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன் இவர்களெல்லாம் வந்திருந்தார்கள். தாத்தாச்சார் என்ற ‘staff artist’ வயலின். தண்டமூடி ராம் மோகன்ராவ் மிருதங்கம். ’எந்துண்டி வெடலிதிவோ’ என்ற தியாகராஜர் இயற்றிய தர்பார் ராகக் கீர்த்தனையைப் பாடினேன். மிஸ்ரசாபு தாளம். 1954-இல் பாடியது இன்னும் நினைவிலிருக்கிறது. டி.வி.சுப்பராவ் பரிந்துரையின் பேரில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. கச்சேரி நன்றாக அமைந்ததில் சுப்பாராவ் அவர்களுக்குப் பரம சந்தோஷம்.

ஒரு கச்சேரிக்காக நீங்கள் என்ன மாதிரியாகத் திட்டமிடுகிறீர்கள்?

முதல் முதலாக ஒரு வித்வானுக்கு ரசிகர்களுக்கு ‘நல்ல சங்கீதத்தைத்’ தரவேண்டும் என்ற பொறுப்பு இருக்கவேண்டும். ‘நான் எப்படிப் பாடினாலும் பரவாயில்லை, அவர்கள் கேட்பார்கள்’ என்ற மனநிலை இருக்கக்கூடாது. சங்கீதத்துக்கென்று அடிப்படை மரியாதையைத் தரவேண்டும். நம் மனதுக்கு வந்ததையெல்லாம் பாடாமல் ஸ்ருதி சுத்தமாக ஒரு நெறியோடு பாடவேண்டும். நான் முன்பே என்ன ராகம், கிருதி, தாளம் போன்றவற்றை ஒழுங்காகத் திட்டமிட்டுவிடுகிறேன். பல்லவி பாடுவதாக இருந்தால் முன்பே பக்கவாத்தியக்காரர்களிடம் இன்ன ராகம், இன்ன தாளம் என்று சொல்லிவிடுவேன். அவர்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து உற்சாகப்படுத்தி வாசிக்கவைக்கவேண்டும். ஒரு கச்சேரி வெற்றி பெறுவதில் அவர்கள் பங்கும் மிக மிக முக்கியமானது. அவர்கள் சந்தோஷமாக வாசித்தால்தான் கச்சேரி வெற்றி பெறும். பாடும் சூழலும் நன்றாக இருக்கும்.

யாரேனும் புதிய கிருதியைக் கேட்டால், எனக்குத் தெரியாத பட்சத்தில் நான் அதைப்பாடுவதில்லை. சிலர் புத்தகங்களை வைத்துக்கொண்டு பாடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது சரியில்லை. ஒரு கிருதியைப் பாடவேண்டுமென்றால், நீங்கள் வேறு, கிருதி வேறு என்றில்லாமல் உங்களுக்குள் அது மிக நன்றாக ஊறியிருக்கவேண்டும். அப்போதுதான் பாவபூர்வமாக அதைப் பாடமுடியும். புத்தகம், நொட்டேஷனெல்லாம் வேலைக்காகாது. ஒரு குருவிடம் உட்கார்ந்து கற்றுக்கொள்ளவேண்டும். நூறு முறையாவது ஒரு கிருதியைப் பாடிப்பாடி அந்த கிருதியும், நீங்களும் ஒன்றாகிவிடவேண்டும். உங்களுக்குள் அது படிந்திருக்கவேண்டும்.

உங்களுக்கு ஏராளமான கிருதிகள் தெரியுமே! அப்படியென்றால் தொடர்ந்து கற்றுக்கொண்டும், பயிற்சி செய்துகொண்டும்தான் இருக்கிறீர்களா?

நிச்சயமாக. உயிர் இருக்கிறவரை நான் ஒரு மாணவனாகத்தான் இருக்கவேண்டும். கற்றுக்கொள்வதற்கு எல்லை என்று ஏதும் இருக்கிறதா என்ன?

புரந்தரதாஸர் கிருதிகளை சம்பிரதாயமாகப் பாடுபவர்களில் முதன்மையானவர் நீங்கள். அவர் கிருதிகளுக்கான வர்ணமெட்டுகள் கிடைத்திருக்கின்றனவா?

வர்ணமெட்டுகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் என்ன ராகங்களில் கிருதிகளைப் பாடினார் என்ற தகவல் இருக்கின்றது. அக்காலத்தில் புழக்கத்திலிருந்த 32 ராகங்களிலேயே அவர் கிருதிகள் பாடியிருக்கிறார். அவர் கிருதிகள் சங்கீதக் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் தரும் “art music”-க்கில் அடங்காது. அவர் பக்தி, நீதி போதனை இவற்றைச் சொல்வதற்காகத்தான் சங்கீதத்தைக் கையாண்டார். உதாரணமாக தியாகராஜர் கிருதிகளில் இருக்கும் சங்கதிகள், நிரவல், ஸ்வரக் கற்பனைகள் இவற்றையெல்லாம் புரந்தரதாஸர் கிருதிகளில் பார்க்கமுடியாது. உதாரணமாக காம்போதியில் இருக்கும் எல்லா கிருதிகளுக்கும் ஒரே ட்யூனைத்தான் உபயோகித்திருக்கிறார். [பாடிக்காட்டுகிறார்.]

மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜ உடையார் கிருதிகளையும் நீங்கள் நிறைய பாடிப் பிரபலப்படுத்தியிருக்கிறீர்கள் இல்லையா?

ஆம். மைசூர் வாசுதேவாச்சாரியார் அவற்றை சொல்லித்தந்தார். அவர் பேரன் எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஜெயச்சாமராஜ உடையாரின் 96 கிருதிகளுக்கு வர்ணமெட்டுகள் இருக்கின்றன. அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். ஜெயச்சாமராஜ உடையார் கிருதிகள் அப்படியே முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகளின் ஸ்டைலில் அமைந்திருக்கும். தூர்வாங்கி, பவப்ரியா, கோகிலவராளி போன்ற அபூர்வமான பல ராகங்களில் அவர் கிருதிகள் அமைத்திருக்கிறார். திஸ்ர த்ரிபுட, கண்ட ரூபகம் போன்ற பல வித்தியாசமான தாளங்களையும் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

[ஜெயச்சாமராஜ உடையார் குறித்து ஆர்.கே.ஸ்ரீகண்டன் கூறுவதன் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம்.]

மைசூர் சதாஸிவ ராவ் கிருதிகளும் நிறைய பாடியிருக்கிறேன். அவர் ஒரு பெரிய வித்வான். தியாகராஜரின் நேரடி சிஷ்யர். அவருடைய பல கிருதிகளும் அபாரமானவை. (அடானாவில் அமைந்த ‘வாசாம கோச்சருன்டனே’ பாடலின் பல்லவியை பாடுகிறார்) சுப்பராய சாஸ்திரியும் Gem of a composer. ’ஜனனி நின்னுவினா’ ஒன்று போதாதா?

தற்போதைய சங்கீதப் போக்குகளைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கணக்கு வழக்காக ஸ்வரம் பாடுவதற்கு நிறைய முக்கியத்துவம் தருகிறார்கள். அது தேவையில்லை என்பது என் கருத்து. ஸ்வரமே பாடவேண்டாம் என்று சொல்லவில்லை. கணக்கு வழக்காகப் பாடவேண்டாம் என்று சொல்கிறேன். கணக்குகளுக்கு முக்கியத்துவம் தரும்போது பாவம் அடிபட்டுப்போகிறது. அது எல்லோருக்கும் புரிவதில்லை. பாடகருக்கும், மிருதங்க வித்வானுக்கும் மட்டும் புரியும் இந்தக் கணக்கு வழக்குகள் கைதட்டு வாங்குவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். அதைப்போல ஒரு கிருதியைப் பாடுவதற்கு முன் குறைந்தபட்சம் நூறு முறையாவது பாடிப் பழகி முழு involvement-உடன் நாமே அந்தக் கிருதியை எழுதியதைப் போலப் பாடவேண்டும். அப்போதுதான் அந்த ராகபாவம் அப்பாடலில் கிடைக்கும். Mechanical Reproduction போல பாடுவதில் அர்த்தமேயில்லை. மைக் இருப்பதால் full throated voice-இல் பாடும் வழக்கமே போய்விட்டது. மைக் இருந்தாலும் பரவாயில்லை, வாய்விட்டுப்பாடவேண்டும். வாய் திறந்துபாடும்போதுதான் ஸ்ருதி மீது கவனம் இருக்கும். [பாடிக்காட்டுகிறார்.] ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் போல. ஆனால் சங்கீத ஞானம் இன்றைய வித்வான்களிடம் நன்றாகத்தான் இருக்கிறது. பல்லவியெல்லாம் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்கள்! கொஞ்சம் இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

சொல்லித்தரும் வழிமுறைகள் உங்கள் காலத்திலிருந்து இப்போது எப்படி மாறியிருக்கின்றன?

அப்போது குருகுலமாக குரு வீட்டிலேயே தங்கி சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றைய பொருளாதார, சமூகச்சூழலில் அது சாத்தியமில்லை. குருவின் வருமானமே கேள்விக்குறியாகிவிட்டபின் சிஷ்யர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது? இன்று பல பட்டப்படிப்புகள் படித்து, நல்ல வேலைக்குப் போய் கூடவே சங்கீதமும் கற்றுக்கொள்கிறார்கள். இன்றைய பொருளாதாரச்சூழலில் இப்படிக் கற்றுக்கொள்வதுதான் சாத்தியம். முன்பெல்லாம் கிருதிகளை, சங்கீதக் குறிப்புகளை எழுதித்தரமாட்டார்கள். வாய்வழியாகச் சொல்லித் தருவதையே மனதில் வைத்துக்கொண்டு பயிற்சி செய்யவேண்டும். ஆனால் இன்று எழுதிக்கொடுக்கவில்லையென்றால் ஒன்றும் நடக்காது. இப்போது பல்கலைக்கழகங்களில் சங்கீதத்தைப் பாடமாகவே வைத்துவிட்டார்கள். அதனால் எழுதித்தந்தே ஆகவேண்டும். குரு பாடி ரெக்கார்ட் செய்து தரும் பாடத்தை வீட்டில் பயிற்சி செய்கிறார்கள். நான் குறிப்புகள் எழுதித்தருகிறேன். ரெக்கார்ட் செய்தும் தருகிறேன். ‘வீட்டில் பயிற்சி செய்து அடுத்தநாள் வந்து சரியாகப் பாடு’ என்று சொல்கிறேன். ஆனால் அப்போதும் பெரும்பாலானோர் பயிற்சி செய்வதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. சிடியைக் கேட்டு நெட்டுரு போட்டுப் பயிற்சி செய்துவிடலாம். ஆனால் அப்படிப் பயிற்சி செய்வதில் ஏதும் பிழைகள் இருந்தால் அந்த சிடி உங்களைத் திருத்தாது.

அப்போதிலிருந்து இப்போது ரசிகர்கள் எப்படி மாறியிருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

அந்தக் காலத்தில் கச்சேரிகள் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் நடக்கும். ரசிகர்கள் முழு அமைதியோடு கேட்பார்கள். ஆசையோடு கச்சேரிகளுக்கு வந்து கேட்பார்கள். மைசூரில் ராம உற்சவம், கணேச உற்சவம், நவராத்திரி சமயங்களில் நிறைய கச்சேரிகள் நடக்கும். செம்பை வைத்தியநாத பாகவதர், திருப்பாம்புறம் சுவாமிநாதப்பிள்ளை போன்றோர் பங்குபெற்றிருக்கிறார்கள். அப்போது கச்சேரிகளில் மைக் கிடையாது. ஆனாலும் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் நன்கு கேட்கும். ரசிகர்களுக்கும் நல்ல ஞானம் இருந்தது. யாரேனும் தப்பாகப் பாடினால் எழுந்து திட்டிவிடுவார்கள். ஜாம்பவான்களுக்கு மத்தியில் இளம் வித்வான்கள் பெயரெடுப்பது கஷ்டமாக இருந்தது. எச்சரிக்கையாகப் பிழையில்லாமல் பாடவேண்டியிருந்தது.

ஆனால் இன்று கச்சேரிகள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடப்பதில்லை. ரசிகர்களிடம் பொறுமையில்லை. வித்வான் பாடிக்கொண்டிருப்பார். ரசிகர்கள் “எனக்கு காஃபி வேணும்” என்று எழுந்து போகிறார்கள். வித்வான் உயிரைக்கொடுத்துப் ராகம் பாடிக்கொண்டிருப்பார். ரசிகர் பக்கத்திலிருப்பவரிடம் பேசிக்கொண்டிருப்பார். அப்புறம் ஒரு கச்சேரியில் பாடியதை அடுத்த கச்சேரியில் பாடினால் அதை முழுவதும் உள்வாங்கிக்கொள்ளாமல் நேற்று பாடியதையே இன்றும் பாடுகிறார்கள் என்று ஒரு வரியில் குறை சொல்லி எழுந்துபோய்விடுகிறார்கள். அதனால் வித்வான்களும் புதுசு புதுசாக எதையாவது பாடுகிறார்கள். நிறைய பரிசோதனை முயற்சிகளில் இறங்குகிறார்கள். கைதட்டல் வாங்குவதற்காக என்னென்னவோ செய்கிறார்கள்.

இளம் வித்வான்களோடு நீங்கள் சிநேகமாகப் பழகுவதைப் பார்த்திருக்கிறேன். க்ளீவ்லேண்ட் கச்சேரியில் ரவிகிரண் உங்களோடு வாசித்தார். ஜி.ரவிகிரண் திருமணத்தில் உங்கள் கச்சேரியில் டி.எம்.கிருஷ்ணா உங்களிடம் நிறைய விருப்பப்பாடல்கள் கேட்டார். ஆனால் பெரும்பாலானோரிடம் வயது வித்யாசம், சூழல் மாற்றம் காரணமாக மூத்த வித்வான்களிடம் ஒரு விலகல் வந்துவிடுகிறது. அது உங்களிடம் இல்லை. இது எவ்வாறு சாத்தியமானது?

அது நான் பழகுவதில்தான் இருக்கிறது. “எனக்கு வயசாகிவிட்டது, நான் பெரிய வித்வான், நீ சின்னவன்” என்ற மனநிலை வந்துவிட்டால் நட்பு வருவது கஷ்டம். நான் சென்னை போனால் என் ஹோட்டல் அறைக்கு எல்லா இளம் வித்வான்களும் வந்துவிடுவார்கள். சங்கீதம் பற்றி விவாதிப்பார்கள். ‘நான் பெரியவன்’ என்ற ஈகோ வந்துவிட்டால் நட்பு ஏற்படுவது கஷ்டம்.

இசையறிவு உங்கள் ஆளுமையை எப்படி பாதித்தது? எப்படி மாற்றியது?

ஒருவருடைய ஆளுமை முழுமையடைய இசை மிக மிக முக்கியம் என நான் நினைக்கிறேன். “Music is the composite solution for comprehensive human development” என்பதுதான் தியாகராஜர் பாடல்களின் திரண்ட கருத்து, சாராம்சம், தத்துவம் எல்லாம். மனிதனுடைய பரிபூரணமான ஆளுமை விகாசமாக சங்கீதம் மிகவும் முக்கியம்.

“மேடைக்கச்சேரியில் தப்பு இல்லாமல் பாடவேண்டும் என்ற அவசியமில்லை. தப்பு செய்தால்தான் புதிய திறப்புகள் கிடைக்கும், கலை வளரும்” என்றொரு கருத்து நிலவுகிறது. இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

[சிரிக்கிறார்.] அதெல்லாம் சரியான வழிமுறையே அல்ல. தப்பு செய்யாதவாறு நிறைய பயிற்சி செய்துவிட்டுதான் மேடைக்குப் போகவேண்டும். சந்தேகம் வந்தால் தெரிந்தவர்களிடம்  கேட்டுத் திருத்திக்கொள்ளவேண்டும்.

புதிது புதிதாக எதையாவது எதிர்பார்க்கும் ரசிகர்களின் மாறிவரும் மனநிலை காரணமாக இன்று வித்வான்களும் நிறைய புதுப்புது ராகங்கள், அவ்வளவாகத் தெரியாத விவாதி ராகங்களைப் பெரிதும் பயிற்சி செய்யாமல் வந்து பாடுகிறார்கள். அதே சமயம் புதிதாக விஷயங்களைக் கற்றுக்கொண்டு பரிசோதனைகள் செய்வதும் கலை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.  ஒன்றுக்கொன்று முரணான இதை எப்படிக் கையாள்வது? விவாதி ராகங்கள் பற்றி உங்கள் கருத்துகள் என்ன?

dsc_4223-1பரிசோதனைகள் செய்யலாம். ஆனால் அதை மேடையில் செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். ஒரு அபூர்வமான ராகத்தையோ, புதிய ராகத்தையோ பாடுவதற்கு முன் வீட்டில் நல்ல பயிற்சி செய்திருக்கவேண்டும். நான் முன்பே சொன்னதுபோல் ஒரு கிருதியைக் குறைந்தபட்சம் நூறு முறை பாடிப்பார்த்திருக்கவேண்டும். எல்லா பரிசோதனைகளும் வீட்டிலேயே செய்து முடித்துவிடவேண்டும். மேடையேறும்போது அது ஒரு finished product ஆக வெளியாகவேண்டும். இதனால் தானாகவே பயிற்சி நேரம் அதிகமாகும். அதிகமாகக் கச்சேரிகள் செய்வது குறையும். சகட்டுமேனிக்குக் கச்சேரிகளை ஒத்துக்கொண்டு, புதுமைகளையும் செய்கிறேன் என்று கிளம்புவது ஒத்துவராது. நிறைய பயிற்சியோடு குறைவான கச்சேரிகள் செய்தால் பாடியதையே திரும்பத் திரும்பப் பாடுகிறார் என்ற உணர்வும் ரசிகர்களுக்கு வராது.

மேலும் வெகு அபூர்வமான ராகங்களையோ, கிருதிகளையோ பாடுவதற்கு முன்னால் ரசிர்களுக்கு அதைச் சொல்லிவிடுவது நல்லது. அந்த ராகத்தின் ஸ்வரூபம் இப்படி இருக்கும், கிருதி இப்படி இருக்கும் என்றெல்லாம் சொல்லிவிட்டுப் பாடினால் ரசிகர்களும் புரிந்துகொண்டு கேட்பதற்கு வசதியாக இருக்கும். புதிய ராகத்தை உருவாக்குகிறேன் என்று தனித்துவமான ஆளுமையில்லாத ஒரு ராகத்தை உருவாக்கிப் பாடுவதில் அர்த்தமேயில்லை. அதை அடுத்தடுத்து யாரும் பாடவும் மாட்டார்கள். பிறகு அதை உருவாக்கி என்ன பயன்?

நான் அதிகம் விவாதி ராகங்களைப் பாடியதில்லை. தீக்‌ஷிதர், தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளைத் தாண்டி புதிய விவாதி ராகங்களை நான் பாடியதில்லை. அதை நான் ஊக்கப்படுத்துவதுமில்லை. 72 ராகங்களை உருவாக்கிக்கொடுத்த வெங்கடமகியே விவாதி ராகங்களைப் பாடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் ஒரு ஸ்வரத்துக்கும், அடுத்த ஸ்வரத்துக்கும் ஒரே ஒரு ஸ்ருதி வித்தியாசம் இருக்கும் ராகங்களைப் பாடினால் கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. [பாடிக்காட்டுகிறார்.] அதுதான் காரணம். அதை இசையறிவுக்காகப் பயிற்சி செய்வதில் தப்பில்லை. ஆனால் அதை விஸ்தாரமாகப் பாடுவது, பல்லவி பாடுவது என்றெல்லாம் செய்தால் நன்றாக இருக்காது.

விவாதி ராகங்களைப் பற்றியும், ஸ்ருதி சுத்தம் பற்றியும் பேசும்போது நினைவுக்கு வருகிறது. ஒருமுறை கெளரி ராம்நாராயண் கொடுத்த ஒரு lecture demo-வில் ஒருவிஷயம் சொன்னார். எம்.எஸ்.சுப்புலட்சுமி சிறுமியாக இருக்கும்போது தம்பூராவை மீட்டி ஸ்ருதியில் நிலைத்துப் பயிற்சி செய்துகொண்டேயிருப்பார். யாராவது கூப்பிட்டால் விளையாடப்போவார். திரும்பிவந்து தம்பூராவை மீட்டிப்பாடும்போது அதே ஸ்ருதியில் பாடமுடிகிறதா என்று பயிற்சி செய்வாராம். அதாவது மனதிலேயே ஸ்ருதி போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்றார். அதைப் போல இந்த வயதில் ஸ்ருதி சுத்தமாக நீங்கள் பாடும் நீங்கள் அதற்கேதேனும் சிறப்புப் பயிற்சி செய்கிறீர்களா?

நான் ஸ்ருதி சாதனையே செய்கிறேன். அது ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மிக முக்கியமானதொரு பயிற்சி. முதல் இரண்டு மூன்று வருடங்கள் வெறும் ஸ்ருதி சுத்தத்துக்கான பயிற்சியை மட்டுமே அவர்கள் சிஷ்யர்களுக்குச் சொல்லித் தருவார்கள். தம்பூராவை மீட்டிக்கொண்டே இருக்கவேண்டும். பல ஸ்வரஸ்தானங்களைத் துல்லியமாகப் பாடவேண்டும். அது சுத்தமாகக் கைவந்தபின்புதான் ராகங்களுக்குச் செல்வார்கள். அதை நம் கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு முக்கியத்துவப்படுத்துவதில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயம்தான்.

நீங்கள் நிறைய ஹிந்துஸ்தானி கலைஞர்களைக் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா? குறிப்பாக மைசூர் சமஸ்தானத்துக்கு நிறைய ஹிந்துஸ்தானி கலைஞர்களையும் வரவழைத்துப் பாடவைத்திருக்கிறார்கள். உங்களுக்கு விருப்பமான ஹிந்துஸ்தானி பாடகர்கள் யார்?

உஸ்தாத் ஃபையாஸ் கான் சங்கீதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மைசூர் சமஸ்தான வித்வானாக இருந்தார். மகாராஜாவுக்கு அவர் பாட்டென்றால் மிகவும் பிடிக்கும். கோஹர் ஜான், ஹிராபாய் பரோதேகர், கேசர்பாய் கேர்கர், உஸ்தாத் படே குலாம் அலிகான், ரோஷனரா பேகம், ஓம்கார்நாத் தாகூர், கிருஷ்ணாராவ் பண்டிட், டி.வி.பலுஸ்கர் இவர்களையெல்லாம் கேட்டிருக்கிறேன். சரஸ்வதியே நேரில் வந்து நிற்பதைப் போன்ற பெரிய மேதைகள். கர்நாடகாவின் பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல், மல்லிகார்ஜுன் மன்ஸுர் இவர்களும் எனக்கு விருப்பமான பாடகர்கள். எனக்கு இவர்களோடு பரிச்சயமும் உண்டு. பீம்சென்னுடன் நெருங்கிய நட்பும் இருந்தது.

எந்த சங்கீதமாக இருந்தால் என்ன? ஸ்ருதி சுத்தம், பாவ பூர்வமாகப் பாடினால் எல்லா சங்கீதமுமே இனிமையானது. அதனால்தான் “Music is universal language” என்று சொல்கிறோம்.